'மூடர்கூடம்' நவீன் - நேர்காணல் மூடர் கூடம் என் குழந்தை. அதனுள் பாயும் குறுதி என்னுடையது. அதன் மரபணுக்கள் என்னுடையது.

சினிமாவுக்கான விதை

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு புகழ்மோகம் இருக்கும். அதிலும் அரசியல், விளையாட்டு, கிரிக்கெட் என அத்தனையும் தாண்டி சினிமா மீதான ஈர்ப்பு என்பது அலாதியானது. Fantacy என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்திருக்கும் வரம். உலக வாழ்க்கையில் தம்மால் சாதிக்க முடியாத, வாழ்ந்து பார்க்க முடியாத பல விதமான வாழ்க்கைகளை மனிதன் கற்பனா உலகத்தில் வாழ்ந்து பார்த்து சந்தோசப் பட்டுக்கொள்கிறான். சிறுவயது முதல் இன்று வரை எனக்கும் பல fantacyகள் உண்டு. பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது நான் ஒரு கற்பனா உலகத்தில் இருந்து கொண்டிருப்பேன். அந்த வயதில் என்னுடைய fantacyகளில் நான் ஒரு சீக்ரட் ஏஜண்ட் போலவும், பெரிய சைன்டிஸ்ட் போலவும், பிரபலமான நட்சத்திரம் போலவும், பெரிய கிரிக்கெட்டர் போலவும், போடுற பால் எல்லாம் விக்கட்டு, அடிக்கற பால் எல்லாம் சிக்சருன்னு என் கறபணை உலகத்தில் நான் ஒரு பெரிய ஹீரோ போல் வாழ்ந்துகொண்டிருப்பேன். துணைப்பாடங்களில் படித்த கதைகள், ஆங்கில நாவல்களைத் தேடித்தேடி படிக்க வைத்தது. எந்த படமென்றாலும் உட்கார்ந்து பார்ப்பது என இப்படியே ஒரு நேரத்தில், எதை எடுத்தாலும் ஒரு கதையாக பார்க்க ஆரம்பித்தேன். ஊரில் நடந்த விஷயங்களை நண்பர்களுடன் சொல்லும் போது சிலவற்றை நானே கொஞ்சம் சேர்த்து ஒரு கதையாக சொல்வேன். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எங்கள் பள்ளியில் நடந்த நாடக போட்டியில் என்னுடைய நாடகம் சிறந்த நாடகமாகவும் நான் சிறந்த இயக்குனராகவும் பரிசு பெற்றேன். சிறுகதை எழுத ஆரம்பித்தேன். அப்போதிருந்தே யார் கேட்டாலும் நான் சினிமாவில் இயக்குனர்ஆகப்போகிறேன் என்றே சொல்வேன்.

சினிமா ஆசைக்கு வீட்டில் என்ன சொன்னார்கள்?

அப்பா ஆறாவது படிக்கும் போதே தவறியதால், குடும்ப பாரம் மொத்தம் அம்மாவின் தலையில் இருந்தது. 850 ரூபாய் பென்ஷன் பணத்தை வைத்துக்கொண்டு, ராப்பகலாக பீடி சுற்றும் தொழில் செய்து என்னையும் என் அக்காவையும் படிக்க வைத்தார் என் அம்மா. தந்தை இறந்த பிறகு, "கவர்மெண்டு ஸ்கூல்ல படிக்க வச்சா ஆகாதா"னு கேட்ட என் சொந்தக்காரர்களுக்கு முன்னால் , 'எங்கொழந்தைங்க இங்கிலீஸ் மீடியத்துலதான் படிக்கு'ம்னு சவால்விட்டு வைராக்கியத்துடன் எங்களை மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தவர் என் அம்மா. அதனால் மேற்படிப்பு, என்ஜினியரிங்க், பிளஸ் 2 என்றெல்லாம் போகாமல் மேலும் இயக்குனர் தானேஆகப்போகிறோம் என்று Diploma in Electronics & Instrumentation படித்தேன்.
அக்காவைப் படிக்க வைக்க வேண்டும் என்பதால் படித்து முடித்ததும் வேலைக்குச் செல்ல வேண்டியதாய் இருந்தது. புதுக்கோட்டையில் EID Parryஎன்ற சக்கரை ஆலையில் வேலை கிடைத்தது. மூடர்கூடம் படத்தின் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரனும் அப்போது அங்கு வேலைக்கு வந்து சேர்ந்தார். உழைப்பு என்றால் என்ன என்பதை இங்கு தான் கற்றோம். பிறகு டெல்லியில் உள்ள Horlicks நிறுவனத்தில் நாங்கள் இருவரும் வேலைக்குச் சேர்ந்தோம். அங்கு நல்ல சம்பளம். குடும்பத்தின் எல்லா தேவைகளும் பூர்த்தி செய்துவிட்டேன், அக்காவின் கல்யாணம் மட்டுமே மிச்சம் இருந்த சமயத்தில் அம்மாவிடம் வேலையை விடுவதாகவும் சினிமாவில் நுழையப் போவதாகவும் சொன்னேன் . அம்மாவும் நீ செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்று பச்சைக்கொடி காட்ட 2004ல் சென்னை வந்தேன்.

சினிமாவுக்கான போராட்டங்கள்?

உதவி இயக்குனர் வாய்ப்பு எப்படிப் பெறுவது என்று கூட தெரியாமல் தான் சென்னை வந்தேன். Star film institute-ல் சேர்ந்தேன், அங்கு சேர்ந்து கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை ஆனால் நிறைய நட்பு கிடைத்தது. காலையில் இருந்து மாலை வரை முன்னணி இயக்குனர்கள் வீட்டு வாசலிலே காத்துக்கிடந்து அலுத்த நேரத்தில், உதவி இயக்குனர் ஆவதற்கு இது சரியான வழி அல்ல என்று தோன்றியது. ஒரு இயக்குனரின் வாசலில் தினமும் பத்தோடு பதினொன்றாக நின்றுகொண்டிருக்கிறோம். இதில் அந்த இயக்குனர் பார்வையில் நாம் தனித்து தெரிவது எப்படி சாத்தியம்? என்று தோன்றியது. அதனால் ஒரு No Budget Film எடுப்போம் என்று முடிவு செய்து, இரண்டே நாட்களில் ஒரு ஸ்கிரிப்ட் எழுதி முடித்தேன். அதை வைத்து உதவி இயக்குனர் வாய்ப்பு தேடுவோம் என்று முடிவு செய்தேன். அந்தக் கதைக்கு ஒளிப்பதிவு இலவசமாகச் செய்ய ஒரு ஒளிப்பதிவாளரும் ஒத்துக்கொள்ள, அம்மாகதாபாத்திரத்துக்கு நடிக்க நடிகர் தேடிக்கொண்டிருந்த சமயத்தில், அந்தக் கதையில் நடிக்க தேர்வு செய்து வைத்து இருந்த நீல்சன் என்பவருக்கு கதை ரொம்ப பிடித்துப்போய் தாயுமானவன் என்பவரிடம் அறிமுகப்படுத்தினார். அந்தக் கதையையும் என்னுடைய மற்ற சிறுகதைகளையும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். தாயுமானவரன், பாலாஜி சக்திவேலிடம் இணை இயக்குனராக ”காதல்”, ”கல்லூரி” போன்ற படங்களில் பணிபுரிந்தவர்.
அப்போது கல்லூரி படம் ஆரம்பிக்கும் நேரம். தாயுமானவன் அண்ணனுக்கு கதைகள் பிடித்தவுடன், அதனை பாலாஜி சக்திவேல் சாரிடம் கொடுக்க, அவர் அலுவலகத்துக்கு வாரம் இரண்டு நாட்கள் சென்று ’கல்லூரி’, படம் என்பதால் கல்லூரி சம்பந்தமான காட்சிகளை எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள், தாயுமானவன் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்து தன்னுடைய ஸ்க்ரிப்டை என்னிடம் சொல்லிகொண்டிருக்கும் போது அவரது அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. பேசிமுடித்தவர் , "நவீன் என் நண்பன் சிம்பு S Pictures ல கமிட் ஆகியிருக்கான், இப்போ இங்க வர்றேன்னு சொல்றான், நாம அப்புறம் பார்ப்போம்" என்றார். வெளியே வரும போத ுசிம்புதேவனிடம் என்னை அறிமுகப்படுத்தியதும் நான் கிளம்பிவிட்டேன். அடுத்தநாள் தாயுமானவன் என்னை தொடர்புகொண்டு, "நவீன், சிம்பு உங்களப் பத்தி கேட்டான் , , உங்களுக்கு நல்ல ஆங்கில அறிவு, கம்ப்யூட்டர் தெரியும், சிறுகதையும் நல்லா எழுதுவார்னு சொன்னேன். உங்களுக்கு ரெக்கமண்டேஷன் புடிக்காதுனு சொல்லிருக்கீங்க. நான் கண்டிப்பா உங்களுக்காக ரெக்கமெண்ட் பண்ணல. உங்க போன் நம்பர் வாங்கிட்டு போய் இருக்கான்" என்றார். சிம்புதேவன் சார் அன்னை அழைத்தார். சிவன் கோயில் தெருவில் இருந்த அவரது அறையில் அவரை சந்தித்தேன். அப்பொழுது Indiasmiles என்று Penguin publications மற்றும் Suleka.com இணைந்து நடத்திய அகில இந்திய ஆங்கில சிறுகதை போட்டியில் எனது சிறுகதை "தி இன்டர்வியூ" ஐந்தாயிரம் சிறுகதைகளிலிருந்து இறுதிப்போட்டிக்கு சென்ற அறுபதில் ஒன்று. அந்த சிறுகதையை படித்தார். ஒன்றறை மணிநேரம் பேசியதற்குப் பின் அவர் என்னை தன் படத்தில் சேர்த்துக் கொள்வதாய் சொன்னார். அப்படி என்னைஉதவி இயக்குனராகச் சேர்த்துக்கொண்ட படம்தான் ”இம்சை அரசன் 23ஆம் புலிகேசி”. தொடர்ந்து ”அறை எண் 305ல் கடவுள்”, படத்தில் உதவிஇயக்குனராக வேலை பார்த்தேன் . பின்பு புலிகேசி படத்தில் இணைஇயக்குனராய் வேலை செய்த பாண்டிராஜ் அண்ணனின் பழக்கத்தில் அவர் இயக்கிய ”பசங்க” படத்தில் இணை இயக்குனராய் வேலை செய்தேன்.

