எதிர்பார்ப்பது கரிசனம் அல்ல, சம உரிமையை!

இயக்குனர் பாலாவிடம் ஒருமுறை இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. “உங்கள் படங்களின் இறுதியில் முக்கியக் கதாபாத்திரங்கள் யாருக்கேனும் மரணம் சம்பவிப்பதைப் பார்க்கிறோம். இது போன்ற முடிவிற்கான பிரத்யேகக் காரணம்?” என்றபொழுது, அவரது பதில் இவ்வாறு அமைந்திருந்தது. “படத்தின் இறுதியில் துக்கமான முடிவுகளைக் கொடுத்தால்தான் படம்பார்ப்பவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி, குறைந்தது மூன்று நாட்களுக்காகவது படத்தை நினைவில் வைத்திருப்பார்கள், இல்லையெனில் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் மறந்துபோகும்” என்றார். இதே வார்த்தைகளில் அல்ல, இதுபோன்று பொருள்படும் படியான பதத்தில். ’சேது’, ’பிதாமகன்’, ’நந்தா’, ’நான் கடவுள்’,என தொடர்ந்து நீளும் பாலாவின் படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றிருப்பதற்கு இம்மாதிரியான இறுதிக்காட்சிகளே காரணம். இது இயக்குனர் பாலாவின் நம்பிக்கை.

ஆனால், சூழும் இடர்களிடத்து சிக்கிக்கொண்டு, நெருக்கடிகளினூடே வாழ்வுப் பயணம் மேற்கொள்ளினும், அடுத்தடுத்த வாழ்வின் கணங்களில் தனக்கான இன்பங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையோடு, வாழ்தலின் அடுத்த அத்தியாத்தை குறுநகையுடன் தொடங்கிவைப்பவைகளாக இருக்கின்றன இரானியத் திரைப்பட இயக்குனர் மஜித் மஜிதியின் கருத்துகளும், திரைப்படங்களும். மஜித் மஜிதியின் அடையாளமாக இனங்காணப்படும் திரைப்படம் ”சில்ட்ரன் ஆஃப் ஹெவன்” (Children of Heaven), (முதன்முதலாக ஆஸ்காருக்கு போட்டியிட்ட ஈரானியத் திரைப்படம்) ஆனால் ஃபாதர் (Father), வில்லோ ட்ரீ (The Willow Tree), பரன் (Baran), சாங்க் ஆஃப் ஸ்பாரோ(The Song of Sparrow) முதலான படங்களெல்லாமே உலகத் திரைக்கலைஞர்களிடத்து, மஜித் மஜிதிக்கான சிவப்பு கம்பள விரிப்புக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

