குருதிப்புனல் – நிழலும் நிஜமும்

-மருதன் பசுபதி

ஒரு திரைப்படம் என்ன நோக்கத்தோடு எடுக்கப்படுகிறது, அதன் அரசியல் நிலைப்பாடு, சமூகத் தேவை என்ன என்பதை கவனிப்பது எவ்வளவு முக்கியமோ அப்படம் பார்வையாளர்களிடத்தில் எவ்வித தாக்கத்தை விவாதத்தை புரிதலை ஏற்படுத்தியது என்பதையும் திரைப்படம் என்னும் ஊடகம் எந்தளவு நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது என்பதையும் பார்ப்பது முக்கியம். குருதிப் புனலின் முலப்படமான Drokkal ன்( Times of betrayal ) கதாசிரியரும் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கோவிந்த் நிகாலினி இப்படம் உருவான கதையை இப்படி பகிர்கிறார். 

“தீவிரவாதத்தின் தோற்றுவாய் என்ன என்பதைப்பற்றிய கேள்வியிலிருந்து உருவானதல்ல இத்திரைப்படம். மாறாக, தீவிரவாதம் எப்படிப்பட்ட சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாயினும் அது வன்முறையால் நிகழ்த்துமிடத்து மனிதர்களின் வாழ்வில் அது ஏற்படுத்தும் சிதைவுகளை இழப்புகளை வலியை எடுத்துக்காட்டும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே.”

A remake that is original: PC Sreeram retrospect on 25 years of ' Kuruthipunal' - The Hindu

இயக்குநர் தெளிவாக தன் நோக்கத்தை வெளிப்படுத்தி விட்டார். ஆனால் அதற்காக அவர் உருவாக்கிய கதையும் களமும் அதை நிறைவேற்றியதா என்பதை ஆராய வேண்டும். த்ரோக்காலின் திரைக்கதையைத் தழுவி தமிழில் 'குருதிப்புனல்' என கமல்ஹாசன் எழுத அதை இரு மொழிப்படங்களாக பிசிஸ்ரீராம் இயக்கியிருக்கிறார். தெழுங்கில் 'துரோகி'. ஒப்பீட்டளவில் இரு படங்களும்(இந்தி, தமிழ்) அதனதனளவில் நிறைவான படங்களே! சுருக்கமாகச் சொன்னால் துரோக்கால் கதையிலும் நடிப்பிலும் யதார்த்த சினிமாவாகவும் ’குருதிப்புனல்’ திரைக்கதை உரையாடல் மற்றும் திரை மொழியில் முத்திரை பதித்ததாகவும் விளங்குகின்றன.

ஆனால், அடிப்படை கதைக்கருவே பலவீனமானதாக இருப்பதால் அதன்மேல் எழுப்பப்பட்ட திரைக்கதையும் படமும் மற்ற எல்லா வகைகளில் சிறந்து விளங்கிய போதிலும் அதை முழுமையானதாக கருத முடியவில்லை. தீவிரவாதத்தின் தோற்றுவாயை ஆராய வேண்டுமென்பதில்லை. ஆனால் ஆயுதமேந்துபவனின் நிலையைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அவன் கருத்தை சொல்ல அனுமதிக்க வேண்டும். அவனை சரியாக புரிந்து கொண்டு அதைப் பதிவு செய்ய முயல வேண்டும். மக்கள் விடுதலைக்காக துப்பாக்கி ஏந்திய உன்னதத் தலைவர்களை நாம் அறிவோம். அதை வன்முறை என்று மேம்போக்காக சொல்லி விடமுடியுமா? பொறுக்கிக்கும் போராளிக்கும் கலப்புத் திருமணம் செய்ததால் பிறந்த பிள்ளை என சொல்வதே அபத்தம். அப்படி இருவர் இணைவார்களா ? அவர்களின் பிள்ளையைப் பற்றிய படம் தான் நீங்கள் எடுக்க நினைத்ததா ? அப்படி என்றால் அதற்கான திரைக்கதை இதுதானா ? இது போன்ற அடிப்படைகள் தெளிவற்றிருக்கின்றன.

'நான் என் போலீஸ் அங்கியை கலட்டி வைத்துவிட்டு உணர்வுகளை கலையாமல் எழுதும் கடிதம் இது. அரசியலும் வன்முறையும் ஒப்பந்தம் செய்து கொண்டு அக்னி சாட்சியாக ஜோடி சேர்ந்து விட்டன. அந்த ஜோடியின் சந்ததிகள் நாடெங்கும் ஊழல் தீ வளர்த்து அதில் நேர்மையையும் தியாகம் செய்கின்றனர். விரைவில் நேர்மையை வழிபடுவோர் தீண்டப்படாதவராய் பின்தங்கிப் போவர் என்னும் பயம் பலரைப்போல் எனக்கும் உண்டு. நீதி கேட்கும் ஆராய்ச்சி மணிகள் நாக்கருந்து போய் அழகு பொருட்களாகி விட்டன. ஆகையால் அரசாங்கத்தின் கவனம் ஞாயத்தின் பக்கம் திரும்ப துப்பாகிகள் வெடித்தன. தீவிரவாதம் பேசி துப்பாக்கி ஏந்திய சில நேர்மையான போராளிகளையும் ஊழல் தீப்பொறிகள் சுட்டுவிட்டன. அத்தகைய தீப்பொறிகளில் ஒருவன் தான் பத்ரி. அவனால் பெருக்கெடுத்த ஒரு குருதிப்புனலில் நனைந்த அன்று முதல் என் வாழ்க்கை மொத்தமாய் மாறிப்போனது' என்ற கடிதத்தின் வாயிலாக துவக்கத்திலேயே இப்படத்தின் சித்தாந்தத்தை விளக்கி விடுகிறார் கமல். 