மூடர் கூடம் உருவானதும் தயாரிப்பாளர் ஆனதும்?

என்னைப் பொறுத்தவரை Film making is my passion. பணம் சம்பாதிக்கணும். மறுக்கவில்லை. ஆனாலும், படம் எடுப்பதில் எனக்கு முழு திருப்தி இருக்க வேண்டும், சினிமாவுக்காகத் தானே எல்லாவற்றையும்விட்டுவிட்டு வந்தேன். பின்னர் தயாரிப்பாளர் இடையூறு இல்லாமல் படம் செய்வது கடினம் தான், எனவே தயாரிப்பாளர் கிடைக்காத பட்சத்தில் நாமே படம் தயாரிப்பது என முடிவுசெய்து தான் ”மூடர் கூடம்”, எழுதியதே .எழுதி முடித்த பிறகு இரண்டு மூன்று தயாரிப்பாளர்கள் கிடைக்கவும் செய்தார்கள்.ஏற்கனவே ரெண்டு படம் முடித்து, இப்போது அடுத்த படம் வெளியிட தயாராய் இருக்கும் தயாரிப்பாளர்கள் அவர்கள். ஆனால் அனிமேஷன் பாடல் இருக்கக் கூடாது, அந்தப் பையனையும், பொண்ணையும் லவ் பண்ண வெச்சிடலாம் , நாய்க்கு முன்கதை எதுக்கு? இது போன்ற கேள்விகளும், தலையீடுகளும் இருந்தன. அதில் எனக்கு உடன்பாடில்லாமல் நானே தயாரிக்க முடிவு செய்தேன். அப்போது Passion for cinema என்ற வலைப்பூவில் ’அனுராக் காஷ்யப்’ இந்த தீபாவளியில் இருந்து புதிய படம் (THE GIRL ON YELLO BOOTS) ஆரம்பிக்கப்போவதாகவும் அதைச் சந்தைக்கு புதிதாக வந்துள்ள CANON 7D கேமராவை வைத்து எடுக்கப் போவதாய் எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு நானும், எனது படத்தில், அதையே உபயோகபடுத்தலாம் என்று அதைப் பற்றி துபாயில் இருந்த என்னுடைய மாமாவிடம் (அக்காவின் கணவர் ) டெக்னிக்கல் டீட்டைல்ஸ் அனைத்தையும் விசாரித்து விட்டு கம்மியான பொருட்செலவில் சொந்தமாகவே படம் தயாரிக்க முடிவெடுத்தேன்.
என் நெருங்கிய நண்பன் S.R.B.ராஜேசிடம் இதைப்பற்றி சொல்ல அவன் தான் முதலில் எனக்கு ஊக்கம் கொடுத்து சில லட்சங்களையும் கொடுத்து உதவினான். அவனுடைய சில நண்பர்களிடமிருந்து அவன் பணம் திரட்ட என்னுடைய சில நண்பர்களிடமிருந்து நான் பணம் திரட்ட படப்பிடிப்பு தொடங்கியது. ”மூடர் கூடம்” திரைப்படத்தின் pre-production 2010ஆம் ஆண்டு தொடங்கியது. சில லொகேஷன்கள், பல நடிகர்கள் அப்போதே தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்தனர். பணத்திற்காக காத்திருந்து படப்பிடிப்பு தொடங்கியது 2011 ஆகஸ்டு மாதம். மீண்டும் பணத்திற்காக காத்திருந்து, என் அக்காவின் நகை நிலம் என்று பலவற்றை விற்று படப்பிடிப்பு முடிந்தது 2012 மார்ச் மாதம். மீண்டும் காத்திருப்பு. ஒரு வழியாக போஸ்ட் புரடக்‌ஷன் 2012 அக்டோபர் மாதம் முடிந்து 2013 செப்டம்பர் 13 அன்று படம் ரிலீஸ் ஆனது.

படத்தில் கம்யூனிசம் மற்றும் தமிழ் மொழிபற்றிய வசனங்களும் காட்டமாக உள்ளதே?

முதலில் நான் மொழி வெறியன் அல்ல. எல்லா மொழிகளும் நல்ல மொழிகளே! அதைத் தாண்டி என்னுடைய மொழியான தமிழ் மீது எனக்கு பற்றும் பெருமிதமும் இருக்கிறது.என்னுடைய கோபம் என்னவென்றால் ஆங்கிலம் தெரியாதவர்கள் ’முட்டாள்’, என்கிற கருத்து வெகுவாக பரவியுள்ளது, அதில் எனக்கு உடன்பாடில்லை. ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான். அறிவு அல்ல. அதே போல நான் கம்யூனிசவாதியா? என்று கேட்டால்,கம்யூனிசவாதி என்று சொல்லிக்கொள்கிற அறுகதை எனக்கு இல்லை. ஏனென்றால் நான் மார்க்சிசமும் மற்ற சித்தாந்தங்களும் பெரிதாகப் படித்ததில்லை.ஆனால் மனித சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளில் சமநிலையின்மையில் எனக்கு உடன்பாடில்லை. அதையே நான் திணிக்காமல் அந்த இடத்தில் தேவைப்படுவதால் என்னுடைய கருத்தாகச் சொல்கிறேன்.

மூடர் கூடம் ஒரு கொரிய படத்தின் காப்பி என்று சொல்வது குறித்து?

தமிழ்ஸ்டுடியோ கூட இது அந்தப்படத்தின் காபி தான் என்று எழுதியிருக்கிறார்கள். ”மூடர் கூடம் ” படமும் வெளியாகிவிட்டது, Attack the gas station படமும் இணையத்தில் கிடைக்கிறது. இரண்டையும் பார்த்தாலே வித்தியாசம் தெரிந்துவிடும். இதற்கு ஒரு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை பலர் இரண்டும் வேறு வேறு படம் என்று அடித்துச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் , இது கே பாலச்சந்தர் எடுத்த ’நாணல்’படத்தின் ரீமேக்கா என்று கேட்டார்கள். சின்ன வயதில் ’நாணல்’ படம் பார்த்ததாக ஞாபகம். அதிலும் நான்கு நபர்கள் ஒரு வீட்டுக்குள் புகுந்து வீட்டில் உள்ளவர்களை கைதிகளாய் பிடித்து வைத்திருப்பார்கள்.( நாணல் DESPERATE HOURS என்ற படத்தின் ரீமேக்). என் நண்பர்கள் சிலர் நான் திரைக்கதை எழுதி முடிக்கும் போது "டேய் இது ’கோல்மால் ’ படம் போல இருக்கு டா" என்று சொன்னார்கள்.

