Jallikattu – உள்ளுறையும் மிருகத்தின் தரிசனம்

சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. ஆனால் அக்கலை வடிவம் கனவுகளின் உற்பத்தி கேந்திரமாக மட்டுமே சுருங்கிவிட வேண்டிய அவசியமில்லை, அது சமூகத்தின் கதைகளை நிசத்திற்கு வெகு அருகில் நின்று பார்க்க நம்மை அழைக்கவும் செய்யும் சில வேளைகளில். லிஜோ ஜோஸின் ‘ஜல்லிக்கட்டு’ ஒரு வகையில் ஒரு மானுடவியல் ஆய்வாகவே இருக்கிறது. மிகச் சாதாரணமாக சொல்லிச் சென்று விடக் கூடிய ஒரு கதையை இத்தனை உயிர்போடு எடுத்துக் காட்டிடும் திரைமொழி, வெகு சிரத்தையுடன் கைகொள்ளப்பட்டிருக்கும் நேர்த்தி படத்தின் ஒவ்வொரு சட்டத்திலும் தெரிகிறது.

 
இதுவரையிலான பார்வை அனுபவத்தை கலைத்துப் போட்டு ஒரு புதிய காட்சி அனுபவத்தை நமக்கு துவக்க காட்சியே தருகிறது. ஒரு சிறிய ஊரின் சராசரி காலையை இவ்வளவு கவித்துவமான பரபரப்பிற்குள் பொதிந்து சமீபமாக கண்டதில்லை. மனித விழிகள் பரபரத்து விழித்துக் கொள்ளும் வேகமும் அதற்கு சுதி சேர்க்கும் கடிகார முள் நகர்வின் பின்னணி ஒலியும் (படத்தில் இறுதியில் தான் ஒரு பெரிய குழுவே பல காட்சிகளுக்கான அக்கெபெல்லாவை இசைத்திருப்பது தெரிகிறது. Acappella என்பது தனியாகவோ அல்லது குழுவாகவோ இசைக் கருவிகளே இல்லாமல் மனித குரல்களையே இசைக்கருவிகளாக்கி அதனோடு பாடலும் பாடிடும் பாணி.) இனம் புரியாததொரு வேகத்தைக் கூட்டுகின்றன. 

அவ்வூரின் மனிதர்களின் வாழ்க்கையில் பிரிக்க இயலாத அங்கமென மாட்டிறைச்சி இருப்பதை தொடர்ந்து வருகிற காட்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. காட்சிகளின் அதிவேகமான படத்தொகுப்பும் கூடவே தோதாக இசைக்கலவையும் ஒரு திரில்லர் திரைப்படத்திற்கான அத்தனை லட்சணங்களையும் நிரப்பி விடுகிறது. அறியாத ஒரு பரபரபிற்குள் இயல்பாகவே பார்வையாளனை இருத்தி அதனை இறுதி காட்சி வரை நிலை நிறுத்துகிறது. அதிலும் குறிப்பாக சில நொடிகளுக்குள் வந்து போகிற, ஞாயிறு காலையான அன்று வாங்கப்பட்ட இறைச்சி நிரம்பிய கருப்பு பைகள் திருப்பலி நடக்கிற கோவிலின் அருகிலுள்ள மரத்தில் பூத்திருக்கும் கரும்பூக்களென மொய்த்துக் கிடக்கிற, அக்காட்சி கவனம் ஈர்க்கிறது.


