புகைக்குள் ஒளிரும் தீயின் கண்கள்

நினைவுகள் மிகவும் விசித்திரமானவை. சிரித்துக் கழித்ததை நினைத்து அழவும், அழுது துவண்ட சில கணங்களை நினைத்து இப்போது சிரிக்கவும் வைக்க நினைவுகளால் மட்டுமே இயலும். கலை, இலக்கிய வடிவங்களில் யாவற்றிலும் காதல் கொண்டாடப்பட்ட விதத்தில் அனேகமாக வேறெதுவும் கொண்டாடப்பவில்லை. வரலாற்றில் மிக நெடிய ஓட்டத்தின் எல்லா தருணங்களிலும் ஒரு பால் காதல் குறித்த அணுகலில் ஒரு விலகலே பொதுப் புத்தியில் உறைந்து போயிருக்கிறது. திரைப்படங்களும் இதில் விதிவிலக்கல்ல. ஆண்-பெண் காதலை வியந்தோதும் படங்களே எப்போதும் காதல் படங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. மனிதப் பொதுப் புத்தியில் பெரும்பான்மையே இயற்கையானது அல்லது இயல்பானது என்பதே எழுதப்பாடாத நியதியாக இருக்கின்றது. காமத்தை கொண்டாடிடும் கதைகளிலும் இதுவே வாடிக்கையாக இருக்கிறது.

சாமனிய வாழ்க்கை வாழ்பவர்கள் தங்களது ஞாபகங்களை சேகரித்து வைத்து, தேக்கி வைத்த மனப்பக்கங்களை மீண்டும் மீண்டும் புரட்டிப் புரட்டித் தான் அதனை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் கலைஞர்கள் அப்படி அல்ல. அவர்களது ஞாபகங்களை சேமிக்கும் கலன்களாக தமது கலை வடிவத்தையே அவர்கள் உருமாற்றுகிறார்கள். அவர்களுக்கு ஞாபகங்களை கலையாக மாற்றும் ரசவாதம் கைக்கூடுகிறது. தமது நினைவுகளை நீங்கா நினைவுகளாக மாற்றி பத்திரப்படுத்த சாமானியர்கள் எப்போதும் ஒரு பாடலையோ, ஒரு இசைக் கோர்வையையோ. ஒரு ஓவியத்தையோ. ஒரு கவிதையையோ. ஒரு திரைப்படக் காட்சியையோ, ஒரு பிரதியையோ ஓர் கிடங்காக உருமாற்றிக் கொள்கின்றனர். கலைஞர்களிடமும் – அவர்தம் வழி கலையிடமும் - இதன் பொருட்டே அவர்கள் என்றைக்கும் கடன் பட்டவர்களாகிறார்கள்.
 
பொதுவாக ஒரு திரைப்படத்தின் சட்டங்களில் (frames) அவ்வப்போது ஒன்றிரண்டு, ஒரு ஓவியம் போல மனதில் ஒட்டிக் கொள்ளுமளவிற்கு கலையம்சம் கூடியதாக அமையும். ஆனால் ஒரு திரைப்படத்தின் ஏறத்தாழ எல்லா சட்டங்களுமே ஏதோ பிரஞ்சு சித்திரப் பிரதிமைகளை (French Portraits) அடுக்கி வைத்தது போல பிரமையை ஏற்படுத்தி, பார்த்துக் கொண்டிருப்பது திரைப்படமா அல்லது ஒரு ஓவியக் கூடத்தில் காண வாய்த்த தொடர் ஓவியங்களா என ஐயப்படுகிற ஒரு சுகானுபவத்தை ஒத்ததாக இருந்தது செலீன் ஷியாமா (Céline Sciamma) இயக்கத்தில் வெளியான The Portrait of a Lady on Fire (2019) திரைப்படத்தின் பார்வை அனுபவம். பொதுவாகவே கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் ஒரு வித கனவின் அம்சம் ஒட்டிக் கொள்வதாக எனக்குத் தோன்றும். மனிதக் கண்களால் இயல்பில் காண முடியாதென்பதாலேயே கருப்பு வெள்ளையில் ஒரு வித வசீகரம் ஒட்டிக் கொள்ளும். போலவே ஒளியின் நடனத்தை நாம் வண்ணப்படங்களை விடவும் கருப்பு வெள்ளையில் தான் கவித்துவத்தோடு உணர முடியும். மிக அபூர்வமாகவே வண்ணப்படங்களில் அந்த ஒளியின் கனவு நிலைக்கான பாய்ச்சல் நிகழும். இப்படத்தில் ஒளி கனவின் அம்சத்தை எட்டிப் பிடித்துள்ளது. 


