செல்லுலாய்ட் மேன்

-சிவேந்திர சிங் துங்கர்பூர்

இத்தாலியில் நடக்கிற cinema rediscovered (Il Cinema Ritrovato ) விலிருந்துதான் பயணம் ஆரம்பித்தது. இப்பொழுது 2012ல் இதே திரைப்பட விழாவில் எனது செல்லுலாய்ட் மேன் அரங்கேறுவதைக் கவனிக்கையில் சிவேந்த்ர சிங் துங்கர்பூரின் பயணத்தின் முழுச்சுற்று நிறைவுற்றிருக்கிறது. ஆவணக்காப்பாளர், FTII பயிற்சி பெற்ற இயக்குனர் சிவேந்திர சிங் துங்கர்பூர், தேசிய ஆவணக்காப்பகத்தை தன் ஒரு கரத்தால் கட்டியெழுப்பிய பி.கே.நாயரைப் பற்றியெடுத்த”செல்லுலாய்ட் மேன்” என்கிற ஆவணப்படத்தின் மூலம் இந்திய சினிமாவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியுள்ளார். இந்தியத் திரைப்படங்களைப் பாதுகாப்பது குறித்தும், மறுசீரமைக்கும் பணி குறித்தும் தான் கண்டறிந்த திட்டங்களை Dear cinema நேர்காணலில் துங்கர்பூர் வெளிப்படுத்துகிறார். இதன் மொழி பெயர்ப்பு பேசாமொழி இதழுக்காக.,


பி.கே.நாயர் செய்த செயல்களைக் கவனத்தில் கொண்டு, அவரது வாழ்க்கை குறித்தும் ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?

ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லுமளவிற்கு, இது எளிமையான கேள்வி அல்ல. என் தந்தையிடமிருந்து நான் கற்றுக்கொண்ட சில விஷயங்களில், இந்த ஆவணங்களைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். மார்டின் ஸ்கார்ஷஷியின் நேர்காணல் ஒன்றில், இத்தாலியில் நடக்கிற cinema rediscovered (Il Cinema Ritrovato ) விழாவில், அழியக்கூடிய நிலையிலிருந்த பழைய திரைப்படங்களைப் பாதுகாத்து, அதனை மறுசீரமைத்து இவ்விழாவில் திரையிடுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். இதைப் படித்தவுடன் இவ்விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்றும், இவ்விழாவின் செயல்பாடுகள் மீதும் கவரப்பட்டேன்.

 இந்நிகழ்ச்சிதான் பூனேவிலிருந்த பி.கே.நாயரைச் சந்திக்கவேண்டுமென்று என் ஆர்வத்தை தூண்டியது. அதேவேளையில் நம் சினிமா பாரம்பரியத்தையும் பாதுகாக்க எதாவது செய்யவேண்டும் என்பதை உணர்ந்தேன்.

இன்றும் பி.கே.நாயர் ஆவணக்காப்பகத்தின் அருகில்தான் தங்கியிருக்கிறார். அவரைச் சந்தித்தபோது, நான் ஃப்லிம் இன்ஸ்டிட்யூட்டில் செலவழித்த நாட்களெல்லாம் பழைய நினைவுகளாக மீண்டும் மலர்ந்தன. நாயர் எங்களுக்கு அருமையான பல படங்களைத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். நாங்கள் திரைப்படத்தை காதலிப்பதற்கும், அவற்றிற்காக வாழவும் கற்றுக்கொடுத்தமைக்கு அவருக்கு என்றென்றும் நன்றிகள் உரித்தாகும்.
ஆனால், இந்தப் படங்கள் தவறான நிலையில் விடப்படுகின்றன., படச்சுருள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் சீதோஷ்ண நிலையும் இல்லை, அவருக்குப் பின்பாக அந்தத் திரைப்படங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஒருவரும் இல்லை, இதெல்லாம் அப்போது நான் உணர்ந்தேன்.

