சினிமா வடிவம் - ஒரு அறிமுகம்


கலையில் படைப்பாளி என்ன சொல்கிறார், அதை எப்படிச் சொல்கிறார் ஆகிய இரண்டும் வேறுவேறு, இரண்டும் முக்கியம். இதில் முதலாவது உள்ளடக்கம் (content) இரண்டாவது வடிவம் (form). சினிமாவில் சிலர் வடிவத்தைக் காட்சி மொழி (film language) என்றும் குறிப்பிடுகின்றனர். புத்தகத்தின் பிற்பகுதியில் மற்ற கலைகளை விடுத்து சினிமாவை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதைக்கு எல்லா கலைகளுக்கும் பொதுவான விசயங்களை விவாதிப்போம்.

பார்வையாளர்களுள்* ஒரு சிலர் உள்ளடக்கம் தான் அதிக முக்கியம் என்றும் வேறு சிலர் வடிவம் தான் அதிக முக்கியம் என்றும் கருதும் வழக்கத்தைக் காண முடிகிறது. இது காலங்காலமாகக் கலைஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் முன்னெடுக்கும் விவாதம். ஆனால் ஒன்று உறுதி – வடிவம் மட்டும்தான் முக்கியம் உள்ளடக்கம் முக்கியமில்லை என்பதும் உள்ளடக்கம் மட்டும்தான் முக்கியம் வடிவம் முக்கியமில்லை என்பதும் கண்டிப்பாகச் சரியாக இருக்க முடியாது.
முதலில் ஒரு அடி பின்வைத்து ‘உள்ளடக்கம்-வடிவம் என்று ஒரு படைப்பைப் பிரித்து அணுக வேண்டிய தேவை என்ன?’ என்ற கேள்விக்கு வருவோம். இது ஒரு கலைசார்ந்த கேள்வி இல்லை. வாழ்வை நாம் எப்படி அணுகுகிறோம் என்பது தொடர்பான கேள்வி. வாழ்வில் எல்லா விசயங்களையும் மேம்போக்காகப் போகிற போக்கில் கடந்து செல்கிறோமா, இல்லை முக்கியமான விசயங்களை நிதானமாக உற்றுநோக்கி அணுகுகிறோமா என்பது தொடர்பானது.
இந்த இரண்டு அணுகுமுறைகளில் எது சரி, எது தவறு எனப் பிரிப்பது இந்த புத்தகத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்லலாம் – வாழ்வை மேம்போக்காகக் கடந்து செல்வதிலிருந்து, உற்றுநோக்கி அணுகும் நிலைக்கு வருவதை வளர்ச்சியாகக் குறிப்பிடலாம். அவ்வகையில் ஒரு சினிமாவைப் பார்த்தோமா, பார்த்த மாத்திரத்தில் பிடித்ததா பிடிக்கவில்லையா என்ற முடிவுக்கு வந்தோமா, அம்முடிவை யாரோடும் விவாதிக்காமல் நண்பர்களிடம் பகிர்ந்தோமா, அடுத்த வேலையைப் பார்த்தோமா என்ற நிலையிலிருந்து முக்கியமான சினிமாக்களை பார்த்தப்பின் (தேவையென்றால் பலமுறை பார்த்து), அதை உள்ளடக்கம் மற்றும் வடிவம் எனப் பிரித்து, ஒவ்வொன்றையும் பகுத்தாய்ந்து விவாதித்து அந்த படைப்பு சார்ந்த நிலைப்பாட்டிற்கு வருவதென்பது பார்வையாளரின் ரசனை வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு முன்னேற்றம்.

அவ்வகையில் ஒரு பார்வையாளர் சினிமாவை உள்ளடக்கம்-வடிவம் எனப் பிரித்து அணுகுவதென்பது அவர் தேர்வு. நாம் முடிந்தமட்டும் அவருக்கு வழி வேண்டுமானால் காட்டலாம். ஆனால் ஒரு படைப்பாளிக்கு சினிமாவை உள்ளடக்கம்-வடிவம் எனப் பிரித்து அணுகுவதென்பது அத்தியாவசியம்.
II
கலைகளில் உள்ளடக்கம் என்றால் என்ன? வடிவம் என்றால் என்ன? எது எந்தளவு முக்கியம்? உள்ளடக்கம்-வடிவம் எனப் பிரிக்க வேண்டிய தேவை என்ன? ஆகிய கேள்விகளைப் பார்த்தோம். ஒரு படைப்பாளிக்கு பெரும்பாலும் உள்ளடக்கம் தான் முதலில் தோன்றும். பின்னர் அதற்கேற்ற வடிவத்தை அவர் வடிவமைப்பார். இதனால் அவருக்கு உள்ளடக்கம்-வடிவம் சார்ந்து தெரிய வேண்டும். ஆனால் ஒரு பார்வையாளருக்கு இது தெரிவதால் என்ன நன்மை? ஒரே நன்மை அவரின் ரசனை வளர்ச்சிதான். ஆனால் பலர் இந்த நன்மையைக் குறைத்து மதிப்பிட்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். உண்மையில் இந்த ரசனை வளர்ச்சி நம்மை இன்னும் செம்மையாக வாழ வழிகாட்டும் மிகப்பெரிய நன்மை.

