திடீர் புரட்சி உடனடியாக நடக்காது, ஆனால் மாற்றங்கள் இருக்கும் | முகமது ஜீஷன் அய்யூப் பிரத்யேகப் பேட்டி


’ஆர்டிகள் 15’ சில அற்புதமான விமர்சனங்களைப் பெற்று வருவதால், நிஷாத்தின் குரலில் உற்சாகம் முற்றிலும் தெளிவாகத் தெரிகிறது. ’ஆர்டிகள் 15’ படத்தில் முகமது ஜீஷன் அய்யூப் ஏற்று நடித்த ‘நிஷாத்’ எனும் கதாபாத்திரம், படத்தைப் பார்த்தபின் உங்கள் மனதில் நீண்டகாலம் நிலைத்திருக்கும். அனுபவ் சின்ஹாவின் ‘ஆர்டிகள் 15’ ஒரு சக்திவாய்ந்த திரைப்படம். இது சாதிவாதத்தின் முக்கிய பிரச்சினையைத் தொட்டிருக்கிறது. இப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா, சயானி குப்தா மற்றும் முகமது ஜீஷன் அய்யூப் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.



2011ஆம் ஆண்டு, ’No One Killed Jessica’வின் மூலமாக அறிமுகமான முகமது ஜீஷன் அய்யூப், முராரி (Ranjhanaa), சிண்டு (Tanu Weds Manu Returns), சாதிக் (Raees) அல்லது நிஷாத் (Article 15) ஆகிய ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தினார். சிறிய வேடங்களில் நடித்தால்கூட, அவர் தனது இருப்பை உணர்த்த முடிந்தது.

ஆர்டிகள் 15 வெளியானவுடன், முகமது ஜீஷன் அய்யூப் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு, ஓய்விற்காக ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். ஆனால், அவர் எங்களுடன் உரையாட சிறிது நேரம் ஒதுக்குவதாகச் சொன்னார். ஃப்லிமிபீட்டிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அவர், பாலிவுட் பற்றிய தனது கருத்துக்களையும், சாதியம், தனது முதல் படம், மற்றும் நாடக வாழ்க்கை குறித்தும் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
பேட்டியின் பகுதிகள்:

’ஆர்டிகள் 15’ இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கும் குறிப்பாக உங்கள் கதாபாத்திரம் குறித்தும் என்னவகையான எதிர்வினைகளைப் பெறுகிறீர்கள்?

படத்திற்கு சிறந்த மறுமொழிகளும் விமர்சனங்களும் கிடைத்துவருகின்றன. வெளிப்படையாகவே சொல்வதென்றால், என் கதாபாத்திரத்திற்கு அத்தகைய எதிர்வினை கிடைக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. படத்தில் என் பாத்திரம் அவ்வளவு விரிவாக இல்லை. ஆனால் ஆம், படத்தில் அரசியலின் வாசம் நிஷாத்தின் காரணமாக மட்டுமே வருகிறது. ஒருவேளை அதனால்தான், மக்கள் அந்தக் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என்ற எண்ணம் எனக்கு இருந்தபோதிலும், மக்கள் இன்னும் படத்தை விரும்புவார்கள்.

படத்தில் உங்கள் கதாபாத்திரம் குறைந்த அளவே திரையில் தோன்றுகிறது. இந்த பங்கை நீங்கள் எவ்வாறு நம்பினீர்கள்?

அனுபவ் சார், எனக்கு ஸ்கிரிப்ட் கொடுத்தபோது, அந்த நேரத்தில் அவர் என்னை வேறு ஏதேனும் ஒரு பாத்திரத்திற்காகப் பரிசீலித்துக்கொண்டிருந்தார். ஆனால், நாங்கள் ஸ்கிரிப்டைப் பற்றி விவாதித்தபின்னர், ஒரு கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை எனக்களித்தார். பின்னர் நிஷாத்தின் கதாபாத்திரத்தை தேர்வுசெய்தேன். இந்தக் கதாபாத்திரத்தினுடனான தொடர்பை நான் உணர்ந்தேன். வெளிப்படையாகவே, நான் இந்த ஸ்கிரிப்டைப் படித்தவுடன், அதன் ரசிகனானேன். உங்கள் கையில் மக்கள் விரும்புகிற ஒரு புதையல் இருப்பதாக அவர்களிடம் சொன்னேன்.



இந்தப் படத்தில் நடித்த பின்னர், சாதியமைப்பு குறித்த உங்கள் எண்ணங்களிலும், கருத்துகளிலும் ஏதேனும் மாற்றத்தை அனுபவித்தீர்களா?

