அபர்ணா சென் – வீடும் உலகமும் : இன்று யமுனா ராஜேந்திரன், அம்சவள்ளி உரையாடல்

-அம்சவள்ளி

காய்ரே பாய்ரே ஆஜ், அபர்ணா சென் இயக்கத்தில் 2019இல் வெளியான படம். இந்திய சினிமாவில் நடிகராகவும், பத்து திரைப்படங்களுக்குமேல் இயக்கியுள்ள தனித்துவமிக்க இயக்குனராகவும் உள்ளவர் அபர்ணா சென். காய்ரே பாய்ரே ஆஜ் படம் வெளியாகிற சமயத்தில், ”நான் எடுத்துள்ள படங்களிலேயே இந்தப் படம்தான் அரசியல் ரீதியாகவும், வலதுசாரி அரசுகளின் செயல்பாட்டை விமர்சித்ததில் மிக முக்கியமான படமாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார். இரட்டை வேஷம் போடுகிற வலதுசாரிகளின் முகத்திரையை வெளிக்காட்டியதும், திருமணம் தாண்டிய உறவைப் பற்றிய ஒரு விவாதத்தையும் காய்ரே பாய்ரே ஆஜ் கதைக்களனாக எடுத்துக்கொண்டிருக்கிறது.

Aparna Sen: I make films true to my artistic vision | Bengali Movie News -  Times of India 

அம்சவள்ளி: ரவீந்திரநாத் தாகூரின் கதையைத் தழுவித்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதே கதையை சத்யஜித் ரே ஏற்கனவே 1984-இல் ‘காய்ரே பாய்ரே’ என்ற பெயரிலேயே படமாக எடுத்துள்ளார். அபர்ணா சென் இயக்கத்தில் இதே கதை, மீண்டும் 2019-ல் படமாக வெளியாகிறது. இந்தப் படம் ஏன் முக்கியமான படமாகத் திகழ்கிறது? அபர்ணா சென்னின் இயக்கத்தில் வெளியான பல படங்களில் குறிப்பிட்ட இந்த ஒரு படம் மட்டும் விவாதிக்க எடுத்துக்கொண்டதற்கான காரணம் என்ன? 
யமுனா ராஜேந்திரன்: இந்தப் படம் குறித்து இரண்டு மட்டங்களில் அணுகலாம். முதலில் அபர்ணா சென் ஒரு திரைப்பட இயக்குனராக, இரண்டாவது, அபர்ணா சென்னின் திரைப்பட வாழ்க்கையில், ஏன் இந்தப் படம் முக்கியமான படமாகத் திகழ்கிறது என. 

உலக சினிமாவில் பெண் இயக்குனர்கள் கடந்த எழுபது ஆண்டுகளில் பரிணாமமடைந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், 1968 பாரிஸ் மாணவர் எழுச்சி திறந்துவைத்த ஒரு கருத்தியல் ரீதியிலான முன்னெடுப்பு. அது என்னவென்றால், பெண்ணியம்தொடர்பான விஷயங்கள். பெண்ணிலைவாத நோக்கில் வரலாற்றைப் பார்ப்பது, வாழ்வைப் பார்ப்பது, உறவுகளையும், அரசையும் பார்ப்பது, உழைப்பைப் பார்ப்பது, நீதி சம்பந்தமான விஷயங்களைப் பார்ப்பது என்பதான பார்வை. இது கலை இலக்கியம், திரைப்படம் என எல்லாவற்றிலுமே மிகப்பெரியதொரு கருத்தியல் பாதிப்பைச் செலுத்தியிருக்கிறது. இந்தப் பாதிப்பின் அடிப்படையோடு திரைத்துறைக்கு வந்த பெண்கள் உலக வரலாறு முழுக்கவே நிரம்பியிருக்கின்றனர். ஃப்ரான்சில் கேத்ரீன் பிஜ்லெட், அதேபோல லத்தீன் அமெரிக்காவில் மரியா பம்பெட், எனில் இந்தியாவில் இப்படித் தொகையான பெண்ணிலைவாத பிரக்ஞையை முன்வைத்து இந்த உலகைப் பார்க்கிறவர்கள், உலக உறவுகளைப் பார்க்கிறவர்கள் , அரசியலைப் பார்க்கிறவர்கள் என ஒரேயொருவரைத்தான் சுட்டிக்காட்ட முடியும், அது அபர்ணா சென். 

நீங்கள், நமக்குப் பக்கத்து மாநிலத்திலிருக்கிற, கேரள சினிமாவை எடுத்துக்கொள்ளுங்கள், கேரள சினிமாவில் குறிப்பிடத்தக்க பெண் இயக்குனர்களே இல்லை. அங்கு சிறந்த பெண் இயக்குனர்கள் உருவாகவில்லை. கேரள சினிமா, அடூர் கோபால கிருஷ்ணனை உருவாக்கியது, ஜான் ஆப்ரஹாமை உருவாக்கியது, அரவிந்தனை உருவாக்கியது, அங்கு, இன்றைக்குவரைக்கும் படைப்பாக்கப்பூர்வமான படங்களை எடுத்துக்கொண்டிருப்பது ஆண் இயக்குனர்கள்தான். பெண் இயக்குனர்கள் படங்களை இயக்கினாலும், அது ஆண்கள் பார்வையில் பெண்கள் இயக்கிய படங்களாகத்தான் இருக்குமேயொழிய, பெண்ணிலை நோக்கில் தனித்துவத்துடன் இருக்காது. அதேபோல ஆந்திராவில் எடுத்துக்கொண்டால், ’பானுமதி’ திரைப்படங்களை இயக்கினார், அவரும் ஆணின் பார்வையிலிருந்து பெண் ஒரு திரைப்படம் எடுத்தால் எப்படியிருக்குமோ அதுபோன்ற படங்களைத்தான் எடுத்தார். தமிழ்நாட்டில் ஸ்ரீப்ரியா படங்களை இயக்கினார். அதுவும் ஆண்களுடைய பார்வையில் பெண்கள் இயக்கிய திரைப்படங்கள்தான். பின்னர், ரேவதி ஓரளவிற்கு மத்தியதர படங்களை எடுத்தார். ஒரு சித்தாந்த ரீதியிலான பின்புலத்துடன், ஒரு தனித்தன்மையுடன், உலகத்தை ஒரு பெண்ணிலைவாத பார்வையிலிருந்து பார்ப்பது, சாதிய உறவுகளை பெண்கள் பார்வையிலிருந்து பார்ப்பது, பாலுறவுச் சிக்கல்களை பெண்கள் பார்வையிலிருந்து பார்ப்பது, அரசியல் பிரச்சினைகளை பெண்ணியப் பார்வையிலிருந்து பார்ப்பது, முழு இந்திய சினிமாவிலும், இவ்விதமான கண்ணோட்டத்தைக் கொண்ட ஒரு நேர்மையான திரைப்படைப்பாளி எனில் நாம் அபர்ணா சென் என்ற ஒருவரைத்தான் சொல்லமுடியும்.

அம்சவள்ளி: இதற்கு முக்கியமான காரணம்? 

யமுனா: வங்காளிகளிடம் அந்த அறிவொளியுக மதிப்பீடுகள் இருந்தன. தமிழ்நாட்டில் நமக்குப் பாரதி கிடைத்ததுபோல அவர்களுக்கு தாகூர். பாரதி கவிதைகள்தான் இயற்றினார், பாரதி புனைகதைகளோ, உரைநடைகளோ, அதிகமாக இயற்றவில்லை. ஆனால், தாகூர் அவர்களுக்கு மிகப்பெரிய சொத்து. தாகூர், தேசியவாதத்துக்கு மாறாக, தேசபக்திக்கு மாறாக மனிதநேயத்தை முன்வைத்தார். இது மிக முக்கியமான விஷயம். தாகூர் கவிதைகள் மட்டுமல்ல, நாவல்கள், சிறுகதைகள் எழுதினார். அந்த நாவல்களின் சிறுகதைகளின் வடிவம் என்பது, மிகப்பெரிய பாதிப்பை, அந்த மண்ணினுடைய படைப்பாளிகள் மீது உருவாக்கியிருக்கிறது. 

ரித்விக் கடக், அவர்களிலிருந்து வந்தார், சத்யஜித் ரே அந்தப் பாதிப்பிலிருந்துதான் வந்தார், மிருணாள் சென் அந்த மரபிலிருந்து வந்தார், ஆனால் அதிர்ஷ்டவசமாக அபர்ணாசென், மிருணாள் சென்னின் படங்களில் நடித்தார். அதேபோல ரேவின் படங்களிலும் அபர்ணா சென் நடித்திருக்கிறார். அபர்ணா சென்னை ஒரு நடிகராக எடுத்துக்கொண்டால், அவர் வணிகப்படங்களிலும் நடித்தார். அப்படி, கமர்ஷியல் படங்களில் அவர் நடித்த, வாழ்க்கைக்கு ஒவ்வாத, கதாபாத்திரங்கள் அவரைச் சிந்திக்கவைத்தன. நாம் இந்த கமர்ஷியல் சினிமாவில் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நாம் இயங்கவேண்டிய தளம் வேறு என்று நினைத்துதான் ’செளரங்கிலேன்’ கதையை எழுதுகிறார். இந்தப் படத்தின் கதையை எடுத்துக்கொண்டு சத்யஜித் ரேவிடம் செல்கிறார். ரே அந்தக் கதையைப் படித்துவிட்டு, ”நீதான் இதை இயக்க வேண்டும், சஷி கபூரை உனக்கு அறிமுகப்படுத்திவைக்கிறேன்” என்றிருக்கிறார். 

செளரங்கிலேன் படத்தை இன்றைக்கு நீங்கள் பார்த்தீர்களேயானாலும், அது தலைசிறந்த படம். முதல் திரைப்படத்திலேயே கதைசொல்லும் விதம், கதைக்களனின் ஆழம், உணர்திறன் (sensitivity) எல்லாம் சேர்ந்து, அதையொரு அற்புதமான படமாக மாற்றியிருக்கும். முதல்படமே அபர்ணா சென்னிற்கு செவ்வியல் திரைப்படமாக அமைந்திருக்கிறது. இதுதான் அபர்ணா சென்னினுடைய தனித்துவம். 

அடுத்து இந்தப் படத்திற்கு வருவோம். 

ரேவினுடைய பல படங்கள், மிருணாள் சென்னினுடைய பல படங்கள், இன்றைக்கும் வங்காளத்திலிருந்து வருகிற மிகச்சிறந்த திரைப்படங்களுக்கும், அதன் கதைகளுக்கும் ஆதாரம் என்றால் தாகூர்தான். தாகூரினுடைய நாவல்களும் சிறுகதைகளும்தான் அம்மக்கள் மீது தாக்கம் செலுத்துகின்றன. இந்தக் கதையும் தாகூரினுடைய ஒரு நாவல். 

