பாலு மகேந்திராவின் ஒரு மனுஷி & சந்தியா ராகம்

எதிர்வரும் பிப்ரவரி 13ஆம் தேதி இயக்குனர் பாலு மகேந்திரா அவர்களின் முதலாவது நினைவு தினம். அடுத்த இதழிலும் பாலு மகேந்திரா பற்றிய சில கட்டுரைகள் இடம்பெறும்.
-----------------------------------------------------------------------------------------------------
1

கடந்த 18 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை திருப்பூரில் ‘பதியம் திரை’ சார்பாக தோழர் பாரதிவாசன் இரண்டு சினிமாக்களின் திரையிடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பாலுமகேந்திரா இயக்கிய ‘ஒரு மனுஷி’ என்னும் குறும்படமும் மற்றும் ‘சந்தியாராகம்’ என்னும் முழுநீளத்திரைப்படமும் திரையிடப்பட்டன.

இதில் ‘ஒரு மனுஷி’ பிரபஞ்சனின் ஒரு அருமையான சிறுகதைக்கு பாலுமகேந்திராவால் எழுதப்பட்ட திரைக்கதை. தமிழ்சினிமாவில் துணை நடிகையாக இருந்துகொண்டு தன் அன்றாட வாழ்க்கைக்கே சிரமப்படும் ஒரு இளம் பெண்ணின் உன்னதமான குணத்தை கவனப்படுத்திய படைப்பு. பிரபஞ்சனின் படைப்புகள் எப்போதுமே மனித உன்னதங்களை வெளிச்சமிட்டுக் காட்டக் கூடியவைதான். அவ்வகையில் ‘ஒரு மனுஷி’ என்னும் இந்தப் படைப்பின் தலைப்பே அதன் கதையாடலைத் தெளிவுபடுத்திவிடுகிறது.
வறுமையின் நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு துணைநடிகை, தான் ஆரம்பத்தில் சினிமாவுக்குள் நுழையும் போது தனக்கு உதவியாய் இருந்த ஒரு ஸ்டில் போட்டோகிராபரின் ஒரு நாளைய பணப்பிரச்சனைக்கு உதவி செய்கிறாள். கேட்பதற்குச் சாதாரணமாக இருக்கும் இந்தச் சம்பவத்துக்குள் ஒரு பெண்ணின் மனிதத்தன்மை எவ்வாறு மிளிர்கிறது என்பதை மிகவும் இயல்பாக நமக்கு உணர்த்துகிறது இந்தக் கதை. அவன் இவளிடம் கைமாற்றாகக் கொஞ்சம் பணம் கேட்கிறான். இவளோ சோற்றுக்கே கஷ்டப்படும் நிலையில் தான் இருக்கிறாள். ஆனாலும் நண்பன் கேட்டுவிட்டானே என்று வேறு ஒருவரிடம் ஏற்பாடு செய்துகொடுத்து உதவுகிறாள். இதுதான் கதை. ‘நாமாக இருந்தாலும் இதைத்தானே செய்திருப்போம். நம்முடைய கஷ்டகாலத்தில் உதவி செய்தவருக்கு நாம் நம்மால் முடிந்த சிறு உதவியொன்றைச் செய்கிறோம். இதில் என்ன உன்னதன்மை இருந்துவிடப் போகிறது’ என்றுதானே நமக்குத் தோன்றும் . ஆனால் இதில் என்ன விஷயம் என்றால், அவன் அவளிடம் பணம் கேட்கும் முன்பாக அவளுடைய மனநிலையில் கொஞ்சம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடவேண்டும் என்று நேர்மைக்குப் புறம்பான ஒரு காரியத்தைச் செய்கிறான். அதை உடனே கண்டுகொள்ளும் அவள் அந்தச் செயலை எப்படி எடுத்துக் கொள்கிறாள் என்பதில் தான் இந்தக் கதை மனிதனின் உன்னத்தை உணர்த்துகிறது.

