கினோ 2.0: சட்டகத்தின் முன்புறம்


சென்ற இதழின் தொடர்ச்சி...

1.9 சட்டகத்தின் முன்புறம் – நடுப்பகுதி – பின்னணி = DEEP STAGING

உங்கள் கதாபாத்திரங்கள் மோதலை முடித்துக்கொள்கிறபொழுதும் கூட, Twin Peaks : Fire Walk with Me, படத்தில் வருகிற காட்சியைப் போல, கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் தொலைவில் இருக்கும்பொழுது, அங்கு பிரதான மோதலைக் கட்டமைப்பதன்மூலம், அதிலிருந்து நாம் நிறைய விஷயங்களைப் பெறமுடியும். 

இந்தக் காட்சி ஆழமான ஸ்டேஜிங்கிற்கு (DEEP STAGING) மிகச்சிறந்த உதாரணம், ஏனெனில், இதில் எப்போதும் முன்புறம், நடுப்பகுதி மற்றும் பின்னணியில் ஏதோ ஒரு பொருள் இருக்கும். கதாபாத்திரங்கள் இருவரும், ஒருவரையொருவர் எதிர்கொண்டபடி நிற்பதைப் பார்வையாளர்கள் பார்த்தாலும், இந்தக் கட்டமைப்பு இந்தச் சிறிய அறைக்குள் நிகழ்வதால், அது மிகப்பெரிய உணர்வைத் தோற்றுவிக்கிறது. எனவே, ஒரு காட்சி கட்டமைக்கப்படுகிற விதத்திற்குள், அந்தக் காட்சி எங்கு எந்த இடத்தில் நடக்கிறது என்பதற்கும் முக்கியப்பங்கு உண்டு. இதே காட்சி திறந்தவெளிச் சூழலில், இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக்கொள்வதுபோல அமைக்கப்பட்டிருந்தால், நமக்கு இத்தகைய பதற்றம் தொற்றிக்கொள்கிற வாய்ப்பு குறைவு. அதுவே, இந்த மிகச்சிறிய அறைக்குள் இருவருக்குள்ளும் உரசல் ஏற்படுகிறது, இருவருக்குமிடையே தகுந்த தூர இடைவெளி இருந்தபோதும், மிகச்சிறிய இடம் என்ற பின்னணிச்சூழலால், இது அடுத்து என்ன நடக்கும்? என்ற பதற்றத்தை அதிகரிக்கிறது. இங்கு கதாபாத்திரங்கள் நிற்கவைக்கப்பட்டுள்ள நிலையும், கேமரா அதைக் காட்சிப்படுத்தியிருக்கிற விதமும், முக்கியமாக ‘சிறிய அறை’ என்ற பின்னணியும் சேர்ந்துதான், காட்சியில் பெரிய அச்சுறுத்தலை உண்டாக்குகின்றன. (Twin Peaks: Fire Walk with Me. Directed by David Lync)


காட்சியில் இந்தச் சட்டகம், முன்புறம், நடுப்பகுதி, மற்றும் பின்னணி போன்றவற்றைக் கொண்டிருப்பதால், இது ஒரு நல்ல ஸ்டேஜிங் என்று நாம் பார்த்தோம். ஆனால், எந்தவொரு ஷாட்டும் தன்னிச்சையாகவே, ஒரு முன், நடுப்பகுதி மற்றும் பின்னணியைக் கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கலாம் – ஆனால் இந்த விஷயத்தில் பெரும்பாலான காட்சிகள் அந்த சப்ஜெக்டின் மீதுதான் கவனம் செலுத்துகின்றன – பொதுவாக மையக்கதாபாத்திரம் (ஹீரோ)- எனவே அவர்கள் காட்சியமைப்பின் ஆழத்தில் குறைபாடு உள்ளவர்களாகவும் அல்லது ஒரு இடத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு இல்லாதவர்களாகவும் உள்ளனர். 


