திரைப்பட விழா அனுபவங்கள் : கலை – சந்தை – அரசியல்

தமிழகத்திலிருந்து நீங்கி இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழகத்தில் இருந்த வரை திரைப்பட விழாக்கள் என எதனையும் நான் கண்ணுற்றதில்லை. புதுதில்லி திரைப்பட விழா பற்றி மட்டும் கேள்வியுற்றதுண்டு. இன்று போல கேரள, தமிழக சர்வதேசத் திரைப்பட விழாக்கள் போல அன்று இருக்கவில்லை. நான் வாழ்ந்த கோவையில் புவியரசு, சுகுமாரன் போன்ற படைப்பாளிகளின் முயற்சியில் அரிதாகச் சில உலகத் திரைப்படங்கள் அவ்வப்போது திரையிடப்பட்டன. மிருணாள் சென்னின் ‘மா பூமி,’ ரஸ்யப் படமான ‘தி நைட் ஓவர் சிலி’ போன்ற படங்களை அன்று பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவர்களது ஆத்மார்த்தமான ஈடுபட்டினை நினைக்க இன்று நிஜத்தில் கண்கள் பனிக்கிறது.

ஆண்டுக்கணக்கிலாக கோவையில் இன்று கோணங்கள் திரைப்பட இயக்கத்தை நிருவகிக்கிற நண்பர்கள் ஆனந்த், சந்திரன் போன்றவர்களை நினைக்கிறபோது, திரைப்பட விமர்சன நூலுக்கான இந்திய விருதினை கோவை நண்பர் ஜீவா பெற்றபோது, கோணங்களுக்காக டேனிஷ்-ஸ்பானிஷ் திரைப்பட விழாக்களைக் கோவையில் ஒருங்கிணைத்து அறிமுகப்படுத்திய போது, கோவையின் திரை ஆர்வ முன்னோடிகளை நினைக்கப் பெருமிதமாகவும் மனம் நிறைவாகவும் இருக்கிறது. அன்று சென்னை பிலிம் கிளப் சார்பில் வெளியிடப்பட்ட நூல்கள், பிலிம் சொஸைட்டிகள் மூலம் அவ்வப்போது தமிழகத்தின் வேறு வேறு சிற்றூர்களில் அபூர்வமாகத் திரையிடப்பட்ட படங்கள்தான் அன்று திரைப்படங்களின் மேல்காதல் கொண்டவர்களுக்குள் இருந்த கனவுத் திரைப்பட விழாக்களுக்கு மறுதலையாக, தாகம் தணிக்கும் சுனைகளாக இருந்தன. பிற்பாடு அவை அறந்தை நாராயணின் கல்பனா, சலனம், நிழல், கனவு, காஞ்சனை ரீல், செவ்வகம், காட்சிப்பிழை திரை, படப்பெட்டி எனத் தீவிரத் திரை இதழ்களாக, தமிழ் ஸ்டூடியோ போன்ற இயக்கங்களாக அழுத்தமாகக் இன்று கிளைகள் பரப்பி நிற்கின்றன.

முதன் முதலாக நான் பார்த்த திரைப்பட விழா லண்டன் திரைப்பட விழாதான். 1994 ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் முழுமையாக லண்டன் திரைப்பட விழாவின் பார்வையாளனாக வாழ்ந்திருக்கிறேன். செப்டம்பர் இறுதி வாரம் துவங்கி அக்டோபர் இரண்டாம் வாரம் வரை மூன்று வாரங்கள் லண்டன் திரைப்பட விழா நடைபெறும். அந்த நாட்களை உண்மையிலேயே கொண்டாட்டம் போலவே நான் கழித்தேன். அப்போது ஒருவரால் அதிகபட்சம் இயலுமான தொகை எவ்வளவு செலவிட முடியும் எனவும், எவ்வளவு படங்கள் பார்க்க விரும்புகிறீர்கள் எனவும் ஒரு படிவம் நிரப்பி, காசோலையுடன் திரைப்பட விழா அலுவலகத்திற்கு அனுப்பி விடவேண்டும். உங்களது பட்டியலின் முன்னுரிமையை ஒட்டி அவர்கள் நுழைவுச்சீட்டுக்களை முன்பேயே உங்களுக்குத் தபாலில் அனுப்பி விடுவார்கள்.
வேலையிலிருந்து ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் விடுமுறையை அந்த நாட்களில் எடுத்துக்கொள்வேன். லண்டன் தேம்ஸ் நதியின் தென்கரையின் மீது அமைந்திருக்கிற பிரிட்டிஸ் பிலிம் இன்ஸ்டிட்யூட் நிர்வகிக்கும் நேசனல் பிலிம் தியெட்டரின் மூன்று திரையரங்குகள், லண்டன் லெஸ்ட்டர் ஸ்கொயரில் இருக்கும் இரு திரையரங்குகள், இன்ஸ்டிட்யூட் ஆப் கன்டம்பரெரி ஆர்ட்ஸ் அரங்கில் இருக்கும் இரு தியைரங்குகள் என மொத்தமாக ஆறு திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளாகத் திரைப்படங்கள் அந்த நாட்களில் திரையிடப்படும், பல நாட்கள் ஐந்து காட்சிகளும் பார்த்ததுண்டு. உடல் மிகவும் சோர்ந்து போகும் நாட்களில் மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, நான்கு தவறினால் மூன்று படங்கள் பார்த்ததுண்டு. அப்போது நான் லண்டன் நகரத்தினுள் வாழ்ந்து கொண்டிருந்தேன். அரைமணி நேர சுரங்க ரயில் பயணத்தினுள் திரைப்பட விழாவை அணுகி, அதே அரை மணி நேரத்தில் மறுபடி வீடு வந்து சேரலாம். நள்ளிரவு ஒரு மணி வரையிலும் சுரங்க ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கும்.

