ஐஸக் பாஷெவிஸ் ஸிங்கர்

1978-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற ஐசக் பாஷெவிஸ் ஸிங்கர், ஜூலைமாதம் பதினான்காம் தேதி 1904-ஆம் ஆண்டு, அப்போது ரஷ்ய ஆதிக்கத்தில் இருந்த போலந்தில், ராட்சிமின் நகரத்தில் பிறந்தார். அவருடைய தகப்பனார் ஒரு மதகுரு. அவருடைய தாய்வழிப் பாட்டன், தந்தைவழிப் பாட்டன் ஆகிய இரண்டு பேருமே மதகுருக்கள் தான். 


'ஆஷ்கெனாசி', 'யோஷி கால்ப்' ஆகிய நூல்களை எழுதிய, குறிப்பிடத்தக்க யூத எழுத்தாளரான ஐ.ஜே.ஸிங்கர் இவருடைய அண்ணன். ஸிங்கருக்கு ஒரு தங்கையும், மோஷெ என்று ஒரு தம்பியும் உண்டு. ஸிங்கருக்கு நான்கு வயதாக இருந்தபோது அவருடைய குடும்பம் வார்சாவுக்குப் போனது. அங்கு, அவருடைய அப்பா மதரீதியான தம்முடைய நீதிமன்றத்தை ஏற்படுத்தினார். அங்கு வந்த பல்வேறு தினுசான மக்களை தன்னுடைய அப்பா விசாரிப்பதையும், நீதி வழங்குவதையும், ஸிங்கர் மிகுந்த ஆர்வத்துடன் கவனிப்பார். மத நம்பிக்கையை வலுப்படுத்த அவருடைய பெற்றோர் கூறிய யூத சரித்திரம், யூத நாடோடிக்கதைகள், பக்திக் கதைகள் ஆகியவற்றையும் அவர் ஆர்வத்தோடு கேட்பார். அவருடைய படைப்புகளுக்கான அடித்தளத்தை இவையே போட்டன. "யூதர்களின் சரித்திரத்தை அறிந்ததும் என்னைப் பற்றிக் கொண்ட ஆச்சர்ய உணர்வு இதுவரை என் மனதிலிருந்து மறையவில்லை" என்று லிங்கர் சொல்வதுண்டு. வார்சாவில் ஸிங்கருக்கு குலாசார முறைப்படி யூத மதக்கல்வி வழங்கப்பட்டது. யூத வேத நூல்களையும் அதன் மெய்ஞ்ஞான விளக்கங்களான, தோரா, தால்முட், கபாலா ஆகியவையும், பிற பக்தி நூல்களும் அங்கு அவருக்குப் போதிக்கப்பட்டன. அவர், சிறிது காலம் மதகுருக்களுக்கான பள்ளியிலும் பயின்றார்.

1917-இல் ஸிங்கர், தன் தாயாரோடும் இளைய சகோதரருடனும் பில்கோரே நகரிலிருந்த தன்னுடைய தாய் வழிப்பாட்டனார் வீட்டுக்குப் போனார். அங்குதான், அவர், கிழக்கு ஐரோப்பாவைச் சார்ந்த சிறிய யூத நகரம் ஒன்றின் வாழ்க்கை முறைக்கு தன்னைப் பரிச்சயப்படுத்திக்கொண்டார். குடும்பத்தாரின் வைதீக வாழ்க்கை முறையை ஏற்க மறுத்து, குடும்பத்திலிருந்து பிரிந்து தனித்துச் சென்றுவிட்ட இலக்கியவாதியான தன்னுடைய அண்ணனின் தாக்கத்தினாலேயே ஸிங்கர் எழுத்தாளரானார். ஸிங்கர் மதகுருவாக வேண்டும் என்ற அவருடைய பெற்றோரின் தீவிரமான விருப்பத்தையும் கட்டுப்பாட்டையும் மீறி, அவர், ஒரு மதச்சார்பற்ற எழுத்தாளரானார்.

அவர், 1920-இல் வார்சா போய் தன் அண்ணனுடன் சேர்ந்து வசிக்கலானார். முதலில் யூத இலக்கியப் பத்திரிகையொன்றில் அவருக்கு ப்ருஃப் ரீடர் வேலை கிடைத்தது. 1926 வாக்கில், அவர் தம்முடைய கதைகளையும், , புத்தக விமர்சனங்களையும் வெளியிடத் தொடங்கினார். தன்னுடைய முன்னோர்களின் மொழியான ஹீப்ரு மொழியில்தான் அவர் முதலில் எழுதினார்.
அந்தக் காலத்தில் இஸ்ரேலின் தேசியமொழி அந்தஸ்தைப் பெறாத ஹீப்ருமொழி இறந்த மொழியாகவே இருந்தது. பிறகு, தன்னுடைய தாய்மொழியான இட்டிஷ் மொழியில் அவர் எழுதத்
தொடங்கினார். 1932-இல் ஸிங்கர் இட்டிஷ் இலக்கிய பத்திரிகையொன்றின் இணை ஆசிரியர் ஆனார். அவருடைய முதல் நாவலான 'கோரேவில் சாத்தான்' இதில்தான் தொடராக வந்தது. லிங்கரின் ஆரம்பகாலப் படைப்புகளில் தாமஸ் மன்னின் ஜெர்மன் நாவலான 'மந்திரமலை'யின் இட்டிஷ் மொழி பெயர்ப்புப் போன்ற பல மொழிபெயர்ப்பு நாவல்களும் அடங்கும்.


