திரைமொழி - 14 அத்தியாயம் 5 – Production Design

சென்ற அத்தியாயத்தில் ஒரு சிறிய உதாரணத்தைக் கவனித்தோம். அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் ஒரு குறிப்பிட்ட காட்சி. போரின் முடிவில் ராபர்ட் லீ என்ற தளபதி, யுலிஸிஸ் க்ராண்ட் என்ற தளபதியிடம் சரணடைகிறார். அதனைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வருகிறது. இந்தக் காட்சியை எப்படிப் படமாக்குவது என்று ஷாட்களின் பட்டியல் (Shot list) ஒன்றை அந்த உதாரணத்தில் பார்த்திருந்தோம். கூடவே ஒரு படத்தையும் வரைந்து, அந்த ஷாட் எப்படிப் படமாக்கப்படப்போகிறது என்பதையும் கவனித்தோம்.
இனி, இன்னொரு புதிய சீன் ஒன்றைக் கவனிக்கலாம்.

CUT TO:

2. EXT. FIELD – NORTHERN SIDE

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் படையின் பக்கத்தில் இருக்கிறோம். அவர்கள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினருடன் மோத இருந்த சரியான தருணத்தில் ஒரு மணி நேரத் தாற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. இந்தத் தருணத்தில், அங்கிருக்கும் மரங்களின் வரிசை முடியும் ஒரு வயல்வெளியில் கூட்டமைப்புப் படையினர் அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் எதிரே தூசி நிரம்பிய ஒரு சாலையிலும் அதன் இரு மருங்கிலும் அவர்களின் எதிரிகளான ஐக்கிய அமெரிக்கப் படைகள் அமர்ந்திருக்கின்றன. இரண்டுக்கும் இடையே 100 கஜங்கள் இருக்கலாம். இரண்டு பக்கங்களிலும் உள்ள போர்வீரர்கள் ஒருவரை ஒருவர் தெளிவாகப் பார்த்துக்கொள்ள முடியும். ஒரு ஐக்கிய அமெரிக்கப் படைவீரன் கேமராவின் அருகே அமர்ந்திருக்கிறான். அங்கிருக்கும் ஒரு எறும்புப் புற்றில் தனது துப்பாக்கியின் முனையில் உள்ள கத்தியை நுழைத்து, நேரத்தைக் கடத்தி விளையாடிக்கொண்டிருக்கிறான்.

இம்முறை இயக்குநர் இந்தக் காட்சியை அலசிப்பார்க்காமல் இந்தக் காட்சியில் உள்ள ஆக்ஷனை மட்டும் எழுதிக்கொள்கிறார். ஒரே சீக்வென்ஸில் அமைந்த நீளமான ஷாட்டை உபயோகிக்காமல், சிறிய ஷாட்களை எடுத்துக்கொள்ளவே அவருக்கு இம்முறை விருப்பம்.

“களத்தில் அமர்ந்திருக்கும் கூட்டமைப்புப் படையினரை முதலில் லோ ஆங்கிளில் காட்டுகிறோம். பின்னர் கேமரா ஐக்கிய அமெரிக்க நாட்டுப் படைகளின் பக்கத்தில், அவர்களில் பெரும்பாலானோரைக் காட்டுகிறது. எல்லாவற்றுக்கும் முன்னணியில் மிக இளம் வயதான ஒரு ஐக்கிய அமெரிக்கப் படைவீரன், அவனுக்கு அருகே இருக்கும் எறும்புப்புற்றையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அதற்குள் அவனது துப்பாக்கியின் முனையில் உள்ள கத்தி புகுந்திருக்கிறது. அங்கிருந்து ஏராளமான எறும்புகள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. அங்கிருந்து நேர் எதிரே முதல் வரிசையில் இருக்கும் ஒரு கூட்டமைப்புப் படைவீரன் அமர்ந்திருக்கிறான். இருவருக்கும் இடையே பத்து கஜம் இருக்கலாம். இளைஞன் எதேச்சையாக நிமிர்கிறான். அந்த வீரனும் இளைஞனைப் பார்க்க, இருவரும் கண்ணோடு கண் பார்த்துக்கொள்கிறார்கள். திடீரென இன்னொருவன் தன்னைப் பார்ப்பதை உணரும் இளைஞன், கத்தியால் புற்றை முற்றிலுமாகக் கலைக்கிறான். அங்கிருந்து எறும்புகளையும் தட்டிவிடுகிறான். அங்கிருந்து கட் செய்கிறோம். இப்போது புதிய ஷாட் ஒன்றில் அந்தக் கூட்டமைப்புப் படைவீரனுக்குப் பின்னால் இருக்கிறோம். அங்கிருந்து பார்க்கையில் எதிரே அமர்ந்திருக்கும் இளைஞன் தனது துப்பாக்கியைத் தூக்குவது தெரிகிறது. அது ஏதோ அந்த இளைஞன் பெருமையுடனும் கர்வத்துடனும் செய்யும் செயல் போல இருக்கவே, தனது துப்பாக்கியைத் தூக்கி மடியில் வைத்துக்கொள்கிறான் வீரன். பின்னர் இவனையே கவனித்துக்கொண்டிருக்கும் அந்த இளைஞனைப் பார்த்துப் புன்னகைக்கிறான்”.

