யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையே ஒரு பயணம்


நான் பிறந்தது முழுக்க முழுக்க ஒரு சினிமா குடும்பத்தில். நெஞ்சில் ஓர் ஆலயம், வசந்த மாளிகை போன்ற வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர் ஏ.வின்செண்ட் என் தாய்மாமா. இந்தியாவிலேயே சிறந்த கேமிரா மெக்கானிக் மற்றும் புகைப்படக் கலைஞர் ஜானி வின்செண்ட் இன்னொரு மாமா. என் தந்தை சிரில் கலை நுணுக்க வேலைப்பாடுகளில் தேர்ந்தவர். ஆனால் நான் மாணவனாக இருக்கும் போதும் சரி, வேலைசெய்து கொண்டிருக்கும்போதும் சரி, என் இலக்கு சினிமாவாக இருந்ததேயில்லை. வாழ்க்கையில் திருப்பங்கள் எப்படி, எங்கே என்றெல்லாம் புரிந்தகொள்ள முடியாது. அதுபோன்ற திருப்பங்கள் யாரை எப்போது மகிழ்விக்கிறது அல்லது துன்புறுத்துகிறது என்பதும் அறிந்துகொள்ள இயலாமல் போகிறது. அதுதானே வாழ்வின் அடிப்படைத் தன்மை.
சிவாஜி, வாணிஸ்ரீ நடித்த வெள்ளி விழா படமான வசந்த மாளிகையின், ஹிந்தி மொழிப்பதிப்புப் படப்பிடிப்பிற்கான மாளிகை அரங்கு விஜயா வாஹினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது நான் பள்ளி மாணவன். என் மாமா தான் ஒளிப்பதிவாளர் என்பதால் அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்த மாளிகை அரங்கம் எனக்கொரு அதிசயமாகப்பட்டது. அன்று இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா, ஹேமமாலினி நடித்துக்கொண்டிருந்தார்கள் அப்போதுகூட சினிமா மீது ஆர்வமோ, ஆசையோ இல்லை. ஆனால் சட்டென ஒரு நாள் நான் சினிமாவிக்குள்ளும் சினிமா எனக்குள்ளும் கலந்து போனது அதிசயம்.

சிறுவனான நீங்கள் பார்த்த ‘வசந்த மாளிகை’ அரங்க வடிவமைப்பைப் பற்றி சொல்லுங்கள்?

அது ஒரு பிரமாண்டமான, அழகான அரங்க அமைப்பு. நிறைய கண்ணாடிகளுடன் வடிவமைத்த கலை நுணுக்கம் நிறைந்த வேலைப்பாடுகள். அதில் நிறைய இருந்தது. இன்று கணினியின் வரைகலை தொழில்நுட்பத்தில் ஒரு கலை இயக்குனர் அரங்கத்தை வடிவமைப்பது மிக மிக எளிது. ஆனால் அன்று ஒவ்வொரு காட்சி அரங்கத்தையும் மனதுக்குள் உணர்ந்து நேரடியாக அதை உருவாக்கும் சூழல் இருந்தது. அந்தக் கால படங்கள் கடின உளைப்புமிக்க கலைஞகர்களின் வெளிப்பாடுதான்.


கணினியின் வருகை கலை இயக்குனர்களின் வேலைப் பளுவை குறைக்கிறதா? அல்லது அவர்களுக்கு நிகராகச் செயல்படுகிறதா?

கணினி கலைஞனிடமிருந்து அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் சாதனமாகியிருக்கிறது. வேலைப் பளுவைக் குறைக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. பக்க பலமாகயிருக்கிறது என்று மட்டும் சொல்ல முடியும். படப்பிடிப்புத் தளத்தில் அல்லது அரங்கத்தில் கலை இயக்குனர் உடனடியாகத் தீர்மானித்து, கற்பனை செய்து செயல் படுத்தும் காரியத்தைக் கணினியால் முடியாது.

ஒரே நேரத்தில் பல படங்கள், ஓர் அரங்கத்தை விட்டு மற்றொரு அரங்கம் என மாறி மாறிப் பயணித்தலில் உங்கள் கலைத்தன்மை குறைய வாய்ப்புண்டா?

நிச்சியம் வாய்ப்புண்டு ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள். வெவ்வேறு கதைக்களம், ரசனை. உங்கள் கற்பனையை நீங்கள் வேகமாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அது உங்களையும், உங்கள் கலைத்திறனையும் வறண்டுபோக வைத்து விடும். இத்தகைய சூழலில் மனதை ஆயத்தப்படுத்துதல் என்பதே கடுமையான உழைப்புதான்.