ஆனால், ஆவணக்காப்பகத்தினுள் நுழைய நாயர் அனுமதிக்க மாட்டார் என்பதும் தெரியும். அப்படியிருக்கையில் அந்த ஆவணக்காப்பகத்தையும், நாயரையும் எப்படி படமெடுப்பது என்று எனக்குள் பெரிய கேள்வி தோன்றியது. இதைச் செய்துமுடிக்க சில தேவைகள் இருப்பதையும் உணர்ந்தேன். இந்தப் படங்களையெல்லாம் நாயர் மிகுந்த உழைப்பிற்கிடையில் சேர்த்திருக்கிறார். காப்பகத்தின் நிறுவனரும் தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை, அவர் சேர்த்துவைத்திருக்கிற படங்களெல்லாம் கையறு நிலையில் இருப்பதைப் பார்க்க எனக்கு கோபம்தான் வந்தது.

ஆவணக்காப்பகத்தின் நிலை பற்றி, சில துண்டுப்படங்கள் எடுத்து, அதனை அரசாங்க அதிகாரிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி வைத்தால் சரியான நடவடிக்கை கிடைக்கும் என்று நினைத்தேன். சொல்லப்போனால் ஆவணக்காப்பகத்தை படம்பிடிக்க எனக்கு காலதாமதம் ஆனதால், ஃப்லிம் இன்ஸ்டிட்யூட் பற்றி படமெடுக்கத் தொடங்கிவிட்டேன். இப்படியாக ஐந்து மாதங்கள் கழிந்தபின்னும் ஆவணக்காப்பகத்தை நாயரோடு படம் பிடிக்க அனுமதிகேட்டேன். அப்போதும் நாயர் சம்மதிக்கவில்லை. சயீத் மிர்ஷாவின் குறிக்கீட்டினால் தான் பி.கே.நாயர், சம்மதித்தார். பின்னர்., நாயரை ஆவணக்காப்பகத்தில் வைத்து படம்பிடித்தேன்.


இந்த ஆவணப்படத்தை செய்து முடிக்க, எந்தெந்த வகையான ஆராய்ச்சிகளும், பணிகளும் உங்களுக்கு தேவைப்பட்டது?

இது எனக்கு கண்டுபிடிப்பை நோக்கிய பயணம். ஒரு FTTI மாணவனாக நாயர் அவர்களை நான் அறிந்துவைத்திருந்ததுதான், இதற்கான துவக்கப்புள்ளி. எனது உதவியாளர் மஞ்சு ஐயரும், நானும் பல முறை பூனேவுக்குச் சென்று நாயர் அவர்களுடன் ஸ்டீன்பெக்கின் படங்களைப் பார்த்திருக்கிறோம். அவரது உதவியும் இதில் இருக்கிறது. இவையெல்லாம் பூனேவிலிருந்த என் பழைய நாட்களை நினைவூட்டுகின்றன. நிச்சயமாக, நாயர் அவர்களின் சினிமா கலைக்களஞ்சிய அறிவையும் நினைத்துப் பார்க்கிறோம். மேலும், ”செல்லுலாய்ட் மேன்” ஆவணப்படம் மும்பை திரைப்படத்துறையை மட்டும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டதல்ல. நான்கு முக்கியத் துறைகளைக் கொண்ட தென் திரையுலகம், ஏன் பெங்கால், அஸ்ஸாம் படங்கள் உட்பட சினிமாத்துறைகளை இதில் ஒன்றிணைத்திருக்கிறோம்.