1935-இல் ஸிங்கர்அமெரிக்காவுக்குப் போனார். ஒரு வருடத்துக்கு முன்பே அவருடைய அண்ணன் அங்கு குடியேறி இருந்தார். அந்த சமயத்தில்தான் ஸிங்கர் விவாகரத்து செய்துகொண்டு, தன்னுடைய முதல் மனைவி ரேச்சலையும் மகன் இஸ்ராயேலையும் விட்டுப் பிரிந்தார். ஸிங்கர் நியூயார்க் நகரத்தில் குடியேறி பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தார். கட்டுரைகள், விமர்சனங்கள், ஆகிய அவருடைய பல படைப்புகள் யூத தினசரி ஃபார்வாட்டில் வெளிவந்தன. 1943-லிருந்து ஸிங்கர், அந்தப் பத்திரிகைக்குத் தொடர்ந்து எழுதி வந்தார். பல வருடங்கள் இருக்கிற இடமே தெரியாமல் இருந்துகொண்டிருந்த ஸிங்கர், ''குடும்ப மோஸ்காட்'' எனும் அவருடைய நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதும் திடீர்ப் புகழ் பெற்றார். அந்த நாவல் ஏற்கனவே "ஃபார்வர்ட்'' பத்திரிகையில் தொடராக வந்து 1945- ஆம் ஆண்டு இட்டிஷ் மொழியில் நூலாகவும் வெளியிடப்பட்டிருந்தது. அதை, அவர் தம்முடைய ஞானத்தந்தையாகவும் குருவாகவும் மதித்த தன் அண்ணனுக்கு அர்ப்பணித்திருந்தார். நாஜிகளின் ஆக்கிரமிப்புக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய போலந்தை ஸிங்கர் அந்த நாவலில் சித்தரித்திருந்தார். கிழக்கு ஐரோப்பிய யூதர்களின் வாழ்க்கை குலைந்துபோகத் தொடங்கிய அந்த காலகட்டத்தில், வார்சாவில் வாழ்ந்த ஒரு பெயர்பெற்ற யூதக்குடும்பம் எப்படிச் சிதைந்து போனது என்பதை அவர் சித்தரித்திருக்கிறார். "என்னுடைய எல்லாப் புத்தகங்களும் என்னைப் பற்றியவையே. அவையே நான். என் கதையில் வரும் சம்பவங்கள் என்ன நடந்தது என்பதையே எப்போதும் சொல்லுவன அல்ல. என்ன நடந்திருக்கக்கூடும் என்பதைச் சொல்லுவன'' என்று ஸிங்கர் மனம் திறந்து சொல்கிறார். இது, 'குடும்ப மாஸ்கெட்' நாவலுக்கு சிறப்பாகப் பொருந்துவதாகும். அந்த நாவலின் கதாநாயகன் ஆசாஹெஷல் பானெட், ஸிங்கரைப் போலவே ஒரு நகரத்தில் வசிக்கும் மதகுருவின் மகன். அந்த ஊரும் ஸிங்கர் வாழ்ந்த பில்கோரேவைப் போன்றதே. கதாநாயகனுடைய வாழ்க்கையும் ஸிங்கரின் வாழ்க்கையைப் போன்றதே. ''நுணுக்கமான சித்தரிப்புடன் கூடிய உயிரோட்டமுள்ள படைப்பு' என்றும் விமர்சகர்கள் இப்படைப்பை பாராட்டியிருக்கிறார்கள். இந்நாவல் நூல் தேர்வுக் கழகத்தினரால் 1950-க்கான லூயி லாமெட் பரிசைப் பெற்றது. 1968- இல் இத்தாலிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது இந்த நாவலுக்கு இத்தாலியின் பாங்கரெல்லா பரிசும் கிடைத்தது.

1954- இல் ஸிங்கர் சிசிலி ஹெம்லேவை சந்தித்தார். அவர் ஸிங்கரின் வெளியீட்டாளரும் நண்பருமாக ஆனார். வார்சாவில் இருக்கும்போது ஸிங்கர் இட்டிஷ் மொழியில் எழுதிய 'கோரேவில் சாத்தான்' நாவல் 1955-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 1648-49 ஆண்டுகளில் நடைபெற்ற கோசாக் படுகொலையைத் தொடர்ந்து, தன்னைத்தானே மீட்பர் என்று அறிவித்துக்கொண்ட ஷப்பாத்தை ஜெவியின் காலத்தில், கிழக்கு ஐரோப்பா யூதர்களிடையே நிலவிய மெய்ஞ்ஞானத் தேடலும் முக்தியெனும் ஆர்வம் அவர்களை ஒரு வெறியென ஆட்கொண்டிருந்ததைக் கருவாகவும் போலந்தில் ஒரு சின்ன யூத கிராமத்தை களனாகவும் கொண்டு, ஸிங்கர், இந்நாவலைப் படைத்திருக்கிறார். "பித்துப்பிடித்தது போல, மனித குலத்தை ஆட்டி வைக்கும் மீட்பர் குறித்த தாகத்தை வெளிப்படுத்துவதும் கிண்டல் செய்வதுமே இப்படைப்பின் நோக்கங்கள்'' இந்நூலுக்காக ஸிங்கருக்கு 1956-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக லூயி லாமெட் பரிசு கிடைத்தது. 1957-இல் வெளிவந்த 'முட்டாள் கிம்பெலும் மற்ற கதை களும்' என்ற முதல் சிறுகதைத் தொகுதியின் மூலம், பூகோள எல்லைகளையும் கால எல்லைகளையும் கடந்து நிற்கும் கதாசிரியர்களின் வரிசையில் ஸிங்கர் இடம் பெற்றார். யூத கிராமங்களிலும் யூத குடியிருப்புகளிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் போலந்தில் இருந்த நிலைமையையும், யூதர்களின் வாழ்க்கை முறைகளையும் மனித மனத்தின் பலவீனங்களையும் நகைச்சுவை உணர்வுடன் அவர் தொட்டுக்காட்டும் விதமும் இக்கதைகளின் சிறப்புக்குக் காரணமாகின்றன. இந்தக் கதைகளிலும் இதற்குப் பின்னால் வந்த கதைகளிலும் ஸிங்கர் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் கரு, தீய சக்தியான சாத்தான் மனிதனை சோதிக்கிற விதம். தலைப்புக் கதை கள்ளமில்லாத எளிமையுடைய ஒருவன் சக மனிதர்களால் எப்படி ஏமாற்றப்படுகிறான் என்பதைக் காட்டுகிறது.
'லப்ளினின் மந்திரவாதி' எனும் நாவல் 1960- இல் வெளியிடப்பட்டது. இது, யூத குடியிருப்புகளில் நிலவும் வாழ்க்கைக்கும் நவீன வாழ்க்கைக்கும் இடையே இழுபடும் சர்க்கஸ்கார மந்திரவாதி யாஷா மசூரின் கதை. 1961 - இல் வெளிவந்த 'கடைத்தெருவின் ஞானி' முதலான கதைகள் யூத நாடோடிக்கதைகளையும் மெய்ஞ்ஞானத் தேடலையும் பற்றிய ஏராளமான குறிப்புகளை உள்ளடக்கியதாகும். தலைப்புக் கதையின் நாயகன் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத அறிஞர் ஸ்பிநோசாவைப் போலத் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புபவன். "குறுகிய பக்தியுணர்வு எல்லைகளைக் கடந்து, அமெரிக்க வாழ்க்கையால் சற்றும் பாதிக்கப்படாத'' இட்டிஷ் எழுத்தாளர் என்ற பாராட்டை இந்நூல் இவருக்குப் பெற்றுத் தந்தது.

