இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 9. ‘மஞ்சள் குங்குமம்’

கொழும்பில் தமிழ்க் கலைநிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறதோ அங்கெல்லாம் ஒரு புகைப்படக்கலைஞரைக் காணலாம். இவர் பிடித்த படங்கள் இடம்பெறாத தமிழ்ப் பத்திரிகைகள் இலங்கையில் இல்லையெனலாம். இவர் புகைப்படக்கலைஞர் மட்டுமல்ல நாடகத் தயாரிப்பாளரும் கூட. புகழ்பெற்ற பல்வேறு நாடகங்களைப் பல இடங்களில் மேடையேற்றிவந்தார். அவற்றில் ஒரு நாடகத்தைத் திரைப்படமாக்கலாமா என்று எண்ணினார். தனக்கு அறிமுகமான கலை உலக நண்பர்களையும், கலை அபிமானிகளையும் தேடி அலைந்தார்.

அப்படிக் கலைத்தாகத்துடன் விளங்கிய அந்தப் புகைப்படக்கலைஞர்தான் கிங்ஸ்லி எஸ். செல்லையா.

கலை அபிமானம் கொண்ட இளைஞர் ஒருவர் ஆயிரத்து ஐந்நூறு ரூபா சம்பளம் தரும் தொழிலையே தூக்கி எறிந்துவிட்டுக் கலை உலகுக்கு ஓடிவந்தார். தமிழகம் சென்று சிவாஜி கணேசனின் நண்பராகி ‘ராஜ ராஜ சோழன்’ படத்தில் ஈழத்துப் புலவராகத் தோன்றி நடித்தார்.
கொள்ளைக்காரன்’, ‘ஒரு மனிதன் இரு உலகம்’ போன்ற நாடகங்களைப் பருத்தித்துறையிலும், யாழ்ப்பாணத்திலும் பலமுறை மேடையேற்றினார். இலங்கையில் எப்படியும் ஒரு தமிழ்ப்படம் தயாரித்தே ஆகவேண்டும் என்று துடித்துக்கொண்டு நின்றார். அவர்தான் பருத்தித் துறையைச் சேர்ந்த வி. வைத்தியலிங்கம். ஸ்ரீசங்கர் என்ற கலைஞரின் இயற்பெயர்தான் வைத்தியலிங்கம்.

கிங்ஸ்லி செல்லையாவும், ஸ்ரீசங்கரும் ஒன்று சேர்ந்து கொண்டார்கள். இவர்களுடன் ஏ. சுந்தரஐயா, பதூர்தீன், பரஞ்சோதி ஆகியோரும் ஒன்று சேர்ந்து சிறந்த முறையில் தமிழ் படமொன்றை உருவாக்கத் திட்டமிட்டார்கள். அதற்காக ‘கீதாலயம் மூவீஸ்’ என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.

1969ஆம் ஆண்டு முதல் கிங்ஸ்லி செல்லையாவின் ஆனந்தா புரடக்ஷன் மூலம் “மஞ்சள் குங்குமம்” என்ற நாடகத்தை மேடையேற்றிவந்தார்கள். இந்த நாடகத்தையே திரைப்படமாக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அந்த நாடகத்தை ஓர் இளைஞர் இயக்கி வந்தார். அவரையே திரைப்படத்தையும் இயக்கச் செல்வோமா என்று எண்ணினார்கள்.

எட்டியாந்தோட்டையில் இங்கிரியவத்தையில் பிறந்து, கலையார்வத்தின் காரணமாகக் கொழும்புக்கு வந்தவர் இந்த இளைஞர். அவருக்கு முதலில் பம்பலப்பிட்டிய கிறீண் லண்ட்ஸ் ஹொட்டேலில் வேலை கிடைத்தது. அந்த ஹோட்டலுக்கு சினிமாஸ் குணரத்தினம், எஸ். ராமநாதன், சுண்டிக்குளி சோமசேகரன் போன்ற கலையுலகப் பிரமுகர்கள் வந்துபோவார்கள். இவர்களின் அறிமுகம் இந்த இளைஞனுக்குக் கிடைத்தது.

ஏ.எஸ். நாகராஜனின் உதவியால் சிங்களப் படங்களில் கோஷ்டி நடனம் ஆடத் தொடங்கினார். லெனின் மொறாயஸும், எஸ்.எஸ். சந்திரனும் நாடகத்துறையை அறிமுகப்படுத்தினார்கள். சினிமாத் துறையில் இவரை டெக்னீஷியனாக்கியவர் சுண்டிக்குளி சோமசேகரனே.

