உயிர் கொடுக்கும் கலை 15 - டிராட்ஸ்கி மருது

திராவிட இயக்கம் ஓங்கி வளர முற்படுவதற்கு முன்பு மற்றும் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பும், தென்னிந்திய சினிமாவின் 'பீரியட் சினிமா' மாய மந்திர தன்மைகள் கொண்டதான புராண வரலாற்று கதைகளின் தோற்றம் ஒரே மாதிரியாகத்தான் கட்டமைக்கப்பட்டது. பெரியாரின் திராவிட இயக்க அரசியல் எழுச்சியினால், தமிழக சினிமா வேறொரு இடத்திற்கு வந்துவிட்டது. சினிமாவை பார்க்கும் முறையும், சமூகத்தைப் பார்க்கும் முறையும், மிகப்பெரிய சமூக போராளியின் பணியினாலும் தமிழ் நாட்டின் போக்கு வேறு திசையில் சென்றது. இதனால் தானாகவே சில விஷயங்கள் உதிர்ந்து விட்டது. என்னை போன்ற சில கலைஞர்களுக்கு, உதிர்ந்ததில் கலை வடிவத்தின் முக்கியமான சில கூறுகளும் சேர்ந்து சுனாமியில் இழுத்து செல்வது போல, சினிமாவின் மாய சக்திகளுள் ஒன்றான அதீதக் கற்பனை படிமங்களும் சேர்த்து இழுத்து சென்றுவிட்டது என்ற வருத்தம் உண்டு. மாயத்தன்மை, அதீத உருவங்களாலான படிமங்களை கடவுள் நம்பிக்கையோடு மட்டும் இணைத்து நாம் வைத்திருந்ததனால் இது நிகழ்ந்தது. அதன் பிறகு முப்பத்தைந்து ஆண்டுகள் பூராணம் மற்றும் வரலாற்று கதையை திரைப்படமாக்குவதற்கான முயற்சியே இங்கு இல்லை.
ஹாலிவுட்டில் கவ்பாய் படங்கள் வெகுஜன திரைப்படங்களாக அதிகம் வெளிவந்த காலத்தில், ஓரிரு கலைஞர்கள் அதனை நம்பகத்தன்மையுடன் உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுத்தனர். ஹாலிவுட் சினிமா ஒரு விவரனத்தை கொடுத்திருக்கிறது, அதை அடிப்படையாக வைத்து செய்தவர்களும் இருக்கின்றனர். அதே போல, நீண்ட காலங்களாக இருக்கும் ஓவியங்களை அடிப்படையாக வைத்து செய்தவர்களும் இருக்கின்றனர். 'King Arthur and His Knights of the Round Table' இங்கிலாந்தின் தொன்ம வரலாற்றுக்கதை. இதை பல கலைஞர்கள் பல காலங்களில் பல வடிவங்களில் சமைத்திருப்பதை நான் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். குழந்தைகளுக்கான புத்தகமாக பாலியால் (Pyle) சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. இன்றும் போற்றப்படுகிறது. இயக்குனர் 'John Boorman'இன் படங்கள் நம்பகத்தன்மையான ஓவியத்தை அடிப்படையாக வைத்தும் வந்திருக்கிறது. சமீபத்தில் எக்சோடஸ் வெளிவந்தது. யதார்த்தமாக பார்பதற்கான ஒரு வழி உண்டு, புராணக்கதை என்பதை தாண்டி சாகசம் என்ற ஒரு தளத்தில் ரிட்லி ஸ்காட் இப்போது செய்திருக்கிறார். இப்படியான முயற்சிகள் பல்வேறு காலகட்டத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது.

தனித்த தமிழ் அடையாளத்தைக் கொண்ட பகுதியில் பணி செய்ய வேண்டுமென எனக்கு தொடர்ந்து ஆசை இருந்து வந்தது. முழு திரைப்படமாக செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற சூழ்நிலையில், ஒரு தனி அடையாளத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையிலேயே 'தேவதை' திரைப்படத்தில் அரை மணி நேர பகுதியாக முயற்சித்தோம். அதை நான் விரிவாக்க வேண்டும் என்று முயற்சி செய்த போது, என்னுடைய இரண்டு-மூன்று முயற்சிகள் களவாடவும் பட்டது. அதற்காக சிறத்தை எடுத்து செய்த அந்த முயற்சி எனக்கு தொடர் பணியாகிவட்டது.