பி.கே.நாயரைத் தெரிந்த, இந்தச் சினிமாத்துறையோடு சம்பந்தப்பட்டிருக்கிற பல்வேறு பிரபலங்களைப் பற்றி ஆராய்ந்து அவர்களோடு பேசினோம். இந்தவழியில் செல்கிறபொழுது எங்களுக்கு நிறைய விஷயங்கள் புலப்பட ஆரம்பித்தது. அதேநேரத்தில் பல விஷயங்களை இந்தப் படத்தில் சொல்ல சொல்லமுடியாமலும் போனது. குறிப்பாக பால்கேவின் ’ஃபோர்ட் ’நாசிக்கில் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அப்போது ”செல்லுலாய்ட் மேன்” முடிந்த சமயம். பங்களாதேஷ் திரைப்பட ஆவணக்காப்பகத்தை உருவாக்குவதில் பி.கே.நாயர் பெரும்பான்மையாக உதவியிருக்கிறார் என்பது பல பேருக்கும் தெரியாது. இன்னும் பல நேர்காணல்கள், ஆவணப்படத்தின் நேரம் கருதி குறைக்கப்பட வேண்டியிருந்தது, சில காட்சிகள் நீக்கப் பட்டன. திட்டமிட்ட ஆரம்பமோ, முடிவோ இல்லாமல் ஆவணப்படம் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் படம் ஒரு கட்டத்தில் முடிவிற்கு வந்தது.

ஆவணப்படத்திற்கான நிதி எப்படிக் கிடைத்தது?

நம் சினிமா பாரம்பர்ய வரலாற்றை தனி ஒரு ஆளாக சேர்த்துவைத்திருக்கிறார், அவரைப் பற்றிய ஆவணப்படம் இது என்பது தெரிந்தும், இதற்கு யாரும் பணம் கொடுத்து உதவ முன்வரவில்லை. தேவையான பணத்தை நானே கொடுக்கவேண்டியிருந்தது. மேலும், நாயர் தன் வாழ்க்கை முழுவதையும் ஃப்லிம் ரோல்களைச் சேகரிப்பதிலும், அவற்றைப் பராமரிப்பதிலுமே செலவழித்திருத்திருக்கிறார். எனவே அவரைப் பற்றிய இந்த ஆவணப்படம் டிஜிட்டலில் எடுக்காமல் ப்லிம் ரோல்களில் எடுக்கவேண்டும் என்பதில் மிகவும் தீர்மானமாக இருந்தேன். இதன் காரணமாக படத்திற்கான பணத்தேவை இன்னும் உயர்ந்தது என்பது உண்மை. போதிய பணம் திரட்டியவுடன் இந்தப் படம் எடுத்து முடிக்க மூன்று வருட காலம் ஆனது.

செல்லுலாய்ட் மேன் படமெடுக்கிற பொழுது, நீங்கள் சந்தித்த ஆச்சரியம், அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

கர்நாடகாவிலிருந்த ஹெக்கோடு என்ற கிராமத்தில் இருக்கிற மக்களுக்கும், பாக்கு விவசாயிகளுக்கும் நாடக ஆர்வலரான கே.வி.சுப்பண்ணா என்பவர் 16எம்.எம்மில் பதேர் பாஞ்சாலியையும், ராஷமோனையும், An occurance at owl greek Bridge போன்ற பல சிறந்த படங்களைத் திரையிட்டுக் காண்பிக்கிறார். ஒருமுறை கே.வி.சுப்பண்ணா, நாயர் அவர்களையும், சதீஸ் பகதூரையும் தன் கிராமத்திற்கு அழைத்திருந்தார். நாங்கள் அங்கு சென்று அக்கிராம மக்களிடம் கே.வி. சுப்பண்ணா திரையிடுகிற படங்கள் பற்றி கேட்டோம், அவர்களையும் படம்பிடித்தோம். அப்போது கிராமத்து மக்கள் இப்படங்கள் பற்றிச் சொல்கிற செய்திகளும், அவர்களுக்கு இப்படங்கள் தங்கள் மனதில் தோற்றுவித்த தாக்கம் பற்றியும் கூறுகிறபொழுது நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. எப்படி திரைப்படங்களால் கலாச்சார, மொழி, சமூக தடைகளை உடைத்தெறியமுடிகிறது? செல்லுலாய்ட் மேன் எடுக்க ஆரம்பித்ததிலிருந்து எனக்கு கிடைத்த துவக்க ஆச்சரியமான சம்பவமாக இதைச் சொல்வேன்.
அடுத்தது அதிர்ச்சிகள் பலப்பல.