உங்களுக்குச் சவாலாக இருந்த திரைப்பட இயக்குநர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் பணிபுரிந்த அனுபவப்படங்களின் இயக்குனர்களும் எனக்கு நிறையவே யோசிக்கவும், கவலைப்படவும், கலைப்படுத்தவும் சாவல் விட்டவர்கள்தான். ‘ஹேராம்’ படத்தின்போது சரியான மன உளைச்சல். அதன் இயக்குனர் கமல்ஹாசனும், நானும் மற்றவர்களுக்கு, 1940 களில் இருந்த வாழ்க்கை முறையைத் தத்ரூபப்படுத்த மிகவும் பாடுப்பட்டோம். அப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒவ்வொரு அரங்கை அமைக்கும் போதும் சரி, உடைகளைத் தேர்ந்தெடுக்கும் போதும் சரி, மிக்க கவனத்துடன் பணியாற்றினோம். வரலாற்றுச் சுவடுடன் உருவாகும் படங்களில் வேலை செய்வதென்பது மிகவும் கடினமானது. கதைப்பாத்திரங்களின் உடையிலிருந்து அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள்வரை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் என்ன செய்யப் போகிறேன் என்ற கேள்வியை எனக்குள் சொல்லிக் கொள்வேன். முழுமூச்சுடன் வேலை செய்துகொண்டிருந்தால் என்னைக் குறித்தான பல விஷயங்களை மறந்துவிடுவது சகஜமாக இருந்தது. ஒரு முழுமைப்பெற்ற படைப்பின் வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் நான் தங்கிய அறையின் வாசற்கதவில் எனக்கே ஞாபக மூட்டுவதற்காக ஏதாவது ஒட்டிவிட்டுச் செல்வேன்.

கேள்விகளும் சந்தேகங்களும் ஆராய்ச்சிகளும் ஒன்றரக் கலந்து எத்தனை நிலைகுலையச் செய்தது. ஆனால் அந்தப் படம் முடிந்த பிறகு ஏற்பட்ட மகிழ்ச்சி என்று சொல்வதைவிட ஒரு ஐம்பதாண்டு காலம் நடந்தே வந்ததான பிரமைதான் உருவாகியது. இரண்டு தலைமுறையின் அனுபவங்கள் கிடைத்த மற்றொரு படம் ‘காலாபானி’ – தமிழில் ‘சிறைச்சாலை’. அன்று ஒரு விநாயகர் சதூர்த்தி ஊர்வலம். நான் செய்ய நினைக்கும் வடிவங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டேன். பொருட்கள் கிடைத்தபோது இடப் பிரச்சினை. பொழுது விடிந்தால் படப்பிடிப்பு. ஒவ்வொரு மணித்துளியும் பிரச்சனைகளாகவும், மன உளைச்சல்களாகவும் நகர்ந்துகொண்டிருந்தது.

அழுது விடுவேன் என்ற நிலைமைக்கு உள்ளானேன். ஆனால் இரவு என்னை எப்போது கடந்து சென்றது என்ற எனக்குத் தெரியாமலேயே நான் வேலையைப் பூர்த்திச் செய்துவிட்டேன்.

இயக்குனர் பிரியதர்சனே அதிர்ந்து சிலாகித்துப் போனார். இயக்குனர் மணிரத்னம், ஷங்கர் போன்றோருடன் வேலை செய்தபோது இப்படித்தான். கதாப்பாத்திரத்தின் உடை வரைக்கும் இருவரும் கலந்து பேசிதான் முடிவு செய்வோம். இப்படிப்பட்ட நேரங்களில் வெளிப்படும் அபிப்ராயங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதே குழப்பமாக இருக்கும்.

கலை இயக்குனரின் திறமைகள் நன்கு வெளிப்பட பிரமாண்டமான அரங்க அமைப்பு அல்லது அதிகமாகச் செலவில் தயாரிப்பு வேண்டுமா?

அப்படி ஒன்றுமில்லை. பிரமாண்டமான அரங்க அமைப்புகள் இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. முக்கியமான காட்சிகளில்... அந்நியன் படத்தில் வரும் ‘அண்டங்காக்கா கொண்டைக்காரி’ பாடலில் இடம்பெறும் பின்னணி அரங்குகள் இயக்குனர் ஷங்கரின் ஆலோசனைகள், சாலையில் தீட்டிய வண்ண ஓவியங்கள், பல்வேறு முகங்களைக் கொண்ட வாகனங்கள் இவையெல்லாம் எத்தனையோ முறை யோசித்து செய்த முடிவுதான்.

