'வீடு' - பாலு மகேந்திரா 1988

1970-களில் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நல்கையில் வெளிவந்த சில படங்கள் அக்கால பார்வையாளர்களை மூச்சொரிய செய்தன. நட்சத்திர ஆதிக்கத்தில் உருவான படங்களில் இருந்து அவை வேறுபட்டிருந்தன. நாடெங்கிலும் புதிய திரைப்பட இயக்கத்தின் தாக்கம் வெளிப்பட ஆரம்பித்து தேசிய அளவில் ஷியாம் பெனகல், கோவிந்த் நிகலானி, ரித்விக் கதக், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் இந்த புதிய அலையின் முன்னோடிகளாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
சில தமிழ் படைப்பாளிகள் இருபது வருடங்களாக நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட படங்களிலிருந்து மீண்டு, இந்த இயக்கத்தில் வந்து இணைந்தனர். நட்சத்திரங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பாக்ஸ் ஆபிஸ் வருமானங்களும், ரசிகர் மன்றங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட அவர்களின்ஆதிக்கமும், , புது முயற்ச படங்களுக்கு தகுந்த இடத்தை அளிக்கவில்லை. 1970-களில் எம்.ஜி.யார், சிவாஜி என்ற இரு முக்கிய நட்சத்திரங்களின் ஆதிக்கம் மங்கிய பிறகு, பெரிய ஸ்டூடியோக்கள் இழுத்து மூடப்பட்டன. இது இளம் இயக்குனர்ககளின் திரைப்படங்கள் மூலம் தமிழ்சினிமாவில் ஒரு நம்பிக்கையூட்டும் மாற்றத்தை உண்டு பணணியது பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே (1977,) ருத்ரையாவின் அவள் அப்படித்தான் (1978,) மகேந்திரனின் உதிரிப்பூக்கள் (1979) ஜான் ஆபிரகாமின் அஹ்ரகாரத்தில் கழுதை (1979) துரையின் பசி (1978) போன்ற படங்கள் வெளிவந்தன. இந்தப் படைப்பாளிகள் ஸ்டூடியவிற்கு வெளியில், நட்சத்திரங்களைச் சாராமல் படமெடுத்தனர். புகழ்பெற்ற எழுத்தாளர்களை திரைக்கதை எழுத அழைத்து வந்தனர். ருத்ரையா வண்ணநிலவனோடு இணைந்து கொண்டார். ஜான் ஆபிரகாம் கலை விமர்சகர் வெங்கட் சாமிநாதனை திரைக்கதை எழுதக் கோரினார். புதுமைப்பித்தனின் "சிற்றனை" சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு மகேந்திரன் படம் எடுத்தார். இவர்கள் அனைவரிடத்திலும் இருந்த மற்றும் ஒரு ஒற்றுமை இவர்கள் அனைவரும் படமாக்குதலின் அத்தனை கிளைகளையும் ஒரு சீரிய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஜான் ஆபிரஹாம் தனது படத்தில் பாடல்களை முற்றிலும் தவிர்த்தார். மற்றவர்கள் பாடல்களை கதை சொல்லும் உத்தியாகப் பயன்படுத்த முயன்றனர்.

இந்தப் படங்கள் நட்சத்திரங்களை நம்பியிருக்கவில்லை என்றேன். அதுமட்டுமல்ல.இவற்றின் கதைக் களங்கள் சமூகப் பிரச்சனைகளில் கவிந்திருந்தன. ஆனால் புதிய திரைப்பட இயக்கத்தின் மற்ற இந்தியத் திரைப்படங்களில் இருந்த அழகியல் மாற்றம் தமிழ் படங்களில் அவ்வளவாக வெளிப்படவில்லை. இவை பெரும்பாலும் தமிழ்சினிமாவின் பாரம்பரியத்தையே பின்பற்றின. இது போன்ற முயற்சிகள் தமிழ் சினிமாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தான் பாலுமகேந்திரா ஒரு இயக்குனராக "அழியாத கோலங்கள்" படத்தின் மூலம் அறிமுகமானார். புனே திரைப்படக்கல்லூரி மாணவரான அவருக்கு இது இரண்டாவது படம்

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு அவரது "வீடு" (1988) ல் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்றது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இந்தப் படத்தில் நடித்த அர்ச்சனா பெற்றார். 2005 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா கூறினார் " நான் 18 திரைப்படங்கள் இயக்கியுள்ளேன். அதில் இரண்டு மட்டும் எனக்குத் திருப்தி அளித்தன. வீடு , சந்தியாராகம். இந்தப் படங்களில்தான் நான் குறைந்த அளவு தவறுகள் புரிந்துள்ளேன். இவற்றில் எந்த வியாபார நோக்கங்களுமடனும் இவை எடுக்கப்படவில்லை. " இந்தப் படங்களை இயக்கும் போதுதான் அவரது கலை நேர்மையுடன் எந்த சமரசமும் அவர் செய்து கொள்ளவில்லை.

