தென்றலும் புயலும்

- தம்பி ஐயா தேவதாஸ், இலங்கை

திருகோணமலையில் பிறந்த ஓர் இளைஞருக்கு சினிமாவின் மீது அதிக ஆர்வம். ஒரு படம் வெளிவந்தால் அதையே அடிக்கடி பார்ப்பான். நடிப்பின் மீதும் இவனுக்கு ஆசை. 10 வயதில் நடிக்கத் தொடங்கிய இவன், 18 வயதில் நாடகம் எழுதி மேடை ஏறி நடிக்கத் தொடங்கினான். நடிப்பில் ஈடுபாடு இருந்த பொழுதும் தனது கல்வியையும், குழப்பி விடாமல் தொடர்ந்தான். இவன் வைத்தியக் கல்லூரிக்கு எடுபட்டு, ஒரு டொக்டராக வெளிவந்தான். ‘வைத்தியம்’ போன்ற விஞ்ஞானத் துறையில் ஈடுபடுபவர்களுக்குக் கலைத்துறையில் அதிக ஆர்வம் இருப்பதில்லை என்பார்கள். ஆனால், இந்த டொக்டருக்குத் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையே பிறந்து விட்டது. அதனால், ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்.

அந்த டொக்டர்தான் எஸ்.ஆர். வேதநாயகம். அவர் தயாரித்த படத்தின் பெயர்தான் ‘தென்றலும் புயலும்’.


இந்த டொக்டருக்குத் திருகோணமலையிலுள்ள ஒரு வங்கி மேனேஜர் கூட்டாளி. வங்கி மேனேஜருக்கு ஓரளவு நடிகர் முத்துராமனின் முகச்சாயல். அதனால், இவருக்கும் படம் நடிக்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசையை டொக்டர் நிறைவேற்றினார். பி.எஸ்.சி. பட்டதாரியான அந்த வங்கி மேனேஜரின் பெயர்தான் சிவபாதவிருதையர்.

திருகோணமலையில் மேடை நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்து வந்தவர் அமரசிங்கம். அவரும் இப் படத்தில் நடிப்பதற்காகச் சேர்ந்து கொண்டார். கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய சாம்பசிவமும் இப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

திருகோணமலை, மூதூர் ஆகிய பகுதிகளில் பலமுறை மேடையேற்றப்பட்ட நாடகம்தான் ‘தென்றலும் புயலும்’ இதன் கதையையே திரைப்படத்துக்கு ஏற்ற திரைக்கதையாக அமைத்து வசனம் எழுதினார் டொக்டர் வேதநாயகம்.

டொக்டர் வேதநாயகம், சிவபாதவிருதையர், அமரசிங்கம் அனைவரும் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு வந்தார்கள். இவர்கள் தங்கள் படத்தை இயக்கக்கூடிய நல்ல இயக்குநரைத் தேடினர். மன்னாரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் சிங்களத் திரை உலகில் ஒளிப்பதிவுத் துறையில் புகழ்பெற்று விளங்கினார். 50 சிங்களத் திரைப்படங்களுக்கும் ஐந்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து முடித்திருந்தார். அவர்தான் எம்.ஏ. கபூர். அவரை இப் படத்தின் மூலம் முதன்முதலில் இயக்குநர் ஆக்கினார்கள்.

பி.எஸ். நாகலிங்கம் என்ற இளைஞர் நீண்ட நாட்களாகவே இலங்கைத் திரைப்பட உலகில் பல்வேறு துறைகளில் கடமையாற்றி வந்தார். அவரே இப் படத்துக்கு உதவி இயக்குநராக தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ் மேடை நாடகங்களிலும் சில சிங்களப் படங்களிலும் நடித்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் ‘புதிய காற்று’ மூலம் அறிமுகமாகி நல்ல பெயர் பெற்றிருந்தார். திடகாத்திரமான உடலும், திரைக்கேற்ற முகவெட்டும் கொண்ட இவ்விளைஞர்தான் டீன்குமார். இவருக்கும் இப் படத்தில் நல்ல பாத்திரம் வழங்கப்பட்டது.

