சீன சினிமா: கெகெசிலி: மலையகப் பாதுகாப்புப்படை 

ஆசிய சினிமாவில் ஈரானியத் திரைப்படங்களுக்கு அடுத்த மதிக்கத்தக்க இடத்தை சீனத் திரைப்படங்கள் வகிப்பதாக உலக திரைவிமர்சனங்கள் மத்தியில் ஒரு பார்வையுண்டு. ஈரானியத் திரைப்படங்களைப் பொறுத்தவரை, அதன் உள்ளடக்கம் சார்ந்தும், மனிதமார்ந்த தீவீரம் சார்ந்தும் உயர்ந்த இடத்தையே வகிக்கின்றன என்பது மறுதலிக்க வியலாத உண்மையே. அவற்றின் எளிமையான கதையாடல் முறைமையும் அதன் தனித்துவச் சிறப்பிற்கு சான்றாகிறது.

Image result for Mountain Patrol

சிறிது ஆழ்ந்து கவனித்தோமானால், சீனத் திரைப்படங்களின் கதைத்தளங்களும் ஈரானிய கதைத்தளங்களை ஒத்தவைதான். ஆனால், அந்தக் கதைத்தளங்களை திரையாக்கம் செய்வதற்கு அவை மேற்கொள்ளும் நுட்பமான வேலைப்பாடுகளும் வழிமுறைகளும் பலவாகும். ஈரானியத் திரைப்படங்கள் பெருமளவில் நேரடியான கதையாக்கம் கொண்டிருப்பவை. அந்த நேரடித் தன்மையையும், அப்படங்களில் பொதுவாக வெளிப்படும் அறிவுசார் விவேக குணங்களையும் சீனத் திரைப்படங்களில் நாம் ஒரு போதும் காணமுடியாது.சி ற்சில கதாபாத்திரங்கள் அவ்விதத்தில் எழுப்பப்பட்டிருக்கலாம். ஆனால், அதனதன் விவேகத்தின் தேவை கதாபாத்திரத்தின் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும்.

ஈரானிய சினிமாவில் வெளிப்படும் கலை சார்ந்த ஒருவித பிரயத்தன குணமே பார்வையாளரை அதன் மீது மையம்குவிக்கும் காரணியாகவும் செயல்படுகிறது. எனவே, அவை எளிதில் ரசிக்கத்தக்க படைப்புக்களாக தோற்றம் பெற்றுவிடுகின்றன. இங்கு பெரும்பான்மைப் படங்கள் என சேர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் அதே ஈரானில்தான் அப்பாஸ் கியாரோஸ்தமி, ரக்ஷன் பாணி எட்மத், பஹ்மான் கோபேதி போன்ற தமக்கான சுய பாணிகளைக் கொண்ட விதிவிலக்கான ஈரானியப் படைப்பாளர்களும் இருக்கிறார்கள்.

வாழ்வை வாழ்வின் சாமான்ய யதார்த்தத்துடன் அணுகுவதே கலையாக்கம் என ஏற்றுக்கொண்டால் மேற்கூறினவர்கள் நிச்சயமாக அதில் இடம்பெறுவார்கள். அவர்களது படைப்புக்களுடன், ஒன்றிரண்டு சதவிகிதம் மாத்திரமே கழிக்கப்பட்ட ஒட்டுமொத்த சீனத்தின் நல்ல சினிமாவும் இதில் இடம்பெறும். அந்த ஒன்றிரண்டு சதவிகிதம் சீனத் திரைப்படங்கள் கூட பரந்த கதையாடல் மையத்திலிருந்து காலிடறி சற்று திசைபிறழ்ந்து கலைந்துசென்றிருக்கலாம், அவ்வளவே.

பழைய தலைமுறையில் சென் கைகே, சாங்க் இமூ, டியான் சங் சங்,டெங் வென்ஜி மற்றும் புதிய தலைமுறையில் ஜியா செங்க் கே, வாங்க் ஷியாஷீய், வாங்க் சாவ் போன்ற திரையாளுமைகளால் கட்டிஎழுப்பப்பட்ட சீன சினிமாவில் உருவான எத்தனையோ நல்ல திரைப்படங்களில் நான் இங்கேகுறிப்பிடப் போகிற படத்தின் பெயர் 'கெகெசிலி: மலையகப் பாதுகாப்புப் படை' (Kekexili: Mountain Patrol). 2004இல் வெளியானது. கடந்த ஐந்தாண்டுகளில் வெளியான ஆசியத் திரைப்படங்களில் கதைநோக்கிலும் மிகவும் அழுத்தமாக சுட்டிக்காட்ட வேண்டிய படமாகும் இது. கதைத்தளத்தை அறிந்துகொள்ளும் எவரொருவருக்கும் இந்த அவமானம் ஏற்புடையதாக அமைந்துவிடும்.