உன்மத்தம் பிடித்த ஒரு காதலனின் மன நிலை அல்லது ஒரு தீவிர ஓஷோ விசுவாசியின் தவமனம் போன்று எனக்கு வாய்த்திருந்தது. வீட்டுக்கு பக்கத்திலேயே நள்ளிரவுக்குக் கொஞ்சம் முன்பு வரை திறந்திருக்கும் மதுக்கடை ஒன்று இருந்தது. தமிழகததின் கையேந்தி பவுன்கள் மாதிரி லண்டன் நகரெங்கும் துருக்கியர்களால் நடத்தப்படும் கோழி இறைச்சியும் கிழங்குப் பொறியலும் விற்கும் கடைகள் இருந்தன. இந்திய-இலங்கை உணவகங்கள் இருந்தன. அநேகமாக பகல் வெளிச்சத்தைப் பார்க்கவே விரும்பியிராத மனோரதியமான நாட்கள் அவை. கைநிறையக் காசு. நான்கு வாரங்களுக்கு வேலைக்குப் போகத் தேவையில்லை. நினைத்தபடி நினைத்த இடத்தில் சாப்பிடலாம். சாப்பிடாமல் ராவாக ஆப் அடித்தபடி அம்மணமாகத் தூங்கலாம். அடிக்கடி குளிக்க வேண்டும் எனும் அவசியமில்லை. அராஜகவாத சுகம் என்பது இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

நான் முன்னுரிமை கொடுத்துத் தேர்ந்தெடுத்துப் பார்த்த படங்கள் இலத்தீனமெரிக்கப் படங்கள். அடுத்ததாக மிக அபூர்வமாகவே காணக்கிடைக்கும் ஆப்ரிக்கப்படங்கள். ஐரோப்பியப் படங்களில், குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய மற்றும் பிரெஞ்சு, டேனிஷ் படங்கள். தென் ஆசியப் படங்களில் மிகச்சில படங்களையே தேர்வுசெய்ய முடிந்தது. ஷீலா வைடேக்கர் அப்போது திரைப்பட விழா நிர்வாகியாக இருந்தார். இடதுசாரித் தாராளவாதியான அவரது திரைப்படத் தேர்வுகளில் அவரது அரசியல் சார்பை எவரும் அவதானிக்க முடியும். அடூர் கோபால கிருஷ்ணன், கிரிஷ் கர்னாட், கோவிந்த் நிலானி, ஸியாம் பெனிகல், அனந்த் பட்டவர்த்தன், ஸபானா ஆஸ்மி போன்றவர்களைச் சந்தித்து அவர்களது படங்கள் பற்றி உரையாட முடிந்தது.
உலக சினிமாவில் நான் மிக மதிக்கிற கென்லொச், சொலானஸ், செம்பேன் ஒஸ்மான், யூசுப் செயின் போன்ற மாபெரும் மேதைகளைக் கழிப்பறையின் முன்நின்று சந்தித்து அளவளாவ முடியும். திரைப்பட விழா பார்க்கத் துவங்கிய ஏழெட்டு ஆண்டுகள் வரையிலும் விழா என்பது ஒரு கலாச்சார நிகழ்வாகவும், உரையாடல் களமாகவும், மாற்று அரசியல் சிந்தனையாளர்களும் ஆளுமைகளும் சந்திக்கும் வெளியாகவுமே இருந்ததை நான் அவதானித்து வந்தேன். உலக சினிமாவில் கொண்டாடப்பட்ட தொண்ணூற்று ஒன்பது சதவீதமான இயக்குனர்கள் மார்க்சியர்களாகவும், மூன்றாம் உலகினதும் ஐரோப்பிய இடதுசாரி மரபின் கலைஞர்களாக இருந்ததையும் என்னால் கண்டுணற முடிந்தது. திரைப்பட விழாவின் தேர்வுகளையும் நடைமுறையையும் இலக்குகளையும் தீர்மானிப்பவர்களாக இடதுசாரிக் கலைஞர்களும் ஆளுமைகளுமே இருந்து வந்தார்கள்.

திரைப்பட விழாக்களுக்குச் சென்று வந்த காலங்களில் திரைப்படக் கலாச்சாரத்தில் உருவாகிய பிறிதொரு வளர்ச்சியும் என்னால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அமெரிக்கச் சந்தைச் சினிமாவை மறுத்த, ஐரோப்பிய கலக மரபை முன்னிறுத்திய, மூன்றாம் உலக, சிறுபான்மையின் சமூகங்களின் சினிமாக்களே நுழைவுச் சீட்டுக்கள் விற்றுத் தீர்ந்த திரைப்படங்களாக இருந்ததனையடுத்து, இந்த வகை சினிமாக்களுக்கு எனவே தனித்த திரைப்பட விழாக்கள் தோன்றின. லண்டனில் இயங்கி வந்த கர்ஸான், பார்பிகன் ஆர்ட்ஸ் கேலரி போன்ற சுயாதீனத் திரைப்பட அரங்குகளை முன்னிலைப்படுத்தி இலத்தீனமெரிக்கத் திரைப்பட விழா, ஆப்ரிக்கத் திரைப்பட விழா, பாலஸ்தீனத் திரைப்பட விழா, ஈரானியத் திரைப்பட விழா, சமப்பாலுறவுத் திரைப்பட விழா, தென் ஆசியத் திரைப்பட விழா போன்று திரைப்படவிழாக்கள் அங்கங்கு எழுந்தன. இப்போது எனது அக்கறைகள் லண்டன் திரைப்பட விழா என்பதிலிருந்து அகன்று இத்தகைய திரைப்பட விழாக்களை நாடிச் சென்றது.

