இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 7. ‘நிர்மலா’

இலங்கையின் ‘நாடகத் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் அமரர் கலையரசு சொர்ணலிங்கம். இவரது நாடகப் பண்ணையில் நவாலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயின்று வந்தார். பின்பு கொழும்பு இராணுவத் தலைமை அலுவலகத்தில் எழுதுவினைஞராக நியமனம் பெற்றார். கொழும்பில் பல நாடகங்களை எழுதி மேடையேற்றினார். ‘தேரோட்டி மகன்’, ‘நெஞ்சில் ஓர் ஆல்பம்’ போன்ற நாடகங்களில் இவர்தான் கதாநாயகன். ‘கடமையின் எல்லை’ திரைப்படத்திலும் தோன்றினார். இந்த இளைஞர்தான் ‘நிர்மலா’வைத் தயாரிப்பதில் முன்னின்ற ஏ.ரகுநாதன்.
இவர் 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நாள் யாழ்ப்பாணம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுதெல்லாம் புகையிரதத்தில் சன நெருக்கடியாக இருக்கும். அதனால், இவர் கதவருகே நின்றுகொண்டு பிரயாணம் செய்தார். அவர் நிற்கிறாரே தவிர, அவரது எண்ணமெல்லாம் நாடகம், சினிமா பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது.

“என்ன பொங்கலுக்கு ஊரில் நாடகமோ?” எதிரில் நின்றவர் அவரது சிந்தனையைக் கலைத்தார்.

“நாடகம் இல்லை ஒரு தமிழ்ப் படம் எடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார் ரகுநாதன்.

“பணம் படைத்தவர்கள் நினைக்கவேண்டிய விஷயமல்லவா இது” வந்தவர் அதைரியப்படுத்தினார்.

“நம் நாட்டிலும் தமிழ்ச் சினிமா என்ற புதுத்தொழில் உருவானால் நம் இளைஞர்கள் எத்தனையோ பேருக்கு வேலை வழங்கலாம். அதுக்காகவாவது நாம் இதில் இறங்கக்கூடாதா?” ஆதங்கப்பட்டார் ரகுநாதன்.

“அது சரி இலங்கையில் நடிகர்கள் இருக்கிறார்களா”? வந்தவர் கேலியாகக் கேட்டார்.

ரகுநாதன் பதில் சொல்லவில்லை.‘நடிகர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்” தனது மனதுக்குள் மட்டும் சொல்லிக்கொண்டார். இப்படித்தான் ஆரம்பமாகியது நிர்மலா படத் தயாரிப்பு.

ரகுநாதனின் ஊரான நவாலியைச் சேர்ந்த இன்னொரு இளைஞர் கலைவேட்கையால் அலைந்துகொண்டிருந்தார். எப்படியாவது திரை உலகில் நுழையவேண்டும் என்ற அவாவில் தமிழகம் சென்றார். எம்.ஜி.ஆரின் உதவியால் சென்னை வாஹினி ஸ்ரூடியோவில் எடிட்டர் மகாலிங்கத்தின் கீழ் பயிற்சி பெற்றார். ‘சபாஷ் தம்பி’, நாம் மூவர்’, ‘உயிர்மேல் ஆசை’, ‘யாருக்காக அழுதான்’, ‘அரச கட்டளை’ போன்ற தென்னிந்தியப் படங்களுக்கு இந்த இளைஞர் உதவி எடிட்டராகப் பணியாற்றினார். அவர்தான் எம். அருமைநாயகம்.
‘நிர்மலா படத்தை இயக்குவதற்காக அருமைநாயகம் இலங்கைக்கு அழைக்கப்பட்டார். இவரும் ரகுநாதனும் சேர்ந்து நிர்மலா படத்தை உருவாக்கினார்கள். கலையரசு சொர்ணலிங்கத்தின் இன்னுமொரு மாணவரான நவாலியூர் நடேசன், துறையூர் மூர்த்தியின் மூலக்கதையை வைத்துக்கொண்டு நிர்மலாவுக்கான கதை வசனங்களை எழுதினார்.