அடுத்தது, கலை ரசனை சார்ந்த அகநிலை (subjective) மற்றும் புறநிலை (objective) பார்வைகளுக்கு வருவோம். எளிமைப்படுத்திச் சொல்ல வேண்டுமென்றால் ‘ஒரு படைப்பு நமக்கு பிடித்ததா இல்லையா?’ என்பது அகநிலை ரசனைப் பார்வை. ‘ஒரு படைப்பு நன்றாக இருக்கிறதா இல்லையா?’ என்பது புறநிலை ரசனைப் பார்வை.*

இங்கே ஒரு ஐயம் எழலாம். ஒரு ஐந்து வயதுக் குழந்தைக்கு ஒரு படம் பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம். அது தன்னிச்சையாக நிகழும். அந்த குழந்தைக்குக் கலை ரசனை என ஒன்று இருப்பதே தெரிய வாய்ப்பில்லை. அந்த குழந்தையின் அகநிலை ரசனை குறித்து நாம் என்ன நிலைப்பாடு எடுக்க முடியும்?

அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் பல காலமாக விசாரணைக்கு உட்படுத்தும் ஒரு விசயம் இது. 2400 வருடங்களுக்கு முன் கிரேக்கத் தத்துவவாதி பிளேட்டோ, “அழகு பார்ப்பவர் கண்களில் இருக்கிறது” (Beauty lies in the eyes of the beholder). என்றார். அதற்குப்பின் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு கருத்துநிலைகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 125 வருடங்களுக்கு முன் டால்ஸ்டாய் எழுதிய ‘What is Art?’ புத்தகத்தில் வேறொரு கண்ணோட்டத்தில் Aestheticism என்பதன் கீழ் இதுத் தொடர்பாக அவர் காலம் வரை வந்த எல்லா முக்கியமான கருத்துநிலைகளையும் அடுக்குகிறார்.

இவ்விசயத்தில் திட்டவட்டமாக எனக்கு ஒரு கருத்துநிலையை முன்வைக்கத் துணிவில்லை. எனதளவில் சுருக்கமாக முடிக்க வேண்டுமென்றால், உங்களின் கலை ரசனையை நீங்கள் சிரமேற்கொண்டு சீர்தூக்க முயற்சி எடுக்காதவரை உங்களின் அகநிலை ரசனைக்கு (பிடித்திருக்கிறது/பிடிக்கவில்லை) பொதுவெளியில் மதிப்பிருக்காது. ஏனென்றால் அது ஒரு மிட்டாயின் சுவை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதற்கு இணையான ஒரு எளிமையான கருத்துதான். அதற்கு வலு சேர்க்கும் எந்த தர்க்கங்களும் சிந்தனையும் கிடையாது.
அடுத்தது புறநிலை ரசனைக்கு வருவோம். அகநிலை ரசனைக்கும் புறநிலை ரசனைக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடு – ‘எனக்கு பிடிச்சுருக்கு/எனக்கு பிடிக்கல’ என்பதற்கு நீங்கள் எந்த தர்க்க நியாயமும் வழங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ‘இது நல்லாருக்கு/இது நல்லாயில்ல’ என்பதற்கு நீங்கள் தர்க்க நியாயங்கள் வழங்க வேண்டும். புறநிலை ரசனைக்கும் தர்க்க நியாயங்கள் வழங்க வேண்டாம் என்ற நிலைப்பாடு என்னளவில் பொறுப்பில்லாத தனம்.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு ஒரு படைப்பு ஏன் பிடித்தது அல்ல பிடிக்காமல் போனது என்பதை நீங்கள் நிறுவ வேண்டிய அவசியமில்லை. அதையும் மீறி நிறுவுவது உங்கள் விருப்பம். ஏனென்றால் பல்வேறு காரணங்களுக்காக (படைப்போடு உங்களுக்கு ஏற்படும் தொடர்பு, பார்க்கும் நேரத்தில் உங்களுடைய மனநிலை, அதுவரையிலான உங்கள் அனுபவங்கள் etc.) ஒரு படைப்பு உங்களுக்குப் பிடிக்கலாம் அல்ல பிடிக்காமல் போகலாம். அதேபோல் பல்வேறு காரணங்களுக்காக பிறிதொருவருக்கு அதே படைப்பு பிடிக்காமல் போகலாம் அல்ல பிடிக்கலாம்.

ஆனால் நீங்கள் ஒரு படைப்பை நன்றாக இருக்கிறது அல்ல நன்றாக இல்லை என்று சொல்வது தன்னிலை வாதம் என்பதைத்தாண்டி, அதற்கு ஒரு பொதுத்தன்மையைக் கொடுக்கிறது. அப்படியான ஒன்றை நீங்கள் மற்றவர்களிடம் முன்வைக்கும்போது, அந்த நிலைப்பாட்டுடன் கூடவே நீங்கள் அதைத் தர்க்க நியாயங்களுடன் நிறுவ வேண்டும்.
நிறுவ வேண்டும் என்று சொல்லியாகிவிட்டது. ஆனால் எப்படி நிறுவுவது? ஒன்றைப்பற்றி நாம் சில வாதங்களை முன்வைக்க வேண்டுமென்றால் நமக்கு அதைப்பற்றித் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? இப்போது நாம் மற்ற கலைகளை விடுத்து சினிமாவை மட்டும் எடுத்துக்கொள்வோம். சினிமாவை நமக்கு உண்மையிலேயே தெரியுமா? தெரியுமென்றால் எந்தளவு தெரியும்?

-தொடரும்