தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014 - 2 இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் ‘ஆனந்த் பட்வர்தன்’

சென்ற இதழ் தொடர்ச்சி...

தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழாவில் ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார் பேசியதன் எழுத்து வடிவம் இங்கே:

ஆனந்த் பட்வர்தனின் படங்களை பல வருடங்களாகவே தூர்தர்ஷன் மற்றும் திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பும்பொழுது தான் பார்த்திருக்கின்றோம். நானும் 35 வருடங்களாக இப்படியாகத்தான் பார்த்து வந்திருக்கின்றேன். ஆனால், ஆனந்த் பட்வர்தன் லெனின் விருது பெற்றிருக்கின்ற இந்நேரத்தில் அவரது படங்களை தமிழ்நாட்டின் பல இடங்களில் தமிழ்ஸ்டுடியோ திரையிட்டுள்ளது. மக்களிடம் படங்கள் யாவும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதுதான் ஓர் கலைஞனுக்குச் செய்யக்கூடிய உண்மையான மரியாதை. இன்றைக்கு ஆனந்த் பட்வர்தன் படங்களை தமிழக மக்கள் அநேகம் பேர் பார்த்திருக்கின்றார்கள் என்றால், அதற்கு தூர்தர்ஷனோ, மற்றவைகளோ காரணமல்ல, தமிழ்ஸ்டுடியோ தான் காரணம்.
நானும் இந்தப் படங்களை ஒருசேர மீண்டும் பார்க்கக்கூடிய வாய்ப்பாக அமைந்தது. அவருடய படங்களை ஒட்டுமொத்தமாக பார்த்ததிலிருந்து அவைகள் எல்லாம் பிரம்மாண்டமான படங்களாகத் தெரிகின்றன. இந்தியாவின் பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்தவர் என்றால் அது ”ஆனந்த் பட்வர்தன்”தான். இது பாடல் காட்சிகளில் நூறு பேர் ஆடக்கூடிய பிரம்மாண்டம் அல்ல.

ஆனந்த் பட்வர்தன் ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு அதனை மையமாக வைத்தே படம் நெடுகிலும் அலசுகிறார்.

இந்தியாவைப் பிரதிபலிக்கின்றது பட்வர்தனின் படங்கள்:

அவருடைய படங்களைப் பார்ப்பது ஒட்டு மொத்த இந்தியாவையும் பார்ப்பது போன்று. இந்தியக் குடிமக்களுக்கு இந்தியா என்பது தாஜ்மஹாலோ, ராஜஸ்தானில் ஒட்டகங்கள் அணிவகுத்து போவதோ அல்லது கேரளத்தில் படகுகள் செல்வதோ இல்லை, இவைகளெல்லாம் சுற்றுலா பயணிகளைக் கவர்பவை. இந்தியர்களுக்கு, ”இந்தியா” என்பது எப்பொழுதுமே பார்க்கக்கூடிய ஒரு மக்கள் திரள். அவருடைய படங்கள் எதுவாகயிருந்தாலும் அதில் ஏராளமான மக்கள் கூட்டம், பேரணி, தர்ணா, உண்ணாவிரதம் இப்படித்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணியைப் பற்றி நேர்காணல் எடுக்கின்றாரென்றால், அப்பெண்ணினது குழந்தை அவளருகில் ஓடிக்கொண்டிருக்கும். பின்னால் நான்கு பேர் சென்றுகொண்டிருப்பார்கள்.

பட்வர்தன் தனி மனிதர்களைப்பற்றி படம் எடுத்ததே கிடையாது. சில படங்கள் தனி மனிதர்களை ஆவணப்படுத்துவது போல ஆரம்பிக்கும், உதாரணமாக ஜெய் பீம் காம்ரேட்டில் ’விலாஷ் கோக்ரே’,வைப் பற்றித் தொடங்கியதாக இருந்தாலும், உடனே அது பரந்த தளத்திற்கு நகர்கிறது. எல்லா தலித்துகள், அரசியல், பின்னர் இந்திய சரித்திரத்திற்கே அழைத்துச்செல்கின்ற படமாக ’ஜெய் பீம் காம்ரேட்’, இருக்கின்றது.