லண்டன் திரைப்பட விழாவிலும் இப்போது மாற்றங்கள் நேர்ந்தது, பிரதானமாகக் கலாச்சார நிகழ்வாக, சந்தை அம்சங்கள் குறைந்திருந்த லண்டன் திரைப்பட விழா மெல்ல மெல்லச் சந்தைப் படுத்தல் அம்சங்கள் மேலோங்கிய, படைப்பு சார்ந்த கலை அம்சங்கள் குன்றியதாக ஆகிக்கொண்டு வந்தது. திரையிடலுக்கான படத்தேர்வுகளிலும் மூன்றாம் உலக நாடுகளின் படங்கள், ஐரோப்பியக் கலக அம்சங்கள் சார்ந்த படங்கள் குறைந்து போக, அந்த இடத்தினை அமெரிக்க சந்தைச் சினிமா படங்கள் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தன. ஆத்மார்த்தமான கலைப் பண்புகள் கொண்ட கடப்பாடுள்ள திரைப்படங்களுக்கு மாற்றாக தொழில்நுட்ப ரீதியில் கச்சிதம் கொண்ட, வாழ்வு மற்றும் கலை எனும் உறவு சார்ந்து நீர்த்துப்போன, மேற்போக்கான தன்மைகள் கொண்ட படங்கள் இப்போது திரைப்பட விழாக்களில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கின.

காலச்சார நிகழ்வாக இருந்த திரைப்பட விழாக்கள் மெல்ல மெல்ல விநியோக வாய்ப்பை உருவாக்கும் சந்தைக் களமாக, தொழில்நுட்ப உபகரணங்கள் விற்கும் கண்காட்சியாக மாறிவந்து கொண்டிருந்தது. அடூர் கோபால கிருஷ்ணன், ஸியாம் பெனிகல், புத்ததேவ்தாஸ் குப்தா போன்றவர்களுக்கு மாற்றாக மணிரத்னம், சந்தோஷ் சிவன், ராஜீவ் மேனன் போன்றவர்கள் உலக அளவில் இந்தியச் சினிமாவைப் பிரதிநிதித்துவப்படுத்த நேர்ந்த காலம் இது. ஐந்து ஆண்டுகளாக லண்டன் திரைப்பட விழாவுக்குப் போவது என்பதனை ஒரு கொண்டாட்டமாக நான் நிறுத்திக் கொண்டிருந்த காலமாக ஆகிப் போனது. என்னளவில் லண்டன் திரைப்பட விழாவுக்குப் போகாததனால் எந்த இழப்பினையும் நான் அடைந்ததாக உணரவில்லை.

காரணங்கள் பற்பல. ஐரோப்பாவின் சில நாடுகளில் மட்டும் செயல்படுகிற லவ் பிலிம் எனும் அமைப்பில் நான் உறுப்பினராக இணைந்திருக்கிறேன். மாதம் 16 பிரித்தானியப் பவுண்கள் செலுத்தினால், ஒரே நேரத்தில் மூன்று டிவிடிக்களை அவர்களே தபால் செலவு செலுத்தி உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். நீங்கள் படம் பார்த்துவிட்டு நிறுவனத்தால் முன்பணம் செலுத்தப்பட்ட தபால் சேவையில் திருப்பி அனுப்பினால் அவை சென்று சேர்ந்த அடுத்த நாளில் உடனடியில் மறுபடி மூன்று படங்கள் உங்களுக்கு அனுப்புவார்கள். இப்படி உங்களால் முடிந்தால் மாதம் 20 படங்கள் வரை பார்க்கலாம். 70,000 படங்களிலிருந்து உங்கள் விருப்பமான படங்களைத் தேர்ந்தெடுக்கலாம். கென்லோச்சிலிருந்து தியோ ஆஞ்சல பெலோஸ் வரை, பாலிவுட் மசாலாவிலிருந்து ஹார்ட்கோர் போர்னோகிராபி வரை விரும்பிய படங்களை விரும்பிய நேரத்தில் பார்க்கும் விதத்தில், படம் வெளியாகி இரண்டு மூன்று வாரங்களில் டிவிடி உங்களது வீட்டுத் தபாலில் வந்து விழும். இரண்டாவதாக, நான் வாழும் சிற்றூரில் திரைப்பட ஆர்வலர்கள் சேர்ந்து நடத்துகிற திரைப்படச் சங்கமொன்று மது விடுதியோடு சேர்ந்து மாதம் ஒரு முறை முக்கியமான படங்களைத் திரையிட்டு விவாதங்கள் நடத்துகிறது. முன்னர் நாடகங்களை மட்டுமே நடத்தி வந்த ஒரு கலை அரங்கு இப்போது புதிதாக வரும் கலைப்படங்களை வாரம்தோறும் இரு காட்சிகள் மட்டுமே திரையிடுகிறது. ஆகவே இப்போது குறிப்பபாக பாலஸ்தீனத் திரைப்பட விழா அல்லது கிழக்கு ஐரோப்பியத் திரைப்பட விழா தவிர நான் லண்டன் திரைப்பட விழாவுக்குத் துப்புரவாகவே செல்வதை நிறுத்திவிட்டேன்.


