விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 7

சென்ற இதழின் தொடர்ச்சியாக:

பெண்களுக்கு தைரியம், புத்தி, திறமை இம்மூன்றும் அத்தியாவசியம் என்கிறான் பாரதி. எனக்குத் தெரிந்து இம்மூன்று குணங்களும் ஒருங்கே அமையப்பெற்றிருப்பது ஜெயலலிதாவிடம் மட்டுமே.
முன்னர் ‘பாட்டும் பரதமும்’ என்ற தலைப்பில், பரத நாட்டியம் குறித்தான மையத்துடன் பி.மாதவன் ஓர் படம் எடுக்க விரும்பினார். பரதநாட்டியம் என்றால் அப்போது நாட்டியப் பேரொளி ‘பத்மினி’,தான் அனைவரின் விருப்பமும். ஆனால், பத்மினி அப்போது நடிப்பிலிருந்து ஒதுங்கிய காலகட்டம். அடுத்த நிலையில், பரதநாட்டியம் ஆடும் பெண்ணின் கதாபாத்திரத்திற்கு தகுதியான ஒரே ஆள் ஜெயலலிதா மட்டுமே. ஜெயலலிதாவைச் சந்திக்கின்ற சமயத்தில் ’பாட்டும் பரதமும்’ படத்தின் கதையையும், அதற்கு தகுதியான நபர் நீங்கள் தான், என்றும் ஜெயலலிதாவிடம் சொன்னார் இயக்குனர் மாதவன். ஜெயலலிதாவும் மறுப்பேதுமின்றி ஒத்துக்கொண்டார். படப்பிடிப்பு தொடங்க ஒரு வார காலம் இருக்கின்றபொழுது, ஜெயலலிதாவைச் சந்தித்து, பரதநாட்டியம் ஆடுகின்ற கதாபாத்திரமாதலால், இன்னமும் கூட நீங்கள் இளைத்து மெலிதானால் நடனமாடுகின்ற பாவனைகளுக்கு பொருத்தமாக இருக்கும், என்ற தன் கருத்தினை தெரிவித்தார் இயக்குனர். ஜெயலலிதாவும் இதனை ஓர் சவாலாக எடுத்துக்கொண்டு உடலை இளைக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார்.

சந்தியா 1971ஆம் ஆண்டு காலமானார். சந்தியாவின் தங்கை வித்யாவதி தான் அப்போது, ஜெயலலிதாவுடன் இருந்து, அவரின் பொறுப்புகளை கவனித்துவந்தவர். அவருக்கோ அதிர்ச்சி, காரணம், ஜெயலலிதா சரியாக சாப்பிடவில்லை, அறைக்குள்ளேயே எந்நேரமும் அடைபட்டுக் கிடக்கிறாள் என்ற கவலை.

வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாமலேயே இருந்த காரணத்தில் வித்யாவதி ஜெயலலிதாவின் அறைக்குச் செல்ல ஆயத்தமானார். நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும். அறையின் கதவை ஜெயலலிதா தாழ்ப்பாள் போடவில்லை. கதவைத் திறந்து பார்த்த வித்யாவதிக்கு பயம் தொற்றிக்கொண்டது. காரணம், ஜெயலலிதா மயக்கமுற்று தரையில் விழுந்து கிடக்கிறார். அவரை அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதற்குள்ளாகவே பத்திரிக்கை ஊடகத்தினருக்கெல்லாம் செய்தி எட்டியிருக்கின்றது. மருத்துவமனை முன்பாக கூட்டமாக சூழ்ந்துகொண்டனர்.

சூழலைச் சமாளிக்கவே மருத்துமனையின் உள்ளாக செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால், பத்திரிக்கைகளில் ‘ஜெயலலிதா தற்கொலை முயற்சி என்றும், தூக்க மாத்திரை சாப்பிட்டிருக்கின்றார். மருத்துவமனைக்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை’ என்றும் திரித்து வெளியிட ஆரம்பித்துவிட்டனர், ஏதோ ஓர் நபர் செய்த வினை, அனைத்துப் பத்திரிக்கைகளிலும் இதுவே செய்தியாக அடிபட்டது.