சீனாவின் ஆக்கிரமிப்பிலிருக்கும் திபெத்திலுள்ள கெகெசிலி என்னும் மலைப்பகுதி. தரையிலிருந்து 4700 மீட்டர் உயரத்திலிருக்கும் இந்தப் பாலைவனம் போன்ற மலைப்பகுதியில் தாங்கவொண்ணாத குளிரும், புயல் காற்றுமே எப்போதும் நிலவுகின்ற சுற்றுச்சூழல். ஒருவகையான திபெத்திய மான்கள் (Antelope) மாத்திரமே அந்த நிலப்பரப்பில் எஞ்சியிருக்கும் ஒரே உயிரினமாகும். இந்த ரோமம் குளிரைப் போக்கும் மேலாடைகள் செய்யப் பயன்படக்கூடியது. எனவே, 1985ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தோல் கொள்ளைக்காரர்கள் (Poachers) சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான மான்களை சுட்டுக் கொன்று அவற்றின் தோல்களை உரித்து அயல்நாடுகளுக்கு விற்பனை செய்யும் திருட்டுத் தொழிலை நடத்திவந்தனர். இத்தகைய வனவிலங்கு கொன்றொழிப்பைத் தடுக்க சீன அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, இந்தக் கொடுஞ்செயலைத் தடுக்கவென திபெத்திய மண்ணிலிருந்தே 1993இல் உருவானது ரிடாய் என்னும் ஒய்வுபெற்ற திபெத்திய ராணுவ வீரரது தலைமையின் கீழமைந்த பாதுகாப்புப்படை.

இது அரசின் அதிகாரத்திற்குட்படாத தன்னார்வ இளைஞர்படையாகும். இந்தப் பாதுகாப்புப் படையின் நடவடிக்கை தோல்திருடர்களை விரட்டியடிப்பதும் அவர்கள் கடத்தமுயலும் தோள்களைக் கையகப்படுத்தி அபராதம் விதிப்பதும் மாத்திரமே. இந்தத் தடுப்புச் செயல்பாட்டின் வழி வெளியுலகின் கவனிப்பிற்கு இந்தப் பிரச்சினையை கொண்டுசெல்ல விரும்பும் இந்தப் படையினர், துப்பாக்கி ஏந்தியிருப்பினும் கொலைகளிலோ வன்முறைகளிலோ வலிந்து ஈடுபடுவதில்லை. தன்னலம் பாராது தமது நிலம் சார்ந்த இயற்கை நலன்களைக் காக்கும் நோக்கத்துடன் மாத்திரமே இயங்குகிறது, குறுகிய எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்ட அந்த ரோந்துப் படை தோல் திருடர்களின் பிடியில் அகப்பட்டு, படை தோல் திருடர்களின் பிடியில் அகப்பட்டு, படையிலிருந்த பலரும் தமது இன்னுயிரை இழக்க நேர்ந்திருப்பினும், ஒரு நாட்டின் விடுதலைக்கான மன வேட்கையை ஒத்த போராட்டத்துடனேயே தொடர்ந்து இயங்குகிறது அந்தப் படை.

Image result for Mountain Patrol

படத்தின் தொடக்கத்தில், கண்காணிப்பு வாகனத்தில் அமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருக்கும் கிங்க்பா என்னும் பாதுகாப்புப் படை இளைஞர் ஒருவரை தோல்கொள்ளைக்காரக் கும்பலொன்று சூழ்கிறது. அவ்விளைஞர் கைது செய்யப்பட்டு அன்றிரவே சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தச் செய்திப் பரவலின் பின்னணியில் ஆர்வம் கொண்டு, சீனத் தலைநகரான பெய்ஜிங்கிலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்று காயூ எனும் செய்திச் சேகரிப்பாளனை கெகெசிலி மலைப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறது. காயூ வந்தடையும் போது, கொலையுண்ட கிங்க்பாவின் உடல் திபெத்திய தகன முறைப்படி துண்டங்களாக வெட்டப்பட்டு, ஆர்வ மூர்க்கத்துடன் சுற்றித்திரியும் வல்லூறுகளுக்கு உணவாக இடப்படும் காட்சியைக் காண்கிறான்.  

