பொண்டாட்டி பரிதாபங்கள்- Are We Glorifying Domestic Violence? 

- திலகவதி, வழக்கறிஞர்.

சமீபத்தில் வெளியான ’சார்பட்டா பரம்பரை’ படம் மக்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக மாறியுள்ளது. அதில் ஒரு பகுதியாக படத்தில் வரும் கபிலனின் மனைவியாக உள்ள ’மாரியம்மா’ என்கிற கதாபாத்திரம் அதிகமாக தற்போது சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. அதற்கு முக்கியமான காரணம், கபிலனின் வெற்றிக்கு ஒரு மனைவியாக அவரின் பங்களிப்பு அனைவரையும் ஈர்த்துள்ளது. ஆனால், அதை ஒரு படமாக கடந்து போகாமல், "மாரியம்மா மாதிரி மனைவி வேண்டும்" என்று சமூக வலைதளங்களில் பலரும் பகிரும் விபரீதத்தில் இருந்து, இதை நாம் திரைக்கதை பாத்திரமாக மட்டுமே கடந்து விடாமல், மாரியம்மாவை நிகழ்கால வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

பொதுவாக, இயக்குநர் ரஞ்சித் படங்களில் "பெண் கதாபாத்திரங்கள்" பல கற்பிதங்களை இறங்கி உடைக்கும்படியாகத் தான் இருக்கும். தமிழ் சினிமாவின் "நாயகிகளுக்கான" பல பிற்போக்கான வரைமுறைகளை அவர் உடைத்திருக்கிறார். இது சமூகத்தில் பெண்கள் மீதான பல நேர்மறை பதிவுகளை உருவாக்கியுள்ளது. அதே போன்று மாரியம்மாவும் ஒரு அழுத்தமான கதாபாத்திரமாக வடிவமைக்க முற்படும்போது, அது சரியான ரீதியில் சென்றடைந்திருக்கிறதா? சமூகத்தில் எவ்விதமான விளைவை ஏற்படுத்துகிறது? என்ற கோணத்தில் பார்ப்பதும் முக்கியம்.


இன்று மாரியம்மா போன்ற மனைவி வேண்டும் என்று கேட்போரின் மனதில் மாரியம்மா என்னவாக பதிந்திருக்கிறாள் என்ற கேள்வி அவசியமானது. மாரியம்மா மட்டுமல்ல, பல பிரபலமான பெண் கதாபாத்திரங்கள் "பொண்டாட்டி மெட்டீரியலாக(Material) " பார்க்கப்படுகிறார்கள். அதில் குறிப்பாக "சூரரைப்போற்று பொம்மி, மயக்கம் என்ன யாமினி" போன்றோர் அடக்கம். 

நம் சமூகத்தில் பொதுவாக பொறுப்பில்லாமல் சுற்றும் ஆண்களைப் பார்த்தால் "ஒரு கால் கட்டு போட்டா சரியாய்டுவான். வர்றவ பாத்துப்பா" போன்ற சொல்லாடல்கள், தடம் மாறித் திரியும் ஆண்களைத் திருத்துவதற்காகவே பெண்கள் பிறந்துள்ளதாகக் காட்டுகின்றன. மேற்சொன்ன படங்களின் பாத்திரங்களும் அப்படித்தான். தனது கணவன்களை, அவன் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு, திருத்தி, உத்வேகப்படுத்தி, அவனை வெற்றியடையப் பாடுபடுவார்கள். இது கதைக்கு வேண்டுமானால் ரசிக்கும்படியாக இருக்கலாம். ஆனால் நிஜவாழ்வில்????

இணையர்கள் ஒருவருக்கொருவர் தங்களை உத்வேகப் படுத்திக்கொண்டு உறுதுணையாக இருப்பதில் தவறில்லை. ஆனால்
ஆணைப்போல் அத்தனை உணர்வுகளும், கனவுகளும், ஆசைகளும் உள்ள பெண்கள் முழுநேரமும் அவனையும் அவன் லட்சியத்தை அவன் நிறைவேற்றவும் தன் மொத்த உழைப்பையும் நேரத்தையும் செலவழிக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?? என்ன காதல் இருக்கிறது?? மாறாக, பாலின ஒடுக்குமுறையும், உழைப்பு சுரண்டலுமே இருக்கிறது.