நான் "எனக்குத் தெரியாமல் தமிழில் என்ன படம் டா, ஒரு வேலை தெலுங்கு டப்பிங் படமாய் இருக்கும்" என்று சொன்னேன். "இல்ல டா , அது தமிழ் படம்தான் செல்வா நடிச்சது" என்று சொன்னார்கள். பிரசன்ன விதானகே (Prasanna vidhanake),இலங்கை திரைப்பட இயக்குனர் படத்தைப் பார்த்து விட்டு அழைத்திருந்தார். படம் நன்றாய் இருப்பதாய் பாராட்டியவர் "நவீன் நீங்க COOL THE SHOCK என்ற படம் பார்த்திருக்கீர்களா ? ரோமன் போலன்ஸ்கி (Roman Polanski) இயக்கிய படம்" என்றார். "சார் நான் ரோமன் போலன்ஸ்கியின் எல்லா படங்களையும் பார்த்திருக்கேன் , ஆனா இதை எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியலை" என்றேன். அவர் "அதுவும் இதுவும் ஒன்றில்லை, But these are same kind of movies but your treatment and saying is different" என்றார். சமீபத்தில் யாரோ இணையத்தில் எழுதி இருந்தார்கள் ஹிந்தியில் தர்வாசே பாந்த்ராகோ(DHARVASAE BHANDHRAGO) என்ற படத்தின் ரீமேக் என்று. நான் அந்தப் படத்தையும் இன்னும் பார்த்ததில்லை. இப்போது இது எதனுடைய காப்பி. சொல்லப்போனால் இந்தப் படத்தில் இன்னும் நூறுபடமிருக்கின்றது. அதனால்தான் நன்றி போடுகின்ற போது, என்னை பாதித்த அனைத்து சிறந்த படங்களுக்கும் அதன் இயக்குனர்களுக்கும் நன்றி என்றேன். என்னைப் பொறுத்தவரை எந்த படத்தின் பாதிப்பும் இல்லாமல் ஒருகதையை எழுதிவிட யாராலும் முடியாது."Art is totally inspired", out of the blue எதுவும் சாத்தியமில்லை. ஒயின்ஷாப்பில் நால்வரும் பேசும் காட்சி Reservoir Dogs படத்தில் பார்த்த round trolley shot பாதிப்பில் உருவானது. படம் எடுத்து முடித்தபிறகுதான் எனக்கே தெரிந்தது ஜாப் எத்திக்ஸ் திருடன் கதாபாத்திரம் கமலஹாசனின் பேசும்படத்தில் வந்த டினு ஆனந்த் கதாபாத்திரத்தின் பாதிப்பில்தான் எனக்குள் உருவானது. இந்தப் படத்தில் டாரண்டினோ(Taurentino), மஜீத் மஜிதி(Majid majidi), கய்ரிச்சி(Guyrich) என பல பேர் இருக்கிறார்கள். இப்படி இந்தப் படம் பல நபர்கள் என் உள்ளே சென்று வெளிவந்த ஒருபரிணாம வளர்ச்சியே.

இன்னும் எனக்கே தெரியாமல் இதில் 100 வேர்கள் இருக்கும், தெரிந்தும் இருக்கிறது. ஆனால் அவையாவும் எனக்குள் சென்று என் ஆன்மாவில் இருந்து வெளிப்பட்டதே மூடர்கூடம். பொம்மை முன்கதை, நாயின் முன்கதை இவை எந்த உலக திரைப்படங்களிலும் எனக்கு தெரிந்து இல்லை. நீங்கள் கண்டுபிடித்துச் சொல்வது என்றால் இன்னும் நூறு படங்களைக்கூடச் சொல்லலாம். மூடர்கூடம் first draft எழுதி முடிக்கும்வரை நான் ‘attack the gas station’ என்ற படத்தை பார்த்ததே இல்லை. எழுதி முடித்துவிட்டு ஸ்கிரிப்டை மேன்படுத்துவதற்காக ஒரு அறைக்குள் நடக்கும் படங்கள் என்ன என்று தேடிப் பார்த்ததில் பல படங்கள் பார்த்தேன். அப்பொழுது ‘attack the gas station’ திரைப்படத்தையும் பார்த்தேன். தண்டனை கொடுக்கலாம் என்ற விஷயம் எனக்கு அங்கிருந்து கிடைத்ததுதான். அவையும் தண்டனை கொடுப்பது என்ற ஒன்றை மட்டுமே உள்வாங்கிக்கொண்டு, இங்கு படத்திற்கு ஏற்றார் போல வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் கொடுக்கிறேன்.
என்னைப்பொருத்தவரையில் filmmaking process is an evolution. இன்று சினிமா அடைந்திருக்கும் உயரம் ஒரு தனி மனிதனால் ஒரு திரைப்படத்தில் எட்டப்பட்டது அல்ல. இது ஒரு ஏணி போன்றது. பலர் அவரவர் காலத்தில் ஒரு படியை நட்டுச் சென்றிருக்கிறார்கள். கற்பணை என்பது தானாக உள்ளிருந்து ஊற்றெடுப்பது எனும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நம் கடவுள்கள் கை கால் முழைத்து இரண்டு பெண்டாட்டிகள் வைத்திருப்பதன் காரணமும் அதுதான். மனிதனால் கற்பனை செய்யப்பட்ட கடவுள் மனிதன் பார்த்து பழகிய விடயங்களின் வெளிப்பாடாகவே இருக்கும். கலையும் அப்படித்தான் - நாம் பார்த்த மனிதர்கள், படித்த புத்தகங்கள், சந்தித்த அனுபவங்கள், பார்த்த படங்கள், கேட்ட செய்திகள் என இவை அனைத்தும் நமக்குள் சென்று நமக்கான ஒரு வடிவம் பெற்று வெளியே வரும்போது அது நம் படைப்பாகிறது. மூடர் கூடம் பேசுவது என்னுடைய சிந்தனைகள். மூடர் கூடம் என் குழந்தை. அதனுள் பாயும் குறுதி என்னுடையது. அதன் மரபணுக்கள் என்னுடையது. Moodar koodam is my child and it carries my genes. No doubt about it.

மூடர்கூடம் வெளியானபோது சிலர் இணையத்தில் இப்படி கருத்து தெரிவித்தபோது ஒரு அரை மணிநேரம் உனர்ச்சிவசப்பட்டு நான் வேகமாய் ஒரு விளக்கம் எழுதினேன். ஆனால் அரை மணி நேரம் கடந்த பிறகு என் வேலை படம் எடுப்பது, விளக்கம் தருவது அல்ல என்பதை உணர்ந்து அதை போஸ்ட் செய்யவில்லை. உங்களுக்கு கண்டிப்பாக ஒரு விளக்கம் வேண்டும் என்றால் கீழே படித்துகொள்ளுங்கள்.

திருட வந்த இடத்தில் ஒரு misunderstanding and hence திருட வந்த வீட்டிலேயே கடுமையாக வேலை செய்வது, பிறகு சமாளிக்க முடியாமல் அனைவரையும் ஹாஸ்டேஜ் ஆக்குவது, எவ்வளவு தேடினாலும் பணம் கிடைக்கவில்லை, கடைசியில் திருட வந்த வீட்டோட பணக்கார ஓனர் ஒரு கடங்காரப் பயல், பின்னர் அதுவும் பொய் அவர்கள் பணத்தை சுருட்டிகொண்டு வெளிநாடு ஓடும் ஏமாற்றுக்காரர்கள் எனும் உண்மை தெரிவது, பணம் வரும் வரை காத்திருப்பது, இந்த காத்திருப்பில் பல சமூக வாழ்வியல் அரசியல் விடயங்களை திரைப்படம் அலசுவது… இது ATGS திரப்படத்தின் கதையல்ல. இது மூடர்கூடம் படத்தின் கதை.

இனி நம்மால் பணம் சம்பாதிக்க முடியாது என நம்பிக்கை இழந்ததால் ஊரை விட்டு ஓட நினைக்கும் பக்தவச்சலம் மீண்டும் நம்பிக்கை பெற்று தன் flight tickets கிழித்து போடுகிறார். இந்த நம்பிக்கை திடீரென்று பிறந்துவிடவில்லை. படம் நிகழும் அந்த ஒரு நாள், அந்த நாள் தரும் அனுபவங்கள், இவைதான் அவரை மாற்றுகிறது. பணம் மட்டும் வாழ்க்கைக்கு போதாது, மக்களை சம்பாதிக்க வேண்டும் என்பதை உணர்கிறார். தன் மகளுக்கு இன்னொருவன் அவன் தாயின் நினைவாக வைத்திருக்கும் தாலியை கழட்டி தந்து திருமணம் செய்து வைக்கிறான். தான் முட்டாள் என்று உதாசினம் செய்த மகன் மீது ஒருவன் நம்பிக்கை வைக்கிறான், அதனால் அந்த மகன் தனக்கே எதிரி ஆகிறான். தன் மகள் தன்னை ஒரு ஹீரோவாக நினைக்காமல் வெறொருவனை ஹீரோவாக நினைக்கிறாள். தனக்காக பல வருடங்கள் வேலை செய்திருக்கும் ஒரு வேலைக்காரிக்கு தான் உதவவில்லை, ஆனால் அறிமுகமற்ற ஒரு ஏழை தனக்கு கிடைத்த பணத்தை அவளுக்கு தானம் கொடுக்கிறான், அவன் கொடுத்ததோடில்லாமல், முன்று நாட்கள் மட்டுமே நண்பர்களாக இருந்த மூன்று பேர், வாழ்வின் விழிம்பு நிலை மனிதர்கள், பணம் மிக முக்கிய தேவை என்றிருக்கும் ஆண்டிகள், அந்த பணத்தை துச்சமாக மதித்து, நட்பும் மனிதமும் தான் முக்கியம் என்று எண்ணி தங்கள் பங்குகளையும் தானம் கொடுக்கின்றனர். இதுதான் பக்தவச்சலத்தை மாற்றும் நிகழ்வுகள். இந்த நிகழ்வுகள்தான் முடர்கூடம் திரைப்படம். ATGS இதை செய்யவில்லை.