1962-இல் வெளிவந்த 'அடிமை' எனும் நாவல் பதினேழாம், நூற்றாண்டைப் பின்புலமாகக்கொண்டது. இந்நாவலை ஸிங்கரும் சிசிலியுமே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். ஜேக்கப் எனும் இளம் வயது யூத அறிஞர் முரடர்களால் சிறைப் பிடிக்கப்பட்டு அடிமையாக விற்கப்படுவதையும், முதலாளியின் மகளுக்கும் அவருக்கும் தோன்றும் வலிமையான காதல், துயரத்தில் முடிவதையும், கடைசியில் ஜேக்கப் புனிதயாத்திரை மேற்கொள்வதையும், நாவல் சொல்கிறது. மிக எளிமையான, ஆனால், அதே சமயத்தில் வண்ணங்கள் தீட்டிய சித்திரம் போல தெளிவான, படைப்பாக திகழ்கிறது இந்த நாவல். தேசிய யூதர் நல வாரிய புத்தகக்குழு 'அடிமை'யை பரிசுக்குரிய நாவலாக 1962-இல் தேர்ந்தெடுத்தது.'சின்ன வெள்ளி மற்றும் கதைகள்' எனும் சிறுகதைத்தொகுதி 1964- இல் வெளிவந்தது. சூனியக்காரிகள், பூதங்கள், தேவதைகள் மேலும் யூத நாடோடிக்கதை மரபின் இயற்கையை விஞ்சிய படைப்புகள் போன்றவை இக்கதைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஸிங்கர் தமது குழந்தைப் பருவ அனுபவங்களையும் வளர்ச்சியையும் தமது தகப்பனாரின் மத நீதிமன்றத்தின் பின்னணியில் கூறுவதே "என் தந்தையின் நீதிமன்றம்.'' 1966-இல் வெளி வந்தது. நவீன வாழ்க்கை முறை, மரபார்ந்த வாழ்க்கை முறையை அழித்துவிடுவது ஸிங்கரின் கதைகளில் அடிக்கடி எழுத்தாளப்படுகிறது இதையே 1967-இல் வெளிவந்த 'பண்ணை' சித்தரிக்கிறது. இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்நாவலின் முதல் பாகம் 1863-இல் நிகழ்ந்த போலந்து நாட்டினரின் புரட்சியைத் தொடர்ந்து யூத வியாபாரி கால்மன் ஜேகோபியின் குடும்பம் சிதைவுண்டதைச் சொல்கிறது. 1953-லிருந்து 1955 வரை பார்வர்டி"ல் தொடராக வெளிவந்த இந்த இட்டிஷ் மொழி நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 1968-இல் வெளிவந்த "ஆவிக்காட்சி மற்றும் கதைகள்' எனும் சிறுகதைத் தொகுதி பழங்கால யூதகுடியிருப்பிலிருந்து சமகால அமெரிக்கா வரை கதைக்களனாகக்கொண்டுள்ளது. 1969-இல் வெளிவந்த மற்றுமொரு தொகுதியான "ஆனந்த நாள் : வார்சாவில் வளர்ந்த பையனின் கதை" ஸிங்கரின் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டது. அவற்றுள் சில ஏற்கனவே 'என் தந்தையின் நீதி மன்றம்" நூலில் இடம் பெற்றவை. எழுதப்பட்டு ஸிங்கர், குழந்தை இலக்கியத்திலும் சிறப்பிடம் பெற்றிருக்கிறார். மிருகங்கள், குழந்தைகள், இயற்கையை விஞ்சிய சக்திகள் ஆகியவை நிரம்பிய சுவாரசியமான கதைகளை குழந்தைகளுக்காகப் படைத்தவர் ஸிங்கர். 1966-இல் வெளிவந்த, ஜிலாட்டெ எனும் ஆடும் பிற கதைகளும்' எனும் தொகுதியும் 1961-இல் வெளிவந்த அச்சம் தரும் விடுதி', 'மேசெலும் ஸ்கிமேசெலும்' அல்லது 'பெண் சிங்கத்தின் பால்', 'ஷ்லெமியெல் வார்சாவுக்குப் போனபோதும் பிற கதைகளும்' ஆகிய குழந்தைகளுக்கான கதைத் தொகுதிகள் பெரிதும் பாராட்டி வரவேற்கப்பட்டன. குழந்தை இலக்கியம் படைப்பது பற்றி வீங்கரிடம் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, அவர், "நான் ஏன் குழந்தைகளுக்காக எழுதுகிறேன் என்பதற்கு ஐந்நூறு காரணங்கள் இருக்கின்றன. உங்கள் நேரத்தை வீணடிக்காமல் இருப்பதற்காக, அவற்றில் பத்துக் காரணங்களை மட்டும் நான் குறிப்பிடுவேன்" என்றார். ஸிங்கர் சொன்ன காரணங்கள் இவைதான்:

1. குழந்தைகள் புத்தகங்களை படிக்கிறார்கள். விமர்சனங்களை அல்ல. அவர்கள் விமர்சகர்களைப் பற்றி சட்டை செய்வதே இல்லை.

2. குழந்தைகள், தங்களை பாத்திரங்களில் அடையாளம் காண்பதில்லை.

3. அவர்கள், தங்களை குற்ற உணர்வில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காகவோ, புரட்சித்தாகத்தை தணித்துக்கொள்வதற்காகவோ, தாங்கள் அந்நியமாதலை தவிர்ப்பதற்காகவோ படிப்பதில்லை.

4. அவர்களுக்கு மனோதத்துவம் தேவையில்லை.

5. அவர்கள் சமூகவியலை வெறுக்கிறார்கள்.

6. அவர்கள் காஃப்காவையோ, கனவோடை உத்தியையோ ஜேம்ஸ் ஜாய்சையோ புரிந்துகொள்ள முயலுவதில்லை.

7. அவர்கள் நன்மை, குடும்பம், தேவதைகள், பூதங்கள், குனியக்காரிகள், ஆவிகள், தர்க்கம், தெளிவு, நிறுத்தக்குறிகள் போன்ற பழங்கால விஷயங்களை இன்னும் நம்புகிறார்கள்.

8. அவர்கள், சுவாரஸ்யமான கதைகளை விரும்புகிறார்கள். பொழிப்புரைகளையோ, கையேடுகளையோ, அடிக் குறிப்புகளையோ விரும்புவதில்லை.

9.ஒரு புத்தகம் அலுப்புத் தருவதாக இருக்கும்போது, அவர்கள்,எவ்விதமான கூச்சமோ, பயமோ இல்லாமல் கொட்டாவி விடுகிறார்கள்.

10. அவர்களுடைய அபிமான எழுத்தாளர் மனித குலத்தை துயரத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் இளையவர்களாக இருந்தபொழுதிலும் அது எழுத்தாளர்களுடைய சக்திக்கு உட்பட்டதல்ல என்பதை அறிந்திருக்கிறார்கள்.

பெரியவர்களுக்குத்தான் அத்தகைய சிறுபிள்ளைத்தனமானஎண்ணங்கள் ஏற்படுகின்றன.
ஸிங்கர் எழுதும் இட்டிஷ் மொழியை, உலகெங்கிலுமுள்ள 20,000 பேர் வாசிக்கிறார்கள் எனலாம். தமது நூல்களை மொழி பெயர்ப்பதில் ஸிங்கரும் பங்கேற்கிறார். இட்டிஷ் மொழியில் எழுதப்பட்ட தமது கையெழுத்துப் பிரதியை ஸிங்கர் படித்து ஆங்கிலத்தில் சொல்ல, மொழிபெயர்ப்பாளர் அதை செம்மைப்படுத்தி எழுதுகிறார்.