மேற்கூறிய பட்டியலில் விடுபட்ட மற்றொரு திரைப்படம் ’கலர் ஆஃப் பேரடைஸ்’ (The color of Pafadise). இப்படத்தின் மையக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்ற சிறுவனுக்கு கண்பார்வை கிடையாது. கதையின்படி அவன் பெயர் முகமத், பதின்ம வயதிற்குள்ளான சிறுவன். விடுமுறைநாளின் துவக்கப்பொழுதில் முகமத் தன் சொந்தக் கிராமத்திற்குப் பயணமாவதிலிருந்து தொடங்குகிறது இப்படம். ஊருக்குச் செல்லப்போகிறோம், தன் மீது பிரியத்தைக் காட்டவிருக்கின்ற பாட்டியின் குரலைக் கேட்கலாம், சகோதரியினது விரல்களின் பரிசத்தை உணரலாம் என்ற அவாவில் இருந்த முகமத்தின் எதிர்பார்ப்புகளெல்லாம் பொய்த்துப் போகின்ற நேரத்தில்தான் அவனது தந்தை வருகின்றார். முகமத், தந்தையின் தாமதத்தை பெரிதுபடுத்தாமல், ”அப்பா இப்பொழுதாவது வந்தாரே!” என்று சந்தோஷமாக இருக்கின்றான். காரணம், தந்தையினது வருகையின் மீதிருந்த நம்பிக்கையானது, அவரது காலதாமதத்தினால் சந்தேகத்திற்கிடமாக மாறியிருக்கின்றது. இருவருமே கண்ணீர் சொரிய அரவணைத்து மகிழ்கின்றனர். ஆனால், தந்தையின் அன்பிற்கும், மகனின் அன்பிற்குமிடையே வேறுபாடுகள் நிச்சயம் உண்டு.
பொதுவாகவே கண்பார்வை இழந்தவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்பதைக்காட்டிலும், அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ளத் தேவையான பல குணங்கள் மண்டிக்கிடக்கின்றன. இதிலும் முகமத் இயற்கையோடு மிகுந்த கரிசனம் காட்டுபவனாக இருக்கின்றான். பிரெய்லி (Braille) முறைப்படிதான் இவனது கல்வி முறை இருக்கும். இதனை முகமத் ஒவ்வொரு மணல் குவியல்களிலும், கோதுமைப் பயிர்களிலும், ஒப்பிட்டுப் பார்த்து ஆனந்தம் அடைகின்றான். தந்தையுடன், கடைவீதியில் இருக்கின்ற பொழுது, பறவைகளின் ஒலி மட்டும் கேட்கின்றது. புறவயமான சப்தங்கள் எல்லாம் கலைக்கப்பட்ட அந்த மெளன வெளியில் குயிலின் ரீங்காரம் மட்டுமே முகமத்திற்கு மனக்கண்ணில் தெரிகிறது. எலெக்ட்ரானிக் இசைக்கருவிகளை பெருமளவு தவிர்த்து, மரங்கொத்திப் பறவைகள் எழுப்பும் சப்தங்கள், குயிலின் கூவல், தண்ணீர் எழுப்பும் ஓசை, இன்னும் பல பெயர்தெரியா பறவைகளிடமிருந்தும், இயற்கையிடமிருந்தும் வருகின்ற ஒலிகளே கலர் ஆஃப் பேரடைஸ் (color of paradise) படத்திற்கான பிரத்யேக இசை. இதைத்தவிர்த்து படத்தில் மொத்தமாகவே மூன்று அல்லது நான்கு இடங்களில்தான் மனித உழைப்பினால் கண்டறியப்பட்ட இசைக்கருவிகள் இசைக்கின்றன.

”கேப்டன் பிலிப்ஸ்” (Captain Phillips) படத்தில், சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கப்பலைக் கைப்பற்ற நடத்துகின்ற போராட்டத்திலெல்லாம், இசை அநாயாசமாகத் தெரிக்கும் படி பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், இதன்பின்னர் சோமாலியக்கடற்கொள்ளையர்கள் கப்பலின் ஏணியைத் தொட்டவுடனேயே இசை முற்றிலுமாக நிறுத்தப்படுகின்றது. இசை அறவே நெரிக்கப்பட்டு காண்பிக்கப்படுகின்ற காட்சியின் கனத்த மெளனம்தான், அந்தக் காட்சியின் பதட்டத்தை நமக்குக் கடத்துவதாகச் சொல்லலாம். ”கலர் ஆஃப் பேரடைஸ்”, படத்திலும் காட்சியின் வீரியத்தை, படம் பார்ப்பவர்களுக்கு முழுமையாகக் கடத்த மெளனமே பயன்படுகின்றது.

மேலும் இதுபோன்ற படங்களில் முக்கியமாக, யாரையும் மோசமாக சித்தரிப்பதில்லை. சுருங்கச் சொன்னால் எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரங்களே இல்லையெனலாம். முகமத்தின் தந்தை சிந்தனை பிரண்ட நிலையில் சில முடிவுகளை எடுக்கத் தலைப்படுகின்றார். அவரை மட்டும், ஊசலாடும் மனநிலையுடன் படைத்திருக்கின்றார் இயக்குனர். ஆனாலும் அந்த ஊசலாடும் மனநிலைதான் இன்றைக்கு பலபேருடைய மனநிலையும். இயல்பாகவே மனித சுபாவத்தில் ஒட்டியிருக்கின்ற பிரயாசைகளும், அலைக்கழியும் மனமுமே முகமத்தின் தந்தைக்கும் இருக்கின்றது.

