சொர்க்கத்தின் நாட்கள் Days of Heaven (1978)

ஒரு திரை இயக்குனரை நாம் அவரது படைப்புகளின் வழியே அறிந்து கொள்கிறோம். அவரது எண்ணங்களை, கருத்தியலை அவர் தனது படைப்பெனும் ஊடகத்தின் வழியே பார்வையாளராகிய நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார். வேறெந்த அமெரிக்க இயக்குனரையும் விட டெரன்ஸ் மாலிக்-இன் (Terrence Malick) திரைப்பயணம் யாரையும் ஆச்சரியப்பட வைக்கத்தக்கது. நாற்பது நீண்ட ஆண்டுகள். ஏழே படைப்புகள்; ஒரு குறும்படம் உள்பட. 1943 இல் அமெரிக்காவின் இலினோயிஸ் மாகாணத்தில் பிறந்த மாலிக் முப்பதாவது வயதில் தனது முதல் படத்தை [ Badlands (1973)] இயக்கினார். அவர் அடிப்படையில் ஒரு தத்துவத் துறை மாணவர். ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர், பிறகு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் முனைவர் பட்ட ஆய்வை துவங்கினார். இருப்பினும் தனது வழிகாட்டியியோடு (Guide) ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாதியிலேயே வெளியேறினார். பின்னர் அவர் புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் தத்துவத் துறை பேராசிரியராகவும், சுதந்திர பத்திரிக்கையாளராகவும் (Freelance journalist) பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது திரை ஆக்கங்களின் எண்ணிக்கையையும், அதற்கு அவர் எடுத்து கொண்ட காலத்தையும் பார்க்கும் போது நமக்கு மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருட்டிணனின் நினைவு நிழலாடுவடது யதார்த்தமே. இவர்கள் இருவரும் ஏறத்தாழ சமகாலத்தில் திரைத்துறைக்கு வந்து, மிக சில படைப்புகளை அதிக இடைவெளிகளில் படைத்திருப்பினும் மிகச் சிறந்த திரை ஆளுமைகளாக அறியபடுபவர்கள். இருப்பினும் இவர்களின் படைப்புகளை வேறெந்த விதத்திலும் ஒப்பிட முடியாது என்பதும் உண்மை.

மாலிக்கின் முதல் திரைப்படமான Badlands குற்றப் பிண்ணனியில் எடுக்கப்பட்ட திரைப்படம். உட்பொருளில் அடர்வு அதிகமில்லாத போதிலும் அப்படம் எடுக்கப்பட்ட விதத்தால் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த படைப்பானது. தனது முதல் முழுநீள திரைப்படத்திலேயே காட்சிமொழியில் தனக்கிருந்த ஆளுமையை வெளிக்காட்டினார். இவரது இரண்டாவது படைப்பான Days of Heaven (1978) இன்றளவும் நினைவுகூறத்தக்க ஒரு படைப்பாக விளங்குகிறது. இப்படத்திற்கு பிறகு அவர் மிக நீண்ட இருபது வருட இடைவேளைக்குப் பிறகே தந்து மூன்றாவது திரைப்படத்தை- The Thin Red Line (1998)- இயக்கினார்.

வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு பத்தொன்பதாம் அல்லது துவக்க இருபதாம் நூற்றாண்டு ஆங்கில செவ்வியல் நாவலின் சாயலை கொண்டது Days of Heaven. அந்த காலகட்டத்திய நாவலை வாசிப்பதன் அனுபவத்தையே திரையில் இப்படம் ஏறத்தாழ தருகின்றது எனலாம். 1916 இல், முதல் யுத்த காலகட்டத்தில், அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் நிகழ்வதான கதைக்களம். பில் கோபக்கார இளைஞன். உடல் உழைப்பாளி. கதையின் முதல் காட்சியே தொழிற்சாலையில் அவன் தனது மேற்பார்வையாளரோடு ஏற்படும் தகராறில் அவரை அடித்து விட்டு ஓடி விடுவதை காண்கிறோம். வேலையை இதனால் பறிகொடுத்த அவன் தனது பதின்ம வயது தங்கையோடும், தனது காதலி ஆபியையும் உடன் அழைத்துக் கொண்டு டெக்ஸஸின் பான்ஹாண்டில் பகுதிக்கு பிழைப்புத் தேடி செல்கிற ஒரு கூலித் தொழிலாளர்கள் கூட்டத்தோடு சேர்ந்து கொள்கிறான். புதிய இடத்தில் அறிமுகமில்லாத மனிதர்களைடையே பிரச்சனைகளோ, சந்தேகங்களோ வராதவாறு ஆபியையும் தனது தங்கை என்றே கூறிக் கொள்கிறான்.