பதினெட்டாம் நூற்றாண்டு பிரான்ஸில், தனது மாணவிகளுக்கு ஓவியப் பாடங்களை எடுக்க தானே ஒரு மாதிரியாக (Model) அமர்ந்திருக்கிறாள் மரியன். அவர்களுக்கு குறிப்புகளை வழங்கிக் கொண்டிருப்பவளின் கண்ணெதிரே அவள் மறைத்து வைத்திருந்த ஓர் ஓவியம் பார்வையில் படும்படியாக இருப்பதைக் கண்டு அது குறித்து வினவ, ஒரு மாணவி தான் தான் அதனை எடுத்து வைத்ததாக சொல்லி, மன்னிப்புக் கோருகிறாள். ஆனாலும் ஆர்வமடங்காது அது என்ன ஓவியம் என அவர்கள் கேட்க, மரியன் அதன் பெயர் The Portrait of a Lady on Fire என்கிறாள். ஒரு பெண் வெட்டவெளியின் இருளில் கரைந்திருக்க அவளது ஆடையின் நுனி தீப்பற்றி எரிவது போன்ற அவ்வோவியம் அவளுக்குள் துயிலும் நினைவலைகளை கிளர்த்துகிறது.  

தெற்கு பிரான்சைச் சேர்ந்த பிரட்டனி பகுதியில் இருக்கும் ஒரு தீவிற்கு ஒரு சீமாட்டியின் சித்தரப் பிரதிமையை வரைந்து கொடுக்கும் பணிக்கென வருவிக்கப்படுகிறாள் மரியன். அவளது பணி தற்பொது மிலன் நகரத்து பிரபு ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கும் ஹேலோயிஸூடைய சித்திரப் பிரதிமையை வரைவதே. முன்னரே வேறு யாரோ வரைந்த ஹெலோனிஸின் ஒரு சித்திரப் பிரதிமையின் முகம் மட்டும் அழிக்கப்பட்டு இருப்பதைக் காண்கிறாள் மரியன்). ஆனால் அது குறித்த சிக்கலை மரியன் வந்த நாளிலேயே சொல்லி விடுகிறாள் ஹெலோயிஸின் தாய். திருமணத்தில் விருப்பமற்று இருக்கும் அவள் படம் வரைய மாதிரியாக அமர மறுப்பதால், அவளறியாமலேயே அவ்வேலையை செய்ய வேண்டுமென்கிற சவாலை எதிர்கொள்ள நேர்வது குறித்து மரியன் புரிந்து கொள்கிறாள். அதனை ஏற்கவும் செய்கிறாள். 

அவர்களது வீட்டுத் பணிப்பெண் மேலதிக தகவல்களைத் தர, அதனை வைத்துக் கொண்டு தானொரு ஏற்பாடு செய்யப்பட்ட துணையாளராக ஹெலோயிஸோடு இருப்பதான பாவனையில் அவளது தோற்றத்தின் நுணுக்கமான விவரணைகளை மனதில் இருத்திக் கொண்டு பின் அதன் துணை கொண்டு ஒரு ஓவியத்தை தீட்டுவதேன செயல் திட்டம் தயாராகிறது. தானொரு ஓவியர் என்பதையோ தான் வந்திருக்கும் நோக்கம் குறித்தோ எதுவுமே வெளிப்படா வண்ணம் நடந்து கொள்ளும் மரியன், ஹெலோயிஸ் காலார நடந்து வரப் புறப்படுகையில் அவளோடு தற்செயலாக இணைந்து கொள்வதைப் போல ஒட்டிக் கொள்கிறாள். தனக்குள்ளேயே ஒடுங்கிக் கொள்கிற சுபாவம் கொண்டவள் போலவும், சமயங்களில் விசித்திரமான மௌனத்தில் கரைந்து போகக்கூடியவளாகவும் இருக்கிற ஒரு பெண்ணோடு இயைந்து போவதற்கு ரொம்பவே சிரமப்படுகிறாள் மரியன். 