போராளி அதிகாரி அரசாங்கம் என்ற கூர்மையான முப்புள்ளிகளின் மையத்தில் நேர்மை துரோகம் போன்ற விழுமியங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதையால் தான் பலவீனப்படுகிறது இத்திரைப்படம். ஆனால் ஆரம்பத்தில் கோவிந்த் செய்ய நினைத்தது வேறு. அதனால் உந்தப்பட்ட கமலின் வசனங்கள் அரசாங்கத்தை தூக்கிப்பிடித்தவாறே தீவிரவாதியின் குரலாகவும் ஒலிக்கறது. நல்ல நோக்கத்தோடு துவங்கிய படைப்பு பகுதிகளாக பலவற்றை சாதித்தும் மேற்பட்ட காரணங்களால் நீர்த்துப் போனது.

Kuruthipunal (1995) - Photo Gallery - IMDb

இக்கடிதத்தில் தீப்பொறிகள் என்று குறிப்பிடப்படும் நாசரின் கதாபாத்திரத்தைப் பற்றிய எவ்வித தெளிவும் படத்தில் தென்படவில்லை. தவிர கதைக்களம் எது என்கிற குழப்பம் மணிரத்னம் படங்களின்(குரு,ராவணன்) நிலம் பற்றிய குழப்பத்தைப் போல இதிலும் இருக்கிறது. படத்தின் பிரதானப் பாத்திரங்கள் தவிர மற்றவர்கள் பேசும் தமிழ் அந்நியமானதாக இருப்பதற்கு காரணம் அவை தெலுங்கில் பேசி தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டதால் தான்.

இப்படத்தின் உள்ளடக்கத்தை ஆராய்ந்தோமானால் நக்ஸலைட்டுக்கும் (படத்தில் அவ்வாறு குறிப்பிடவில்லை) காவல்துறைக்குமான( அரசாங்கக் கருவி) போராக காட்சியளிக்கும். அதனடிப்படையில் விமர்சித்தால் நக்சல்களின் தோற்றுவாய் அரசாங்கத்தின் அதிகார கோரமுகம் எனப் பல கிளைகளாக விரிந்து கடைசியில் நக்சல்களை அழிக்கும் அரசாங்க பகடைக்காய்களாக காவல்துறையினரை சாடி இப்படத்தை ஒதுக்க நேரிடும். அவ்வகையில் அது சரியான போதிலும் அப்படி மட்டும் பார்ப்பது கடிவாளமிட்ட பார்வையாகவே முடியும். இத்திரைப்படம் சாதித்தவற்றை பாராட்டுவதும் அவசியமே. கோவிந்த நிகாலினி சொல்வது போல் வன்முறையைக் கையாளும் எத்தகைய போரும் சரியான தீர்வாகுமா? என்பதும் அது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நேர்மையான காவல்துறை அதிகாரிகளின் அகத்தையும் புறத்தையும் எவ்வாறு ஆட்டங்காண வைக்கிறது என்பதையும் உணர்த்துவதே இத்திரைப்படம். காக்கியைக் கடந்த சமுதாயக் கோவம் கொண்ட மனிதராக ஆதியும்(கமல்) அப்பாஸும்(அர்ஜூன்) சித்தாந்தம் எனுமளவில் திடமாக இருக்கும் தீவிரவாத கும்பலின் தலைவனாக பத்ரியும்(நாசர்) ஒற்றைப்புள்ளியில் இணைகிறார்கள். விவாதம் தொடங்கும் புள்ளி இதுவே.

ஒரு வகையில் ஆதியும் பத்ரியும் ஒருவரே. அவர்களின் உரையாடல்கள் உணர்த்துவதும் அதுவே. அரசியல்வாதிகள் அரசாங்கம் என்னும் பேராற்றலின் அகோரப்பசியும் அதன் விளைவாக ஏற்படும் சுரண்டல்களையும் சிதைவுகளையும் சாடுபவர்கள்தான் இருவரும். பாதை தான் வேறு. அவற்றின் மோதல் ஒரு காட்சியில் நுட்பமாக வெளிப்படுகிறது. பத்ரியை என்கௌன்டர் செய்ய சிறையிலிருந்து இழுத்துச் செல்லும் ஆதியுடனான பத்ரியின் உரையாடல் அந்த இருவேறு துருவங்களை ஆட்டுவிக்கும் மாயக்கரமான அரசாங்கத்தையும் அதன் விளைவாகத் தோன்றிய வன்முறையின் உக்கிரத்தையும் வெளிப்படுத்தி விடுகிறது.
'நான் சேவை செய்ய தயாராத்தான் இருக்கேன். ஆனா பண்ண விடுவாங்களா உங்க முதலாளிகளும் அரசியல்வாதிகளும்?' என்னும் பத்ரியின் கேள்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும் ஆதி. ஆனால் அது திசை மாறிவிடுகிறது.