படம் பார்க்கும் கலாச்சாரத்தில் நேர்ந்த மாற்றங்களுக்கு அப்பால், கலாச்சாரக் கொண்டாட்டமாகவும், உரையாடல் களமாகவும், மாற்று அரசியல் சந்திப்பாகவும், ஆளுமைகளைச் சந்தித்து உரையாடும் நிகழ்வாகவும் இருந்த திரைப்பட விழாக்கள், இன்று சினிமா சந்தையாகவும், விநியோக விற்பனை நிகழ்வாகவும், ஹாலிவுட் பாலிவுட் கனவுக்கூடாரமாகவும் ஆகி வருவதால், திரைப்படம் பார்ப்பதையும் அதன் தொடர் நிகழ்வுகளையும் தியானம்போல அனுபவித்து வந்த எனக்கு இப்போது நகல்போலி நிகழ்வாகிப்போன திரைப்பட விழாக்களிலிருந்து விலகி நிற்கத்தோன்றுகிறது.

பாரம்பர்யமான, பிரம்மாண்டமான, என் அனுபவத்திலான லண்டன் திரைப்பட விழாவுக்கு நேர்ந்த மாற்றம் தனித்ததொரு நிகழ்வு என நான் கருதவில்லை. உலகின் திரைப்படக் காதலர்களாலும், திரை விமர்சகர்களாலும், மதிப்புவாய்ந்த இயக்குனர்களாலும் கொண்டாடப்பட்டு வந்த பிரான்ஸ் கேன் திரைப்பட விழாவுக்கும் இதுதான் நேர்ந்திருக்கிறது. ஐரோப்பியப் பட விழாக்களான ஜெர்மன், எடின்பர்க், ரோட்டர்டாம், கிழக்கு ஐரோப்பியப் பட விழாவான கார்லோ விவாரி, ஆப்ரிக்கப்பட விழாவான பர்கினோ பாஸோ, இலத்தீனமெரிக்கப் பட விழாவான பிரேசில் திரைப்பட விழா, ரோபர்ட் ரெட்போர்ட் தலைமையேற்கும் அமெரிக்க சன்டேன் போன்ற திரைப்பட விழாக்களும் இந்த ஆபத்தை எதிர்கொண்டுதான் வருகின்றன. புதுதில்லி, கேரளா, கோவா, சென்னை என நிகழ்ந்து வரும் திரைப்பட விழாக்களுக்கு நான் குறிப்பிட்ட முன்னைய, கலாச்சார நிகழ்வாகத் திரைப்பட விழா எனும் தீவிரமான அரசியல் திரைப்பட விழாப் பாரம்பர்யம் இல்லை என்பதால் இவை குறித்த எந்தப் பிரமைகளும் எவருக்கும் வர அவசியமில்லை.

உலக அளவில் மிக மதிப்பு வாய்ந்த திரைப்பட விழாக்கள் இரண்டு. முதலாவது வெனிஸ் திரைப்பட விழா. இரண்டாவது கேன் திரைப்பட விழா. தீவிரமான திரைப்பட ரசிகர்களாலும், உலகின் மகத்தான திரைப்பட இயக்குனர்களாலும் ஒரு போதும் முக்கியமானதாகக் கருதப்படாத நியூயோர்க் திரைப்பட விழாதான் இன்று உலக அளவில் அதிகமான சினிமாப் பார்வையாளர்களை ஈர்க்கும், அதிக அளவிலான திரைப்படங்களைத் திரையிடும் பிரம்மாண்டமான திரைப்பட விழாவாக இருக்கிறது. அதற்கு அடுத்து அதிக அளவிலான சினிமா ரசிகர்களை ஈர்க்கும், அதிக அளவில் படங்களைத் திரையிடும் திரைப்பட விழாவாக கேன் திரைப்பட விழா இருக்கிறது. வெனிஸ் திரைப்பட விழாவும் இந்தப் பாதிப்பிலிருந்து தப்பும் என்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கிறது.

இதன் பின்னிருக்கிருக்கும் உலக அளவில் நேர்ந்த அரசியல் மாற்றங்களையும் ஒருவர் முன்னிறுத்தி இதனை ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. என்னளவில் உலக அளவில் புரட்சிகர நடைமுறையாக, எதிர்காலக் கனவாகத் திகழ்ந்த மாரக்சியத்திற்கு நேர்ந்த பின்னடைவு அல்லது நெருக்கடியே இந்த மாற்றங்களுக்குக் காரணம் எனக் கருதுகிறேன். இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு வெனிஸ் திரைப்பட விழா முதல் கேரளத் திரைப்பட விழா வரை சென்று திரும்புகிற சமூகக் கடப்பாடுள்ள கலைஞர்களுக்கு உரியது எனவும் நான் நினைக்கிறேன்.