நடிகர்கள் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டார்கள். மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்த த. தங்கவடிவேல் சிறந்த மேடை நடிகர். இரா. நாகலிங்கம் (அன்புமணி) எழுதிய ‘திரைகடற்தீபம்’ ‘தியாக பூமி’ போன்ற நாடகங்களிலெல்லாம் இவர்தான் கதாநாயகன். இவரே நிர்மலா திரைப்படத்தில் கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

சிறுமி பரீதா தாஜுதீன் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. கொட்டாஞ்சேனை குட்ஷெப்பர்ட் கொன்வெண்டில் படித்துக் கொண்டிருந்தாள். சிறு வயது முதலே படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தாள். பாடசாலை நாடகங்களில் நடித்தாள். கலை நிகழ்ச்சிக்காகத் தன் பெயரைச் சந்திரகலா என்று மாற்றினார்.

‘சலோமியின் சபதம்’ என்னும் நாடகம் இவருக்குப் புகழ் தேடிக்கொடுத்தது. சில சிங்களப் படங்களில் நடனமாடியவர், ‘மாத்ரு பூமி’ என்ற சிங்களப் படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். இவரே நிர்மலா படத்தில் கதாநாயகியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஏ. ரகுநாதன், கண்டி விஸ்வநாதராஜா, ஐசாக் செல்வரத்தினம், சிலோன்சின்னையா, எஸ். நாகராஜா ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஏ. பிரான்சிஸ், ஏ. குணசேகரம், மகிந்தன், அரசு, பாலன், நாகேந்திரன், சஹாப்தீன், கோகிலா, ராஜரட்ணம், ரமணி போன்றோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். கவிஞர் முருகையன் ஒரு பாடலை மட்டும் எழுத மிகுதியானவற்றைத் தான்தோன்றிக் கவிராயர் (சில்லையூர் செல்வராசன்) எழுதினார்.

1964ஆம் ஆண்டு ஓர் இளைஞர் தனது 22வது வயதில் ‘திருகோணமலை இசைக் கழகம்’ என்ற பெயரில் ஓர் இசைக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவின் மூலம் தனது இசையமைக்கும் திறமையை வெளியிட்ட அந்த இளைஞர்தான் திருகோணமலை ரீ. பத்மநாதன். இவரே நிர்மலா படத்துக்கு இசை அமைப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். பேர்டினன்ட் லோப்பஸ் டாக்டர் சாந்தி காராளசிங்கம், சுகிர்சுதா கனகராஜா, துரைசிங்கம், எம்.பி. பாலன் ஆகியோர் பின்னணி பாடினர்.

எம்.ஏ. கபூர் அப்பொழுது 20க்கும் மேற்பட்ட சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டார். அவர் ஒளிப்பதிவு செய்த 3வது தமிழ்ப் படம் நிர்மலாவாகும். ஒலிப்பதிவு – சுண்டிக்குளி சோமசேகரனுக்கும், ஒப்பனை - சரவணபவானந்தனுக்கும், கலை – வின்சென்டுக்கும் வழங்கப்பட்டன.

கலாபவன பிலிம்ஸாரின் இரண்டாவது தயாரிப்பான நிர்மலா கொழும்பு சிலோன் ஸ்ரூடியோவில் வளர்ந்து கொண்டிருந்தாள். யாழ்ப்பாணத்தில் அப்பொழுதே ஆயிரம் தடவைக்கு மேல் மேடையேறிவிட்ட நாடகம்தான் அமரர் வீ.வீ. வைரமுத்துவின் ‘அரிச்சந்திர மயானகாண்டம்’ ஆகும். இந்நாடகம் ‘நிர்மலா’ மூலமே முதன்முதலாகத் திரைக்கு ஏறியது.

18 நாட்களில் ‘நிர்மலா’ எடுத்து முடிக்கப்பட்டு 15.07.1968இல் திரைக்கு வந்துவிட்டது. கொழும்பில் ஜெஸீமா, முருகன் உட்பட இலங்கையின் 6 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் ‘அரச கட்டளை’ ரவிச்சந்திரனின் ‘நான்’, கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் ‘பணமா பாசமா’ போன்ற படங்களுடன் நிர்மலாவும் ஓடியது.