Satyajit Ray's first words after Aparna Sen made her directorial debut |  Bengali Movie News - Times of India
அம்சவள்ளி: வீடும் உலகமும் (The home and the world)

யமுனா: ஆம்., ஹோம் அண்ட் தி வேர்ல்ட். இந்தக் கதை ஒரு புத்தகமாக 1916ஆம் ஆண்டு வெளியானது. 1919-ஆம் ஆண்டில்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது. 1980களின் காலகட்டத்தில்தான் சத்யஜித் ரே இந்தக் கதையை திரைப்படமாக எடுக்கிறார். அதே கதையை, வேறொரு கண்ணோட்டத்தில் அபர்ணா சென் 2019இல் திரைப்படமாக்குகிறார். அப்படிப் பார்த்தீர்களேயானல், 1916-ஆம் ஆண்டினுடைய உணர்திறன்,1980ஆம் ஆண்டினுடைய உணர்திறன், 2019ஆம் ஆண்டினுடைய உணர்திறன் மொத்தமாகவே பல வேறுபாடுகள் கொண்டது. இருந்தாலும், ஏன் இந்தக் கதை எல்லோர் மீதும் தாக்கம் செலுத்தக்கூடிய கதையாக இன்றைக்கு வரைக்கும் இருக்கிறது? ஏன் ரேவின் மீது தாக்கம் செலுத்தியது? ஏன் அதே தாக்கம் அபர்ணா சென்னிற்கும் உருவானது? காரணம், அந்தக் கதை எடுத்துக்கொண்டிருக்கிற மையமான பிரச்சினை. கதை எதை அடிக்கோடிடுகிறது என்று பாருங்கள். 

கதையின் மையமான பிரச்சினை என்ன? இந்திய வரலாற்றையும், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் எடுத்துக்கொண்டீர்களேயானால், அதில் மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது இந்து – முஸ்லீம் பிரச்சினை. இந்த இந்து – முஸ்லீம் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசாங்கம் என்ன கதாபாத்திரம் வகித்ததென்றால், இந்துக்களையும், முஸ்லீம்களையும் தனித்தனியாக பிரித்து வைப்பதன் மூலம், அவர்களைப் பிரித்தாள்வதன் மூலம், தங்களின் அதிகாரத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கலாம் என்று காலனிய அரசாங்கம் ஒரு கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. எனில், இந்த பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய மரபு என்பது, இந்தியாவில், பல்வேறு அரசியல் நம்பிக்கைகள் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியிலும் இருந்தது. பகத் சிங் போன்றவர்கள், இடதுசாரிகள், ஒரு கொள்கையை முன்வைத்துப் போராடினார்கள், அவர்கள் இந்து முஸ்லீம் ஒற்றுமையை முன்வைத்தார்கள், மதத்தை அவர்கள் ஒருபோதும் சுயநலமாகப் பயன்படுத்தவில்லை. 

ஆனால், மறுபுறத்தில் இன்னும் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று, ஒரு தாராளவாத இந்துயிசத்தைப் பேசிய காந்தி, இன்னொருவர் அடிப்படைவாத இந்துயிசத்தைப் பேசிய ஆர்.எஸ்.எஸ்., சாவர்க்கர் போன்றோர். தாகூரின் கதையில் வருகிற கதாபாத்திரம் இதில் இரண்டாம் வகையினம். அதாவது சந்தீப், தேசியவாதம் என்ற பெயரில், ஒரே சமயத்தில் தாரளவாதத்தைப் பேசிக்கொண்டு, அதே நேரத்தில் சொந்த வாழ்க்கையில், மிகவும் சீரழிவான வாழ்முறையை, மேற்கத்திய மதிப்பீடுகளை, இரட்டை மதிப்பீடுகளைக் கொண்டு வாழ்கிறான். அவனைச் சுற்றி நடக்கிற கதைகள், படத்தின் ஒரு பகுதி.
 
அவர் காலனியாதிக்கத்திற்கு எதிராகப் பேசுவார், இந்திய சுதந்திரம் பற்றிப் பேசுவார், ஆனால் அடிப்படையில் இந்து மதம், அந்த இந்து மத அடிப்படைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பார். இன்றைக்கும் நீங்கள் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸின் அரசியலைப் பார்த்தீர்களேயானால், அது, பார்ப்பனர்களினுடைய தலைமையிலான அதிதீவிர அடிப்படைவாத இந்துயிசத்தைத்தான் முன்வைக்கிறது. ஆனால், காந்தி உங்களிடம் தாராளவாத இந்து மதிப்பீடுகளை முன்வைக்கிறார். இந்த இரண்டிற்குமிடையேயான வித்தியாசங்களை நாம் பார்க்க வேண்டும். தாராளவாத இந்து மதிப்பீடுகள் என்பது இஸ்லாமியர்களை வெறுப்பதில்லை. அது இஸ்லாமியர்களுக்கான உரிமைகளை அங்கீகரிக்கிறது. 

ஆனால், தீவிர அடிப்படைவாத, பார்ப்பனிய மையவாத இந்துயிசம், பார்ப்பன தலைமையைக் கொண்டு, ஒரு அடிப்படைவாத இந்து ராஜ்ஜியத்தையே கட்டமைக்க முயல்கிறது. இந்த இரு வேறுபாடுகளையும் நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். தாகூரின் காலத்தில் இது அவ்வளவு வெளிப்படையாக இல்லை. 1917-ல் அவ்வளவு தெளிவாக இந்த வித்தியாசங்கள் புலனாகவில்லை. 1980களின் காலகட்டத்தில் இந்த வித்தியாசங்கள் ஓரளவிற்குப் புரிய ஆரம்பிக்கிறது. அதுவே, கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் வலுப்பெற்று ஆட்சியதிகாரத்திற்கு வரும்போது, இந்த முரண் மிகத் தெளிவாக விளங்குகிறது. 

சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து மெல்ல மெல்ல வெளிப்பட்ட அந்த அடிப்படைவாத இந்து ராஜ்ஜியம், இந்து மதிப்பீடுகள் 2019ஆம் ஆண்டில், ஒரு பாசிச அரசியலுக்குள் வந்துசேர்கிறது. ஆக, ரேவினுடைய படத்திலிருந்து மாறுபட்ட, இந்த கண்ணோட்டம்தான் காய்ரே பாய்ரே ஆஜில் இருக்கிறது. காய்ரே பாய்ரே என்பதற்கு ’வீடும் உலகமும்’ என்று அர்த்தம். அதை ரே, அப்படியே எடுத்துக்கொள்கிறார். ரே எடுத்த படத்தின் தலைப்பு ‘காய்ரே, பாய்ரே’ என்பது மட்டும்தான். ஆனால், அபர்ணா சென், வீடும் உலகமும் இன்று (காய்ரே பாய்ரே ஆஜ்) என்று மாற்றியிருக்கிறார். 

தாகூரினுடைய காலத்திலும், இவர்களுடைய காலத்திலும், ஒரு சித்தாந்தரீதியிலான அபிப்ராயம் என்ற அளவில்தான் சந்தீப்பினுடைய அந்த தேசியவாதமும், அவருடைய மத நம்பிக்கையும் இருக்கும். அந்தக் கதாபாத்திரத்தினுடைய இரட்டைத் தன்மை வெளிப்படும். இதற்கு மாறாக ஒரு மேற்கத்திய கலாச்சாரத்தில் நம்பிக்கையுள்ள இன்னொரு கதாபாத்திரம் நிகில். இங்கு மேற்கத்திய கலாச்சாரம் என்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்ளலாமென்றால், பகுத்தறிவு, பகுத்தறியும் ரீதியில் பெரியாருக்கு அதுதான் தாக்கம் செலுத்துவதாக இருந்தது. மார்க்ஸ் கூட மேற்கத்திய ஆள்தான். பகுத்தறிவுவாதத்தையும் சமூகநீதியையும் முன்வைத்தவர். அதைப்போலவே, நிகில் கதாபாத்திரம், தாகூரிலும், ரேவிலும், அபர்ணா சென் என இந்த மூன்றிலுமே அவர் இந்த அறிவொளியுக மதிப்பீடுகளையும் (enlighted values), பகுத்தறிவு வாய்ந்த சமூகநீதியையும் முன்வைத்தவர். 

தாகூரிடமும், ரேவிடமும் மேற்கத்திய தாக்கம் கொண்டிருந்த நிகில் கதாபாத்திரம், அபர்ணா சென்னிடம் வரும்போது, ஒரு இடதுசாரிப் பார்வை கொண்ட, பா.ஜ.க எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு சித்தாந்தம் உள்ளவராக மாற்றம் பெறுகிறார். கருத்தியல் அபிப்ராயம் என்றளவில், அரசியல் குறிப்பீடுகளோடு, ஒரு நேரடி அரசியல், தீவிர அரசியல் பார்வையோடு அபர்ணா சென்னினுடைய படம் இருக்கிறது. அந்த வகையில் அபர்ணா சென்னினுடைய மிக முக்கியமான அரசியல் திரைப்படம் என நாம் இந்த காய்ரே பாய்ரே ஆஜ் படத்தை முன்வைக்கலாம். 

What Satyajit Ray's Ghare Baire tells us about our age of aggressive  nationalism | Eye News,The Indian Express

அபர்ணா சென்னின் படத்தை நாம் இரண்டு விதமாகப் புரிந்துகொள்ளலாம். ஒன்று உறவு, அதில் பெண்ணிய பார்வையை முன்வைத்து, பாலுறவு சம்பந்தமான விடுதலையைப் பேசுகிற படங்கள். இன்னொரு வகை, இந்து – முஸ்லீம் பிரச்சினைகளை முன்வைத்து நேரடியாக அரசியல் பேசுகிற திரைப்படங்கள். இந்த இரண்டுமே ஒருவகையில் அரசியல்தான். ஒன்று உறவுநிலை சம்பந்தமான அரசியல். இன்னொன்று வெளியுலகம் சம்பந்தமான அரசியல். மிஸ்டர் & மிஸஸ் ஐயர் (Mr. and Mrs iyer) திரைப்படத்திலேயே அபர்ணா சென் இந்து முஸ்லீம் பிரச்சினையைப் பேசத் துவங்கிவிடுகிறார். பாபர் மசூதி பிரச்சினையை எடுத்துக் கொண்டு கதையமைக்கிறார். 