அவர்கள் அங்கு ஒரு பெரும் நிலக்கிழாரின் கோதுமை வயல்களில் பணியமர்த்தபடுகிறார்கள். விடியல் முதல் அந்தி வரை ஓயாத உழைப்பு. கதையை பார்வையாளருக்கு பில்லின் பதின்ம வயது தங்கை தான் சொல்கிறாள்.
பணக்கார பெருவிவசாயியான அவரது கோதுமை நிலத்தில் தான் பில்லும் ஆபியும் வேலை செய்கின்றனர். அவ்விவசாயியோ கூச்ச சுபாவம் உடையவராகவும், நோய்வாய்பட்டவராகவும் இருக்கிறார். வேலையை மேற்பர்வையிட வரும் பொழுது, ஆபியை பார்க்கிறார். அவளது எளிமையும், நளினமும், கருத்த கூந்தலும் அவரை வசீகரிக்கின்றன. அவனுக்கும் முதலாளிக்கு - தனது தங்கை என சொல்லிக் கொண்டிருக்கும் - காதலி ஆபியின் மீதிருக்கும் பிரியம் தெரியாமலில்லை.
சக தொழிலாளிகள் பில் ஆபியுடன் நெருக்கமாக பழகுவதை கிண்டல் செய்வதை பொறுக்க முடியாதவனாக அவர்களுடன் சண்டையிடுகிறான். ஒரு தருணத்தில் பண்ணைக்கு முதலாளியை சந்திக்க வரும் மருத்துவரின் வாகனத்தில் இருக்கும் சில மருத்துகளை திருட வருகையில், அவர்கள் பேசிக் கொள்வதை அவன் கேட்க நேர்கிறது. அப்போதுதான் முதலாளியின் வாழ்க்கையை நோய் தின்று கொண்டிருக்கிறது எனும் செய்தியை அறிய வருகிறான். அதிக நாட்கள் அவர் வாழ்வதற்குண்டான சாத்தியம் குறைவே என்றும் அவனுக்கு புரிகிறது. இதற்குப் பிறகு அவனது மனகணக்கு வேறு மாதிரியாகிறது.

பில்லின் வாழ்நாட்கள் அனைத்தும் ஏழ்மையின் துயரத்தாலும், வேதனையாலும் நிரம்பியவை. பணத்தின் மதிப்பையும் அதன் தேவையையும் வறியவனன்றி வேறெவரும் உணர்வுப்பூர்வமாக அறிந்திருக்க முடியாது. வாழ்க்கை முழுவதும் தனது உழைப்பைக் கொட்டி ஈட்டும் சொற்ப பணம் அவனுக்கும் அவனது தங்கைக்கும் பசியைப் போக்குவதற்கே சரியாய் போகிறது. இப்போதும் சிகாகோ நகரத்தினின்று இடம் பெயர்ந்து, மிகுதியான உடல் உழைப்பை கோரும் இந்த வயல்களில் கூலித் தொழிலாளியாக தன்னை வருத்திக் கொள்வது கூட வயிற்றுக்காகத்தான். பணத்தின் மீதான அவனது மோகம் தேவைகளினின்று தொடங்கியதாக இருக்கிறது. தான் மோகிக்கும் செல்வத்தை அடைய, முதலாளிக்கு ஆபியின் மீதான பிரியத்தை தக்க முறையில் கையாள்வதை ஒரு எளிமையான வழியாகப் பார்க்கிறான் பில்.

அறுவடை முடியும் தருணம் நெருங்கிட, முதலாளி ஆபியை சந்தித்து அவளோடு பேச முற்படுகிறான். மறைமுகமாக தனது காதலை அவளிடம் தெரிவிக்கிறான். மேலும் அவளை அங்கேயே தங்குவது குறித்து யோசிக்குமாறும் வேண்டிக் கொள்கிறான். அவளுக்கும் அவரது எண்ணம் புரியாமலில்லை. ஏற்கனவே தனக்கு காதலன் இருப்பதால் ஏற்படும் இயல்பான தர்மசங்கடத்திற்கு அவள் ஆளாகிறாள். இது தெரிய வரும் பில் என்ன நினைத்துக் கொள்வானோ எனும் அவளது எண்ண ஓட்டத்திற்கு நேர்மாறாக, அவனே அவளிடம் முதலாளியின் காதலை ஏற்குமாறு அறிவுறுத்துகிறான். எப்படியும், தனது வாழ்நாட்களை மாதங்களிலோ, நாட்களிலோ எண்ணிக் கொண்டிருங்கும் தங்களது முதலாளி இறந்து விடுவார். ஆபி அவருக்கு மனைவியாகிற பட்சத்தில் சட்டப்படி அவரது மரணத்திற்கு பிறகு அவரது பெரும் சொத்து இவளுக்கு உரிமையாகும். அதன் பின்னர் உண்மையான காதலர்களான தாங்கள் அந்த வாய்ப்பு வசதிகளுடன், தங்கள் கனவுகளில் மட்டுமே வாழ முடிகிற ஒரு வாழ்க்கையை நிசத்திலும் வாழலாம் என்பது பில்லின் திட்டமாக இருக்கிறது. துவக்கத்தில் இதற்கு ஆபி மறுத்தாலும் அவனது அன்பினை முன்வைத்து அவன் அவளுக்கு கொடுக்கும் நிர்பந்ததத்தின் பேரிலேயே அதற்கு சம்மதிக்கிறாள்.