உட்புறப் படப்பிடிப்பு நடக்கிறபொழுது, இந்தக் கருத்தைப் புறக்கணிப்பதால், குறிப்பாக இயக்குனர்கள் குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும், ஏனெனில், இங்கே உதாரணத்தில் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்த அளவிலான காட்சியியல் ஆழத்தை, ஸ்டேஜிங்கை ஒரு உட்புறப் படப்பிடிப்பிலும் கொடுக்க முடியும். இந்தக் காட்சியைப் படம்பிடிப்பதற்குத் தேவையான, கேமரா செட்-அப்பைப் பற்றிப் பார்ப்போம்.இரண்டு கேமராக்களையும் சுவருக்கு அருகில் வைப்பதன்மூலம், இயக்குனர் தனது பார்வையாளர்களை, அறையின் இடத்தைக் கவனிக்கவைக்கிறார். அறையின் பெரும்பான்மையான இடத்தைக் காட்சிப்படுத்தும்பொருட்டு, கேமராவை சுவருக்கு நெருக்கமாகக் கொண்டுசென்றிருக்கின்றனர். ஒருவேளை, இயக்குனர், கேமராவை அறையின் நடுப்பகுதியில் வைத்துப் படம்பிடித்திருந்தால், இந்த இடம் பத்தோடு பதினொன்றாக வழக்கமான இடம்போலத் தோன்றியிருக்கும், மேலும் இடத்தின் ஆழத்தையும் (Depth of Space) ஃப்ரேமில் இழந்திருப்போம். 

கேமராக்கள் நிலையானதாக இருக்கின்றன, மற்றும் அந்த அதிகாரி சுவரில் இருந்து விலகி எஃப்.பி.ஐ முகவரை அணுகுவதுதான், இதிலுள்ள ஒரே நகர்வு, அங்குதான் உண்மையான மோதல் நடைபெறுகிறது. கொடுக்கப்பட்டிருக்கிற உதாரணத்தைக் கவனியுங்கள், கேமரா இயங்குவதில்லை, அந்நபர் மட்டுமே முன்னால் வருகிறார். அது, மோதலை உண்டாக்குவதற்குப் போதுமானதாக இருக்கிறது. 

நீங்கள், இந்த வகையான காட்சியைப் படமாக்குவதற்கு, சட்டகத்தின், முன்புறம், நடுப்பகுதி, பின்னணி உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை மட்டுமே அறிந்திருக்க வேண்டும், அதற்கேற்ற வகையில் உங்கள் நடிகர்களையும், கேமராக்களையும் நிலைநிறுத்துங்கள். 

1.10 பலம் சார்ந்த போராட்டம்

விவாதங்களும் மோதல்களும் முதலில் எதற்காக உருவாகின்றன? தன் கருத்தை நிலைநாட்டுவதற்கும், தன் பக்க நியாயத்தை உணர்த்துவதற்கும், தன் பலத்தை நிரூபிப்பதற்கும், அதிகாரத்தைப் பிடிப்பதற்காகவுமே!

மோதல்கள் பெரும்பாலும், ஒரு நேரடி அதிகாரப் போராட்டத்திற்கு இட்டுச்செல்கின்றன, மேலும் ஒரு கதாபாத்திரம் மற்றொரு கதாபாத்திரத்தைப் புறக்கணிப்பதன்மூலம், அதை வெளிக்காட்ட முடியும். டிஃபியன்ஸ் (Defiance) திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இக்காட்சியில், டேனியல் க்ரெய்க் தொலைதூரக் கதாபாத்திரத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார், ஆனால், அவரோ பெரும்பாலும் டேனியல் க்ரெய்க்கைப் புறக்கணிக்கிறார். 

ஒரு கேமராவை எங்கு வைக்கிறோம்? என்பது எந்தளவிற்கு முக்கியமானதோ, அந்தளவிற்கு கேமராவிற்கும், அந்நடிகருக்கும் இடையேயான தொடர்பு மற்றும் இடையேயுள்ள தொலைவு, கேமராவுக்கும் நடிகருக்குமான நிலையும் அந்தளவிற்கு முக்கியமானது. கேமராவைத் தொடர்புபடுத்தி, நடிகர்களை எங்கு வைக்கிறோம்? என்பதிலும் இயக்குனராக நீங்கள் அதிக அக்கறை செலுத்தவேண்டும். 

(Defiance. Directed by Edward Zwick.)

முதல் ஷாட்டில், பிரச்சினையை எதிர்கொள்ளப் பயப்படுபவர் போல, க்ரெய்க்கின் உடல் அந்தப் பக்கமாகத் திரும்புகிறது. அவர் எதிரியை எதிர்கொள்கிறார் என்றாலும், அவரது உடல் அவரது நண்பர் மற்றும் அவருக்கருகில் நிற்கும் நம்பிக்கைக்குரியவர் பக்கமாகத் திரும்புகிறது. அவர் பேசுவதற்கும், அவரது இந்த உடல்மொழிக்கும் முரணாக இருக்கிறது, எனவே, இது காட்சியில் ஒரு சுவாரஸ்யமான பதற்றத்தை உருவாக்குகிறது. 