பொதுவாகவே சிறுகதைகளைத் திரைக்கதையாக்கும் போது அதன் அடிநாதம் தன் ஜீவனை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் பிரபஞ்சன் தான் குறிப்பிட்டு உணர்த்த விரும்பிய மேலே சொன்ன விஷயத்தை பாலுமகேந்திரா தன் தேர்ந்த திரைக்கதை அறிவால் காட்சிகளின் வழியாகவே சிறுகதையின் மூலஅனுபவத்துக்கு இணையாக நம் மனதுக்குக் கடத்திக்கொண்டு வருகிறார். திரைக்கதையின் தேவைக்கேற்ப மூலக்கதையிலுள்ள கூறுகளை அவர் விரித்தும் சுறுக்கியும் மாற்றியமைத்து தன் கதையாடலை நிகழ்த்துகிறார்.

இந்தச் சிறுகதையைத் திரைக்கதையாக்குவதில் பாலுமகேந்திரா ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டிருந்திருக்கிறார். பிரபஞ்சனின் ‘ஒரு மனுஷி’ சிறுகதையில் அந்தத் துணைநடிகை தன் அன்றாடப் பணத்தேவைக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்று வெளிப்படையாகவே கதையின் போக்கு இருக்கும். ஆனால் பாலுமகேந்திராவுக்கோ அதை அப்படியே அப்பட்டமாகக் காட்டுவதற்கு ஏனோ ஒரு தயக்கம் இருந்திருக்கின்றது. அது ஒரு பிரபல வெகுஜனத் தொலைக்காட்சியில் வேறு ஒளிபரப்பப்படும் என்பதால் அதன் நிர்பந்த அழுத்தமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை மூலக்கதையின்படி காட்டியும் ஆகவேண்டும். அதே நேரம் சில வெளியீட்டு நிர்பந்தங்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலையில் சில காட்சிகளின் வழியே அவள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள் என்பதை மிக நாசூக்காகக் காட்டியிருப்பார். ஆனாலும்கூட இங்கு ஒரு படைப்பாளியின் சமரசம் குறித்தான கேள்விகள் நெளிவதைத் தவிர்க்க முடியவில்லை.

அதே நேரம் மூலக்கதையில் இல்லாத ஒரு விஷயத்தை பாலுமகேந்திரா இந்தத் திரைக்கதைக்குள் சொல்லியிருப்பார். இந்தக் கதை நிகழும் நேரம் தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக சினிமாவின் எல்லா துறைசார்ந்த பல்லாயிரம் தொழிலாளிகளின் வாழ்வு நசிந்து கொண்டிருந்தது. அவர்களின் வலியை துயரத்தைப் பதிவு செய்ய இந்தக் கதையைப் பயன்படுத்தினார் பாலுமகேந்திரா. சினிமக்கார்கள் பற்றி சினிமாவுக்கு வெளியில் இருப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாயவடிவத்தை இதில் கேள்விக்குட்படுத்தியிருப்பார். சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆர்வமுள்ள ஒரு இளம் பெண்ணின் பாத்திரத்தை உருவாக்கி அவள் ஆசைகளின் வழியாகவும் ஆச்சர்யங்களின் வழியாகவும் பொதுசமூகம் உருவாக்கிவைத்திருக்கும் சினிமா பற்றிய மாயையையும் அதன் அபத்தங்களையும் மிக அழகாகப் பதிவுசெய்திருக்கிறார்.

இதில் துணைநடிகை பாத்திரமேற்று நடிக்கும் மௌனிகாவின் திறன் இந்தத் திரைக்கதையின் மற்றுமொரு பலம். அவர் அறிமுகம் ஆகும் காட்சியில், உடல் நலம் இல்லாமல் இருந்துவிட்டு, கொஞ்சம் தேறிய நிலையில் ஒரு வெட்டேத்தியான காலைப்பொழுதில் கண்விழிக்கிறார். அப்போது அவர் காட்டும் அயர்ச்சியும் சலிப்பும் அந்தப் பாத்திரத்தின் தன்மையை பார்வையாளர்களின் அனுபவத்துக்குள் சட்டென்று கொண்டுவந்து நிலைநிறுத்திவிடுகிறார்.