செய்தியாளர்களுக்கும், சினிமாவிற்கும் நெருக்கமானவன் என்ற காரணத்தினால், என்னை அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். நான் உடனடியாக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் விலாசத்தை வாங்கிக்கொண்டு வேகமாகச் சென்றேன். பத்திரிக்கையாளர்கள் பலரும் வாசலில் நின்றுகொண்டிருக்கின்றனர். ’சோ’,தான் மருத்துமனையில் இருந்தார். பின்பு, சோ, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடந்த உண்மைகளை விளக்கிக் கூறினார். மேலும் ஜெயலலிதா தற்கொலை முயற்சி என்று வந்ததெல்லாம் வதந்தி என்றும் புரியவைத்தார்.

அதற்குள் ஜெயலலிதாவும் கண் விழித்திருந்தார். அவரிடம் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட செய்தியைக் காட்டினோம். இச்செய்திக்கு கண்டிப்பாக அப்பத்திரிக்கைகள் மறுப்புச்செய்தி வெளியிட வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார்.

அதே சமயம், பெங்களூரில் ஜெயலலிதா நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான ஒப்பனை அரங்குகளை நிர்மாணிக்கும் பணிகள் முழுவீச்சுடன் நடந்தேறுகின்றன. அப்போது ஜெயலலிதா தூக்கமாத்திரை சாப்பிட்டிருக்கின்றார், தற்கொலை முயற்சி என்ற செய்தி, பெங்களூரிலும் பரவியுள்ளது. இதுவும் ஜெயலலிதாவிற்கு தெரியவந்தது. பத்திரிக்கைச் செய்தியை பொய்யாக்க வேண்டும் என நினைத்த அவர் உடனடியாக பெங்களூருக்கு கிளம்பினார்.

படப்பிடிப்பை நிறுத்திவிடலாம் என்ற நிலையிலிருந்த படக்குழுவினருக்கு, தூக்கமாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என்ற புரளியை மறுதலிக்கும் விதமாக, ஜெயலலிதா விமான நிலையத்திலிருந்து வந்திறங்குவது அனைவர் முகத்திலும் ஆச்சர்யக்கலையாக இருந்தது. தொடர்ந்து படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். இப்படியாக “பாட்டும் பரதமும்” என்ற திரைப்படம் பி.மாதவன் இயக்கத்தில், சிவாஜி கணேசன், ஜெயலலிதா ஆகியோரது நடிப்பில் 1975ஆம் ஆண்டு வெளியாகியது.
கன்னட இதழில் ஒரு பேட்டியில் ‘ என் பூர்வீகம் ஸ்ரீரங்கம், தமிழ்நாடு, நான் கன்னடக்காரர் இல்லை” என்று சொல்லியிருக்கின்றார். பிறிதொரு நாளில் மைசூரில் நடைபெறவிருக்கின்ற தசரா பண்டிகைக்கு ஜெயலலிதாவின் நாட்டியக் கச்சேரியையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டிருந்தனர். அவரும் ஒத்துக்கொண்டு முன்தொகையும் வாங்கிவிட்டார். இதேசமயம், அவர் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியும் வெளியாகியிருக்கின்றது. ஜெயலலிதாவின் நாட்டியக்கச்சேரியில் பிரச்சனை பண்ணுவது என்று கர்னாடக மக்களில் சிலர் முடிவோடு இருந்தனர். பெங்களூர் என்றால் பரவாயில்லை, மைசூர் இன்னும் மோசம். அதனால், நாட்டியக் கச்சேரிக்குச் செல்லவேண்டாம் என்று பலரும் சொன்னார்கள். ஜெயலலிதாவிற்கும் அதுவே சரியெனப்பட்டதால் அவரும் வாங்கிய முன் தொகையை திருப்பிக்கொடுத்துவிட்டார்.