அடுத்த ஷாட், தொலைதூரக் கதாபாத்திரத்திற்கு சில அதிகாரத்தைத் தந்திருக்கிறது, ஏனென்றால், அவருக்குப் பின்னாலிருந்து இந்தக் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது, மேலும் அவர் இதில் எதிலுமே ஆர்வம் காட்டாததுபோலச் செயல்படுகிறார். வாதத்தில் ஈடுபட விரும்பாத தன்மையை, அவரது உடல் மொழியே வெளிக்காட்டுகிறது; ஆனால் பயப்படுவதற்குப் பதிலாக, அவர் தொல்லையற்றவர் என்பதைக் காட்டுகிறார். மிக முக்கியமாக, இந்த ஷாட்டில் நீங்கள் கவனிக்க வேண்டியது, க்ரெய்கின் பின்னாலிருந்து எடுக்கப்பட்டிருக்கிற இந்த ஷாட்டிற்கு, இயக்குனர் லாங் லென்ஸ் பயன்படுத்தியிருக்கிறார். இந்த லென்ஸ், அவர்களுக்கிடையேயான தூரத்தை முன்னறிவிக்கிறது, அவர் தனது அதிகாரத்தை, அவர்களின் மீது திணிப்பதைப் போல, இது தொலைதூரத்தில் இருக்கும் கதாபாத்திரத்தை அவர் இருக்கவேண்டிய இடத்தைவிட நெருக்கமாகத் தோன்றவைக்கிறது. பின்னர், இயக்குனர் முழுக் காட்சியையும் காட்சிப்படுத்தும் பொருட்டு, அடுத்ததாக வைட் ஷாட்டிற்கு (Wide shot) கட் (Cut) செய்கிறார், இது முன்பு விடுபட்டிருந்த, எல்லாவற்றையும் கட்டமைக்கிறது. எதிரி, தனது நண்பர்களால், தெளிவாகச் சூழப்பட்டிருக்கிறான் மற்றும் உரையாடலில் அக்கறையற்றவனாக இருக்கிறான் மேலும் வெறுமனே சுற்றிப்பார்க்கிறான், நோட்டம் விடுகிறான். க்ரெய்க்கும், அவரது நண்பரும், இதற்கிடையில் இந்தச் சட்டகத்தில் மிகவும் சிறியவர்களாகவும், பனியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் போலவும் தோன்றுகிறார்கள். 

இந்தக் காட்சி முழுவதும், அதிகாரத்தை மீண்டும் பெற முயற்சிக்கும்போது மையக்கதாபாத்திரம் அச்சப்படும்படிச் செய்வதன்மூலம், கதாநாயகன் உடனடியாக ஒரு கதாநாயகனைப்போல நடித்ததைக்காட்டிலும், இயக்குனர் அதில் அதிக பதற்றத்தை உருவாக்குகிறார். 

இந்த வகையான காட்சியைப் படமாக்குவதற்கு, இயக்குனர்களிடத்தில் நடிகர்கள் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதற்குரிய சரியான தேர்வும், கேமராவை எங்கு வைத்துப் படம்பிடிப்பது என்பதில் தெளிவும் அவசியம். ஆனால், ஒப்பீட்டளவில் இந்தக் காட்சியைப் படம்பிடிப்பது எளிதானது, ஏனென்றால், மொத்த காட்சிக்கும் ஒரு சில ஷாட்களே உள்ளன, கிட்டத்தட்ட கேமராவில் எந்தவித நகர்வும் இல்லை. உரையாடல் காட்சிகளைப் படம்பிடிப்பது தொடர்பாக இப்போது நாம் பத்து நுட்பங்களை அறிந்துகொண்டிருக்கிறோம். இதை அப்படியே நகலெடுத்து உங்கள் திரைப்படத்தில் பயன்படுத்தாமல், இந்த அடிப்படைகளை மையமாக வைத்துக்கொண்டு, உங்கள் காட்சிக்கு ஏற்ற வகையில் கேமரா நகர்வுகளை மாற்றியமையுங்கள். அதுதான் ஒரு நல்ல இயக்குனருகுத் தேவைப்படுகிற கிரியேட்டிவ் திறன்.