அகிரா

அனிமேஷன் திரைப்படங்கள் உலகெங்கிலும் குழந்தைகளுக்கானவை மட்டுமே என்றொரு பொது பார்வை உள்ளது. அப்பார்வை ஓரளவுக்கு சரியே என்பதை மறுக்க முடியாது. பெரும்பான்மையாய் இவ்வகைப் படங்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக அவர்களின் உலகினை ஒட்டிய கதைக்களங்களை அல்லது அவர்களுக்கு மிகப் பிரியமான கனவுறு புனைவுகளை (fantasy) மையமாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன. காமிக்ஸ் எனப்படும் படக்கதைகளை அடியொற்றி எடுக்கப்படும் திரைப்படங்கள் உலகெங்கிலும் பெருத்த வரவேற்பை பெறுகின்றன. ஹாலிவுட்டில் மார்வெல் படக்கதைகள் (Marvel Comics) எண்ணற்ற (அனிமேஷன் அல்லாத) திரைப்படங்களாக வெளிவந்து வசூல் சாதனைகளை படைத்துள்ளன என்பதும் நாம் நன்கு அறிந்ததே. இருப்பினும் இந்த படக்கதைகளுக்கெல்லாம் முன்னோடியாகவும் ஊற்றுக் கண்ணாகவும் இருந்தது ஒரு வகையில் ஜப்பானிய படக்கதைகள் தான். அதிலும் குறிப்பாக ஜப்பானைத் தாயகமாகக் கொண்ட மங்கா படக்கதைகள் (Manga Comics) உலக பிரசித்தி பெற்றவை.
ஹாலிவுட் தனது உலகளாவிய சந்தையை பயன்படுத்தி அதிக பொருட்செலவில் குழந்தைகளுக்கென எடுப்பதாக சொல்லப்படும் பல படங்களில் அமெரிக்க தேசிய கருத்துருவாக்கம் (American Nationalism) ஊடிழையாக பின்னப்பட்ட்டிருப்படதை ஆழ்ந்த திரை வாசிப்பின் மூலம் நாம் அறிய வரலாம்.பேலும் அவை ஒரே விதமாக ஆக்‌ஷன் திரைப்படங்களாக இருப்பினும் அவற்றின் அடிநாதமாக அமெரிக்க தனிமுதல் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். உலகம் எதிர்கொள்ளும் எத்தகைய பிரச்சனைக்கும் தீர்வும் விடிவும் அமெரிக்காவிடம் மட்டுமே உண்டு எனும் மாயையை அத்திரைப்பிரதிகள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி இளைய தலைமுறையினரின் மனங்களில் வலுவூட்டப்படுகின்றது.

மங்கா நாம் நினைப்பதைப் போல படக்கதைகளை வெளியிடும் ஒரு நிறுவனம் அல்ல. மாறாக மங்கா எனும் பதம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பானியர்களால் அல்லது ஜப்பானிய மொழியில், தமக்கென ஒரு ஓவிய பாணியை வளர்த்தெடுத்துக் கொண்ட ஒரு பாணியையே குறிக்கிறது. இப்படக்கதைகளின் தோற்றுவாயாக ஜப்பானாக இருப்பினும் அவற்றின் பாதிப்பில் சீனா, கொரியா, தாய்வான் போன்ற நாடுகளில் படக்கதைகள் உருவாகின. போலவே பிரான்ஸிலும் அமெரிக்காவிலும் கூட படக்கதைகள் உருவாகின. நவீன மங்காவின் வரலாறு இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க அதிகார வீச்சுக்கு ஜப்பான் கட்டுப்பட்டிருந்த காலத்திலிருந்து (1945-52) துவங்குகிறது. அந்த காலகட்டத்தில் தான் ஜப்பானியர்களுக்கு அமேரிக்காவின் மார்வெல் படக்கதைகள் அறிமுகமாகியிருந்தன. எனவே கணிசமான தாக்கத்தை அவை உள்நாட்டில் தயாரான மங்கா படக்கதைகளில் ஏற்படுத்தின.