ஒவ்வொரு முறையும் அவளோடு வெளியில் செல்லும் போதிலும், அவளது அங்கங்கள், வளைவுகள், கைகளை அவள் வைத்துக் கொள்ளும் விதமென ஒவ்வொரு தகவலையும் மனதிற்குள் குறித்துக் கொள்கிறாள், அவளறியா வண்ணம் வாய்ப்புக் கிடைக்கையில் உடைக்குள் ஒளித்து வைத்திருக்கும் அவளது குறிப்பேட்டிலும் வரைந்து கொள்கிறாள். இரவுகளில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தனிமையில் ஓவியத்தை தீட்டவதென நாட்கள் கழிகின்றன. 

எதிர்பார்த்ததற்கு மாறாக மிகச் சில நாட்களிலேயே மரியனிடம் நெருங்கமாக மட்டுமல்லாமல் மிக வெளிப்படையாகவும் மரியனை தனது தோழியாக பாவிக்கிறவள் போல பழகத் துவங்குகிறாள் ஹெலோனிஸ். தனது அக்காளின் துர்மரணத்தால் உடைந்து போயிருக்கும் ஹெலோனிஸிடம் அது குறித்தும், உண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் திருமணத்தின் மீதான அவளது நிலைப்பாடுகள் என உரிமையெடுத்து மரியன் பேசியது கூட அதற்கு வழிகோலி இருக்கலாம்.

பின்னர் ஒரு முறை அவர்கள் இசை குறித்து பேசிக் கொண்டிருக்கையில், தான் தேவாலயத் திருப்பலிகளுக்கு செல்வதே இசை கேட்கத்தான் எனச் சொல்லும் ஹெலோனிஸிடம் அவள் ஆர்கெஸ்ட்ரா கேட்டதில்லையா என மரியன் வினவ, இல்லை என்றும் தனக்கு ஏதேனும் ஒரு இசைக் கோர்வையை வாசித்துக் காட்டுமாறு அவள் கேட்கிறாள். அவள் அப்போது வாசிக்கும் இசைக் கோர்வை ஆண்டோனியோ விவால்டியின் நான்கு பருவங்கள் (Antonio Vivaldi’s The Four Seasons) இசைத் தொகுப்பில் வருகிற Summer கோர்வையின் முதலாவது பகுதி. அவள் அந்த இசையின் ஒவ்வோர் பகுதியும் என்ன சொல்ல வருவதாக தான் உணருவதாகப் பகிர பகிர, அவர்கள் இருவரும் கண்களுக்குள் கரைவது போல பார்வைகளை பரிமாறிக் கொள்கின்றனர், குறிப்பாக ஹேலோனிஸின் பார்வை மரியனுக்குள் விழ்வதை உணரலாம். மனித கற்பனையும், இசை நுட்பமும் சந்திக்கும் புள்ளியாக இந்த குறிப்பிட்ட காட்சியை மரியன் விவரிக்கும் விதத்தைக் முன்வைத்து நாம் உள்வாங்க முடியும். 


அடுத்த சில நாட்களில் தான் எடுத்த பணியை முடித்து விட்டாலும் ஹேலோனிஸ் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் பால் மனசஞ்சலப்பட்டு தான் வந்ததன் உண்மையான நோக்கத்தை அவளிடம் தானே சொல்ல விரும்புவதாக அவளது தாயிடம் சொல்லிய பிறகு, அவள் விளக்கொளியில் அங்கு வந்த புதிதில் பார்த்திருந்த அந்த முகம் அழிந்த ஓவியத்தை காணும் போது தற்செயலாக அந்த ஓவியத்தின் இதயமிருக்கும் பகுதியில் விளக்கின் ஜுவாலை பட்டு தீப்பற்றி எரியும் காட்சி எத்தனை குறியீட்டு ரீதியிலானது என்பது கதையின் பிந்தைய போக்கில் நாம் உணர முடியும். 