இதில் முதன்மையானது, இந்திய நாட்டில் எடுக்கப்பட்ட 1700 ஊமைப்படங்களில் பத்திலிருந்து, பன்னிரண்டு படங்கள் மட்டுமே இப்போது மீதமிருக்கின்றன. இரண்டாவது, முதல் பேசும்படமான ”ஆலம் ஆரா” (1931) கிடையாது. சொல்லப்போனால், ஆர்தேர்ஷ் ஹிரானியின் மகன் அப்படச்சுருளிலிருந்து வெள்ளியைப் பிரித்தெடுப்பதற்காக விற்றுவிட்டார்.
மூன்றாவது, மும்பையிலிருந்த மலாட் என்ற இடத்தைக் கண்டுபிடித்தேன். இங்கு கருப்பு வெள்ளை படச்சுருள்களிலிருந்து வெள்ளியைப் பிரித்தெடுக்கிறார்கள். வண்ணப்படங்களின் படச்சுருள்களிலிருந்து வண்ணங்களைப் பிரித்தெடுத்திருக்கிறார்கள். இதனை வைத்து ப்ளாஸ்டிக் வளையல்கள் செய்ய பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்தக் கடை உரிமையாளர் வெள்ளியாகப் பிரித்தெடுக்கப்பட்ட பல கருப்பு வெள்ளைப் படங்களைப் பெருமிதத்தோடு சொன்னார். அவைகளெல்லாமே வரலாற்றில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய படங்களின் பெயர்களாக இருந்தது.


நான்காவது, ஷோலே மாதிரியான படங்கள் இன்னும் ஆவணக்காப்பகத்திற்கு வரவில்லை. அந்தப் படத்தின் தயாரிப்பாளர், ஷோலேவிலிருந்து இன்னும் நிறைய பணம் கிடைக்கும் என்று நினைப்பதால் அதனைத் தரவிரும்பவில்லை.

சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஒரு திரைப்படத்திலிருந்து எவ்வளவு காலத்திற்கு பணம் வருகிறதோ அத்தனை காலத்திற்குத் தான் அப்படத்திற்கு மதிப்பு என்று நினைக்கிறார்களே தவிர, அந்தப் படங்களைப் பாதுகாக்கவேண்டுமென்றோ, அதனை மறுசீரமைப்பு பண்ணவேண்டும் அதுதான் முக்கியம் என்று கருதுவதில்லை. இந்தப் போக்கு மாறவேண்டுமென்றுதான் பி.கே.நாயர் ஆவணங்காத்தலின் மரபை முன்னோக்கிக் கொண்டுசென்றார். அதேபோல என் செல்லுலாய்ட் மேன் ஆவணப்படமும் ஆவணப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த ஆவணப்படம் முடிக்கப்பட்டு பி.கே.நாயர் அவர்களுக்கு முதல்முறையாக காண்பிக்கிற பொழுது அவரது எதிர்வினை என்ன?
நான் அவரைப் பற்றித்தான் படமெடுக்கிறேன், என்றால் பி.கே.நாயர் ஒருபோதும் ஆர்வம் காட்டமாட்டார். இந்தப் படம் முழுவதும் ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவம் பற்றி எடுக்கப்படுமேயானால் அதில் ஒரு பகுதியாகவேண்டுமானால் நான் வந்துபோகிறேன் என்றார். அதனால் நான் உங்களைப் பற்றித்தான் படமெடுக்கிறேன் என்று ஒருபோதும் படப்பிடிப்பில் சொன்னதில்லை. ஒவ்வொரு முறை படப்பிடிப்பு முடிந்தவுடனும், ஏன் என்னை வைத்தே இத்தனைக் காட்சிகள் எடுக்குறீர்கள் என்று கேள்வி கேட்பார். ஆனால், படம் முடித்து அவருக்குத் திரையிட்டுக் காண்பித்த பொழுதுதான் இந்த ஆவணப்படம் தன்னைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்தார்.
 படப்பிடிப்பு நடக்கிற பொழுதே, படத்தின் நீளம் இரண்டு மணிநேரம், நாற்பது நிமிடங்கள் என்பதில் கவலைகொண்டிருந்தார். ஆனால், படம் பார்த்து முடித்தபின்பு இது பற்றி எதுவுமே சொல்லவில்லை, அவர் அழுதுகொண்டிருப்பதைத்தான் பார்த்தேன். இந்த அளவிற்கு பி.கே.நாயர் உணர்ச்சி வசப்பட்டு அழுது நான் பார்த்ததில்லை. சில வார்த்தைகள் மட்டும் பேசியும், அரிய செயல்கள் செய்துமுடித்தால் மட்டுமே சில வார்த்தைகளில் பாராட்டுகிற மனிதராகத்தான் பி.கே.நாயரைத் தெரியும். அவர் என்னருகில் வந்து, “படத்தின் நீளத்தில் தன்னிறைவாகவே உணர்கிறேன்” என்றார். இந்த வார்த்தைகளைத்தான் நான் மிகப்பெரிய பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன்.