டொக்டர் வேதநாயகம் நடிகைகளைத் தேடினார். அப்பொழுது கொழும்பில் சந்திரகலாவும், ஹெலன் குமாரியும் பிரபல நடிகைகளாக விளங்கினார்கள். தாய்ப்பாத்திரத்துக்கு செல்வம் பெர்னாண்டோ பொருத்தமானவர். இவர்கள் மூவரும் இப் படத்துக்கு ஒப்பந்தமானார்கள்.

இவர்களுடன் கே.ஏ.ஜவாஹர், எஸ்.என்.தனரெத்தினம், கந்தசாமி, ஜோபுநஸீர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

‘நிர்மலா’ என்ற படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் திருகோணமலை இசைக்கழகத்தைச் சேர்ந்த ரீ.பத்மநாதன் நல்லபெயர் வாங்கியிருந்தார். அவரே ‘தென்றலும் புயலும்’ படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கும் இசை அமைத்தார். கவிஞர் சண்முகப்பிரியா இயற்றிய இப் பாடல்களை முத்தழகு, பேர்டின் லோபஸ், கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினர். படத்தொகுப்பு அலிமான், கலை – சத்தியன்.


படப்பிடிப்பு திருகோணமலையில் கோணேஸ்வரர் ஆலயம், கடற்கரை, மூதூர்ப்பகுதி போன்ற இடங்களில் நடைபெற்றது. ராஜேஸ்வரி பிலிம்ஸ், ‘தென்றலும் புயலும்’ திரைப்படம் 12.4.1978இல் இலங்கையில் பல பாகங்களிலும் திரையிடப்பட்டது.

ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் கடமை உணர்ச்சி மிக்கவன். இளையவன் செல்லப் பிள்ளை. நாகரீக மங்கையொருத்திக்கு அடிமையாகி வாழ்க்கையின் கீழ் மட்டத்துக்கு வருகிறான். மூத்தவன் தான் காதலிக்கும் பெண்ணை, தாயின் நன்மைக்காகத் திருமணம் செய்யாமல் வாழ்கிறான். வறுமையால் வீடு வாடுகிறது. குருடனாகிப் போய்விட்ட தம்பி அண்ணனைக் குத்தி விடுகிறான்.

வீட்டு வேலைக்காரன் தன்னைத் தானே சுட்டுவிட்டுத் தன் இதயத்தை எஜமானுக்குப் பொருத்தும்படி குறிப்பிடுகிறான். வளர்ப்பு மகன் டொக்டராக வந்து இதய மாற்றுச் சிகிச்சை செய்து எஜமானைச் சுகதேகியாக்கி விடுகிறான்.

இதுதான் ‘தென்றலும் புயலும்’ திரைப்படத்தின் கதைச் சுருக்கம். ‘பறாளையூர் பிறேமகாந்தன்’ இலங்கைக் கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது, திரைப்படங்கள் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பல சஞ்சிகைகளை நடத்தியிருக்கிறார். 1978 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ‘மின்விழி’ என்ற சஞ்சிகையை நடத்தி வந்தார். அந்தச் சஞ்சிகையின் மே மாத இதழை, ‘தென்றலும் புயலும்’ திரைப்படச் சிறப்பு மலராக வெளியிட்டார். அதில் ‘நெஞ்சின் அலைகள்’ என்ற தலைப்பில் ஆசிரியத் தலையங்கம் எழுதினார்.