இந்தப் படத்திலும் ’மாரியம்மா’ இப்படியான உழைப்பு சுரண்டல்தான் செய்யப்படுகிறாள். அவளின் பாத்திர படைப்பு ஒரு தைரியமான, துடுக்கான, மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசும் பெண்ணாகத்தான் அற்புதமாக வடிவமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த முதலிரவு காட்சி, பொதுவாக தமிழ் சினிமாவில், முதல் இரவு காட்சிகளில் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புனு தான் காட்டுவாங்க... முகத்தில் வெட்கத்தோடு பால்சொம்பை தூக்கிக்கொண்டு நிலம் நோக்கி வருபவர்களே "நல்ல பெண்கள்" என்கிற பிம்பம் உள்ளது. "பாலக்காட்டு பக்கத்துல ஒரு அப்பாவி ராஜா" பாடல் முதல் " நான் ஆளான தாமர," போன்ற பல பாடல்களில் முதலிரவு காட்சிகளில் பெண்களை ஆடவிட்டிருப்பார்கள். ஆனால் அவை அனைத்துமே அந்த பெண்ணுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக இல்லாமல், மேலும் அவளை ஒரு "போகப் பொருளாக" காண்பிப்பதாக இருக்கும். அவர்களுக்கான உடையிலிருந்து, உடலை மழையில் நனையவிட்டு ஆடவைப்பதிலிருந்து அனைத்துமே பெண்ணை காட்சிப்பொருளாக காட்டவே வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் முதன் முறையாக ஒரு பெண்ணை தன்னுடைய மகிழ்ச்சியை, ஒரு குத்து டான்ஸ் ஆடி வெளிப்படுத்த வைப்பது, அதிலும் பட்டு சேலையில் ஆட வைத்திருப்பது, பெண்ணை ஆடக்கூடாது என அடக்கி வைத்திருக்கும் சமூக எல்லைகளை உடைத்துவிட்டு, ஆதிகால தாய்வழி சமூக பெண் எவ்வித கட்டுப்பாடுகளுமற்று ஆடிக் களித்த காட்சியை இயல்பாய் கண் முன் நிறுத்துகிறது.

 ஆனால், இவ்வளவு தைரியமான, சுயத்தை நேசிக்கக் கூடிய மாரியம்மா, இந்தப் படத்தில் ஒரு "குடும்ப வன்முறைக்குள்ளான விக்டிம் (Victm)" ஆகத் தான் எஞ்சி நிற்கிறார். ஆசை கனவு லட்சியம்னு பெருசா எதுவுமே இல்லாமல், காதல் மட்டும் போதும் , என்று வந்த பெண்ணுக்கு அது கூட முழுமையாக கிடைக்கவில்லை. ஒரு நல்ல, ஆரோக்கியமான காதல் உறவில் "பகிர்தல்" இருக்க வேண்டும். தான் செய்யப் போவதை, தன் திட்டங்களை, தன் இணையரிடமும் பகிர்ந்து அவரின் கருத்தைக் கேட்க வேண்டும். இவரின் முடிவுகளால் இணையருக்கு என்ன விளைவுகள் வரும் என்பதை கலந்தாலோசிக்க வேண்டும். அதுதான் காதல்!!! அதுதான் அறமும் கூட..


ஆனால் இங்கு, கபிலன் திருமணம் செய்து அழைத்து வந்த பிறகு, தன்னுடைய லட்சியத்தை நோக்கி ஓட ஆரம்பிக்கிறான். அவனுடைய இணையின் எந்தவித உணர்வையும் மதிக்கவில்லை, குறிப்பாக அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் தன் கோபத்தை வெளிப்படுத்தும், தன் தேவையை உரக்கக் கேட்கும் தைரியம் அங்கே மிளிர்கிறது. ஆனால் இந்த பண்பு படத்தின் போக்கில் நீர்த்துப் போகிறது.

குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கிறாள் மாரியம்மா. குடிகார கணவனிடம் அடி வாங்குகிறாள் (Physical Violence), இது மோசமான குடும்ப வன்முறை. ஆனால் இது வன்முறையாகவே காண்பிக்கப்படாமல், புருஷன் பொண்ணாட்டினா இதெல்லாம் சகஜம் என்கிற மனநிலையையே சமூகத்தில் பல காலமாக, தமிழ் சினிமாவில் நிறுவப்படுகிறது. அடுத்து, வார்த்தை வன்முறை (Verbal Violence), தன் மோசமான சொற்களால் மனைவியை வன்முறைக்கு உள்ளாக்குவது. ஆபாசமான பேச்சுகளும் இதில் அடக்கம். கையில் குழந்தையுடன் அத்தனை பிரச்சனைகளைடனும் தனியாக போராடும், தன் கணவனை யார் எப்போது கொல்வார்களோ, தன் குழந்தையின் நிலை என்ன? தன் நிலை என்ன? என்று உளவியல் ரீதியான அழுத்தத்தோடு இருக்கும் வன்முறை (Mental Violence), அன்பு, காதல் என எதையும் கொடுக்காமல் ஒரு பெண்ணை, அவள் இருப்பை புறக்கணிக்கும் (Ignorance) உணர்வுரீதியான வன்முறை (Emotional Violence), தன்னை நம்பி மணமுடித்து வந்த பெண்ணிற்கு, அவனின் குழந்தைக்கு தேவையான பொருளாதாரத்தை கொடுக்காமல் மறுக்கும் வன்முறை (Financial Violence) போன்று பல குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் ஒரு சராசரி பெண்தான் மாரியம்மா. அவன் கண்டது எல்லாமே, அழுகை, கோவம், பயம், புறக்கணிப்பு, வன்முறை மட்டுமே... இத்தனை நடந்த பின்பும், "நானும் உன்ன விட்டு போனா உனக்கு யாரு இருக்கானு" அத்தனையும் சகிச்சிட்டு போற ஒரு அடிப்படை சுயமரியாதையே இல்லாத கேரக்டர் ஆகத்தான் ’மாரியம்மா’ இங்கே தெரிகிறார்.