முதலாளியிடம் தனது சம்மதத்தை தெரிவிக்கும் அவள் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் முன்வைக்கிறாள். அது தனது சகோதரனும், இளைய சகோதரியும் தன்னோடே திருமணத்திற்கு பிறகும் நிரந்தரமாக உடனிருக்க வேண்டும் என்பதே. அவள் மீது கொண்ட அதீத காதலால் எதற்கும் தான் சம்மதிப்பதாய் அவர் சொல்ல, திருமணம் இனிதே நடந்தேறுகிறது.
மணமான சில நாட்களிலேயே தனது கணவனின் பேரன்பை அவள் உணர்கிறாள். இடையே காதலன் பில்லுடனான அவளது ரகசிய சந்திப்புக்களும் தொடர்ந்த படியே இருக்கிறது. ஆனால் மெல்ல தன்னையுமறியாமல் கணவனின் மேல் அவளுக்கு காதல் அரும்புகிறது. கணவனுக்கோ தனது மனைவி ஆபி, பில்லிடம் நடந்து கொள்ளும் விதம் ஒரு சகோதரனுடன் பழகுவது போல் அல்லாமல் இருப்பது குறித்த மனசஞ்சலம் தொடர்ந்து இருக்கிறது. அதே வேளையில் பில் உணர்வுப்பூர்வமாக தன்னை விட்டு விலகி செல்வதாக உணர்கிறான். ஒரு காதல் கதை இவ்விடம் தொட்டு ஒரு முக்கோண காதல் கதையாக உருக்கொள்கிறது. மூன்று உயிர்கள் காதலெனும் பெருங்காற்றில் அலைக்களிக்கப்படும் திக்கற்ற சருகுகள் போலாகின்றனர்.

மனிதனின் கணக்கு எப்போதும் இயற்கையின் கணக்கிற்குப் பொருந்திப் போவதில்லை. பில் ஊகித்தது போல கணவனின் உடல் நிலை மோசமாகவில்லை. மாறாக சிறிது முன்னேற்றம் கண்டதைப் போல காணப்படுகிறது. ஒரு வேளை அன்பிற்காக ஏங்கிக் கிடந்த அவனது வாழ்வில் மனைவின் அன்பு ஆற்றுப்படுத்துவதாக இருந்திருக்கலாம். பில்லிற்கு தனது கணக்கு தப்பிதமான வெறுப்பு ஒரு பக்கம். தனது காதலி இப்போது கணவனிடம் மனதளவில் காட்டும் நெருக்கத்தை கண்டும் ஒன்றும் செய்ய இயலாத விரக்தி மறுபக்கம். ஒரு கட்டத்தில் ஆபியை அவளது கணவன் ஒரு அண்ணனிடம் இப்படியா நடந்து கொள்வது என கடிந்து கொள்கிறான். இது ஆபியின் மனதில் பெரும் மனப்போராட்டத்தையும், அகநெருக்கடியையும் தருகிறது. இதனை அறிய வருகிற பில் அவர்களிடமிருந்து, பயணத்தை சாக்காக வைத்து, விலகிச் செல்கிறான். தனது கணவனொடு ஒரு ஆதமார்த்தமான வாழ்க்கையை துவங்குகிறாள் ஆபி.