திரைப்பட விமர்சகர் அம்ஷன் குமார் "வீடு" பாலுமகேந்திராவின் உண்மையான படமான இதில் அழகியலும், தொழில் நுட்பமும் நேர்த்தியாக இணைந்துள்ளது என்கிறார். அதனால்தான் இன்றும் அது ஒரு முக்கிய படைப்பாக திகழ்கிறது. புனேவில் உள்ள தேசிய திரைப்பட ஆவண காப்பகத்தில் இப்படத்தின் புத்தம் புதிய பிரிண்ட் ஒன்று பாதுகாக்கப் படுகின்றது. சமூகப் பிரச்சனைகள் குறித்து பேசும் ஒரு படம், தமிழ் சினிமாவில் வணீக ரீதியாகவும் வெற்றியடைய கூடிய சாத்தியத்தின் அறிகுறியாகவே இப்படம் இருந்தது. ஆகிய இத்தனை காரணங்களினால் "வீடு" படம் ஒரு ஆழமான ஆய்வுக்கு தகுதியுடையதாகிறது.

பணி ஓய்வு பெற்ற சங்கீத வாத்தியாரான தன் தாத்தா முருகேசனுடனும், தங்கை இந்துவுடனும், ஒரு சிறிய வீட்டில் வாழும் இளம் பெண் சுதா பற்றிய கதையே "வீடு". சென்னையில் ஒரு வங்கியில் எழ்த்தராக பணியாற்றும் இவளின் குறைந்த சம்பளத்தை வைத்தே அந்தக் குடும்பம் சமாளித்து வருகிறது. வீட்டின் உரிமையாளர் ஒரு மாதத்தில் இவர்களை வெளியேறச் சொல்லி. வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். சுதா வேறு வீடு பார்த்து அலைகிறாள். ஒன்றும் கிடைத்தபாடில்லை. அவளுடன் வேலை பார்ப்பவர்கள் ஒரு வீட்டைக் கட்டி விடுவதே நல்லது என்று அறிவுரை கூறுகிறார்கள். அவள் வீடு கட்டும் வேலையை தொடங்கியதும் பல்வேறு பிரச்சனைகளில் உழல்கிறாள். சென்னை மாநகர மேம்பாட்டு ஆணையம், பதிவாளர் அலுவலகம், வங்கி எனப் பலவற்றை அவள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அரசு அலுவலகர்கள் லஞ்சம் கேட்கிறார்கள், காண்ட்ராக்டர் ஏமாற்றுகிறார், மேலதிகாரி கடன் வாங்கித்தரும் பொருட்டு அவளையே விலையாக பேசுகிறார். அவளின் காதலன் கோபியும், உடன் வேலை பார்ப்பவரும் அவளின் வீடு கட்டும் முயற்சிக்கு துணை நிற்கின்றனர். அவனுடன் இணைந்து ஒவ்வொரு அலுவலமாக சென்று கட்டிடம் கட்டத் தொடங்குவதற்கான அனைத்து வேலைகளையும் முடிக்கிறாள். வீடு கட்டி முடிவடையும் தருவாயில் தாத்தா இறந்து போகிறார். அந்த சோகம் தீர்வதற்குள், மாநகர குடிநீர் ஆணையம் அவளது வீடு ஆணையத்துக்குச் சொந்தமான ஒரு கிணற்றினை ஒட்டிக் கட்டப் பட்டுள்ளதாக மிரட்டுகிறார்கள். கடைசிக் காட்சியில் கோபியும், சுதாவும் ஒரு பஞ்சாயத்து அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள். அக்காட்சி உறைந்து பின்னணியாக ஒலிக்கும் குரல் அவள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாய் சொல்கிறது.
சமூகப் பிரச்சனைகளே இங்கேமுன்னிருத்தி பேசப்படுகின்றன. தொடக்கக் காட்சியிலே " இது சர்வதேச உறைவிட வருடம் " என்று விவரண அட்டை கூறுகின்றது.. அடுத்த அட்டையில் இப் படம் வீடற்றவர்களுக்கு அர்ப்ப்ணிக்கப் படுகின்றது. இக்கதையில் மூன்று முக்கிய பிரச்சனைகள் சொல்லப்படுகின்றன. உறைவிடம் என்ற அடிப்படைத் தேவை, அதிகாரத்தின் அடக்குமுறை, முதுமையின் பிரச்சனைகள். இவை அத்தனையும் ஒரு நகர்ப்புற, கீழ்-மத்தியதரக் குடும்பத்தின் வழியே சொல்லப்படுகின்றது. இப்படத்தின் சாரம், ஆர்தர் எல்டன் , எட்கர் ஆன்ஸ்டே இயக்கிய "வீட்டுப வசதி பிரச்னைகள் (1935)" என்னும் பிரிட்டைனின் சேரி வாழ்க்கை நிலையை எடுத்துக்கூறும் ஆவணப்படத்தை நினைவூட்டுகின்றது. தமிழ் படைப்பாளிகளும் இது போன்ற குடியிருக்குமிடம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து நேரடியாக இல்லாவிடினும் சற்று மறைமுகமாக படமாக்கியுள்ளனர். "மிஸ்ஸியம்மா"வில் (எல்.வி.பிரசாத் 1955) திருமணமாக ஒருவ்ருக்கு வாடகைக்கு வீட்டையாரும் கொடுக்காத சூழலில் அதன் பொருட்டு இரண்டு இளம் ஆசிரியர்கள் கணவன் மனைவியராக நடிப்பர். கே.பாலச்சந்தரின் "எதிர் நீச்சல்" (1968) படத்தில், கீழ்-மத்தியதர குடும்பங்கள், ஒரு வீட்டின் சிறு சிறு பகுதிகளில் வசிப்பார்கள். . ஆனால் , இந்த பிரச்சனையை ஆழமாக பார்த்திஅ முதல் தமிழ்ப்படம் "வீடு" ஆகும்.