 ஆ
க, மாரியம்மா மாதிரி பொண்டாட்டி வேணும்னு கேட்கிறவர்களின் உளவியல் இப்படியாக, எவ்வளவு அடிச்சாலும் தாங்கிட்டு, தன் கணவனை எப்பவும் விட்டு போகாமல் கடைசி வரை அவன் வெற்றிக்காக உழைக்கும் மாரியம்மாக்களை விரும்புபவர்களாக இருக்கிறார்கள். எனில், அவர்கள் மனதில் எவ்வளவு ஆழமாக ஆணாதிக்கம் ஊறிப்போயுள்ளது என்பதைக் காண முடிகிறது. ாரியம்மா, பாத்திரம் குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது, ஆரம்பத்தில் தைரியமான, துடுக்கான பெண்ணாக இருக்கிறாள். பிறகு, எல்லா விதமான குடும்ப வன்முறையிலும் சிக்கித் தவிக்கிறாள். அதிலிருந்து விடுபட எவ்வித முயற்சியும் அவள் எடுக்கவில்லை. அந்த வன்முறை சூழலிலேயே " கல்லானாலும் கணவன்" என்றே வாழ்கிறாள். மீண்டும் தன் கணவன் உயிருக்கு ஆபத்து வரும் இடத்தில் சராசரி பெண்ணாக, பயந்து ஓடாமல், கணவனின் உயிரைக் காக்கும் மனைவியாக, சண்டையிட்டு தன்னால் முடிந்த வரை போராடுகிறாள். இதுவும் மிக முக்கியமான நேர்மறை பதிவு. ஏனென்றால் காலம் காலமாக பெண்ணிற்கு ஆபத்து வந்தால் ஆண்தான் எங்கிருந்தாலும் ஓடி வந்து பெண்ணைக் காப்பான். ஆனால் இங்கே, ஆணைக் காப்பாற்றும் பெண்ணாகவே துணிந்து நிற்கிறார் மாரியம்மா. இத்தனை துணிச்சல் மிக்கவர், தன் மீது நடக்கும் குடும்ப வன்முறையை மட்டும் ஏன் சகித்துக் கொள்கிறார்?

உண்மையில், உழைக்கும் வர்க்க பெண்கள், ஒடுக்கப்பட்ட பெண்கள் மாரியம்மாவை விடத் துணிந்தவர்கள். சுயமரியாதைக்காரிகள். தன் மீதான வன்முறைக்கு பதில் வினை ஆற்றுவார்கள். குடித்துவிட்டு அடித்தால் கணவனை இழுத்துப் போட்டு அடிக்கும் துணிச்சல்காரிகள். ஆபாசமாக பேசினால் திரும்பத் திட்டும் திராணி கொண்டவர்கள். கொடுமைக்கார கணவனிடம் சண்டை போட்டுவிட்டு கோபித்துச் செல்பvஅர்கள், திரும்ப சமாதானமாகி வருபவர்கள் இல்லை என்பதைத் தாண்டி வன்முறைக்கு எதிரான தனது நிலைபாட்டை அழுத்தமாகச் சொல்வார்கள். அவர்கள் எதனை பொறுத்துக்கொண்டாலும் தன் குழந்தையின் மீதான வன்முறையை  பொறுத்துக்கொள்ளவே மாட்டார்கள். சராசரி பெண்களே இப்படித்தான் என்றால், தைரியமான பெண்ணாகவே காட்சிப்படுத்தப்படும் மாரியம்மா எவ்வளவு வீரியமாக இருந்திருக்க வேண்டும். ஒரு காட்சியில், கபிலனை வெட்ட வருபவர்களால் மாரியம்மாவுக்கும் அவளின் குழந்தையின் உயிருக்குமே ஆபத்து இருந்தது. ஆனாலும் அவள் கணவனே கண் கண்ட தெய்வம் என்றிருக்கிறாள். அப்படியான ஒரு மிகப் பெரிய தாக்குதல் நடைபெற்ற பிறகும் குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட கணவனிடம் காட்டவில்லை. இது அந்த கதாபாத்திரத்திற்கு சுத்தமாக நியாயம் சேர்ப்பதாகத் தெரியவில்லை.  