அம்சவள்ளி: ஆம், காய்ரே பாய்ரே ஆஜ் படத்தினை எடுத்துக்கொண்டால், கெளரி லங்கேஷ் கொலைக்குப் பிறகுதான் இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இது சமகாலத்தில் நடக்கிற அரசியல், பா.ஜ.கவினரின் கலவரங்களை ஒரு பின்புலமாக வைத்து படம் எடுக்கப்பட்டு, 2019-ல் வெளியிடுவதென்பதும், மிக வலிமையாக தனது அரசியல் பார்வையை முன்வைத்தும் வெளிவந்த படங்களில் இது முக்கியமான படமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது ரவீந்திரநாத் தாகூரின் இலக்கிய மதிப்பீடுகள் சத்யஜித் ரே, அபர்ணா சென் என காலம் தாண்டியும், கிட்டத்தட்ட நூறு வருடங்கள் கழிந்தும் பயணப்படுகிறது. நாம் இதற்கு முன் பார்த்த, ஸ்டேட் ஆஃப் சீஜ் (state of siege) திரைப்படத்தின் இயக்குனர் கோஸ்டா காவ்ரஸ் இலக்கியம் பற்றிச் சொல்கிறபொழுது, ”மேக்பத் எழுதிய ஷேக்ஸ்பியர் என அந்தக்காலகட்டத்தில் இருந்த எழுத்தாளர்கள் படைத்த படைப்புகள் அந்தக்காலக் கலாச்சாரத்தை மட்டுமே முன்னிறுத்துகிறதே தவிர, அங்கிருக்கிற அரசியல் நிலைப்பாட்டை எந்த வகையிலும் தன் இலக்கியங்களில் முன்னிறுத்தவில்லை” என்கிறார். அப்படிப்பார்க்கும்பொழுது, இந்தியாவில் ரவீந்திரநாத் தாகூரின் நாவல்கள் காலங்கடந்தும் இன்றைய நடப்புச் சூழலிலும் பொருத்திப் பார்க்கத்தக்க வகையில் உள்ளது. ஆக, ஒரு சமூகத்தின் அரசியல் பிரச்சினைகளை இலக்கியத்தில் பேசுவது எந்தளவிற்கு முக்கியமாக இருக்கிறது?

யமுனா: அபர்ணா சென் ஒரு திரைப்பட இயக்குனராக, ரித்விக் கட்டக், சத்யஜித் ரே, மிருணாள் சென் என இந்த மூன்று பேரினாலும் தாக்கம் பெற்றவர். அதுவே, அரசியல் என்ற அளவில் பார்த்தீர்களேயானால், கடந்த முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகள், மம்தா பானர்ஜி பதவிக்கு வராததற்கு முன்பு வரை, வங்காளத்தை கம்யூனிஸ்ட் அரசாங்கம்தான் ஆண்டு வந்தது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அங்கு இருந்தது. நக்ஸலைட் எழுச்சி அங்கு தோன்றியது. அதனால், இது தொடர்பான அரசியல் விழிப்புணர்வு அவர்களுக்கு தொடர்ந்து இருந்துகொண்டேயிருக்கிறது. அது தொடர்பான வாசிப்பும் அவர்களிடம் தொடர்கிறது. பெண்ணிய அரசியல் தொடர்பான விஷயங்களும் தொடர்ந்து இருக்கிறது.
    
 இந்தப் படத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தெரியும், அந்த சந்தீப் ஒரு தீவிர வலதுசாரி பா.ஜ.க.காரன். முழு ஆர்.எஸ்.எஸ்.காரன். அபர்ணா சென்னிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது, ”ஒரேயொரு கட்சியை மட்டும் இவ்வளவு மோசமாகச் சித்தரிக்கிறீர்களே, அது சரிதானா?” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ”ஆம், அது சரிதான். ஏனென்றால் வரலாற்றில் அப்படித்தான் இருக்கிறது. அவர்கள்தான் இவ்வளவு பெரிய அழிவுகளுக்கு காரணமாக இருக்கிறார்கள். கொலைகளுக்குக் காரணமாக இருக்கிறார்கள். வன்முறைக்குக் காரணமாக இருக்கிறார்கள். இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறார்கள், இதுதான் அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களின் பத்துப் பதினைந்து ஆண்டுகால வரலாறாக இருக்கிறது. இவர்களாலும், இவர்கள் பேசுகிற கருத்தியல் பிரச்சாரத்தினாலும்தான் ஏழு எழுத்தாளர்களும், கலைஞர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் அசல் முகங்களை வெளிக்காட்ட வேண்டும். ஆகவே, இவர்களைப் பற்றிச் சொல்வதுதான் உண்மை, இந்த உண்மையின் பக்கம்தான் நான் நிற்கிறேன்” என்று அபர்ணா சென் பதிலளிக்கிறார். 
அந்த வகையில் அபர்ணா சென், முற்று முழுதான, நேரடி அரசியல் பேசுகிற படமாக, காய்ரே பாய்ரே ஆஜ் இருக்கிறது. 

அம்சவள்ளி: ஒரு வீட்டிற்குள்ளேயேதான் படத்தின் பெரும்பாலான கதை நடப்பதாக இருக்கிறது. க்ளைமேக்ஸ் என்னவென்று படத்தின் ஆரம்பக்காட்சியிலேயே காட்டிவிடுகிறார்கள். க்ளைமேக்ஸிற்கான ஒரு முன்னோட்டத்தோடுதான் கதை சொல்லப்படுகிறது. கறுப்பு வெள்ளையில் துவங்கும் அந்தக் காட்சியில், அந்தப் பெண்ணைச் சுற்றி, அவளை விசாரிப்பதிலிருந்துதான் கதை துவங்குகிறது. அபர்ணா சென் இதற்கு முந்தைய படங்களில் கதைசொல்லும் விதம் இதில் மாறுபட்டிருப்பதாக உணர்கிறேன். அடுத்து, சத்யஜித் ரே ஏற்கனவே, எடுத்து முடித்திருக்கிற படத்தின் கதையை மீண்டும் எடுத்துத் தன் பாணியில் இயக்குகிறபொழுது, அந்தக் கதைக்கென ஒரு பெரிய பொறுப்புணர்வு இருக்கிறது. அதை அபர்ணா சென் எந்தளவிற்கு கதை சொல்லலில் சாதித்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்? 

யமுனா: அபர்ணா சென்னினுடைய படங்களை முழுமையாகப் பார்த்திருந்தால், அவர்களது படத்தில் திரும்பத் திரும்ப ஒரு கருப்பொருள் முன்வைக்கப்படும். அது, திருமணம் தாண்டிய உறவு சம்பந்தமான கருப்பொருள். மீண்டும் மீண்டும் அவர் படத்தில் இந்தப் பிரச்சினை கையாளப்படும். அவருடைய பராமா ( Parama, 1985)படத்தை எடுத்துக்கொண்டாலும் சரி, அவரது பரமிதர் ஏக் தின் (Paromitar ek din, 2000) படத்தை எடுத்துக்கொண்டாலும் சரி, அவரது பெரும்பாலான படங்களில் திருமணத்திற்கு முந்தைய, திருமணம் கடந்த உறவுகள் தொடர்பான விஷயங்கள் அடிக்கடி வருகிறது. 36 செளரங்கி லேன் (36 Chowringhee Lane, 1981) படத்திலேயே கூட இந்த விஷயம் எடுத்தாளப்படுகிறது. அவருடைய படங்களிலேயே அதிகமாகப் பேசப்பட்ட படமென்றால், ஒன்று பரமா அடுத்து பரோமிதர் ஏக் தின். இந்த இரண்டு படங்களிலுமே திருமணம் தாண்டிய உறவுநிலை சார்ந்த கருப்பொருள் இருக்கிறது. இந்தப் படத்திலும் ( காய்ரே பாய்ரே ஆஜ் ) பார்த்தீர்களேயானால், பிம்லாவிற்கும் சந்தீப்பிற்கும் இடையேயிருக்கிற உறவு, பிம்லாவிற்கும் நிகிலுக்கும் இடையே இருக்கிற உறவு, என ஒரு முக்கோண வடிவில் கதை சொல்லப்படுகிறது. ஒருவகையில் இந்த கருப்பொருள், உறவுநிலை, தாகூரின் படைப்புகளிலும் திரும்பத் திரும்ப பேசப்படுகிறது. சத்யஜித் ரேயின் படங்களிலும் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. அவரது ‘சாருலதா’ படத்தை எடுத்துக்கொள்வோம். சாருலதாவிலும் ரே இதைத்தான் பேசுகிறார். இன்னும் ’சாருலதா’ படத்தில் பத்திரிக்கையாளராக வருகிற கதாபாத்திரத்தைப் பாருங்கள். அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வமாக இருக்கிறவர், அதில் தீவிரமாக இருக்கிறவர், முழுக்க முழுக்க வெளியுலகம் பற்றி நினைக்கிறவர். எனவே, வீடு, வீடு சார்ந்த உறவுகளைப் பற்றி நினைக்காதவர். அதிலிருந்துதான் ’சாருலதா’விற்கு வேறொரு உறவு உருவாகிறது. 

அதேபோலத்தான் இந்தப் படத்திலும் பார்த்தீர்களேயானால் ’நிகில்’ கோயில் கட்டவேண்டிய இடத்தில் ஒரு மருத்துவமனை கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பவர். விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பவர், அதேபோல அடித்துக்கொல்லப்பட்ட இஸ்லாமிய இளைஞனுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்துகிறவர். ஒரு தாராளவாதியாக இருந்து ஒரு இடது சாரி தொடர்பான ஆளாக அவர் மாறிவிடுகிறார். தனிப்பட்ட முறையில் பார்த்தீர்களேயானால், அவர் அதிகமான நேரத்தையும் உழைப்பையும் பொது வாழ்க்கைக்குத்தான் செலவிடுகிறார். ஆனால், அதேசமயத்தில் அவர் ஒரு தாராளவாத நபர், அறிவொளியுக தனிநபர், வெளியுலகத்தை பெரும்பாலும் தவிர்த்து வீட்டிலேயே இருக்க விரும்பிய மனைவியிடம்,”நீ வீட்டிற்குள் மட்டுமே முடங்கிக்கிடக்காதே! வீட்டைத் தாண்டியும் வெளியில் ஒரு விஸ்தாரமான உலகம் இருக்கிறது. அதில் நீ விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம். நீ படி. வெளியுலகம் செல். நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்” என்று சொல்கிறார். ஆனால், அந்தப் பெண்தான் அவ்வாறு தெரிந்துகொள்ளவில்லை. 