  ரிடாயிடம் பத்திரிகையாளன் காயூ 'உரையாடல் நிகழ்த்தவேண்டும்' என்று கோரும்போது, முதலில் மறுத்துவிடுகிறார். விடாப்பிடியாக, காயூ 'இந்த சந்திப்பை முன் வைத்து, தான் எழுதப்போகும் கட்டுரையின் வழி இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணத் தன்னால் உதவமுடியும்' என்று கூற, சில கணங்கள் யோசித்தபின் ரிடாய் நேர்காணலுக்கு சம்மதித்து காயூவை அங்கு தங்கச் செய்கிறார்.

அன்றைய நள்ளிரவில் காயூ தூங்கிக் கொண்டிருக்கும்போது, தட்டி எழுப்பப்படுகிறான். வெளியே வர, அனைவரும் துப்பாக்கிகளோடு வாகனங்களில் துரிதமாக ஏறிக் கொண்டிருக்கிறார்கள். காயூவிடம், 'ரோந்துப்பணிக்காகச் செல்கிறோம், நீங்களும் உடன் வாருங்கள்' எனக்கூற, அனுபவித்திராத பயணத்தின் புதிர்த்தன்மையோடு காயூ வாகனத்தில் ஏறிக் கொள்ள, இளைஞர்களது உறவினப் பெண்கள் துக்கத்துடனும் அழுகையுடனும் நிற்க, பிரியாவிடை தருகிறார்கள். சுற்றுச்சூழலாலும் எதிரிகளாலும் தமது உயிருக்குப் பாதுகாப்பற்ற பயணத்தை 1996 நவம்பர் முதல் தேதியின் அந்த நள்ளிரவில் மேற்கொள்கிறது அந்தப் படை.

இரண்டாம் நாள்.பு டோங்க் என்னுமிடத்திலுள்ள பாதுகாப்புக் கூடாரத்திற்கு வருகிறார்கள். மூன்று வருடங்களாக எந்தத் துணையுமின்றி அங்கு தனிமனிதனாக அவேங்க் கண்காணிப்பிலிருக்கிறான். ரிடாய் அவனிடம் காயூவை அறிமுகப்படுத்துகிறார். கிங்க்பாவின் மரணத்தையும் அவனிடம் தெரிவித்து, 'நீ எச்சரிக்கையாக இருக்கவேண்டும்' எனக் கூறுகிறார். அவேங்கின் முகத்தில் துக்கம் அடர்கிறது. அந்த துக்கம், தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்பதால் உருவாவதில்லை. தமது படைநண்பனை இழந்துவிட்ட நட்பின் துக்கமாக அவனது முகத்தில் அடர்கிறது. ஆனால் பார்வையாளரான நாம் அவேங்கின் மீது எந்த தருணமும் உயிர்த் தாக்குதல் நடந்துவிடக் கூடும் என்கிற மன விசனத்தை அந்தக் கணம் அடைந்துவிடுகிறோம்.

மூன்றாம் நாள். சுனாய் ஏரிப்பகுதிக்கு வருகிறார்கள். அங்குள்ள நீர்வளாகத்தின் அருகில், தோல் கொள்ளைக்காரர்களால் கொல்லப்பட்டு, சிதறிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான மான்களின் எலும்புக்கூடுகளைக் கொத்தி வல்லூறுகள் பசியாறிக் கொண்டிருக்கின்றன. படையினன் ஒருவன் கிடப்பவற்றை எண்ணிக் கொன்டே செல்கிறான்.அவனது எண்ணிக்கை 400ஐ தாண்டுகிறது. பின்பு அனைத்து உடல்களும் சேகரிக்கப்பட்டு ஒன்றாகக் குவித்து எரியூட்டி முறைப்படி தகனம் செய்யப்படுகின்றன. 'வருடத்திற்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மான்களின் உடல்களை இவ்விதம் வழியில் கண்டு தகனம் செய்ய நேர்வதாக' ரிடாய் காயூவிடம் தெரிவிக்கிறார். மனிதனால் விளைவிக்கப் படும் அநீதியை பறைசாற்றும்விதமாக எரியூட்டப்பட்ட உடல்களின் புகை காற்றில் பதற்றத்துடன் அலைகிறது அங்கு.