இக்காட்சியில் காமராவின் அசைவும் இசையும் இரு துருவங்களின் மோதலை துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. Hand held camera பத்ரியையும் ஆதியையும் மாறி மாறி காற்றில் ஊசலாடியபடி காட்டுகிறது. அதற்கு இணையாக இசை ஒருவித வலியை, வெறுமையைத் தூண்டுகிறது. இது இவர்கள் இருவர் மட்டும் பேசித்தீர்க்க முடியாத ஆணிவேர் பிரச்சனை. அம்மரத்தின் மேல் பகுதியில் காற்றில் ஊசலாடும் இரு இலைகள்தான் இவர்கள். அதைத்தான் காமிரா காட்டுகிறது. இசை அமைத்தவர் மகேஷ் மகாதேவன். நம்மவர், ஆளவந்தான், வானம் வசப்படும் படங்களின் இசையமைப்பாளர். எவர் சாயலுமற்ற தனித்துவம் வாய்ந்தது மகேஷின் இசை. ஆர்ப்பாட்டமின்றி உணர்வுகளை தூண்டும் வல்லமை படைத்த இசை அவருடையது. குறிப்பிடத்தக்க மற்றொரு கலைஞர் படத்தொகுப்பாளர் என் பி சதீஷ். இவர் 'நம்மவர்' படத்தில் பனியாற்றியவர். ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளரும் இருவேறு துருவங்களாக இருக்கும் திரைப்படங்கள் எப்படிப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பினும் சோபிக்காது. இப்படத்தில் இரு கலைஞர்களும் படத்தை முன்னிறுத்திய பக்குவம் போற்ற வேண்டியவற்றுள் ஒன்று.

ஈழப் போர் உட்பட விடுதலைக்கான உலகளாவிய புரட்சிப் போர்கள் எதுவாயினும் அவை எவ்வித உயரிய நோக்கத்தோடு துவங்கப்பட்டனவோ அதை செயல்முறைப்படுத்துகையில் அதிலிருந்து அறிந்தும் அறியாமலும் வழிமாறி அப்பாவி மக்களை கட்டாயப்படுத்துதல் மூர்க்கத்தனமாக தங்களுக்கு ஒத்துழைக்க பலவந்தப்படுத்துதல் என தடுமாறியதை அறிவோம். அவ்வாறு பாதிக்கப்பட்ட வாழ்க்கையை மனிதர்களை இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் ஒரு கலையாக்கத்தில் அவ்வித தடுமாற்றங்களைப் பிழைகளைக் காட்ட வேண்டுமென்றால் அதன் எதிர்தரப்பில் நிகழும் தவறுகளையும் காட்டினால் மட்டுமே முழுமை பெறும். அவ்விதத்தில் இப்படத்தில் தீவிரவாதிகளை பாலியல் பலாத்காரம் செய்வது போல் காட்டியதெல்லாம் தேவையற்ற திணிப்பே. இருப்பினும் இப்படத்தை விசாலமான பார்வையோடு அணுகினால் அதனுள் பதிந்துள்ள நுட்பமான இடங்கள் புலப்படும். நேர்மையான அரசாங்க அதிகாரிகளுக்கான பாதுகாப்பின்மை கடமையை செய்வதில் அவர்களுக்குள்ள நெருக்கடிகள் என விரியும் அது. அதைச் சொல்ல எடுத்துக் கொண்ட களம் தான் பிழையாக இருக்கிறதே தவிர அவ்வுணர்வை திரையில் வெளிப்படுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் சேவகர்களாக இருப்பினும் ஆதியும் அப்பாஸும் மக்கள் நலன் காக்கப் போராடும் நல்ல மனிதர்களாக அதிகாரிகளாகவே இருக்கிறார்கள். இவ்வாக்கியத்தை எழுதும் போதே வேடிக்கையாகவும் வேதனையாகவும்தான் இருக்கிறது. 'அரசாங்கம்' 'அரசியல்வாதிகள்' என்னும் வார்த்தைகளை தீமையின் குறியீடாக பயன்படுத்த ஆரம்பித்து அதுவே வாடிக்கை ஆகிப்போனது. தெளிவும் நுட்பமும் கொண்ட அறிவிற்கும் சிந்தனைக்கும் தத்துவத்திற்கும் அரசியல் கோட்பாட்டிற்கும் பாசாங்கற்ற மனிதர்களுக்கும் தியாகத்திற்கும் பஞ்சமில்லாத நிலப்பகுதி நம்முடையது. இருப்பினும் அவை யாவும் தகுதியற்ற மேலிடத்தையும் அவற்றின் கிளைகளையும் தகர்க்க முடியவில்லை என்பதை நாம் உற்று கவனித்து ஆராய வேண்டியுள்ளது. எதிர்த்து விழுந்து எழுந்து மீண்டும் எதிர்த்து தளர்ந்து பின் நடப்பில் உழன்று மாற்றம் என்னும் தீவிரம் நலிவுற்று அவ்வுணர்வு மறுத்துப் போனது நம்மிடம். இச்சூழலில் காவல் நிலையம் என்றாலே கசப்புணர்வு. அதிகாரிகள் என்றாலே அட்டூழியர்கள் என்பதாய் மாறிப்போனதை மறுக்க முடியாது. சமீபத்திய சான்று சாத்தான்குல சம்பவம். அத்தகைய சமுத்திரத்தில் நாம் தத்தளித்தாலும் மானுடம் காக்க அதில் ஒரு சில துளிகள் எப்போதும் போராடியபடியே தானிருக்கின்றன. அத்தகைய காக்கிகள் தான் ஆதியும் அப்பாஸும். எதிரணியிலும் அப்படியே. பத்ரி என்னும் போராளி சித்தாந்தம் என்னுமளவில் மட்டும் சுத்தமாகவும் அதை செயல்படுத்தும் விதத்தில் கரை படிந்தவனாகவும் இருக்கிறான். இவர்களுக்கிடையேயான போர் தான் குருதிப் புனல். பத்ரியின் கதாபாத்திரச் சித்தரிப்பில் குறை இருக்கிறது. படத்தில் அவரின் செயல்பாடுகள் என்ன தேவை? என்பதில் தெளிவில்லை. இந்தியில் ஒரு காட்சியில் தீவிரவாதிகள் ஆம்னியில் சென்றபடி காய்கறி மார்க்கெட்டிலுள்ள பொதுமக்களை சரமாரியாக சுடுவார்கள் பத்ரா(ஆசிஷ்)வின் போராளிகள். எவ்வகையிலும் ஏற்புடைய காட்சியல்ல இது. தமிழில் அதை தவிர்த்திருக்கிறார்கள்.