ஜப்பானில் படக்கதைகள் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினராலும் படிக்கப்படுபவை. மேலும் சினிமாவைப் போல அப்படக்கதைகள்- சாகசம், மீபுனைவு, புதிர் கதைகள், மர்மக் கதைகள், அறிவியல் புனைக் கதைகள், அமானுஷக் கதைகள், அரசியல் புனைவுகள், குடும்பக் கதைகள் என- எல்லா வகைப்பாடுகளிலும் வெளியாகும். எனவே பெயர்தான் படக்கதைகளேயொழிய அக்கதைகளில் அத்தனை சாரம்சங்களுக்கும் இடமுண்டு. 1960ல் முதல் மங்கா படக்கதை திரையுருவம் பெற்றது. இவ்வளவு முன்னரே இதன் துவக்கம் இருந்தது எனினும் 1980 வரையிலும் வெளியான அனிமேஷன் படங்களின் எண்ணிக்கை மிக சொற்பமே. மொத்தம் 12 படங்கள் வெளியாகியிருந்தன. அதில் 80வது வருடம் மட்டும் ஐந்து படங்கள். ஆனால் இந்த நிலை எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து மாறத் துவங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை வருடந்தோறும் கணிசமான அனிமேஷன் திரைப்படங்கள் ஜப்பானில் வெளியாகின்றன. இவை தவிர மங்கா படக்கதைகள் முழுநீள திரைப்படங்களாகவும் தொடர்ந்து வெளிவருகின்றன. இவ்வகைக் கதைகள் ஒருவைகையில் அறிவியற் புனைக்கதைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன என உறுதியாக சொல்லலாம். அறுபதுகளில் வெளியான மங்கா அனிமேஷன் படங்கள் கூட அறிவியற் புனைக்கதைகளே.
இவ்வகை படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு படைப்பு 1988ல் கட்சுஹிரோ ஒடாமோ (Katsuhiro Otomo) இயக்கத்தில் வெளியான அகிரா (Akira) அனிமேஷன் திரைப்படத்தைச் சொல்லலாம். இத்திரைப்படம் அனிமேஷன் உருவாக்கத்தில் ஒரு முன்னோடியாகவும் அந்த காலகட்டத்தின் அனிமேஷன் துறையின் அடுத்தகட்ட நகர்வின் துவக்கப் புள்ளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைவடிவின் மூலமான அகிரா மங்கா படக்கதையாக 1982ல் வெளியானது. இப்படத்தின் சிறப்பம்சம் அகிராவின் மூல வடிவான படக்கதையை எழுதி அதற்கு ஓவியங்களையும் வரைந்தவர் (ஜப்பானில் இவர்கள் மங்காகா என அழைக்கப்படுகின்றனர்) திரைப்படத்தின் இயக்குனர் ஒடமா தான். 1973 ஆம் வருடம் முதலே அவர் மங்கா ஓவியராக தனது படைப்புலக வாழ்வைத் துவங்கினார். சிறிதும் பெரிதுமாக அவர் எண்ணற்ற சிறுகதைகளுக்கு மங்கா வடிவம் கொடுத்தி வந்தார்.