"நீங்கள் ஏன் இறந்து போன ஒரு மொழியில் எழுதுகிறீர்கள்'' என்று ஸிங்கரை மக்கள் அடிக்கடி கேட்பதுண்டு. தான் பேய்க் கதை எழுத விரும்புவதாகவும் பேய்களுக்கு இறந்த மொழியை
விட ஏற்றதாக வேறு எதுவும் இருக்கமுடியாது என்று தான் நம்புவதாகவும் ஸிங்கர் கூறுவார். மொழி எவ்வளவுக்கெவ்வளவு உயிரற்றதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உயிரோட்டத்துடன் பேய் இருக்கும் என்றும், பேய்கள் இட்டிஷ் மொழியை நேசிப்பதாகவும் தனக்குத் தெரிந்து அவை அம்மொழியையே பேசுவதாகவும் அவர் சொல்லுவார். இரண்டாவதாக, தாம் பேய்களில் மட்டுமல்லாமல் உயிர்த்தெழுதலிலும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், என்றாவது ஒரு நாள் கோடிக் கணக்கான இட்டிஷ் பிணங்கள் கல்லறைகளை பிளந்து கொண்டு வெளியே வந்து ''படிப்பதற்கு ஏதாவது புதிய இட்டிஷ் மொழிப்புத்தகம் இருக்கிறதா" என்று கேட்கும் எனவும் அவைகளுக்கு இட்டிஷ் ஒரு போதும் இறந்த மொழியாகிவிடாது என்றும் அளவில் மூன்றாவதாக இரண்டாயிரம் வருடங்களாக இறந்துபோன மொழி என்று கருதப்பட்ட ஹீப்ரு மொழி அபூர்வமாக புத்துயிர்ப்பெற்றதைப் போல ஒரு நாள் இட்டிஷ்ஷும் உயிர் பெறலாம் என்றும் சொல்வார். நான்காவதாக, அவர் இட்டிஷ் மொழியைக் கைவிடாமல் இருப்பதற்கு வேறு ஒரு சிறிய காரணமும் உண்டாம். இட்டிஷ் செத்துக் கொண்டிருக்கிற மொழியாகவே இருப்பினும், அது ஒன்றுதான் தனக்கு நன்றாகத்தெரிந்த ஒரே மொழி. மேலும், இட்டிஷ் தனது தாய்மொழி. தாய்மொழி. உண்மையில் ஒருபோதும் சாவது கிடையாது என்பவை ஸிங்கர் காட்டும் காரணங்கள்.

ஸிங்கரின் எழுத்து ஊற்றெனப் பிரவகிப்பது. ''எழுதாமல் இருப்பதற்குத்தான் முயற்சி எடுக்க வேண்டியதாக இருக்கிறது" என்பார் ஸிங்கர். ஆனாலும் வார்த்தைகளை மந்திரம் போல உபயோகிப்பவர் ஸிங்கர். கதாசிரியரின் பணி வாசகனை மகிழ்விப்பதுதான் என்று ஸிங்கர் வலியுறுத்துகிறார். அவரை சமூக நலம் பேணும் எழுத்தாளராக மாற்ற எண்ணியவர்களின் முயற்சியை அவர் ஏற்றுக்கொண்டதில்லை, நவீன எழுத்தாளர்களின், "சமூக மாற்றம்கோரி கற்பிக்கவும், விளக்கவும், முற்படும்'' போக்கை ஸிங்கர் வரவேற்றதில்லை. இலக்கியப்படைப்புகளை ஆயவும் அதற்கு வெவ்வேறு உட்பொருட்களைத் தேடவும் முயலும் தற்காலப்போக்கின் மீது நம்பிக்கை இல்லாதவர் ஸிங்கர். ''எழுத்தாளனிடம் போய் அவன் படைப்புகளைப் பற்றி விளக்கம் கேட்பது, கோழியிடம் போய், அது முட்டையிட என்னென்ன இரசாயனங்களைப் பயன்படுத்தியது என்பதைக் கேட்பது போலாகும்'' என்பது ஸிங்கரின் வாதம்.
மதம் சார்ந்த வைதீகத்தை அவர் எதிர்த்தபோதிலும், ''பாலுறவைப் போலவே கடவுள் நம்பிக்கையும் மனிதனுக்கு தேவையானது" என்கிறார் ஸிங்கர். அடிக்கடி பிரார்த்தனையில் ஈடுபடுவது அவர் வழக்கம். டெலிபதி, புலன்களுக்கு எட்டாத விஷயங்களைத் தூண்டுதல் ஆகியவற்றை விஞ்ஞானரீதியான சாத்தியப்படுத்தும் முயற்சியாகவே தாம் பிரார்த்தனையில் ஈடுபடுவதாக ஸிங்கர் சொல்வதுண்டு. "நம் காலத்தில் எழுத்தாளர்கள் வேறு எந்தக் காலத்தையும் போலவே சமூக அரசியல் லட்சியங்களை உபதேசிக்கிறவர்களாக மட்டும் இல்லாமல் வாசகனுக்கு மகிழ்ச்சியையும் பொழுதுபோக்கையும் இனிமையும் தரும் படைப்புகளை வழங்குபவர்களாக இருக்க வேண்டும். அலுப்படைந்த வாசகர்களுக்கு அதைப் போன்ற சொர்க்கம் வேறொன்றும் இல்லை.