அம்பேத்கரியத்தில் ஈடுபாடு கொண்டவருக்கு ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையில்லை:

ஒரு பிரச்சனையை மட்டுமல்லாமல், அப்பிரச்சினையை ஆதாரமாய்க்கொண்டு அதன் கிளைகளையும் காண்பிப்பது ஆனந்த் பட்வர்தனின் வழக்கம். ஒரு உதாரணம் மட்டும் சொல்கின்றேன். ”ஃபாதர் சன் அண்டு கோலி வார்” (Father, Son and Holy War, 1995), என்ற படம் மத அடிப்படை வாதத்தினைப் பற்றியது. இந்த மத அடிப்படை வாதத்தில் ஆண்களும் இருக்கின்றார்கள், பெண்களும் இருக்கின்றார்கள். ஆனால், படம் ’ஆண்மை’, என்கிற தன்மையோடு மத அடிப்படை வாதத்தினை இணைக்கின்றது. இக்கண்ணோட்டம் யாராலும் இதுவரை பார்க்கப்படவில்லை. மத அடிப்படை வாதம் என்பது மதத்தினால் ஊட்டி வளர்க்கப்படுவது. மதம் மனிதர்களுக்கு எதிரானது. ஆனால், மத அடிப்படை வாதம் என்பது ’ஆண்மை’, வயப்பட்டது என்பது இவரது படத்தில் வருகின்றது.
பெண்கள்தான் பண்டைய காலங்களில் சிறந்தவராக இருந்திருக்கின்றனர். ஆனால் எப்பொழுது ஆணின் விந்து முக்கியப்படுத்தப்படுகிறதோ, அதற்கான மகத்துவத்தை தேடித்தருகின்றனரோ, அப்பொழுதே பெண்ணடிமை உருவாகிவிடுகிறது. ஆண் இறந்த பின்பு பெண் தேவையில்லை என்றாகிறாள். இறந்த ஆணின் உடலோடு, பெண்ணையும் வைத்து எரித்திருக்கின்றனர். இப்படி மத அடிப்படைவாதம் கிளைத்துப்போகிறது.

அதேபோலத்தான் ஜெய்பீம் காம்ரேட்டிலும் கிளைக்கதைகள் நிறைய இருக்கின்றன. பட்வர்தனின் முதல் படமான ‘வேவ்ஸ் ஆஃப் ரிவல்யூஷன்’ (waves of revolution) , பின்னர் ’பிரிஷனர் ஆஃப் கான்சியன்ஸ்’ (Prisoners of Conscience, 1978), ’இன் தி நேம் ஆஃப் காட்’ (In the Name of God, 1992), ’இன் மெமரி ஆஃப் பிரண்ட்ஸ்’ (In Memory of Friends , 1990). இதில் ’இன் மெமரி ஆஃப் பிரண்ட்ஸ்’, மறுபடியும் சீக்கிய அடிப்படை வாதம் எப்படியாக தன்னுடைய அடையாளங்களை அழித்து விட்டு ஒரு மனிதனை கொண்டுவருகின்றது, என்பதைக் காட்சிப்படுத்துகிறார். பகத்சிங் 1931ல் தூக்கலிடப்பட்டார். அவரையே பின்னால் சீக்கியர்கள் தங்களது தலைவர்களாக வகுத்துக்கொள்கின்றனர். பகத்சிங்கிற்கு எவ்வித மத நம்பிக்கையும் கிடையாது. கடவுள் நம்பிக்கையும் இல்லை. சீக்கியத் தேசிய வாதத்திலும் அவருக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அவரையே தங்களுடைய தலைவராக நினைத்துக் கொள்கின்றார்கள் சீக்கிய மக்கள். இப்படியான பல்வேறு பரிமாணங்களை ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படங்கள் தொட்டுச்செல்கிறது.

தணிக்கை விதிமுறைகளும், தூர்தர்ஷன் அலைவரிசையும்:

ஆனந்த் பட்வர்தனின் படங்களைப் பார்க்கின்ற பொழுது அவர் யார்? என்பதும் தெரிகின்றது. ஆனந்த் பட்வர்தன் பொதுவுடமை வாதத்தில் நம்பிக்கையுள்ளவர். ஆனால் பொதுவுடமை அரசியல் பற்றி அவரது படங்களில் பார்க்க முடிவதில்லை. அமெரிக்காவிற்கு எதிரான வாசகங்கள் பலவும் அவருடைய படங்களில் வருகின்றது. ஆனால் சீனாவையோ, ரஷ்யாவையோ ஆதரிக்கும் எவ்வித வசனங்களையும் அவருடைய படங்களில் பார்க்கமுடிவதில்லை. அவர் ஒரு ஜனநாயகவாதி, அவருடைய தீர்வுகள் எல்லாம் காந்தியத்தில்தான் இருக்கின்றது. காந்தியத்திலும், அம்பேத்கரியத்திலும் ஈடுபாடு கொண்டவருக்கு ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையில்லை. எல்லாயிடங்களிலும் கோஷம் , உண்ணாவிரதம், இப்படிப்பட்ட மக்களைத்தான் ஆனந்த் காட்சிப்படுத்துகின்றாரே தவிர, ஆயுதப்புரட்சியினை நம்புகின்றவர்களைப் பற்றி அவருடைய படங்கள் பேசுவதில்லை.