இசையை அடுத்து குறிப்பிடத்தக்கது கேமரா கோணங்கள். காமராவின் அசைவுகள் ஒவ்வொன்றும், கதை சொல்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கித் தருகின்றது. முகமத் ஆற்று நீரில் விளையாடிக்கொண்டிருக்கையில் பின்னால் அவன் அப்பாவும் அமர்ந்திருப்பார். அப்பொழுது காமிரா முகமத்தின் பின்பக்கமாக இருந்து அவனை நெருங்கி வருவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு முந்தைய காட்சியில்தான், முகமத்தின் அப்பா, முகமத்தை தன்னுடன் அழைத்துச் செல்ல மாட்டேன் என்று பள்ளியிலிருந்து கூறியிருப்பார். இந்தக் காட்சியின் மூலம், தந்தைக்கு, முகமத் தன்னுடன் வருவதில் விருப்பமில்லை எனவும், தனது இரண்டாம் திருமணத்திற்கு முகமத்தே தடையாக இருக்கவும் கூடும். எனவே, முகமத்தை தண்ணீரில் தள்ளி விடுவது என்ற நிலைக்கு தந்தையின் மனது அலைக்கழிக்கிறது. இத்தனையையும் காமிராவின் வழியே கடத்திவிட்டதுதான் சிறப்பு. இதன்பின்னர் இருவருக்குமிடையே நடக்கின்ற சம்பவங்களில் பதட்டம் தென்படுவதற்கு இந்தக் காட்சிதான் மையப்புள்ளி. பிறிதொரு சமயத்தில் முகமத்தை அவன் தந்தை கடற்கரைக்கு அழைத்துச்செல்லும் பொழுதும் ஏற்படுகின்ற பதட்டத்திற்கும் அந்தக் காட்சியே ஆதாரம். இதற்கெல்லாம் ஏற்றாற்போல படத்தின் இறுதிக்காட்சியும் அடித்துச்செல்லப்படும் வெள்ளத்தில் தான் நடக்கின்றது.

தந்தையின் விருப்பத்தின் பேரிலேயே, முகமத் இன்னொரு கண்பார்வை இழந்த கார்பெண்டரிடம் உதவியாளராகச் சேர்கின்றான், இல்லை சேர்க்கப்படுகின்றான். அங்கு ”தன்மீது யாருக்கும் அன்பில்லை”,யென தனித்துவிடப்பட்டதை நினைத்து அழுகின்றான். யாராலும் புரிந்துகொள்ள முடியாத முகமத்தின் வலியை கார்பெண்டரும், கண்பார்வை இழந்தவர் என்பதால் புரிந்துக்கொள்கிறார். சம்பவங்களாலேயே இந்தப்படம் முழுவதும் நகர்கின்றது. சர்வதேச அரங்கில் பரவலான கவனத்தையும் விருதுகளையும் பெற்றுள்ளது ’கலர் ஆஃப் பேரடைஸ்’. மஜித் மஜிதியின் படங்களுக்கு எப்போதுமே உலகளாவிய வரவேற்புகள் கிடைக்கப்பெறுவது இயல்புதான். 1999ல் வெளியான கலர் ஆஃப் பாரடைஸிலும் சரி, இதற்கு முன் வெளிவந்த சில்ட்ரன் ஆஃப் ஹெவன், ஃபாதர், பின்னர் வெளிவந்த ”சாங்க் ஆஃப் ஸ்பாரோ”, எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்த படங்கள்.

ஒரு படம் சிறப்பாக அமையவேண்டுமாயின், அதன் கருத்துவலிமையில் மட்டுமல்ல, ஒரு படமாக அதன் வடிவத்திலும் முழுமை பெற்றிருக்க வேண்டியதே நியாயம். மஜித்மஜிதியின் படங்கள் அப்படியானவை. முகமத்திடம் ஆரம்பம் முதலே அன்பு காட்டி வளர்ப்பவள் அவனது பாட்டி. ஒரு முறை அவள் சந்தைக்குச் செல்கின்ற நேரம் பார்த்து முகமத்தின் அப்பா அவனை வேறொரு இடத்திற்கு அழைத்துச்சென்று விடுவார். ஆனால், தந்தை, முகமத்தை அழைத்துச் செல்வது காட்சியாக படத்தில் இருக்காது. முகமத் இறகுகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்கையில் அவன் ஊதுகின்ற காற்றினால் மேலெழும் இறகானது மரங்களின் பார்வையைக் கடந்து கீழிறங்கும் நேரத்தில், முகமத் அங்கு இருக்க மாட்டான். பார்வையாளர்களும் யோசிப்பதற்கு சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கும் இடம்தான் இது. முழுச்சம்பத்தையும் காட்சியாகவே காட்டிக்கொண்டிருக்காமல், ஒரு பாதி சம்பவத்தைக் காட்டி மீதிப்பாதியை படம் பார்ப்பவர்களின் சிந்தனைக்கு விடுவது சிறந்த யுக்தி.

