தியோ ஆஞ்சலோபொலோஸின் சினிமா அழகியல் : யமுனா ராஜேந்திரன், அம்சவள்ளி உரையாடல்

தொகுப்பு : தினேஷ்

தி ட்ராவலிங் ப்ளேயர்ஸ் (The travelling players), தியோ ஆஞ்சலோபெலோஸ் இயக்கத்தில் 1975ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். மூன்று மணிநேரம், நாற்பத்திரண்டு நிமிடங்கள் கால அளவு கொண்ட, ட்ராவல்லிங் ப்ளேயர்ஸ் மொத்தமே, எண்பது லாங் ஷாட்கள் கொண்ட படம். ட்ராவலிங் ப்ளேயர்ஸ், கான் திரைப்பட விழாவில் க்ரிடிக்ட் விருது (International Film Critics Award (FIPRESCI)) வாங்கியிருக்கிறது. 1998ல் வெளியான அவரது எடர்னிடி அண்ட் எ டே (Eternity and a Day) திரைப்படம், பால்ம் தியோர் விருது வாங்கியிருக்கிறது. 

சினிமா உருவாக்கத்திற்கென்று தனித்த இலக்கண வரையறைகள் கிடையாது. பிற கலைகளோடு ஒப்பிட, மிக இளவயது கொண்ட, அறிமுகமாகி நூற்றியிருபது வருடங்களே ஆன சினிமாவை, உலகின் ஒவ்வொரு இயக்குனரும், தன் சூழல், தனக்குள்ள புரிதல், தனது அனுபவம் என்பதன் அடிப்படையில் இக்கலையை அணுகுகின்றனர். எனவே, இப்படித்தான் சினிமா எடுக்கப்பட வேண்டும், இசை இப்படித்தான் பயன்படுத்தப்பட வேண்டும், படத்தொகுப்பு இன்னின்ன இலக்கணங்களைப் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் வரைமுறைகளை உருவாக்கினாலும், இந்த இலக்கண வரையறைக்குள் சிக்காத படங்களும் வெளியாகி, அதுவும் பரவலான மக்களைச் சென்றடைந்துகொண்டுதான் இருக்கிறது. ஷாட்கள் குறிப்பிட்ட நீளத்திற்குமேல் சென்றால், அது காட்சியில் தொய்வு ஏற்படுத்தும், திரைப்படங்களின் கால அளவு இரண்டரை மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும் என்றெல்லாம் சில கற்பிதங்கள் இருக்கின்றன. 

ப்லிப்பைன் திரைப்பட இயக்குனர் லவ் தியாஸின் படங்கள், ஒன்பது மணி நேரம், பன்னிரண்டு மணி நேரம் ஓடக்கூடிய கால அளவு கொண்ட படங்களாக இருக்கும். அவரிடம் சென்று இதுகுறித்துக் கேட்கையில், “படம் மிக நீண்ட நேரம் ஓடக்கூடியதாக இருந்தாலென்ன? குறுகிய கால அளவு கொண்டதாக இருந்தாலென்ன? அதுவொரு திரைப்படம், அவ்வளவுதான். திரைப்படத்தின் கால அளவை மட்டும் பார்க்காதீர்கள், ஒரு திரைப்படத்தை, திரைப்படமாக பாருங்கள்” என்கிறார் லவ் தியாஸ். இன்றைக்கு, லாங் ஷாட்ஸ் கொண்ட படங்கள் என்று பார்த்தால், உலக சினிமாவில், தார்க்கோவ்ஸ்கி, தியோ ஆஞ்சலோபெலாஸ், லவ் தியாஸ், போன்றோரைச் சொல்லலாம். 