வசிப்பிடம் குறித்தான பிரச்சனைகளின் ஊடே, இப்படம், இதுவரையில் எந்த ஒரு தமிழ்ப்படமும் காட்டியிராத வகையில், ஒரு மாநகரத்தில் மாதசம்பளமத்தில் வாழ்வு நடத்தும், ஏழைக் குடும்பத்தின் பல்வேறு இன்னல்களை நம் கண் முன் நிறுத்துகின்றது. இதற்கு முன்பு, ஒரு வங்கி எழுத்தரின் பணப் பிரசனைகள் குறித்துப் பேசிய "முதல் தேதி" படம் 1955-ல் வெளிவந்தது. சர்ரியலிச காட்சிகள் நிறைந்த கிரிஷ் காசரவல்லியின் "மனே"- ( கன்னடம்1990), படமும் குடியிருப்பு பற்றிய பிரச்சனைகளையேப் பேசுகின்றது. ஆனால் அது பின்னர் வந்த வீடு படத்தில், கதைக்கு சம்பந்தமில்லா த பொழுதுபோக்கு அம்சங்களான நகைச்சுவைக் காட்சிகளையும், ஆடல் பாடல்களையும் ஒதுக்கி விட்டு , கதை சொல்லில் மட்டுமே கவனம் செலுத்தி, பாலு மகேந்திரா இப்பட த்தின் தாக்கத்தை கூட்டுகிறார். ஒரு படம்.