அரசாங்கப் பிரதிநிதியாக 'அரசாங்கம் பேசுனா நாடே கேட்கும். நீ பேசுனா இந்த அறைக்கு மட்டுந்தான் கேட்கும்' மற்றும் 'உனக்கு சமுதாயக் கோவம் இருந்ததுனா வா மக்களுக்கு சேவை செய். காட்ல என்னடா பண்றீங்க..' போன்ற வசனங்கள் முதிர்ச்சியற்றவை. இவ்வசனத்தை எழுதியவரே 'தீவிரவாதிகள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். அவர்களை உருவாக்குவதில் பெரும்பங்கு அரசியலுக்கும் அரசாங்கத்துக்கும் உள்ளன' என்று எழுதியது ஆச்சர்யமே.

'நான் நேர்மையான கொம்பன்தான்' என கம்பீரமாக கர்ஜித்த ஆதி அடுத்து தான் மதிக்கும் உயரதிகாரியே (இயக்குநர் கெ. விஷ்வநாத்) தீவிரவாதிகளிடம் விலைபோனவர்(பணத்திற்கு அல்ல) என்பதை அறிந்து ' அதிருமிடம். அடுத்து தன் மகனுக்கே ஆபத்து வர சிறையில் கைதியாக இருக்கும் பத்ரியின் கட்டளைக்கு தலைவணங்க நேரிடுகிறது. அன்று பத்ரியிடம் அடிபணிந்து சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பும் ஆதியின் உள்ளக்கொந்தளிப்பும் தவிப்பும் ஆற்றாமையும் இயலாமையுமே இப்படத்தின் அனைத்து அம்சங்களிலும் மேலோங்கி நிற்கிறது. அன்றிரவு ' நான் கடவுளக்கூட நம்பல. என் நேர்மையைத்தான் நம்பினேன். இப்ப யார நம்பறதுன்னே தெரியல. எனக்கு பயமா இருக்கு சுமி..' என மனைவியிடம் (கவுதமி) புலம்புகிறார். தன் கையறுநிலையை வெளிப்படுத்தி வீட்டின் சன்னல்களை எல்லாம் அடைத்து மகனிடம் வர அவனிடம் சாமி படத்தைக் கொடுத்து தூங்கச் சொல்லும் அம்மாவிடம் துப்பாக்கி கொடுத்தாத்தான் தூங்குவேன் எனச் சொல்கிறான். மிகவும் நுட்பம் வாய்ந்த இடம் இது. ஆயுதங்கள் எப்படி மனித வாழ்வை ஆக்கிரமிக்கின்றன என்பதை கச்சிதமாக காட்டி விடுகிறார்கள் இக்காட்சியில். ஆனால் காட்சித் துண்டுகளாக இவை அதனளவில் சொல்ல வந்ததை உணர்த்திவிடுகிறதே தவிர அடிப்படைகளைப் பற்றிய எவ்வித உரையாடலும் விளக்கமும் படத்தில் இல்லை.

Kuruthipunal (1995)

'ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு ப்ரேக்கிங் பாயிண்ட் இருக்கு. இயற்கையின் நியதி' என்று காவலதிகாரி ஆதி, கைதி பத்ரியிடம் சொல்வார். ('Every man has his breaking point' என்பது 1994ல் வெளிவந்த shawshank Redemption ல் மார்கன் ஃப்ரீமன் பேசும் வசனம்) தன் மகன் உயிருக்கே ஆபத்தென அறிந்தபின் அதே வசனத்தை பத்ரி ஆதியிடம் கூற அவரின் நேர்மையும் நம்பிக்கையும் ஆட்டங்கான ஆரம்பிக்கின்றன. கதாநாயகன் வாழ்வில் நெறுக்கமான உறவுகளை கடத்தி மிரட்டி அவனை தளர்வுறச்செய்து வேண்டியதை சாதித்துக்கொள்வது என்பது திரைப்படங்களில் தொன்றுதொட்டு பயன்படுத்தும் உத்திதான். இப்படத்தின் தனித்துவம் என்பது குடும்பமா? கடமையா? என்னும் தவிப்பில் அல்லலுற்ற போது ஆதி என்னும் மனிதன் cliffanger போல் இரண்டையுமே தாங்கிப்பிடிக்கத் தவிக்கிறார். தன்னையும் மீறி பத்ரியின் கட்டளைகளுக்கு அடிபணிய நேரிடுகிறது ஆதிக்கு. அதன்படி பத்ரியின் ஆட்கள் அவர் வீட்டுக்கு விருந்தாளிகளாக வருகின்றனர். அதில் ஒருவன் (சுபலேகா சுதாகர்) ஆதியிடம் திமிருடன் கட்டளையிட அவனை சுட்டுக்கொள்ளும் ஆத்திரம் உள்ளுள் கொந்தளிக்கும் போதிலும் அதை வெளிப்படுத்த முடியாமல் அதே சமயம் அவனுக்கு முதுகு வளையாமல் கம்பீரத்துடன் 'சரிடா..' என்பார் ஆதி. அந்த வார்த்தையும் அதை அவர் வெளிப்படுத்தும் விதமுமே அந்த நேர்மையான காக்கிச்சட்டையின் இறுதி முடிவைத் தீர்மானிக்கின்றன. தன் குடும்பத்தை காக்கும் பொருட்டு பயந்து பத்ரிக்கு அடிபணிந்தாலும் அதில் அப்பலுக்கற்ற அதிகாரியான தன் தோழன் அப்பாஸ் கொல்லப்பட்டதும் எதற்கும் துணிகிறார் ஆதி. அதன் வெளிப்பாடே அந்த 'சரிடா'.
ஆதியை விட அப்பாஸ் திடமானவராக இருக்கிறார். ஆதி நடைமுறை யதார்த்தத்தை அறிந்தவர். அப்பாஸ் ஒரு வெள்ளந்தி. ஆனால் இருவரும் இருக்க வேண்டிய இடம் அதுவல்ல.