‘…..1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் பொழுதே ‘நான் உங்கள் தோழன்’ திரையிடப்பட்டுப் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. சென்ற மாதம் ‘வாடைக் காற்று’ வந்தது. அதைத் தொடர்ந்து ‘தென்றலும் புயலும்’ புத்தாண்டுப் பரிசாக வந்திருக்கிறது. எங்கள் கலை வாழவேண்டும். எமது கலாசாரமும் வளரவேண்டும். அதனால், தமிழ்மொழி உயரவேண்டும். இந்த உயரிய நோக்கத்தோடு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ‘தென்றலும் புயலும்’ படத்துக்கு ஆதரவு தர வேண்டும்’ என்று எழுதியிருந்தார்.

மற்றப் படங்களைப் போல் தென்றலும் புயலும் படத்துக்கு அதிகம் பேர் விமர்சனம் எழுதவில்லை. வீரகேசரியில் (23.04.78) ‘டி.ஆர்.டி.’ விமர்சனம் எழுதினார்.

‘….ராஜேஸ்வரி பிலிம்ஸ் வேதாவின் ‘தென்றலும் புயலும்’ படத்தில் கதாநாயகிகள் இருவரும் போட்டி போட்டு நடிக்கிறார்கள். தென்னகப் படங்களுக்கு நிகராக மலையகத்து எழிற்காட்சிகளை படமாக்கி, கபூர் மனதைக் குளிர வைக்கிறார். பாடல்களும், பாடல் காட்சிகளும் நன்றாக இருக்கின்றன. வேதநாயகம், சிவபாதவிருதையர், அமரசிங்கம் ஆகியோர் படத்தை ஆக்கிரமித்திருந்தாலும், டீன்குமார் ஒரு சில காட்சிகளில் தோன்றி மனதில் நிற்கிறார். ஜவாஹர் வழக்கம்போல் வந்து தனது பங்கைச் செலுத்துகிறார். தனரெத்தினம், ஜோபுநஸீர், கந்தசாமி, சாம்பசிவம் ஆகியோர் தோன்றி மறைகின்றனர். நடிப்புக்கு இலக்கணம் கூறித் திகைக்க வைக்கிறார் செல்வம் பெர்னாண்டோ. இசை, கதை, வசனம் பரவாயில்லை. நடிகைகள் பஞ்சம் என்று கூறுபவர்கள் இப் படத்தைப் பார்ப்பது நல்லது. இலங்கைப் படம் என்ற வகையில் குறைகளை மறந்து ரசிகர்கள் ஆதரவளிப்பது நமது கடமையாகும்’ என்று அந்த விமர்சனம் முடிவடைகிறது.


இது பெரும்பாலும் திருகோணமலைக் கலைஞர்கள் உருவாக்கிய படம் என்பதால் திருகோணமலையில் மற்ற இடங்களை விட அதிக நாட்கள் ஓடியது.

இப்படம் ஓடிய இடங்களும் நாட்களும்:-
மத்திய கொழும்பு (கெபிடல்) 9 நாட்கள்
தென்கொழும்பு (ஈரோஸ்) 7 நாட்கள்
யாழ்ப்பாணம் (லிடோ) 15 நாட்கள்
திருகோணமலை (லக்‌ஷ்மி) 30 நாட்கள்
மட்டக்களப்பு (விஜயா) 12 நாட்கள்
மன்னார் (குமரன்) 12 நாட்கள்
அக்கரைப்பற்று (சாரதா) 14 நாட்கள்
வாழைச்சேனை (ஈஸ்வரி) 14 நாட்கள்
நீர்கொழும்பு (மீபுரா) 7 நாட்கள்

இந்தப் படத்துக்கும் மூதூருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆனால், அங்கு இப் படம் 4 நாட்கள் மட்டுமே ஓடியது. 1978ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஜனாதிபதி பரிசு இப் படத்தில் நடித்த செல்வம் பெர்னாண்டோவுக்குக் கிடைத்தது.

இப்படியான ஒரு கலைமுயற்சியில் ஈடுபட்ட டொக்டர் வேதநாயகம் 29-07-93 இல் காலமானார். அவர் மறைந்தாலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அவரது பெயர் என்றும் மறையாது.