திரைப்பட விழாக்களில் எந்த மாதிரியான வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது?

Bologna வில் நடைபெறும் Il Cinema Ritrovato Festivalலில் இந்தப் படம் திரையிடப்பட்டது. இதற்குப் பின்பாக Telluride Film Festival, the 50th New York Film Festival, the Mumbai International Film Festival, Kolkata International Film Festival, the opening film of the non-feature section at the International Film Festival of India, Goa இந்த திரைப்பட விழாக்களுக்கெல்லாம் செல்லுலாய்ட் மேன் தேர்வாகியிருக்கிறது. இப்போது Bangalore International Film Festival, the Goteborg Film Festival in Sweden and the Hong Kong International Film Festival.இந்த திரைப்பட விழாக்களை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது.


இதைவிட பெரிதாக நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. முக்கியமாக இன்றைக்கும் ஒவ்வொரு நாளும், இந்தியாவிலிருந்து மட்டுமில்லாமல், உலக நாடுகளிலிருந்தும், செல்லுலாய்ட் மேன் படமெடுத்ததற்காக என்னைப் பாராட்டியும், அல்லது எங்காவது, யாருக்காவது இந்தப் படம் பார்ப்பதற்கு தேவைப்படுவதாக எனக்கு தொலைபேசி அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வருகின்றன.  ஜோத்பூர், கோலாப்பூர், வைசாக், கவுகாத்தி போன்ற இடங்களிலிருக்கிற ஃப்லிம் சொசைட்டிகள் தங்களுக்கு இந்தப் படம் பார்க்கவேண்டுமென்று அழைப்புகள் வருகிறது.

இது பி.கே.நாயர் இந்தியா முழுவதும் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு என்பதையே காண்பிக்கிறது. உலகின் ஏதோ ஒரு மூலையில் இந்த ஆவணப்படத்தைப் பற்றி இன்றும் யாரேனும் ஒருவர் எழுதிக்கொண்டிருக்கிறார். பி.கே.நாயர் அவர்கள் இந்திய சினிமாவிற்கு செய்திருக்கிற விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக, அரசின் மூலம் அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருது கொடுத்து அங்கீகரிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தியாவில் படங்களைப் பாதுகாப்பதற்கும், மீட்பதற்கும், மறு சீரமைப்புச் செய்வதற்கும் நீங்கள் வைத்திருக்கிற திட்டங்கள் என்ன?

இந்தியப் படங்களைப் பாதுகாப்பதற்கு அதற்கென தனி ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட வேண்டும். உதய்சங்கரின் கல்பனா திரைப்படத்தை மீட்பதற்காக மார்ட்டின் ஸ்கார்ஸஸியுடன் (World Cinema Foundation- WCF) வேலை செய்திருக்கிறேன். இலங்கைத் திரைப்பட இயக்குனரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் படங்களை மீட்பதற்கும் WCFக்காக உதவி செய்திருக்கிறேன். Bolognaவிலுள்ள ஃப்லிம் போர்டில் என்னைச் சேரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அதன் மூலம் வருடத்திற்கு குறைந்தது இரண்டு படங்களையாவது மீட்பதற்கு முயற்சியைத் தொடங்க முடியும். தலைப்புகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.