படம் எடுப்பதிலும் ஜனநாயகத்தைப் பின்பற்றுபவர் ஆனந்த் பட்வர்தன். என்னவெனில், அவர் தன்னுடைய படங்களெல்லாம் ஜனநாயக அமைப்புள்ள ஊடகங்கள் வழியாகத்தான் வெளிவர வேண்டும் என விரும்புகிறார். அவருடைய படங்கள் எல்லாவற்றையும் சென்சார் செய்கிறார். ஆனால் சிலர், டெக்னாலஜி வளர்ந்துவிட்ட பிறகு ஆவணப்படம் எடுப்பவர்கள், இயக்குனர்கள் எல்லாம் இனியும் தணிக்கைவிதிமுறைகள் தேவையா? என்றபடியாக கேள்விகள் எழுப்பினார்கள். போராட்டங்கள் கூட நடத்தினார்கள். மாறாக ஆனந்த் பட்வர்தன் அதுமாதிரியாக செய்யவில்லை. தன்னுடைய படங்கள் சென்சார் செய்யப்படவேண்டும் என்கிறார்.

பின்னணி என்னவெனில் , சென்சார் செய்யப்பட்ட படங்களைத்தான் தியேட்டர்களில் வெளியிட முடியும். தூர்தர்ஷனில் ஒளிபரப்ப முடியும். அதேநேரம் தன்னுடைய படத்தின் காட்சியை சில சென்சார் உறுப்பினர்கள் நீக்கச் சொல்கையில் அதனை எதிர்ப்பவராகவும் இருக்கின்றார். அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்கிறார். பல வருடங்கள் வழக்கு தொடர்கிறது. இத்தகைய போராட்டங்களின் பின்புதான் அவரது படங்கள் துர்தர்ஷனில் வெளியாகிறது. ஆனந்த் பட்வர்தன் படங்கள், பெரிய பெரிய சேனல்களில் ஒளிபரப்பினாலும், அவரது விருப்பம், தூர்தர்ஷனில் வெளியாக வேண்டும் என்பதே, ஏனெனில் இது அதிகாரங்கள் குவிந்திருக்கின்ற இடம்.

அந்த தூர்தர்ஷன் தன்னுடைய படங்களை ஒளிபரப்புவதன் மூலம், தன்னுடைய அக்கறைகளை அரசாங்கம் ஒத்துக்கொள்கிறது, என்பதானால்தான் தூர்தர்ஷனில் ஒளிபரப்ப கவனம் செலுத்துகிறார். மேலும் ஆனந்த் பட்வர்தன் பல விருதுகளைப் பெற்றுள்ளார். எனினும் அவரின் படங்கள் எழுப்புகின்ற வினாக்களை அங்கீகரிக்கின்ற விருதுகளையே ஏற்றுக்கொள்கிறார்.

ஆவணப்படங்களுக்கான எடிட்டர் ஆனந்த் பட்வர்தன்:

அவர் தொட்டிருக்கின்ற பிரச்சனைகளை வைத்தே பலரும் அதே போன்றதொரு படம் எடுத்தார்களாயினும் ஆனந்த் பட்வர்தனின் படங்கள் போன்று அவர்களுடையது இல்லை. கையடக்க காமிரா வைத்திருக்கின்ற ஆனந்த் பட்வர்தன், பிரச்சனைகளின் சூழலை சரியாக சட்டகத்திற்குள் கொண்டுவருகின்றார். எந்த வெளிச்சத்திலும் சம்பவங்களை காட்சிப்படுத்துகின்ற திறமை அவரிடம் உண்டு. மேலும், மிகச்சிறந்த ஆவணப்படத் தொகுப்பாளரும் ஆனந்த் பட்வர்தன் தான். மூன்றரை மணி நேரப் படமாக இருந்தாலும் அதனை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு அவருடய படத்தொகுப்பு முறையும் காரணம்.