பரவலாக கமல் படங்களில் அவரின் ஆக்கிரமிப்பு எல்லா விதங்களிலும் அதிகமாகவே இருக்கும். உதாரணத்திற்கு 'அன்பே சிவம்' படத்தில் 'நாட்டுக்கொரு சேதி' என்னும் வீதி நாடகப் பாடலில் முதலாளி தொழிலாளி போராளி என அனைத்து வேடங்களிலும் அவரே நடிப்பார். தவிர மிருதங்கம் வாசித்தல், மதனுடன் செல்லும் விருந்தில் தடுக்கி விழுந்த குழம்பில் ஓவியம், அதை மெருகேற்றி கம்ப்யூட்டர் வரைபடம் என நீளும் அவரின் சகலகலா வல்லமையின் வெளிப்பாடு. அதன் உச்சமே 'தசாவதாரம்'. தலைப்பே அப்படத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தி விடுகிறது. பத்து வேடங்களில் நடிக்க வேண்டும். அதற்கு ஒரு கதை. பிரதான நோக்கம் படத்தின் கருதான் என்றால் அதன் தலைப்பு ' பட்டாம்பூச்சி விளைவு' என்பது போல் இருந்திருக்க வேண்டும். அதைவிடுத்து ஆளவந்தான், விஷ்வரூபம் என விரைப்பாகவே இருப்பது அளுக்கிறது. 'உன்னைக் காணாது நானும் நானில்லையே' பாடலில் கமலின் வரி 'ஆயர் தம் மாயா நீ வா' என முடிந்ததும் ' பெண்கள் கோரஸாக 'ஆயா..மாயா..' என்பார்கள். கமல் அதர்க்கும் சேர்த்தே உதடசைப்பார். அவர் அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்தாகி அதை ரசிகர்களும் கொண்டாடி பல கலாமாகிவிட்டது. திறன் வெளிப்பாடு கைத்தட்டல் பரவசம் என்பதையெல்லாம் கடந்து அடுத்து இன்னும் நுட்பமான அரிதான களங்களை அவர் கையாள வேண்டும் என்பதே நமது அவா.

மெருகேற்றுதல் என்பது தழுவி செய்யும் அனைத்துக் கலைகளிலும் நிகழ வேண்டியது அவசியமே! ஆனால் அது மூலக்கதையின் அல்லது காட்சியின் கதாபாத்திரத்தின் இயல்பை பாதிக்கிறதா? என்பதைக் கவனிக்க வேண்டும். 'வசூல்ராஜா' வில் நோய்முற்றி தன்முன் இறக்கக் கிடக்கும் ஒரு புற்றுநோயாளி வலியில் துடித்தவாறு, 'நீங்க கடவுள் தான.. என் வலிய போக்குங்க' என கதற அவரிடம் கமல்,'ஆ..அது இல்லன்னு நான் எப்படி சொல்வேன்..'என்பார். மூலப்படமான 'முன்னாபாய்' யில் முரட்டுத் தோற்றமுள்ள சஞ்சய் தத் அந்நோயாளி முன் செய்வதறியாது வெறுமனே கண்ணீர் விட்டு அழுவார். நாமும் கலங்குவோம். இது போன்று அதீதமாகி பலவீனப்பட்ட காட்சிகளும் நடிப்பும் இருக்கும் போதிலும் குருதிப்புனல் நடிப்பிலும் திரைமொழியிலும் துரோக்காலை விட மேம்பட்டு விளங்குகிறது. அதை கோவிந்த் நிகாலினியே பாராட்டியுமுள்ளார். நடிப்பில் ஓம் புரியும் நசீருதீன் ஷாவும் ஹிந்தியில் செய்ததை தமிழில் கமல் அர்ஜூன் செய்ததோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 'த்ரிஷ்ய'த்தில் மோகன்லால் செய்ததற்கும் 'பாபநாச'த்தில் கமல் செய்ததற்கும் உள்ள அதே வித்யாசம் தான்.