தனது முதல் அறிவியல் புனைக் கதை மங்கா முயற்சியை 1979 ஆம் ஆண்டு Fireball என்ற தலைப்பில் துவங்கினார். அவர் அந்த மங்காவை முடிக்கவே இல்லை என்ற போதிலும் அவர் அவ்வனுபவத்தில் இருந்து நிறைய கற்றுக் கொண்டார். 1982ல் அவர் முதன் முதலில் ஒரு அனிமேஷன் திரைப்படத்தில் கதாப்பாத்திர வடிவமைபாளராக பணிபுரிந்தார். அதே வருடம் அவர், இன்றளவும் அவரது மகத்தான சாதனையாக கருதப்படும் மங்காவான அகிராவை எழுதத் துவங்கினார். அது 1982 முதல் 1990 வரை சித்திரத் தொடராக வெளியானது. ஆறு பகுதிகலாக வெளியான அந்த மங்கா அவரது வாழ்நாள் சாதனையாக கருதப்படுகிறது. அகிரா மங்கா தொடருக்கான படங்களை வரைந்தும் (Illustrator) இவரே. 1988 ல் தனது கதையின் ஒரு பகுதியை தேர்ந்து, ஏறத்தாழ 2000 பக்கங்களுக்கும் மேலான அகிரா மங்காவை சுருக்கி அதற்கு திரைக்கதை எழுதி, அகிரா என்ற பெயரிலேயே இயக்கவும் செய்தார். ஒரு இயக்குனராக இது அவரது முதல் திரைப்படமும் கூட.
1988ஆம் ஆண்டு நடைபெறும் மூன்றாவது உலகப் போரின் இறுதியில் டோக்கியோ நகரம் முற்றிலும் அழிகின்றது. அகிராவின் கதைகளம் அதிலிருந்து முப்பத்தியோரு ஆண்டுகள் கழித்து 2019ல் நவ டோக்கியோ நகரில்( Neo Tokyo) துவங்குகிறது. கதியின் துவக்கம் இரண்டு மோட்டார் சைக்கிள் குழுக்களுக்குள் இருக்கும் போட்டி, அதன் வழியே அவர்களுக்குள் மூளும் விரோதம் எனும் புள்ளியிலிருந்து துவங்குகிறது. ஷொட்டாரோ கானடா (Shotaro Kaneda) ஒரு குழுவிற்கு தலைவனாக விளங்குகிறான். அவர்களது எதிரி குழுவைச் சேர்ந்தவர்கள் அதிவேக இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து தொடுக்கும் தாக்குதலில் கானாவின் குழுவினனும் அவனது பால்ய நண்பனுமான டெட்ஸுவோ ஷீமா (Tetsuo Shima) காயமடைகிறான். அவன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட காவலரின் விசாரணைக்கு ஏனையோர் உட்படுத்தப்படுகின்றனர். தொடரும் நிகழ்வுகள் அந்நகரில் நடக்கும் ரகசிய ராணுவ நடவடிக்கைகளையும், சுழலின் சுதந்திரமின்மையையும் எடுத்துக் காட்டுகின்றன.

இதற்கிடையே மருத்துவமனையில் ராணுவ தளபதியும், அரசின் ரகசிய ஆராய்ச்சிகளின் மேற்பார்வையாளராகவும் இருக்கும் தளபதி ஷிகிஷிமா ஆய்வாளரின் வழி சிகிச்சை பெறும் டெட்ஸுவோவின் குனநலன்கள் அகிராவினுடையதை ஒத்திருப்பதாக அறிய வருகின்றார். இவரது கதா பாத்திரம் மிகவும் கட்டுக்கோப்பானதாகவும் அதே வேளையில் துளியும் இரக்கமற்றதாகவும் முன் வைக்கப்படுகின்றது.
சிகிச்சை பெறும் டெட்ஸுவோ இளைமையிலேயே விடுதியில் வளர்ந்தவனாகவும், அனைவரின் எள்ளலுக்கு உள்ளாகுபவனாகவும், எப்போதும் கானடாவின் உதவியாலேயே இக்கட்டுகளினின்று தப்பிப்பவனாகவும் இருக்கிறான். அவனுக்கு இது ஒரு வகை தாழ்வு மனப்பான்மையையும், விளைவாக கானடாவின் மீது வெறுப்பையும் உண்டாக்குகிறது. தனிச்சையாக இருப்பதற்கு அவன் முயலும் தருணங்கள் தோறும் ஏதாவது பிரச்சனை ஏற்பட முடிவில் கானடாவின் தலையீட்டினாலேயே காப்பாற்றப்படுவது அவனுக்கு மிகுந்த மனக்கசப்பை தருகின்றது.

படத்திற்கு தலைப்பைத் தரும் கதாப்பாத்திரமான அகிரா குறித்த தகவல்கள் அனைத்தும் மர்மமாகவே, பார்வையாளருக்கு தெரிவிக்கப்படாமல், வெகுநேரம் வரை இருக்கிறது. திரைக்கதையின் போக்கே ஒவ்வொரு கட்டத்திலும் அகிராவின் முன் கதையை நமக்கு அறிவிக்கின்றது. எண்பதுகளில் ஜப்பான் அரசு செய்திடும் ரகசிய அறிவியல் ஆராய்ச்சிகளில் ஏற்படுகின்ற பெரும் தவற்றினால் அதில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு சோதனை உயிரான (Test Subject ) அகிரா அபரிவிதமான சக்தி பெற்றவனாகவும் தான் பெற்ற சக்தியை கட்டுப்படுத்த இயலாதவனாகவும் ஆகின்றான். விழைவாக ஏற்படும் பெரும் பிரளய வெடிப்பில் டோக்கியோ நகரம் அழிந்ததும் நமக்கு மற்றொரு பாத்திரமான அகிராவைப் போன்ற இன்னுமொரு பரிசோதனை உயிரான கியோகோ மூலம் தெரிய வருகிறது. மேலும் நவ டோக்கியோவில் அகிராவின் எஞ்சியிருக்கும் தகவல்களும் மீதமிருக்கும் அவனுடைய பாதுகாக்கப்படும் மாதிரிகளுமாக ஆய்வு தொடர்கிறது.