”வாழ்க்கையை எந்தவிதமான இடையீடோ, இடையூறோ இல்லாமல், தொடர்ந்து அதன் பல்வேறு பரிமாணங்களோடு பார்ப்பது என்பது லாங் ஷாட்ஸ்களில்தான் சாத்தியம்”, என்று தார்க்கோவ்ஸ்கி சொல்கிறார். கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிம்பங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்தியல் சார்புகள், இது படத்தொகுப்பு செய்யப்பட்ட படங்களில்தான் கூடுதலாக இருக்கிறதென்பது தார்க்கோவ்ஸ்கியின் வாதம். இவர்கள், வாழ்க்கையினுடைய எல்லா அம்சங்களோடும், எந்தவிதமான இடையீடும் இல்லாமல், திரைப்படத்தை உருவாக்குவதற்கான வழிமுறையையாக லாங் ஷாட்ஸைக் கைக்கொள்கின்றனர். 

BFI | Sight & Sound | Theo Angelopoulos: the sweep of history
Theo angelopoulos

இந்த அடிப்படையோடு, தியோ ஆஞ்சலோபெலோஸின் மேலும் மூன்று பரிமாணங்களை எடுத்துக்கொள்ளலாம். ஒன்று, அவருடைய படங்கள் எல்லாமே லாங் ஷாட்கள். அற்புதமாக படம்பிடிக்கப்பட்ட ஒரு காட்சியினுடைய சகலவிதமான புற அழகுகள், புற அசைவுகள், அதேபோல, ஒரு மனிதனுடைய அக அசைவுகள், அகவுலகு போன்றவற்றையும் தழுவி, லாங் ஷாட்களை தியோ ஆஞ்சலோபெலாஸ் பாவிக்கிறார். ட்ராவலிங் ப்ளேயர்ஸ், எலக்ட்ராவினுடைய சகோதரர் இறந்துவிடுவார். அவரைப் பார்க்க எலக்ட்ரா சிறைச்சாலைக்கு வருவார். அந்தக் காட்சியைப் பார்த்தால், கடல், கடல் அருகில் இருக்கிற சிறை, சிறை மதில், அந்த சிறை மதில் மேல் நான்கைந்து காவலாளிகள் நின்றுகொண்டிருப்பார்கள். தூரத்திலிருந்து எலக்ட்ரா நடந்து வருவார். கேமரா அப்படியே படம்பிடித்து வரும். முழு சிறையையும் கேமரா காண்பிக்கும். பார்வையாளர்களுக்கு முழுமையான சித்திரம் கிடைக்கும். சிறையினுடைய, பாதுகாப்பு அரண், தனிமை, என்பதையெல்லாம் காண்பிக்கும்போது, அற்புதமான இசை, முஹாரி ராகம் போல வெளிப்படும். அந்தக் காட்சி உணர்வு என்ற அளவில் முழுமையை உருவாக்கும். இதுபோன்றுதான், தியோ ஆஞ்சலேபெலாஸ் காட்சிகளைக் கட்டமைக்கிறார். 

ஷாங் ஷாட்களின் மூலம், புறவுலகு, புறவுலகை அகலிக்கிற மாதிரியான சித்திரம், அகவுலகு, அகவுலகை அகலிக்கிற மாதிரியான சித்திரம், இது ஒரு பரிமாணம். இன்னொரு பரிமாணம், இந்த முழு படத்திலும் பார்த்தீர்களேயானால், நான்கே நான்கு இசைக்கருவிகள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒன்று, அக்கார்டியோ, ஹார்மோனியம், வெண்கல மணி போன்ற ஓசையெழுப்பும் கருவி, இன்னொரு இசைக்கருவி. இந்தப் படம், நாடகக் குழுவைப் பற்றியது. ஊர்விட்டு ஊர்செல்லும் நாடகக் கலைஞர்களைப் பற்றிய கதை. இந்த மூன்றரை மணி நேரப் படத்தில், உண்மையாகவே, இசை என்று பயன்படுத்திய சீக்வென்ஸை மட்டும் எடுத்துக்கொண்டால், பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள்வரைதான் இருக்கும். மிச்ச காட்சிகளில் எல்லாமே அமைதிதான் இடம்பெற்றிருக்கும். அவருடைய சினிமாவினுடைய ஒரு முக்கியமான அம்சம் அமைதி. 