24 Years of Kurudhipunal:- Cinema express

ஆசீஷ் வித்யார்த்தியை விட நாசரின் நடிப்பு நுட்பமானதாக இருக்கிறது. ஆதி பேச பத்ரி பெரும்பாலும் மௌனமாகவே அமர்ந்திருப்பார். ஆனாலும் அந்த இருப்பு அத்தீவிரத்தை நமக்கு உணர்த்தி விடுகிறது. இதைப்பற்றி நாசர் அவர் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்தில் விரிவாக சொல்லியிருக்கிறார். ஒரு நடிகர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறும் ரஸவாதத்தை அற்புதமாக விளக்கியிருக்கிறார். படப்பிடிப்புக்கு முந்தய நாள் இரவு தூக்கமற்ற பெருந்தவிப்புக்குப் பிறகு பத்ரியை கண்டடைந்த நாசர் விடிந்ததும் பத்ரியாக கண்விழித்திருக்கிறார். ஆதியை முதன் முதலாக பார்க்கும் போது பத்ரி வெறுமையாக ( blank காக) இருப்பது போன்று தோன்றினாலும் நாசர் என்ற நடிகருக்கு இயக்குநர் ஸ்ரீராம் கொடுத்த தரவுகளின் படி அவருள் ஓராயிரம் கேள்விகளும் எண்ணவோட்டமும் கொந்தளித்தபடியே இருந்ததாம். ஆனால் ஒரு போராளிக்குறிய பற்றற்ற தன்மையோடு எதிரியின் பலவீனங்களைத் தேடியபடி வார்த்தைகளைத் தவிர்த்து மற்ற புலன்களை கூர்மையாக்கி கவனிப்பதன் வெளிப்பாடே அந்த மௌன இருப்பு என்கிறார். ஆஷீஸ் வித்யார்த்தியிடம் வெளிப்படுவது வேறுவகை. ஒருவித முதிர்ச்சியற்ற இன்னும் கற்க வேண்டிய இளம் போராளிக்குறிய பரவசமும் வெகுளித்தனமும் மேலோங்கியிருக்கும் அவர் நடிப்பில். தலைவனுக்குறியதல்ல அவர் நடிப்பு. பத்ரி போன்ற கதாபாத்திரங்களின் மௌனம் வானில் மிதப்பது போன்று காட்சியளிக்கும் கழுகுக்கு ஒப்பானது என்கிறார் நாசர். பார்ப்பதற்கு மிதப்பது போல் காட்சியளித்தாலும் அதுவல்ல அது. அதை ஆழமாக புரிந்துகொள்ள அவர் புத்தகம் வரும்வரை காத்திருப்போம்.

திரைப்படம் என்னும் கலை அறிவு சார்ந்ததா? அல்லது உணர்ச்சி சார்ந்ததா? என்னும் விவாதத்தில் கமலே சொல்வது போல் 'ரெண்டும் தான்'என்பதே தேர்ந்த புரிதல். இருப்பினும் மனிதன் பலவீனப்பட்டுக் கிடக்குமிடத்தில் அறிவைவிட நெகிழ்வும் மென்மையும் நிபந்தனைகளற்ற பரஸ்பர அன்புப் பரிமாற்றங்களுமே மேலோங்கி நிற்கும். அதை கமலே பல படங்களில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். 'நம்மவர்'-ல் நாகேஷ் அவரின் மகள் இறந்த சேதியறிந்து பதறி ஓடி வந்து பிணமாக தரையில் கிடப்பவளைப் பார்த்து தலையணை எடுத்து வைத்து விட்டு 'எனக்கு கழுத்து வலி. இருந்த ஒரு தலையணையை எம்பொண்ணுக்கு குடுத்துட்டேன். நான் இப்ப படுக்கணும். என்ன செய்ய..'என விழிப்பார். அவரைத் தன் மடியில் தாழ்த்தி கண்ணீர் மல்க தலை கோதியபடி விசும்புவார் கமல். இந்த நிதானமும் ஆழமுமே ஒரு திரைப்படத்தை க்ளாசிக்காக்குவது.

Alternate Movies: Droh kaal(Times of Betrayal) -1994

குருதிப்புனலில் த்ரோக்காலை விட மெருகேற்றி அற்புதமாக எடுக்கப்பட்ட பல காட்சிகள் உள்ளன. அம்ரீஸ் புரியும் ஓம்புரியும் போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து மௌனமாக யோசிப்பார் அம்ரீஸ். தமிழில் கே. விஷ்வநாத் ஃபோன் பேசியபடி சாப்பிட்ட எச்சில் கை அந்த புகைப்படத்தில் படுவதைப் பார்த்து சட்டென விலக்குவார். குறியீடாக மிகவும் மேம்பட்ட காட்சியிது. இந்தியில் அம்ரீஸ் மௌனமாக பார்ப்பது அப்படத்தின் தன்மைக்கு பொருத்தமாக இருப்பதைப் போல் குருதிப்புனலின் தன்மைக்கு கச்சிதமாக அமைந்தது அந்த எச்சில் கரக் காட்சி.

த்ரோக்காலில் ஓம்புரி அதிபுத்திசாலியோ நுண்ணுணர்வு மிக்கவரோ இல்லை. ஆனால் கமல் அதற்கு நேர்மாறாக இருக்கிறார். தான் மதிக்கும் உயர் அதிகாரியே குற்றவாளிக்கு உதவியிருக்கிறார் என்பதை அறிந்து அவரைப் பார்க்க வரும்போது அவர் தற்கொலை செய்து கொண்டதைக்கண்டு அதிர்வார் ஓம்புரி. தமிழில் விஷ்வநாத் கமலை வாஞ்சையோடு தொட உதறி தன்னை விடுத்துக் கொள்வார். அடுத்து சிபிஐ அதிகாரிகள் வருகையில் அவர்களை அமரச்செய்து ஒரு அறைக்குள் செல்வார் விஷ்வநாத். கமல் முன்னுணர்ந்தவராக கலக்கத்தில் அமர்ந்திருக்க ஒரு ட்ராக் இன் சாட். பூட்டும் அணிந்து அறையை நோக்கி எழுந்து ஓடுகிறார் கமல். துப்பாக்கி வெடிச்சத்தம். முகம் பார்க்கும் கண்ணாடியில் இரத்தம் வழிய அதில் கமலின் கலவர உருவம்.