தொடர்ந்து மூன்றுநாட்கள் பயணம் கடந்து ஏழாம் நாள். குமார் நதிப்பகுதி. அங்கு தோல்கொள்ளைக்கார கும்பலொன்றின் வாகனங்கள் நின்றுகொண்டிருக்கின்றன. ரிடாயின் படை அவர்களை நெருங்குகிறது. படையில் பலர் வானத்தை நோக்கிச் சுட்டபடியே அவர்களை சரணடையுமாறு குரல்விடுக்க, லியு டாங் என்பவன் மாத்திரம் ஆவேசத்தோடு ஆட்களை நோக்கிச் சுடுகிறான். ரிடாய் உடனடியாக அவனைத் தடுத்து துப்பாக்கியை பிடுங்கிக் கொள்கிறார். நதியைக் கடந்துசென்று அனைவரையும் கைதுசெய்கிறார்கள். ஒரு இளைஞனது காலில் குண்டுபட்டு உயிர்பதைப்பில் இருக்கிறான். காயூ அவனைக் காப்பாற்ற எண்ணி காலில் பீரிடும் ரத்தத்தை நிறுத்த முயல, ரிடாய், 'அவனது உடலில் புகுந்திருக்கும் குண்டு உயிரைக் குடித்துவிடும்' என்கிறார். காயூ நிச்சலனமாக உறைகிறான். அவ்விளைஞன் தான் சாக விரும்பவில்லை என்று கூறியபடியே இறப்பைத் தொடுகிறான். ரிடாய் அவனது கண்களை மூடிவிட்டு திபெத்திய பிரார்த்தனையை உச்சரிக்கிறார். இந்தக் கொலை அவருக்கு உடன்பாடில்லாததுதான். எனினும், போராட்டத்தில் கடக்கவேண்டிய தற்செயல் விளைவுகளாக இந்தப் பலிகளை பாவிக்கிறார்.  

அடுத்தடுத்த நாட்களில், எரிபொருள் இல்லாததால் நின்றுவிட்ட வாகனத்தில் மூன்றுபேர் சக படையினரின் உதவிக்காக காத்திருப்பது, குளிர் காரணமாக ஒருவர் மரணமுறுவது, நோயுற்றவரைக் காப்பாற்ற ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வது என ரிடாயினது ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்துவிடுகிறார்கள். புயல்காற்றின் தீவிரத்தின் மீதமிருந்த இரண்டு நபரையும் இழந்து ரிடாயும் காயூம் மாத்திரமே இறுதியில் எஞ்சுகிறார்கள். பயணத்தின் ஒரு முடிவில் நிற்கும்போது, ரிடாய் கைதுசெய்ய எண்ணிய தோல்கொள்ளைக் கும்பல் துப்பாக்கியேந்தியபடி இருவரையும் நோக்கி நடந்து வருகிறார்கள். ரிடாயினது துப்பாக்கி பறிக்கப்படுகிறது.

அந்தக் கும்பலில் ரிடாய் அவ்வப்போது நிகழும் சந்திப்பில் கைதுசெய்து உயிருடன் விடுதலை செய்த கிழவர் மா சான்லினும் இருக்கிறார். உடன் நிற்கும் கும்பல் தலைவனையும் ரிடாயையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துவைக்கிறார். ‘இரண்டு வாகனங்களும், ஒரு புதிய வீடும் தருகிறேன், எனது பணியில் குறுக்கிடாதே’ என கும்பல்தலைவன் தனது கூலிகளிடம், ‘துப்பாக்கிகளை அவரிடம் தந்துவிடுங்கல், நாமும் அவரது பாதுகாப்புப் படையில் சேர்ந்துகொள்ளலாம்’ என ஏளனமாகச் சிரித்தபடி கேலிசெய்கிறான். ரிடாய் ஆத்திரப்பட்டு அவனது கன்னத்தில் அறைய, கூலிகளில் ஒருவனது துப்பாக்கிக் குண்டு ரிடாயின் மார்பில் துர்கணத்தை ஊடுருவிக்கொண்டு பாய்கிறது. ரிடாய் சுருண்டு விழுகிறார். கும்பல் தலைவனும் துப்பாக்கிக் குண்டுகளை அவர்மீது பாய்ச்சுகிறான். காயூ, ரிடாயின் ஆளில்லை என அறிந்துகொண்டு அவனை உயிருடன் விட்டுவிடுகிறான். 