காமினி பொன்சேகா ஆரம்பத்தில் புகைப்படப்பிடிப்பாளராகவே திரை உலகத்துக்கு வந்தார். காமினி நடிகனாக மாறி, பின்பு தயாரிப்பாளராக மாறியபோது தனது படத்தை (ஒப நெத்திநம் - நீ இல்லையெனில்) இந்த இளைஞரைக் கொண்டே இயக்கினார்.

இந்த இளைஞர்தான் எம்.வி.பாலன், இவருக்கே மஞ்சள் குங்குமம் படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எம். உதயகுமாரும் ஸ்ரீசங்கரும் பிரதான நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

சிறுமி ஒருத்தி ஆறு வயதிலே அழகாக நடனமாடினாள். நாடகத் தந்தை இராஜேந்திரம் மாஸ்டரின் ‘மனோரஞ்சித கானசபா’வில் நடிப்புப் பயிற்சி பெற்றாள். வளர்ந்ததும் ஸ்டண்ட் மாஸ்டர் முத்துலிங்கத்திடம் வாட் பயிற்சியும் பெற்றாள். மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினாள். ‘ஒக்கொம ஹரி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் சிங்களச் சினிமாவிலும் அறிமுகமானார். பல சிங்களப் படங்களில் நடன அமைப்பையும் கவனித்துக்கொண்டு நடனமும் ஆடினார். இவரையே 'மஞ்சள் குங்குமம்' படத்தில் கதாநாயகியாகப் போடலாம் என்று எண்ணினார்கள்.

அவர்தான் ஹெலன் எஸ்தர் என்ற இயற்பெயர் கொண்ட ஹெலன்குமாரி. அக்காலத்தில் பல நாடகங்களை எழுதி மேடையேற்றிய ஓர் இளைஞர் இப்படத்துக்கு உதவி இயக்குநராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர்தான் அந்தனி ஜீவா.

ரொசாரியோ பீரீஸ். சிலோன் சின்னையா, ஏ. நெயினார், ஏ. எஸ். ராஜா போன்றோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். லீலா நாராயணனியின் பரதநாட்டியமும், ஃபரீனா லையின் கவர்ச்சி நடனமும் இப்படத்தில் இடம்பெற்றன. மஞ்சுளா, ருத்ராணி, மணிமேகலை போன்றோரும் நடித்தனர். சில்லையூர் செல்வராஜனும், இக்னேஷியஸ் மொறாயஸும் பாடல்களை எழுதினார்கள்.

இந்தியாவில் நாகர்கோவிலில் பிறந்த இசைக்கலைஞர் ஒருவர் இலங்கைக்கு வந்தார். நூற்றுக்கு மேற்பட்ட சிங்களப் படங்களுக்கு இசை அமைத்தார். இவரது இசைத் திறமையை அறிந்த இலங்கை அரசாங்கம் இவருக்குக் கௌரவப்பிரஜை அந்தஸ்தை வழங்கியது.

அவர்தான் இசையமைப்பாளர் ஆர். முத்துசாமி. இவரே மஞ்சள் குங்குமம் திரைப்படத்துக்கான இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இசையமைப்பில் ஏ. சுந்தரஐயரும் உதவி செய்தார். இந்த இரு இசைப்பாளர்களுமே தலா ஒவ்வொரு பாடலையும் பாடினார்கள். எம்.ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், சுஜாதா போன்றோரும் பின்னணி பாடினர்.

எம்.ஏ. கஃபூர் ஒளிப்பதிவு செய்த நான்காவது தமிழ்ப் படம் இது. சுண்டிக்குளி சோமசேகரன் ஒலிப்பதிவு செய்த மூன்றாவது தமிழ்ப்படமும் இதுவே. கொழும்பு சிலோன் ஸ்ரூடியோவில் படம் வளர்ந்து வந்தது. பணக் கஷ்டத்தால் வேகம் குன்றியது பிரபல வர்த்தகர் ஜி. நாராயணசாமியின் உதவியுடன் படம் தொடர்ந்து வளர்ந்தது.

கொழும்பு ஆடிவேல் விழாக் காட்சி, வெசாக் விழாக் காட்சி, 1969இல் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக் காட்சி போன்றவற்றை இப்படத்தில் இணைத்தனர்.

“மஞ்சள் குங்குமம்” 14.03.1970இல் கொழும்பில் கிங்ஸ்லி உட்பட இலங்கை எங்கும் திரையிடப்பட்டது. அப்போது தியேட்டர் நிர்வாகம் தனியாரின் கைகளில் இருந்தது. அதனால், இப்படத்துக்குப் போட்டியாக எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண், சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களும் திரையிடப்பட்டன. ஆனாலும், மஞ்சள் குங்குமம் சுமாராக ஓடியது.