உலகத் திரைப்பட விழா வரலாற்றில், 1932 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இத்தாலி நாட்டின் வெனிஸ் திரைப்பட விழாவே உலகின் முதல் திரைப்படவிழா. இரண்டாவது பழமையான திரைப்பட விழா 1937 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட பிரான்சின் கேன் திரைப்பட விழா. இந்த இரு நாடுகளினதும் திரைப்பட வரலாறு என்பது திரைப்படக் கலையின் புதிய சிந்தனைப் பள்ளிகளை உருவாக்கிய நாடுகள் மட்டுமல்ல, அக்டோபர் புரட்சியினால் ஆதர்ஷம் பெற்ற திரைக்கலைஞர்களையடுத்து, ஐரோப்பாவின் மகத்தான திரைப் படைப்பாளிகளைத் தோற்றுவித்த நாடுகளாகவும் இவை இருந்தன. நியோ ரியலிசம்- நவ யதார்த்தவாதம் எனும் திரைச் சிந்தனைப் பள்ளியை இத்தாலி தோற்றுவித்தது. நுவல் வாகு-புதிய அலை சிந்தனைப் பள்ளியை பிரெஞ்சு சினிமா தோற்றுவித்தது. ரோபர்ட்டோ ரோஸலின்னி, பெனில்லி, விட்டோரியா டீ சிகா, ஜில்லோ பொன்டெ கார்வோ போன்ற இத்தாலியர்கள் உலக சினிமாவின் முகத்தையே மாற்றியமைத்தார்கள். ரெனுவார், லூயி மெல், த்ரூபோ, கோதார்த் போன்றோர் பிறிதொரு தீவிர முகத்தை உலக சினிமாவுக்கு வழங்கினார்கள். ஐசன்ஸ்டீனின் மோன்டேஜ் முன்வைத்த புதிய கருத்தியல் – நவ யதார்த்தம் – புதிய அலை என்ற இந்த மூன்று சிந்தனைப் பள்ளிகளுக்கு இடையில் உலகின் திரைக்கலைப் போக்குகளை நாம் வகைப்படுத்திவிட முடியும். ஐஸன்டீனின் கருத்தியல் சினிமாவை செம்பென் ஒஸ்மானிடமும், நவ யதார்த்தவாதத்தினை ஸத்யஜித் ரேயிடமும், புதிய அலை சினிமாவை தோமஸ் கிதராஸ் அலியாவிடமும் நாம் பார்க்க முடியும்.

கலாச்சாரமும் சமூகக் கடப்பாடும் கொண்ட இந்தக் கலைஞர்களின் பாதிப்பினை நாம் வெனிஸ் திரைப்பட விழா கலாச்சாரத்தின் மீதும், கேன் திரைப்படக் கலாச்சாரத்தின் மீதும் தமது செல்வாக்கைக் கொண்டிருந்தன. ஹாலிவுட் சினிமா பாணி திரைப்படங்களுக்கும் எதிராகவும், பகாசுர சந்தைச் சினிமாவுக்கு எதிராகவும் ஐரோப்பிய சினிமாவைக் காத்து வளர்த்தவர்கள் இந்தக் கலைஞர்கள். தொண்ணூறுகள் வரையிலும் இந்த இரண்டு திரைப்பட விழாக்களிலும் விருது பெற்ற படங்களையும், திரைப்பட விழாக்கள் நடைபெற்ற முறைகளையும் ஆய்வு செய்கிற எவரும் கலாச்சார நோக்கமும் சமூகக் கடப்பாடும் மட்டுமே இந்தத் திரைப்பட விழாக்களை கொண்ட செலுத்தின என்பதனை அறிய முடியும்.


பிரெஞ்சு கேன் திரைப்பட விழாவும் இடதுசாரி அரசியலும் எவ்வாறு பிரிக்கப்பட முடியாததாக இருந்தது என்பதற்கான ஆதரமாக நாம் ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம். 1968 ஆம் ஆண்டு தொழிலாளர் மாணவர் கூட்டு எழுச்சி திரைப்படத்துடன் தொடர்புடைய ஒரு நிகழ்விலிருந்தே துவங்கியதாகவே சொல்வதுண்டு. ஹென்ரி லாங்க்லாய்ஸ் எனும் திரைப்பட ஆவணக் காப்பாளர் ஒருவர் 1938 தனது சொந்த இருப்பிலிருந்த 10 திரைப்படங்களுடன் துவங்கிய சினிமாதெக் பிராங்காய்ஸ் எனப்படும் பிடிரஞ்சு திரைப்பட ஆவணக்காப்பகம் 1968 ஆம் ஆண்டு 60,000 திரைப்படங்கள் கொண்டதாக வளர்ச்சி பெற்றிருந்தது. அன்றைய பிரெஞ்சக்கலாச்சார அமைச்சரான ஆந்ரே மால்ராக்ஸ் ‘லாங்க்லாய்ஸ், திரைப்பட அழகியல் தொடர்பான தனது கடுமையான வரைமுறைகளை வைத்துக்கொண்டு, தனது நண்பர்களை மட்டுமே வைத்துக்கொண்டு நிர்வாகம் நடத்துகிறார்’ எனும் குற்றச்சாட்டின் பேரில், ‘வியாபார சினிமா நடைமுறையான காப்பிரைட் விதிகளைச் துச்சமாக மதித்து படங்களைச் சேர்க்கிறார்’ எனும் குற்றச்சாட்டின் பேரில், ஆவணக் காப்பகத்திற்குத் தருகிற அரசு நிதியை வெட்டிய மால்ராக்ஸ், ஹென்ரி லாங்க்லாய்ஸை ஆவணக் காப்பகப் பொறுப்பிலிருந்து விலக்கினார்.