ஷாட் பட்டியல்

1. புற்றின் அருகே இருக்கும் இளைஞனின் உருவம் (Profile). பின்னணியில் கூட்டமைப்புப் படை வீரன்.

2. புற்றும் அதற்குள் இருக்கும் கத்தியும் க்ளோஸப்பில் (CU) காட்டப்படுதல்

3. முதல் காட்சியின் நேர் எதிரான காட்சி. இம்முறை கூட்டமைப்புப் படை வீரனின் தோள்களின் மேலான wide shot. பின்னணியில் இளைஞன்

4. இப்போது இளைஞனின் தோள்களுக்கு மேலான ஷாட் (OTS- Over The Shoulder). பின்னணியில் கூட்டமைப்புப் படை வீரன்.

இப்போது கீழே உள்ள படத்தைப் பார்க்கலாம். இந்த சீனின் அமைப்பு இதில் உள்ளது. இவற்றில் உள்ள எண்கள், மேலே இருக்கும் ஷாட்களின் பட்டியலைக் குறிக்கின்றன. அடுத்த அத்தியாயத்தில் இந்த ஷாட் பட்டியலுக்கான ஸ்டோரிபோர்ட்களையும் பார்க்கப்போகிறோம்.
இப்போது அடுத்த சீனைப் பார்க்கப்போகிறோம். இதில் வசனமும் இருக்கிறது. சென்ற அத்தியாயத்தில் பார்த்த ஜெனரல் லீயுடன் ஒரு பண்ணை வீட்டுக்குள் இருக்கிறோம்.

3. INT. PARLOR – BRICK FARMHOUSE – AFTERNOON

அந்த அறையின் மூலையில் ஜெனரல் லீ ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அங்கிருக்கும் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

திடீரென, வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றவே, பார்வையை ஜன்னலிலிருந்து அகற்றி, மெல்ல அந்த அறையை கவனிக்கிறார். ஆனால் அவரது ஒவ்வொரு அசைவும் அந்த அறையில் இருக்கும் பிறரால் கவனிக்கப்படுவதால், அவரது மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகளையோ செய்கைகளையோ அவர் செய்வதில்லை. லீயை விடவும் மிகவும் இளையவரான அவரது ராணுவ காரியதரிசி லெஃப்டினண்ட் கர்னல் சார்லஸ் மார்ஷல், அந்த அறையில் இருக்கும் ஓவியம் ஒன்றைப் பார்க்கிறார். ஜெனரல் லீயைப் போலவே இவரும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடிய முகபாவத்துடனேயே இருக்கிறார். அவ்வப்போது லீ என்ன செய்கிறார் என்று கவனித்துக்கொண்டே இருக்கும் மார்ஷல், இறுதியாக அங்கிருக்கும் கணப்பின் அருகே அமர்ந்துகொள்கிறார்.

அந்த அறையின் வாசலுக்கு வெளியே நிற்பவர்தான் லெஃப்டினண்ட் கர்னல் ஆர்வில் பேப்காக். அமெரிக்கக் கூட்டமைப்புப் படையினரின் ஜெனரலான யுலிஸிஸ் க்ராண்ட்டின் கீழ் வேலை செய்பவர். உள்ளறையில் லீயையும் மார்ஷலையும் விட்டுவிட்டு வெளியே நின்றுகொண்டிருக்கிறார். உள்ளேயே இருந்துகொண்டு இருவருடனும் வெட்டியாக, சம்பிரதாயமான வார்த்தைகளைப் பறிமாறிக்கொள்ள இவருக்கு விருப்பமில்லை. அது அனைவருக்கும் தர்மசங்கடமாகவே இருக்கும். அப்போது ஜெனரல் யுலிஸிஸ் க்ராண்ட்டும் ஜெனரல் ஷெரிடனும் அந்த இடத்தினுள் நுழைவதைப் பார்க்கும் பேப்காக் நிம்மதியாக உணர்கிறார். பேப்காக் கதவைத் திறந்து இருவரையும் உள்ளே விடுகிறார். அனைவரும் எழுகிறார்கள்.