எப்போதும் ஆனந்தத்தை வழங்கும். மகிழ்ச்சி தந்து, துன்பங்களிலிருந்து மனித மனத்தை விடுவித்து, ஆன்மாவை உயர்த்தி, சிந்திக்கச் செய்வதே இலக்கியம். அவ்வாறு செய்யாமல், சலிப்பைத் தருகிற இலக்கியத்துக்கு மன்னிப்பே இல்லை. அதே சமயத்தில் ஒரு பொறுப்புமிக்க எழுத்தாளர் சமகாலப் பிரச்சனைகளைக் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டவராக, இருக்கவேண்டும் என்பதும் உண்மை. மனிதகுல வரலாற்றில் வேறு எந்த காலகட்டத்தையும் விட, இப்போது, கடவுள் நம்பிக்கை, மறைமொழிகளில் நம்பிக்கை ஆகியவை பலவீனமாக இருக்கிறது என்பதை அவன் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. நாளுக்கு நாள் அதிகப்படியான குழந்தைகள், இறைப்பற்று, பாவபுண்யம், ஆத்மாவின் அழிவின்மை, நீதியின் வலிமை ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களாக வளர்கிறார்கள்" என்று நோபல் பரிசு ஏற்புரையில் ஸிங்கர் குறிப்பிட்டார். அவ்வுரையில் ஸிங்கர், இலக்கியம், சமூகம், மொழி, இனம் ஆகியவை பற்றிக் கூறிய கருத்துகள் சிந்திக்கத் தக்கன. அவையாவன: "குடும்பம் தனது ஆன்மீக அடித்தளத்தை இழந்து வருகிறது என்பதை ஒரு உண்மையான எழுத்தாளர் புறக்கணித்துவிட முடியாது. ஆஸ்வால்டு ஸ்பெங்லேர் தீர்க்க தரிசனமாக முன்னுரைத்த தீமைகளெல்லாம் இரண்டாவது உலகப் போரிலிருந்து உண்மைகளாகி வருகின்றன. தொழில்நுட்ப சாதனைகள்,
எவ்வளவுதான் பிரம்மாண்டமானவைகளாக இருந்த போதிலும், அவை, நவீன மனிதனின் ஏமாற்ற உணர்வையும், தனிமையையும், தாழ்வு மனப்பான்மையையும், போர், புரட்சி பயங்கரவாதம்
ஆகியவற்றைக் குறித்த அச்சத்தையும் அகற்றிவிட முடியாது. நமது தலைமுறையினர், கடவுளிடத்தில் நம்பிக்கையை இழந்ததோடு மட்டுமல்லாமல், மனிதர்களிடமும், அவர்கள் ஏற்படுத்தியுள்ள நிறுவனங்களிடமும், அவற்றை நிர்வகிப்பவர்களிடமும் கூட நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.


சமூகத் தலைவர்களிடம் நம்பிக்கை இழந்துவிட்ட மக்கள் வார்த்தை விற்பன்னர்களான எழுத்தாளர்களை நம்பிக்கையோடு எதிர்நோக்குகிறார்கள். நுண்ணுணர்வும், திறமையும்
கொண்ட எழுத்தாளர்கள் ஒருவேளை நாகரீகத்தை காப்பாற்றக்கூடும் என்னும் சிறு நம்பிக்கைக்கீற்று மக்கள் மனதில் இருக்கிறது. கலைஞனிடத்தில் தீர்க்கத்தரிசனத்துக்கான
பொறி ஒருவேளை இருத்தலும் கூடும். பைத்தியம் பிடித்த மனிதக் கூட்டம் எவ்வளவு கொடுமையான காயத்தை ஏற்படுத்த முடியுமோ அத்தனை கொடிய அடியையும் காயங்களையும் வாங்கிக்கொண்ட ஒரு இனத்தில் பிறந்த நான் இனிமேலும் ஏற்படக்கூடிய அபாயங்களைப் பற்றியவையிலேயே உழல வேண்டியவனாக இருக்கிறேன். உண்மையிலேயே,
அதிலிருந்து விடுபடுவதற்கு வழியறியாதவனாக நான் பலமுறைகள் விரக்தியடைந்துள்ளேன். ஆயினும், மனதில் நம்பிக்கை துளிர்விடுகிறது. நடந்தவற்றை எடை போட்டுப் பார்க்கவும் ஒரு முடிவுக்கு வந்து முன்னேறவும் இன்னும் தாமதம் ஆகிவிடவில்லை, என்று அது எனக்குக் கூறுகிறது
சுதந்திர சிந்தனையில் விருப்பம் உள்ளவனாக நான் வளர்க்கப்பட்டேன். மதநூல்களில் கூறப்படும் இறைவனின் வெளிப்பாடு பற்றிய செய்திகளில் எனக்கு சந்தேகம் இருந்தாலும், இந்தப் பிரபஞ்சம் வெறும் பௌதீக அல்லது ரசாயன விபத்து என்றோ, ஒரு குருட்டு பரிணாமத்தின் விளைவு என்றோ, என்னால் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது. மனித மனத்தின் பொய்களையும்,
வெறும் பேச்சுக்களையும், வீண் புகழ்ச்சிகளையும் நான் அடையாளம் கண்டுகொள்ள கற்றுக்கொண்டேன். எனினும், நாம் எல்லோரும் என்றைக்காவது ஒப்புக்கொள்வோம் என்று நான்
கருதுகிற சில உண்மைகளை நான் இன்னமும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறேன். இயற்கையால் தரமுடிந்த எல்லா இன்பங்களையும், எல்லா சக்திகளையும் அறிவையும் மனிதன் பெற்றுக்கொண்டு, அதற்குப் பிறகும், பேரண்டத்தையே தன்னுடைய மொழியாக கொண்டிருந்தும் வார்த்தைகளால் பேசாது செயல்களால் பேசும் ஆண்டவனுக்குத் தொண்டு செய்வதற்கு ஒரு வழி
காண வேண்டும்.

இலக்கியம், மனதின் எல்லைகளை விரிவாக்கி மன மாற்றங்களையும் ஏற்படுத்தும் வல்லமை உடையது என்று நம்புகிற சிலரில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ள நான் வெட்கப்படவில்லை. தத்துவார்த்தமாகவும் மதரீதியாகவும் , மதரீதியாகவும், அழகியல்
ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கூட இலக்கியம் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. பழைய யூத வரலாற்றில் கவிஞனுக்கும், தீர்க்கதரிசிக்கும் அடிப்படையில் எந்தவிதமான வேறுபாடும்
இல்லை. அந்தக் கவிஞர்களின் படைப்பான பழைய பாடல்கள் நமக்கு பல சமயங்களில் சட்டமாகவும், வாழ்க்கைமுறையாகவும் ஆகியிருக்கிறது. நியூயார்க்கில் உள்ள யூத தினசரி பத்திரிகை அலுவலகத்தின் அருகேயுள்ள சிற்றுண்டிச் சாலைக்கு வரும் எனது நண்பர்களில்
சிலர் என்னை தளர்ச்சியும், மனச்சோர்வும் தோல்வி மனப்பான்மையும் கொண்டவன்
என்று சொல்லுவதுண்டு. என்னுடைய விரக்திக்குப் பின்னால் எப்போதும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது.

