ஆர்டிகிள் பதினைந்தும் தலித் சினிமாவும்

`ஆர்டிகிள் 15` இந்தி சினிமாவில் ஒரு முக்கியமான பாடமாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் இந்துத்துவ சக்தியான பாஜக மீண்டும் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கும் இந்நேரத்தில், ஆர்டிகிள் 15 மாதிரியான ஒரு படத்தை எடுத்து வெளியிட்டிருப்பதற்காக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான அனுபவ் சின்ஹாவை பாராட்டவேண்டியிருக்கிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேச மாநிலம், படான் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது இப்படம்.

இரண்டு சிறுமிகளை தூக்கில் தொங்கவிடப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு வரும் காவல்துறை உயர் அதிகாரி அயன் ரஞ்சன், முதல் தடவையாக ஊருக்குள் வரும்போது, தண்ணீர் பாட்டில் வாங்கச் சொல்கிறார். ஆனால் அவருடனிருக்கும் காவல் துறை அதிகாரி, `இந்த கடை தலித் மக்களுடையது. அதனால் தண்ணீர் பாட்டில் தீட்டு பட்டுவிட்டது` என்று கூறி வாங்க மறுப்புத் தெரிவிக்கிறார். 21ஆம் நூற்றாண்டில்கூட நமது இந்தியாவின் நிலை இதுதான் என்பது நம்மைச் சுடும் உண்மைக் காட்சியாக அந்தச் சம்பவத்தைப் பார்க்க தோன்றுகிறது.

காவல்துறை அதிகாரிகளின் சாதிய கண்ணோட்டம் தலித் மக்களை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதையும் அங்கு நடைபெறும் விசாரணையில் தெரிகிறது.

மூன்று ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக மூன்று சிறுமிகளைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அதில் இரண்டு சிறுமிகளைத் தூக்கில் தொங்கவிட்டது மட்டுமல்லாமல், அவர்கள் தன்பால் ஈர்ப்பாளர்கள், அதனால் அவர்களது பெற்றோர்களே அவர்களை ஆணவக் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்து வழக்கை முடிக்கப் பார்ப்பார்கள்.

அயன் ரஞ்சன் நடத்தும் விசாரணையில், உள்ளூரில் இருக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் தொடர்பு இருப்பது தெரியவருகிறது.


படத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு நாயிற்கு ரொட்டி ஊட்டிவிட்டு அன்பு காட்டும் காட்சியைப் பார்க்கும்போது, நம்மை அறியாமலே, ஒரு விலங்குகளிடம் காட்டும் அன்பை மனிதர்களிடம் காட்ட மாட்டார்களா? என்ற வினா தொக்கி நிற்கிறது. மேலும் அந்த காட்சியின் தாக்கம், `மனிதனை நினை கடவுளை மற` என்று பெரியார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

படத்தில் வரும் தலித் போராளி கதாபாத்திரம் ரோகித் வெமுலாவை நினைவூட்டுகிறது. ஆரம்பத்தில் சொன்னதுபோல இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம்தான். படத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் உண்மைதான். ஆனால் அவற்றை ரசிக்கத்தான் முடியவில்லை.

இதனிடையே காணாமல்போன சிறுமியைத் தேடும் படலம் ஒருபக்கம் தொடர்கிறது. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் அப்பகுதியில் உள்ள குட்டைக்கு அருகில் அந்த சிறுமியின் ஒரு செருப்பு கண்டெடுக்கப்படுகிறது.

உடனே அந்த குட்டையில் இறங்கித் தேடலாம் என்றால் ஆட்கள் கிடைக்கவில்லை. தலித்துகள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் இருக்கின்றனர். வேலையாட்கள் பற்றாக்குறையினால் தேடும் படலம் நீளுகிறது. பல்வேறு இடங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு, சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆரம்பத்தில் குட்டையில் இறங்க மறுப்பு தெரிவிக்கும் காவல்துறையினர் பின்னர் வேறு வழியின்றி இறங்கித் தேட தொடங்குகின்றனர்.

இதனிடையே மூன்று தலித்துகள் கோயிலுக்குள் கால் வைத்துவிட்டதாகக் கட்டிவைத்து அடிக்கப்படுகிறார்கள். கோவிலுக்குள் யானையை வைத்து ஆசீர்வாதம் வாங்கும் இவர்கள், மனிதன் கால்வைத்தால் கட்டிவைத்து அடிக்கிறார்கள்.

ஒருகட்டத்தில் மேலிடத்தின் அழுத்தம் காரணமாக வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. நான் இந்த இடத்திலிருந்து செல்வதற்கு முன் அந்த சிறுமியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலினால் ரஞ்சன் மிகவும் தீவிரமாகத் தேடுதல் வேட்டையைத் தொடருகிறார்.