படத்தின் இறுதிக்காட்சியும் உயிர்ப்பு மிக்கது. தந்தையும், மகனும் பாறைகளினூடே அடித்துச்செல்லப்படும் ஆற்றிலிருந்து இணைவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதுபோலத்தான் மஜித்மஜிதியின் ”ஃபாதர்”, திரைப்படத்திலும் அமைக்கப்பட்டிருந்தது. படத்தின் மொத்தக்கதையும், எதிர்பார்ப்பும் இறுதிக்காட்சியின் மேல் குவிவதால், காமா சோமா காட்சிகளை படத்தின் இறுதிக்கட்டமாக பொருத்திப் பார்ப்பது அனுமதிக்க முடியாத ஒன்று. ஆனால், மஜித்மஜிதி இதனை லாவகமாகக் கையாளத் தெரிந்தவர். படத்தின் இறுதிக்காட்சியில் மட்டுமல்ல, ஒவ்வொரு காட்சியிலும் , நமக்கு என்ன தெரிந்ததோ அதனை முன்னிலையாக்காமல், படத்திற்கு எது தேவையோ அதனையே பிரதானப்படுத்துகிறார்
.
பார்வையாளருக்கு சலிப்படையாத உத்திகளைக்கொடுப்பதற்கு, படமானது பல பயணங்களைக் கொண்டிருக்க வேண்டும். மாறுபட்ட இடங்கள், வேறுபட்ட கதாபாத்திரங்கள் எல்லாமே படம்பார்ப்பவர்களுக்கு இணக்கமான சூழலை உண்டுபண்ணும்.

ஆனால், இந்த ஈரானிய இயக்குனரோடு, ஒத்துப்போகின்ற கருத்துடைய இன்னொரு இயக்குனர் இருக்கின்றார் அவர் பெயர் மாசிஜ் பைப்ரைகா (Maciej Pieprzyca) படம் லைஃப் பீல்ஸ் குட்.

முதல் சில காட்சிகளின் தன்மையே முழுப்படத்தின் தீவிரத்தையும் வெளிக்காட்டும் படியாக உள்ளது. முதலாவதாக இப்படம் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பொலிஸ் (Polish) மொழித்திரைப்படம். இதனை அந்த உண்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்ற நடிகரும் உணர்ந்திருந்தால் மட்டுமே, உண்மைச் சம்பவத்தை திரையில் கண்டுவிட்ட திருப்தி பார்வையாளர்களுக்கு ஏற்படும். இந்தப் படத்தில் நடித்திருக்கின்ற (Dawid Ogrodnik) நடிகர் அதனை உணர்ந்திருக்கின்றார். படம் முடிந்தவுடன் இதில் நடித்த நடிகர் இயல்பான தோற்றத்தில் காட்சிதருவார். அந்தக் காட்சியைப் பார்த்தவர்களுக்கே இத்திரைப்படத்தின் மீதான அவரது நடிப்புத்திறன் தெரியவருகிறது. மேலும் இதுபோன்ற காட்சிகள் பார்வையாளர்களின் மன இறுக்கத்தை குறைக்க உதவும்.