சினிமா ஸ்டில் போட்டோகிராபராக வரும் சஷிகுமார் பாத்திரத்தின் இயல்புத் தன்மையைக் கொண்டுவருவதில் முழுமையான வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அவர் பிற கதாபாத்திரங்களோடு உரையாடும் போது அவர் காட்டும் எதிர்வினைகளில் ஒரு மந்தத்தனமும் தேவைக்கு அதிகமான நிதானமும் கொஞ்சமாக செயற்கைத்தனமும் இருப்பதாகவே படுகிறது. அதனாலேயே அவர் ஏற்றுள்ள பாத்திரம் நம் மனதுக்குள் வர மறுக்கிறது. ஆனாலும் அவரை ஏன் பாலுமகேந்திரா தொடர்ந்து தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டே வந்தார் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பரிசீலிக்க வேண்டும்.

மற்றபடி ஒரு சிறந்த சிறுகதையைக் குறும்படமாக எடுக்க முனையும் எல்லா இயக்குநர்களுக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்தப் படம். மூலக்கதையின் மையம் சிதைபடாமல் திரைக்கதையில் புதிய சாத்தியங்களை உருவாக்கிச் செல்வதற்கு அவர்களுக்கிருக்கும் அனேக உதாரணங்களில் ‘ஒரு மனுஷி’ யும் நிச்சயமாகச் சேரவேண்டியதே.

-------------------------------------------

2
அடுத்து பாலுமகேந்திராவின் ‘சந்தியாராகம்’ திரையிடப்பட்டது. இது முதுமையைப் பேசிய படம். நாம் எல்லோரும் முதுமையை அவசியம் எதிர்கொண்டே ஆகவேண்டியிருக்கிறது. நோயுடனோ பயத்துடனோ கவலையுடனோ விரக்தியுடனோ வறுமையுடனோ தான் முதுமை பெரும்பாலோருக்கு வாய்க்கிறது. அதிலும் தனிமையான முதுமை என்பது இன்னும் கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தக் கூடியது. வாழ்வு நெடுகிலும் நாம்முடன் கலந்து உறவாடிய மனிதர்களைக் காலம் ஒவ்வொருவராக நம்மிடமிருந்து கழற்றிக் கொண்டேயிருக்க, கடுமையான வெறுமை நம்மைச் சூழ்ந்தழுத்தும் காலமது.
கூட்டுக் குடும்ப அமைப்பு தன் சிதைவை சந்திக்க ஆரம்பித்த எண்பதுகளில் அதனுடைய தாக்கம் முதியவர்களின் வாழ்க்கையில்தான் முதன் முதலில் உணரப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் வேலைவாய்ப்புத் திட்டங்கள் மத்தியதர வர்க்கத்தை இன்னும் எட்டிவிடாத நிலையில் அவர்களது குடும்பங்கள் கடும் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பராமரிக்க வேண்டிய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருத்தே அவர்களுடைய அன்றாட வாழ்வின் சிறிய சந்தோஷங்கள் கூடத் தீர்மானிக்கப்பட்டன. இந்தச் சூழலின் பின்னனியில்தான் பாலுமகேந்திரா தன் ‘சத்தியாராகத்தை’ மீட்டினார்.

ஒரு நாடகக் கலைஞன் தன் முதுமையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பற்றி ’சந்தியாராகத்தில்’ கதையாடினார். முதுமைவாழ்வின் தனிமைத்துயரைத் தாங்கியபடி, தன் இருத்தலுக்கான தவிப்பை ஒரு முதிய கலைஞன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை அவனுடைய சில நெருக்கடியான வாழ்வுத் தருணங்களின் வழியாகத் தொகுத்துக் காட்டினார்.