மூன்றாவது பரிமாணம், அவருடைய தீம்கள் பெரும்பாலும் ஒரு கோரியோகிராஃபி போல இருக்கும். ஒரு திட்டமிட்ட, ஸ்பேஸை எடுத்துக்கொண்டு, அந்த ஸ்பேஸில் கதாபாத்திரங்கள் எங்கு நிற்க வேண்டும், எப்படி நகர வேண்டும், என்ன பேச வேண்டும், என்றெல்லாம் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நடன லயம் கொண்ட விதமாக, காட்சிகள் நடந்தேறும். அகிரா குரசோவாவினுடைய ஆக்‌ஷன் திரைப்படங்களில் பார்த்தால், அந்த இடவெளி, அந்த ஸ்பேஸில் கதாபாத்திரங்கள் நிற்கிற விதம், வாளை எடுப்பது, எதிரியை நோக்கி முன்னகர்வது இதெல்லாம் கோரியோகிராஃபி போல அமைந்திருக்கும். அதேபோல, அமெரிக்காவின் ஹாலிவுட் வெஸ்டர்ன் படங்களில் பார்த்தீர்களேயானால், கெளபாய்களுக்கிடையே நடக்கிற சண்டையில் இதுபோன்ற கோரியோகிராஃபியைப் பார்க்க முடியும். உதாரணத்திற்கு, குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தை எடுத்துக்கொள்ளலாம். இப்படி, படத்தை கோரியோகிராஃபிக்கலாகச் செய்வது, வேறு வேறு இயக்குனர்களின் பண்புகளாகவும் இருக்கிறது. இசை தொடர்பாக, தியோ ஆஞ்சலோபெலோஸிற்கு இருந்த பண்பு, சத்யஜித் ரேவிடமும் இருந்திருக்கிறது. எந்தெந்த இடங்களில் இசையைப் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த இடங்களில் அமைதி பிரதானமாக இடம்பெற வேண்டும், என்ற வரையறையை அவரே உருவாக்குவார். ரே, ”படத்தில் எந்த இடத்தில் இசை வரக்கூடாது”, என்று ஒரு சினிமாக் கலைஞனுக்குத் தெரிய வேண்டும் என்கிறார். இந்த புரிதல் தியோ ஆஞ்சலோபெலோஸிற்கும் இருக்கிறது. 

Theodoros Angelopoulos – Movies, Bio and Lists on MUBI

இவருடைய படங்களில் க்ளோஸ் அப் ஷாட்கள் அநேகமாக இல்லையென்றே சொல்லலாம். அல்லது மிகக் குறைவான க்ளோஸ் அப் ஷாட்களே பயன்படுத்தியிருப்பார். அவருடைய ஷாட்களில், இயற்கை, அதன் சூழல் பிரதானமாக இடம்பிடித்திருக்கும். அதைக் காட்சிக்குள் கொண்டுவந்திருப்பார். இசையை, ஓவியத்தைப் பார்க்கும்போது, எப்படி உங்கள் மனம் மனோரதிய நிலையை அடைகிறதோ, அந்த உணர்வு தியோ ஆஞ்சலோபெலோஸின் காட்சிகளிலும் இருக்கும். உதாரணமாக, முதன் முதல் இந்த நாடகக் குழுவினர் ஒரு ஊருக்குள் வருகிறார்கள். பெரிய கட்டிடத்தின் முன் நிற்கிறார்கள். எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர். டிராமா ஆரம்பமாகிறது. இதேபோல, மன விகர்சிப்பு, ஆச்சரியம் ஒரு கிராமத்திற்குள் இவர்கள் பாட்டு பாடிக்கொண்டு நடந்து வருவார்கள். கோழி பிடிக்கிற காட்சி. இப்படி மகிழ்ச்சியை உருவாக்குவதுபோல, இந்த கான்வாஸ் பெரிய துயரத்தையும் படம் பார்ப்பவர்கள் மத்தியில் உருவாக்கும். நீராவிப் படகு கடற்கரையோரத்தில் நிற்கும்போது, மூன்று பேரும் பார்க்கிற காட்சி. எலட்ரா சிறைக்குச் செல்கிற காட்சி இதற்கான உதாரணங்கள். 