இச்சம்பவம் மேலும் கர்நாடக மக்களை எரிச்சலூட்டியது எனலாம். செப்டம்பர் மாதம் ஜெயலலிதா நடிப்பில் ‘கங்கா, கெளரி’ படப்படிப்பு நடக்கிறது. இது கன்னடத்திலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்படுகின்ற படம். பி.ஆர்.பந்தலு (எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி வெற்றி மலர் சூடிய ‘ஆயிரத்தில் ஒருவன்’, திரைப்படத்தின் இயக்குனர்) இதன் இயக்குனர். ஜெமினி கணேசனும், ஜெயலலிதாவும் இணைந்து நடிக்கின்றனர்.

படப்பிடிப்புகள் துவங்கும் சமயத்தில், மைசூர் பிரிமியர் ஸ்டூடியோ உரிமையாளர் பந்தலுவிடம் தொலைபேசியில் பேசினார். இங்கு படப்பிடிப்பு நடத்தினால் எல்லாமே இலவசமாகச் செய்துகொடுக்கிறேன். அறை, படப்பிடிப்பு எல்லாமே குறைந்த செலவுதான் என்று சொல்லியிருக்கின்றார். “கங்கா, கெளரி”, திரைப்படத்தின் தயாரிப்பாளராகாவும் பி.ஆர். பந்தலுவே இருக்கின்ற காரணத்தினால், பணம் மிச்சமாகுமே! என்று அங்கு வர ஒப்புக்கொண்டுவிட்டார். மைசூரில் படப்பிடிப்பு நடக்கின்ற தேதியும், ஜெயலலிதா நாட்டியக்கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்து மறுத்த தேதியும் ஒரே நாளில்தான் வருகின்றது.

என் தலைமையில், என்னுடன் ஆறு பத்திரிக்கையாளர்களும், புகைப்படம் எடுப்பதற்காகவும், படப்பிடிப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்பு எடுப்பதற்காகவும் மைசூருக்குச் செல்கின்றோம். எங்களைப் பார்த்ததும் ஆச்சரியத்தோடு, “எங்க வந்தீங்க?” என்று பந்தலு கேட்டார். “ஷீட்டிங்க் கவர் பண்ண வந்திருக்கோம்” என்று சொன்னேன். ’படப்பிடிப்பு துவங்க இன்னும் நேரம் ஆகும்’, என்று சொன்னவர், எங்களுக்கு அவரின் தனிப்பட்ட கவனத்தில் மூன்று கார்கள் ஏற்பாடு செய்தார். அதில் எங்களை மைசூரை சுற்றிப்பார்க்கச் சொன்னார். நாங்களும் கிளம்பினோம்.
அடுத்த நாள் காலையில் படப்பிடிப்பு நடக்கின்றது. படப்பிடிப்பை கலைப்பதற்காக, அரிவாள், கத்தியுடன், கம்புடன் அம்மாநில மக்கள் கும்பலாக நிற்கின்றார்கள். ஸ்டூடியோ உரிமையாளருக்கு போன் செய்கிறோம். போலீஸைக் கூப்பிடுவதாச் சொல்கிறார். காவலையும் மீறி ஜெயலலிதாவைத் தாக்குவதற்காக முரட்டுக்கும்பல் ஒன்று அவர் தங்கியிருக்கின்ற அறையைத் தேடி ஸ்டூடியோவினுள் அலைகின்றது. ஜெயலலிதா தங்கியிருந்தது, நான்காவது மாடியில். அதே மாடியில் தங்கியிருந்த ஜெமினி கணேசன் பாதுகாப்பாக இன்னொரு இடத்தில் மறைந்துகொண்டார்.