கடந்த காலத்தை காட்டும் பீரியட் திரைப்படம் செய்வதற்கான சாத்தியங்கள் சமீப காலத்தில் நிறைய வந்துவிட்டது. பல இளம் கலைஞர்கள் இப்படியான திரைப்படங்கள் எடுக்க ஆசை படுகிறார்கள். ஆசை படுகிறார்களே ஓழிய, அதற்கு தேவையானளவுக்கான உழைப்பைக் கொடுக்க மறுக்கிறார்கள். சிலவற்றை வெட்டிவிட்டால் தயாரிப்பு செலவை குறைத்து விடலாம் என முக்கியமானவற்றை செய்ய மறுக்கிறார்கள், கஞ்சதனமான மனோபாவம் காட்சி படுத்ததில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, ஆடை வடிவமைப்பாளர்களுக்கு இருக்கும் அழகியல் உணர்வு, பழக்கபடுத்தப்பட்டுள்ள இடத்திலிருந்து அடுத்த பகுதிக்கு போக அவர்கள் விரும்பவதில்லை. தயாரிப்பாளர்கள் இந்த செலவுக்குள்ளே வைத்துக்கொள்ள வேண்டுமென்றே நினைக்கிறார்கள். குறைந்து செலவு செய்தாலும் அற்புதமாக செய்வதற்கு எதை முக்கியமாக செய்ய வேண்டும் என்பதில் தெளிவில்லை. ராஜா போட்டிருந்த பெரிய மேல் திரையை துப்படாவாகவே மாற்றிவிட்டனர். இப்படியாக நீர்த்து போய் நாடகங்களின் கடைசி காலகட்டத்தில், ராஜா ஒரு துப்படா மட்டுமே போட்டுக்கொண்டு வருகிறார் என்ற நிலை வந்துவிட்டது.

ஆசை படுவது மிகவும் சந்தோஷமே, மாற்றம் நிகழ வேண்டும் என நினைப்பது சரிதான். எங்களுக்கும் இருந்த ஆசை தான் அது. மூல தமிழ் தன்மையை உணர வைத்து காட்சி படுத்துவது, தேவதை திரைப்படத்தின் பாடலின் ஒரு காட்சியில், எல்லாம் பிணங்களாக இருக்கும், ஒருத்தி அழுது கொண்டு இருப்பாள், நெருப்பை ஏந்திக்கொண்டு வேண்டியவரை தேடிக்கொண்டிருப்பாள். அப்படியொரு காட்சியை அமைத்து ஷூட் செய்யும் போதே நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். அந்த படத்தில் ஒரே ஒரு இடத்தில் சில விநாடிகளே வரும் காட்சி அது. அப்படத்திற்காக காட்சிப்படுத்தப்பட்ட சில பகுதிகள் எடிட் செய்யபட்டது. போருக்கு கிளம்பி போகும் வீரர்களை காட்சிபடுத்தியவையெல்லாம், இப்போது விரித்து பார்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. இப்போது இருக்கும் சில இளம் கலைஞர்கள் அதையும் செய்கின்றார்கள். எங்கேயோ ஓர் இடத்தில் அது சரியில்லாமல் இருக்கிறது.
வசந்த பாலன் எனக்கு வேண்டிய நண்பர்தான். அவரது முந்தைய படமான அரவானை நான் பார்க்க வில்லை. வாய்ப்பு அமையாமல் போய்விட்டது. அது மட்டுமல்லாமல், அந்த படத்தை தேடி பார்க்க வேண்டுமென்ற அபிப்பிராயமும் இல்லாமல் போய்விட்டது. பரத் மற்றும் அஞ்சலி இருவரும் இருக்கும் காட்சி படிமங்களை நிழற்படத்தில் பார்த்தேன், அதெல்லாம் அந்த காலத்துடன் ஒட்டாமல் இருந்ததால் எனக்கு அப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றவில்லை. சமீபத்தில் வெளிவந்த காவியத்தலைவனும் அதே உணர்வையே ஏற்படுத்தியது. மனோகருக்கு பின், சென்னையில் க்ரேஸி மோகன் நடத்திய நாடகங்களின் கடைசி எச்சமான ஒரு பீரியட் நாடகம் செய்து காண்பிப்பது மாதிரியான இடத்தில்தான் படம் இருக்கிறது.