மறுநாள் வழக்கம் போல கடற்கரையில் அவர்கள் அமர்ந்திருக்கும் பொழுதில் தனது உண்மையான நோக்கத்தை மரியன் வெளிப்படுத்த அதனை கசப்புடன் எதிர்கொள்கிறாள் ஹெலோயிஸ். அன்றைய நாளில் மரியன் கிளம்ப இருப்பதையும் அவள் முன்னரே அறிவாள். அந்த ஓவியத்தைக் அவள் கண்டபின் அது நானா எனவும் இப்படித்தான் நீ என்னைப் பார்க்கிறாயா எனவும் அவள் வினவ அயர்ந்து போகிறாள் மரியன். ஒரு ஓவியராக தனது படைப்பை உயிர்ப்பில்லாதது என விமர்சிக்கப்பட்டதை சீரணிக்க இயலாத மரியன் தானே அதனை அலங்கோலப்படுத்தி விடுகிறாள். 

ஓவியம் தனக்கு திருப்தியளிக்கவில்லை எனவும் தான் மீண்டும் வரையத் துவங்குவதாகவும் சொல்ல, ஹெலோனிஸின் தாயோ மரியனின் திறமையின் போதாமை அது எனச் சொல்லி அவளை வெளியேறுமாறு சொல்ல, அதனை மறுத்து மரியன் தான் ஓவியத்தை மீண்டும் வரைய வேண்டுமெனவும் அதற்கு மாதிரியாக தானே அமர்வதாகவும் ஆச்சரியமூட்டும் விதமாக தெரிவிக்கிறாள் ஹெலோனிஸ். தான் வெளியே செல்ல இருப்பதாகவும், பயணம் முடித்து ஐந்து நாள் கழித்து திரும்புகையில் பணி முடிந்திருக்க வேண்டும் எனவும் சொல்கிறாள் அவளது தாய். பணிப் பெண் மட்டுமே துணையிருக்க இரு பெண்களும் தனிமை நிரம்பிய சூழலில் இருக்கின்றனர். ரகசியங்கள் உடைந்த பிறகான அந்த பொழுதுகளில் மனத்தடைகள் இன்றி அவர்களால் இயல்பாக இருக்க முடிகிறது. அச்சமயம் தான் தவறி கருவுற்று இருக்கலாமென சந்தேகிக்கும் பணிபெண்ணுக்கு அதனைக் கலைக்க மூன்று பெண்களும் பல முயற்சிகள் மேற்கொள்கின்றனர். 

பிறகு ஓவியம் தீட்டும் முன்னேற்பாடுகள் அரங்கேறவும், சூழல் மாறுகிறது. அவர்களுக்கிடையே கனன்று கொண்டிருக்கும் ஏதோ ஒன்று கண்கள் வழியே பரிமாற்றமடைகிறது. தமது மிக மிக நுட்பமான பாவனை மாற்றங்களை மற்றவர் அறிந்துள்ளதை ஆச்சரியத்தோடு புரிந்து கொள்கின்றனர். மறுநாள் தான் வரையப்படுவதன் ஊடாக முதன் முறையாக மனம் விட்டு புன்னகைக்கிறாள் ஹெலோனிஸ். அப்போது அவள் கண்களாலும், அதுவரை துஞ்சிய சொல்ல இயலா வெறுமையோ துயரோ ஏதுமற்று, சிரிக்கிறாள் பின்மாலையில் பெண்கள் மூவரும் ஆர்ஃபியஸ் மற்றும் யூரிடிஸின் கதையை வாசித்து பின் விவாதிக்கின்றனர். படம் நெடுகிலும் கணப்பு அடுப்புகளில் தீ எரியும் தணலில் முறியும் சுள்ளிகளின் ஒலி பின்னணியில் ஒலித்துக் கொண்டே இருக்கும். வேறு எந்த இசையும் இல்லாமல் அவ்விருவரின் கண்களில் ஒளிறுமந்த தீயின் நடனம் பகிராத காதலின் ஆற்றாமை எனக் கூடத் தோன்றும். 