நிகில் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளுக்கு இந்தப் பெண்ணும் சென்று, அவருடைய வாழ்க்கைப் பார்வையைக் கண்டு, தன்னை வளர்த்தெடுத்திருக்கலாம். அவர்களுக்கிடையே உடல்ரீதியான நெருக்கம் அதிகமாக இல்லையாதலால், சந்தீப் இரட்டைவேஷம் போடுகிறான். சந்தீப், காதலுணர்வுடன் பேசுகிறான். உதாரணத்திற்கு ஒரு காட்சியைப் பார்த்தீர்களேயானால், சந்தீப், பிம்லாவை வெளியில் கூட்டிச் செல்லும்பொழுது, திருமணம் தாண்டிய உறவுநிலை தொடர்பான உரையாடல்களை அவன் கொண்டுவருகிறான். அது மறைக்கப்பட்ட இன்பம் (hidden pleasure) என்பதுபோன்ற விளக்கத்தைக் கொடுக்கிறான். பிம்லாவோடு மயக்கும் மொழியில் பேசித்திரிகிறான். 

சந்தீப், ஒரே சமயத்தில் மிகப்பெரிய விஷயங்களையெல்லாம் பேசுகிறான். கீதை, ராமாயணம், மகாபாரதம் எல்லாம் அவன் பேச்சில் வருகிறது. அதேநேரத்தில் கொலை செய்வதற்கான திட்டங்களிலும் அவன்தான் பின்னணியில் இருக்கிறான். இஸ்லாமிய இளைஞன் அடித்துக்கொல்லப்படுகிறபொழுது அதைத் தவறு என்று சொல்வதில்லை. மாறாக, அவன் கொல்லப்பட்டதன் நியாயங்களைப் பற்றிப் பேசுகிறான். மிக உயர்ந்த மதிப்பீடுகளைப் பேசுகிறான். பேராசிரியராக மாணவர்களிடையே உரையாற்றுகிறான், மயக்கும் வார்த்தைகளைப் பேசுகிறான், ஆனால், அவனுடைய நோக்கங்கள் எல்லாம் தன்னுடைய நண்பனுக்கே துரோகம் செய்கிற பெண் பித்தனாகத்தான், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கிறான். அதுவே, அவனது அரசியல் வாழ்க்கையில் பார்த்தீர்களேயானால், பதவியடைவதற்காகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்காகவும், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸினுடைய திட்டங்களைச் செயற்படுத்தும் ஆளாகவே இருக்கிறான். 

அப்படிப்பார்த்தால், சத்யஜித்ரேவின் காய்ரே பாய்ரேவில் இல்லாத ஒரு சிறப்பம்சம் அபர்ணா சென்னின் காய்ரே பாய்ரே ஆஜ்ஜில் இருக்கிறது. உண்மையிலேயே சத்யஜித் ராய் மீது பெரும்பான்மையாக வைக்கப்படுகிற ஒரு விமர்சனம் ரேவின் படங்கள் நேரடி அரசியல் பேசுவதில்லை. அதாவது, ரித்விக் கட்டக் படங்களில் இருக்கிற அந்த நேரடியான அரசியலோ, அல்லது மிருணாள் சென் படங்களில் இருக்கிற, அல்லது கெளதம் கோஷ் படங்களில் இருக்கிற நேரடியான அரசியல், ரேயின் படங்களில் இருக்காது. ரே,ஒரு சீர்திருத்தவாத, தாராளவாத படைப்பாளி. அவருடைய அழகியல் என்பது இதுதான். ஆனால், ரித்விக் கட்டக் மற்றும் மிருணாள் சென்னின் அழகியல் என்பது, அரசியல் சார்ந்த உரையாடல்களை முன்னெடுக்கிற களம். அபர்ணா சென் இந்த மூன்று பேரினாலும் அதிக பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார். அப்படிப் பார்த்தால் அபர்ணா சென் இந்தப் படத்தில் அடைந்திருக்கிற நிலை என்பது, ரித்விக் கட்டக், மிருணாள் சென் போன்றோர் முன்வைத்த அந்த அரசியல் இடையீடுகளை (political intervention) இந்தப் படத்திலும் கொண்டுவந்திருக்கிறார். ஒருவகையில் பார்த்தால் இதுவும் திருமணம் கடந்த உறவு தொடர்பான படம்தான். நிகில், பிம்லா, சந்தீப் இந்த மூவருக்குமிடையில் இருக்கிற, அந்த உறவுநிலை தொடர்பான படம்தான் இது. 

மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் படத்தில் பார்த்தீர்களென்றால்கூட, அந்தப் பயணத்தில் ஒரு அந்நியனைச் சந்திப்பது, அந்த அந்நியனைக் காப்பாற்றவேண்டிய நிலை வரும்போது அவன் மேல் ஓர் இணக்கம் அந்தப் பெண்ணிற்கு உருவாகும். அந்தப் படமும் ஒரு திருமணம் கடந்த உறவுநிலை தொடர்பான ஈர்ப்பு, ஒரு பெண்ணுக்குள் உருவாகும் என்பதைத்தான் பேசுகிறது. ஆனால், மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் படத்தில் இல்லாத, இன்னும் தீவிரமான அரசியல் நிலைப்பாடு, அபகரித்தல், தன்னலனுக்காகப் பயன்படுத்திக்கொள்தல், எல்லாம் இந்தப் படத்தில் இருக்கிறது. 

 ஆக, அந்த வகையில் அபர்ணா சென்னினுடைய முற்று முழுதான, நேரடி தீவிர அரசியல் பேசும் சினிமா என்று, நாம் இந்த காய்ரே பாய்ரே ஆஜ் படத்தைச் சொல்லலாம். 

Watch Ghawre Bairey Aaj | Prime Video

அம்சவள்ளி: சமகாலத்தில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவின் அத்துமீறல்கள், பாசிச போக்கு ஒரு எல்லையைக் கடந்திருக்கிறது. தனிமனிதர்கள் மேல் காட்டுகிற வன்முறை, கும்பலாகக் கலவரங்களைச் செய்வது என அவர்கள் எப்போதும் ஒரு உரையாடலுக்கு வருவதில்லை. உரையாடலை எதிர்கொள்ள திராணியற்று வன்முறையையே கையிலெடுக்கிறார்கள். எனில் இந்த மாதிரியான தருணத்தில் அபர்ணா சென்னின் இந்தப் படம், ஒரு வலதுசாரி இயக்கத்தில் செயல்படுகிற ஒரு மனிதனையும், அவனது போலியான நடவடிக்கைகளையும், விஷமங்களையும் பேசுவது எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைக்கிறீர்கள். ஏனென்றால், ஒரு சிலரது கருத்து என்னவாகயிருக்கிறதென்றால், பாசிசம் பேசுகிறவர்கள், ஆர். எஸ். எஸ்.காரர்கள் என அவர்களுக்குத் தன் கதையில் எந்தவித முக்கியத்துவமும் இல்லை, அவர்களை நேர்மைற்றவர்களாகக் காட்டுவது, வில்லன்களாகச் சித்தரிப்பது என்பது ஒருவகை. மற்றொரு வகை, அவர்களும் மனிதர்கள் என்ற போக்கிற்குள் கொண்டுவந்து, அவர்கள் கெட்ட எண்ணம் கொண்ட மனிதர்களாக நடந்துகொள்ள என்ன காரணம்? எது அவர்களை ஆட்டுவிக்கிறது? எது அவர்களை நீதியற்றவர்களாக நடக்கவைக்கிறது? என அவர்கள் பக்கத்திலிருந்து அவர்களின் செயல்களை அணுகுவது. அவர்கள் என்ன சொல்கிறார்கள், என அவர்கள் பேச்சையும் கேட்பது. அவர்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுப்பது என இந்தப் போக்கு கதைசொல்லலில் ஏன் அவசியப்படுகிறது?

யமுனா: படத்தில் மிகவும் நேர்மறையான விஷயமாக எனக்குப் பட்டதும் இந்த அணுகுமுறைதான். பொதுவாக நாம் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவினரின் அரசியலைத்தான் பார்த்துப் பழகியிருக்கிறோம். இதற்குள் ஒரு அறிவுசார் வெளி ஒன்று இருக்கிறது. வலதுசாரி அறிவுஜீவிகளில், வலதுசாரி சிந்தனை என்று சொல்கிறோமல்லவா, அதற்கான ஒரு அடிப்படை இடம் இந்த வரலாற்றில் தொடர்ந்து இருந்தே வருகிறது. அரவிந்தரோ, சாவர்க்கரோ, கோல்வால்க்கரோ என இவர்களெல்லாம் நிறையவே எழுதியிருக்கிறார்கள். சமீபத்தில், ஸ்வப்னதாஸ் குப்தா என்ற ஆர்.எஸ்.எஸ்காரர், ஒரு கல்வியாளர், அவர் தொகுத்த புத்தகம் ஒன்று படித்தேன். அந்தப் புத்தகம், வலதுசாரி சிந்தனையாளர்கள் எவ்வாறு இந்துத்துவ அடிப்படைக் கருதுகோள்களை உருவாக்கினார்கள் என்று அவர்களது பனுவல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தொகுதிதான் அது. அதில் யார் யாருடைய எழுத்தெல்லாம் இருக்கிறதென்று பார்த்தோமானால், அரவிந்தன், சாவர்க்கர், அத்வானி, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர் நைபாலின் எழுத்து, அதேபோல சீர்திருத்த இந்துத்துவம் பேசிய விவேகானந்தரின் எழுத்து, அடுத்து, தமிழ்நாட்டிலிருந்து குருமூர்த்தியும் கூட இதில் எழுதியிருக்கிறார். 

இவர்களெல்லாம் நிறைய பொய் பேசுகிறார்கள், பார்ப்பனிய மையவாதத்தை முழு இந்துக்களுக்குமான அரசியலாக முன்வைக்கிறார்கள். அதேசமயம் இவர்கள் எழுதுகிறார்கள். எழுத்தாளர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் புத்தகம் எழுதுகிறார்கள். அண்மையில் நான் வாசித்த ஒரு புத்தகம், ஜுகல்பந்தி: மோடிக்கு முந்தைய பி.ஜே.பி (Jugalbandi: The BJP Before Modi written by Vinay Sitapati) முதலில் ஜுகல்பந்தி என்பதற்கான அர்த்தத்தைப் பார்த்துவிடுவோம். ஜுகல்பந்தி என்றால் இரண்டு இசைக்கருவிகள், அந்த இரு இசைக்கருவிகளும் இசைக்கப்படும்பொழுது தாள – லய ரீதியாக அவையிரண்டும் எப்படி ஒன்றோடொன்று பொருந்திப் போகிறது, அதிலிருந்து எப்படி ரம்மியமான இசை வெளிப்படுகிறது என்பதற்கான அர்த்தம்தான் ஜுகல்பந்தி. இது மிக அழகியலான வார்த்தைப் பிரயோகம். 