முதலில், இயக்குனருக்கு துணை இருக்கும் எழுத்தாளருக்கு முதலில் அந்த காலத்தின் மீது மரியாதை இருக்க வேண்டும். அந்த எழுத்தாளர் மீது பெரிய நம்பிக்கை எனக்கு கிடையாது. ஒரு பெரிய எழுத்தாளரை அழைக்க வேண்டும் என்று நினைத்தாலும், அதற்கு முன் காட்சிபடுத்தி சிந்திக்கும் சக்தியுள்ள ஒருவரை நீங்கள் தேட வேண்டும். நீங்கள் தேடி காட்சிபடுத்துவதற்கான தரவுகளை சேர்த்த பின்பே ஒரு கதாசிரியர் தேவை. மெலிதான ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு அதை ஒழுங்கு செய்ய எழுத்தாளர் தேவை. ஆனால், அப்படி வரும் எழுத்தாளர் உங்களிடம் இப்படியான குறையிருக்கிறது என்று சொல்லாமலே, தான் சம்பாதித்து போவதற்குதான் பார்க்கிறார். இந்த படத்தைப் பார்க்கும் போதே அது தெரிகிறது. வசனத்துக்கும் காலத்துக்கும் சம்பந்தமேயில்லை. அவர் தனித்து இயங்குகிறார்.

படம் வசனத்தால் மட்டும் நிரம்பி இருக்கக்கூடாது, அது ஒரு பகுதி மட்டுமே, ஆனால் இப்படம் அற்புதமாகக் காட்சிப்படுத்திக் காண்பிக்க வாய்ப்பு உள்ள படம். முதலில் ஒரு Scrap book தயாரித்திருக்க வேண்டும், கிடைத்த தரவுகளை எல்லாம் ஆய்வு செய்து அதை எப்படி காட்சி படுத்துவது, எங்கெல்லாம் சாத்தியமில்லையோ, அந்த பகுதியை எப்படி ஒதுக்குவது என்று முடிவு செய்திருக்க வேண்டும். கூடுமான வரை உண்மையை நோக்கிய பயணம் இருந்திருக்க வேண்டும். ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. மறைந்த அழிந்துப்போன ஒரு பகுதியை காண்பிக்க முயற்சி செய்யும் போது, அதற்கான நேர்மை, அதை சமைத்து வைப்பதன் மூலம், முந்தைய நூறாண்டு கலைஞர்களின் வாழ்க்கையை காட்சிப்பூர்வமாக நினைவு படுத்துவது போலாவது இருந்திருக்க வேண்டுமல்லவா ?. அந்த பொறுப்பும் இயக்குனருக்கு இருக்கிறது. வெறுமனே வியாபாரம் செய்பவனாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஒரு கலைஞனுக்கு பெரிய பொறுப்பிருக்கிறதல்லவா?.


பெரும் பொறுப்போடு செயல்படுகிறேன் என்று கூறிக்கொண்டே பக்கத்தில் இருந்துக்கொண்டு, உங்களிடமிருந்து உரித்து திண்றுவிட்ட செல்பவனையும் நீங்கள் கவனிக்க வேண்டுமல்லவா?. உள்ளே பேசியதை அந்த இயக்குநர் கேட்கவில்லை என்றால், வெளியே வந்து அதை பேசவேண்டுமல்லவா. அப்படியாக எழுத்தாளருக்கு நேர்மை இல்லாததும், வேறு புறம் பேசுவதுமாக இருப்பது சரியல்லை தானே!

படம் முழுக்க எங்கேயும் ஆர்மோனிய பெட்டியில்லை. அந்த பக்க வாத்திய கலைஞர்கள் ஒரு பெரிய கூட்டம். இசை நாடக மரபில் பக்க வாத்திய கலைஞர்கள் ஒரு பெரிய ஸ்டார். அப்படியான பகுதியே இல்லாமல் போய்விட்டது. ஒளிப்பதிவாளர் தனியாகவே இயங்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளருக்கு அந்த காலமே புரியவில்லை, பெயின்டிங் போல் அவர் விருப்பப்படி எடுக்க முயற்சித்துள்ளார்.