உரஸ்ட்ரியா இறந்துகிடக்கிற காட்சியைக் கூட பாருங்கள். அந்த அறையை எப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்று பாருங்கள். ஒரேயொரு விளக்கு வெளிச்சம்தான் அங்கு இருக்கும். மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். இதுதான், தியோ ஆஞ்சலோபெலோஸின் தனித்துவமான திரைமொழி. மற்றது, அவருடைய சட்டகங்களில், இயற்கை எந்தளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறதோ, அந்தளவிற்கு மனிதர்களும், மனிதக்கூட்டமும் அதிக முக்கியத்துவம் பெறும். எப்பொழுதுமே, கேமராச் சட்டகங்கள் மக்களால் நிரப்பப்படும். மக்கள் மீதும், மக்களின் உணர்வுகள் மீது நேசம் கொண்ட ஒரு கலைஞன்தான் இதுபோன்று கேமராச் சட்டகத்தைப் பாவிக்க முடியும். தார்க்கோவ்ஸ்கி படங்களில் கூட, தனிநபர் சார்ந்ததாகவும், அண்மைக் காட்சி கொண்டவையாகவும் இருக்கும். ஆனால், தியோ ஆஞ்சலோபெலோஸின் படத்தில் பெரும்பாலும், ஒரு தனிநபர், இன்னொரு தனிநபருடன் சேர்ந்துதான் இருப்பார். தனிநபருக்கு அதிக முக்கியத்துவம் தராமல், மனிதக் கூட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் தியோ.

தனிமனிதனுடைய விடுதலை, மக்களின் விடுதலை, அந்நாட்டினுடைய விடுதலை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் சார்பில் அவரது படங்கள் நிற்கின்றன. சினிமாவை ஒரு கலையாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் புரிந்துகொண்ட எத்தனையோ சினிமாக்காரர்கள் இருக்கிற சூழலில், சினிமாவை மனித விடுதலைக்கான ஒரு உலகமாக பாவிப்பவர் தியோ ஆஞ்செலோபெலோஸ். அவருடைய எல்லா படங்களிலும் இந்தப் பண்புகள் இருக்கும். பொறுப்புணர்வு மிக்க, உறுதியான கலைஞன் அவர். இன்றைக்கிருக்கிற பல இயக்குனர்களுக்கு, தியோ ஆஞ்சலோபெலோஸ் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறார். அதேபோல, தொழில்நுட்ப ரீதியாக, இந்தக் குறிப்பிட்ட ட்ராவலிங் ப்ளேயர்ஸினுடைய கதை சொல்லல் தனித்து நிற்கிறது. ட்ராவலிங் பளேயர்ஸில் இருக்கிற மிக முக்கியமான விஷயம், காலத்தை அவர் கடத்துகிறார். 1939 லிருந்து 1952 வரை நிகழ்கிற கதையை, வரலாற்றுச் சம்பவங்களோடு இணைத்து வெளிப்படுத்துவது அசாதாரணமானது. 