மாரியம்மாவை விட, கபிலனின் அம்மாவே சுயமரியாதை மிக்க பெண்ணாகத் தெரிகிறார். "கணவனை இழந்துவிட்டேன், தனி மனிதியாகப் போராடி, வலிகளைக் கடந்த பின்பு மீண்டும் என்னால் அந்த வலிகளைக் கடக்க முடியாது" என்று முடிவெடுக்கும் தருணத்திலும், உனக்கு வேண்டும் என்ற ஒன்று எனக்கு வேண்டாம் எனும் போது நாம் இருவரும் சேர்ந்து இருக்க முடியாது, என்னால் அந்த மனஅழுத்தத்திற்குள் உள்ளாகி வாழ முடியாது என்று தன் மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் துணிச்சல்காரியாக இருக்கிறார். அது சரி தவறு என்பதையெல்லாம் தாண்டி, தனக்கான தேவையைும் எல்லையையும் வகுக்கும் சுயமரியாதைக்காரியாக மாரியம்மாவை விட பாக்கியமே அதிகமாக ஸ்கோர் செய்கிறார்.

மாரியம்மாவை போன்ற ஒரு பெண்ணை விரும்பும் ஆண்கள், ஒரு Safer Side Victm ஐத் தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண்களோ ஒரு சுயமரியாதையான இணையாக இருப்பதையே விரும்புகிறார்கள். பெண்கள் "கபிலன் மாதிரி கணவன் வேண்டும்" என்று ஆண்களைப் போல் சமூக ஊடகத்தில் எழுதவில்லை. ஏனென்றால் அவர்கள் கபிலன்களை கணவனாக ஆக்கிக்கொள்ள விரும்புவதில்லை. கபிலனையோ, டான்சிங் ரோசையோ ரசிக்கவும் பாராட்டவும் சிலாகிக்கவும் செய்து கடந்து போகிறார்கள். அதிலும் ஆண்களைப் போன்று "எனக்கு இது போன்ற கணவன் வேண்டும்" என்று பொது வெளியில் எழுதும் இடமும் இங்கே பெண்களுக்கில்லை.


கபிலன்களையும், மாரியம்மாக்களையும் வெறும் பேனா மட்டும் வடிவமைக்கவில்லை. காலம் காலமாக நடக்கும் சாதிய, வர்க்க, பாலின ஒடுக்குமுறைகளின் விளைவே கபிலனும் மாரியம்மாவும். 
இவர்களின் சிக்கல்களை பேசுபொருளாக்காமல், மாரியம்மாவின் குடும்ப வன்முறையை அங்கீகரிப்பதும், அதை ரசிப்பதும் ஆபத்தானது. சினாமா என்பது வெறும் சினிமா அல்ல, சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி.  

உங்களை கிக் ஸ்டார்ட் (Kick Start) பண்ணி உத்வேகப்படுத்தி முன்னேற்ற ஒரு பெண் தன் வாழ்நாளையே அடகுவைக்க வேண்டும் என எதிர்பார்பது ஆணாதிக்கம் மட்டுமல்ல. அபத்தமும் கூட...உங்களை நீங்களே செல்ப் ஸ்டார்ட் செய்து சுயமாக வாழப் பழகிக்கொள்ளுங்கள்.

எனவே, நீங்கள் தேடும் மாரியம்மாக்கள் சுயமரியாத்கைகாரிகளாக மாறி வருகிறார்கள். கல்வி, வேலை, கனவு என தனக்கான பாதைகளை வகுத்துவருகிறார்கள். காலச் சக்கரம் சுழலும் வேகத்தில் கலாச்சார தடைகள் உதிர்ந்து வருகிறது. கணவனின் வெற்றிக்காக மட்டுமே உழைத்து தேய்ந்து கைதட்டிக்கொண்டிருக்கும் மாரியாம்மாக்களை இப்போது தேடாதீர்கள். ஏனெனில் மாரியம்மாக்கள்,பாக்சிங் பெல்டில் இறங்கி, மேரி கோம்களாகி, சண்டை செய்து பதக்கங்களை வென்று கொண்டிருக்கிறார்கள்.