இதற்கிடையில் டெட்ஸுவோவை தனது சக தோழி கேயுடன் கானடா மீட்க கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கிறான். அதே வேளையில் தாழ்வு மனப்பான்மையாலும், இயலாமையாலும் ஒடுங்கிப் போயிருந்த டெட்ஸுவோவின் சுயம், தன்னிடமுள்ள அபரிவிதமான வலிமைகள் குறித்து கொஞ்சம் கொஞ்சமாய் அறிய வர பெரும் மார்றத்துக்குள்ளாகிறது. தேக்கி வைத்திருந்த ஏக்கங்களை யாவும் புதிதாய் கிடைத்த இப்பெருவலிமை அவனுள்அகங்காரத்தினை வளர்த்தெடுக்கிறது. நகரத்தில் அகிராவின் கதையை அறைகுறையாய் தெரிந்து வைத்திருக்கும் கூட்டமொன்று அவனை அரசின் அடக்கு முறைகளினின்று தங்களை மீட்க அவன் நிச்சயம் வருவான் என மிகுந்த நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு காத்திருக்கிறது. அவர்கள் முன்னிலையில், புதிதாய் கட்டவிழ்ந்திருக்கும் டெட்ஸுவோவினை அடக்க ராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் அதனை அவன் அனாயசமாய் எதிர்கொள்வதையும் காணும் அக்கூட்டத்தினர் அவனை அகிராவென்று ஆர்ப்பரிக்கத் துவங்குகின்றனர். .

முன்னரே அகிராவின் பேராற்றலையும் அதன் எதிர்விளைவையும் கண்கூடாகக் கண்ட கியோகோ டெட்ஸுவோவை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தவளாக இருகிறாள். அவள் தனது சக்தியை பயன்படுத்தி கானடாவின் தோழி கேயை தனது ஊடகமாக பயன்படுத்தி அவள் வழியாக கானடா சூழலில் இக்கட்டைப் புரிந்து கொள்ளவும், உடனடியாக டெட்ஸுவோவை தடுத்து நிறுத்துவதுவதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறாள்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கேன உருவாகிவரும் பிரத்தியேக மைதானமொன்றின் கீழாக அகிரா பாதுகாக்கப் படுவதை கேள்வியுறும் டெட்ஸுவோ, யாராலும் தடுக்க முடியாதவனாய், அங்கே விரைகிறான். தளபதி ஷிகிஷிமாவின் வாயிலாக அவ்விடத்தில் பாதுகாக்கப்படுவது அகிரா அல்ல, மாறாக அழிந்த அவனது உயிரியல் மீதங்களே என்பதையும் அறிகின்றான். ஆயினும் அவனுள் பொங்கும் பெரும்சக்தி அவனது கட்டுப்படுத்த முடியாததாய், அவனை ஆட்கொள்வதாய் மாறுகிறது. இவ்வளவு நேரம் திடீர் சக்தியால் தன்னிலை மறந்திருந்த டெட்ஸுவொ விழித்து கொண்டவனாய் கானடாவை நோக்கி உதவுமாறு கூக்குரலிடுகின்றான். அதற்குள் காலம் கடந்து விடுகின்றது. முன்பொருமுறை அகிராவின் வழியே டோக்கியோ நகரை நிர்மூலமாக்கிய அப்பிரளய சக்தி இம்முறை டெட்ஸுவோவை மட்டும் பலி கொள்கிறது. நவ டோக்கியோ ஒரு மாபெரும் அழிவினின்று தப்புகிறது. கானடா தனது என்றாட வாழ்க்கைக்குத் திரும்புவதோடு படம் நிறைவுறுகிறது.
அகிரா திரைப்பிரதியின் கதை,வளர்ந்து வரும் மனித குலம் கற்பனை செய்திருக்காத அளவிற்கு அறிவியல் துறையின் அசுர வளர்ச்சியால் ஒரு பக்கம் பல நலன்கள் விளைகின்ற போதிலும் அதில் உறைந்திருக்கும் ஆபத்துக்களை கொண்ட மறுபக்கத்தினை தனது புனைவின் மூலமாக முன்வைக்கிறது. மேலும் இக்கதை டிஸ்டோபியன் வகை கதைக்களத்தினுள் இயங்குவதால், அரசுகள் மக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு ஆபத்தான ஆய்வுகளை முன்னெடுக்கின்றன என்பதைனையும், இதனால் எதிர்காலத்தில் ஆபாயகரமான எதிர்விளைவுகள் ஏற்படின் அது பலி கொள்ளப் போவது மக்களைத் தான் எனும் உண்மையை சொல்கிறது. மேலும் சனநாயக முறையில் இருக்கும் அரசுகள் கூட எவ்வாறு தமது அதிகாரத்தை பிரயோகித்து மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திடும் சாத்தியங்களை கொண்டுள்ளன என்பதையும் எடுத்து காட்டுகிறது. கதையின் ஊடிழையாக மாறி வரும் ஜப்பானிய கலாச்சாரம் குறித்த கவலையும் பிரதிபலிக்க்கபடுகிறது.