வளர்ந்தபின்னும் குழந்தையாகவே வாழ்கின்ற மனிதருள் ஒருவருடைய கதையினது வெளிப்பாடுதான் லைஃப் பீல்ஸ் குட் (Life Feels Good [2013] "Chce sie zyc" (original title)) திரைப்படம். இவர்களால், தன் எண்ணத்தை வெளிப்படுத்த முடியாது, சிந்தனை நிலையாக இருக்காது, தன் அன்றாட செயல்களையே பிறரின் துணையில்லாமல் செய்யமுடியாது. இப்படிப்பட்டவர்களில் ஒருவன்தான் மேட்யூச்(Mateusz), இவனே நாயகன். ஆனால் இங்கு இவனால் சிந்திக்க முடிகிறது, அதனைச் செயல்படுத்தவே உடலுறுப்புகள் தடையாக இருக்கின்றன. எனினும், இவனின் சிந்தனையின் குரல் வாயிலாகத்தான் படத்தின் கதை முழுதும் சொல்லப்பட்டிருக்கின்றது.
சிறுவயதில் மருத்துவரிடம் மேட்யூச்சை அழைத்துச்செல்கையில், இவனின் நிலையை சரியாகப் புரிந்துகொள்ள பக்குவமில்லாத மருத்துவர் இவனுக்கு உயிர் இருக்கும், ஆனால், செயல்கள், சிந்தனை ஏதும் இருக்காது என்கிறார். ஆனால், அவன் அம்மாவோ, இதனை நம்ப மறுத்து, இவனால் உணர்வுகளை உணரமுடிகிறது. சமைக்கின்ற வாசனையை வைத்துக்கொண்டு, இவனின் முகபாவனைகள் மாறுகிறது என்பாள். ஆனால், மருத்துவரோ ”எங்கள் வீட்டு நாய் கூட இவனைப்போலத்தான், சாப்பாடு வைக்கின்ற சமயத்தில் கண்டுபிடித்துவிடும்”, என்பாள். மருத்துவரைப் பொறுத்தமட்டில் இவன் உணர்வுகளற்ற காய்கறி போன்றவன். (He is a vegetable)

ஆனால், மேட்யூச் இதனையெல்லாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றான். நான் காய்கறி போன்றவன் அல்ல, என்னாலும் சிந்திக்க முடியும் என்று சொல்ல விரும்புகிறான். ஆனால், இவனின் மூளையின் செயலுக்கு உடலுறுப்புகள் ஒத்துழைப்பதில்லை. அப்போது அவன் வயது 7ஆக இருக்கின்றது. தனது 26வது வயதில் நான் ஒரு வெஜிடபிள் இல்லை என்பதை தன் தாய்க்கு நிரூபிக்கின்றான்.

ஆனால், இதற்கு இடைப்பட்ட நாட்களில், அவனது பயணமே பல சுவாரஸ்யங்களையும் கடந்துசெல்கிறது.

தன் சுயசிந்தனையின் பொருட்டு யார் தந்தை? தாய்? சகோதரன்? சகோதரி ? என எல்லாவற்றையும் தெரிந்துகொள்கின்றான். சிறுவயதில் இவனின் பெரும்பான்மையான இடத்தை அவன் தந்தையே பிடித்துக்கொள்கின்றார் ஒரு ஹீரோவைப் போல. “ஓர் நாளில் நீ யாரென நிரூபித்து விடு” என இவர் சொல்கின்ற வார்த்தையையே, தன் வேத வாக்காக நாயகன் கற்பித்துக்கொள்கின்றான். ஆனால், ஒவ்வொரு முறையும் தான் யாரென நிரூபிக்கின்ற முயற்சியில் தோல்வியே இவனுக்கான பதிலாகக் கிடைக்கின்றது. அம்மாதான் எல்லாம் என இருந்தவனை காப்பகத்தில் சேர்த்துவிடுகின்றனர். மேட்யூச்சிற்கு உணர்வுகள் இல்லை என்ற நினைப்பில், அவனின் சகோதரனே இன்னொரு பெண்ணுடன் அதே அறையில் கலவி கொள்கிறான். ஆனால், மேட்யூச்சின் இளம் வயதிற்கேயுண்டான காம ஆசைகளையும், தான் தனித்துவிடப்பட்டிருப்பதற்கான தீர்வையும் சேர்த்தே மீதிக்கதை நகர்கிறது.