பேப்காக்

(க்ராண்ட்டிடம்)

ஜெனரல் க்ராண்ட் –
ஆனால் யுலிஸிஸ் க்ராண்ட் அவரைக் கண்டுகொள்ளாமல் நேரடியாக அந்த அறையின் மூலைக்குச் செல்கிறார். அவரது எண்ணமெல்லாம் அங்கே அமர்ந்திருக்கும் மனிதரிடமே இருக்கிறது. அங்கிருக்கும் லீ எழுகிறார். இருவரும் கைகுலுக்கிக் கொள்கின்றனர்.

க்ராண்ட்

ஜெனரல் லீ.

க்ராண்ட் அங்கே ஒரு நாற்காலியைப் பார்வையால் துழாவ, லீ அமர்ந்துகொள்கிறார். திடீரென பேப்காக் அங்கே ஐந்து அதிகாரிகளை உள்ளே அனுமதிக்க, க்ராண்ட்டின் எண்னங்கள் ஒரு கணம் தடைபடுகின்றன. ஐவரும் உள்ளே வந்து இவர்களைச் சுற்றிலும் நிற்க, மார்ஷல் கணப்பின் அருகே நின்றுகொள்கிறார். க்ராண்ட் ஒரு நாற்காலியை இழுத்து ஜெனரல் லீயின் எதிரே அமர்கிறார். அந்தச் சூழ்நிலையின் இறுக்கத்தை சற்றே இளக்க எண்ணுகிறார் க்ராண்ட்.

க்ராண்ட்

ஜெனரல் லீ. உங்களை இதற்கு முன்னர் ஒரு முறை பார்த்திருக்கிறேன். னான் அப்போது ந்யூ மெக்ஸிகோவில் இருந்தேன். நீங்கள் அங்கு நடைபெற இருந்த அணிவகுப்பைப் பார்வையிட வந்தீர்கள். உங்களது தோற்றம் அன்றிலிருந்தே எப்போதும் என் நினைவில் இருக்கிறது. உங்களை இனி எங்கே பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்வேன் என்று அப்போது யோசித்தேன்.

லீ

ஆமாம். அன்று உங்களைச் சந்தித்தது எனக்குத் தெரியும். ஆனால் அதன்பின் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று பலமுறை நினைத்துப் பார்க்க முயன்றிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட உங்கள் உருவத்தில் ஒரு சிறு துணுக்கைக் கூட என்னால் நினைவுகூரவே முடியவில்லை.

இதுதான் வசனம்.

இந்தமுறை, ஷாட்களின் பட்டியல் முழுவதுமாகத் தயார்செய்யப்படவில்லை. காரணம், இது ஒரு உட்புறக் காட்சி. அங்கே நடக்கும் வசனங்களும் சிறு அசைவுகளும் நடிகர்களை வைத்துக்கொண்டு எளிதாக நடத்திவிடலாம். எனவே, அந்தந்தக் கதாபாத்திரங்கள் எப்படி இருக்கின்றன என்றும், கேமராவில் அவைகளை எப்படிக் காட்டலாம் என்றுமே யோசித்தல் நலம். கீழ்க்கண்டவாறு ஷாட்களின் பட்டியல் உத்தேசமாக இருக்கலாம்.

ஷாட் பட்டியல்

1. ஒரு wide shot மூலம் அறையையும், மூலையில் அமர்ந்திருக்கும் லீயையும் பார்க்கிறோம். அறையின் வாசலில், ஷாட்டின் முன்னணியில் லெஃப்டினண்ட் கர்னல் பேப்காக் இருக்கிறார். இவர் கெனரல் யுலிஸிஸ் க்ராண்ட்டின்கீழ் வேலைபார்ப்பவர். இவர்தான் லீயை வெளியில் இருந்து உள்ளே அழைத்து வந்தவர். லீயின் அருகே அவரது ராணுவக் காரியதரிசி கர்னல் மார்ஷல் நிற்கிறார். உள்ளே இருக்கும் லீயையும் மார்ஷலையும் தனியாக விட்டுவிட்டு, பேப்காக் வாசலில் இருக்கும் ஒரு ஜன்னலின் வழியே லீயைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். லீ தனது கையுறையை சரியாகப் பொருத்துகிறார். அப்போது வாசலில், கேமராவுக்கு வெளியே குரல்கள் கேட்கின்றன. பேப்காக் விறைப்புடன் நிற்கிறார்.