அதல்லாமல், அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த காலகட்டம் சார்ந்த திரைப்படத்தை எடுப்பதற்கான முயற்சியையோ பாதையையோ அரவேக்காடாக எடுத்து அடைத்தும் விடுகிறீர். அந்த காலத்தை பிறகு யாருமே எடுக்கவில்லையென்றால், 40 ஆண்டுகள் கழித்து பார்ப்பவர்க்கு இது தான் அந்த காலம் என்று நினைக்க தோன்றும். அதற்கான சாத்தியங்களும் உள்ளது. அப்படியான பெரிய மோசமான செயலாக இது உள்ளது. இந்த எல்லா பொறுப்பும் இயக்குனருக்கு இருக்கிறது.

வெறும் ஆசை மட்டும் பட்டால் போதாது, அதை செயல்படுத்த என்னென்ன வேண்டும் என்ற தெளிவும் வேண்டும். ஒரு படமாக அதை கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற போது, pre-production பகுதிக்கு தான் அதிக வேலை செய்திருக்க வேண்டும். படம் எடுப்பது பலரால் முடியும். பல கலைஞர்கள் இருக்கிறார்கள். படத்தை எடுத்து முடித்துவிடுவார்கள். ஆனால் யாரும் எடுக்காத அல்லது தொடாத ஒரு பகுதியை தொடுகிறவர், அதை முழுமையாக செய்ய வேண்டும். பொறுப்போடு செய்ய வேண்டிய கலைஞர்கள் மேலோட்டமாக செய்வது, தவறாக ஆவணப்படுத்துவது, தவறாக ஒரு காட்சியை காட்டுவது போன்றவை இனி வரபோகும் கலைஞர்களுக்கும் பாதையை அடைத்துவிடும் செயலையும் செய்கிறது. இதற்கு மேல் அப்படியான படத்திற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

தயாரிப்பாளர் குறிப்பிட்ட நடிகர்களை வைத்தே செய்ய வேண்டும் என்று நினைக்கிறார், இயக்குநர் இப்படியான படத்தை எடுக்க வேண்டும் என நினைக்கிறார். எல்லாரும் கூடி வந்து, தங்களை முழுமையாக அர்பணித்து ஒரே நோக்கத்தில் பணி செய்திருக்க வேண்டும். எழுத்தாளர், பதினைந்து நாளிலே எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார், அவருக்கும் இதற்கும் சம்பந்தமில்லாதது போல் இயங்குகிறார். இது போன்ற படத்தில் அப்படி இயங்க முடியாது.

அனைத்து ஜன்னல் வாசலையும் அடைத்து வைத்து திரைப்படத்தைக் காட்ட வேண்டியதில்லை. மிக சரியாக எடுத்தால், எப்படியென்றாலும் நிச்சயம் அது ஓடிய தீரும். பார்க்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அப்படி ஒரு இடம், அதற்கான சாத்தியங்களும் உண்டு. மொத்த ஜன்னலையும் அடைத்துவிட்டு தமிழ்நாடு முழுவதற்கும் போட்டு காட்ட வேண்டிய நிர்பந்தம் தேவையில்லையே. சமீபத்தில் வந்த ரஜினிகாந்த் படம், தமிழ் நாடு முழுவதும் குழாயை திறந்தால்; உலகம் முழுவதும் தமிழ் பேசுபவன் குழாயை திறந்தால், கோக்கா கோலா தான் கொட்டுவது போல, அவர் திரைப்படம் தான் இருக்கிறது. அனைத்தையும் அடைத்து வைத்து விட்டு, எல்லா திரையரங்கிலும் சேர்த்து போட வேண்டிய நிர்பந்தம் எப்படி வந்தது.