அகிரா முன்வைக்கும் ஜப்பானிய வாழ்க்கை இயந்திரத்தனாமானதாகவும், குடும்ப அமைப்பை உதறித் தள்ளுவதாகவும் இருக்கிறது. தன்னலம் மிக்க மனிதர்களையும் முன்வைக்கிறது. இது ஐம்பதுகளில் ஒசுவின் திரைப்படங்கள் வழியாக நாம் அறிய வரும் ஜப்பானிய வாழ்வியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாய் இருப்பதை நாம் உணரலாம். அதிக குடும்பச் சித்திரங்களும், கலாச்சார விழுமியங்களை உள்வாங்கிய ஒசு காலகட்டத்திய ஜப்பானிய திரைப்படங்கள் மெல்ல எழுபதுகளில் தமது சாயலை மாற்றிக் கொள்ளத் துவங்கின. சமகாலத்திய அந்நாட்டுத் திரைப்படங்கள் மிதமிஞ்சிய வன்முறைக் காட்சிகளாலும், பல படைப்புகளில் அதிகமான பாலியல் காட்சிகளும் இடம்பெறுபவையாகவும் மாறிப் போயிருக்கின்றன. திரைப்படங்கள், அவற்றின் கருப்பொருள்களின் தேர்வு அப்பிராதியத்தில் ஏற்படும் சமூக,அரசியல் நடைமுறை மாற்றங்களை எப்போதுமே பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் பேரழிவைச் சந்தித்த ஜப்பான் தனது சரிந்து போன வரலாற்றை மீட்டெடுக்க ஒருங்கிணைந்து வெறியோடு உழைக்க ஆரம்பித்தது. நாளடைவில், உலகம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே, அது சரிவிலிருந்து மீண்டெழுந்து தன்னை மறுநிர்மாணம் செய்து கொண்டது. ஆயினும் ஜப்பானியர் தம் வாழ்வை இயந்திரமயமான ஒரு மீளவியலா சுழலில் ஒப்புவித்தனர். அதுவே அவர்கள் தமது தேசிய முன்னேற்றத்திற்கு தந்த விலை.

அகிரா திரைப்படம் திரைப்பட அனிமேஷன் கலை வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கிறது. இப்படத்தைனை தொடர்ந்து வெளியான எண்ணற்ற திரைப்படங்களில் இப்படத்தின் பாதிப்பை பார்க்கலாம். 1999 இல் வெளியாகி உலகெங்கிலும் பெருத்த வரவேற்பைப் பெற்ற அறிவியற் புனைக்கதையான The Matrix திரைப்படத்தின் இயக்குனர்களன வாட்சௌஸ்கி சகோதரர்கள் தங்களின் படைப்பின் திரைஉருவாக்க மாதிரிகளாக கூறிய இரண்டு படைப்புகளில் ஒன்று அகிராவாகும். (மற்றொன்று 1995 இல் வெளியான Ghost in the Shell என்ற ஜப்பானிய அனிமேஷன் திரைப்படமாகும்.) உலகின் தலை சிறந்த அனிமேஷன் திரைப்படங்களின் தரவரிசைப் பட்டியலில் தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தினை உறுதி செய்துள்ளது இப்படைப்பு.