படத்திற்கான ஒப்பனைகளைக் கலையாமல் மேக்கப் சகிதமாக ஜெயலலிதா அறையினுள் இருக்கின்றார். ஜெயலலிதா தங்கியிருந்த அறையைக் கண்டுபிடித்து, அதன் வெளிப்பக்கமாக தாழிட்டுவிட்டோம். கூட்டத்தினர் கடும் வசைச்சொற்களால் திட்டிக்கொண்டும், கற்களை வீசியெறிந்தபடியேயும் ஸ்டூடியோவினுள் நுழைகின்றனர். போலிஸ் பலத்துடனே அந்தக் கும்பல் வருவதுபோல ஒரு பிரமை. நாங்கள் பத்து பேரும் ஜெயலலிதாவின் அறைக்கு முன்னால் அரண் போல நிற்கின்றோம்.

ஜெயலலிதா அக்கூட்டத்தினரிடம் சென்று மன்னிப்பு கேட்டிருந்தாலோ, அவர்கள் மனம் புரியும் படி பேசியிருந்தாலோ அவர்கள் கலைந்து சென்றிருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் அப்படியேதும் செய்யவில்லை. ”நான் சொன்னதில் மறுப்பேதுமில்லை, நான் பிறந்ததுதான் கர்நாடகமே தவிர, தமிழ்நாடுதான் என் பூர்வீகம், என் அம்மா தமிழ், நானும் தமிழ், நான் சொல்லியது உண்மை, பின்பு எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?”, என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

போலீஸார் வந்தவுடன் நாங்கள் கதவைத் திறந்துவிட்டோம். ஜெயலலிதாவை அங்கிருந்து சென்றுவிடும்படியும் காவலர்கள் கூறினார்கள். தகுந்த பாதுகாப்பு அளிப்பதாயும் சொன்னார்கள். ஆனால், ”இயக்குனர் சொல்லட்டும் நான் இங்கிருந்து செல்கிறேன்”, என்று சொன்னார் ஜெயலலிதா. இந்தத் துணிச்சல் வேறு யாருக்கும் வராது.
பந்தலுவும் அங்கு வந்து சேர்ந்திருந்தார். கூட்டத்தினரிடையே பந்தலு பேசுகின்ற பொழுது, ‘நானும் கர்நாடகம் தான், அவர்கள் என்னை நம்பி வந்திருக்கின்றார்கள். அவர்களின் உயிருக்கு நாம்தான் பாதுகாப்பு அளிக்கவேண்டும். நம்பி வந்தவர்களை காயப்படுத்தினால் அது நமக்கும் நம் மண்ணுக்கும்தான் கலங்கம்”, என்று சொல்லி புரியவைத்தார். கும்பல் கலைந்து சென்றது.

எனினும் போலீஸாரின் பாதுகாப்புடன் இரவு பதினொரு மணிக்கு, இயக்குனர் சொல்லியதன் பேரில் ஜெயலலிதா பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சென்னை வந்தவுடன் தன் உயிரைக்காப்பாற்றிய பத்திரிக்கையாளர், நண்பர்கள் என்று என்னுடன் இருந்த பத்து பேருக்கும், உயர் விலைமதிப்பான பேனாவை ஜெயலலிதா பரிசாக அளித்தார்.

பிரச்சனை என்று தெரிந்தும் அவர் மைசூருக்கு வர சம்மதித்ததால் அவர் தைரியசாலி என்று சொன்னேன். அவரைப் போல ஆங்கிலப் புலமை வாய்ந்தவர் கிடையாது எனவே அவர் புத்திசாலி, கர்நாடகத்தில் தனக்கான பாதுகாப்பு கேள்விக்குறியானாலும், தான் சொன்ன சொல்லில் மாறாதவராக இருந்தது அவரின் துணிச்சலைக் காட்டுகின்றது. அவரின் திறமை தான் முதலமைச்சராகவும் இன்று ஆக்கியுள்ளது. பாரதி கண்ட குணங்கள் ஒருங்கே அமையப்பட்டிருப்பது ஜெயலலிதாவிடம் தான்.
தொடரும்...