மறு வருட அறுவடை காலத்தில் திரும்பி வருகிறான் பில். இம்முறை அவர்களின் உண்மையான உறவு வெட்ட வெளிச்சமாகிறது. அவர்கள் கற்பித உறவுச் சாயம் வெளுத்ததும், ஏககாலத்தில் மூவரும் சங்கடத்தை உணர்கிறார்கள். இதற்கிடையில், அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலத்தில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பெரும் சேதத்தை விளைவிக்க துவங்குகின்றன. அவைகளை விரட்டும் முயற்சியில் அனைவரும் இணைந்து செயல்படும் வேளையில், அதுவரை பொறுமை காத்து வந்த முதலாளி தனது வெறுப்பை நேரடியாக பில் மீது காட்டுகிறான். துரோகத்தின் வலி அவன் மீது இருளாய் கவிகின்றது. தன்னிலை மறந்து, தன் இயல்பை துறந்து பில்லை தாக்க முயல்கிறான். இத்தனையும் வெட்டுகிளிகள் துவம்சம் செய்யும் வயல்வெளியிலேயே அரங்கேறுகிறது. கட்டுக்கடங்காத கோபத்தில் தனது வயலை தானே தீயிட்டுக் கொளுத்துகிறான். மறுநாள் மீண்டும் அவனுக்கும் பில்லிற்கும் நடக்கும் சண்டையில் அவனை பில் குத்திக் கொல்கிறான். கோபம் வடிந்தவுடன், பயம் அவனை பீடிக்கிறது. தனது தங்கையையும், ஆபியையும் உடனழைத்துக் கொண்டு பண்ணை வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனை தேடிப் பின்தொடரும் காவலர்கள் அவனை சுற்றி வளைக்கையில் தப்பிக்க முற்படும் அவனை சுட்டுக் கொள்கின்றனர். காலம் கடந்து எல்லா காயங்களையும் வடுக்களாக்குகிறது. நினைவுகளை நீர்த்துப் போகச் செய்கிறது. கணவனின் செல்வம் சட்டப்படி ஆபிக்கு வருகின்றது. அவள் லிண்டாவை ஒரு விடுதியில் சேர்த்து படிக்க வைக்கிறாள். அவளோ தனது புதிய தோழி ஒருத்தியொடு அங்கிருந்து வெளியேறி மனம் போன பாதியில் நடப்பதோடு படம் நிறைவுறுகிறது.

கதையின் எந்த ஒரு கட்டத்திலும், அறங்கள் போதிக்கப்படுவதில்லை. இல்லாமைக்கும் இருப்பிற்கும் இடையெயான வேறுபட்ட உலகின் மனிதர்கள் சந்தர்ப்பத்தால் இணைகிற நிகழ்வையும் அதன் தொடர் விளைவுகளையும் முன்வைக்கிறது இப்படம். இருப்பதை விட்டு இல்லாத ஒன்றிற்காக அலைபாயும் மனித இயல்பை பாசாங்கின்றி அதன் யாதார்த்தங்களோடு எடுத்துக் காட்டுகிறது கதை களம். இருக்கும் பெருஞ்செல்வத்தை விட்டு விட்டு தனக்கு கிடைக்காத அன்பிற்காக ஏங்கும் பெருவிவசாயியின் கதாபாத்திரமும், அருகிருக்கும் தனக்கேயான அன்பை தனக்கு கிடைக்காத சுகபோகத்திற்காக பணயம் வைக்கத் துணியும் பில்லின் கதாபாத்திரமும் இருதுருவங்களான மனித மனோபாவத்த்தின் மாதிரிகளாய் இருக்கின்றனர். கதையில் கதாநாயக கட்டமைப்பு ஏதும் கிடையாது. வறுமையை மட்டுமே வாழ்வில் ருசித்த ஒருவனின், விழுமியங்களற்ற, வசதிக்காக எதையும் இழக்கும் சமரசங்களுக்கு தயாராக இருக்கும் ஒரு மனிதனை அதே குண இயல்போடு முன்வைக்கிறது படைப்பு.
படம் வெளியான காலத்தில் படத்தின் ஆக்கம் வெகுவாகப் பாரட்டப்பட்டாலும் விமர்சகர்களிடையே கதையும் காட்சியமைப்புகளும் வலுவின்றி இருப்பதாகவும், கதையோட்டத்திற்கு அழுத்தம் சேர்க்காத வகையில் காட்சிக் கோர்வைகள் இருப்பதாகவும் ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. முதலில் படத்தை பார்க்கும் யாருக்கும் இந்த எண்ணம் ஏற்படுவது தவிர்க்க முடியாததே. இருப்பினும் புகழ்பெற்ற திரை விமர்சகர் ரோஜர் எப்பர்ட் (Roger Ebert) இப்பிரதி குறித்த தனது விமர்சனத்தில் ஒரு முக்கியமான பார்வையை முன்வைக்கிறார். இந்தப் பார்வை ஏனைய திரைப் பார்வைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. திரைக்கதையொட்டத்தினை நாம் தர்க்க ரீதியாக புரிந்து கொண்டு கதையை பின் தொடர இது மிகவும் உபயோகமானதாக இருக்கிறது.