வீடு குறித்த பிரச்னைகளே கதையின் முக்கிய அம்சமாக இருந்த போதிலும், ஒரு நகரத்தில் வாழ்பவரின் மற்ற அல்ல்களைப்ப் பற்றியும் படம் பேசுகின்றது. குடிநீர்ப் தட்டுப்பாடு,தண்ணீரை தனியார்மயப்படுத்தும் பிரச்சனை - போன்றவை, பல வருடங்களாக சென்னையில் ஊடகங்களிலும், சட்ட மன்றங்களிலும் விவாதிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. படத்தில் ஒரு காட்சியில் தாத்தா, சுதாவிடம் "பொன்னும் "மண்ணும் தான் விலைமதிப்பு மிக்கவை” என்று கூறும் போது, "தண்ணியும்"தான் என்று சொல்கிறாள். தாத்தாவின் நிலத்தின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கும் வியாபாரி ஒருவன், தான் அந்த நிலத்தில் ஒரு கிணறு தோண்டி, அதில் வரும் நீரை அருகே உள்ள வீடுகளுக்கு விற்பனை செய்யப் போவதாய் கூறுகின்றான். அவன் அந்த சிறுபகுதியை முருகேசனிடமிருந்து விலைக்கு வாங்க வரும் தருணத்தில், ஒரு கிளாஸ் நீரை வாங்கிப் பருகி சோதனையிடுவான். தண்ணீர் பற்றாக்குறை இக்கதையில் ஒரு முக்கிய பங்காற்றுகின்றது. அதில் சுதா சிக்கிக்கொள்வது. படத்தின் இறுதியில்தான் அவளுக்கே தெரிய வருகின்றது.

இப்படம் நகர வாழ்வின் இயல்பைகாட்சிகளாலும், இசையாலும் அழுத்தமாக பிரதிபலிக்கின்றது. காய்கறிகடை, அந்தப் பழைய வீடு, கட்டுமானங்களால் மூச்சு முட்டும் புறநகர் பகுதி, பேருந்துகள், கடற்கரை, அண்ணாசாலை காட்சிகள், கட்டிடத் தொழிலாளர்கள் பேசும் சென்னைத்தமிழ் இவையத்தனையும் படத்தின் நம்பகத்தன்மையை கூட்டுகின்றது. மகேந்திரா படத்திற்கு பின்னணி இசைக்குப் பதிலாக ரயில் ஒடும் ஒலி போன்ற சுற்றுப்புற ஒலிகள் மூலமே, பட த்தின் முக்கிய காட்சிகளை கோடிட்டு காண்பிக்கின்றார். .

ஒரு புத்தகத்தின் முக்கியமான வரிகளை அடிக்கோடு இடுவதைப் போல படத்தில் சுற்றுப்புற ஒலிகளையும் இசையும் தேவைப்படும் இடத்தில் மட்டும் ஆங்காங்கே பயன்படுத்தியுள்ளார் பாலுமகேந்திரா. ஒரு நேர்காணலில் சினிமாவில் இசையின் பங்கை அவர் விளக்கும் போது ஒரு ஆற்றின் போக்கை உவமையாக எடுத்துக் கொள்கிறார். நதியின் ஒட்த்தை அது பாய்ம் நிலவாகுதான் தீர்மானிக்கின்றது. சமவெளியில் மெதுவாகவும், கீழ் நோக்கிப் பாயும் பொழுது வேகமாகவும், பாறைகளில் மோதும் பொழுது நுரை ததும்பியும் ஓடுகின்றது. இது போலவே ஒரு படத்தின் திரைக்கத இசையின் தன்மையை தீர்மானிக்கின்றது. வெறும் கோடுகளை ஒலியாக்காமல் தேவையான இடத்தில் அழகாக இசையாக்கி பயன்படுத்தியிருப்பார் வீடு படத்தில் பெரும்பாலான இடங்களில் பின்னணி இசையே இல்லை. சுற்றுப்புற ஒலி மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கும்., ஸ்டுடியோவில் உள்ள செட்டில் இல்லாமல் நிஜமான இடங்களில் படம் எடுக்கப்பட்டிருகப்பது படத்தின் நம்பகத்தன்மையை கூட்டுகின்றது.
இளையராஜாவின் ஆல்பம் " " How to Name it - லிருந்து சில பகுதிகளை எடுத்து இப்படத்தில் தேவையான இடத்திற்கு பின்னணி இசையாக பயன்படுத்தியிருக்கின்றார் பாலுமகேந்திரா இவர், இளையராஜாவுடன் மூடுபனியில்(1982) தொடங்கி பத்து படங்களுக்கும் மேலாக, கிட்டத்தட்ட 25 வருடங்களாக பணியாற்றியுள்ளார். 1981 ஆம் ஆண்டு, இளையராஜாவுடனான ஒரு கலந்துரையாடலின் போதுதான் படத்தின் இசைக்கு ஆறு பற்றிய உவமையைப் பயன்படுத்தி விளக்கியதாக நினைவு கூறுகின்றார.. இசையின் எந்தப் பகுதி படத்தின் எந்த இடத்தில் பயன்படுத்தப் பட வேண்டும் என்பதை ஒரு இயக்குனராக பாலுமகேந்திராவே தேர்ந்தெடுக்கிறார். இருந்த போதிலும், இங்கு எப்போதும் காட்சிகளின் மீது இசை ஆதிக்கம் செய்யாமல், மாறாக அவற்றின் தாக்கத்தை அதிகரிக்கவேபயன்படுத்தப் பட்டுள்ளது.