Kuruthipunal (1995) - Photo Gallery - IMDb

இது போன்ற நுட்பமான திரைமொழியாலும் காட்சிகளின் கட்டமைப்பாலும் அதற்கிணையான வசனங்களாலும் வித்யாசப் படுகின்றன இரு படங்களும். இந்தியில் துவக்காட்சியில் ஓம்புரி வாயில் பாம்பு நுழைந்து தவிக்க நடுங்கி தூக்கத்திலிருந்து பதறி எழுகிறார். இக்காட்சியே படத்தின் போக்கை உணர்த்திவிடுகிறது. தமிழில் துவக்கக் காட்சியில் பூட்ஸ் காலடிச்சத்தம் மேலெழ தூண்களால் நிறைந்த காவல் நிலையக் கட்டிடத்தில் போலீஸ் அதிகாரிகள் நடந்து வருகிறார்கள். கமல் எழுதிய கடிதத்தை படிக்கிறார் ஓர் அதிகாரி. கடிதம் கமல் திரைக்கதைகளில் அடிக்கடி தென்படும். ஆளவந்தானில் கடிதத்தில் அம்மா குரல் ஒலிக்க முடிந்ததும் 'என்றாள் அம்மா' என்னும் சிறுவனின் குரல் ஒலிக்கும். குருதிப் புனலில் அதிகாரி ஆரம்பிக்க ஓவர்லாப் ஆகி ஆதியின் குரலாக கடிதம் நீளும்.

பிசி ஸ்ரீராம் ஒளியையும் நிழலையும் படுநேர்த்தியாக கதையோட்டத்திற்கு தகுந்தாற்போல் காட்டியிருக்கிறார். குறிப்பாக இப்படத்தின் நிழல்கள் அச்சமூட்டுபவை அர்த்தப்பூர்வமானவை. சிறையில் அஜய் ரத்னத்தை கொல்ல குடிநீர் பானையில் மாத்திரை போடும் உருவம். கமல் ரகசியமாக ஃபோனில் பேச வெளியே நிற்கும் அர்ஜூன் உருவம். ஒளியில் அவர் செய்த பணியை தனிக் கட்டுரையாகத்தான் எழுத வேண்டும். சிறையில் கமலும் நாசரும் பேசும் காட்சியில் நாசர் பேசும் ஷாட் வெளிச்சத்திலும் கமல் பேசுவது இருட்டிலும் உள்ளன. ஆனால் லாங் ஷாட்டில் அந்த அறை சீரிய வெளிச்சத்தால் நிரம்பியிருக்கிறது. போலவே கண்டினியூட்டியிலும் சில பிழைகள். இறுதிக் காட்சியில் கமலை வதைக்கும் போது அவரின் டீ சர்ட் ஜீன்ஸின் பெரும்பகுதி இரத்தம் வழிந்து ஊறிப்போயிருக்கும் (இப்படத்தின் ஒப்பனைக்கலை இன்றளவிலும் சிறந்து விளங்குகிறது). ஆனால் அவர் பிணத்தை சிவா(அரவிந்த் கிருஷ்ணா)வேனில் கொண்டு வந்து கிடத்துமிடத்தில் சட்டையில் குண்டு பதிந்த சுவடுகள் மட்டுமே உள்ளன. காய்ந்த இரத்தக்கரை இல்லை.

அஜய் ரத்னம் குடிநீர் குடித்து இரத்தம் கக்கி சாகும் காட்சி நீளமானதாக இருக்கும். அகப்பட்டவனை பேசி அப்ரூவராக மாற்றி வைத்த நிலையில் காவல் நிலைய அதிகாரிகளைக் கொண்டே கொன்றதால் ஆத்திரமாகும் ஆதி பத்ரியின் அறைக்குள் வந்ததும் கடுமையாகத் தாக்குவார். பின்பு விலங்கிட்டு வெளியே அழைத்துச் செல்வார். குறுக்கிடும் காவலதிகாரியிடம், ' They are responsible.. i am responsible..any questions..' என்பார். இந்தியில் நேரடியாக மாத்திரை கொடுக்க சாப்பிட்டதும் சாவான். அடுத்த காட்சியில் ஓம்புரி ஆசீஷை போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்வார். தமிழில் உக்கிரம் கூடியிருக்கும். இது தான் சரியான தேவையான மெருகேற்றல். 

Govind Nihalani plans a sequel to his film 'Drohkaal'

துரோக்கால் படத்தின் நீளம்

2: 49. குருதிப்புனல் 2: 22 தான். சுருங்கச் சொல்லல் அழகியலோடு அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.