ஒரு வெகு இயல்பான ஞாயிறு காலையில் இறைச்சிக்கென காலன் வர்க்கி எனும் கசாப்புக்காரனால் வெட்டப்பட காத்திருக்கும் ஒரு எருது, வெட்டப்படவிருக்கும் இறுதி நொடியில் சடுதியில் தப்பித்து மூர்க்கமாக ஓடத் துவங்கும் கணத்தில் இருந்து திரைக்கதையும் ஓடத்துவங்குகிறது, நம்மையும் உடன் இழுத்துக் கொண்டே. ஊர் கூடி அவ்வெருதை பிடிக்கும் பிரயத்தனங்களே எஞ்சிய படம் முழுமையும். ஒரு இயல்பான காலையை பரபரப்பிற்குள்ளாக்கிய ஒரு அசாதாரண நிகழ்வினை ஊர் மொத்தமும் அங்கலாய்த்து பின் தொடர்கிற அதே வேளையில், அச்சந்தர்ப்பத்தை அதே ஜனத்திரளின் அங்கங்களான தனிமனிதர்கள் எப்படி தங்களுக்கானதாக/தங்களுக்கு சாதகமானதாக மாற்ற முற்படுகிறார்கள் என உதிரியாக வந்து போகிற கதாபாத்திரங்கள் உள்பட அனைத்து கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளும் எடுத்துக் காட்டுகிறன. எடுத்துக் காட்டிய விதம் ஒரு புனைவிற்கான சாயலில் அல்லாமால் யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதே படத்தின் பார்வை அனுபவத்தை ஒரு மானுடவியல் ஆய்வின் பார்வையாளர்களாக நம்மை ஆக்குகிறது. தங்களது தனிப்பட்ட விரோதத்தை, காமத்தை, துரோகத்தை, சல்லித்தனங்களை, நிலவுகிற சூழலை தமக்கு சாதகமாக்கி மனிதர்கள் தேட முனையும் ஆதாயங்களை என சகலத்தையும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நம் கண் முன் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

திமிறியோடும் எருதைத் துரத்தியபடியே பித்து நிலையில் நகர்ந்து கொண்டே இருக்கிறது ஒரு பெருங்கூட்டம். எருதின் மூர்க்கத்திற்கு சற்றும் குறையாத மூர்க்கமேறி மெள்ள மெள்ள சூழலின் கட்டற்ற தன்மையின் வீரியம் கூடிக் கொண்டே இருக்கிற படியாக வளர்கிறது கதையோட்டம். ஒரு அசாதாரண நிகழ்விற்கான தனிமனிதர்களின் எதிர்வினைகளும், அச்சூழலின் யதார்த்தத்தினை தமக்கு சாதகமாக வளைக்க மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுமே தொடர் கண்ணிகளாக மாறி கதைச் சரடை வளர்த்தெடுக்கின்ற விதமாகவே படம் முழுவதும் நகர்கின்றது. மனிதர்களுக்கும் மிருகத்திற்குமென துவங்கும் ஒரு துரத்தல், ஒரு கட்டத்தில் மனிதர்களுக்குள் இருக்கின்ற மிருகத்தை அவர்கள் கண்டடைவதில் போய் நிற்கிறது. இருக்கின்ற மிருகங்களில் மோசமான மிருகம் மனிதனே எனும் அபிப்ராயத்தை மெய்ப்பிக்கிறது ஜல்லிகட்டு. 