லாங்க்லாய்ஸின் மீது பெறுமதிப்புக் கொண்ட பிரெஞ்சுத் திரைக் கலைஞர்கள், லாங்க்லாய்ஸின் ஆவணக் காப்பகத்தில் இருந்த படங்களைக் கண்ணுற்று தமது படைப்பாளுமையை வளர்த்துக் கொண்ட, ‘சினிமாதெக்கின் குழந்தைகள்’ எனத் தம்மை அழைத்துக் கொண்ட த்ரூபோ மற்றும் கோதார்த் போன்ற கலைஞர்கள், சினிமாதெக்கிற்கு அடிக்கடி வந்து போன பாரிஸ் திரைப்படப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஐந்து இலட்சம் பிற மாணவர்கள், தொழிலாளர்கள் ஆந்த்ரே மால்ராக்சின் இந்த நடவடிக்கையினால் பெருங்கோபமுற்றார்கள். அவரை மீளவும் பதவியில் அமர்த்துமாறு கோரி சினிமாதெக்கின் முன் ஆரப்பாட்டம் நடத்திய மாணவர்களின் மீது பிரெஞ்சு அரசு வன்முறையை ஏவிவிட்டது. பிரெஞ்சு அரசின் இந்த வன்முறையைத் தொடர்ந்து வேறுபட்ட கோரிக்கைகளைக் கொண்டிருந்த மாணவர்களும் இணைந்த மிகப்பெரும் எழுச்சி பிரான்ஸ் நாடு முழுவதும் எழுந்தது. பிரெஞ்சு அரசை மட்டுமல்ல, முழு ஐரோப்பிய அரசுகளையும் அச்சுறுத்திய இந்த எழுச்சியின் பொறி பாரிஸ் சினிமாதெக் ஆரப்பாட்டத்திலிருந்துதான் துவங்கியது எனப் பதிகிறது 1968 பாரிஸ் எழுச்சியின் வரலாறு.

இந்த எழுச்சியின் அதிர்வு அப்போது நடந்து கொண்டிருந்த கேன் திரைப்பட விழாவிலும் எதிரொலித்தது. போலந்து நாட்டின் கம்யூனிச எதிரப்பாளரும் திரைக்கலைஞனுமான ரோமான் போலன்ஸ்க்கி பின்னாளில் இதனை நினைவு கூர்கிறார். கேன் திரைப்பட விழா தேர்வுக்குழு உறுப்பினரான ரோமான் போலன்ஸ்க்கியை திரைப்பட விழா அன்று காலை தொலைபேசியில் அழைக்கும் த்ரூபோ உடனடியாக ஒரு கூட்டத்திற்கு வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார். ரோமான் போலன்ஸ்க்கி அங்கு போய்ச் சேர்ந்த போது, லூயி மெல்,கோதார்த், த்ருபோ போன்றோர் கென் திரைப்பட விழாவை தொழிலாளர் மாணவர் எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்து திரைப்பட விழா நிகழ்வை நிறுத்தவேண்டும் எனவும், அதற்காகக் திரைக்கலைஞர்கள் கூட்டாகக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகிறார்கள்.


கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, நிலவிய சோசலிசத்தின் எதிர்ப்பாளர்களான போலன்ஸ்கிக்கும் மிலோஸ் பார்மனுக்கும் இதில் உடன்பாடு இல்லை. எனினும் அவர்களால் தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய முடியவில்லை. அவர்களும் பிற கலைஞர்களோடு உடன்படவே நேர்ந்தது. ஏனெனில் அங்கு இருந்த கலைஞர்களில் பெரும்பாலுமானோர் பாரிஸ் தொழிலாளர்-மாணவர் எழுச்சிக்கு ஆதரவாக இருந்தநிலைதான். கோதார்த் அந்தச் சம்பவத்திற்குத் தலைமை தாங்கியதைப் பிற்பாடு எரிச்சலுடன் குறிப்பிடுகிறார் ரோமான் போலன்ஸ்க்கி. இந்த நிலை, கேன் திரைப் பட விழாவின் மீது சமூகக் கடப்பாடுடைய கலைஞர்களுக்கு இருந்த சொல்வாக்கு, தொண்ணூறுகள் வரையிலும் நிலைத்திருந்தது.

‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய இத்தாலிய இயக்குனர் ஜில்லோ பொன்டே கார்வோ. கறுப்பின மக்களின் எழுச்சி குறித்த அவரது ‘கெய்மாடா’ எனும் திரைப்படம் தயாரிப்பில் இருந்தபோது ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு முறையினால் மிகப்பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டார். மார்லன் பிராண்டோ பாத்திரத்திற்கு பால் நியூமனையும், கறுப்பினக் கலகக்காரனான தோலரஸ் பாத்திரத்திற்கு சிட்னி பாய்ட்டியரையும் போடச்சொன்னது ஹாலிவுட் யுனைடெட் ஆரட்டிஸ்ட் நிர்வாகம். அதனை நிராகரித்து மார்லன் பிராண்டோவையும் கொலம்பியக் கறுப்பு நடிகரொருவரையும் தேர்ந்தார் பொன்டே கார்வோ. அசல் கதையில் கெய்மாடா நாடு ஸ்பானியக் காலனியாகவே இருந்தது. ஸ்பெயினில் பிற்காலத்தில் தமது ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்புக்கு இடம் கிடைக்காது என்பதாலும், ஸ்பெயின் அரசாங்கத்தின் பகையைத் தாங்க முடியாது என்பதாலும், கதை நிகழிடம் ஆப்ரோ கரீபியனாக – ஆப்ரோ கரிபியனில் வரலாற்று ரீதியில் போர்த்துக்கேயக் காலனி என்பது இல்லை என்ற போதிலும் – மாற்றப்பட்டது. படத்தின் இறுதிக் கட்டுப்பாட்டையும் படத்தொகுப்புக் கட்டுப்பாட்டையும் யுனைடெட் ஸ்டூடியோ எடுத்துக் கொண்டது. இறுதிப்படத்தின் 25 நிமிடங்களை யுனைடெட் ஸ்டூடியோ வெட்டியது. இதுவன்றி தான் நினைத்தபடி நடிக்க விடாமல், பொன்டே கார்வோ விரும்பியபடியே தான் நடிக்க வேண்டியிருந்ததால், எரிச்சலுற்ற மார்லன் பிராண்டோ படப்பிடிப்புத் தளத்தை கொலம்பியாவிலிருந்து மொராக்கோவுக்கு மாற்றினார்.


தொழில்முறையிலல்லாத தனது நடிகர்கள் தேர்வுப் பாணி, படத்தின் இறுதி வரையிலுமான தனது கட்டுப்பாடு, வரலாற்றுக்கு நேர்மையாக இருத்தல் எனும் தனது திரைப்படச் சிந்தனைக்கு மிப்பெரும் இடையூறுகளை விளைவித்ததாக இருந்ததால் ஒரு வகையில் பொன்டே கார்வோ ஹாலிவுட்டை வெறுத்தார் என்றே சொல்ல வேண்டும். இந்த அனுபவத்திலிருந்ததான் தொண்ணூறுகளில் அவர் தலைமையேற்று நடத்திய வெனிஸ் திரைப்படவிழாவில் இரண்டு கறாரான காரியங்களை அவர் நடைமுறைப்படுத்தினார்.

1.வெனிஸ் திரைப்படவிழாவில் அரசின் கட்டுப்பாட்டை அவர் நிராகரித்தார்.

2.திரைப்படைப்பாளிகளின் உரிமைக் கூட்டமைப்பை நிறுவினார்.

ரோபர்ட் அல்ட்மேன், கார்சியா மார்க்வஸ், கென்லோச் போன்றவர்கள் இடம்பெற்ற அந்தக் கூட்டமைப்பு, படைப்பாக்கத்தின் இறுதிக்கட்டத்தின் – போஸ்ட் புரொடக்சன் – மீது படைப்பாளிகளுக்கு முழுக்கட்டுப்பாடு வேண்டும் என்பதனைப் படமுதலாளிகளுக்கு எதிரான படைப்பாளிகளின் அறைகூவலாக முன்வைத்தது.

உக்கிரமான ஹாலிவுட் ஆதிக்க எதிர்ப்புக் கொண்டிருந்த வெனிஸ் திரைப்பட விழா, 2004 ஆம் ஆண்டின் போது எவ்வாறு சீரழிவு பெற்றது என்பதனை எடுத்துக்காட்டொன்றின் வழி நிறுவுவோம். வெனிஸ் திரைப்பட விழா என்பது மரபாக ஐரோப்பியப் படங்களை முதன்மைப்படுத்திய, கலாச்சாரத்தை முதன்மைப்படுத்திய, சந்தை மதிப்பீடுகளைப் பின்தள்ளிய ஒரு திரைப்பட விழா. 2004 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்பீல்பெர்க், டாம் குருஸ், ஜான் டிராவல்ட்டோ போன்றோரின் படங்கள் உள்பட, 21 அமெரிக்க பிளாக்பஸ்ட்டர் படங்கள் அத்திரைப்பட விழாவை ஆக்கிரமிக்கின்றன. அமெரிக்கப் படங்களுக்கு எதிராக இத்தாலியின் திரைக் கலைஞர்கள் எர்ஜனியொ கப்போசியோ, ஆந்ரே கார்க்கர் போன்றவர்கள் ‘கலைப்படங்களே நிஜமான படங்கள், அமெரிக்கப்படங்கள் அல்ல’ என்கிறார்கள். உலகவயமாக்கல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க சந்தைச் சினிமாவுக்கு இவ்வளவு இடம் தரவேண்டிய அவசியமில்லை எனத் திரைப்பட விழா நிகழ்வில் ஆரப்பாட்டம் செய்கிறார்கள்.