அனைவரும் சொல்வது போன்ற அனுபவத்தையே இப்படம் முதன் முறை பார்க்கும் போது தந்ததாகவும், இருப்பினும் மறுபார்வையில், கதையானது பில்லின் தங்கை லிண்டாவினால் விவரிக்கப்படுவது மட்டுமல்லாமல், மொத்த கதையே அவளது பார்வையின் வழியாக தான் முன்வைக்கப் படுகிறது என்றும் தனது பார்வையை முன்வைத்தார்.அவளது வயதுக்கேயுரிய மனமுதிர்வின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நிகழ்வையும், அவளை சுற்றியிருந்த மனிதர்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் சிக்கல்களையும் அணுகுகிறாள். காதலர்களுக்கிடையேயோ, கணவன் மனைவிக்கு இடையேயோ பாலுறவுக் தருணங்கள் ஏதுவுமே காட்சிப்படுத்தப்படவில்லை என்பதை இந்த பார்வையோடு நாம் பொருத்திப் பார்ப்பது அவசியமானதாகும். மேலும் போகிற போக்கில் அவள் உதிர்க்கும் வார்த்தைகள் அவள் முக்கியத்துவமளிக்கும் அவளது பதின் பருவ உலகினை சார்த்தவைகளாகவே இருக்கின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

படத்தில் ஒளிப்பதிவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மனத்திரையில் உருக்கொண்ட பிம்பங்கள் திரையில் சாத்தியப்படுத்த கடும் உழைப்பு அவசியமானது. மாலிக் ஒளிப்பதிவாளர் நெஸ்டர் அல்மென்ரோசுடன் (Nestor Almendros) கைகோர்த்தார். படிப்பிடிப்பு காற்று தூர்க்கும் நிலவெளியில் இரண்டு நீண்ட ஆண்டுகள் நடைபெற்றது. ஹாலிவுட் பாணி சம்பிரதாய ஒளிப்பதிவு முறைக்கு முற்றிலும் மாறாக இயற்கை ஒளியிலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் அந்தி பொழுதில் மட்டுமே அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தின் அநேக சட்டகங்களில் பட்டுத் தெரிக்கும் தங்க ஒளிக்கீற்றுகள் இந்த மாயப் பொழுதில் (Magic Hour) படமாக்கப்பட்டவையே. மாலிக் மொழியை விட காட்சிகள் வழியாக கதை சொல்வதையே பெரிதும் விரும்புகிறவர். அதனாலேயே அவர் காட்சியமைப்பில், படமாக்கப்படும் விதத்தில் பெரும் கவனம் செலுத்துவார். இதே காரணத்தினால் தான் அவரது படங்களில் வசனங்கள் மிக குறைவாகவே இருக்கும். தங்கை கதாபாத்திரமான லிண்டா கதைசொல்லியாக பார்வையாளனுக்கு கதைவெளியை விரித்து காட்டுவது கூட பிற்சேர்க்கையே. தனது பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிட்ருந்த ஒளிப்பதிவாளர் அல்மென்ராஸ் பாதியிலேயெ படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத இக்கட்டு உருவான போது மற்றொரு ஒளிப்பதவாளர் ஹாஸ்கல் வெக்ஸ்லரின் உதவியை நாடினார். படத்தின் அதிக காட்சிகளை இவர் ஒளிப்பதிவு செய்திருந்த போதிலும், அவருக்கு உதவி ஒளிப்பதிவாளர் எனும் அங்கீகாரமே கிடைத்தது.

திரைப்படம் தன்னளவில் எந்த ஒரு முடிவினையும் முன்வைக்கவில்லை. திரைக்கதை எந்த அறத்தையும் வலியுறுத்தவோ, ஒழுக்க விழுமியங்களுக்கு வழிமொழியும் வேலையையோ செய்யவில்லை. அது எளிய மனிதர்களின் வாழ்க்கையை, எதிர்பார்புகளை, விருப்பங்களை, மனித நடத்தையின் சாயைகளை அவற்றின் நிறை குறைகளோடு எடுத்துக் காட்டுவதோடு நின்று விடுகிறது. வாழ்க்கையில் உறவுகளை இழப்பதென்பது தவிர்க்கவியலாதது. உறவுகளை இழந்தாலும் வாழ்க்கை நதி போல ஓடிக் கொண்டேயிருக்கிறது.