நக்ஸலைட்டின் அம்மாவினிடத்தில் ஆனந்த் பட்வர்தன் நேர்காணல் செய்துகொண்டிருக்கின்றார். அந்த நக்ஸலைட் 15 அல்லது 16 வயதுப் பையன். அவனின் கையில் துப்பாக்கி உள்ளது. ”அவன் துப்பாக்கியை வைத்து சுட்டானா?”, என்று ஆனந்த் பட்வர்தன் அந்தப் பெண்மணியிடம் கேட்கிறார். அந்தப் பெண்மணியோ “ஆமாம்” என்பதுபோல தலையாட்டினாலும், பட்வர்தனைப் பார்த்து பேசும்பொழுது ’இல்லை’, எனச் சொல்கிறார். இதுபோன்று மூன்று, நான்கு கேள்விகளுக்குப் பின்பாக அந்தப் பெண்மணி கூறுவது என்னவெனில், ”அந்தக் கட்சி பையனின் கையில் ரிவால்வரை கொடுத்திருப்பதற்கு காரணம், அவனது தற்காப்பிற்காக”, என்று ஒத்துக்கொள்வார்.

இந்தக் காட்சி முடிந்தபின்பாக அடுத்த காட்சியில் ஒரு ஐந்து வயது சிறுவன், சைக்கிள் டயரை ஓட்டிக்கொண்டு செல்கிறான். இந்த ஐந்து வயது சிறுவனுக்கு சைக்கிள் டையர் விளையாட்டுப்பொருளாக இருப்பது போன்று, 15 வயது பையனுக்கும் துப்பாக்கி விளையாட்டுப்பொருளாக இருக்கின்றது என்பதைச் காட்சிகளின் வழியேச் சொல்கிறார் ஆனந்த். அவன் விளையாட்டுப்பையன் என்பதை பொருட்படுத்தாமல் அவனின் சமூகம் அவனிடத்தில் துப்பாக்கியைக் கொடுத்திருக்கின்றது. இந்த மாதிரியான விஷயங்களை உடனே கற்பனை செய்வது மாதிரியான படத்தொகுப்பினை ஆனந்த் பட்வர்தனின் படங்களில் பார்க்கிறோம்.

அதேபோல விஷ்வஹிந்த் பரிஷித்தினுடைய பெண் பேச்சாளர். மிகவும் ஆக்ரோஷமாகவே ஹிந்தியில் பேசுகின்றார். ”நீங்களெல்லாம் எதற்காக எதிரிகளைத் தாக்குவதற்கு புல்லட் ரவைகளை வீணடிக்கின்றீர்கள்” என்கிறார். அவர் சொன்னவுடனேயே, அதற்கான சப்டைட்டிலை ஆங்கிலத்தில் கொடுக்கிறார் பட்வர்தன். ”why do you waste your Bullets”. அடுத்தபடியாக அந்தப் பெண் தொடர்ந்து பேசுகையில், அது ஹிந்தியில் மட்டுமே வருகின்றது. அதற்கு சப்டைட்டில் கிடையாது. அந்தப் பேச்சிற்கு சப்டைட்டில் போடுவதை ஆனந்த் பட்வர்தன் உவப்பானதாக கருதவில்லை. ஏனெனில் பார்வையாளர்களை ஆனந்த் பட்வர்தன் மதிக்கின்றார். ஆனால், அந்தப் பெண்மணி என்ன பேசுகின்றார் என்பது ஹிந்தி தெரியாதவர்களுக்கும் புரிகின்றது. அந்தப் பெண் பேச்சாளர் கேட்பது, “உங்களுடைய ஆயுதம் என்னவாயிற்று?”.

இம்மாதிரியான விஷயங்களில் ஆனந்த் பட்வர்தன் கவனமாகவே செயல்படுகின்றார். மேலும் 45 வருடங்களுக்கும் மேலாக ஆவணப்படங்களை மட்டுமே எடுத்துவருகின்றார்.

இங்கு இரண்டு ஆவணப்படங்கள் எடுத்த பின்பு, ”எப்ப சார் அடுத்து படம் எடுக்க போறீங்க?”, என்று கேட்பார்கள். படம் என்றால் அவர்களுக்கு திரைப்படம் தான், ஆவணப்படங்கள் அல்ல. ஆனால், ஆனந்த் பட்வர்தனுக்குத்தான் சேகர் கபூருக்கு முன்பாகவே பண்டிட் க்யூன் (bandit queen) படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால், பெரிய படத்தினுடைய பொருளாதாரம், தயாரிப்பு இதற்கெல்லாம் தான் சரியில்லை என்று ஆனந்த் பட்வர்தனே நினைத்துக்கொண்டு,
ஆவணப்படங்களிலேயே தன்னிறைவு காண்கிறார். தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தன்னுடைய சாதனைகளின் எல்லைகளைக் கடப்பவராகவும் அவரே இருக்கின்றார்.

அடுத்த இதழில் தொடரும்...

தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 - காணொளி (Video)