நம்பிக்கை எனும் ஒற்றைச் சொல்லை பல விதங்களில் மூடர்கூடம் மேன்மை படுத்துகிறது. இந்த உலகில் மனிதம் இன்னமும் தழைத்திருக்கிறது, நம்பிக்கை இன்னமும் இருக்கிறது என்பதை பாசிட்டிவாக சொல்லும் படம் ”மூடர்கூடம்”.

Bakthavachalam & white characters forming the base plot – தன் தங்கை மச்சான் நிலம் விற்று தந்த காசில் பட்டணம் வந்து தொழில் வளர்ச்சி பெற்று, பழசை மறந்து பகட்டு வாழ்க்கை வாழும் ஒரு மாமன்… அவனை நம்பி வந்து ஏமாந்து போகும் வெள்ளை, இந்த ஏமாற்றத்தின் விரக்திதான் இவர்கள் நால்வரும் திருட மூலக்காரணம், நியாயமான காரணம்… this forms the base plot. This is not in ATGS. In ATGS they rob the gas station just for fun.

சீர்திருத்த பள்ளியில் படித்ததால் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல், கிடத்த வேலையிலும் நீடிக்க முடியாமல், இனி ஒரு எதிர்காலமே இல்லை என்ற நிலையில், மனிதம் சமதர்மம் பொதுவுடமை பகுத்தறிவு பேசும் நவீன்… எந்த படத்திலும் நாம் பார்த்திரவில்லை.

அனாதை ஆசிரமப் பள்ளியில் படித்து வளர்ந்து, படிப்பு வராமல், தனக்கென்று கஞ்சா விற்கும் தொழில் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, அதிலும் ஆயிரம் safety செய்துகொண்டு, முகமூடி எதற்கு monkey cap எதற்கு என்று வித்தியாசம் தெரியாமல், தனக்கு தெரியாத ஒரு பகட்டு மொழியை தன்னிடம் தன்னை அவமானப் படுத்துவதற்காக உபயோகப்படுத்தும், தனக்கே தெரியாமல் தமிழ்பற்று மற்றும் விலைவாசி உயர்வு பற்றி பேசும் ஒரு செண்ட்ராயன் எந்த படத்திலும் வரவில்லை.
பச்ச பச்சயா எப்படி வேணாலும் கெட்ட வார்த்தைல திட்டுங்க, ஆனா முட்டாள்னு மட்டும் சொல்லாதிங்க, மூஞ்சிய பேத்துருவேன்னு சொல்ற குபேரன். முட்டாள் முட்டாள் என்று சாடப்பட்டு, ஊரை விட்டு பட்டணம் ஓடி வந்து, பேச்சுத்துணைக்கு கூட ஆள் இல்லாமல், தனிமையில் வாழும், வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல், காற்றில் அடித்து செல்லும் இலை போல வாழும் குபேரன், அவனுக்கு வரும் அனிமேஷன் முன்கதை, அதில் காட்டப்பட்டிருக்கும் உணர்வுபூர்வமான ஒரு முட்டாள் சிறுவனின் கதை, அது இங்கிருக்கும் பல சிறுவர்களின் வாழ்க்கையொடு ஒத்துபோகும் விதம்…. இது எந்த திரைப்படத்திலும் வந்ததில்லை.

வாழ்க்கைல மொத தடவயா ஒருத்தர் என்ன நம்பி ஒரு பொறுப்பு கொடுத்துட்டு போயிருக்கார், அந்த நம்பிக்கைய நான் காப்பாத்தியாகனும், இல்லனா நீங்க சொல்றமாரி நான் நெஜமாவே ஒரு வேலைக்கும் ஆகாத useless fellow ஆயிடுவேன் என்று சொல்லும் ஒரு சிறுவனை நாம் எந்த படத்திலும் பார்க்க முடியாது.
நாய்க்கு ஒரு முன்கதை, அதில் எப்படி ஒரு நாய்க்குட்டி தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, சமுதாயத்தின் வெட்டி கவுரவத்திற்காக பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கப்பட்டு, அதன் சுதந்திரம் பரிக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, புலி போல வளர வேண்டிய ஒரு வேட்டை நாய், பூனை போல ஆகிறது என்பதை இதுவரை எந்த படத்திலும் நாம் பார்க்க முடியாது.

அந்த நாய்க்கும், குபேரனுக்கும், முட்டாள் சிறுவனுக்கும், வேலைக்காரன் கன்னிசுக்கும் ஒரு சம்மந்தம் இருக்கிறது. புலி போல் வர வேண்டிய ஒரு நாய் பூனை போல மாறிவிட்டது. முட்டாள் முட்டாள் என்று திட்டி திட்டி நிஜமாகவே முட்டாளாகி விட்டான் குபேரன். அதை அவன் உணர்ந்தும் விட்டான். தான் ஒரு முட்டாளாக மாறிக்கொண்டிருக்கிறான் அந்த சிறுவன். அதை அவன் உணரவிலை. தன் சுய பலத்தை அன்றுதான் உணர்கிறான் வேலைக்காரன் கன்னீசு… இது எந்த படத்திலும் வரவில்லை.
Job ethics பேசும், ஆங்கிலமே தெரியாமல் ஆங்கிலத்தில் டக்கால்டி காட்டும், happy life எனும் எழுத்தை பொம்மையா பார்க்கும் ’மைல்ஸ்’ எந்த திரைப்படத்திலும் வரவில்லை. மைல்ஸ் கேரக்டர் இப்போதுள்ள பீட்டர் ஆண்கள் & பெண்களின் சட்டையர். ஆங்கிலமே தெரியாமல் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துகொண்டு பீட்டர் விடும் அவர்களை பகடி செய்யும் ஒரு கேரக்டர்.

தமிழ் சினிமா ஹீரோயிசத்தின் மீது மோகம் கொண்டு, அதன் காரணமக ஆணாதிக்க சமூகத்தை ஏற்க தொடங்கும் ஒரு சிறுமி… நாம் எந்த படத்திலும் பார்க்க முடியாது.

அனுபவ அறிவு எதுவும் இல்லாமல், தங்களுக்கு தெரிந்த கிணற்று வாழ்க்கைதான் மேன்மையானது, தங்களுக்குதான் அறிவு அதிகம் என்று எண்ணிக்கொண்டு ஒரு பகட்டு வாழ்க்கை வாழும், maturity சுத்தமாக இல்லாத மேல்தட்டு வர்க்க பெண்களின் சட்டையராக மண்டோதரி கேரக்டர் (அனுபமா)… இந்த விதத்தில் நாம் எந்த படத்திலும் பார்த்ததில்லை.

வீரமாக சீனியர் சிட்டிசன் ரைட்ஸ் கேட்டு, பின்னர் மூணு குண்டுகளை உள்ளே போட்டுவிட்டால் உட்காரலாம் என்று தெரிந்ததும், படம் நெடுக குண்டுகளை கடைசி வளையத்திற்குள் சேர்க்கும் பணியை மட்டுமே பார்க்கும் ஒரு கிழவர் – இதுதான் நம் மக்கள். உரிமைக்காக குரல் கொடுக்கவேமாட்டோம். நமக்கு என்று ஒரு பிரச்சனை வந்தால் குரல் கொடுப்போம். அப்பொழுதும் நம்மை ஏமாற்றும் விதமாக ஒரு sweping reform கொடுக்கப்படும். நாமும் ஏமாந்துபோய் கேட்க வந்த உரிமையை விட்டுவிட்டு கேனத்தனமாக ஒரு விசயத்தை பிடித்துகொள்ளும் கொள்கை இயக்கங்களின் தலைவர்களையும் நம் மக்களையும் பகடி செய்யும் ஒரு கேரக்டர்… எந்த படத்திலும் வரவில்லை.