காட்சி, எந்தக் காலத்தில் நடக்கிறது என்பதை காலம் போவதை வைத்துத்தான் பார்வையாளர்கள் முடிவு செய்ய முடியும். வரலாற்றில், இந்த ஒடுக்குமுறையாளன், அதற்கு எதிராக போராடுகிறவர்கள், மக்கள் திரள், எப்போது, பாசிசம் உச்சநிலையை அடைகிறது என்பதை இந்தப் படம் சொல்கிறது. பாசிஸ்டுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையில், க்ளப்பில் ஒரு விவாதம் நடக்கும். பாசிஸ்டுகள் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு, கம்யூனிஸ்டுகளைக் கொல்லவேண்டும் என்று பேசிக்கொண்டிருப்பார்கள். மறுபக்கம், அவர்கள் அழகழகான வண்ண உடைகளை அணிந்துகொண்டு, மகிழ்ச்சியாகப் பாடல்கள் பாடிக்கொண்டிருப்பார்கள், மக்கள் சுதந்திரம் அடைய வேண்டும், மகிழ்வாக வாழ வேண்டும் என்று பேசுவார்கள். இறுதியில், பாசிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், கம்யூனிஸ்டுகள் அங்கிருந்து வெளியேறுவார்கள். அதற்குப் பிறகு, பாசிஸ்டுகள் அணி நடையாக, அப்படியே நடந்து செல்வார்கள். இது 1947 லிருந்து 1949-க்குள் நடக்கிற காட்சி. பாசிஸ்டுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே நடந்த உரையாடலின் சாரம், இந்த வருடங்களுக்குள்தான் நடந்திருக்கிறது. அணி நடையாக அவர்கள் நடந்துசென்று, ஒரு கூட்டத்திற்குள் நுழைவார்கள், பாசிஸ்டுகள் பெரிய ஆரவமாக கோஷம் போட்டு பேசிக்கொண்டிருப்பார்கள். இந்தக் காட்சி நடப்பது, 1952. 

The Travelling Players (1975) | MUBI

1949லிருந்து பாசிஸ்ட் சென்சிபிளிட்டி 1952ல் அங்கேயிருக்கிற, ஒரு நேஷனலிஸ்ட் அரசின், அதே அரசியல் சென்சிபிளிட்டியோடு நுழைகிறது. இந்தக் காலங்கள் மாறினாலும், வருடங்கள் மாறினாலும், அந்த பாசிச அணுகுமுறை தொடர்ந்துகொண்டேயிருக்கிறது என்பதை அழகாகக் காட்சியின்மூலம் வெளிப்படுத்துகிறார். பாசிஸ்ட் கண்ணோட்டம், எப்படி முதல் உலகப்போரில் தொடர்ந்து இருந்ததோ, இரண்டாம் உலகப்போரிலும் தொடர்ந்து இருந்ததோ, 1952 வரைக்கும், தொடர்கிறது என்று காட்சிகளால் வெளிப்படுத்துகிறார். 
க்ரீஸின் மேல், இத்தாலி முதல் ஆக்கிரமிப்பைச் செய்கிறார்கள். அதற்கடுத்து, ஜெர்மன்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். ஜெர்மன் ஆக்கிரமிப்பு செய்யும்போது, அங்கிருக்கிற தேசியவாதிகள், கம்யூனிஸ்டுகள், பிரிட்டன், அமெரிக்கா, ப்ரான்ஸ் இவர்களெல்லாம் சேர்ந்து எதிர்கொள்கிறார்கள். ஹிட்லரை தோற்கடிக்கிறார்கள். அதற்குப் பிறகு, அமெரிக்காவும், பிரிட்டனும், ப்ரான்சும் அந்த நாட்டிற்குள் இருக்கிறது. அதற்குப் பிறகு 1944-ல் ஹிட்லரை முறியடிக்கிறார்கள். 1947லிருந்து 1949வரை என்ன நடக்கிறதென்றால், அந்த க்ரீஸிற்குள், ஒரு நேஷனலிஸ்ட் அரசாங்கம் இருக்கிறது. யுனிட்டி கவர்மெண்ட், கம்யூனிஸ்டுகளும் மற்றவர்களும் கொண்ட அரசுதான் உருவாக்கப்படுகிறது. பிரெஞ்சுக்காரர்களும், பிரிட்டிஷ்காரர்களும், அமெரிக்கக்காரர்களும் மேற்பார்வை செய்கிறார்கள். ஆனால், அந்த தேசியவாதிகள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்றால், கம்யூனிஸ்டுகளை ஒழிக்க வேண்டும், அவர்களைக் கொலை செய்யவேண்டும் என்பதில், 33 நாட்கள், பெரிய போராட்டங்கள் அங்கு நடக்கின்றன. படத்தில் எலெக்ட்ரா, இதை கேமராவைப் பார்த்துச் சொல்வார். 33 நாட்கள் நடந்த போராட்டத்தில் 200 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர். இன்னும் நிறைய பேர் காயமடைந்திருக்கிறார்கள். அப்போதுதான், ’பேட்டில் ஆஃப் ஏதென்ஸ்’ என்று குறிப்பிடுகிறார். 