2. Ext. Profile. வீட்டையும் வீட்டின் முற்றத்தையும் LONG SHOT ஒன்றின் மூலம் முழுதாகக் காண்கிறோம். சற்றே லோ ஆங்கிள். அங்கே யுலிஸிஸ் க்ராண்ட் கெனரல் ஷெரிடனுடன் உள்ளே நுழைந்துகொண்டிருக்கிறார். வேகமாக நடந்துகொண்டே, அந்த இறுதி நிமிடத்தில் சற்றேனும் தெளிவாக இருக்கவேண்டும் என்பதால் உடையின் அழுக்குகளைத் தட்டிவிட்டுக்கொண்டே வருகிறார் க்ராண்ட். அப்படி நடக்கும்போதும் ஒரே சீரான தப்படிகளையே தன்னிச்சையாக வைத்துக்கொண்டு வருகிறார்.

3. Int. உள்ளறையின் ஷாட். லீயின் பின்னால் இருக்கிறது கேமரா. லீ எழுந்து நிற்கிறார். க்ராண்ட் உள்ளே நுழைந்து நேராக லீயின் அருகே செல்கிறார். இருவரும் கைகுலுக்குகின்றனர். CUT TO:

4. லீயும் க்ராண்ட்டும் கைலுகுக்குகையில் அவர்களை ஒரு REVERSE SHOT மூலம் பார்க்கிறோம். ஃப்ரேமின் உள்ளே மார்ஷல் வருகிறார். கேமரா மெல்லப் பின்னால் செல்கிறது. க்ராண்ட் ஒரு நாற்காலியைத் தேடுகிறார். லீ அமர்கிறார். க்ராண்ட்டின் குறிப்பறிந்து வேகமாக பேப்காக் நாற்காலியைத் தேடுவதற்குள் அங்கிருக்கும் நாற்காலி ஒன்றில் அமர்கிறார் க்ராண்ட். கொஞ்சம் பதற்றமாக க்ராண்ட் இருப்பதுபோல் தோன்றுகிறது. லீயோ மிகவும் அமைதியாகக் காணப்படுகிறார். CUT TO:

5. முன் வாசலை ஒரு MEDIUM SHOT மூலமாகக் காண்கிறோம்.கேமராவின் உயரம் ஐந்தடி. அங்கே ராணுவ அதிகாரிகள் ஏதோ சவ அடக்கத்துக்கு வருவது போல மிகவும் அமமிதியாக உள்ளே நுழைகின்றனர். எல்லாருமே லீயையே பார்க்கின்றனர். கேமரா அவர்களுடனே பயணிக்கிறது. அங்கிருக்கும் ஒரு அதிகாரியினுடனேயே பயணிக்கிறது.
அந்த அறையின் WIDE SHOT. லீயையும் க்ராண்ட்டையும் பக்கவாட்டில் பார்க்கிறோம். ஷாட்டின் கவனம் லீயின் மேல் இருக்கிறது. கேமராவின் உயரம் நான்கு அடி. இருவரின் பேச்சுவார்த்தையின் போதும் இதே போல இந்த ஷாட் இருக்கவேண்டும் (இதுதான் மாஸ்டர் ஷாட்).

6. லீயின் தோள்களுக்கு மேலான ஷாட் (OTS). க்ராண்ட் தெரிகிறார்.
7. க்ராண்ட்டின் தோள்களுக்கு மேலான ஷாட் (OTS). லீ தெரிகிறார்.
8. லீயின் க்ளோஸப் (CU)
9. க்ராண்ட்டின் க்ளோஸப் (CU)

நீங்கள் கவனித்ததுபோல, இதில் எதுவும் கண்டிப்பாக வைத்தே ஆகவேண்டும் என்பதுபோன்ற வரைபடம் இல்லை. சிறிய குறிப்புகள், சின்னச்சின்னப் படங்கள், ஷாட் பட்டியல் – எதுவேண்டுமானாலும் இங்கே இடம்பெறலாம். ஒரே லட்சியம் என்னவென்றால், ஷாட்களில் இடம்பெறவேண்டிய விஷுவல்கள் அனைத்தையும் விட்டுவிடாமல் காண்பிக்கவேண்டும் என்பதே. பொதுவாக, வரிசையான ஷாட்களுக்கு முன்னரே அந்த இடத்தின் விவரிப்பு, என்னென்ன ஆக்ஷன் நடக்க இருக்கிறது என்பதெல்லாம் விளக்கமாக எழுதப்பட்டுவிடும். அப்போதுதான் ஒளிப்பதிவாளர், திரைப்படத்தில் பங்கேற்கும் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியவர்களுக்கு அங்கே என்ன நடக்க இருக்கிறது என்று புரியும். அப்போது ஷாட்டின் அமைப்பும் தெளிவாக வந்துவிடும்.

தொடரலாம்.