கிராமத்தில் வெள்ளந்தியாகத் தன் முதுமையைக் கழிக்கும் சொக்கலிங்கம் தன் மனைவியின் இறப்புக்குப் பின்னால் தனக்கிருக்கும் ஒரே ஆதரவான தன் தம்பி மகன் வாசுவைக் காண சென்னை வருகிறார். பெரியம்மாவின் இறப்புக்கு சில சூழ்நிலை காரணமாகச் செல்ல முடியாத வாசுவும் அவன் மனைவி துளசியும் அவரை அன்புடன் வரவேற்று உபசரிக்கிறார்கள். சாவுக்கு வரமுடியாததன் காரணத்தை விளக்கி வருத்தம் தெரிவிக்கிறார்கள். தன் எதிர்காலம் பற்றிய எந்தத் திட்டமும் இல்லாமல் வந்திருக்கும் பெரியவரின் இருப்பு தம்பதியர்களைக் கவலை கொள்ள வைக்கிறது. காரணம், அவர்களோ எல்.கே.ஜி படிக்கும் தன் ஒற்றை மகளை வைத்துக் கொண்டு, நிறைவற்ற பொருளாதார நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாசு ஒரு சிறிய வேலையில் இருந்து கொண்டு சொற்ப வருமானம் ஈட்டி தன் அளவான குடும்பத்தை சிரமப்பட்டு நடத்தும் ஒரு கீழ்தட்டு மத்தியதர வர்க்க மனிதன். மட்டுமல்லாமல் வாசுவின் மனைவியும் வயிற்றில் தங்கள் இரண்டாவது குழந்தையைச் சுமந்து கொண்டு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.

வேறெந்த உற்றார் உறவுமற்ற அந்த முதிய மனிதன் இருத்தலில் சார்ந்த நெருக்கடியான இந்தச் சூழ்நிலையை உணர்ந்து தன் இறுதி வாழ்வைத் தானே அமைத்துக் கொள்வதை மேலான கலைநேர்த்தியோடு பதிவு செய்துள்ள படம் தான் ‘சந்தியாராகம்’

நகரவாழ்வின் நெருக்கடிகளையும் மத்தியதரக் குடும்பங்களின் நிர்பந்தங்களையும் உறவுமுறைகளின் வீழ்ச்சியையும் பரஸ்பரப் புரிதல்களின் சிக்கல்களையும் அரசின் நிர்வாக அவலங்களையும் முதியோர் இல்லங்களின் நியாயமான தேவைகளையும் துல்லியமாக ஆய்ந்து அனுபவமாக்குகிறது இந்தத் திரைக்கதை.

இதில் பேசப்படும் முதுமைவாழ்வு ஒரு கலைஞனுடையதாக இருப்பது இந்தப் படைப்பை மேலும் உயிர்ப்பு மிக்கதாக ஆக்குகிறது. இந்தக் கதை நாயகனாக வரும் சொக்கலிங்கபாகவதர் கதைப்படி ஒரு நாடக நடிகராக இருந்திருக்கிறார். கலைஞனின் மனம் குழந்தைத்தனங்களால் நிரம்பியது. கட்டுப்பாடுகள் அற்றது. புறச்சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது. அவ்வகைக் குழந்தைத்தனங்களின் வெளிப்பாடுகளை முறையான காட்சிகளாக பாலுமகேந்திரா வடிவமைத்துக் கொடுக்க, சொக்கலிங்க பாகவதர் தன் அபாரமான உடல்மொழியையும் இயல்பான முகபாவனைகளையும் அற்புதமாக வெளிப்படுத்தி அந்தப் பாத்திரத்துக்கு உயிரூட்டியிக்கிறார். ஒரு கலைஞனுக்கு இயல்பாகவே இருக்கக் கூடிய தன்மான உணர்வு, அனுசரித்துப் போகும் குணம், சட்டென்று சூழ்நலையைப் புரிந்து கொள்ளும் நுண்ணுணர்வு போன்றவைகளும் பாகவதரின் பாத்திரத்தை வடிவமைப்பதில் செய்நேர்த்தியுடன் கையாளப்பட்டிருக்கிறது. இவ்விதச் சேர்மானங்களாலேயே அந்த முதியக்கலைஞனின் பாத்திரம் இதில் உயிர்ப்புடன் எழுந்து நின்று தன் இறுதிவாழ்வை நமக்கு நெகிழ்ச்சியுடன் நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது.