டொரெண்டோ திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்ட பின் நிகழ்ந்த உரையாடலில் படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் படத்தின் பெரும்பான்மையாக தொழிற்முறை நடிகர்களை பயன்படுத்தாமல் கட்டற்ற அப்பெருங்கூட்டத்தினை எங்கிருந்த உள்ளூர்வாசிகளையே பயன்படுத்திக் கொண்டு திரட்டியதாக சொல்கிறார். ஒரு வகையில் கதையோட்டத்தின் நம்பகத்தனமைக்கும் யதார்த்தமான தொனிக்கும் அது வலு சேர்த்திருக்கிறது. அதுவே அடுத்துடுத்து வருகின்ற காட்சிகள் முன்னேற்பாட்டுடன் செய்து காட்டப்படுகின்ற நாடகத்தன்மை துளியும் இல்லாமல், ஒரு காட்சியின் நீட்சியாகவே அதனைத் தொடர்ந்து வருகின்ற அடுத்த காட்சி இருப்பது போன்ற ஒரு நேர்த்தியை தருகின்றது. கதாபத்திரங்களாக திரையில் உலவும் மனிதர்கள் உண்மையிலேயே அச்சுழலில் இருந்தால் எப்படியெல்ல்லாம் நடந்து கொள்வார்களோ அப்படியே நடந்து கொள்ள அனுமதித்தது போன்ற இந்த நாடகீயமற்ற அல்லது அது போன்ற ஒரு காட்சி மொழியின் அணுகுமுறை பார்வையாளனுக்கும் திரையில் நிகழ்ந்து கொண்டிருப்பற்றிற்கும் ஒருவித அணுக்கத்தை உருவாக்கி பார்வை அனுபவத்தை சுவாரசியமாக்குகிறது. சில தருணங்களில் ஆச்சரியமும், சில தருணங்களில் அதிர்ச்சியும் அளிக்கிறது. கதையோட்டம் ஒரு கட்டத்தில் கண்ணாடியென உருமாறி நாகரிகத் திரைக்குப் பின்னால் மனிதர்களுக்குள் மறைந்து வாழும் மிருகத்தையும் அதன் உறுமல்களையும் தெளிவாகக் கேட்கும்படி செய்கிறது. 

துவக்கத்தில் ஊரில் எல்லோரும் ஏன் இப்படி அந்த எருதினைப் பிடிக்க தன்முனைப்புடன் பெருந்திரளாக அலைகிறார்கள் என்ற சந்தேகம் ஒரு பார்வையாளனாக எழும்பாமல் இல்லை. ஆனால் சந்தேகத்திற்கு பதிலளிப்பது போல ஒரு கதாபாத்திரம், இயல்பாக ஒரு காட்சியினூடே நிகழும் ஒரு குறு உரையாடலில், முன்னர் ஒரு முறை அவ்வூரில் இதே போன்றதொரு நிகழ்வு நடந்ததாகவும், அப்போது பிடிபட்ட எருது இறைச்சியை அனைவரும் பங்கிட்டுக் கொண்டதாகவும் இன்னொரு பாத்திரத்திடம் விளக்கம் சொல்கிறது. நேரம் கூடக் கூட மாலை மயங்கி அந்தியாகி, பின் இரவாகிறது. வெளிச்சம் குறையக் குறைய கூட்டத்தின் மூர்க்கமேறிய வெறியும் கூடிக் கொண்டே போகிறது. போதாததற்கு, வேறு வழியில்லை என ஊராரால் முடிவு செய்யப்பட்டு, அப்பகுதியின் முன்னாள் முரடன் குட்டச்சன் வரவழைக்கப்பட, அவனும் தனது பரிவாரங்களுடன் வந்து இறங்குகிறான். கூடவெ அப்பெருங்கூட்டத்திற்குள் உரிமை கொண்டாடல்களின் வழியாக ஒரு அதிகாரப் போட்டியும் துளிர்த்து வளரத் துவங்குகிறது. அதனூடே வர்க்கியின் உதவியாளன் ஆன்டணிக்கும் குட்டச்சனுக்குமான ஒரு முன்பகையும் தகித்துக் கொண்டிருக்கிறது, வெடிக்க தக்க தருணத்தை எதிர்நோக்கி.  


ஒரு கட்டத்தில் எருது தற்செயலாக ஒரு கிணற்றுக்குள் தடுமாறி விழுந்திட அதனை கண்டதையே தான் பிடித்ததாக மாற்றிக் கூறி உரிமை கோரும் வர்க்கியின் உதவியாளன் ஆன்டணி ஒரு பக்கம் இருக்க, துரத்திய பெருங்கூட்டங்கள் சிறு குழுக்களாக தம் நட்பு வட்டத்துடன் சேர்ந்து கொண்டு உள்ளே மாட்டி கொண்ட எருதினை சமைக்க முன் தயாரிப்புகளில் ஈடுபடத் துவங்குகின்றனர். டார்ச் விளக்கு வெளிச்சங்கள் மேலே வட்டமாக கிணற்றின் மேற்சுவரைச் சுற்றிலும் ஒளிரூட்டியபடி இருக்க ஏதும் புரியாத மிரட்சியில் எருது பிரிதொரு உலகத்தில் நிற்பது போன்ற ஒரு காமிரா கோணம் மிகப் புதியதான ஒரு காட்சி அனுபவத்தை தருகிறது. 