நான் எப்போதுமே அரசியலில் ஆர்வமாக உள்ளேன். ஆம், இந்த விஷயத்தைப் பற்றி மென்மேலும் சிந்திக்க இப்படம் நிச்சயமாக என்னைக் கட்டாயப்படுத்தியுள்ளது. படம் சொல்கிற கருப்பொருள் நிச்சயமாக புதிதல்ல. பல நூற்றாண்டுகளாக, நம் சமூகத்தில் மக்கள் இதனை எதிர்கொண்டுவருகின்றனர். ஆனால் அனுபவ் சின்ஹா மற்றும் கெளரவ் சோலங்கி ஆகியோர் இந்தப் பிரச்னையை முன்வைத்த விதம், தைரியமானது. ஒருவரது சாதி அல்லது சமூகத்தைத் தவறாகச் சித்தரிப்பதற்குப் பதிலாக, உண்மை என்னவோ, அதுவே இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில், சாதி வாதத்தின் இந்த நோயிலிருந்து சமூகத்தைக் குணப்படுத்த என்ன செய்யமுடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நம்மைச் சுற்றியுள்ளவர்களை சமமாக நடத்துவதற்கு நாம் முயற்சிக்கும் நாள், வேறு எவரையும் விட நாம்தான் உயர்ந்தவர்கள் என்று நினைப்பதை நிறுத்தும் நாள், இந்தப் பிரச்னை முடிவடையும். சாதியமைப்பு நம் சமூகத்தில் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. சில நேரங்களில் நாம் இந்த விஷயங்களைக் கவனிக்கக்கூட மாட்டோம். உதாரணமாக, பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் வென்றபோது, கூகுளில் அதிகம் தேடப்பட்டதில் இரண்டாவது விஷயம், ”அவரது சாதி என்ன?” என்பதுதான். நம் சமுதாயத்தில் இதுபோன்ற பாகுபாடு இல்லையென்று மழுப்புகிறோம். ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. முதலில் இந்த மேட்ரமோனியல் இணையதளங்கள் மூடப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். எத்தனை நிறங்கள் (வண்ணம்/ சாதி பிரிவுகள்) உள்ளன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், இந்தத் தளங்களைப் பாருங்கள். நமது நாட்டில் ஒரு சிறந்த பையன் அல்லது ஒரு சிறந்த பெண் என்பதற்குண்டான வரையறை என்னவென்று உங்களுக்குத் தெரியும். இந்த விஷயங்கள் அனைத்தும் இருக்கும்வரை பிரச்னைகளும் இருக்கும்.

இந்த முக்கியமான மற்றும் உணர்ச்சிரீதியிலான பிரச்னையில் ஒரு படம் உருவாக்குவது அனுபவ் சின்ஹாவின் தைரியத்தை உணர்த்துகிறது. இதை ஒப்புக்கொள்கிறீர்களா?

இந்தக் கருப்பொருளில் ஒரு படத்தை உருவாக்கவும், உருவாக்கிய பின்னர் அதை வெளியிடவும் யோசிக்க வேண்டும். இதுவொரு பெரிய விஷயம். இதற்காகவே, அனுபவ் சின்ஹாவிற்கு முழு மதிப்பெண் தருகிறேன். இது எளிதான பணி அல்ல. இந்தப் படத்திற்கான முழு புகழையும், அனுபவ் சின்ஹா மற்றும் கெளரவ் சோலங்கி ஆகியோருக்கு வழங்க விரும்புகிறேன். அவர்கள் இந்தத் தலைப்பில் மிகவும் தெளிவாக இருந்தனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.



ஒரு நேர்காணலில், நீங்கள் ‘எழுத்தாளர் ஆதரவு பாத்திரங்களை’ ஏற்று நடிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆர்டிகள் 15-ன் நிஷாத் கதாபாத்திரம் அதுபோன்ற ஒன்றா?

ஆம், நிச்சயமாக. இந்த வகையான பாத்திரத்தில், வித்தியாசமாக ஏதாவது செய்துபார்க்க உங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு கலைஞராக உங்களுக்குள் வேறுபட்ட ஒன்றைக் காண்கிறீர்கள், நீங்கள் பாத்திரத்தை ஆழமாக ஆராயலாம். அத்தகைய கதாபாத்திரங்களை எழுதுவதில் எழுத்தாளர்கள் மற்றும் இயக்குனர்கள் முழு ஈடுபாட்டையும் அதற்குள் செலுத்துகிறார்கள். ஆர்டிகள் 15-இல் எனது கதாபாத்திரம் சிறிது நேரம் மட்டுமே திரையில் வருகிறது. ஆனால், அதன் இருப்பை முழு படத்திலும் உணரமுடியும்.