அதனை தொடர்ந்து அவ்விரவில் அவர்கள் மூவரும் பெண்கள் மட்டுமே பங்கெடுக்கும் ஒரு வெட்டவெளி நிகழ்விற்கு செல்லும் போது அனைவரும் பாடிக்கொண்டிருக்க தாகம் நிரம்பிய பார்வையோடு மரியனைப் பார்த்துக் கொண்டே செல்லும் ஹெலோயிஸின் ஆடை நுனியில் தீப்பற்ற சற்றைக்கெல்லாம் அது அணைக்கப்படுகிறது. அவர்களுக்கிடையே கனறத் துவங்குகிறது சொல்லாக் காமம். மறுநாள் தழுவுகிற கைகள் நழுவிட, பின் கடலின் ஆர்ப்பரிப்புக்கிடையில் பாறைகளின் இடையே அவர்கள் முதல் முத்தத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். கதையின் - முந்தைய இரவிலிருந்து அதுவரையிலும் வருகின்ற - ஒவ்வொரு சட்டத்திலும் இருக்கிற இயற்கையின் அம்சங்கள் அத்தனையுமே அவர்களது கனறும் காமத்தை உணர்த்துகிறவையாகவே இருக்கின்றன. 
  
சொற்களால் வடிக்க இயலாத ஒரு எழுதலும், வீழ்வும் ஒருசேர அவர்களை அமிழ்த்துகிறது. காதலின் தழைகளும் கொடிகளும் அவர்களைச் சுற்றிக் கொள்ளும் அரூபக் கயிறாகின்றன. மரியனுக்கு ஹேலோயிஸ் திருமண உடையில் நிற்பதைப் போன்ற தோற்ற மயக்கங்கள் வரத் துவங்குகின்றன. தொடரும் அந்நாளிரவில் புதிரென அதுவரை வைத்திருந்த தமதுடல்களை அவர்கள் அறிகிறார்கள். தங்களுக்கு இருக்கிற ஒரு பால் காதலை உணர்ந்ததும் தொடரும் நாட்கள் அதிலேயே கரைகின்றன. பெரும்புனலின் மிதக்கும் தக்கைகளென ஆகின்றனர் அவர்களிருவரும். ஓவியம் ஒரு வழியாய் முடிகிறது. இம்முறை தனக்கும் அது பிடித்திருப்பதாகச் சொல்கிறாள் அவள். 

கடந்த முறை ஓவியத்தை அழித்தது உண்மையில் உனக்கு பிடிக்காததனாலே தானே மரியன் என அவள் வினவ, மரியனோ, ”இம்முறையும் நான் வரைந்திருக்கும் ஓவியத்தை அழிக்கவே விரும்புகிறேன். இதன் வழியாக நான் உன்னையே இன்னொருவருக்கு கொடுக்கிறேன்!” என அவள் பதிலுரைக்கும் தருணம் அக்காதலின் வெம்மை சுடுகிறது. அதுவே அவர்களுக்கிடையில் ஊடலாகவும் மாறுகிறது. தங்கள் காதலே பெருங்கடலெனப் பொங்கி நுரைத்து தங்களை அமிழ்த்துவதை உணருகின்றனர். ஹேலோயிஸின் தாயார் மறுநாள் வரவிருப்பதை பணிப்பெண் அறிவிக்கிறாள். தங்களது தனித்த பொழுதுகள் முடிவுக்கு வருவதைக் உணரும் இருவருமே யதார்த்தத்தை எதிர்கொள்ள தடுமாறுகின்றனர். அன்றைய பொழுதை தங்களுக்கேயான இறுதி நாளெனக் கருதி தீர்க்க முயலுகின்றனர். காமம் தளும்பும் கணங்களுக்குப் பிறகு நினைவுப் பரிசுபோல தான் வரைந்திருந்த ஹெலோயிஸின் ஓவியத்தின் சிறு பிரதியொன்றை வரைந்து தனக்கென வைத்துக் கொள்கிறாள் மரியன். 
தனது ஓவியம் ஏதேனும் ஞாபகார்த்தமாக வேண்டுமா என வினவ என் அருகில் படுத்திருக்கும் உன்னை இப்படியே ஒரு ஓவியம் தீட்டித் தா எனக் கேட்க மரியன் ஹெலோயிஸிடம் இருக்கும் ஒரு புத்தகத்தின் இருபத்தியெட்டாவது பக்கத்தில் தீட்டித் தருகிறாள். அன்றைய இரவை அவர்கள் இருப்பால் மட்டுமே நிறைத்து பெரும்பான்மையாக மௌனமாக விழிக்களின் வழி மட்டுமே பேசிக் கொள்கின்றனர். பிறகு கடந்து வந்த அச்சில நாட்களின் நினைவுகளை அசை போட்டபடி உறங்கிப் போகின்றனர். 