பாடிலெய்ர், வேர்லெய்ன், எட்கார், ஆலன்போ, ஸ்ட்ரின்ட் பெர்கி ஆகிய தோல்வி மனப்பான்மையாளர்களினால் நான் மனஅமைதி பெற்றிருக்கிறேன். மனவியல் ஆராய்ச்சியில் நான் கொண்ட ஆர்வம், ஸ்வீடனைச் சேர்ந்த, சித்தர்களைப் போன்ற ஸ்வீடன் போல், குரு பிராட்ஸ்
லாவர், மிக உயர்ந்த ஆன்மீக இலக்கியத்தை எதிர்கால சந்ததியினருக்காக படைத்து, வைத்துவிட்டு சமீபத்தில் காலமான எனது நண்பன் ஆரோன் செயிட்கிளீன் ஆகியோரிடம் என்னை ஆறுதல் காணச்செய்தது.ஒரு படைப்பிலக்கியவாதியின் தோல்வி மனப்பான்மை
மனச்சோர்வை வெளிப்படுத்துவது அல்ல. மாறாக, அது மனித மீட்சிக்கு அளவற்ற உந்துசக்தியை அளிப்பதாகும். மனதை. மகிழ்விக்கும் போதே கவிஞன் அழியாத உண்மைகளை தேடவும்
இருப்பின் பொருளை தெரிந்து கொள்ளவும் இடையறாது முயல்கிறான். காலம், மாறுதல் ஆகிய புதிர்களை விடுவிக்கவும் துன்பத்திலிருந்து விடுதலை பெறவும், அநீதி, கொடூரம் ஆகியவற்றுக்கிடையே அன்பைக் காட்டவும் அவன் தன் வழியில் செயல்படுகிறான். எல்லா தத்துவங்களும் நிலை குலைந்து விழுந்தபின்னர், போர்களும், புரட்சிகளும் மனித இனத்தை மீள முடியாத இருளில் தள்ளியபின் எல்லாவற்றிலும் இருந்து மனித குலத்தை மீட்பதற்கு கவிஞன் எழுந்து வருவான் என்பதே என் நம்பிக்கை. இது, உங்களுக்கு மிக வினோதமாகப் பட்டாலும், நான், அடிக்கடி அவ்வாறுதான் நினைக்கிறேன்.

நோபல் பரிசுக் குழுவினர் எனக்கு அளித்திருக்கிற இந்த மிகப் பெரிய கௌரவம் என் தாய்மொழியான இட்டிஷ் மொழிக்கும் சேர்த்து வழங்கப்பட்டதாகும். அம்மொழி, நாடு கடத்தப்பட்டவர்களின் மொழி. நாடற்றவர்களின் மொழி. தனக்கென்று ஒரு தேசமும் இல்லாமல் எந்த அரசாங்கத்தாலும் ஆதரிக்கப்படாமலும் இருக்கும் ஒரு மொழி. படைக்கலங்கள், வெடிமருந்துகள், ராணுவ பயிற்சிகள், போர் உபாயங்கள் ஆகியவற்றுக்கான வார்த்தைகள்
இல்லாத மொழி. பிற மதத்தவர்களாலும் சரி, யூதர்களாலும் சரி வெறுக்கப்படுகிற மொழி. ஆனால், மாபெரும் மதங்கள் போதிப்பனவற்றையெல்லாம் இட்டிஷ் மொழி பேசும் மக்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறார்கன் என்பதே உண்மை. வேத விதிகளின்படி நடப்பவர்கள் என்று அந்த மக்களைப்பற்றிச் சொல்லப்படுவது எழுத்துக்கு எழுத்து சரியான கணிப்பு. தோரா, தால்முட், முஸ்ஸார், காபாலா என்று சொல்லப்படும் வேதங்களின் வழியே மனிதர்களையும், மனித உறவுகளையும் கற்றுக்கொள்வதைவிட அவர்களுக்குப் பெரிய ஆனந்தம் வேறு எதுவும் இல்லை. யூதக் குடியிருப்புகள் துன்பத்திற்கு அடைக்கலம் தரும் இடமாக மட்டுமில்லாமல், அமைதி, ஒழுக்கம், சுயகட்டுப்பாடு, மானுடமேன்மை ஆகியவற்றின் பயிற்சி
நிலையமாகவும் இருக்கும். அந்த இடத்தைச் சூழ்ந்திருக்கும் மிருகத்தனத்துக்கு நடுவிலும் அந்த நற்குணங்களை அங்கு வசிக்கும் மக்கள் விட்டுவிடாமல் காத்து வருகிறார்கள். நான் அத்தகைய மக்களிடையே வளர்ந்தவன். வார்சாவின் குரோச்மஜினா வீதியில் இருந்த என் அப்பாவின் வீடு ஒரு நூலகமாகவும், நீதிமன்றமாகவும், பிரார்த்தனைக்கூடமாகவும், கதை
சொல்லும் இடமாகவும், திருமணம், விருந்துகள் ஆகியவை நடைபெறும் இடமாகவும்
இருந்தது. குழந்தையாக இருந்தபோது நான் என் அண்ணனும் குருவுமான, ஐ.ஜே ஸிங்கரிடம், ஸ்பினோசாவில் இருந்து மேக்ஸ் நோர்டா வரையிலான பல பகுத்தறிவுவாதிகளின் மதத்துக்கு
எதிரான கருத்துகளை நான் அறிந்து கொண்டேன். நான் என் அப்பாவிடம் இருந்தும் அம்மாவிடம் இருந்தும் உண்மையைத் தேடுகிற எவர்க்கும் ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு கடவுள் நம்பிக்கை தரக்கூடிய பதில்களைத் தெரிந்து கொண்டேன். எங்கள் வீட்டிலும், அதைப் போன்ற மற்ற வீடுகளிலும் நித்தியத்துவத்தை பற்றிய பிரச்சனைகளே இட்டிஷ் செய்தித்தாளில் வெளிவரும் சூடான செய்தியைவிட முக்கியமானதாக கருதப் பட்டது. யூதர்களிடமிருந்து விலகி நிற்கும் எனக்கு , யூதர்களின் மதம் பற்றிய சந்தேகங்கள் இருப்பினும், யூதர்களிடமிருந்து, அவர்கள் சிந்திக்கிற முறையிலிருந்து மற்றவர்கள் அவமானத்தையும், துயரத்தையும் தவிர வேறு ஏதும் காணாத இடங்களிலும் அவர்கள் சந்தோஷத்தை அடையும் விதத்தைப்பற்றியும் அறிந்து கொள்வதிலிருந்து மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்றே , நான் நம்புகின்றேன்.