பார்வையாளர்கள் உங்கள் வேலையை நேசித்தபிறகும் கூட, நீங்கள் ஒரு நடிகராக, குறைவாக மதிப்பிடப்படுவதாக நினைக்கிறீர்களா?

என் வேலைகளுக்கான மரியாதை கிடைக்கிறபொழுது, என்னை நான் ஒரு குறைவாக மதிப்பிடப்பட்ட நடிகராக உணரவில்லை. இங்கே நான் கதாபாத்திரங்கள் மற்றும் வேடங்கள் பற்றிப் பேசவில்லை. ஒரு நடிகராக நான் எப்போதும் எனது பணிக்காக மதிக்கப்படுகிறேன். திரைப்படங்கள் தோல்வியடைந்தாலும், மக்கள் என் பணியை விரும்பினர். எனக்குள் திறமை இருக்கிறது, அதைவைத்து வித்தியாசமாகச் செய்யமுடியும், என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஆமாம், சில நேரங்களில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, என்னிடம் வருகிற கதாபாத்திரங்களை மட்டுமே நான் செய்யமுடியுமா? ஆர்டிகள் 15-க்குப் பிறகு இந்த விஷயங்கள் மாறும் என்று நம்புகிறேன். ஒரு நடிகரால் ஒரே மாதிரியான வேலையைச் செய்யமுடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


எனவே, நீங்கள் இன்னும் பாலிவுட்டில் போராடிக்கொண்டுதான் இருக்கிறீர்களா?

ஆம், நிச்சயமாக. கதாபாத்திரத்தின் நீளத்தைப் பற்றி நான் ஒருபோதும் கருதவில்லை, ஆனால் பாத்திரத்தில் ஒரு ஆழம் இருக்க வேண்டும். அற்புதமாக எழுதப்பட்ட அத்தகைய பாத்திரத்தையே பெற விரும்புகிறேன். ஆர்டிகள் 15-ல் ஒரு உரையாடல் உள்ளது. அது மிகவும் நன்றாக இருக்கிறது. அதைச் சொல்லும்போதே ஒரு உற்சாகம் பிறக்கிறது. இதுபோன்ற விஷயங்கள்தான் ஒரு கலைஞரை ஊக்குவிக்கின்றன.

உங்கள் முதல் படத்திற்கான ஆடிஷனில், நீங்கள் அந்தக் கதாபாத்திரத்திற்கு (மனு ஷர்மா - No One Killed Jessica) ஒரு திருப்பத்தைக் கொடுத்து, பாதிக்கப்படக்கூடிய வகையில் நடித்துக்காட்டியதாக, எங்கோ படித்திருக்கிறேன். மேலும், அதை இயக்குனர் மிகவும் பாராட்டியுள்ளார். இதுபோல, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற காட்சிகளை, இன்னும் மேம்படுத்துகிறீர்களா?

உண்மையில், காட்சியை மேம்படுத்தும் இடத்தையும், காட்சியின் பரிமாணத்தையும் உங்களிடம் கொடுக்கும் ஒரு சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். இயக்குனர் ராஜ்குமார் குப்தா, அந்நேரத்தில் எனக்கு ஒரு வெளியை ஏற்படுத்திக்கொடுத்து, நம்பிக்கையைக் காட்டினார். எனவே, நானும் என்னால் முடிந்தவரை முயற்சித்து கதாபாத்திரத்தை மெருகேற்றினேன். ஆர்டிகள் 15 படத்திற்காக அனுபவ் சின்ஹாவும் எனக்கு அந்த இடத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார். யாராவது உங்கள் வேலைகளை ஆதரிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், நீங்கள் கதாபாத்திரத்திற்காக கடினமாக உழைக்கிறீர்கள், நீங்கள் இன்னும் வேறு ஏதாவது வித்தியாசமாகச் செய்ய விரும்புகிறீர்கள்.

நீங்கள் ஒரு ஸ்கிரிப்டை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கிறீர்களா? ஒரு இயக்குனர் உங்களை ஈர்ப்பது கடினமா?

ஆம், ஒருவேளை இது தவறு, ஆனால் இது உண்மைதான். ஒரு இயக்குனர் என்னைக் கவர்வது சற்று கடினம். நான் சில திறன்களைக் காணும் கதாபாத்திரத்திலேயே நடிக்க விரும்புகிறேன். பல முறை, நான் அந்தக் குழுவையையும் பார்க்கிறேன். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு நான் பணியாற்ற வேண்டிய குழு எது? என்பதையும் கவனிக்கிறேன். சரி, நான் ஓரளவு தேர்வு செய்கிறேன். நான் குறைவாக வேலை செய்கிறேன் என்றும் ஒருசிலர் சொல்கிறார்கள். ஆனால், என்னளவில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நூறு சதவீதம் என் உழைப்பைத் தருகிறேன்.