வாழ்க்கையின் நிம்மதி, ‘happy life’ என்பதை ஒரு கோமாளி பொம்மையின் வடிவில் குறியீடாக வைத்து, அது நம்மை பார்த்து நகலாக சிரித்து, ‘நான் உங்க பக்கத்துல உங்களுக்குள்ளயேதான் இருக்கேன், ஆனா நான் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டேங்குறேன், என்ன நீங்க வெளியிலயே தேடிட்டிருக்கீங்க, அதனால நான் உங்களுக்கு என்னிக்குமே கிடக்கமாட்டேண்டா முட்டாப் பயலுவளா’ என்று middle finger up காட்டி நம்மை பகடி செய்யும் ஒரு கோமாளி பொம்மை… அதற்கு ஒரு முன்கதை, அந்த முன்கதையின் வடிவம் presentation style, அதில் உள்ள கான்சப்ட் (அந்த வீட்டிற்கு வரும் அனைவருகம் ஏதேனும் ஒரு விதத்தில் பணம் பொருள் தேடியே வருகின்றர். படத்தின் ஆரம்பத்திலிருந்தே ஒரு பெரிய சொத்து, அந்த பொம்மை அவர்கள் கண் முன்னேதான் இருக்கிறது, ஆடியன்சான நம் கண் முன் கூட, ஆனால் நம் எவருக்கும் அதன் முக்கியத்துவம் தென்படவில்லை. அந்த பொம்மை எவர் கையிலும் நிரந்தரமாக தங்காததுபோல, வாழ்க்கையின் நிம்மதி satisfaction ‘hapy life’ யாரிடமும் தங்குவதில்லை. இதைத்தான் நவீன் ஆரம்பத்தில் ’நமக்கு ரொம்ப பக்கத்துல, நமக்குள்ளயே இருக்கிற வாழ்க்கைய நாம வெளில தேடி அழையறோம், கடைசி வரைக்கும் அது கெடைக்காமயே சாகறோம்’ என்று தனது voiceoverல் கூறுகிறான். படம் அங்கு தொடங்கி கடைசியில் பொம்மை முன்கதையில் ஒரு வட்டம் முழுமை அடைவதுபோல் நிறைவு பெறுகிறது.
Climax shooting sequence – 5 நிமிடங்களுக்கு முன்னால் எதிரிகளாக நின்றுகொண்டிருந்த இரண்டு ரவுடிகள், குண்டடி பட்டு சாகப் போகிறொம் என்று உணர்ந்ததும், இந்த பகைமை எல்லாம் பொய், நம்மிடம் இந்த symphony music போல அழகான ஒரு வாழ்க்கை இருந்தது, அதை எப்படி வீணடித்துவிட்டோம் என்று உணர்ந்து, சிகரெட் லைட்டரை பரிமாறிக்கொண்டு சிரிக்கின்றனர். வாழ்வின் உண்மை அர்த்தம் உணரும் இந்த காட்சி எந்த படத்திலும் வரவில்லை.

குழந்தைக்கு தீனிப்பண்டங்கள் அடுக்கி வைத்துவிட்டு, TVயில் டாம்&ஜெரி போட்டு விட்டுவிட்டு, கூட்டணி குளியல் போட்டு sex வைத்துக்கொள்ளும் பெற்றோர்… அப்பன் சொன்னதை வேதவாக்காக எடுத்துகொண்டு, கொடும் பிரச்சனையில் இருக்கும் பக்தவச்சலத்திற்கு மேலும் தீனிகள் கேட்டு கடுப்பேற்றும் சிறுமியின் sequence… இது எந்த படத்திலும் வரவில்லை.

இந்த படத்தின் ஜீவன், பலம் என்று அனைவராலும் பாராட்டப்படும் வசனங்கள் மற்றும் making style எந்த படத்திலும் வராதது.

நவின் முன்கதை புதுமையானது.

செண்ட்ராயன் முன்கதை – ஒரு இரண்டரை நிமிட பாடலில் செண்ட்ராயன் வாழ்க்கையின் மூன்று பரிணாமங்கள் காட்டப்பட்டிருகிறது. Sentrayan’s fantacy part, தான் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அது மைக்கேல் ஜாக்சன் ஸ்டைலில் வருகிறது. அந்த போர்ஷனின் பாடல் வரிகள் ‘என்னப் பாரு புரூஸ்லி பாடி, நீ வந்தா வாடி வராட்டி போடி’ என்று அவன் வாழ நினைக்கும் வாழ்க்கையை காட்டுகிறது. Sentrayan’s original self அவன் லுங்கி கட்டிக்கொண்டு பீடி வழித்துகொண்டு ‘ஏம் பேரு செண்ட்ராயன், எனக்கு ஒன்னுமே தெரியாது’ என்று சொல்வது போல் வருகிறது. அந்த பள்ளி போர்ஷன் தான் உண்மை நிகழ்வு. சிவப்பான பெண்கள் மீது காதல், அவளை ஒரு சிவப்பான இளைஞன் தட்டிச் செல்வது, இவன் தலைகீழாக நிற்பது.. ‘ஒருமுறைதான் உந்தன், சிறுநகையால் பெண்ணே, திருடிவிட்டாய் என்னை, கழங்க வைத்தாய் கண்ணை’ என்று செண்ட்ராயனின் வாழ்க்கையை நான்கு வரிகளில் நாம் எந்த திரைப்படத்திலும் பார்க்கவில்லை.
மூடர் கூடம் நம்பிக்கை எனும் ஒற்றைச் சொல்லை பல விதங்களில் சித்தரித்து மேன்மை படுத்தியுள்ளது.

தமிழ் மொழி கற்றுகொண்டு தமிழ் பெருமை பேசும் ஒரு மும்பை டான் சலீம் பாய், TT ball விழுந்தால் சாகும் தண்டனை, பாய் மனதில் நினைப்பதை மூளையாக இருந்து செயல்படுத்தும் Brain character, ஒன்னுக்க கண்ட்ரோல் பண்ண முடியாதவன் ஒரு ஏரியாவ கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு நினைக்கிற ஆட்டோ குமாரு, அவனோட அல்லக்கைங்க டுப்பீலு, குள்ளன், அப்புறம் சக்கர இருக்கறதால ஒன்னுக்க கன்ட்ரோல் பண்ண முடியாத தக்காளி, சுடாம இருக்கறதுக்கு எதுக்குடா துப்பாக்கினு கேட்கற வக்கா, கப்புளியை தேடி வந்து மரண அடி வாங்கும் முஸ்தபா, தன் சுயத்தை தன் original strength என்ன என்பதை அன்றுதான் உணரும் வேலைக்காரன் கன்னீசு… இந்த கதாபாத்திரங்கள் எந்த படத்திலும் வரவில்லை.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு முன்கதை , அந்த முன்கதையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கின்ற திரைக்கதை அமைப்பு குறித்து?

நான் மூடர்கூடம் First draft எழுதியதற்கு பின், இனி என்ன செய்யலாம் என்று யோசித்தேன் . 12 angry men போன்று இப்படி ஒரு அறைக்குள் நடக்கும் கதைகள் இன்னும் நிறைய இருக்கிறது, படம் ஒரு controlled areaவிற்குள் நடப்பதாக இருந்தால் எனக்கு வசதியாய் இருக்கும் என்று எழுதியதுதான் மூடர் கூடம். கில் பில் பார்க்கும்போது அதில் The story of oron meeshi என்று ஒரு அனிமேஷன் வரும். Oron meeshiயின்முன்கதை. இதை டாரண்டினோ ’ஆளவந்தான்’ படத்தைப் பார்த்துவிட்டு, அதன் பாதிப்பில் தான் கில் பில் படத்தில் வைக்கிறார். அதைப் பார்த்து எனக்கு, நம் படம் ஒரே அறைக்குள் சென்றுகொண்டு இருப்பதால் அயர்ச்சிதர வாய்ப்பு இருக்கிறது என தோன்றியது . அதனால் இடையில் ஒரு சின்ன மீட்சி இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு படத்திற்கு பாடல் தான் விளம்பரமாய் இருப்பதால் பாடல் அவசியம். ஆனால் அதற்காக குத்துபாட்டு, பாரில் ஒரு பாட்டு என்று வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சரி, ஒரே நாள் நடக்கின்ற கதையென்பதால் அந்தக் கதாபாத்திரங்களின் ஒரு நிலைவிளக்கமாய் ஒவ்வொரு பாடலும் இருக்கட்டும். அதே சமயம்ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் காட்சிப்படுத்தி அதிலே கதையை சொல்வோம் என்று தீர்மானம் செய்தேன். கில் பில் பார்க்கும் போது அனிமேஷன் முன்கதை, சார்லி சாப்ளின் என்னுடைய குரு என்பதால்அவருக்கு மரியாதை செய்யும் வகையில் வைத்தது பக்தவச்சலம் முன்கதை.

இருந்தாலும் Attack the gas station படத்திற்கும் உங்கள் படத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் தெரிகிறதே?

ஏன் என்றால் இதிலும் நாலு திருடர்கள்.

அது மட்டும் இல்லை , இதில் முட்டாள் என்றால் அடிக்கும் கதாபாத்திரம் அதிலும் Stupid என்று சொல்லும்போது அடிக்கும் கதாபாத்திரம், இரண்டிலும் Icecream வாங்கிட்டு வரச்சொல்லும் குழந்தை?

அந்த படத்தில் stupid என்று சொன்னால் அடிக்கும் கதாபாத்திரம் இருப்பதாக எனக்கு ஞாபகம் இல்லை. அப்படியே இருந்தாலும் Stupid இல்லை fool என்று சொல்லும்போது அடிப்பது என்பது நிறைய படங்களில் வந்திருக்கும், ஆனால் முட்டாள் என்ற ஒரு வார்த்தை மட்டும் தான் கெட்ட வார்த்தை என நம்பும் கதாபாத்திர அமைப்பு எந்த படத்திலும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. சின்ன வயதிலிருந்தே ஒருவனை முட்டாள் முட்டாள் என்ற வார்த்தை துரத்த ஊரை விட்டு ஓடிப்போய் வாழும் அந்தக் கதாபாத்திரம் வேறானது. இரண்டிலும் நான்கு திருடர்கள் இருக்கிறார்கள், l ஒத்துக்கொள்கிறேன். அதில் அவர்கள் ஒரு விளையாட்டாக திருடப்போகிறார்கள், அங்கு வேலை செய்து பணம் பெறுகிறார்கள் . இதில் உள்ள பின்புலங்கள் வேறு. இதில் அந்த நால்வரும் எப்படிச் சேர்கிறார்கள்,பக்தவச்சலம் இருக்கிறார். இது வேறு கதை. நீங்க ஒற்றுமை என்றால் ’Godfather’ படத்திற்கும் ’நாயகன்’ படத்திற்கும் எத்தனை விஷயங்கள் சொல்வீர்கள். நிறைய காட்சிகள் இருக்கிறது. குபேரன் கதாப்பாத்திர அமைப்புவேறு. Stupid என்று சொன்னால் அடிப்பது போன்று இன்னும் பத்து படம் நான் காண்பிக்கிறேன். சரி போகட்டும் , உங்க பார்வையை நான் மாற்ற வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

உங்கள் படங்களில் இயல்பு தன்மைக்காக எந்த அளவிற்கு நீங்கள் மெனக்கெடுவீர்கள்?