படம் பார்க்கின்ற செவ்வக கட்டத்தினுள் சுருங்கிவிடாமல் அதனைத் தாண்டியும், விரிகின்ற படைப்புகளே நெடுநாட்களுக்கு பேசப்படக்கூடிய படங்களாக இருக்கும். இதேபோல எழுத்தாளர்,சு.ராவின் ’சன்னல்’, கதையும் நினைவில் வருகின்றது. சன்னல் பக்கத்திலேயே படுக்க வைக்கப்பட்டிருப்பான் ஒரு நோயாளி, அவனுக்கு வெளியே தெரிகின்ற காட்சிகளெல்லாமே அவனோடு உரையாடுபவைகளாக உள்ளுக்குள் சுகானுபவத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். ”லைஃப் பீல்ஸ் குட்” படத்தில் வருபவரைக் காட்டிலும் மோசமான நிலை எனலாம். தன் நெற்றியில் குழவி ஏறினால் கூட அதைத் தட்டிக்கேட்க முடியாத நிலை. பின்னர் ஒருநாள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சன்னலை அடைத்துவிடுகின்றனர். சன்னல் அடைபட்ட செய்தி கேட்டவுடன்தான் அந்நோயாளியின் உயிருக்கு ஆபத்தாகிறது. ஆக, அவன் உயிர் சன்னலில்தான் இருந்திருக்கின்றது. அவ்வழியாக உலகின் பிற உயிர்களோடு பேசுவதையே ஜீவிதமாக உண்டு வாழ்ந்திருக்கின்றான்.

(சுந்தர ராமசாமியின் “சன்னல்”, சிறுகதையைப் படிக்க: http://balajikrishna.wordpress.com/2013/06/26/
%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%
AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%
A4%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%
E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/)

இப்படத்தில் இதேபோல, எதிர்வீட்டு பெண் ஒருத்தியுடன் மேட்யூச் நட்பாகப் பழகுகின்றான். இருவருக்குமிடையே பெரும்பான்மையான இடங்களில் சன்னலே தொடர்பாதையாக செயல்படுகின்றது. ஒரு சமயத்தில் அப்பெண்ணின் வீட்டில் கண்டிப்புடன் சன்னல் சாத்தப்படுகின்றது. சுராவின், கதையில் வருகின்ற நோயாளியின் அதிர்ச்சியானது, இத்திரையின் நாயகனின் அதிர்ச்சியில் கொஞ்சமும் குறைவில்லாதது.

அனுதாபப்பட வேண்டியவர்களின் இன்னல்களை மட்டுமே கோர்த்துக்கொண்டிராமல், அவர்களின் அக உலகில் இருக்கின்ற காம இச்சை, அதற்கான வடிகால், கோபம் என சொல்லியிருப்பதில் இப்படத்திற்கு தனியான இடம் உண்டு.

முன்பு கூறியது போல, பார்வையாளர்களின் கவனம் முழுதும், ஒலியுடன் இணைந்த காட்சிகளைக் காட்டிலும், ஒலியற்ற காட்சியமைப்பிலேயே முழுக்கவனமும் இழைந்தோடுகின்றது. கோபத்தில் தன் உதடுகளையே கடித்துக்கொள்கிற மேட்யூச்சின், முன்பற்கள் பிடுங்குகின்ற பொழுது, கவன ஈர்ப்பிற்காக ஒலியை நிறுத்திவைக்கின்றனர். நம் கவனமும் காட்சியின் தீவிரத்தில் குவிவது தவறவில்லை. இந்த அம்சமே ’கலர் ஆஃப் பேரடைஸ்’ படத்திலும் முதலில் சுட்டிக்காட்டியது. ஒலியை நிறுத்தி வைப்பதில் மட்டுமல்ல, ஒலியைத் தருவதில் சரியான ஒப்புதல் இவ்விரு படங்களிலுமே காணப்படுகின்றது.

படத்திற்கான ஒலிகள் படத்திற்கு வெளியேயிருந்து வருவதைக் காட்டிலும், காட்சியமைப்பினுள் இருக்கின்ற கதாபாத்திரங்களின் செயல்களின் வாயிலாக மேலெழுவதே இயல்பானது. ஆவணப்பட இயக்குனர் ‘ஆர்.ஆர்.சீனிவாசன்’, ஒருமுறை ”big city blues”, எனும் குறும்படத்தை திரையிட்டு விவாதிக்கின்ற பொழுது இதே கருத்தினை மொழிந்தார். அதாவது, இக்குறும்படத்தினுள் வருகின்ற சிறுமி, இன்னொரு சிறுவனிடமிருந்து முயல் ஒன்றை பறித்துக்கொண்டு ஓடுவாள். அப்போது, முதலில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளின் மீது ஏறுகின்ற பொழுது, அந்த ஓசைக்கு இணையாக அதிலிருந்து மற்றொரு ஒலி இசைக்கோர்வையாக வெளிப்படும்.