இட்டிஷ் மொழியிலும், இட்டிஷ் உணர்விலும் தெய்வீக மகிழ்ச்சி, வாழ்வின் மீதான தாகம், மீட்பருக்கான ஏக்கம், பொறுமை, மனிதர்களின் தனித்தன்மையைக் குறித்த ஆழ்ந்த சிலாகிப்பு ஆகியவற்றைக் காணலாம். நுணுக்கமான நகைச்சுவையும், வாழும் ஒவ்வொரு தினத்துக்கும் மனம் நெகிழ்ந்து நன்றி சொல்லும் பாங்கும், அன்பு பாராட்டுவதும் ஒவ்வொரு சிறிய வெற்றியையும் பெரிய நிகழ்ச்சியாகக் கொண்டாடுவதும் இட்டிஷ் உணர்வுகள். இட்டிஷ்காரர்கள் அகம்பாவம் கொண்டவர்கள் அல்ல. வெற்றி சுலபத்தில் கிடைக்கும் என்று அவர்கள் எண்ணுவதில்லை. அவர்கள் கெஞ்சிக் கேட்டோ, உத்தரவு போட்டோ அதைப் பெறுவதில்லை. எப்படியோ முட்டி, மோதி, எதிர்நீச்சல் போட்டு தங்களை படைத்த கடவுளின் திட்டம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது என்ற உணர்வோடு போராட்டத்தைத் தொடர்கிறார்கள்.
இட்டிஷை, செத்துப்போன மொழி என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். இரண்டாயிரமாண்டுகளாக ஹீப்ரு மொழி அவ்வாறே அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், அது, நமது தலை முறையில் குறிப்பிடத்தக்க வகையிலும் அதிசயிக்கத்தக்க விதத்திலும், புத்துயிர் பெற்றது. பல நூறாண்டுகளாக இறந்து கிடந்த அராமயிக் மொழி, மிக உன்னதமான நூலாகிய ''ஜோஷர்'' வெளிவந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இட்டிஷ் இலக்கியத்தின் காவியங்களே, நவீன ஹீப்ரு இலக்கியத்தின் காவியங்களும் என்பது உண்மை.

"இட்டிஷ், இன்னும் உலகத்தார் பார்வை படாத பல பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அது, தியாகி களும், ரிஷிகளும், கவிகளும், வேதம் ஓதியவர்களும் பேசிய மொழி.
மனித குலம் என்றும் மறக்கக்கூடாத சிந்தனைகளையும் நகைச்சுவையையும் கொண்ட வளமான மொழி.'' என்று, அவர் தன் உரையில் குறிப்பிட்டார். 1963- ஆம் ஆண்டு ஓஹியோ, யூதக் கல்லூரி ஸிங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.  'இறகுக் கிரீடம்' எனும் அவருடைய நூலுக்கு தேசிய விருது கிடைத்தது. 'மெதுசலாவின் மரணமும் பிற கதைகளும்', 'வயல்களின் அரசன்', 'காதலும் நாடுகடத்தலும்' ஆகிய அவருடைய பிந்தைய படைப்புகள். 'யூத மாணவன் யென்டில்', விரோதிகள் ஒரு காதல் கதை' ஆகியவை ஸிங்கரின் சிறந்த படைப்புகள். அவை, முறையே 1983-லும் 1989-லும் திரைப்படங்களாகியிருக்கின்றன. அவருடைய படைப்புகள், ஆங்கிலம், ஹீப்ரு, ஃபிரெஞ்ச்,ஜெர்மன், இத்தாலி, டச்சு, நார்வேஜியன், பின்னிஷ் ஆகிய பல, மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன .

ஸிங்கர், ஜீவராசிகள் அனைத்தையும் நேசித்தார். உணவையே உண்டார். இரண்டு பாராகீட் கிளிகளையும் தன் குடும்ப அங்கத்தினர்களாக கருதி வளர்த்தார். புறாக்களுக்கு உணவு தருவதற்காக அருகில் உள்ள பூங்காவுக்கு தினமும் செல்வது அவர் வழக்கம். 1943- இல் ஸிங்கர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட ஸிங்கர், மியூனிச்சில் இருந்து வெளியேறிய அகதியான அல்மா ஹைமன்னை 1940- இல் மறுமணம் செய்து கொண்டார். தன் முதல் திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயான அல்மா பல ஆண்டுகள் நியூயார்க் பல் பொருள் அங்காடியில் விற்பனையாளராகப் பணியாற்றியவர். ஸிங்கரும் அல்மாவும் நியூயார்க்கில், அற்புதமான பங்களாவில் ஸிங்கர் மரணம் அடையும் வரை சேர்ந்தே வசித்தார்கள். பல மாரடைப்புகளுக்குப் பிறகு 1991-ஆம் ஆண்டு ஜூலை
மாதம் 24-ந்தேதி ஸிங்கர் இறந்தார்.


சிங்கரின் அபிமானிகளுக்கு அவருடைய கருத்துகள் என்றும் நேசிக்கத்தக்க சுவையாகவே இருக்கும். அக்கருத்துகளிலிருந்து மாறுபடுவோர்கூட அவர் அவற்றைச் சொல்லியிருக்கும் விதத்தை நேசிக்கவும் நெஞ்சில் இருத்திக் கொள்ளவுமே விரும்புவார்கள். இறுதிவரை நேர்மையும் நகைச்சுவையும் நெத்தியடியுமாக எதையும் சொல்வதே சிங்கரின் பாணி. உதாரணத்துக்குச் சில:
"கீழை நாட்டைச் சேர்ந்த ஒரு பெரியவர் தன்னுடைய அந்தப்புரத்தில் இருக்கிற அத்தனை பெண்களையும் அத்தனை குழந்தைகளையும் மனப்பூர்வமாக நேசிப்பது போல நான் என்னுடைய
படைப்புகள் அத்தனையும் நேசிக்கிறேன். அவற்றைப் படைக்கும்போது ஒரு எழுத்தாளனுக்கு ஏற்படுகின்ற பல அபாயங்களையும் நான் அறிவேன். அவைகளில் மோசமானவற்றை பட்டியலிட்டால் :
1.எழுத்தாளன் சமூகவியல், அரசியல் அறிந்தவனாக இருக்க வேண்டும் எனும் எண்ணமும் சமூக மெய்ம்மை ஆய்வுகளுடன் அனுசரித்துப் போகிறவனாக இருக்க வேண்டும் என்ற கருத்தும்,
2. திடீர்ப் புகழின் மீதும், பணத்தின் மீதும் கொள்ளும் பேராசை
3. வலிந்து கற்பிக்கப்படுகிற படைப்பார்வம். பகட்டான மொழிநடை. நடையில் திணிக்கப்படுகிற சிக்கலான உத்திகள். அடிப்படையானதும் மாறிக்கொண்டே இருப்பதுமான மனித உறவுகளையும் மனித சந்ததி மற்றும் சூழல் ஆகியவற்றின் செயற்கையையும், அவை தொடர்பான குழப்பங்களையும் செயற்கையான படிமங்களைக்கொண்டு ஜாலம் காட்டி அவற்றின் மூலம் வெளிப்படுத்த நினைப்பது. வார்த்தைச் சூழல்களுக்குள் சிக்கிக்கொள்வதும்,
பரீட்சார்த்தமான எழுத்து முயற்சிகளில் ஈடுபடுவதும் உண்மையான எழுத்துத் திறமையை பல சமயங்களில் அழித்திருக்கிறது. நவீன கவிதைகள் பலவற்றை இருண்மை கொண்டதாக, கவர்ச்சி
யற்றதாக, அந்நியமானதாக ஆக்கி அழிந்திருக்கிறது. கற்பனை என்பது வேறு விஷயம். ஸ்பினோஸா சொல்லுவதுபோல, 'விஷயங்களில் ஒழுங்கு முறை' என்பது முழுக்க முழுக்க வேறான விஷயம். இலக்கியம் அபத்தத்தை தெளிவாகவும் விரிவாகவும் விளக்கலாம். ஆனால், ஒருபோதும் இலக்கியமே அபத்தமாகி விடக்கூடாது'' என்கிறார் சிங்கர். படைப்பிலக்கியத்தைப் பற்றிச் சொல்லும் போது, கதைதான் ஒரு படைப்பிலக்கியவாதிக்கு இடப்படுகிற
"சிறு பெரிய சவால் என்று நான் இன்னமும் நம்புகிறேன். சிதறிப்போகிற நீண்ட பகுதிகளையும், பிளாஷ்பேக்குகளையும், உறுதியற்ற கதையமைப்பையும், ஜீரணிக்கவும், சமாளிக்கவும் வல்லதாக நாவலின் வடிவம் இருக்கிறது. சிறுகதையோ, உச்சகட்டத்தைக் குறிப்பாக வைத்து புனையப்பட வேண்டியதாக இருக்கிறது. குறுக்கீடுகள் இல்லாத, நெருக்கமான கதைப் பின்னலையும் வாசகனின் எதிர்பார்ப்பைத் தூண்டுகிற பண்பையும் அது பெற்றிருக்க வேண்டும்.
சிறுகதையின் சாரமே சுருக்கமாகச் சொல்வதில்தான் இருக்கிறது. சிறுகதைக்கு வரையறுக்கப்பட்ட ஒரு திட்டம் வேண்டும். இலக்கியவாதிகள் அடிக்கடி சொல்வது போல அது வாழ்வின் ஒரு துண்டமாக இருப்பது என்பது சாத்தியம் அல்ல. சிறுகதை மன்னர்களான செக்காவ், மாப்பசான் ஆகியோர் அவர்கள் துல்லியமாக எந்த இடத்தை நோக்கி போகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டிருந்தார்கள். ஆதலினால்தான், அவர்களுடைய படைப்புகளைத் திரும்ப திரும்ப படித்தாலும் சலிப்பு ஏற்படுவதே இல்லை. பொதுவாகக் கதைகள் ஒரு போதும் பகுப்பாய்வாக ஆகி
விடக்கூடாது. உண்மையில் ஒரு படைப்பிலக்கியவாதி மனோ தத்துவம் மற்றும் பல இசங்கள் ஆகியவற்றில் சிறுபிள்ளைத்தனமான அளைந்து கொண்டிருக்கக்கூடாது. நல்ல இலக்கியம் என்பது, ஜனரஞ்சகமாகவும், பொழுதுபோக்காகவும் இருந்துகொண்டே செய்தி சொல்வதாகவும் இருக்கவேண்டும்.