சின்னையா, புலி மார்க் தீப் பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். ரகுநாதனும் சந்திரகலாவும் (நிர்மலா) இவருடைய பிள்ளைகள். சந்திரகலாவை இளைஞர்கள் சிலர் கடத்திச் செல்லுகின்றனர். அவள் தப்பி வந்து விடுகிறாள். இந்தக் கதையினால் நிர்மலாவின் திருமணப்பேச்சுகள் தடைபடுகின்றன.

கொழும்புக்கு வேலை தேடி வரும் தங்கவடிவேல் நண்பன் ரகுநாதன் வீட்டில் தங்குகிறான். தங்கவடிவேலுவுக்கும் சந்திரகலாவுக்கும் காதல் அரும்புகிறது. முதலாளிக்கும் சந்திரகலா மீது ஆசை இருக்கிறது. ரகுநாதன் தன் தங்கையைத் தங்கவடிவேலுவுக்கே கட்டிக்கொடுக்க விரும்பி கோயிலில் ஏற்பாடு செய்தார்.

இதற்கிடையில் முதலாளியின் கையாட்கள் சின்னையாவைக் கொலை செய்கிறார்கள். தந்தையைக் கொலை செய்தவன் மனேஜர்தான் என்று எண்ணிய ரகுநாதன் அவனைத் தாக்க ஓடுகிறான். ஏற்கனவே அங்கு மனேஜர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான். பழி ரகுநாதன் மீது விழவே அவன் சிறை செல்கிறான்.

சந்திரகலா தனிமைப்படுத்தப்படுகிறாள். கணவனைத் தேடிக் கண்டிக்குப்போகிறாள். அதே வீட்டுக்குத் தங்கையைத் தேடி ரகுநாதனும் வருகிறார். அந்த வீடு அவர்களின் மாமி வீடு என்று தெரியவருகிறது. தங்கவடிவேலுவுக்கும், சந்திரகலாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. ரகுநாதனுக்கும், மாமியின் மகளுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

இதுதான் நிர்மலா திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். இதுவரை வந்த இலங்கைத் தமிழ்ப் படங்களை விட, நடிப்பிலும் தொழில்நுட்பத் துறையிலும் சிறந்து விளங்கியது. லோப்பஸ் பாடிய “கண்மணி ஆடவர்” என்ற பாடல் புகழ் பெற்ற சினிமாப் பாடலாக விளங்கியது.

நிர்மலாவைப் பார்த்த அமரர் கலையரசு சொர்ணலிங்கம் அப்பொழுது தன் கருத்தை வெளியிட்டிருந்தார். ‘நிர்மலாவைத் தொடர்ந்து இனிமேல் அதிக தமிழ்ப்படங்கள் வரும்’ என்பதுதான் அவரது கருத்து.

இப்படத்தைப் பற்றி விமர்சகர் கே. எஸ். சிவகுமாரன் வானொலியில் விமர்சனம் செய்தார். “நடிகர்கள் எல்லோருமே கதைக்கு ஏற்ற விதத்தில் நடித்துள்ளனர். படம் எடுக்கப்பட்ட முறையிலும் ஒரு சீர், ஒழுங்கு இருப்பதை உணர முடிகிறது” என்று குறிப்பிட்டார்.
‘கலையார்வமும், கலைத் தாகமும் மிக்க இரு இளைஞர்களின் நீண்டகாலக் கனவுதான் நிர்மலா. தமிழ்நாட்டிலும் திரையிடக்கூடிய நல்ல படமாக நிர்மலாவைத் தயாரித்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழ்ப்படங்களுக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதை இப்படம் நிரூபிக்கிறது.’ என்று எழுதியது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகை.