பின்பு அனைவரும் அங்கிருந்து கடந்துசெல்ல, கிழவர் மா சான்லின் மாத்திரம் சற்றுநேரம் ரிடாயின் உடலருகில் நின்றுகொண்டிருக்கிறார். அவருக்கும் ரிடாய்க்குமான உறவு பல அகப்படல்கலுடனும் விடுவிப்புக்களுடனும் தொடர்புடையது. ஒவ்வொரு சந்திப்பிலும் அவரை ரிடாய் துன்புறுத்துவதில்லை. மரியாதையுடன் நடத்துகிறார். மா சான்லின் ரிடாயின் உடலருகே நின்றுகொண்டிருக்கும் அந்த சில கணங்கள், இருவருக்குமிடையே விதியின் வாய்ப்பில் நிகழ்ந்த எதிர் மனப்பான்மையிலான நட்பின் நினைவுகளைத் தாங்கிய வண்ணம் காட்சியில் நிலைக்கிறது. காயூவைக் கடந்துசெல்லும்போது, ‘எங்களது கால்தடத்தைப் பின்பற்றியே வந்துவிடு’ எனவும் அறிவுறுத்துகிறார். எதிரியை ஒட்டிவாழும் அவரிடம் மனிதமும் மங்காதிருக்கிறது.

படத்தின் பிற்சேர்க்கையாக வருவது பெய்ஜிங்கிற்குத் திரும்பிச் செல்லும் காயூ எழுதும் கட்டுரை சீனாவெங்கும் ஓர் அதிர்ச்சி அலை எழுப்பியது. அதனைத் தொடர்ந்து ஒரு வருடம் கழித்து கெகெசிலி மலையை தேசிய இயற்கைப் பாதுகாப்புப் பகுதியாக சீன அரசு அறிவித்தது. அதற்கென ஒரு தனிப்படையையும் நிறுவியது. தொடர்ந்து பல நாடுகளில் திபெத்திய மான்களின் தோல்விற்பனை தடைசெய்யப்பட்டுவிட்டது. இனமே அழிந்துவிடும் என்கிற நிலையிலிருந்த மான்கள் மீண்டும் பெருகி 30,000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையை தற்போது தொட்டிருக்கிறது. அனைத்திற்கும் பின்னணியில் தனது இன்னுயிர் ஈந்த சூழலியல் புரட்சியாளர் ரிடாயின் அரிய முயற்சியின் நிழல் படிந்திருப்பதை கண்ணுற்றபடியே, அவரற்ற திரையிலிருந்து மனம் கலங்கி வெளியே வருகிறோம் நாம்.

ரிடாய், வெறும் திரைப்படத்திற்கான கதாபாத்திரம் அல்ல. அவர் நிஜமாகவே வாழ்ந்த காலம் மறக்கவியலாத மானுடர். அவரையும் அவரது பாதுகாப்புப் படையின் உண்மையனுபவங்களையுமே படத்தின் இயக்குநர் லூ சுவான் நமக்கு புரிந்துணர்வோடு வழங்கியிருக்கிறார். இந்தப் படத்தை இயக்கிய லூ சுவானை பாராட்டுதல் என்பது நமக்கு குறுகிய அன்பையே வெளிப்படுத்துவதாக அமைந்துவிடும். ஒரு சிறந்த கலைஞரது பணியை தனது இரண்டாம் படைப்பிலேயே நிகழ்த்தியிருக்கும் லூ சுவான், ஆசிய சினிமாவின் மதிக்கத்தக்க இயக்குநராக எப்போதைக்கும் நீடிப்பார் என்பதை உறுதிப்படுத்த இந்தத் திரைப்படம் ஒன்றே கட்டியம் கூறத் தகுமானது.