‘பாய்ஸ்’ படத்தில் குப்பைகளை வைத்தே ஒரு பாடல் காட்சியைப் படமாக்கப் போவதாக ஷங்கர் கூறினார். முதலில் அதை ஏற்கத் தயங்கினேன். ஆனால் அதை வடிவமைத்து முடித்த பிறகும் எந்தவொரு குப்பைப் பொருளைப் பார்த்தாலும் சேர்த்து வைக்கத் தொடங்கினேன். நல்லவேளை என் வீடு குப்பையில் மூழ்குவதற்குள் பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிந்தது. இது ஒரு பிரமாண்டமான காட்சியா? அதுபோலவே இயக்குனர் மணிரத்தினத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்திலும் ஒரு வித்தியாசமான அரங்க அமைப்பை வடிவமைத்தேன். பிரச்சனைக்குள்ளே இருக்கும் இலங்கை-தமிழ்க் கலாச்சாரப் பின்னணியைச் செய்தேன்.

எனக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்த பிரியர்தசனின் ‘தேன்மாவின் கொம்பத்து’ என்ற படம் ஒரு பெரிய பட்ஜெட் படமல்ல. அதில் வரும் வித்தியாசமான பாடல் காட்சிகள் கலை நுணுக்க வேலைப்பாடு நிறைந்தது. ஒரு ஓவியத்தின் அழகைப் பிரதிபலிக்கச் செய்தது, அதில்வரும் ஒவ்வொரு காட்சியும்.

ஒரு கலை இயக்குனராக சினிமாவில் வந்தவர் இயக்குனர் பரதன், அவருடன் இணைந்து பணியாற்றிய உங்களது முதற்படமான ‘அமரம்’ பற்றி?’

நன்றி: திரை மாத இதழ்
(இக்கட்டுரை ஆவணப்படுத்தும் நோக்குடன் பதிவிடப்படுகிறதே அன்றி வேறு எந்த வியாபார நோக்கமும் அல்ல)


அதுவொரு திடீர் நிகழ்வு. அதில்வரும் உச்சக் காட்சியில் ஒருபெரிய மீனை உருவாக்கும் பணிக்காகத்தான் அவரைப் பார்க்கச் சென்றேன். பலவேறு வரைபடங்களுடனும் – ஒரு சில மாதிரி வடிவங்களுடனும். ஏனென்றே தெரியவில்லை, அப்போதே என்னை அவருடன் பணிபுரிய அழைத்தார். அதிர்ச்சி எனக்கு. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நான் யாருடனும் பணி புரிந்த அனுபவம் இல்லாதவன். இருந்தும் அவருக்கு என்மீது அளவுக்கு மீறிய நம்பிக்கை. அதுதான் என் சினிமா வாழ்வின் தொடக்கம். ஒரு மாணவனின் ஆர்வமுடன் தேடலுடன் பணியை முடித்தேன். இயக்குனர் பரதன் மனம் திறந்து பாராட்டினார். முதல் விருது அவரிடமிருந்துதான். சிறந்த ஓவியரான அவர் ஒவ்வொரு காட்சியையும் வரைந்து படம் பிடிப்பவர். அவரது பாராட்டைப் பெரும் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.

கலை உணர்வுள்ள இயக்குனர்களிடம் வேலை செய்வது இனிமையான அனுபவம் என்கிறீர்கள், உங்கள் தொழிலின் மீதான நடிகர்களின் ஈடுபாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

கமல், விக்ரம், மோகன்லால் மற்றும் பெரும்பாலான நடிகர்கள் மொத்த படப்பிடிப்புப் பணியிலும் தங்களை ஈடுப்படுத்திக்கொள்வதுண்டு. காட்சிகளில் வரும் கதாப்பாத்திரங்களின் உடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது நடிகர்களும் தங்களது ஆலோசனைகளை வழங்குவதுண்டு.

அன்றைய கலை இயக்குனர்களுக்கும் இன்றைய கலை இயக்குனர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி....
கலைஞகனுக்கும் கலைக்கும் காலங்களின் தூரமோ இடைவெளியோ இருக்காது. அன்றைய கலைஞன் அவனது படைப்பை அன்றைய பொழுதுக்கேற்ப, அன்றைய ஊடகங்களுக்கேற்ப வெளிப்படுத்தினான். இன்றும் கலைஞர்கள் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். ஊடகங்களும் ரசிகர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். கலைஞன் மாறுகிறானா என்ன? கலை அழியா வண்ணம் கொண்டதல்லவா...
சினிமாவில் கலை இயக்கம் தவிர்க்கமுடியாதது. ஆனால் ஒரு சினிமா உருவாக்கத்தில் மற்ற கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் தரப்படும் நேரம், கலை இயக்குனர்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை. அதிக நாட்கள் நெருக்கடி நிலையிலேயே பணியாற்ற வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. கிடைத்தநேரத்தில் அவசரகதியில் பணியாற்ற வேண்டிய இறுக்கம் தளரும்போது – யதார்த்தத்துக்கும், கற்பனைக்கும் இடையே ஒரு சுகமான பயணம் நிகழும்.