அம்சவள்ளி: தியோ ஆஞ்சலோபெலோஸ் சினிமாவை அணுகும் விதம் மற்றும் திரைமொழி குறித்தும், அவரது அரசியல் நிலை குறித்தும், இவ்விரு நிலைகளிலிருந்தும் அணுக வேண்டும். 

யமுனா ராஜேந்திரன்: சினிமா மட்டுமல்ல, எந்தக் கலையுமே, சமூகத்தோடு தொடர்புடையது. சமூகம், சமூகத்தில் வாழ்கிற, மனிதர்கள் எதிர்கொள்கிற அகமும் புறமுமான பிரச்சினைகளை, ஏதோவொரு வகையில் சினிமா பற்றிப்பிடிக்க முனைகிறது. உண்மையான வாழ்விற்கும், சினிமாவிற்கும் இருக்கிற உறவில், நிஜ வாழ்வினுடைய பல்வேறு பரிமாணங்களையும் உள்ளடக்கி எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும் என்ற கேள்விதான் எல்லா கலைஞர்களிடமும் இருக்கிறது. ஆந்த்ரே பாசின், தர்க்கோவ்ஸ்கி, லவ் தியாஸ் போன்றோர், இப்பிரச்சினையைக் கையாள்வதை, அவர்களது படங்களில் நாம் பார்க்கமுடியும். இந்த இயக்குனர்கள் எல்லோருமே, லாங் ஷாட்ஸ்களை தன் கதைசொல்லலுக்குப் பயன்படுத்தியவர்கள். இவர்கள் இப்படிச் செய்ததற்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஆந்த்ரே பாசினோ, தார்க்கோவ்ஸ்கியோ, லாங் ஷாட்ஸ் மற்றும் எந்தவிதமான எடிட்டிங்கும் இல்லாத, கதைசொல்லலை விரும்பினார்கள் என்றால், படத்தொகுப்பு என்பது, உண்மையிலேயே ஒருவித கருத்தியல் செயல்முறை (ideological act). அதேபோல பொலிடிகல் ஆக்ட். அது நேச்சரிலிசத்தையும், ரியலிசத்தையும் சிதைக்கிறது. இடையீடு செய்கிறது. குறுக்கிடுகிறது. அதனால், ஐடியலாஜிகல் மற்றும் பொலிட்டிகல் ஆக்டிற்கு வெளியில், முழு காட்சியும் தழுவி, முழு மனிதர்களும் தழுவி உள்ளும் புறமுமாக இதை எப்படிச் சொல்வது என்ற விஷயத்தில், பாசினும், தார்க்கோவ்ஸ்கியும் லாங்க் ஷாட்டை முன்வைக்கிறார்கள். தியோவும், லவ் தியாஸும் இந்த விஷயத்தை ஒப்புக்கொண்டாலும்கூட, அவர்களுடைய படங்கள் ஒரு ஐடியலாஜிக்கல் இண்டவென்ஷனாகவும், பொலிட்டிகல் இண்டர்வென்ஷாகவும் இருக்கிறது. 