குடியும் கும்மாளமுமாக எருதின் இறைச்சி விருந்துக்கான அத்தனை முன்னேற்பாடுகளும் கனகச்சிதமாக அரங்கேறுகிறது. எருதினை கண்டுபிடித்த உரிமையை ஆன்டணி கோரும் போதிலும், கிணற்றில் அகப்பட்டிருக்கும் எதனை மீட்டெடுத்து மேலே கொண்டு வர அவனுக்கு சகலரின் உதவியும் தேவையாயிருக்கிறது. அவனது உரிமை கோரலுக்கான எதிர்ப்பும் பெரிதாக ஒன்றுமில்லை கூட்டத்தில் இருந்து. வெறும் சிறு சலசலப்பாக மட்டுமே எஞ்சி மங்குகிறது. இறைச்சியே பிரதானமான கவனத்தை பெருவாரியாக பெறுகின்றது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. ஏறத்தாழ ஒரு திருவிழா போல, மெரும் ஜனத்திரளின் பெரும் கூப்பாடுகளுக்கு மத்தியில் எருது மெள்ள மேலே வருகையிலே வன மிருகங்களின் மத்தியில் மாட்டிக் கொண்ட அவ்விலங்கின் மிரட்சியும், கையறு நிலையும் அதன் பெரிய கண்களின் அப்பட்டமாக தெரிகிறது. 
சிறு சிறு குழுக்களாக சிதறிக் கிடக்கும் மனிதர்கள் எருது வெளிப்பட்டவுடன் இன்னும் மூர்க்கமாகின்றனர். அத்தருணத்தில் தன் பங்கிற்கு பெய்யும் மழை நிகழுகிற செயலைக் கலைக்க வெளிவரும் எருது மீண்டும் திமிறிக் கொண்டு ஓடுகிறது. தவறி விழுகின்ற ஒரு உயிர் மாய்ந்து போகின்றது. மழைச் சேற்றில் பதிந்திருக்கும் காலடித்தடங்களுள் ஒன்றாக மனிதனுடையதும், பிறிதொன்று எருதினுடையதுமாக இருக்கிறது. இரு மிருகங்களுக்கு இடையேயான சமரைச் சொல்லும் குறியீடு போல அது பதிந்து கிடக்கிறது அங்கே. 
.
ஒரு மரணம் கூட்டத்தின் உற்சாக மனநிலை வடிந்து போக போதுமானதாக இருக்கிறது. பழி வாங்கும் சூளுரைகள் பறக்கின்றன. எருதினைப் பிடித்துக் கொல்வதற்கான முனைப்பு முன்னைக் காட்டிலும் இன்னும் மூர்க்கமாகிறது எல்லோர் மத்தியிலும். எழும் கூச்சல், சண்டை என குழப்ப சூழலுக்கு மத்தியில் காவலர்கள் வந்து சேர, இன்னொரு அதிகார விளையாட்டு துவங்குகிறது. காவலர்களின் அதிகாரம் கூட்டத்தின் மூர்கத்தின் முன்னால் செல்லுபடியாகாமல் போக கும்மல் வெறியேறிய (Mob hysteria) பெருந்திரளின் முன் சரணடைகிறது. எருதினை பிடிக்க ஒரு இறுதிப் போருக்கு தயராகின்றனர் ஊரின் ஆண்கள். கைகளில் எரியும் தீப்பந்தங்களும், மனதிற்குள் கனறும் வெறியுமாக. பின்னணி இசையும் அதற்கு இணையான வெறி ஏறுகிறது. பதட்டத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது. எருதினைப் பிடிக்க பொறிகள் தயாராகின்றன. மறுபுறம் தனியனாக ஆண்டணி முதன் முயற்சியில் நிகழ்ந்த இறப்பிற்கு தன்னை நோக்கி நீண்ட விரல்களுக்கு பதிலளிப்பதாக எருதினை தானே பிடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் அலைகிறான். ஊடே குட்டச்சுனுடனான மோதலில் வெற்றியும் கொள்கிறான். இறுதிக் காட்சியில் பின்னணி இசை காட்டுவாசிகளாக பெருங்கூச்சலோடு ஆரவாரித்து அலையும் ஆண்கள் கூட்டத்தினை நாம் உணரும் விதத்தில் மாற்றம் கொள்கிறது. 