அது, தெளிவு, மேன்மை ஆகிய இரு தன்மைகளையும் ஒரே சமயத்தில் கொண்டதாக இருக்கும். தற்செயலான சம்பவங்களுக்குப் பொருள் சேர்க்கவும், சந்தேகத்தையும் நம்பிக்கையையும் இணைக்கவும், உடலின் தாபங்களையும், ஆன்மாவின் ஏக்கங்களையும் ஒன்று சேர்க்கவும்
வல்லமை கொண்டது இலக்கியம். அது ஈடற்றது. பொதுவானது, நாடு தழுவியது, உலகு சார்ந்தது. எதார்த்தமானது, மர்மங்கள் நிறைந்தது. அடுத்தவர்களின் விமர்சனத்தை அது பொறுத்து
விளக்கிக் கொள்ளலாமே தவிர, ஒருபோதும், ஒருபோதும் தன்னிலையை கொண்டிருக்கலாகாது. நமது தலைமுறையில் பொய்யான விமர்சனமும், போலியான படைப்பாற்றலும் நிஜ இலக்கியம் என்றால் எதுவென்பதை மறந்து போகச் செய்யும் மறதிப்பிணியை இலக்கியத்துக்குத் தோற்றுவித்திருப்பதால் இந்த எளிய உண்மை வற்புறுத்தியாகவேண்டியிருக்கிறது. கருத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் நிறைய எழுத்தாளர்களை கதை சொல்லுவது என்பதே உரைநடைக்கு கலைநயம் சேர்க்கிற மூலக்காரணமான விஷயம் என்பதை மறந்துபோகச் செய்து விடுகிறது." என்கிறார் ஸிங்கர்.

இறுதியாக தன் வாழ்வின் இலட்சியமான எழுத்து எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சொல்லும் போது, "எல்லாவற்றிலுமிருந்து என்னைத் தனிமைப்படுத்திக்கொள்கிற சுபாவம் அப்படியேதான் இருக்கிறது. நான் என் சோகத்தின் முன் சரணாகதி அடைந்து விட்டேன். அந்த உணர்வே என்னைக்
கைதியாக்கி விட்டது. எனது படைப்பாற்றலுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்துக்கொண்டேன். 'உனது ரகசியங்களை எனக்குச் சொல். அல்லது என்னை அழித்து விடு. நான் என்னிலிருந்தே ஓட.
வேண்டியதாயிற்று. எப்படி? எல்லாம் வல்ல இறைவன் உலகத்திற்கு அனுப்பியிருக்கிற தீங்குகளையும், இனிமேல் எதிர்காலத்தில் அனுப்பப்போகிற தீங்குகளையும் மறுதலிக்கக்கூடியதான, மனிதத்தன்மையையும் நீதியையும் பற்றி நான் கனவு காண்கிறேன்.
அதிகபட்சம் போனால் மானுட வாழ்வின் அவலங்களைச் சற்றே மறந்திருப்பதற்கான வழியே கலை, என்பதைத் தவிர, அது வேறெதுவுமாக இருக்கமுடியாது. ''சற்றே'' என்று சொல்லப்பட்டு இருக்கிற அந்த நேரத்தை சாத்தியப்படுத்துவதற்காகவே நான் கடுமையாக உழைக்கிறேன்.'' என்கிறார் ஸிங்கர்.

நன்றி:எட்டுத் திக்கிலிருந்து ஏழு கதைகள்
நர்மதா பதிப்பகம்
கட்டுரை ஆக்கமும், கதைகளின் தமிழாக்கமும்: திலகவதி

குறிப்பு: சினிமா, இலக்கியக் கட்டுரைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும், எவரும் எளிதில் படிக்கக் கிடைக்கும்படிச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், 1995ஆம் ஆண்டு வெளியான “எட்டுத் திக்கிலிருந்து ஏழு கதைகள்” நோபல் பரிசு பெற்ற ஏழு படைப்பாளிகள் மற்றும் அவர்கள் கதைகள் குறித்த புத்தகத் தொகுப்பிலிருந்து இக்கட்டுரை எடுத்து தட்டச்சு செய்யப்பட்டிருக்கிறது.