இயல்பு தன்மை என்று நீங்கள் எதை சொல்ல வருகிறீர்கள்

அதாவது ஒரு கதாபாத்திரத்தின் யதார்த்த தன்மை வெளிப்பட நீங்கள் செய்யும் கள ஆய்வு குறித்து?

நீங்கள் நடந்து போகிறீர்கள். அப்போது வந்து நீங்கள் எப்படி நடந்து செல்கிறீர்கள் என்று கேட்டால் உங்களுக்குச் சொல்ல தெரியாது?. அது ஒரு அனிச்சையான செயல்.இதெற்கெல்லாம் ஒரு சூத்திரம் கண்டுபிடித்தால், யார் வேண்டுமேன்றாலும் ஸ்டான்லி குப்ரிக் (Stanley Kuprick) மாதிரி ஒரு படம் எடுத்து விடலாம். நான் ரசிக்கின்ற ஒரு விஷயத்தை எழுதுகிறேன், அதில் எனக்கு நூறு சதவிகிதம் திருப்தி அடைகின்றபோது நிறுத்துகிறேன்.சின்ன பொண்ணு சுபிக்க்ஷா கதாபாத்திரம் டெல்லியில் LKG படிக்கின்ற ஒரு சிறுமியின் பாதிப்பு. ஒரு நாயக பிம்பம் மீதான காதல்.
இதில் வரும் கதாபாத்திரங்கள் எதுவும் என் கற்பனைகளில் இருந்து உதித்தது அல்ல, எல்லாவற்றிலும் நானும் நான் சந்தித்த கதாபாத்திரங்களும் பார்த்த படங்களும் படித்த புத்தகங்களும் கிடைத்த அனுபவங்களும் தான் இருக்கின்றன. இந்த கள ஆய்வு செய்கின்ற அளவிற்கெல்லாம் நான்அறிவாளியல்ல, நான் எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன், பிடிக்கின்ற இடத்தில நிறுத்துகிறேன் .ஆனால் அந்த மாம்பழம் வசனம் செண்ட்ராயன் கதாபாத்திரம் பேசாது என்பது மட்டும் எனக்கு தெரியும்.

சென்ட்ராயன் கதாபாத்திரத்திடம் கஞ்சா வாங்க வரும் அயல்நாட்டுகாரரின் சட்டையில் உள்ள காந்தி படத்தின் மூலம் குறியீடாய் ஏதேனும் சொல்ல வருகிறீர்களா?

இந்த கேள்விக்கு எப்போதும் நான் ஒரே பதில் தான் சொல்கிறேன், ஓவியம் வரைந்து முடிக்கின்ற வரைக்கும் தான் ஒவியனின் வேலை. வரைந்த பிறகு அந்த ஓவியமும் பார்வையாளனும் பேசிக்கொள்கிற விஷயம் தான். Beauty lies on the eyes of the beholder என்பது போல தான்.உங்களுக்கு அதைப் பார்க்கும் போது என்ன சொல்கின்றதோ அது தான். இன்னும் எத்தனையோ விஷயங்கள் உள்ளே இருக்கின்றது.பொம்மையில் Happy Life என்று இருப்பதற்கும் அது பல இடம் கைமாறி வந்து யாரிடமும் தங்காமல் இருப்பதற்கும், வாழ்க்கையில் இருக்கிற நிம்மதிக்கும், ஆரம்பத்தில் வரும் பெரும்பாலான விடியல் என்ற வசனத்திற்கும் ஒருசம்மந்தமிருக்கிறது, அது என்ன என்றும், இந்த இடத்தில இதை சொல்கிறேன் என்றும் ஒவ்வொன்றிற்கும் துணை உரையிட்டு விளக்குவது சினிமாவாக இருக்காது.புரிபவர்களுக்கு புரியும், புரியாதர்களுக்கு இது ஒரு காமெடிப்படமாக இருக்கும்.

படத்தின் பாடல்களில் இருக்கும் இசையும் வெவ்வேறு ரகமாய் உள்ளதே? ஒரு இயக்குனருக்கு இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற மற்ற துறைகளில் உள்ள பரிச்சயம் குறித்து?

அடூர் கோபாலகிருஷ்ணன் சார் சொல்வார், I am not a director, I am a film maker. வெறும் கதை எழுதி இயக்குவது மட்டுல்லாமல் மொத்த படம் உருவாக்கத்திலும் நமது பங்கு இருக்க வேண்டும். அதற்காக இசைஅறிவு இருந்தால் தான் படம் எடுக்க முடியும் என்று அல்ல. இருந்தால் அது இன்னும் உயரம் பெரும். அதனால் தான் வான்கேர்வாய்(Wong-Kar-Wai), டாரண்டினோ போன்றோர் படத்தில் எல்லாம் இசை சரியாகபயன்படுத்தப்பட்டிருக்கும். நான் இளையராஜாவின் தீவிர ரசிகன்,ரகுமான் இசை பிடிக்கும், ஹிந்தி பாடல், Jazz, Blues என எல்லாமே கேட்பவன்.Blues எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்போது இங்கு Blues வேண்டும் என்று நினைப்பேன், அது போல பல ஆசைகளை கிடைக்கிற வாய்ப்புகளில் திணித்து கொள்வது தான்.

ஒரு இயக்குனருக்கான இலக்கிய பரிச்சயம் குறித்து?

நான் பெரிய படிப்பாளி இல்லை. ஆனால் நிறைய நாவல்கள், சிறுகதைகள் படித்திருக்கிறேன்.தெருக்கூத்தும் பார்த்திருக்கிறேன். படித்ததை நிறைய இடத்தில் பயன்படுத்தியுமிருக்கிறேன். ஜாவெத் அக்தர் சொல்வது போல நிறைய படித்துவிட்டு எழுதாமல் இருப்பது மலச்சிக்கல் வந்த மாதிரி, ஒன்றுமே படிக்காமல் எழுதுவது loose motion வந்த மாதிரி. நீங்கள் நிறைய படிக்கும் போது உங்களுடைய சமுக, அரசியல் மற்றும் பொருளாதாரபார்வையில் அடையும் முதிர்ச்சி என்பது தானாகவே தெரியவரும்.ஒரு விஷயத்தை எப்படிச் சொல்வது எழுதுவது என்பதும் நிச்சயம் மாறும்.
நிறைய படிக்கும்போதும் படங்கள் பார்க்கும் போதும் தான் புதிதாக கதைசொல்லும் பாணி நமக்குள் இருந்து வெளிப்படும். இல்லையென்றால் காலங்காலமாக காதல், ஹீரோ, வில்லன் என்று ஒரே formatல் தான் படம் எடுக்க முடியும்.

சாதாரண இலக்கிய கூட்டத்திற்கும், திரையிடல் போன்றவற்றிற்கும் கலந்துகொள்ளும் இயக்குனர்கள் கேரளாவில் இருக்கின்றனர். உங்களையும் சில இலக்கிய நிகழ்வுகளில் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற நிகழ்வுகளுக்குமூடர்கூடம் படத்திற்கு முன்பும் பின்பும் நீங்கள் செல்வது குறித்து?

உங்களுக்கு மூடர்கூடம் படத்திற்கும் முன்பு நவீனைத் தெரியாது பின்பு தெரியும். ஆனால் என் வாழ்க்கையில் மூடர்கூடத்திற்கு முன் பின் என்றெல்லாம் கிடையாது, எப்போதும் நவீன் தான்.ஒவ்வொருகாலக்கட்டங்களிலும் எனது ரசனை, கொள்கை, பார்வை, பார்வை கோணம், சொல்லும் கருத்து என எல்லாம் படிப்படியாய் மாறிக்கொண்டே இருக்குமே தவிர மூடர்கூடம் என்னை எந்த அளவிலும் மாற்றியதுகிடையாது.அதனால் தான் மூடர் கூடம் படத்தில் அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்தமாகவும், சமுகம் சார்ந்தும் என்னால் பேசமுடிகிறது. இதற்கு முன்பே தேடித் தேடி Russian culture centre ல் திரையிடப்படும்படங்களுக்கு சென்று இருக்கிறேன், ஆனந்த் பட்வர்தனின் War and peace படம் எலியட் கடற்கரையில் திரையிட்ட போது ஓடிச்சென்று பார்த்திருக்கிறேன் . முக்கியமான எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்குசென்று பார்த்ததுமுண்டு. என் சிற்றறிவிற்கு எட்டிய அளவில், நடக்கின்றது என தெரிகின்ற எல்லா நிகழ்வுகளுக்கும் நான் கலந்துகொண்டுதான் இருக்கிறேன். அங்கு செல்வதில் இருந்து கற்றுக்கொள்ள ஏதாவது நிச்சயம்இருக்கத்தான் செய்கிறது.