அம்சவள்ளி: ஒரே சமயத்தில், காட்சியினுடைய, மனிதர்களுடைய பல்பரிமாணங்களை காட்சியமைப்பிற்குள் கொண்டுவரும்போது, பாசினிடமும், தார்க்கோவ்ஸ்கியிடமும் இல்லாத, அவர்கள் தவிர்க்க விரும்புகிற, அந்த ஐடியலாஜிக்கல், பொலிடிக்கல் இண்டர்வென்ஷனை எப்படி ஆஞ்சலோபெலோஸும், லவ் தியாஸும் நிலைநாட்டுகிறார்கள்? 

8. “The Travelling Players”, Theo Angelopoulos (1975) – Obsessive Musings

யமுனா ராஜேந்திரன்: தார்க்கோவ்ஸ்கியின் படங்களை எடுத்துக்கொண்டால், அவை பெரும்பாலும் மானுட வாழ்வின் அடிப்படையான தத்துவ கேள்விகள் தொடர்பான விஷயங்கள்தான். அதேபோல, ஆந்த்ரே பாசினும், க்ளாசிக்கல், ப்ளாசிபிக்கல் விஷயங்களிலிருந்துதான், லாங் ஷாட்களைப் பார்க்கின்றார். ஆனால், தியோவும், லவ் தியாஸும் இந்த சமூகம் சார்ந்த தத்துவத்தோடு அரசியல் நிலைப்பாட்டையும், அரசியல் சார்ந்த விசயங்களையும், வெளிப்படுத்துகிறார்கள். தங்களுடைய நிலம் சார்ந்த, வரலாற்று ரீதியிலான செய்திகளைத் தொடர்ந்து வாசிக்கிறவர்களாக இருக்கிறார்கள். தொடர்ந்து இதைப் பற்றிக் கேட்கிறார்கள். உதாரணத்திற்கு, தியோ ஆஞ்சலோபெலோஸ் க்ரீக் கம்யூனிஸ்ட் பார்ட்டியினுடைய நாளிதழின் ஃப்லிம் கிரிட்டிக். வெகுகாலமாக அவர் திரைப்பட விமர்சகராகத்தான் இருந்தார். அந்தச் செயற்பாட்டில் அவர் பங்குபெற்றார், பிலாசிபிக்கலாக, ட்ரெடிஷனல் பிலாசிபிக்கல் மட்டுமல்லாமல், மார்க்சிய தத்துவம் தொடர்பாகவும் படித்தார். அதேபோல, தன்னுடைய நாட்டின் வரலாற்றை, தனது எல்லா படங்களிலும் எடுத்துக்கொள்கிறார். அகதி பிரச்சினைகள், நிறவெறி பிரச்சினைகள், இடப்பெயர்வு, பாசிசம், கம்யூனிஸ போராட்டம், பெண்கள் சார்ந்த போராட்டம், என அனைத்தையும் எடுத்துக்கொள்கிறார். இந்த இடத்தில் இல்மஸ் குணே”கலைக்கென்று அதற்கேயுரிய தனிக்கூறுகள் உண்டு” என்று சொன்னதை நினைவுகூறலாம். அந்தக் கூறுகளை நாம் அனுசரிக்க வேண்டும். இதில் நமது கருத்தியலிலோ, தத்துவ நிலைப்பாட்டிலோ, சொல்லவருகிற கருத்தினுடைய அடிநாதமாக, பின்புலமாக, அதனுடைய இயற்கையான ஆதாரம் மட்டும்தான் இருக்கும். தியோ ஆஞ்சலோபெலோஸ், அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமிலும், அவருடைய ஒவ்வொரு காட்சியினுடைய நீட்சியிலும் அவருடைய வாழ்வு தொடர்பான, தத்துவ பார்வை ஓடிக்கொண்டேயிருக்கும். ஆனால், துருத்திக்கொண்டிருக்காது. அந்தளவில் பார்த்தால், இவர்கள் எப்படி, ஐடியலாஜிக்கல், பொலிடிக்கல் இண்டர்வென்ஷன் இல்லாமல், வாழ்வின் முழு பரிமாணம் சார்ந்து, அந்த லாங் ஷாட் கொண்டுவருகிறது என்று நினைத்தார்களோ, அதையும் தக்கவைத்துக்கொண்டு, அதேசமயத்தில் உலகம் குறித்த ஒரு பார்வையை, தன்னுடைய நாட்டின் முழு வரலாறும், அரசியலும் குறித்த பார்வையையும், முன்வைக்கிறார். இது அவரது தனித்துவம். அதேபோல, லவ் தியாஸின் படங்களையும் பார்க்க முடியும். மிக மிக நீளமான ஷாட்கள் எடுப்பவரும், மிக மிக நீண்ட கால அளவு ஓடுகிற படங்களை எடுப்பவரும் லவ் தியாஸ்தான். எட்டு மணி நேர கால அளவுதான், அவரது சராசரியான திரைப்படக் கால அளவு என்று சொல்லலாம். இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் ஓடக்கூடிய திரைப்படங்களையும் அவர் எடுத்திருக்கிறார். ஆனால், அதுவும் கூட, மூன்று அல்லது நான்கு ஷாட்களில் மொத்த படமும் முடிந்துவிடும். இதுதான் அவரது திரைமொழி. அதேநேரத்தில், ப்லிப்பைன்ஸினுடைய ரத்தம் தோய்ந்த, வன்முறை நிறைந்த, அந்த மக்களினுடைய போராட்ட உணர்வு, மக்களின் வறுமை, இதற்கு மத்தியில் அம்மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்ற விஷயத்தை லவ் தியாஸின் படங்கள் விவாதிக்கிறது.
இந்த வகையில்தான்., லாங் ஷாட்டில், அரசியலையும், கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும் பின்பற்றவேண்டாம் என்ற நிலைப்பாட்டைப் புறந்தள்ளி, அரசியல், சித்தாந்த ரீதியிலும் லாங் ஷாட்ஸ்களை தியோ ஆஞ்சலோபெலோஸ், லவ் தியாஸ் போன்றோர் சாதிக்கின்றனர். இந்த வகையில்தான், அவர் தனித்துவமிக்க கலைஞனாக அங்கீகரிக்கப்படுகிறார். 