குட்டைக்கு அருகில் உள்ள காட்டில் தேடுதல் வேட்டை தொடர்கிறது. தலித் போராளி என்கவுண்டர் செய்யப்படுகிறார். இது தெரிந்த அவரது காதல் மனைவி கதறி அழுகிறாள். நீண்ட தேடுதலுக்குப் பிறகு நடுக்காட்டில் குத்துயிரும் கொலையுயிருமாக சிறுமி கிடக்கிறாள். அவளை மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

ஒருபக்கம் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மாற்றி எழுதச் சொல்லி மருத்துவருக்கு மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக மாற்றி எழுதப்பட்ட அறிக்கை மீண்டும் திருத்தி எழுதப்படுகிறது. ரஞ்சன் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். தனது அனைத்து சாட்சிகளையும் ஒப்படைக்கிறார்.

அரசியல் ரீதியாகத் தலித்-பார்ப்பனர் கூட்டு என்ற ஒரு நாடகம் நடைபெறுகிறது. மறுபுறம் போலி சாமியார்களின் அட்டகாசத்தைப் பதிவு செய்யும் விதமாக ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். சாமியாரிடமிருந்து ஒரு கைப்பேசி அழைப்பு வரும். போலீஸ் அதிகாரி தனது கைப்பேசியை எடுத்து ரஞ்சனிடம் கொடுக்கும்போது சாமியாரே பேசுகிறார் என்று ஒரு பணிவுடன் கூறுகிறார். ரஞ்சன் இந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்கிறார் என்று தெரிந்ததும் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதுடன் விசாரணையைத் தொடர வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.

தலித் போராளி என்கவுண்டரில் கொல்லப்படுகிறார். ஊரில் கலவரம் வெடிக்கிறது. பார்ப்பனர் அரசியல் தேர்தலில் வெற்றிபெறுகிறார். அனைத்தும் தெரிந்தும் கையறு நிலையில் நிற்கிறார் ரஞ்சன். தேடுதல் படலம் தொடர்கிறது. பன்றி குட்டையைத் தாண்டி காட்டில் தேடுதல் வேட்டை தொடர்கிறது. கிட்டத்தட்ட அந்த சிறுமி மரண தருவாயில் காட்டில் இருக்கும் குழாயில் சுய நினைவிழந்து கிடக்கிறாள்.  


உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்படுகிறாள். ஒரு நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஆசுவாசம் அடைகின்றனர் காவல்துறை அதிகாரிகளும் தலித் மக்களும்.

கடைசியாக ரோட்டு கடையில் அனைத்து காவலர்களும் ரொட்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, நீங்கள் என்ன சாதி என்று அந்தக்கடையில் இருக்கும் பெண்மணியிடம் கேட்கிறார். சாப்பிடும் அனைவரும் உடனடியாக சாப்பிடுவதை நிறுத்திவிட்டுப் பார்க்கின்றனர். அந்த நேரத்தில் ஒரு லாரி கடந்து செல்லும் அந்த சத்தத்தில் அந்த பெண்மனி சொல்லும் சாதியின் பெயர் மறைந்துபோகிறது. அது போல் இந்த மண்ணில் உள்ள அனைவருக்கும் ஒரு நாள் சாதி மறைந்தாள் எவ்வளவு நன்றாக இருக்கும்.

சினிமாவை சினிமா என்று பார்க்கவேண்டியதுதானே அதை எதற்குத் தலித் சினிமா, மாற்று பாலின சினிமா என்று பிரிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கேட்கின்றனர்.  

பார்ப்பனர், தலித், இடைநிலை சாதி என பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுடன் சமூகம் இருக்கும்போது, சினிமா மட்டும் ஏன் அப்படி இருக்கவேண்டும். முதலில் சமூகம் சமமாக மாறவேண்டும். சமூகத்தில் பாகுபாடுகள் முற்றிலும் களையப்படும் போது சினிமாவிலும் பிரிவுகள் தகர்க்கப்படும்.

தலித்துகள்தான் தலித் சினிமா எடுக்க வேண்டும் என்று சிலர் குரல் எழுப்புகின்றனர். அதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ரா ஒன் போன்ற படத்தை எடுத்த இயக்குநர் ஆர்டிகிள் 15-ஐ எடுக்கும்போது நாம் அதை ஆதரிக்க வேண்டும். அதில் ஏதேனும் குறை இருந்தால் சுட்டிக்காட்டலாம். ஆனால் தலித்துகள் மட்டும்தான் தலித் படம் எடுக்க வேண்டும் என்று கூறுவதையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கடைசியாக ஒரு விசயம் சொல்ல வேண்டுமானால், மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம் இந்த நாட்டில் இன்னமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. 1993ஆம் ஆண்டே மனித கழிவை மனிதன் அள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் சட்டம் இயற்றிவிட்டது. ஆனால் இன்று வரை அந்த அவலம் நிகழ்த்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை வரை தமிழகத்தில் மட்டும் 144 பேர் உயிர் இழந்துள்ளனர். அதிக உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தமிழ்நாடு முதலிடத்திலிருக்கிறது. இரண்டாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் இருக்கிறது. அப்படியான மனித கழிவை மனிதனே அள்ளும் அவலத்தையும் இப்படத்தில் காட்டி, வந்தேமாதரம் பாடலை ஒலிக்கவிட்டு நவீன இந்தியாவின் உண்மை நிலையைக் காட்டுகிறார் அனுபவ் சின்ஹா.