நான் வியாபாரம் தான் செய்ய சொல்லுகிறேன். உங்களை அழித்துக்கொண்டு கலையை மேம்படுத்த வேண்டும் என சொல்லவில்லை. வியாபாரம் பண்ணுங்க. ஆனாலும் அதில் சாத்தியங்கள் இருக்கின்றது. ஆசை இருக்கு, ஆசையோடு மட்டும் அது முடிவதில்லை. அதையும் கடந்து ஒரு பகுதி உள்ளது. ஒரு பொறுப்பு உள்ளது. யாரையெல்லம் உடன் வைத்துக்கொள்ளலாம் என்ற குறைந்த பட்சம் நேர்மை வேண்டும். உலகளவில் இது போன்ற படமெடுப்பவர்களுக்கு, பெரிய அளவில் குறிப்பிட்ட ஆய்வாளர்கள் உடன் இருப்பார்கள். சங்கரதாஸ் சாமிகளின் நாடக பின்புலத்தை, பாடல்களை ஆவணப்படுத்திய பல கலைஞர்கள் எழுத்தாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். பல ஒலி பதிவுகள் இருக்கிறது. இந்த திரைப்படம், பெயர்களை விற்கவே முயற்சிக்கிறது.

ரகுமானுக்கு இருக்கிற வேலை பலுவில், இந்த படத்திற்க்காக நேரம் ஒதுக்கி ஆய்வு செய்வதென்பது இயலாத காரியமாக இருக்கலாம். உலகபடத்துக்கு அவர் கொடுக்கும் நேரம் ஒரு தமிழ் படத்துக்கு கொடுக்க வேண்டும். அதற்கான தரவுகளை எல்லாம் சேர்க்க வேண்டும். எனக்கு தெரிந்து, பீட்டர் கேப்ரியல் உலகம் முழுக்க இருக்கும் இசை சாதனங்கள் அனைத்தையும் சேர்த்தார். மக்களின் இசையெல்லாம் சேர்த்தார். பிறகு அதை ஒரு அறக்கட்டளையாக்கினார். அப்படித்தான் நவ்ஃப்ரத் அலிகான் மற்றும் பலர் உலகளவில் வெளிய தெரிந்தனர்.


பெரிய எழுத்தாளரை அழைப்பதற்கு முன், இந்த படம் காட்சிப்பூர்வமாக அமைய வேண்டும், சரியானவிதத்தில் காட்சிப்படுத்த வேண்டும், அப்படியான காரியங்களுக்கான உழைப்புதான் இந்த மாதிரியான திரைப்படத்திற்கு தேவை. இன்று வரை அதனுடைய முக்கியத்துவத்தை, தமிழ் சினிமா உணரவில்லை.

சமகாலத்தில், பெரிய இயக்குநர்களுக்கு கூட, பீரியட் பகுதியென்பது கற்பனை அல்லது கனவு சார்ந்து பாடல் காட்சியுடன் மட்டுமே இணைத்து பார்க்கிறார்கள். இங்கு அதை ஒரு முக்கியமான பகுதியாக நினைப்பது கிடையாது. சீன படங்களை இங்குள்ளவர்கள் பார்க்க வேண்டும். சீன சரித்திர படங்களில், அளவுக்கு அதிகமான உழைப்பையும் ஆய்வையும் பின்புலத்தையும் காண முடியும். அந்த இடத்துக்கு நாம் தயாரே கிடையாது.

ஆனால் ஒரு பாடல் காட்சியில் கண்மாயில் 200 பேர் கூடி ஆட்டமாடி, எல்லா பாதையையும் அடைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுக்க ஒரே சினிமாவை போட்டு காட்டி பணம் பண்ணும் வேலைதான் தமிழ் சினிமாவில் நடக்கிறது. வெண்திரை முழுவதும், கண்மாயில் வண்ண வண்ண பவுடர் தூவவிட்டு 200 பேர் ஒரே மாதிரி ஆட்டமாடி, அவர்களுக்கு முன்பு கதாநாயகர் ஆடுவதிருக்கல்லவா, இப்படி அந்த திரையை நிரப்பி, மிக பெரிய பிரம்மாண்ட படமாக காண்பித்து பழக்கப்பட்டு, கூடவே மற்ற யாரையும் விடாமல், அனைத்து திரையரங்கையும் அடைத்துக்கொண்டு, ஒரே படத்தை உலக முழுவதும் பார்க்கும் படியான சுழலுக்கு தள்ளி செய்யும் வியாபாரம் தான், வியாபார உத்தியிலே பெரிய உத்தி என்று தமிழ் சினிமா தெரிந்து வைத்திருக்கிறது.