பாரம்பரிய சினிமாவின் நடிகர்களிலிருந்து விலகி பின்னணிப் பாடகர்களோ, நடனங்களோ இன்றியே படம் உருவாக்கப்பட்டிருகின்றது. குறிப்பாக முருகேசன் தாத்தா பாத்திரத்திற்கு சொக்கலிங்க பாகவதரை நடிக்க வைத்ததைசுட்டிக்காட்டலாம்.. தலைப்பு போடும் போது கூட சொக்கலிங்க பாகவதரின் நடுங்கும் குரலைக் கேட்கலாம். மேலும் மூன்று இடங்களில் கொஞ்ச நேரம் மட்டும் கம்பெனி நாடக இசையைக் கேட்கலாம். திருஞானசம்பந்தரின் கோளாறு பதிகத்தில் வரும் "வெயுறு தொலி பங்கன் விடமுண்ட கண்டன்", மாயுர வேத நாயகம் பிள்ளையின் " நிர்மல சித்ததைத் தேடு" ஆகிய புகழ் பெற்ற பாடல்களின் சில முக்கியமான வரிகளையும் பாகவதரே பாடுகின்றார்.. இந்தப் படத்தில்தான் முதன் முதலாக பாலுமகேந்திரா, திரைக்கதைக்கு இடைஞ்சலாகக் கருதிய பாடல் காட்சிகளை முற்றிலுமாய் தவிர்த்துவிட்டார். தனக்கு பிடித்த படமாக இவர் கூறும் "சந்தியாராகத்திலும்" இப்படியான தவிர்த்தலைக் காணலாம்.

எடுத்துக் கொண்ட சமூக தெளிவின் அடிப்படைக்கு ஏற்றவாறு, பாதி கட்டிய நிலையில் இருக்கும் அந்த வீடு, அக்குடும்பத்தின் நிறைவேறாத கனவை பிரதிபலிப்பதாகவே இருக்கும். பூமி பூஜைப் போடப்பட்டதிலிருந்து, அவ்வப்போது கட்டிடம் கட்டப்படும் காட்சிகள் காட்டப்படும். அந்த வீட்டிற்கு அருகிலேயே உள்ள இடத்தில் இருக்கும் சிறு குடிசையில் வசிக்கும் கட்டிடத் தொழிலாளி மங்காத்தாவே அங்கிருந்தபடி கட்டிடப் பணிகளையும் மேற்பார்வை இடுகின்றாள் மாடி கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அவ்வேளையில் தான் முருகேசன் கட்டிடத்தைப் பார்வையிட வருகின்றார். வீட்டிற்குள் அலைந்தபடி, படிகளில் ஏறி, பூசப்படாத சுவரில் அன்பொழுக கைகளால் தடவியபடி இருப்பார். இப்படத்தில் முழுமையடைந்த வீடு காட்டப்படுவதேயில்லை. அங்கு வரும் நீல நிற தண்ணீர்த் தொட்டி லாரி, சுதாவின் வீடு மாநகர தண்ணீர் ஆணையத்தினால் கைப்பற்றப்பட்டு விடும் என்பதை பார்வையாளனுக்கு உணர்த்து கின்றது.

இன்னொரு நேர்காணலில் பாலுமகேந்திரா கூறினார் : " பெண்கள் என் வாழ்வில் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் முக்கியப் பங்காற்றியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். ". அவருடைய படங்களிலும் பெண் கதாபாத்திரங்கள் அழுத்தமாகப் படைக்கப் பட்டிருப்பர் : மறுபடியும் (1993) பட நாயகி, சதிலீலாவதியில் (1995) வரும் டாக்டரின் மனைவி போன்ற பாத்திரங்களை எடுத்துக்காட்டாக காட்டலாம் வீடு படத்திலும் சுதாவிற்காக காண்ட்ராக்டரிடத்தில் சண்டையிடும் கட்டிடத் தொழிலாளி மங்காத்தா வலுவான கதாப்பாத்திரமாக அதிகாரம், ஊழல், ஏமாற்றம் இவற்றிற்கிடையே அவள் ஒருத்தி மட்டும்படத்தின் ஒரே நம்பிக்கையாக மிளிர்வாள்.

