க்றிஸ்டோபர் கென்வொர்தி : 2.3 கதாபாத்திரம் கேமராவின் நகர்வை தீர்மானித்தல்


தமிழில்: தீஷா

2.3 கதாபாத்திரம் கேமராவின் நகர்வை தீர்மானித்தல்

காட்சியில் கதாபாத்திரத்தின் நகர்வுதான் கேமராவின் நகர்வையும் தீர்மானிக்கிறதென்றால், அதாவது கேமராவானது கதாபாத்திரத்தின் இயக்கத்திற்கேற்ப நகர்ந்து, அவரைப் படம்பிடிக்கிறதென்றால், பார்வையாளர்களால் எளிதில், தன்னை அந்தக் கதாபாத்திரத்தோடு அடையாளம் கண்டுகொள்ள முடியும். கதாபாத்திரம் நகர்கிறபோது, பார்வையாளர்களும் மனதளவில், அதனோடு சேர்ந்து இயங்குகிறார்கள். உரையாடல் பகுதி இல்லாத நேரத்தில், அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் நகர்வையும் (இயக்கத்தையும்), உணர்வையும் பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், அப்போது இந்த நுட்பத்தைப் பயன்படுத்துவது, சிறந்த பயனைக் கொடுக்கும்.  
 கேமரா நகர்வின்போது, கதாபாத்திரத்தின் உணர்வுநிலையைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவது கடினமாகயிருக்கும். ஏனென்றால், நம் கவனம் செல்லும் இடத்தில் நடிகரின் முகம் இருக்காது. மாறாக, நடிகரின் நகர்வு(இயக்கம்), ஷாட்டைத் தீர்மானிக்க அனுமதிப்பதால், கதாபாத்திரம் என்ன நினைக்கிறது அல்லது என்ன உணர்வுநிலையில் இருக்கிறதென்பதில், பார்வையாளர்களின் கவனத்தைத் தொடர்ந்து தக்கவைக்கிறீர்கள். அதேநேரத்தில், எதையோ யோசித்தபடியே நகர்ந்துகொண்டிருக்கிற கதாபாத்திரம், கேமரா அப்படியே ஒரே நிலையில் நகராமல் இருக்க, கதாபாத்திரம் மட்டும் அந்த ஃப்ரேமிலிருந்து விலகிச்செல்லும்போது, இதுவரை யோசித்துக்கொண்டிருந்த கதாபாத்திரம், ஒரு தீர்மானமான முடிவிற்கு வந்துவிட்டது என்பதை காட்சியின் வாயிலாகவே வெளிப்படுத்த முடியும்.

உதாரணத்திற்கு, The Book of Eli திரைப்படத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிற இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். முதல் ஃப்ரேமில், பின்னணியில் உடைந்த குழாய்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஷாட்டிலிருந்துதான் காட்சி துவங்குகிறது. இதுவொரு புதிய காட்சி இந்த முதல் சட்டகமே (ஃப்ரேம்) நிறுவிவிடுகிறது. காட்சி இந்த இடத்திலேயே கட் செய்யப்பட்டு, வேறொரு ஷாட் காட்டப்படுமா? அல்லது அந்த உடைந்த குழாய்களை நோக்கி கேமரா முன் நகருமா? என்பது இத்தருணத்தில் நமக்குத் தெரியாது. அப்போது, கதாபாத்திரம் ஃப்ரேமின் இடதுபுறத்திலிருந்து உள்ளே நுழைவது, பார்வையாளர்களாகிய நமக்கு ஒரு ஆச்சரியமான தருணம். இது அந்தக் கதாபாத்திரத்தின் மீதான நம் கவனத்தை இன்னும் வலுவாகக் குவிக்கிறது. ஒருவேளை, முதல் ஃப்ரேம் கட் செய்யப்பட்டு, இரண்டாவது ஃப்ரேமில், நடந்துவந்து கொண்டிருக்கிற அந்தப் பெண்ணைக் காண்பித்திருந்தால், இத்தகைய கவனக்குவிப்பிற்கு சாத்தியமில்லை. காட்டப்பட்டுக்கொண்டிருந்த அதே ஃப்ரேமை, பின்னணிச்சூழலாகக் கொண்டு, அந்தப் பெண் நுழைவதால் நம் கவனம் சட்டென அந்தப் பெண் மீது திரும்புகிறது.