மறுநாள் ஓவியத்தை ஹேலோனிஸின் தாய் பார்த்து திருப்தியுற மரியனின் பணி அங்கு நிறைவுறுகிறது. தன்னை அவ்வப்போது அலைகழித்த தோற்ற மயக்கத்தில் வந்து போகிற அதே திருமண உடையில் ஹேலோனிஸை உடுத்தி தயார் செய்கிறாள் அவளது தாயார், மணமகனைச் சந்திக்க ஏதுவாக. சம்பிரதாயமாக அவளிடம் தழுவி விடைபெறும் மரியனுக்கு, அது போலவே இயல்பு போல நடித்து ஹெலோயிஸை தழுவி விடை பெறுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. இறுதியாய் ஒரு தழுவல் என அவளை தழுவி விடைபெறுகிறாள். அங்கு நிற்கத் திராணியற்று விரையும் மரியனை திரும்பிப் பார் எனும் ஹெலோயிஸின் குரல் திருப்ப, இறுதியாக ஒரு முறை அவளைப் பார்ப்பதோடு நினைவுகளின் பயணம் நிறைவடைகிறது. 


அதற்குப் பிறகான நிகழ்காலத்தில் இரு முறை மரியன் அவளைக் காண நேர்கிறது. முதன் முறை ஒரு கண்காட்சியில் ஓவியமாக. ஒரு குழந்தையுடன் அவள் அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கிற அவ்வோவியத்தின் கண்கள் மீண்டும் முன்பிருந்த அவ்வெறுமை குடிகொண்டிருக்கிறது. அவளது கரங்களில் விரல்களால் பற்றப்பட்ட ஒரு புத்தகம் இருக்கிறது. பகுதியாக பிரிந்திருக்கும் அதன் விளிப்பில் பக்க எண் இருபதியெட்டு ஓவியத்தில் உறைந்து போன ஒரு கணத்தின் மௌன சாட்சியென இருக்கிறது. அதனைக் காணும் மாத்திரத்தில் தன்னை மறந்து புன்னகைக்கிறாள் மரியன், விழிகளில் ஈரம் மின்ன. 
இரண்டாவது முறை தான் மட்டும் அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கிறது மரியனுக்கு. ஒரு இசை நிகழ்ச்சியின் போது தொலைவில் இருந்து எதிரெதிரான பார்வையாளர் உப்பரிகைகளில் அவளைப் பார்க்கும் அத்தருணத்தில் மிகச் சரியாக விவால்டியின் அதே சம்மர் இசைக் கோர்வை இசைக்கப்படுகிறது. பொங்கியெழும் இசை பழைய ஞாபகங்களைக் கிளற தனது ஆர்ப்பரிக்கும் உணர்வுகளைக் கட்டுப்படுத்து திணறும் ஹேலோயிஸை மௌனமாக கவனிக்கிறது கேமராவின் கண்கள். அந்த இசை அவளுக்குள் அமிழ்த்தி புதைத்து கொண்டிருந்த அடங்கா காதலையும், தீரா காமத்தையும் கண்ணீரென உருக்கி கன்னங்களில் வடியச் செய்கிறது. படம் நிறைவுறுகிறது.

ஒரு பார்வையாளராக நம்மையும் மூழ்கடிக்கிற ஒரு காவியத்தன்மை படிந்து விட்ட ஒரு காதல் கதையை காண்கிற உணர்வையும், ஒரு வித நிலை கொள்ளாமையும் ஏற்படுத்துகிற அனுபவமாகவே இப்படம் இருக்கிறது. உள்ளூற அசைத்துப் பார்க்கும் உணர்வெழுச்சியை ஏற்படுத்துகிற இப்படத்தில் இசையின் பங்கை விடவும் படமெங்கும் நிரம்பி வழியும் மௌனமே வியாபித்திருக்கிறது. மௌனமே அதியற்புதமான இசை என்பதை உணரச் செய்யும் தருணங்கள் படமெங்கிலும் நிறைந்து கிடக்கிறது. 