இந்தப் படத்தின் தன்மையும், எடுத்துக் கொண்ட பல்வேறு விஷயங்களும் நல்ல சினிமாவை நோக்கிய தமிழ் சினிமாவின் ஏறுமுகத்தை உணர்த்துகின்றன. மற்ற இயக்குனர்களைப் போலவே, மகேந்திராவும் இளம் வயதிலேயே சினிமாவின் மீது ஈர்க்கப்பட்டவர். அதே நேரத்தில், மக்களால் எதிர்கொள்ளப் படுகின்ற சமூக பொருளாதார சிக்கல்களில் அவரின் அக்கறை சார்ந்திருந்தது.

பாலு மகேந்திரா 1946-ல் ஸ்ரீலங்காவின் மட்டக்களப்பில் உள்ள அமிர்தகலியில் பிறந்தார். அவரின் பெயரின் முன்பகுதியான "பாலு", கல்லூரி பெளதிக பேராசிரியராகப் பணியாற்றிய அவரின் தந்தை பெயரான பாலநாதனிலிருந்து வந்தது. தனது 13 ஆம் வயதில் அவரின் தந்தை ரூ 14 மதிப்புள்ள ஒரு கோடாக் காமிராவை பரிசாகத் தந்தார். அதுதான் அவரின் கற்பனை உலகில் விழுந்த முதல் வித்து. விரைவில் ரூ 500 க்கு ஒரு காமிராவை வாங்கி புகைப்படப் போட்டியில் பங்கேற்று பரிசும் பெற்றார்.

அவர் கத்தோலிக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது அங்கிருந்த பாதிரியார் ஒருவர் திரைப்படங்களின் மீது பற்றுமிக்கவராக இருந்தார். வகுப்பு நேரங்களுக்குப் பிறகு மாணவர்களுக்கு 16மிமி திரையில் படங்களிட்டுக் காட்டுவார். இங்குதான் பாலு மகேந்திரா "பைசைக்கிள் தீவ்ஸ்(1948)" படத்தைப் பார்த்து சினிமாவின் மீது பித்து கொண்டார். அவரின் 15 ஆவது வயதில் கண்டி அருகே டேவிட் லீன் "தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் கிவாய்(1957)"- படமெடுப்பதை காணும் வாய்ப்பைப் பெற்றார். அதுதான் படமியக்கும் ஆர்வத்தை அவருள் விதைத்தது. ( பல வருடங்களுக்குப் பிறகு புனே திரைப்படக் கல்லூரியில் டேவிட் லீனை சந்தித்தார் ). யாழ்ப்பாணம் கல்லூரியில், பெளதிகத்தில் பட்டம் பெற்று ஸ்ரீலங்கா அரசின் சர்வேத் துறையில் புகைப்படக்காரராகப் பணியாற்றினார். வானத்தில் பறந்து, பல்வேறு நிலத்தின் தன்மைகளை பகுப்பு வரைபடத்தில் இடம்பெறச் செய்யும் பொருட்டு புகைப்படம் எடுப்பதே இவரின் வேலை. ஆனால் அவரின் எண்ணமெல்லாம் திரைபடத்தின் மீது குவிந்திருந்தது. அவரின் தந்தையளித்த ஊக்கத்தின் பயனாய் புனே திரைப்படக்கல்லூரியில் இயக்குனர் பயிற்சிக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு ஒளிபதிவு பயிற்சியிலேயே இடம் கிடைத்தது அங்கு. 1969 ஆம் ஆண்டு தங்க பதக்கத்துடன் பட்டம் பெற்றார்.