அப்படி வாஜ்பாய், அத்வானி, இருவரும் இருவேறு தளங்களில் செயல்பட்டாலும் அவரவர்களுக்கான நெறிகளோடு, அரசியலில் அவர்கள் எப்படி ஒத்துப்போகிற அற்புதமான இசையை கொடுத்தார்கள் என்று எழுதியிருக்கிறார்கள். இது அமெரிக்காவிலிருக்கிற ஒரு கல்வியாளர் எழுதிய புத்தகம். எப்படி அழகியலான, நேர்மறையான வார்த்தைப்பிரயோகங்களோடு அவர்களது கருத்துக்களை முன்வைக்கிறார்கள் என்று பாருங்கள். மறுமுறை நினைவுபடுத்துகிறேன். இத்தனைக்கும் அதுவொரு அக்கடமிக் எழுதிய புத்தகம். அதில் என்ன சொல்கிறார்களென்றால், பி.ஜே.பியின் ஆட்சியதிகாரத்தில் நாங்கள், ஒரு பாசிச அரசியலை நோக்கிப் போகிற அரசாங்கம் என்று சொல்லமுடியாது. இது ஒரு சனநாயகத்திற்குள் பெரும்பான்மையான அபிப்ராயங்களைத் திரட்டுவதன்மூலம், ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி , ஒரு அரசை, ஒரு சமூகத்தை உருவகிப்பது. அப்படியாக, ஒரு சனநாயகத்திற்குள் இது சாத்தியம். இந்திய அரசியலமைப்பிற்குள்ளேயே இது சாத்தியம். இந்திய அரசியலைமைப்புச் சட்டம் கொடுத்திருக்கிற உரிமையின்படியும் இது சாத்தியம். இதைத்தான் பா.ஜ.க செய்கிறதேயொழிய இதுவொரு பாசிச அரசு, அல்லது பாசிச சித்தாந்தம் அல்ல என்று சொல்கிறார். ஒரு கல்வியாளர் தன் நைச்சியமான மொழியால் இப்படி எழுதியிருக்கிறார். மிகவும் அழகியல்பூர்வமான ஒரு தலைப்பு, இந்திய அரசியலமைப்பிற்குள்ளேயே, இந்திய சனநாயகத்திற்குள்ளேயே பெரும்பான்மை என்று சொல்வது, இருப்பினும் இது பாசிசம் இல்லையென்பதை எடுத்துரைப்பது. 

ஆனால், மனிதகுல வரலாற்றில் நீங்கள் பார்த்தீர்களேயானால் அரசியல் பெரும்பான்மை கலாச்சாரத்தை வைத்து, மக்கள் மீது வேண்டாத ஒன்றைத் திணிப்பதே பாசிசம்தான். சிறுபான்மையினரை, பெரும்பான்மையாக இருப்பவர்களின் போக்கிற்குள் கொண்டுவர முயல்வது, அதை ஏற்றுக்கொள்ளச் செய்வது, ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற பெரும்பான்மைக்குள் இழுப்பதே பாசிசம்தான். இதை நீ அரசியலமைப்புச் சட்டத்தை வளைத்து, அல்லது சனநாயகத்தை வளைத்துச் செய்வது எல்லாம் ஒரு சனநாயக நடவடிக்கை என்று சொல்லமுடியாது. ஆனால், இந்தப் புத்தகத்தை யார் எழுதுகிறார்கள்? ஒரு அகடமிக் எழுதுகிறார். 

அதேபோல, இவர்கள் மகாபாரதத்தையும் கம்பராமாயணத்தையும் முன்வைக்கும்பொழுது என்ன சொல்கிறார்கள்? ராமனும், சீதையும் சாதாரண மனிதர்களோடு கலந்துவிட்ட ஒரு விஷயம், மகாபாரதம், ராமாயணம் என்பது சாமான்யர்களின் அறவியலோடு கலந்துவிட்ட விஷயம், நாம் சாதாரண மனிதர்களின் உணர்வைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். சாதாரண மனிதர்களோடுதான் உறவாட வேண்டும். சாதாரண மனிதர்களின் நலன்களைத்தான் நாம் முன்னெடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சந்தீப் இந்தப் படத்தில் அதைத்தான் சொல்கிறார். 

பிரதமர் மோடியைப் பற்றி தி வயர் (The wire) இணையதளத்தில் வந்த ஒரு கட்டுரையை வாசித்தேன். மோடியைக் குறித்து, The greatest demagogue என்பது போன்ற தலைப்பில் வெளியான கட்டுரை அது. Demagogue என்றால் வாய்வீச்சாளர். சாதாரண மனிதர்களுக்கு எது விருப்பம், எது தேவையென்பதை அறிந்து, அவர்களுக்குத் தகுந்தாற்போன்ற, கோஷங்களை முன்வைத்தல். அடுத்து, பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது. இது நிறைவேற்றக் கூடியதா? நிறைவேற்றுகிறாரா? இது மக்களுக்கு பயனுள்ளதாகயிருக்கிறதா? என்பதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் கிடையாது. அப்படித்தான் இந்தியக் குடிமக்களுக்கு பதினைந்து லட்சம் தருகிறேன் என்று சொன்னது. இப்போது மற்றுமொரு சின்ன உதாரணம் சொன்னால், இது எளிதில் விளங்கிவிடும். விவசாயிகள் பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். விவசாயிகள் பிரச்சினைகளில் அவர்கள் என்ன சொல்கிறார்களென்றால், விலை நிர்ணயம் தொடர்பான விசயங்களில், அந்த உரிமையை விவசாயிகளிடம் ஒப்படைத்துவிட வேண்டும். முக்கியமாக இதை அரசோ, கார்ப்பரேட்டுகளோ தீர்மானிக்கக்கூடாது. ஆனால், மோடி மீண்டும் மீண்டும் என்ன சொல்கிறாரென்றால், ”நாங்கள் அதில் கை வைக்கமாட்டோம். அந்த உரிமை உங்களிடம்தான் இருக்கிறது” என்கிறார். இது நல்லது. அந்த உரிமையில் கைவைக்கமாட்டோம் என்று சொல்கிறீர்கள். வரவேற்கிறோம். ஆனால், இந்த வாக்குறுதியை எழுத்தில் சட்டபூர்வமாகக் கொண்டுவாருங்கள் என்றால், மூன்று வேளாண்மைச் சட்டத்தில் இதையும் ஒரு சட்டமாகக் கொண்டுவாருங்கள் என்றால், இல்லை, அதை எழுத்தில் கொண்டுவரமாட்டேன், ஆவணப்பதிவாக ஆக்கமாட்டேன், சட்டமாக்க மாட்டேன், ஆனால், வாயில் வாக்குறுதி கொடுப்பேன். அதேபோல, சி.ஐ.ஏ குடியுரிமைச் சட்டத்திலும் பார்த்தீர்களேயானால், குடியுரிமை இல்லாத மனிதர்களை அடைத்துவைப்பதற்குண்டான சிறைகளை எல்லா மாநிலங்களிலும் இப்போது கட்டியிருக்கிறார்கள். ஆனால், அரசோ, “அப்படியொரு சிறையே இல்லை” என்று சொல்கிறது. அவர்கள் அத்தகைய சிறைகளைக் கட்டியிருக்கிறார்கள் என்பதுதான் நிஜம். அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. அரசோ இதை மறுக்கிறது. அதேபோல, அஸ்ஸாம் போன்ற இடங்களில் நடந்த தேர்தலின்பொழுது என்ன சொல்கிறார்களென்றால், ”நாங்கள் மதத்தையும் சாதியையும் வைத்து அரசியல் செய்வதில்லை” என்கிறார்கள். இது பச்சைப்பொய். ஏனெனில், பா.ஜ.கவின் அரசியலே இந்து பெரும்பான்மையை வைத்துதானே! இஸ்லாமியர்களைத்தானே அவர்கள் எதிரிகளாக முன்வைக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவினர் தாஜ்மஹாலின்முன்பு காவி கொடிகாட்டி, தாஜ்மஹாலை இடிக்கவேண்டும் என்று கோஷம்போட்டிருக்கின்றனர். 

ஆக, இந்த வாய்வீச்சு, பொய் பேசுவது என்பதை, அவர்கள் நடைமுறையில் கொண்டிருக்கிறார்கள். அதேசமயத்தில் இவர்கள் அகடமிக்சியன்களாக, எழுத்தாளர்களாக, பத்திரிக்கையாளர்களாக, தொலைக்காட்சி நடத்துபவர்களாக, இவர்கள் திரைப்படங்கள் எடுப்பவர்களாக, இவர்கள் அக்‌ஷய்குமார் போன்ற மிகப்பெரும் நடிகர்களாக, கங்கனா ரனாவத் போன்ற புகழ்வாய்ந்த நடிகைகளாக உள்ளனர். அழகான வார்த்தைகளில் பேசுகிறார்கள், வாஜ்பாய் கவிதைகள் எழுதுவார், பிரதமர் மோடியும் கவிதைகள் எழுதுவார், இதனுடைய ஒரு புத்திமான் குறியீடுதான் சந்தீப். 

சந்தீப் ஒரு பேராசிரியர். மாணவர்களுக்கிடையே செயல்படுகிற, அவர்களுக்குப் போதிக்கிற, அவர்களை ஆகர்சிக்கிற, ஆம், வாய்வீச்சின்மூலம் ஆகர்சிக்கிற ஒருவர். நல்ல நேர்த்தியான உடைகள் அணியத் தெரிந்த, தன்னுடைய நண்பனின் மனைவியைக் கவர்ந்து, காதல் மொழி பேசி, மயக்குகிற அந்த விஷயத்தை, மறைக்கப்பட்ட இன்பம் என்று சொல்லி, அதை இயல்பானது என்று நம்ப வைக்கிறார். உண்மைக்கு நேர்மாறாக நடக்கிறவர். அதேமாதிரி மனிதாபிமானம் பேசுகிறவர். தனக்கும் கொலைகளுக்கும் தொடர்பில்லை என்று சொல்கிறவர், தனக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று வாதிடுபவர், தேசபக்தி அன்பு பேசுகிறவர், ஆனால் நடைமுறையில் இஸ்லாமிய சிறுவன் கொல்லப்பட்டபோது அதை ஆதரிக்கிறவர், தன்னுடைய நண்பனான நிகிலின் கொலைக்கும் காரணமாக இருக்கிறவர். 