படத்தின் ஒவ்வொரு சட்டத்தையும் அதீத உயிர்ப்போடும் பிரமிக்க வைக்கும் அழகுடனும் படம் பிடித்திருப்பது பிரெஞ்சு ஒளிப்பதிவாளரான க்ளேர் மதோன். பெரும்பாலும் குறும்படங்களிலேயே பங்களித்து வந்த இவர் அவ்வப்போதே திரைப்படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளார். குறிப்பாக இப்படத்தின் கனவின் தன்மையை அவர் எட்டிப் பிடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக அவர் இப்படத்தில் ஒளியைக் கையாண்டுள்ள விதம் பிரமிப்பானது. பொதுவாக நிலையான ஒளி மூலங்கள் இருப்பதுபோன்ற பின்னணிகளில் படம்பிடிப்பது ஒப்பீட்டளவில் கொஞ்சம் எளிது. ஆனால் ஒரு பதினெட்டாம் நூற்றாண்டு பீரியட் டிராமாவான இப்படத்தில் சூழலில் இருக்கிற ஒளிமூலங்கள் கணப்பு அடுப்புகளின் கிளர்ந்து அசைவாடும் தீயும், எரியும் மெழுகுதிரிகளும் தான். கதாபாத்திரங்கள் மெழுகு திரிகளை ஏந்தியபடி நடக்கும் காட்சிகளில் அசையும் ஒளிகளை தத்ரூபமாக படம் பிடிப்பதிலுள்ள சிரமங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நிச்சயம் செயற்கை ஒளி பயன்படுத்தப்பட்டிருக்கும் என யூகிக்கலாம். ஆனாலும் அது தெரியாத விதத்தில் இயற்கையான ஒளி போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மிக அதிகமான மெனக்கெடல்கள் நிச்சயம் தேவை. அவ்வொளி வடிவமைப்பு தரும் தனியழகு முதலில் மரியன் தானாக வந்து உணவு உண்ணும் காட்சி மற்றும் மூவரும் புத்தகம் வாசிக்கும் காட்சி போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாக சுட்ட முடியும். மேலும் பணிப்பெண் மற்றும் மரியன் இருவருமே பல தருணங்களில் விளக்கை ஏந்தியபடியே நடக்கும் காட்சிகளில் அசைகிற ஒளியின் அரூப நடனத்தைக் காண்பது தனியழகு தான். 
 
காமம் கனறும் மனங்களுக்குள் துவக்கத்தில் இருக்கிற இடைவெளி துவங்கி பின் இருவருக்குள்ளும் அது பற்றிக் கொள்ளும் தருணங்கள் கடந்து, இரு உயிர்களின் கொந்தளிப்பான உணர்வுகள் நிரம்பிய ஒரு பயணத்தில் நாமும் பயணிகளென இணையக் கூடிய சாத்தியங்களை தருகிறது படம் உருவாக்கிய விதம். மிகப் பெரும்பான்மையாக பெண்களே படத்தின் மிக முக்கிய துறைகளில் எல்லாவற்றிலும் பங்களித்துள்ளதாலோ என்னவோ பெண்களின் புதிர்தன்மை நிறைந்த அகவயமான மனவெளிகளிகள் தரிசனங்களை காட்சிகள் தொடுகின்றன பல இடங்களில். முதன்மைக் கதாப்பாத்திரங்கள் இருவருடைய கண்களே நிறைய பேசுகின்ற வசனங்களைக் காட்டிலும். அவ்விதத்தில் வெறும் பார்வையாலேயே, கடக்க இயலா தாபத்தையும், தணியாத காமத்தையும் அதன் பால் வருகின்ற மன அலைக்கழிப்புகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கும் நடிகையர் இணை நோய்மி மெர்லோ மற்றும் அடேலினெல், இருவரின் பங்களிப்பும் மகத்தானது. காலத்தை வென்ற காதல் கதைகளின் வரிசையில் இப்படைப்பிற்கும் நிச்சயம் இடமிருக்கும்.