1960 களிலும், 1970 களிலும் ஐரோப்பாவின் சினிமா மேதைகளிண் தாக்கம் அந்தக்கல்லூரியில் அதிகமிருந்தது. அவ்வகையில் மகேந்திரா, விட்டோரியா டி சிகாவினால் ஈர்க்கப்பட்டார். வங்கத்தில் சத்யஜித்ரே அறிமுகப்படுத்திய இத்தாலிய நியோரியலிசம் நிரந்தரமான பாதிப்பை மகேந்திராவிடம் ஏற்படுத்தியது. பகதூர் மகேந்திரா தன் திரைப்பட நுண்ணறிவை பட்டை தீட்டிக் கொள்ள திரைப்படக் பேராசிரியர் சதிஷ் உதவினார். பாலுவுடன் படித்த ஏ.கே.பிர் - பிற்காலத்திய ஓரிய சினிமாவின் முக்கிய இயக்குனர்- போன்றவர்களும் மகேந்திராவிடம் தாக்கத்தை ஏற்படுத்தினர். பிற்காலத்தில் மகேந்திரா அமெரிக்க சினிமாவின் தாக்கத்தினால் மூடுபனி, (சைக்கோ படத்தின் பாதிப்பு) பிளேக் எட்வர்சின் மிக்கி +மாட் படத்தை தழுவி ரெட்டைவால் குருவி போன்ற படங்கள் எடுத்தார். அதே நேரத்தில் இந்தியாவின் இளம் படைப்பாளிகளிடத்தே மகேந்திராவின் தாக்கம் அதிகம் இருந்ததும் குறிப்பிடத தக்கது. வீடு படத்தில் தபால்காராக வரும் இயக்குனர் பாலா, மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியவரே. அவரே பிற்காலத்தில் நந்தா (2001), பிதாமகன் (2003) போன்ற நினைவில் நிற்கும் படங்களை எடுத்து தென்னிந்தியாவின் முக்கிய இயக்குனர்களுள் ஒருவராக உருவெடுத்தவர்.
மகேந்திரா ஒளிபதிவாளராக பணியாற்றிய அக்காலத்தில் ஒளிபதிவை முறையாகக் கற்றுத்தேறி வந்த ஒரு சிலரில் அவரும் ஒருவராக இருந்தார். மலையாளத்தில் ராமு காரியத் எடுத்த நெல்லு- திரைப்படமே மகேந்திரா ஒளிபதிவாளராக அறிமுகமாகிய முதல் திரைப்படம். அப்படத்திற்காக சிறந்த ஒளிபதிவாளருக்கான தேசிய விருது பெற்றார். அதுவே அவர் பெற்ற பத்து விருதுகளில் முதன்மையானது. (சிறந்த ஒளிபதிவாளராக அவரது திறமை மூன்று முறை அங்கீகரிக்கப் பட்டுள்ளது. விருதுகளை அடிக்கடி பெற்றவர்களே பொதுவாக தேர்வுக்குழுவில் இடம் பெறுவர். அவ்வகையில் மகேந்திரா, 1992 ஆம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.) பின்பு, அவரே ஒளிபதிவாளராகவும் இயக்குனராகவும்: கன்னடா (கோகிலா 1977), தமிழ் (முள்ளும் மலரும், 1978), மலையாளம் (யாத்ரா, 1985) தெலுங்கு (நிரீக்ஷ்னா, 1992). போன்ற பல தென்னிந்தியப் படங்களில் பணியாற்றினார். இவர் 1983-ல் வெளியான "சத்மா(1982)" வின் மூலம் இந்தி சினிமாவிலும் கால் பதித்தார்.

இவருடன் படித்த ஏ.கே.பிர், ஷாஜி கருண் ,கோவிந்த் நிகலனி போன்ற ஒளிபதிவாளர்கள் போலவே இவரும் படம் இயக்குவதில் ஈடுபடலானார். ஒரு திரைப்படம் செய்வதின் ஆணிவேர் இயக்குனரே என்பதையறிந்து அவ்வழி சென்றார். இயக்குனராக இவரது பயணம் கன்னடாவின் "கோகிலா" படத்தில் ஆரம்பித்தது. அப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றார்.