ஒன்று வாய்வீச்சைப் பேசிக்கொண்டு, அழகான சொல்லணிகளைப் பேசிக்கொண்டு, நடைமுறையில் வன்முறையாளர்களாக கொலைகாரர்களாக சமூக விரோதிகளாக இருக்கிற, அழகான நேர்த்தியாக உடையணியத் தெரிந்த, அழகான தோற்றங்களும் கொண்ட, மனிதர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் சந்தீப் பிரநிதித்துவம் செய்கிறான். கடைசிக் காட்சியில்கூட பாருங்கள். நிகிலைக் கொல்வதற்கும் எல்லாவித உதவிகளையும் செய்துவிட்டு, வீட்டிற்கு முன்னாலேயே கொலையாவதற்கும் காரணமாக இருந்துவிட்டு, ”நக்ஸலைட்டுகள்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பார்கள்” என்று சொல்கிறான். எனில், அவன் எப்படிப்பட்ட வாய்வீச்சாளன் என்று பாருங்கள். எனவே, சந்தீப்பை படத்தில் நேர்மறையாகச் சித்தரிக்கவேயில்லை. 

ஸ்டேட் ஆஃப் சீஜ் படம் பற்றிப் பேசும்பொழுதும் இதைச் சொன்னோம். எதிர்த்தரப்பினரும் மனிதர்கள். ஹிட்லரும் ஒரு மனிதர். ஹிட்லர், தான் தற்கொலை செய்துகொள்வதற்கு சற்றுமுன்புதான், தன்னுடைய காதலியைக் கல்யாணம் செய்துகொள்கிறார். ஹிட்லருக்குக் கீழே வேலை செய்த காரியதரிசி, செயலாளர் உட்பட மற்ற பெண்களையெல்லாம், மிகவும் பாதுகாப்பாக வேறு நாட்டிற்கு அனுப்பி வைக்கும் நோக்கத்தில், “நீங்கள் இங்கிருந்து சென்றுவிடுங்கள், உங்களுக்காக ஒரு விமானம் கூட ஏற்பாடு செய்து தருகிறேன்” என்றெல்லாம் சொல்கிறார். அதேமாதிரி, கோயபல்சின் குழந்தைகள் மீது, தீராத அன்பு கொண்டவர் ஹிட்லர். ஹிட்லர் தனது நாயை மிகவும் அற்புதமாக நேசித்தவர். அவரேதான் லட்சக்கணக்கான உயிர்களையும், வதைமுகாம்களில் கொன்றொழித்தவர். அதேபோன்றதொரு குணநலம் கொண்டவன்தான் சந்தீப். 

இவர்களுக்குக் கவிதைகள் எழுதத் தெரியும். இவர்களுக்கு நன்றாக நடிக்கத் தெரியும். அழகான தோற்றமும் கொண்டிருப்பார்கள். ஆனால், அறமற்றவர்கள் என்பதற்கான உருவகத்தைத்தான் சந்தீப் தோற்றத்தில் நாம் பார்க்கிறோம். 

அந்த வகையில், இவையெல்லாம் ஒரு திரைப்படத்தில் மிகவும் முக்கியமான விஷயங்கள். கதாபாத்திரங்களை மனிதத் தன்மையை அடையச் செய்யவேண்டும். அரக்கத்தனமாகக் காட்டக்கூடாது. ஆனால், எதிர்மறைக் கதாபாத்திரங்கள் அவர்களது செயல்களின் வழி, அரக்கர்களாக வெளிப்படுவார்கள், அதை நாமும் உணர்வோம். ஒரு படைப்பாளி அந்த அரக்கனைக்கூட மனிதனாக்க வேண்டும். அப்படியான இடங்களைக் கதையில் உருவாக்க வேண்டும். இதைத்தான், இந்த அணுகுமுறையைத்தான் அபர்ணா சென், சந்தீப் கதாபாத்திரத்திற்குக் கொடுத்திருக்கிறார்.

அம்சவள்ளி: இந்தப் படத்தின் அழகியல் மதிப்பீடுகளுக்கு வருவோம். படத்தில் பயன்படுத்தியிருக்கிற இசைக் கருவிகளாகட்டும், இடையிடையே அவர் மேற்கோள் காட்டியிருக்கிற கவிதைகள், என மென்மையான போக்கை இந்தக் கதை சொல்லல் கொண்டிருக்கிறது. இதுபோன்று காட்சியியல் அடிப்படையிலான விஷயங்கள் எவையெல்லாம் படத்தில் சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறீர்கள்?

யமுனா: உண்மையாகவே, அழகியல் மதிப்பீடுகள், காட்சியியல் மதிப்பீடுகள் என்று வைத்துக்கொண்டால், அபர்ணா சென்னின் படங்களை ஒன்றாகச் சேர்த்துப் பார்த்ததன் அடிப்படையில் சொல்கிறேன். அவர் இயக்கத்தில் வெளியான மிகச்சிறந்த படம் என்று நான் நினைப்பது முதலில் செளரங்கிலேன். அடுத்தது பரமா, அதற்கடுத்தது பரோமிதார் ஏக் தீன். இதிலும் மிகச்சிறந்த படங்கள் என்றால், அதில் செளரங்கிலேனையும், பரோமிதார் ஏக் தீனையும்தான் குறிப்பிடுவேன். பரோமிதார் ஏக் தீன் படத்தில் அபர்ணா சென்தான் நடித்திருக்கிறார். அவர் நடிப்பில் முழு திரைப்படத்தையும் ஆக்கிரமிக்கிறார். ஒரு நடுத்தர வயதுப் பெண்ணாக, ஒரு அம்மாவாக, ஒரு மாமியாராக, மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். அதுபோல, கதை என்றளவில், அந்த உறவுமுறைகளை அவர் சித்தரித்த விதம் குறித்துப் பார்த்தோமானால், அத்தனை அழகு. கேள்வியில் நீங்கள், கவிதை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தக் கவிதைகள் அவரது படங்களில் தொடர்ந்து இடம்பெறக்கூடிய ஒன்று. 

செளரங்கிலேன் படத்தில் மையக்கதாபாத்திரமாக வருகிற ஜெனிஃபர் கேண்டீல், நடுத்தர வயது கொண்ட பள்ளி ஆசிரியை. மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியரைக் கற்றுத்தரக்கூடிய ஆசிரியர். படத்திலேயே ஷேக்ஸ்பியர் தொடர்பான மேற்கோள்கள் நிறைய இடம்பெறும். படத்தின் இறுதியில், அந்தப் பெண் இந்தச் சமூகத்தினால் நிராகரிக்கப்பட்டுவிடுவார். இந்த நிராகரிப்பு என்பதை நாம் மிக நுணுக்கமாக அணுகவேண்டும். இந்த ஆங்கிலோ இண்டியன் சமூகம் இருக்கிறது. இவர்களை காலனியாதிக்கக் காலத்திலும் கேவலமாகத்தான் பார்த்தார்கள், ஆங்கிலேயர்களும் இவர்களை முறையாக நடத்தவில்லை, இந்தியப் பூர்வக்குடிகளும் கூட அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் என்னவென்றால், அங்கிருந்த கடைநிலை ஊழியர்கள், அலுவலர்கள், இரயில்வே பணியாளர்களாக இருந்தவர்கள், இருப்புப் பாதை போடும் இடங்களில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், இவர்களோடு உறவுகொண்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளாகத்தான் இந்த ஆங்கிலோ இந்தியர்கள் பெரும்பாலும் இருந்தார்கள். 
இவர்கள், ஆங்கிலேயர்கள் போல ஆங்கிலம் பேசமாட்டார்கள், படித்த இந்தியர்கள் இருக்கிறார்களல்லவா, அவர்களைப் போலவும் ஆங்கிலம் பேசமாட்டார்கள். அவர்கள் பேசுகிற ஆங்கிலமே வித்தியாசமாக இருக்கும். அவர்களது சரும நிறமும் வித்தியாசமாக இருக்கும். அதனால்தான் கலோனியல் மாஸ்டர்களும் இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், உள்ளூர்வாசிகளும், இவர்கள் தங்களவர்தான் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதுபோன்றதொரு கதாபாத்திரத்தைத்தான் அபர்ணா சென் கட்டமைத்திருந்திருப்பார். 
அந்த ஆங்கிலோ இந்தியப் பெண்மணி, மிகவும் அன்பானவர், எல்லோருக்கும் உதவி செய்யக்கூடியவர், உன்னத ஆன்மா, ஆனால் கடைசியில் இந்தச் சமூகத்தினால் புறந்தள்ளப்பட்டவராக, நிராகரிக்கப்பட்டவராக அவரே இருக்கிறார். இறுதிக் காட்சியில், அந்தப் பெண்மணி தனியாக நடந்து செல்வார், கையில் கேக் வைத்திருப்பார், அவர் பின்னால் சென்றுகொண்டிருந்த ஒரு நாய்தான் அந்தக் கேக்கைச் சாப்பிடும், அந்த நாயையும் கூட அழைத்துக்கொண்டு அந்தப் பெண் செல்வார், ஷேக்ஸ்பியரின் கவிதை வரிகள்தான் இங்கு கடைசியில் இடம்பெறும். 

அதேபோல, பரோமிதாரில் வருகிற கதாபாத்திரம் கவிதையில் நாட்டமுள்ள பெண். அதனாலேயே மனச்சிதைவிற்கு உள்ளாகிற பெண். நீங்கள் பரோமிதார் ஏக் தீனில் பார்த்தீர்களேயானால், மாமியாரையும் மருமகளையும் இணைக்கிற ஒரு விஷயம் கவிதை. ஆம், கவிதையில் அந்த இருவருமே ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அதுபோல, பெண்களுடைய கவிதை உணர்வு, மிகப்பெரிய வீச்சாகவே, அவரது எல்லா படங்களிலும் ஊடாடிக்கொண்டே இருக்கும். 
 பொதுவாக இசை, தாகூரை எடுத்துக்கொண்டாலும், சத்யஜித் ரேவை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் எல்லோருமே இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்கள். சத்யஜித் ரேவின் படங்களுக்கு பெரும்பாலும் அவரேதான் இசையமைப்பாளர். அவரேதான் இசைக்குறிப்புகளை எழுதுவார். படத்தோடு இணைந்த ஒன்றாகத்தான் அவர்கள் இசையையும் பயன்படுத்துவார்கள். காட்சிகளின் மனநிலையையும், உணர்வுகளையும் கடத்துவதற்கு அந்த இசையைப் பயன்படுத்துவார்கள். ரம்மியமான, மென்மையான, இசை பின்னணியில் ஒலிக்கும். அபர்ணா சென்னினுடைய எல்லா படங்களிலுமே இந்த விஷயம் வரும். 