இயக்குநரது படைப்புக் கூர்மைக்கு இணையாகவே தனது ஒளிப்பதிவாக்கத்தைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் காவ் யூ. கெகெசிலி மலைப்பரப்பின் ஞானம் பொங்கும் இயற்கை எழிலையும், வலிகளடர்ந்த மரண முகத்தையும் ஒருசேர அசைவுபடுத்திக் காட்டியிருக்கிற இவரது ஒளிப்பதிவின் வசீகர பிம்பங்கள் நமது மனதிலிருந்து நீண்ட காலம் நீங்காதது. 
இத்தகைய சிறப்புடைய படத்தில் தழும்பாகத் தொற்றிநிற்கும் ஒரு படைப்புத் தவறையும் இங்கே சுட்டிக்காட்டத் தலைப்படுகிறேன். கதை மையத்திற்கு எதிரான தன்மையொன்று படத்தின் தொடக்கக் காட்சியிலேயே இடம்பெறுகிறது. கிங்க்பாவை கைதுசெய்து கொல்வதற்கு முன், அவனது கண்ணெதிரிலேயே ஒரு மானை சுட்டுவீழ்த்தி தோலுரிப்பது போன்ற காட்சி இடம்பெரும். சுட்டுக் கொல்வது போன்ற காட்சி உண்மையானதா என்பது தெரியவில்லை. ஆனால், தோலுரிக்கும் காட்சி மிகவும் நேரடியாகக் காட்டப்பட்டிருக்கிறது. படத்தின் தேவையில்தான் அந்த மான் கொல்லப்பட்டு தோலுரிக்கப்பட்டிருக்கிறது.

Image result for kekexili mountain patrol

கதைமையத்தை பார்வையாளர்களுக்கு மிக அழுத்தமாகவே இத்தகைய காட்சி கொண்டுசெல்லும் என்றாலும், படைப்பாளரின் படைப்பு நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும்படியானதாகவும் நெருடலைத் தந்துவிடுகிறது. பணத்திற்காக மான் கொல்லப்படுவதும், படைப்பிற்காக மான் கொல்லப்படுவதும் ஒரே நிலையில் வைத்து பார்க்கத்தகுமான குற்றச்செயல்கள்தான். தனது படைப்பின் தீவிரத்தை அதிகப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காக, படைப்பாளர் லூ சுவான் எப்படி இத்தகைய கொலைசெயலுக்கு மனம் துணிந்தார் என்பது கண்டிப்பான விமர்சனத்திற்குரியது. இந்தச் செயல் லூ சுவானோடு முற்றுப்படுவதில்லை. உலக சினிமாவின் பல்வேறு தருணங்களில் திரைப்படக் காட்சிகளுக்காக இம்மாதிரியான உயிரினக் கொலைகள் நடந்தேறிய வண்ணமே உள்ளன. சிலவற்றை இங்கு சுட்டலாம். 

’வழக்குத் தொடர்தல்’ (Prosecution) என்னும் ஹங்கேரியப் படத்தில், ரஷ்யாவின் செஞ்சேனை ஹங்கேரியிலுள்ள ஒரு சிறு கிராமத்தை ஆக்கிரமிக்கும். அப்போது அங்கிருக்கும் கோழிகளையும், பன்றிகளையும் அவர்கள் கையகப்படுத்திக்கொள்வார்கள். அத்தோடு அப்படத்தின் இயக்குநர் சண்டோர் சாரா அடுத்த காட்சிக்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கலாம். அதைவிடுத்து, பன்றிகளின் தலையை அறுப்பதை நேரடியாக பதிவுசெய்திருக்கிறார். இந்த வன்முறை அனாவசியமானது. படத்தின் கதைத் தீவிரத்தை நிறுவ எத்தனையோ காட்சிகள் அந்தப் படம் முழுக்க இடம்பெற்றிருக்க, சாரா இந்த வன்முறைக் காட்சியையும் பயன்படுத்திக் கொள்ள முனைந்திருப்பது படைப்பு நோக்கிற்கும் படைப்பாளரது மனோவியலுக்குமான முரண்நிலையை சுட்டிக்காட்டுவதாக அமைந்துவிடுகிறது.

நான் மிகவும் மதிக்கும், தனிமனித வாழ்வுரிமையையே தனது கலைச் செய்தியாகக் கொண்டிருக்கும் இங்கிலாந்து இயக்குநர் மைக்கேல் விண்டர்பாட்டத்திடம் கூட, இந்தக் குற்றப் பண்பு இருக்கவே செய்கிறது. அவரது ‘இந்த உலகத்தில்’ (In this world) திரைப்படத்தில் ஒரு காளைமாடு தலை அறுபடும் காட்சி இடம்பெற்றிருக்கும். அந்தக் காட்சிக்கு நிச்சயமான தேவையேதும் இல்லையெனினும், இடம்பெற்றிருப்பது படத்தின் நேயப் பண்பை சந்தேகத்திற்குள் ஆழ்த்திவிடுகிறது. அரசியல் மற்றும் சமூக நல்நோக்கம் சாராத படைப்புக்களில் சித்தரிக்கப்படும் கொலைக் காட்சிகளை நான் இங்கு தற்போதைக்கு விட்டுவிடுகிறேன். லூ சுவான், விண்டர்பாட்டம் போன்றோரது படைப்புக்கள் அக்காட்சிகளைக் கொண்டிருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. 