இறுதி காட்சி குறித்து இரண்டே வார்த்தைகளில் சொல்வதானால் Orchestrated Chaos. இதுவே மிகப் பொருத்தமான சொல்லாடலாக இருக்கும் எனத் தோன்றுகிறது. (ஏறத்தாழ படத்தின் பெரும்பான்மையான காட்சிகளுக்கும் இது பொருந்தும்.) பெருந்திரளின் கூட்டு முயற்சியால் எருது வலுவிழக்கிறது. காயங்களோடு தளர்ந்து நிற்கும் எருதினை தனியனாக காணும் வாய்ப்பு மீண்டும் ஆண்டணிக்கே கிடைக்க அவன் தனது உரிமை கோரலுக்கு மீண்டும் தயாராகிறான். ஆனால் இம்முறை கூட்டத்தின் வெறி பன்மடங்காகி அதனை வென்றெடுக்கிறது. எருதின் மேல் விழுந்து குவிந்து ஒரு மானுட குன்றென உயர்ந்து நிற்கும் மூர்க்கம் தளும்பும் அந்த இறுதிக் காட்சி, வேட்டை சமூகமான மனிதன் வேளாண் சமூகமாகி, குடியானவனுக்கான நாகரிக ஒப்பனைகள் செய்து கொண்டிருக்கும் போதிலும், அவன் உள்ளே இன்னும் பசித்தலையும் ஒரு வனமிருகமாகவே திரிகிறான் என் மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. 

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு மிக முக்கியமான அம்சம், படமாக்கப்பட்ட விதம். தணிக்கைச் சிரமங்கள் தாண்டி ஒரு விலங்கினை, அதன் வேட்டையை மையச்சரடாகக் கொண்டு ஒரு கதையை உருவாக்குகையில், இயல்பாகவே விலங்கு நல ஆர்வலர்களின் கவனம் அதன் மீது படியும். அதுவே பட உருவாகத்தில் மிகப் பெரிய சவாலாக இருக்கும். படக்குழுவினர் பல இடங்களில் மாதிரி எருதை வைத்து படப்பிடிப்பை நடத்தியதாக சொல்லி இருக்கின்ற போதிலும், அது ’மாதிரி’ என்று பார்வையாளன் உணராத வண்ணம் உருவாக்கி இருக்கிற நேர்த்தி ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. மேலும் நம்பகத்தன்மையையும் எவ்விதத்திலும் அது குலைத்து விடாதவாறு இருக்கிறது. 

இவ்வருடம் வெளிவந்த இந்திய திரைப்படங்களுள் ஜல்லிக்கட்டு மிக முக்கியமான ஒரு படைப்பாகவும், அனைத்து பார்வையாளர்களும் பொருத்திக் கொள்ளத் தக்க ஒரு மானுட பொது அம்ச்த்தைக் குறித்து இது பேசுவதால் சர்வதேச அளவிலும் பரவலாக கவனம் பெற்ற படமாக இருக்கிறது.