அதேபோல பாடல்களையும் குறிப்பிட வேண்டும். சாஸ்த்ரிய சங்கீதம், அவரது படங்களின் ஒரு அம்சமாகவும் இருக்கும். பொதுவாகவே பெங்காலிகள் சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் எனக்கொரு ஈர்ப்பு உண்டு. பெங்காலிகளுக்கு எப்பொழுதுமே ஒரு பெருமையுணர்வு உண்டு. ”தாகூர் எங்களவர், தாகூர் எங்கள் மண்ணில் பிறந்தார்” என்ற பெருமைதான் அது. நிச்சயமாக, அந்த பெருமிதத்திற்கு உரியவர்கள்தான் அவர்கள். சமீபத்தில் அனுராக் பாசு என்ற இயக்குனர், தாகூருடைய சிறுகதைகளை வைத்து சீரிஸ் ஒன்று எடுத்திருக்கிறார். நெட்ப்ளிக்ஸில் இது பார்க்கக்கிடைக்கிறது. 26 கதைகள் வருகின்றன. அவற்றைப் பார்க்கும்பொழுது, தாகூர் என்ன அழகாக, மனித உணர்வுகளைப் பற்றிப் பேசியிருக்கிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. இங்கு நாம் ஜெயகாந்தனைப் பார்க்கிறோம், சுந்தர ராமசாமியை வாசிக்கிறோம், தி.ஜானகிராமனை வாசிக்கிறோம், ஆனால், தாகூர் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த மனிதன். நூற்றியிருபது வருடங்களுக்கு முன்பு எழுதியவர். மிகச்சிறந்த கதைகளை எழுதியிருக்கிறார். எவ்வளவு கூர்மையான கவனிப்புத்திறன் கொண்டிருக்கிறார்? எவ்வளவு வரலாற்று ரீதியிலான பிரக்ஞைபூர்வ அறிவு கொண்டிருந்திருக்கிறார், மனித உணர்வுகள் சம்பந்தமான புரிதலில் எவ்வளவு பெரிய மேதைமை, என்பதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். அற்புதமான கவிதைகள் எழுதிய தாகூரின், சித்தாந்தங்களைப் பாருங்கள். வாழ்நாள் முழுக்க தாகூர் அற்புதமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார். 

அவர் தேசியவாதத்திற்கு எதிரானவர், அவர் தேசப்பற்றிற்கு எதிரானவர், அவர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர், அவர் மனிதகுலத்திற்கானவர், மனிதநேயத்திற்குரியவர், அவர் பகுத்தறிவுக்கானவர். எனவே, அவரைப் பற்றி அம்மாநிலத்து மக்கள் பெருமைப்படுவதற்கு நியாயங்கள் இருக்கின்றன. அதேபோல சத்யஜித் ரே. வங்காளம் ரேயைக் கொடுத்தபூமி, சத்யஜித் ரே, மிருணாள் சென், ரித்விக் கட்டக் போன்ற அரசியல் கடப்பாட்டுடன் திரைப்படங்கள் எடுக்கக்கூடிய படைப்பாளிகள் இந்தியாவின் பிற பகுதிகளில் யார் இருக்கிறார்கள் என்று அடையாளம் காட்ட முடியுமா? இல்லை. எனவே, அந்த மரபினுடைய கனிதான் அபர்ணாசென். 

ஆக, அந்த சங்கீத ஞானம், அந்த கவித்துவ ஓடை, அந்த அழகியல் உணர்வு, அரசியல் தார்மீக உணர்வு, எல்லாமே அபர்ணா சென்னிடம் உண்டு. அவரது அனைத்து படங்களிலும் இதைக் காணலாம். முதல் படம் செளரங்கி லேன், சமீபத்தில் வெளியான அவரது கடைசி படம், காய்ரே பாய்ரே ஆஜ், ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பாருங்கள், அவர் ஒரு ஒருங்கிணைந்த திரைப்படைப்பாளி மட்டுமல்ல, ஒரு மனிதராகவும், மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர். மனித மாண்புகள் கொண்டவர். இந்த மதிப்புகள் எல்லாம், இந்தப் படத்தின் ஒவ்வொரு சட்டகங்களிலும் விரவியிருக்கவே செய்கின்றன. 

அம்சவள்ளி: அபர்ணா சென், பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை, பெண்களுக்கு முன்னுரிமை தரக்கூடிய கருத்துக்களைத் தன் படங்களில் பேசுகிறார். மறுக்க முடியாது. ஆனால், இந்தப் படத்தில் பிம்லா கதாபாத்திரம் தலித் சமூகத்தைச் சார்ந்தவராகக் காட்டப்படுகிறார், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் மெய்ப்புப் பார்ப்பவராகவும் உள்ளார், சந்தீப் கதாபாத்திரம் வந்தபிறகு, அவருடன் இருப்பது, அவரைப் பார்த்துக்கொள்வது, அவருக்குப் பணிவிடைகள் செய்வது என அந்த வேலைகளில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொள்கிற கதாபாத்திரமாக பிம்லா இருக்கிறார் என்பதைத் தவிர்த்து, பிம்லாவிற்கான அழுத்தமான பாத்திரப்படைப்பு என்பது க்ளைமேக்ஸைத் தவிர்த்த பகுதிகளில் பார்க்கமுடிவதில்லை. அதுபோலவே, எனக்கு சில தர்க்க ரீதியான கேள்விகளும் இந்தப் படம் பார்க்கிறபொழுது எழுகிறது. அது தனக்கொரு பிரச்சினை வருகிறபொழுது, தனக்கு துரோகமிழைத்த சந்தீப்பையே மீண்டும் சென்று சந்திப்பதையும், அவரிடம் உதவிக்கு நிற்பதையும் எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. சந்தீப்பை மீண்டும் பிம்லா நம்புவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

யமுனா: இங்கு நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். கலையமைப்புகள் ஒருங்கே அமையப்பெற்ற மிகச்சிறந்த படம் என்ற வரிசையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் படத்தைக் கூட வைக்கமுடியாது. அதேபோல, நாம் இப்போது பார்க்கிற காய்ரே பாய்ரே ஆஜ் படத்தையும் வைக்கமுடியாது. ஏனென்றால், சந்தீப்பிற்கும், பிம்லாவிற்கும் இடையேயிருக்கிற உறவு. பின்பு, அவரைக் கொலை செய்வது வரை செல்வது, பின்பு நிகில் ஒரு நெருக்கடியான சூழலுக்குள் சிக்கிக்கொண்ட பொழுது, யார் தன்னை ஏமாற்றினானோ, அவனையே வீட்டிற்கு அழைத்துவந்துப் பேசுவது, அவனிடம் உதவி கேட்பது, அவனை நம்புவது, இதையெல்லாம் பார்க்கிறபொழுது, தர்க்கரீதியிலான விஷயங்கள் குறிக்கிடுவதுபோல உள்ளது. 
நீங்கள் சத்யஜித் ரேயின், சாருலதா படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அல்லது, அபர்ணா சென்னின் ஆரம்பகாலப் படங்களையேகூட எடுத்துக்கொள்ளுங்கள். பரமா, பரோமிதா ஏக் தீன், அதேபோல மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் என இவையெல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். பெண்கள் புத்திக்கூர்மை மிக்கவர்களாக இருப்பார்கள். சுய பிரக்ஞை உடையவர்களாகக் காட்டப்படுவார்கள். ஆனால், காய்ரே பாய்ரே ஆஜ் படத்தில் வருகிற பெண், மிகவும் அப்பாவியாக, எந்தவிதமான சுய அடையாளங்களும் இல்லாத கதாபாத்திரமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. 

இது ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குகிறோம் என்ற அளவிலே கூட, அந்தக் கதாபாத்திரம் முழுமையாக வளர்ச்சியடையவில்லை. வரலாற்றில், சமகால அரசியலை மையப்படுத்தி, அரசியல் இடையீட்டோடு ஒரு படத்தை அபர்ணா சென் இயக்கியிருக்கிறார் என்பதைத் தவிர்த்து, அவரது இயக்கத்திலேயே வெளிவந்த மிகச்சிறந்த படங்களின் வரிசயையை எல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது, அந்தக் கதாபாத்திர வளர்ச்சி என்றளவில்கூட, பிம்லா கதாபாத்திரம் முழுமையடையவேயில்லை. மாறாக, நிகில் கதாபாத்திரம் அருமையாக உருவாகிவந்திருக்கிறது. இந்தப் படத்திலேயே மிகச்சிறந்த பாத்திர படைப்பு என்றால் அது நிகில் கதாபாத்திரம்தான். 
அதேபோல, சந்தீப் கதாபாத்திரம், கள்ளம், வஞ்சக உணர்வு, ஏமாற்றுதல், வாய்வீச்சாளன் என்பதற்கேற்ப உருவாகியிருக்கிறது. இரு கதாபாத்திரங்களும் உருவாகி வந்த அளவிற்கு, பிம்லா கதாபாத்திரம் உருவாகவில்லை. 

அம்சவள்ளி: அபர்ணா சென் இதற்குமுன் கொடுத்த பேட்டிகளில், அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், ”சத்யஜித்ரே காய்ரே பாய்ரே படமெடுக்கும்பொழுது அதில் வருகிற பிம்லா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது நானாகத்தான் இருந்தேன். ஆனால், பல்வேறு காரணங்களினால் என்னால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை” என்கிறார், இதைவைத்துப் பார்க்கும்பொழுது, அவர் பிம்லா கதாபாத்திரத்தை, தான் இயக்குகிற படத்தில் உள்ளே கொண்டுவருகிறபொழுது, எவ்வளவோ விஷயங்களை மாற்றியமைத்திருக்கலாம், அந்தக் கதாபாத்திரம் சார்ந்து விவாதித்திருக்கலாம், அதை அபர்ணா சென் தவறவிட்டிருப்பதுபோலவே தோன்றுகிறது. 