2011 முதல் 2019 வரை, உங்களுக்குக் கிடைத்த பாத்திரங்கள் குறித்து திருப்தி அடைகிறீர்களா?

இல்லை, நான் திருப்தி அடையவில்லை. எனக்கு யாரிடமும் புகார்கள் இல்லை. ஆனால், எனக்குக் கிடைக்கிற கதாபாத்திரங்களில் தன்னிறைவு ஏற்படவில்லை. இப்போதைக்கு ஆர்டிகள் 15 மற்றும் துர்ராம் கான், இந்த இரண்டு ஸ்கிரிப்டுகள் மட்டுமே, என்னிடம் வந்தவைகளில் என்னை ஆர்வமாக படிக்க வைத்தன. ஆனால், சில நல்ல கதாபாத்திரங்கள் இனிமேல் வரத்துவங்கும் என்று நம்புகிறேன்.

துவக்க நாட்களில் உங்களுக்கு அதிக உத்வேகம் அளித்த ஒரு படம் அல்லது பாத்திரம்?

அது ராம்கோபால் வர்மாவின் ’சத்யா’ என்று நினைக்கிறேன். அதுவொரு கேங்க்ஸ்டர் ட்ராமா மட்டுமல்ல. அவர் கதாபாத்திரங்களை முன்னால் கொண்டுவந்த விதம், திரைப்படங்களில் நடிப்பது பற்றி மக்கள் பேச ஆரம்பித்தனர். கேமரா வேலைப்பாடுகள், கதை, கதாபாத்திரம் என எல்லாமே அந்தப் படத்தில் அருமையாக இருந்தது.

நீங்கள் நாடகத்துறையிலிருந்து பாலிவுட்டில் நுழையத் திட்டமிட்டிருந்தபோது, உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?

உண்மையில், நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. ஆமாம் சிறந்த வேலையைச் செய்ய அந்நேரத்தில் கூட, பசி இருந்தது.



உங்கள் படங்களைப் பற்றிப் பேசுகையில், ஆனந்த் எல் ராயின் ராஞ்ச்னா, உங்களைப் பரந்த பார்வையாளர்களிடம் அழைத்துச்சென்றது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
என்னைப் பற்றிய கருத்தை மாற்றிய படம்தான் ராஞ்ச்னா. ஒரு படம், இப்போது நான் உங்களிடம் பேசுவதற்கும், நான் அனுபவிக்கும் வெற்றிக்கும் காரணம். ராஞ்ச்னாவுக்குப் பிறகு தான், வெவ்வேறு வேடங்களில் நடிக்க என்னை அணுகத் துவங்கினர். ஆனாந்த் எல் ராயிடமிருந்து இந்தப் புகழை என்னால் பிரிக்க முடியாது.

ஆர்டிகள் 15, சிறந்த மதிப்புரைகளைப் பெறுகிறது. ஆனால், பிரச்னை சார்ந்த திரைப்படங்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. அதிகளவில் இல்லை. ஆனால், ஆம் அது மாற்றத்தைக் கொண்டுவருகிறது. ஒரு திரைப்படம் வருகிறது, அதனால் எல்லாமே மாறியது, என்பது நடக்காது. ஒரு திரைப்படம் சிலரின் மனதில் கேள்விகளை எழுப்புகிறது, சிலரைச் சிந்திக்கத் தூண்டுகிறது மற்றும் சிலருக்கோ சில பதில்களை அளிக்கிறது. ஆர்டிகள் 15-ஐ பார்த்தபிறகு, ஒரு நபர் தனது சிந்தனையில் மாற்றத்தைச் சந்தித்திருந்தாலும், அது இந்தப் படத்திற்கு ஒரு சாதனை. எந்தவொரு திடீர்புரட்சியையும் நாம் எதிர்பார்க்க முடியாது, ஆனால் மாற்றம் வருகிறது.

ஆர்டிகள் 15-க்காக நீங்கள் அதிக பாராட்டுக்களைப் பெறுகிறீர்கள். உங்கள் அடுத்த படங்கள்/ திட்டங்கள் யாவை?

நான் துர்ராம் கானை (Turram Khan) எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது ராஜ்கும்மர் ராவ் மற்றும் நுஷ்ரத் பருச்சா நடித்த ஒரு ஹன்சல் மேத்தா திரைப்படம். சமீபத்தில்தான், இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தோம்.

நீத்தி சுதா
தமிழில்: தினேஷ்
நன்றி: filmibeat