எந்த குழாயை திறந்தாலும் கோக்க கோலா கொட்டுவது போல, அனைத்து இடங்களிலும்; இருபது தியேட்டர் இருக்கும் இடத்தில், இருபதிலும் அதே படத்தை போடுவதென்பது, கிட்டத்தட்ட எந்த குழாய் மட்டுமில்லை, சாக்கடையை பார்த்தாலும் கோக்கோ கோலா ஓடுவது போன்று தான் இருக்கிறது. கழிவறையிலிருந்து வெளியே வந்தாலும், வெறும் கோக்கோ கோலாவாக வருகிறது. அப்படியான ஒரு சூழலை கட்டி அமைத்து, மாற்றாக எதுவுமே யோசிக்க விடாமல், விருப்பத்தை உங்களிடம் கொடுக்காமல், நாங்கள் கொடுப்பதை நீங்களெல்லாரும் 100% பார்த்தே ஆக வேண்டும் என்பது மாதிரியான ஒரு கட்டமைப்பை தமிழ் சினிமாவில் ஒரு பகுதி அமைத்திருக்கிறது. இது கிட்டத்தட்ட, அரசியலும் சினிமாவும் ஒன்றோடு ஒன்று கலந்து, தமிழ் நாடு தெளிவு பெற வேண்டிய நேரத்தில், மிக மோசமான ஒரு இடத்திற்கு, வியாபாரம் என்ற நோக்கத்தில் வேறு மாதிரியான ஒரு வடிவத்திற்கு சென்று விட்டது.

கதை புனைவு தான், அந்த காலகட்டத்தை திரைப்படமாக்க நினைத்திருக்கிறீர். அந்த காலகட்டத்தை சொல்லுவதற்கு புனைவாக ஒரு கதையை தேர்ந்தெடுத்து அல்லது ஒரு கதையை சமைத்து, நம்பும் படியாக அந்த காலத்து கதைதான் என சொல்வதற்கு, நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்பது அதை நிதர்சனமாக காட்சி படுத்தி காண்பிபதில் மட்டுமே உள்ளது. அப்போதே கலையின் இந்த முழு பணி நிறைவடைகிறது. இந்த படைப்பு அப்போது தான் முழுமை பெறுகிறது. நினைத்து விட்டால் மட்டும் போதாது, எழுதி விட்டால் மட்டும் போதாது. எல்லாமே புனைவுதானே, ஆனால் காட்சிரூபமாக 1920'களில் நடப்பதாக நினைத்ததான ஒரு புனைவை செய்ய முடியாது. சும்மா அப்படி இப்படி காண்பிபேன், நீங்களே அந்த காலத்தை நினைத்து கொள்ள வேண்டும் என சொல்லக்கூடாது. அதை காண்பிக்க வேண்டும். அதற்கான உழைப்பு தான் இந்த படத்தின் முழுமையான உழைப்பு.

காவியத்தன்மை என்றால், காவியத்தன்மைக்கேற்ற ஒரு அமைப்பை எடுத்து கொண்டு, அந்த காலத்தை கண்முன் நடத்தி காண்பிக்க வேண்டும். சமகாலத்தில், அந்த காலத்தை குறித்து தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள், பல இலக்கியங்கள் இருக்கின்றன, பல நிழற்படங்கள் இருக்கின்றன, அந்த கால திரைப்படங்கள் இருக்கின்றன. மிகவும் சாதாரணமாக இணையத்தில், நவராத்திரியில் வரும் நாடக காட்சிகளை பார்க்க முடியும், அந்தளவுக்கு கூட உங்களுடையது இல்லை என்று சொல்லுமளவுக்கு உங்களுடைய படைப்பு பலவீனமாக உள்ளது. அந்த காட்சியை எவ்வளவு பிரயத்தனத்தோடு எடுத்தார்கள் என்று எனக்கு தெரியும்.