வணிகப்படம், கலைப்படம் என்று சொல்லப்படுவது குறித்து?

இப்போது எது வணிகப்படம்?, வணிகப்படம் என்று சொல்லிக்கொண்டு வரும் பெரும்பாலான படங்கள் தோற்றுக்கொண்டிருக்கிறது. எந்தப்படம் நன்றாக லாபகரமானதாக ஓடுகிறதோ அது வணிக படம்.கலைப்படம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னை பொறுத்தவரை நல்ல படம், கெட்ட படம் என்று சொல்லலாம். அதுவும் தனிப்பட்ட ரசனை சார்ந்தது. சிலருக்கு ஒரு வணிகப்படம் நல்ல படமாய் இருக்கலாம்,அவர்களுக்கு அடூர் கோபாலகிருஷ்ணனின் படம் பிடிக்காமல் இருக்கலாம் .அது போல தான், எனக்கு எது பிடிக்கிறதோ நான் அதைச் செய்கிறேன். அது வெகுஜனத்தை சேர்ந்தால் படம் வசூல் செய்யும் இல்லையென்றால்படம் தோல்வியடையும். ரசனையில் நல்லது கெட்டது என்று சொல்வது முறையல்ல.

ஈரான் , கொரியா, ஏன் கேரளாவில் அடூர் கோபாலகிருஷ்ணன், இங்கெல்லாம் சாத்தியப்படும் போது இங்கு மட்டும் தொடர்ந்து வணிகப்படமாகவே வந்து கொண்டிருக்கிறதே?

இதில் தயாரிப்பாளர்களை குறை சொல்லி பிரயோஜனம் என்பதே இல்லை. அங்கெல்லாம் அந்த படத்திற்கு சந்தை இருக்கிறது. கேரளாவில் அடூர் கோபாலகிருஷ்ணன் தனக்கென்று ஒரு சந்தை உருவாக்கி நீங்கள் சொல்வது போல் கலைப்படம் எடுத்து நன்றாக சம்பாதித்தும் கொண்டு இருக்கிறார். உங்களுடைய so called கலைப் படங்களுக்கென்று ஒரு world market இருக்கிறது. அதை நாம் இன்னமும் explore செய்யவில்லை. சந்தை என்னவோ அதற்கன பொருளைத்தானே சாகுபடி செய்ய முடியும். இல்லையென்றால் நம் பொருளுக்கான சந்தையை தேடி கண்டு பிடிக்க வேண்டும். நமக்கு திரையரங்கு, Satellite விட்டால் பெரிதாக சந்தை என்பதே கிடையாது.ஒரு படத்திற்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதுஎன்பதே பெரிய விஷயம்.எனக்காவது நிலத்தை நகையை விற்று பணம் கொடுக்க ஒரு அக்கா இருந்தாள், என்னை நம்பி பணம் கொடுக்க நண்பர்கள் இருந்தார்கள், எனக்காக எதுவும் இல்லாமல் உழைக்க ஒரு குழு இருந்தது,அதனால் எந்த சமரசமும் இன்றி என்னால் ஒரு படம் செய்ய முடிந்தது. மற்றவர்களுக்கெல்லாம் ஒரு தயாரிப்பாளர், முன்னணி நடிகர் ஆகியோரை பிடிப்பதே பெரிய விஷயம். தயாரிப்பாளர்கள் பணம் போடுவதால்அவர்களுக்கான ஒரு பாதுகாப்பான வட்டத்தை வடிவமைத்துக்கொண்டு, எந்த படம் ஓடுகிறதோ எதைச் சேர்த்தால் படம் வெற்றியடையும் என்று நம்பப்படுகிறதோ அதை சேர்த்து படம் எடுக்க சொல்கிறார்கள். அதில் இருந்துகொண்டு எத்தனை தூரம் நல்ல விஷயங்களை சொல்கிறோம் என்பது தான் முக்கியமானது. ஏன் கலைப்படங்கள் வருவதில்லை என்ற கேள்விக்கு வந்த படங்கள் என்னவாகி இருக்கிறது என்பதில்தான் பதில் இருக்கிறது. இதுநிச்சயம் மாறும். மக்களின் மனநிலை மாற மாற இது ஒரு நாள் மாறும். ஒரே இரவில் மாறிவிடக்கூடிய விஷயம் அல்ல இது. கொஞ்ச கொஞ்சமாய் மாறக்கூடியது.

திரையரங்கு வெளியீடு அல்லாது நல்ல படத்தை எடுத்துவிட்டால் வெளிநாட்டில் உள்நாட்டில் என நடக்கும் திரைப்பட விழாக்களில் இருந்தே சம்பாதிக்க முடிகிறதே?

ஆம். அதற்கான விழிப்புணர்வு தரப்படவேண்டும். இந்த மாதிரியான படங்களுக்கு இப்படி ஒரு சந்தை இருக்கிறது என்பதை எல்லோரிடமும் கொண்டுசேர்க்க வேண்டும். அதனை உங்களைப் போன்றஇயக்கங்கள் தான் செய்ய வேண்டும். கத்திரிக்காய் விளைத்தால் இப்படி ஒரு சந்தை இருக்கிறது என்று தெரிந்தால்தானே எல்லோரும் விதைக்க முன்வருவார்கள் . எந்த சந்தையும் இல்லை, விளைவித்து நீயே வீட்டில்வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் யார் முன்வருவார்கள்.

மூடர் கூடம் படத்தையே எடுத்துக்கொண்டால் வணிக எல்லைக்குள் ஒரு வித்தியாசமான படம் என்று சொல்லலாம் , அதிலும் வணிக முயற்சிகள் இருக்கென்றே நினைக்கிறேன்?

ஆம் நிச்சயமாக இருக்கிறது. நான் வணிகப்பட இயக்குனர் தான் . என்னைப் பொறுத்தவரை நான் சொல்ல நினைக்கும் ஒரு விஷயம் நிறைய நபர்களை சென்று சேர வேண்டும் என்றே நினைப்பேன். இதனால் தான் எனக்குசார்லி சாப்ளின் பிடிக்கும். அவர் படங்களை சிறுவர்களும் பார்க்கலாம், பெரியவர்களும் பார்க்கலாம்.சின்ன வயதில் பார்க்கும் போது படத்தை பார்த்து சிரித்துக்கொண்டு மட்டும் தான் இருந்தேன், இப்போது மீண்டும்பார்க்கும் போது அதில் அவர் சமுதாயத்தின் மீது வைத்திருக்கும் விமர்சனம் என்பது ஆச்சர்யமளிக்கிறது. அவர் தான் ஒரு நல்ல கலைஞன். மக்களை ரசிக்க வைத்து அதில் நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும். கசப்பாய்மருந்து கொடுத்தால் குடிக்க மாட்டார்கள் குழந்தைகள்.கொஞ்சம் இனிப்பை சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
அப்படி இல்லை என்றால் , இன்று என் படத்தை யாரும் பார்த்து இருக்கவேமாட்டார்கள். நீங்களும் நேர்காணல் என்று என்னிடம் வந்திருக்கமாட்டீர்கள்.

இப்படிப்பட்ட வித்தியாசமான வணிக முயற்சிகளை கலைப்படம், மாற்று சினிமா என்று சொல்கின்ற சூழல் இன்று உருவாகியுள்ளதே? இது கலைப்படங்களை இங்கு வரவேற்குமா அல்லது அழித்துவிடவாய்பிருக்கிறதா?

நான் நல்ல படங்களை மட்டுமே பார்க்க வேண்டும் ,மசாலா திரைப்படங்களை எல்லாம் பார்க்க கூடாது என கில் பில் போன்ற படங்களை எல்லாம் பார்க்காமல் இருந்தேன். ’கில் பில’,் பார்த்த பிறகு அது நல்ல படம், இது தான்படம் என்று சிலாகித்ததும் உண்டு. அமைதியாக மெதுவாக ஒரு காட்சியை நகர்த்த வேண்டும் என்பதுதான் கலைப்படம் என்ற கருத்தியல் கொண்டிருக்கிறீர்களா? என்று தெரியவில்லை.

காட்சி வடிவத்தில், யதார்த்த தன்மையில் இருப்பது?