இளைஞன் சங்கர், நடன மங்கை ஜெயா மீது காதல் கொள்கிறான். அவளும் சங்கர்மீது அன்புள்ளவள் போலவே காட்டிக்கொள்கிறாள். சங்கரைத்தேடி குமார் வருகிறான். சங்கர் தன் மனோரதியக் காதலி ஜெயாவை அறிமுகப் படுத்துகிறான். ஜெயா குமாரை வரவேற்றுக் கட்டி அணைக்கிறாள். இதைக் கண்ட சங்கர் பதறிப்போனான். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஜெயா சங்கர் மீது அன்பு கொண்டவள் போல் நடந்துகொள்கிறாள். குமார் இவர்களைப் பிரிந்துசெல்ல முயலுகிறான். ஜெயா தனது நடத்தைக்கு விளக்கம் கூறுகிறாள்.

ஜெயாவுக்கு சங்கரைப்போலவே உருவமுடைய அண்ணன் ஒருவன் இருந்தானாம். அவன் கெட்ட கூட்டாளிகளுடன் சேர்ந்திருந்தான். தங்கை ஜெயாவின் புத்திமதிகளுக்கு ஏற்ப வீடு திரும்பினான். இதை விரும்பாத அவனது கூட்டாளிகள், அவனைக் கொன்று விடுகிறார்கள். அதனால், சங்கரைத் தன் அண்ணனாக நினைத்துப் பழகுவதாக விளக்கம் கூறினாள். தன் நண்பன் ஒருவர் மரணப்படுக்கையில் இருந்து வேண்டிக்கொண்டதற்கிணங்க சங்கர் தன் முறைப்பெண்ணை மணக்கிறான்.

இதுதான் மஞ்சள் குங்குமத்தின் கதைச் சுருக்கமாகும். சங்கராக ஸ்ரீசங்கரும், குமாராக உதயகுமாரும், ஜெயாவாக ஹெலன்குமாரியும் நடித்தார்கள். முறைப்பெண்ணாக மஞ்சுளாவும் மரணப்படுக்கையில் உள்ள நண்பனாக டைரக்டர் எம்.வி. பாலனும் நடித்தார்கள்.

ஸ்ரீசங்கருக்கு இப்படத்தில் மூன்று வேடங்கள். “தித்திப்பு செம்மாதுளம்பூ” என்ற பாடலை இசையமைப்பாளர் முத்துசாமி பாடினார். இனிமையான இப்பாடலுக்கு டைரக்டர் எம்.வி. பாலனும் உருக்கமாகவே வாயசைத்து நடித்திருந்தார்.

மஞ்சள் குங்குமம் எட்டு வருடங்களின் பின் மீண்டும் திரையிடப்பட்டது. 10.10.78இல் தெமட்டகொடை, சமந்தா தியேட்டரிலும் மேலும் நான்கு தியேட்டர்களிலும் திரையிட்டார்கள்.

கீதாலயம் மூவீஸ் என்று முன்பு ஆரம்பமாகிய படம் “விநாயகர் பிலிம்ஸ்” அளிக்கும் மஞ்சள் குங்குமம் என்று தொடங்கியது. பிரபல தொழிலதிபர் ஜி. நாராயணசாமியின் திரைப்பட நிறுவனமே ‘விநாயகர் பிலிம்ஸ்’ ஆகும். பழைய காட்சிகள் சிலவற்றை நீக்கிவிட்டுப் புதிய ஆரம்பக் காட்சியைச் சேர்த்திருந்தார்கள். ஸ்ரீசங்கர் தோன்றும் பாடற்காட்சி, தமிழரசுக் கட்சி மாநாடு, தயாரிப்பாளர்கள் உரையாடும் காட்சிகள் போன்றவை நீக்கப்பட்டிருந்தன.

மஞ்சள் குங்குமம் சமந்தாவில் ஒரு வாரம் மட்டுமே ஓடியது. மற்றும் நான்கு ஊர்களிலும் தலா 3 தினங்களே நின்றுபிடித்தது. எட்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் திரையிடப்பட்ட மஞ்சள் குங்குமம் எட்டு நாட்கள்கூட ஓடாததையிட்டுக் கலை உள்ளங்கள் கவலை கொண்டன.
----------------------------------------------------------------------------------------------------மின்னஞ்சல் முகவரி: thambytheva@gmail.com

இந்த புத்தகத்தை வெளியிடுவதிலும், நூலை இணையத்தில் வெளியிட வசதியான வடிவில் கொடுத்து உதவிய, நண்பர் ரிஷான் செரிப்பிற்கு பேசாமொழி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.