இந்தத் திரைக்கதையில் முதியவர் சொக்கலிங்கத்துக்கும் அவர் மருமகள் துளசிக்குமான உறவின் ஆழத்தைப் பெரும் உளவியல் ஆய்வோடு உருவாக்கம் செய்திருக்கிறார் பாலுமகேந்திரா. அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழும் உறவுத்தருணங்களில் மனிதப் புரிதல்களின் சாத்தியங்களை விரித்துக்கொண்டே செல்கிறார். எந்த ஒரு உறவுக்குள்ளும் புரிதலின் சமானம் என்பது முற்றாக நிகழ்ந்து முடிவதல்ல. உறவுகள் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் முரண்கள் என்பதும் தவிர்க்கவே இயலாத ஒரு இணை அலகாகவே இயங்கிக்கொண்டிருக்கும். அப்படி உருவாகிவரும் முரண்பாடுகளை சக உயிர்களின் பார்வை வழி நின்று உணர்வதின் மூலமாகவும் அதைப்புரிந்து கொண்டு, விட்டுக் கொடுப்பதின் வழியாகவுமே சமானப்படுத்திக் கொள்ள முடிகிறது. மனித உறவுகளுக்குள் நிகழும் இந்தச் சமானங்களை பெரியவர் சொங்கலிங்கத்துக்கும் அவர் மருமகள் துளசிக்குமாக உறவில் வெகு இளக்கமாகக் காட்டியிருப்பார் பாலுமகேந்திரா. ஒரு சினிமா பார்வையாளனின் ரசிப்புத்தன்மையை கூர்மைப்படுத்தியும் உயர்த்தியும் கொண்டுசெல்லும் படியான காட்சிகளை வடிவமைப்பதிலேயே ஒரு இயக்குநருடைய மேதமை வெளிப்படுகிறது. ‘சந்தியாராகத்தில்’ பெரியவருக்கும் மருமகள் துளசிக்குமான ஒருங்கிணைந்த காட்சிகள் அனைத்துமே அவ்வகை ரசிப்புத்தன்மையை உருவாக்குபவையே.

இந்தப் படத்தைத் தரமானதாக்கியதில் சிறப்பு சப்தங்களின் சேர்ப்புகளுக்கும் பின்னனி இசைக்கும் முக்கியப்பங்கு இருக்கின்றது. கிராமத்து மனிதர்களின் ஏகாந்தச் சூழலை பறவைகளின் கீச்சுகளையும் கால்நடைகளின் ஓசைகளையும் கொண்டும், நகர மனிதர்களின் மனஉளைச்சல்களை சுற்றி நிகழும் இரைச்சல்களையும், ரயில்வண்டியின் தடதடப்புகளைக் கொண்டுமே உணரவைத்திருக்கிறார் பாலுமகேந்திரா. பின்னனி இசையை எங்கு பயன்படுத்தக் கூடாது என்பது பற்றியும் அதை சரியாக எங்கு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் ஒரு சாதாரண சினிமா ரசிகன் கூட கொஞ்சம் கவனம் எடுத்தால் புரிந்து கொள்ள முடியம் என்பதே இந்தப்படத்தின் உருவாக்கத்தில் மிக முக்கியமான சிறப்பு. அதனால் தான் ‘சந்தியாராகம்’ போன்ற சினிமாக்கள் ‘மக்களுக்கான சினிமா’வாகப் போற்றப்படுகின்றன.

‘சந்தியாராகம்’ போன்ற ஒரு அற்புதமான தமிழ்ப்படத்தின் நெகட்டிவ் இப்போது எங்குமே இல்லாமல் போய்விட்டது என்பது தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்புதான்.