இசை நாடக மரபில், மேடையை பாதி தூக்கி நிறுத்துபவர் அந்த இசை குழு கலைஞர்கள். அந்த இசை குழுவே இல்லை, அப்படியான பகுதியே இல்லை. புனைவு என்றால், அனைத்தையும் புனைவாக்கிட கூடாது. ஒரு கோணத்தில் கதை சொல்லலாம், சில முக்கிய பகுதிகளை எப்படி நீக்கலாம். காட்சிபூர்வமாக அந்த காலத்தில் நடப்பதை நடத்திக்காட்டினால் தான் அது அந்த காலம். சினிமாவுக்காக அந்த மேடையை மிகப்பெரிய மேடையாக்கியுள்ளனர். அந்த பீரியட்டில் மேடை அடக்கமாக இருக்கும், அதற்க்குள் தான் கதை சொல்ல வேண்டும். உங்கள் வசதிக்காக அந்த காலத்தை கலைத்து தவறாக காட்டியுள்ளீர். உங்கள் வசதிக்காகவும், உங்கள் இயலாமைக்காகவும் எல்லாத்தையும் தக்கப்படி மாற்றியுள்ளீர். அப்போது கதை மட்டும் புனைவல்ல, காலத்தையும் நீங்கள் புனைந்து விடுகிறீர். காட்சி ரூபமாக காண்பிக்க வேண்டிய பகுதியும் புனைவாகிவிடுகிறுது.

ரிட்லி ஸ்காட்டுக்கு 76 வயதாகிறது. அவர் எடுக்கும் படத்திற்க்கும் இங்கு இருக்கும் படத்திற்க்குமான பட்ஜெட் ஒத்து போகவே போகாது தான். ஆனால் 76 வயதிலும் தவறில்லாமல் ஒவ்வொரு காலகட்டத்திலும், விஞ்ஞான படம், அடுத்து சரித்திர படம் என எடுக்கிறார், இப்போது எக்ஸோடஸ் கடைசியாக வெளியாகி உள்ளது. அதற்கு முன்பு கிளாடியேட்டர் எடுத்திருந்தார். ஒவ்வொரு படத்திற்குமான உழைப்பை நினைத்து பாருங்கள். ஒவ்வொரு படத்தில் அவர் மட்டும் வேலை பார்க்கவில்லை, பல கலைஞர்கள் அதில் வேலைப்பார்கின்றனர். ஆனால் கொண்டு செல்வது ஒரே ஒரு இயக்குநர் தான். அவர் காட்சிபடுத்துவதன் மூலமாகவே இந்த படத்துடைய சிறப்பு அவ்வளவு பெரிய உயரத்துக்கு வருகிறது. தொடர்ந்து 76 வயது வரைக்கும் அவரால் இயங்க முடிகிறது. இப்படியான வசதி இங்கில்லை என்று பேசி சமாலிக்க முடியாது. அந்த படங்களில் உள்ள உழைப்பிற்க்கு கீழ் உள்ள அடிப்படை நேர்மையும், ஒழுங்கும் நமக்கு இங்கு தேவை. நாம் இது போன்ற திரைபடத்திற்கு சிரத்தை எடுத்து அதற்கான தேவையான உழைப்பை கொடுப்பதில்லை.


Ridley Scott
பீட்டர் ஜாக்ஸனின் திரைப்படத்திற்கு 'Every day diary' இருக்கிறது. வீடியோ டைரி, உலகம் முழுவதும் எல்லோரும் பார்பதற்கான வாய்ப்பு உள்ளது. முன்பு அப்படியான இடம் இல்லை. ஒரு நாளைக்கு நடிகர்களுக்கான தங்கும் இடமாக ஒரு வாகனம் இயங்கினாலும் சரி, தண்ணிக்கொண்டு வரும் வாகனமாக இருந்தாலும் சரி, மேக்கப்புக்கான வாகனமாக இருந்தாலும் சரி, எந்த வாகனம் எங்கே நிற்க வேண்டும் என்பது முதற்கொண்டு ஒரு ஒழுக்கம் வைத்திருக்கிறார்கள். ஒரு கட்டமைப்பு இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் பார்வையாளர்களை சென்றடைய எடுக்கப்படும் சினிமா அது.

நம்ம பட்ஜெட்டுக்கு நாம் எடுக்கும் முறைக்கும், தேவைக்கும் இத்தனை நாடகளுக்குள் எடுக்க வேண்டும், இதற்கான தயாரிப்பு செலவு இவ்வளவு, அதற்க்குள் இருக்க வேண்டிய ஒழுங்கும் நேர்மையும் இருக்க வேண்டும். அந்த நேர்மையும் உழைப்பும் இல்லை என்றால், கண்டிப்பாக தவறுகள் தெளிவாக திரையில் தெரியும்.