இதே ’கலர் ஆஃப் பேரடைஸ்’, படத்தில் பறவைகளின் ஒலியும், இயற்கையுமே இசையாக வருகின்றது. முகமத் விடுதியில் தங்கியிருக்கின்ற சமயத்தில் இன்னொரு சிறுவன் கீ போர்டு வாசிப்பான். அதிலிருந்து வெளிப்படுகின்ற ஒலியே, அடுத்தடுத்த காட்சியமைப்புகளுக்கு நீளும்.

இங்கும் ’லைஃப் பீல்ஸ் குட்’, படத்தில், காப்பகத்தில் தங்கியிருக்கின்ற மேட்யூச்சிற்கு தோழியாக இன்னொரு பெண்ணொருத்தி வருவாள். அவள் கொண்டுவருகின்ற டேப் ரெக்கார்டரில் இசைக்கோர்ப்புகள் பதிவுசெய்யப்பட்டிருக்கும். தான் சோகமாகயிருக்கின்ற பொழுது இந்த இசையைத்தான் கேட்பேன் என்று சொல்வாள் அப்பெண். அடுத்தடுத்த சோகமான காட்சிகளிலெல்லாம் வருகின்ற இசையானது இந்தக் கருவியின் பயன்பாட்டினால் வெளிவந்த இசையாகவே இருக்கும். சம்பவங்களானது இயல்புத்தன்மையை வெளிப்படுத்த இசையைத் தவிர்ப்பதே சாமார்த்தியமானது.

பார்வையற்றோரின் மனநிலையை ‘Color of Paradaise’ல் பதிவுசெய்த மஜித் மஜிதி, கண் பார்வையை இழந்தவனுக்கு 40 வருடங்கள் கழித்து கண்பார்வை கிடைத்தால், அவன் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்ற புள்ளியை மையமாக வைத்து எடுத்த திரைப்படம் தான் ”த வில்லோ ட்ரீ”(The willow Tree, 2005).
கதையின் படி யூசஃபிற்கு 8 வயதாக இருக்கின்றபொழுது, சிறு விபத்தில் கண்பார்வையை இழந்துவிடுகின்றான். ஆனால், பார்வையை பொருட்படுத்தாமல், மேற்கூரிய ப்ராய்லி முறையில் படித்து, பேராசிரியராகவும் வேலைசெய்கின்றான். அவனுக்கென்று குடும்பமும் உருவாகின்றது. மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றான். ஆனால், கண் பார்வை இல்லை.

பின்பு, மருத்துவர்கள் வாயிலாக அறுவை சிகிச்சை செய்தால் யூசுஃபிற்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது தெரியவருகின்றது. யூசுஃபும் அதற்கு சம்மதிக்கின்றான். எனினும், கண் பார்வை மீளுமா, இல்லையா? என்பதில் ஐயத்தோடு காணப்படுகின்றான். மருத்துவமனையிலும் அதே நிலை. அறுவை சிகிச்சையும் முடிகின்றது. நாளைக்கு கட்டுகளைப் பிரிக்கலாம் என்று மருத்துவர் சொல்லிவிட்டுச் செல்கின்றார். ஆனால், யூசஃபிற்கு நாளை வரை பொறுமையில்லை. அவசர அவசரமாக கண் கட்டுகளைப் பிரித்து வெளிச்சத்தைப் பார்க்கின்றான். சந்தோஷம் தாங்கவில்லை. கண் தெரிகின்றது. வராந்தாவில் யார் துணையும் இல்லாமல் துள்ளி ஓடுகின்றான். முன் கூட்டியே கட்டுக்களைப் பிரித்திருப்பதால் கண்களிலிருந்து ரத்தம் வடிகின்றது. அவன் எதைப் பற்றியும் பொருட்படுத்தவில்லை. சன்னல் கண்ணாடியில் தெரிகின்ற தன் உருவத்தை ஆர்வத்தோடு பார்க்கின்றான். 40 வருடங்கள் கழித்து தன் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பவனுக்கு, தன் குடும்பத்தினரின் முகங்கள் நினைவிலிருக்குமா? விமான நிலையத்தில் குழம்பிப் போகின்றான்.