‘பிரபல நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இந்தியத்தயாரிப்புகள் என்ற திரைகளைக் கிழித்து எறிந்துவிட்டுப் பார்க்கும் ரசிகர்களுக்கு நிர்மலா நிச்சயம் மகிழ்ச்சியைத் தருவாள். இரண்டாந்தர தென்னிந்தியப் படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நிர்மலா நிச்சயம் உயர்வானது என்று அப்போது வெளிவந்துகொண்டிருந்த ‘இளம்பிறை’ என்ற சஞ்சிகை எழுதியது.

‘நிர்மலாவாக நடித்த சந்திரகலா பாத்திரத்துடனேயே ஒன்றிப்போய்விடுகிறார். வெளிப்புறக் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழ்ப் படங்கள் படிப்படியாக முன்னேறறுகின்றன என்பதற்கு நிர்மலா எடுத்துக்காட்டாகும்' என்று மித்திரன் (15.07.78) குறிப்பிட்டது.

‘நிர்மலாவில் புகுத்தப்பட்டுள்ள வி.வி. வைரமுத்துவின் ‘மயாகாண்டம்’ நாடகம் ஒரு தனி எடுப்பாக இருக்கிறது. இந்நாடகத்தைச் சினிமாவில் காணும்போது ஒரு தனி அழகு தோன்றுகிறது’ என்று மதிவாணன் என்பவர் ராதா (20.07.68) சினிமா சஞ்சிகையில் எழுதியிருந்தார்.

‘இலங்கைப் படம் என்றால் தரமற்றது என்று பலரும் இடும் கூச்சலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் தோன்றியிருக்கிறது. நிர்மலா ஒவ்வொருவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். சந்திரகலா தோன்றும் கட்டங்கள் இந்தியத் திரைப்படங்களின் சாயலை ஒத்திருக்கின்றன. இலங்கைப் படம் என்று குறைத்துக் கணிக்க முடியாத அளவுக்குத் திறமையாக நடித்துள்ளார்’ என்று அப்பொழுது வெளிவந்த பெண்கள் பத்திரிகையான ஜோதி (16.07.68) எழுதியது.

‘நிர்மலா'வுக்குப் பின்னர் ஒளிமயமான எதிர்காலம் இலங்கைத் தமிழ்ப் படங்களுக்கு உண்டு என்று நம்பலாம்’ என்றது கே.வி.எஸ். மோகனை ஆசிரியராகக் கொண்ட ‘கதம்பம்’.

நிர்மலாவும் ஆரம்பகாலத் திரைப்படம் என்பதால் சில குறைகள் இருக்கவே செய்தன. ஆனாலும், தொடரும் படங்களுக்கு நிர்மலா வழிகாட்டியாக அமைந்தது.

திரைப்பட ஆர்வம் காரணமாகத் தன் தொழிலையே ராஜினாமா செய்தவர் கலைஞர் ஏ. ரகுநாதன். பின்னாளில் ‘தெய்வம் தந்த வீடு’ என்ற படம் உருவாகக் காரணமாக இருந்தவர். 1983ஆம் ஆண்டு ஜுலைக் கலவரம் ரகுநாதனையும் பாதித்தது. இந்தியா சென்றார். சிலகாலம் அஞ்ஞாதவாசம் செய்தார். இப்பொழுது பிரான்சில் இருக்கிறார்.

பிரான்ஸின் தலைநகர் பாரீஸில் இருந்துகொண்டு பல கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இலங்கைக் கலைஞர்கள் பலருடன் சேர்ந்து ‘கலைமன்றம்’ அமைத்து பல நாடகங்களை மேடையேற்றிவருகிறார்.

இலங்கைத் திரைப்பட வரலாற்றில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய பெயர்களில் ஏ.ரகுநாதனின் பெயரும் ஒன்றாகும்.

----------------------------------------------------------------------------------------------------மின்னஞ்சல் முகவரி: thambytheva@gmail.com

இந்த புத்தகத்தை வெளியிடுவதிலும், நூலை இணையத்தில் வெளியிட வசதியான வடிவில் கொடுத்து உதவிய, நண்பர் ரிஷான் செரிப்பிற்கு பேசாமொழி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.