மூடர் கூடம் படத்திற்கு சிறந்த வசனங்கள் என்று நிறைய பாராட்டுகளும் வந்தபோதிலும், வசனமாகவே இருக்கிறது என்ற விமர்சனமும் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் படத்தில் வசனம் தாண்டி நிறையவே காட்சிவடிவத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. மொத்தத்தையும் காட்சி வடிவத்தில் சொல்கிறேன் என்று சொல்லி எடுத்தால் மக்கள் அதை புறக்கணித்து விட வாய்ப்பிருக்கிறது. பத்து வருடத்திற்கு முன் இருந்த நிலை இன்றுஇல்லை. பழைய படங்களில் மையக் கதாபாத்திரங்கள் இதனால் தான் இவன் இதை செய்தான் என்று இறுதிகாட்சியில் விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.இப்போது நிலை சற்று மாறி இருக்கிறது. யாரும்விளக்காமலே மக்களும் படங்களை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஒரு வளர்ச்சியே. இனியும் வளரும்.கலைப்படம் யாருக்கு வரவேண்டும் என்பது தான் கேள்வி.மக்களுக்காக தான் படம் செய்கிறோம் என்றுஒரே கதையை பத்து நபரிடம் சொல்லி கருத்து கேட்டால் இரண்டு பேர் பிடிக்கும் என்பார்கள் இரண்டு பேர் பிடிக்கவில்லை என்பார்கள், சிலர் இது படமே இல்லை என்பார்கள். இப்படி பத்து பேருக்கும் பத்து விதமானகருத்து இருக்கும். அப்போது குறைந்த பட்சம் அது எனக்காவது நல்ல படமாய் இருக்க வேண்டும். என்னுடைய படம் எனக்கு நல்ல படம். ஏற்கனவே நீங்கள் எல்லாம் தூற்றுகிற வணிகபடம் வெளியாகி நல்ல வசூல் அடைந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் வழக்கமான சூத்திரத்தில் இல்லாமல் சற்று மாறுதலாக ஒரு படம் வருகின்ற சமயம் அது வசூல் செய்வது கடினம். மூடர்கூடம் முதலில் வாய்வழியாகவே பேசப்பட்டது பின்பு தான் வசூல்செய்ய ஆரம்பித்தது. ஆக இதையும் நீங்கள் தூற்றினீர்கள் என்றால் எப்படி நல்ல படம் வரும். மூடர்கூடத்தில் வழக்கமான சூத்திரம் இல்லை, காதல் காட்சி இல்லை, பெண்களை கேலி செய்யும் வசனங்கள் இல்லை, தொப்புள்நடனம் இல்லை . Item Song இருக்கிறது. செண்ட்ராயனுக்கு வருகிற முன்கதை Rap, Item Song தான். அந்த கதாபாத்திரத்திற்கு அது தவறில்லை என்று எனக்கு தோன்றவே அதில் நான் வணிகத்தை பார்த்து கொண்டேன்.இதையெல்லாம் செய்யவில்லை என்றால் மூடர்கூடம் படம் வெளியானதே தெரியாமல் போகியிருக்கும். நான் அடுத்த படம் எடுக்க வேண்டும் அல்லவா? அடுத்த படம் இன்னும் நல்ல முயற்சியாய் இருக்க வாய்ப்பிருக்கிறதுஅல்லவா?

உங்களுக்கு வந்த நியாயமான விமர்சனம் என்று எதை நினைக்கிறீர்கள்? இதை திருத்தி கொள்ள வேண்டும் என்று உணர்ந்தது?

விமர்சனங்களில் நியாயம் அநியாயம் என்பது எல்லாம் இல்லை. I really honour critics and criticism but i dont let them enter inside me. எல்லா விமர்சனங்களையும் படிப்பது உண்டு. சிலர் நாய்க்கு முன் கதைஇருப்பதெல்லாம் அயர்ச்சியாய் கதை நகர்த்தலுக்கு இடையூறாய் இருக்கிறது என்றார்கள் , சிலர் அதை அழகு என்றார்கள். அருண் தமிழ் ஸ்டுடியோவிற்கு ஒரு விஷயம் பிடிக்கும் ஒரு விஷயம் பிடிக்காது. இன்னொருவருக்குஅதே விஷயம் ரொம்ப பிடிக்கும். எழுத்தாளர் சு.வெங்கடேசன் கூப்பிட்டு பாராட்டினார். மணிரத்தினம், ஷங்கர், பாலாஜி சக்திவேல் போன்று நான் மதிக்கும் பெரிய இயக்குனர்கள் பலர் கூப்பிட்டு பாரட்டச் செய்தார்கள்.திருத்திக் கொள்வது என்பது என் அனுபவத்தில் இருந்து வரவேண்டியது. அது தான் சரியான திருத்தலாகவும் இருக்க முடியும். நீங்கள் சொல்கின்ற விஷயம் சரி என்று நான் உணர்வதே என் அனுபவத்தில் இருந்துதான். தவறுசெய்வதும், அதிலிருந்து அனுபவம் பெற்று நம்மை திருத்திக்கொள்வதுமான இந்த அனுபவங்களின் தொகுப்பு தான் வாழ்க்கை. கற்றுகொண்டது என்ன என்றால் படத்தில் எந்த ஒரு இடத்திலும் மக்களை அமைதியாய்விடாதே, அப்படி செய்தால் மக்கள் சத்தமிட செய்வார்கள். வேகமாக சென்றுகொண்டிருக்கின்ற கதையில், கதைப்படி அங்கு நவீன் முன்கதை வரவேண்டும். அதுவும் மெதுவான பாடல் பின் ஒலிப்புடன் தான் வரவேண்டும்என்றே நான் வைத்தேன் . அனால் அந்த நேரத்தில் அய்யோ என்று சிலர் சத்தமிடுவது கேட்டது. ஆக எந்த ஒரு இடத்திலும் மக்களை அமைதியாய் விடாமல், நல்ல படம் அதே சமயம் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும்என்று கற்றுக்கொண்டேன் .

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், மூடர்கூடம் மூலம் எதில் திருப்தியடைந்தீர்கள்?

நான் நடிகரே கிடையாது, வேறு வழியில்லாமல் தான் இதில் நடிக்க வேண்டியதாய் போனது. ஏழு படத்திற்கு நடிக்க வாய்ப்பு வந்தும் நான் வேண்டாம் என்று தவிர்த்து இருக்கிறேன். என்னுடைய நடிப்பு திறனை பற்றி நான்அறிவேன். ஆனால் நான் ஒரு நல்ல இயக்குனர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. எனக்கு மூடர் கூடம் படத்தின் மூலம் நல்ல இயக்குனர் என்றும் நல்ல தயாரிப்பாளர் என்றும் உணர்ந்திருக்கிறேன்.
தொடர்ந்துபடங்களை தயாரிக்கவும் முடிவு செய்து உள்ளேன். அடுத்ததாக என் இணை இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளேன். அதை கலைப்படம் என்று சொல்ல முடியாது, சொல்லி படம் வியாபாரம் தடைப்பட்டு போய்விடப்போகிறது. வணிக எல்லைக்கு உட்பட்ட ஒரு நல்ல படமாய் அது இருக்கும்.

நீங்க ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் சிறுப்பான்மையோரின் வலிகளை அடுத்து எடுக்கும் படங்களில் பதிவு செய்யும் எண்ணம் உள்ளதா?

நான் முஸ்லிம் இல்லை. நான் ஒரு பகுத்தறிவாளி. எங்கெல்லாம் ஒரு மனிதன் ஏறி இன்னொரு மனிதனை இறக்கி மிதிக்கிறானோ அது என்னைப் பொறுத்தவரை தவறு. அது ஈழத்தில் தமிழனை சிங்களவன் அடித்தாலும் சரி,நம்மூரில் இஸ்லாமியர்களை இந்து மதத்துக்காரர்கள் அடித்தாலும் சரி, இல்லை ஒரு கீழ் சாதிக்காரனை மேல் சாதிக்காரன் என்று சொல்லிக்கொண்டு அவன் அடித்தாலும் சரி, ஒரு கருப்பனை ஒரு வெள்ளைக்காரன்அடித்தாலும் சரி, அது என் படத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் நான் பதிய வைத்துக்கொண்டு தான் இருப்பேன்.

சுயாதீன திரைப்பட கலைஞர்களை பற்றிய உங்கள் கருத்து?

தயாரிப்பு செலவு வழியாக பார்த்தால் இங்கு நிறைய சுயாதீன திரைப்பட (independent film) இருக்கிறது. சொந்தமாக படம் எடுக்கும் அனைவருமே சுயாதீன கலைஞர்கள் தான். ஆனால் எடுத்துக்கொண்ட கரு சார்ந்து ஆராய்ந்தால்,நாம் எந்த அளவிற்கு சுயாதினமாய் செய்கிறோம் என்பதை சொல்ல முடிவதில்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது மூடர்கூடம், மதுபானக்கடை எல்லாம் சுயாதீன திரைப்படம் தான். நமக்கு பிடித்ததை நாமே செலவு செய்துஎடுக்கிறோம் என்ற அளவிலே நமக்கு தெரிகிறது. அதற்க்கு ஒரு பெயர் இருக்கிறது சுயாதீன திரைப்படம் என்பதெல்லாம் பிறகுதான் தெரிய வந்தது. சுயாதீன திரைப்படம் என்பது இங்கே ஜெயிக்க வேண்டும், அப்போது தான்அது சினிமாவாக இருக்கும். அப்போது தான் இங்கே நல்ல படங்கள்