மேற்கண்ட பிழை தவிர்த்த மற்றைய சராம்சத்தில் கூடுதல் சிறப்பம்சமாக, சமகால ஆசிய சினிமாவில் மேலோங்கிவரும் அமெரிக்கத் தொழில்நுட்பத்திற்கு இணையான கூறுகளை இந்தப் படம் பெற்றிருப்பதைக் குறிப்பிடவேண்டும். இவ்விதம் நான் கூறுவது அமெரிக்கத் திரைப்படங்களை ஒப்பிட்டு ஆசியத் திரைப்படங்களைக் கூறுவதற்காக அல்ல. மேலும் தொழில்நுட்பம் மாத்திரமே நல்ல கலைப்படைப்பை ஈந்துவிடாது என்பதையும் நாமறிவோம். அமெரிக்கத் திரைப்படங்களை விட்டுத் தள்ளுவோம். ஆனால், அவை கொண்டிருக்கும் தொழில்நுட்பம் மிகவும் இன்றியமையாதது. படைப்பை நோக்கி பார்வையாளனை முற்றிலுமாக கவனம் கூரச் செய்வதற்கு தொழில்நுட்பமும் ஒரு முக்கிய காரணிதான். எனவேதான் தரையில் கால் பாவாத பல்வேறு சாகச முயற்சிகள் தொழில்நுட்பத்தின் உதவியை இதயமாக பாவித்து ஹாலிவுட்டில் தலைபெருத்த உற்சாகத்தோடு அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. உலகளாவிய பார்வையாளர்களும் ரசனை மலிந்து அவற்றின் வசியத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.

எனினும் நல்ல கலைப்படைப்பிற்கு தொழில் முற்றிலுமாக அவசியப்படவில்லை என்று இங்கு கூறப்படுகிறது. இந்த மூன்றாமுலக படைப்பு மூலாதாரச் செய்தி அதிகபட்ச உண்மையைக் கொண்டதுதான். மறுப்பதற்கில்லை. ஆனால் இன்றைய பார்வையாளரின் ரசிப்புப் போக்கில், அமெரிக்க, ஐரோப்பிய சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சி அவற்றின் உலகளாவிய பரவலுக்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதற்கிணையான இடத்தைப் பெறுவதற்கு ஆசிய, லத்தீன் மற்றும் மூன்றாமுலக சினிமாவின் உயரிய வளர்ச்சியாகவே இந்தத் தொழில்நுட்பங்களை கைக்கொள்ள வேண்டும். லத்தீனமெரிக்க சினிமா இந்த வளர்ச்சியில் முன்னேறிய நடையுடன் இப்போது செல்லத் தொடங்கிவிட்டிருக்கிறது. அதனைப் போலவே, கதையாடல் நுட்பத்தில் மாத்திரமல்ல, தொழில்நுட்பத்திலும் சிறந்த இடத்தை நாம் தொட்டிருக்கிறோம் என்னும் மேம்பட்ட உண்மையை, கேளிக்கைக் கூறுகளையே தொடர்ந்து விஷ அம்புகளாக எய்தி மக்களது மனோகவனத்தை திரிபுபடுத்தியிருக்கும் ஹாலிவுட் சினிமாவை முன்வைத்து, நமது ஆசிய சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின்மூலம் அழுத்தமாகச் சொல்வதும் நமது கடப்பாடாகும். இத்தகைய குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப அணுகலிலும் ‘கெகெசிலி: மலையகப் பாதுகாப்புப் படை’ வரவேற்கத்தக்க முன்னிலையைப் பெறுகிறது. ஆசிய சினிமாவில் பரவிவரும் அகண்ட மானுட வெளிச்சத்தின் மற்றொரு உயிர்நாடியாகவும் இப்படத்தை நமது நினைவில் இருத்தலாம். 

நன்றி: தீராநதி ஆகஸ்ட் 2008