யமுனா: ஆம், உண்மைதான். அபர்ணா சென், பிம்லா கதாபாத்திரத்திற்கு சரியான முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். என்னவென்றால், பிம்லா, சந்தீப்பைச் சுட்டுக்கொல்லும் அளவிற்குச் செல்கிறாள். பிம்லாவும் வெளியுலகத்திற்குப் போகிறாள், உடன் நிகில் இருக்கிறார், நிகில் பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார், பிம்லாவிற்கான சுதந்திரம் இருக்கிறது, அவளுக்கு நக்ஸலைட் அரசியல் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும், அவளுக்கு இந்துத்துவா அரசியல் என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். மேலும், பிம்லா தலித் சமூகத்திலிருந்து வந்திருப்பவர். இந்தப் படத்தில் பார்த்தீர்களென்றால், பிம்லா கதாபாத்திரம் தலித் என்கிற விஷயத்தை காட்சிகளின் வழி உணர்த்துகிறார். சந்தீப்பே கூட, பிம்லாவை நிராகரிக்கும் பொருட்டு இப்படிச் சொல்கிறான், “நீயொரு தலித் பெண், நான் பிராமிண்” அடுத்து, நிகிலுக்கும் சந்தீப்பிற்குமான உரையாடலில் கூட, ”நீ உண்மையிலேயே விரும்பித்தான் பிம்லாவை மணந்துகொண்டாயா? இல்லை ஏதேனும் நிர்ப்பந்தத்திற்காக பிம்லாவைத் திருமணம் செய்துகொண்டாயா?” என்று கூட இருவரும் பேசிக்கொள்கிறார்கள். 

அம்சவள்ளி: அதே விவாதத்தில் இன்னொரு விஷயம் கூட வருகிறது, நீ உன்னை லிபரலாகக் காட்டிக்கொள்ள வேண்டுமென்பதற்காக, தலித் பெண்ணை பார்ப்பன பெண்ணாக மாற்றி, அந்தப் பெண்ணைப் படிக்கவைப்பது, அவளை உங்கள் வாழ்க்கைக்குள் ஏற்றுக்கொள்வது போன்ற உரையாடல். 

யமுனா: ஆம்., ஆம்., அபர்ணா சென்னின் படங்களில் வருகிற பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே, அதிகபட்சமாக சுய விழிப்புணர்வு கொண்ட கதாபாத்திரங்களாகவே இருக்கும். அதிக அரசியல் விழிப்புணர்வு பெற்ற கதாபாத்திரங்கள். அதுமட்டுமல்ல, தங்களுடைய சொந்த சுதந்திரத்தையும், சொந்த அரசியல் நிலைப்பாட்டையும், தேடிச்செல்லக்கூடிய கதாபாத்திரங்கள். வலிமையான கதாபாத்திரங்கள். ஆனால், இந்தப் படத்தில் பிம்லா கதாபாத்திரம் அப்படி உருவாக்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான், மிக நேர்த்தியான படங்களின் வரிசையில் சேரவேண்டிய இந்தப் படம், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த படம் என்றளவில் நின்றுபோய்விடுகிறது. 

Aparna Sen's Ghware Baire Aaj is just an armchair political statement

ஒரு திரைப்படப் படைப்பாளி எனும் அளவில், இது அவரது சிறந்த படம், அல்லது இல்லை என்றும், பிம்லா கதாபாத்திர உருவாக்கத்தில் பிரச்சினைகள் என சிறு சிறு குறைகள் இருந்தாலும்கூட, வரலாற்று ரீதியில் இது மிக முக்கியமான படம். இதுவொரு ஆவணம். ஆம். இது மிக முக்கியமான வரலாற்று ஆவணம். 

கடந்து பதினைந்து ஆண்டுகால இந்திய சினிமாவில் நீங்கள் பார்த்தீர்களேயானால், ஒரு எழுபத்தைந்து சதவீதமான படங்கள், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவுப் படங்கள் வந்திருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க சித்தாந்தத்தை அடியொற்றி படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றிற்கே தேசிய விருதுகள் எனும் அங்கீகாரமும் கிடைத்திருக்கின்றன. ஆனால், மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவங்கள், பா.ஜ.கவினரால் ஒடுக்கப்பட்ட மக்களின்மீது, சிறுபான்மையின மக்களின்மீது, இடதுசாரிகளின் மீது, இடதுசாரிக் கலைஞர்கள் மீது, எழுத்தாளர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான, திரைப்படம் மற்றும் காட்சியூடகம் சார்ந்த, ஆவணப்படுத்துதல் என்பது நிகழவேயில்லை. எனில், அந்தவகையில், வரலாற்று ஆளுமைகள், வரலாற்றுச் சம்பவங்கள், அவற்றை முன்வைத்து, வரலாற்று ரீதியில் ஒரு இடையீடு செய்வதுபோல, அரசியல் விழிப்புணர்வோடு படம் எடுக்கவேண்டிய தேவை இன்றைக்கு அதிகமாகவே இருக்கிறது. அப்படிப் பார்க்கும்பொழுது, கடந்த பதினைந்து ஆண்டுகளில் வந்த, மிக முக்கியமான அரசியல் சார்ந்த திரைப்படமாக, அரசியலை இடையீடு செய்த படமாக, இந்த காய்ரே பாய்ரே ஆஜ் படத்தைச் சொல்லலாம். அந்த முக்கியத்தும் இந்தப் படத்திற்கு உண்டு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

அம்சவள்ளி: எப்பொழுதுமே, ஆர்.எஸ்.எஸ் பற்றியோ பா.ஜ.க பற்றியோ ஒரு முக்கியமான கலை ஆவணம் வெளிவருகிறது என்றால், தணிக்கைக்குச் செல்லும்பொழுது அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். உதாரணத்திற்கு தமிழில் ‘ஜிப்ஸி’ படத்தையே எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், அரசுக்கு வேண்டிய ஆட்களே, தணிக்கையின் முக்கிய பதவிகளில் உள்ளனர். ஆனால், அபர்ணா சென் இந்த சென்சார் குறித்துச் சொல்கிறபொழுது, இந்தப் படத்திற்கு எந்த வெட்டும் இல்லாமல்தான், தணிக்கையிலிருந்து சான்றிதழ் வந்தது என்கிறார். ஆளும் வர்க்கத்தை தன் கலைவழி எதிர்த்த கெளரி லங்கேஷ், தபோல்கர், கல்புர்கி போன்றோர் கொல்லப்படுகின்றனர். இன்னொரு பக்கம், ஆளும் வர்க்கத்தைத் தன் படைப்பின்வழி கேள்விக்குட்படுத்திய படம், எந்தவொரு வெட்டும் இல்லாமல் வெளியாகிறது. இது முரணாகவும் உள்ளது. இது எப்படி சாத்தியமானது?

Ghawre Baire Aaj – Indian Cultural Forum
 
யமுனா: இந்திய தணிக்கை வாரியம் என்பதில் பிராந்திய தணிக்கை வாரியம் உள்ளது. தணிக்கை வாரிய அலுவலகங்கள் இயங்கும் முறையை முதலில் தெரிந்துகொள்வோம். மூன்று நான்கு மாநிலங்களுக்குச் சேர்ந்தாற்போல ஒரு தணிக்கை வாரிய அலுவலகம் உள்ளது. அல்லது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த மாநிலத்திலேயே, அங்கு எடுக்கிற படங்களை தணிக்கை செய்துகொள்ளும் வசதியுடன் தணிக்கை அலுவலகங்கள் இயங்குகின்றன. உதாரணத்திற்கு தமிழ் திரைப்படங்களைத் தணிக்கை செய்ய, தமிழ்நாட்டிலேயே தணிக்கை அலுவலகம் இயங்குகிறது. அதேபோலத்தான் கேரளாவிற்கும். தமிழ்நாட்டில் ராஜு முருகனின் ‘ஜிப்ஸி’ எனும் திரைப்படம், அதேபோல, அரவிந்தனின் கோவை கலவரம் சம்பந்தமான ‘தெளிவுப் பாதையின் நீச தூரம்’ திரைப்படம், போன்றவைகளெல்லாம் தணிக்கை வாரியத்திற்குள்ளேயே இருந்த, எஸ்.வி.சேகர், கெளதமி போன்றோரால்தான் மறுக்கப்பட்டது. கெளதமி, எஸ்.வி.சேகர் என இருவருமே பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள். அதேபோல ஜே.என்.யூ பிரச்சினையை முன்வைத்து பார்வதி நடித்த படத்திற்கு கேரளாவில் தணிக்கைச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள். அப்படித் தரமறுத்தவர்கள் பா.ஜ.க ஆட்கள். 

அப்படியெனில், தணிக்கைத் துறையில் யார் இருக்கிறார்களோ, அவர்களுடைய செல்வாக்கு எப்படியிருக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போலத்தான் படங்களும் பிரச்சினைகளுக்குள்ளாகின்றன. ஆனால், வங்காளத்தில் இன்னும் பகுத்தறிவு வாய்ந்த, இடதுசாரிக் கலாச்சாரம் உள்ளது. அது அரசு நிறுவனங்களிலும் இருக்கிறது. மம்தா பானர்ஜியை நான் உண்மையிலேயே, இடதுசாரிகள் அல்லது கம்யூனிஸ்ட்காரர்கள் பார்க்கிற பார்வையிலிருந்து பார்ப்பதில்லை. இடதுசாரிகள் முப்பத்தைந்து ஆண்டு காலங்களாக எப்படி ஆட்சி நடத்தினார்கள் என்பது தொடர்பான விமர்சனங்கள் இருக்கிறது. அந்த விமர்சனத்தின் அரசியல் மொழிதான் மம்தா. அவரை நாம் வலதுசாரி சீரழிவு அரசியல்வாதி என்று மதிப்பிட முடியாது. 

சமீபத்தில் அமர்த்தியா சென், மம்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியிருப்பார். மிக வலிமையான பெண் என்று. அதேபோல, நந்திகிராம் பிரச்சினையில் பார்த்தீர்களேயானால் மம்தா, அபர்ணா சென் போன்றவர்கள், அந்த மண்ணின் கலைஞர்கள், அவர்களுக்காக நிற்கிறார்கள். அதேபோல சி.ஐ.ஏ தொடர்பான மம்தாவின் நிலைப்பாடு. இந்து முஸ்லீம் பிரச்சினை தொடர்பான மம்தாவின் நிலைப்பாடு. இந்த அடிப்படையில்தான் நாம் அதனைப் பார்க்க வேண்டும். அதாவது தாராளவாத இடதுசாரி அறிவொளியுக கலாச்சாரம் இன்றும் வங்காளத்திலும், வங்காள தணிக்கை வாரியங்களிலும் வாழ்கிறது. அதனால்தான் அபர்ணா சென் வாழ்கிறார். அவரது படங்களும் வாழ்கின்றன.