மாணவர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் யூசுஃபை வரவேற்க காத்திருக்கின்றனர். இதில் யார் என் அம்மா?, என் மனைவி? என்பதில் குழப்பத்துடனேயே ஒவ்வொரு முகமாக பார்ப்பவனுக்கு, அழகான பெண்ணின் முகமே திரும்பத் திரும்ப பார்வையில் சுழல இவள் என் மனைவியாக இருக்க வேண்டும் என மனசஞ்சலம் அடைகின்றான் யூசஃப். ஆனால், அந்த ஆசை பொய்த்துப்போகும் படியாக, யூசுஃபின் மனைவி அந்த இளம்பெண்ணை விட வயதில் அதிகம்.

கண் பார்வையற்ற ஒருவனுக்கு, கண்பார்வை கிடைக்க என்னென்ன மனத்தடுமாற்றங்களுக்கு ஆளாகின்றான் என்பதே இதன் பின்பான மீதிக் கதை. இடையிடையே திருப்பங்களும் உண்டு. ஒருசமயம் யூசஃப் மின்சார ரயிலில் வந்துகொண்டிருக்கும்பொழுது, கூட்டத்திற்கு நடுவில் ஒரு இளைஞன், இன்னொரு பெரியவரின் பணத்தை திருடுவதைப் பார்க்கின்றான். ஆனால், யூசுஃப் அதனைத் தடுக்கவில்லை. திருடனும் யூசஃப் பார்ப்பதை சட்டை செய்யாமல், அவனுக்கு ஒரு சலாம் வைத்துவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்கின்றான். இதுவே கண்பார்வை இழந்த நிலையில் இச்சம்பவம் நடந்திருக்குமாயின், யூசுஃபிற்கு இதில் உறுத்தல் இருந்திருக்காது, ஆனால், கண் தெரிகின்ற ஒரு காரணத்திற்காக, அவனை அறியாமலேயே பல குற்றங்களுக்கு துணைபோக வேண்டியிருக்கின்றது. திருடன் கடைசியாக வைத்த ’சலாம்’, அத்துணைபோதலுக்கு கிடைத்த அங்கீகாரம். மேலும், யூசுஃப் தன் மனைவியைக் காட்டிலும், விமான நிலையத்தில் பார்த்த அந்த இளம்பெண் மீதே அதிக கவனம் செலுத்துகிறான். கண் பார்வை எப்போது கிடைக்கப்பெறுவோம் என்று இருந்தவனுக்கு, அதே கண்பார்வை எவ்விதமான கஷ்டங்களுக்கு கூட்டிச்செல்கின்றது என்பதும் “The willow Tree”யில் சொல்லப்பட்டிருக்கின்றது.

படத்தில் நடிப்பவர்களது கதாபாத்திரத்திற்கான தேர்வென்பதும் அதிமுக்கியமான ஒன்று.

இதில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் Parviz Parastui. அடுத்ததாக, Mohamad Raza Amir Naji. இவரை மஜிதியின் அநேகமான படங்களில் பார்த்திருக்கலாம். Song of Sparow. மற்றும், Children of Heaven ல் இரு குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்திருப்பவர்.

நினைவிருக்கட்டும்,

உங்கள் படங்கள் மாற்றுத்திறனாளிகள் வலியைப் பற்றி பேசுவதாகயிருந்தால், அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கையும் படைக்கப்பட்டிருக்கின்றது என்பதை மறக்க வேண்டாம். அவர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது கரிசனம் அல்ல, சக உரிமை.

We don’t want to end to be dark, இருண்மையையும், கையறுநிலையையும் வெளிப்படுத்தும் காட்சிகளே படத்தின் இறுதியில் வரவேண்டுமென, விரும்பவில்லை. முடிவு நம்பிக்கையைத் தருவதாக இருக்க வேண்டும். இவைகளே மேற்கண்ட படங்களின் இயக்குனர்களது சிந்தனை.

இப்போது பாலா போன்றோரது கோட்பாடுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணத்தில் அல்லது கட்டாயத்தில் இருக்கிறோம்.