நாசரிடம் அர்ஜூனை காட்டிக்கொடுத்த பின் கமலை கண்கட்டி அழைத்து வந்த இடத்திலே விட்டுவிடுவார்கள். அங்கிருந்து உடனே ரயிலில் ஏரி கண் பார்வையை விடுத்து மற்ற புலனுணர்வுகளைக் கொண்டு நாசரின் இடத்தை தேடியலைவார் கமல். எதிர்படும் டாக்ஸி டிரைவரிடம் லிஃப்ட் கேட்டு லெஃப்ட் ரைட் என போகச்சொல்வார். ஓரிடத்தில் அருவி போன்று தண்ணீர் கொட்டும் சத்தம். அது இப்போது இல்லை. குழம்புவார் கமல். அது ஏரியல் சாட்டாக விரிய நமக்குத் தெரியும் வாட்டர் டாங்க் நிரம்பி கொட்டிய சுவடு. அந்த டிரைவர் அலுத்துக் கொள்ள 'Its a matter of life and death..போங்க ப்ளீஸ்' என்பார். அவர் ஓரிடத்தில் கமலை விட்டுவிட்டு சென்றுவிடுவார். இப்போது தான் வீடு திரும்புவார். அப்பாஸ் இறந்த செய்தி வரும். நண்பனைக் காப்பாற்றும் பதபதைப்பைக் காட்டும் இக்காட்சி அவசியச் சேர்க்கையே.

இந்தியில் ஆசீஷ் வித்யார்த்தியிடமிருந்து ஓம்புரி நேராக வீடு திரும்புவார். வீட்டில் அவரின் நடுக்கம் குற்றவுணர்வு என விரியும் காட்சி. பிறகு நசீருதீன் ஷா இறுதி ஊர்வலம் முடிந்த பின் துப்பாக்கியால் தற்கொலை செய்துகொள்ள முற்படும் ஓம்புரி அதை எடுத்துக் கொண்டு ஆசீஷை சந்திக்க கிளம்புவார். ஆக, இதுபோன்று பல விதங்களில் இரு படங்களும் மாறுபடுகின்றன. தேவையான இடங்களில் காட்சியின் நீளம் சுருங்கியும் சில இடங்களில் நீண்டும் அர்த்தப்படுகிறது.

கமல் மற்றும் கெ. விஷ்வநாத் போன்ற நேர்மையான போலீஸ் அதிகாரிகளே ஆட்டுவிக்கப்பட தடுமாறும் போதிலும் அர்ஜூன் கடைசி வரையில் தன் கொள்கையில் பிசகாமலே வாழ்ந்து சாகிறார். பத்ராவின் வதையைத் தாண்டி தன் கழுத்தில் மிரட்ட வைத்த துப்பாக்கியை தானே அழுத்திச் சாகிறார் ஷா. குருதிப் புனலில் நாசர் முகத்தில் காரித் துப்பிய பின் சுட்டக் கொள்கிறார் அர்ஜூன். ஷாவின் முகத்தில் இறுதியில் தளர்ந்த பயந்த பாவம் இருக்கும். ஆயினும் கொள்கையில் பிடிப்பாக இருந்ததாலே தானே சுட்டுக்கொள்கிறார். அர்ஜூன் கதாபாத்திரம் நாம் போற்றத்தக்க ரசிக்கத்தக்க அறிதான வார்ப்பு. போலவே ஓம்புரிக்கும் கமலுக்குமான வேறுபாடு. ஆனால் சே குவேரா, பிரபாகரன் போன்ற பெரும்போராளிகள் படுகொலை செய்யப்பட்ட பின் அவர்களின் இறுதிப்புகைப்படத்தை பார்த்தோமானால் கலக்கம் கொண்ட பாவம் தென்படும். உயிர் வதைபட்ட சுவடு முகத்தசைகளிலும் கண்களிலும் தெரியும். அதை

இறுதியில் தன்னை தன் சகாவிடம் சுடச்சொல்லி சுட்டபின் வீரமரணமடைய உதவிபுரிந்ததற்காக நன்றி சொல்வதோடு முடிகிறது த்ரோக்கால். 'குருதிப்புனலி'ல் அடுத்த தலைமுறையினர் ஆயுதங்களை வலுக்கட்டாயமாக ஏந்தி போரிட நேர்வதைக் காட்ட படத்தின் துவக்கத்தில் ஆதியின் குரலாக கமல் எழுதிய கடித்தின் பின்பாதி அவரின் குரலில் ஒலிக்கிறது.

'தீவிரவாதிகள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். அவர்களை உருவாக்குவதில் பெரும்பங்கு அரசியலுக்கும் அரசாங்கத்துக்கும் உள்ளன. நாளை வழிபடப்போகும் தெய்வத்தின் உருவம் துப்பாக்கியின் வடிவில் இல்லாது பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நடந்து முடிந்தவை அனைத்தும் அத்தியாயங்களே. கதை இன்னும் முடியவில்லை. அதை தயவு செய்து முடித்து வையுங்கள்' என்று முடிகிறது முடிவில்லாத இந்த குருதிப் புனல்.

எல்லா மதிப்பீடுகளுக்குமான மறு மதிப்பீடுகள் தான் காலத்தின் தேவை என்பதே நீட்ஷே தத்துவத்தின் மையம்.
இருபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்த பின்பு இன்னமும் வற்றா நதியாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு தானிருக்கின்றது அந்த குருதிப்புனல். இடைபட்ட காலத்தில் அக்கலை படைத்த கலைஞரும் அரசியல்வாதியாக பரிமாணமெடுத்திருக்கிறார். அவர் சொன்ன அக்கதையை முடித்து வைக்கும் இடத்தில் இன்று அவரும் இருக்கிறார். சினிமா பார்வையாளர்களாக குடிமக்களாக இன்று நாம் கேட்போம்,

'கதையை தயவு செய்து முடித்து வையுங்கள்'.