Figure 1 The Book of Eli. Directed by the Hughes Brothers. Summit Entertainment 2010

பின்னர் கேமரா, அந்தப் பெண்ணுடன் சேர்ந்து நகர்கிறது. வலது புறமாக dolly நகர்வை மேற்கொண்டு, ஃப்ரேமில் அந்தப் பெண்ணை ஒரே நிலையில் வைத்திருக்க முயல்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஃப்ரேமைக் கவனியுங்கள், அந்தப் பெண் நகர்ந்தாலும், அவரது தலையானது, ஃப்ரேமில், கிட்டத்தட்ட ஒரே இடத்தில்தான் தோன்றுகிறது. அடுத்தடுத்த ஃப்ரேம்களில், உடைந்த குழாய்களைக் கொண்ட பின்னணிச்சூழலில் மாற்றம் ஏற்படுகிறது, இது அந்தப் பெண் புதிய இடத்திற்குச் செல்கிறார், வேறொரு இடத்தை நோக்கி நகர்கிறார் என்பதைக் குறிக்கிறது. ஆனால், (இறுதி ஃப்ரேமைத் தவிர) நாம் அந்தப் பெண்ணின் முகத்தைத் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. 
பின்னணிச் சூழல் பெரிதளவு மாறிய இடத்தில் (மூன்றாவது ஃப்ரேமில்) அந்தப் பெண் நிற்கிறார். இங்கே கிடைமட்ட குழாய்கள் முடிவடைகின்றன, மேலும் பல உடைந்த குழாய்கள் வெகுதூரம் வரை படர்ந்திருப்பது தெரிகிறது. இது அந்தப் பெண் முடிவெடுக்க வேண்டிய தருணத்தைக் குறிக்கிறது – அவள் தனது முந்தைய பாதையிலேயே தொடர்ந்து செல்லலாம், அல்லது புதிய பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் தன் பயணத்தைத் தொடரலாம். இரு பாதைகள் பிரிந்து செல்லும் தெருமுனையிலோ அல்லது நேர்ப்பாதை, குறுக்குப்பாதை என சாலை இரண்டாகப் பிரிந்திருக்கும் இடத்திலோ, இப்போது தான் எந்தப் பாதையில் செல்வது என கதாபாத்திரம் முடிவெடுக்கவேண்டிய சூழலில், இதுபோன்ற டெக்னிக்கைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். அதாவது, கதாபாத்திரத்துடன் சேர்ந்து நகர்ந்து வந்த கேமரா, கதாபாத்திரம் முடிவெடுக்க வேண்டிய சூழலில் நிற்கும்போது, கேமராவும் அப்படியே நின்று அவரைத் தொடர்ந்து படம்பிடிக்கிறது. 

அந்தப் பெண் நிற்கும்போது, கேமராவும் நிற்கிறது. இப்போது தான் எந்தத் திசையில் செல்வது என்று முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ள அந்தப் பெண்ணின் உறுதியற்ற தன்மையைக் காட்ட, அவர் ஏற்கனவே கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்படிச் செய்கிறார் இயக்குநர். அதைத்தான் கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தின் மூன்றாவது ஃப்ரேம் நமக்கு உணர்த்துகிறது. பின்னர் அந்தப் பெண் கேமராவிலிருந்து விலகிச் செல்கிறார், உடைந்த குழாய்கள் அதிகமுள்ள அந்த இடத்தை நோக்கி நகர்கிறார், ஆனால் கேமரா இப்போது நகர்வதில்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே, அந்தப் பெண்ணின் நகர்வைப் படம்பிடிக்கிறது. அந்தப் பெண், தேர்ந்தெடுத்த புதிய திசையில் பயணமாவதை, புதிய இடத்திற்குள் மெல்ல மெல்ல மூழ்கிப்போவதை, கேமரா ஒரே நிலையிலிருந்து பதிவுசெய்கிறது.

இந்த நுட்பத்தில் பல பரிமாணங்கள் உள்ளன. ஆனால், இதில் அடிப்படையான அம்சம் என்னவென்றால், கதாபாத்திரம் முன்னோக்கி நகரும்வரை, கேமரா நிலையானதாகயிருக்கும். நீங்கள் இப்படிச் செய்யும்போது, பார்வையாளர்களை, கதாபாத்திரத்தின் உள் உணர்வுகளுக்குள் கவனம் செலுத்த வைக்கிறீர்கள். கதாபாத்திரம் தன் மனதிற்குள் என்ன யோசிக்கிறது, என்ன பேசிக்கொள்கிறது என்பதன்மீது, பார்வையாளர்களின் கவனம் குவிகிறது. கதாபாத்திரம் வேறொரு புதிய திசையில் நகரும்போதும், கேமரா நிலையாக நின்று, அந்தக் கதாபாத்திரத்தின் பயணத்தைப் படம்பிடிக்கிறது. இதன்மூலம், அந்தக் கதாபாத்திரம் ஒரு முடிவெடுத்துவிட்டது என்பதையும், இது மாற்றம் நிகழ்ந்த தருணம் என்பதையும் காண்பிக்கிறீர்கள். 

தொடரும்...