திரைப்பட விழா இயக்குனர் மார்க்கோ முல்லர் இத்தாலியத் திரைக் கலைஞர்களின் எதிர்ப்பைப் பற்றியோ, உலகவயமாக்கல் எதிர்ப்பு இத்தாலிய ஆரப்பாட்டக்காரர்களையோ பற்றிக் கவலைப்படாமல் சொல்கிறார் : “இன்றைய வெனிஸ் பழைய வெனிஸ் இல்லை. அதிக அளவில் அமெரிக்க மைய வெனிஸ். இந்தத்திரைப்பட விழாவுக்கு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்திருக்கிறோம். இது மிகப் பெரும் வியாபாரத்திற்கான திரைப்பட விழா எனும் செய்தியை நான் தெளிவாகச் சொல்கிறேன்” என்கிறார். இந்த மார்க்கோ முல்லர்தான் இயக்குனர் மணிரத்தினத்திற்கு வெனிஸ் திரைப்பட விழா விருது கொடுப்பதற்காக அவரது துணைவியார் சுகாசினியுடன், அவரது ராவணன் படத்துடன், நடிகர் விக்ரமுடனும் அவரை வெனிசுக்கு அழைத்தார். மார்க்கோ முல்லர் சொல்கிறார் : “மணிரத்னம் சமகால இந்திய சினிமாவின் மகத்தான புதுமை செய்தவர்களுள் ஒருவர். சமகால பாலிவுட் சினிமாவில் படைப்பாளி சினிமா (ஆச்சூர் சினிமா) கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தவர் மணிரத்னம். அவருடைய படைப்புக்களை மரியாதை செய்வதற்காக நாங்கள் பெருமிதப்படுகிறோம்”. சத்யஜித் ரே ஆசுசூர் சினிமா படைப்பாளி என்பது நமக்குத் தெரியும். மணிரத்னம் அசுசூர் சினிமா எடுக்கிறார், அதுவும் பாலிவுட்டில் எடுக்கிறார் என்று நமக்குச் சொல்கிறார் மாக்ஸ் முல்லர்.

இயக்குனர் ஷங்கரும், அவரது ‘படைப்பான’ எந்திரனும் உலக திரைப்பட விழாக்களில் இடம்பெறுவதும் விருது பெறுவதும் மாரக்முல்லர் போன்ற ஹாலிவுட் மைய, சந்தைச்சினிமா மையக் காதலர்களால்தான் என்பது இப்போது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. உலகத்தில் எடுக்கப்படுகிற அனைத்தும் இன்று உலக சினிமா என்று வகைப்படுத்தப்படுகிற ஒரு மயக்க நிலை இருக்கிறது. இதே போன்ற மயக்கநிலைதான் உலகத் திரைப்பட விழாக்கள் கலை சார்ந்தது எனும் மயக்கமும் உக்கிரமான படைப்பு மனநிலை சார்ந்தது எனும் மயக்கமும் நமக்கு இருக்கிறது.


சென்ற நூற்றாண்டின் துவக்கம் முதல் தொண்ணூறுகள் வரை கலை நோக்கங்களும், சமூகக்கடப்பாடும், தார்மீகக் கோபமும் உலகத் திரைப் படைப்பாளிகளிடம் உக்கிரம் கொண்டிருந்தன. தொண்ணூறுகளில் அவர்கள் பின்தள்ளப்படுகிற நிலைமை மெல்ல எழுந்தது. ஹாலிவுட்டும்-பாலிவுட் பகாசுரம் உலக மற்றும் இந்திய திரைப்பட விழாக்களையும் ஸ்வீகரம் செய்ய முழு மூச்சுடன் முயன்றது. மூலதனம் உலகமயமாகும்போது மூலதன எதிர்ப்பும் உலகமயமாகிறது. வெனிஸ் திரைப்பட விழாவில் வெளிப்பட்ட உலகவயமாதலுக்கு எதிரான எதிர்ப்பு, ஹாலிவுட் படங்களுக்கும் எதிரானதாக இருந்தது. இந்த எதிர்ப்பு இன்றும் வெனிஸ் மட்டுமல்ல, கேன் திரைப்பட விழாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் இருக்கிற அனைத்துத் திரைப்பட விழாக்களிலும் எதிரொலிக்கிறது.

இன்றும் கேனிலும், வெனிசிலும், சன்டேனிலும் விருதுபெறுகிற மகத்தான கலைஞர்களாக இடதுசாரிகளும், சமூகக் கடப்பாடு கொண்ட திரைப்படக் கலைஞர்களும் இருந்துதான் வருகிறார்கள். இங்கிலாந்தின் கென்லோச், கிரீஸின் தியோ ஆஞ்சல பெலோஸ், டேனிஷ் நாட்டின் லார்ஸ் வான் ட்ரையர், மாற்று அமெரிக்காவின் மைக்கேல் மூர் போன்றவர்கள் அக்கலைஞர்கள்.

‘அறுதியில் அனைத்தும் அரசியல்தான்’ என்பார் விஞ்ஞானத் திரைப்படங்கள் குறித்த நூலை எழுதிய மார்க்சியக் கோட்பாட்டாளரான பிரெடரிக் ஜேம்ஸன். ‘மேலாண்மைக்கு எதிராக எல்லா தளத்திலும் போராட வேண்டும்’ என்பார் கலாச்சார மார்க்சியரான அமரர் அந்தோனியோ கிராம்ஸி. ‘இடது பக்கம், இடது பக்கம், இடது பக்கம் திருப்புவோம்’ என்பது மக்கள் கவிஞன் மயக்கோவ்ஸ்க்கியின் கவிதை வரி. கோவா, கேரளா, புதுதில்லி திரைப்பட விழாக்களுக்குச் செல்கிற பார்வையாளர்களுக்கும், சமூகக் கடப்பாடு கொண்ட இந்தியத் தமிழக திரைப்படக் கலைஞர்களுக்கும் இயக்குனர்களுக்கும் இதனை நாம் ஞாபகமூட்டுவோம்.
--------------------------------------------------------------------------------------------------

சென்ற ஆண்டு படப்பெட்டி இதழில் இந்த கட்டுரை வெளியானது. படப்பெட்டி நிர்வாக ஆசிரியர் செந்தில்நாதனுக்கு பேசாமொழி சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.