மகேந்திரா ஒரு பேட்டியில் அவரது படங்கள் அவரது சொந்த அனுபவங்களையே பிரதிபலிக்கின்றன என்றார். "வீடு" படம் கூட, பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய தனது தாயாரின் தாக்கத்திலேயே உருவானது என்கிறார். இவருக்கு சிறு வயதாக இருக்கும் போது இவரது தாயார் வீடு ஒன்றை கட்டத் தொடங்கினார். அதன் பொருட்டு எழுந்த மன அழுத்தம் காரணமாக அவரின் இயல்பே மாறிவிட்து. புன்னகைக்க கூட மறந்துவிட்டு, எப்போதும் சிடுசிடுப்பாகவே இருந்திருக்கிறார். இது பாலுவிடம் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதுவே பிற்காலத்தில் இப்படத்திற்கான கதையாக உரு கொண்டிருக்கின்றது. " இவையெல்லாம் உங்களிடமிருந்தும், மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து எடுத்துக் கொண்டதுதான். எனக்கு ஏழு வயதாக இருக்கும் பொழுது எனது அம்மா ஒரு வீடு கட்டத் தொடங்கினார். அப்போது வீட்டில் சண்டைகள் அதிகமாயின.. அவள் தனியாக அழத் தொடங்கியிருந்தாள். அவைதான் என் அம்மாவைப் பற்றிய எனது முதல் ஞாபகங்கள். அவைதான் பிற்காலத்தில் வீடு கட்டுவதன் பொருட்டு எழும் பிரச்சினைகள் முன் வைத்து "வீடு" என்ற படமாக உருவெடுத்தது.”

லண்டனில் வாழ்ந்த ஸ்ரீலங்கரான கலா தாஸின் தயாரிப்பில் ரூ112,000 -ல் மகேந்திரா இத்திரைப்பத்தை எடுத்தார். செட்டுகள் போட்டு பணம் செலவளிப்பதைத் தவிர்க்க, அந்தந்த இடங்களுக்குச் சென்றே படம் பிடித்தார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழக்கிலிருந்த கற்கள் பதித்த வீடும், புற நகர்ப்பகுதியான வளசரவாக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீடும் இதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டன. இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் இயல்பான வெளிச்சத்தில் எடுக்கப்பட்டன. அதுவே படத்தின் நம்பகத்தன்மைக்கும் உதவியது. வீட்டிற்குள்ளும், அலுவலகத்திற்குள்ளும் எடுக்கப்பட்ட காட்சிகளில் மட்டுமே லைட்கள் பயன்படுத்தப்பட்டன.

மகேந்திராவே இயக்குனராகவும், ஒளிபதிவாளராகவும் இருந்ததால், கதை சொல்லும் உத்தி ,இயக்கத்தை விட ஒளிபதிவிற்காகவே அவர் அதிகமாய் விமர்சிக்கப்பட்டார். "டீப் போகஸ்" இதழின் பாலு சுப்ரமணியன் மட்டுமே அவரிடமிருந்த இயக்குனரை சுட்டிக்காட்டினார். முருகேசன் தாத்தாவும், அவரது நண்பர் அந்தோணி சாமியும் நடந்து செல்லும் காட்சிகளைப் பற்றிகூறினார். அந்தக் காட்சிகளின் அழகியலை விளக்கியிருந்தார். இது போன்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்லுமிடத்தில் மகேந்திரா " நான் படம் எடுக்கும் பொழுது, ஒரு இயக்குனராக சிந்தித்து, ஒரு ஒளிபதிவாளராக செயல்படுவேன் " என்று கூறுகின்றார்.

வீடு படத்திற்குப் பிறகு சதிலீலாவதி (1995) ஜூலி கணபதி (2003) ஆகிய படங்களை இயக்கினார்,. எனினும் முதுமைபற்றிப் பேசும் சந்தியாராகம் (1989) படத்தை மட்டுமே "வீடு" படத்தின் வரிசையில் சேர்த்துக் கொள்கிறார். இதைப்பற்றிக் கூறும் பொழுது தன்னைச் சூழப் போகும் முதுமை குறித்த முன்னெடுத்தல் என்கிறார். அவர் 52 குறும்படங்களை இயக்கியுள்ளார். இவையத்தனையும் டி.வி-யில் தொடராக வந்தன. இவை, அதிகார த்திமிர், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல்வேறு கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதிகாரத்தை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் கையாலாகாத தன்மை இவருக்குப் பிடித்தமான கருக்களுள் ஒன்று.

1970-களில் புதிய திரைப்படங்களுக்கான வாய்ப்புகள் இருந்த போதும், குறுகிய கால அம்முயற்சிகள் எல்லாம் ரஜினிகாந்த, கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற நட்சத்திரங்களாலும், பெரிய பட்ஜெட் படங்களாலும் மூடி மறைக்கப்பட்டு விட்டன. மற்றவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டாலும், பாலு மகேந்திரா பல இளம் படைப்பாளிக்களுக்கான பாதையை முன்னெடுத்துச் சென்றார்.
* * *