அடுத்து, அவருடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு வருவோம். அவருடைய எல்லா படங்களிலும் பார்த்தீர்களேயானால், க்ரீக்கின் வரலாற்றில் பல்வேறு காலங்களில் நடந்த நிகழ்வுகளை எடுத்துக்கொள்கிறார். அவருடைய படங்கள், க்ரீக் மித்தாலிஜியை எடுத்துக்கொள்கிறது. அதனால், க்ரீக் மக்களுக்கு மிகப்பெரிய தொடர்பாடலை ஏற்படுத்தக்கூடிய படங்களாக அவை இருக்கின்றன. அதனுடைய நெடும் வரலாற்றிலிருந்து, ஆயிரக்கணக்கான வரலாற்றிலிருந்து கதாபாத்திரங்களை இவர் எடுத்துக்கொள்கிறார். காப்பியங்கள் பேசுகிற துயர், துரோகம், அன்பு, காதல் இதுபோன்ற விஷயங்களை வரலாற்று ரீதியில் தொடர்புபடுத்தி, அவர் பயன்படுத்துகிறார்.
இந்த ட்ராவலிங் ப்ளேயர்ஸ் படம்கூட, பல்வேறு மக்களால் பார்க்கப்பட்டு, அதிக வசூல் செய்த படம்தான். இன்றைக்கு நீங்கள் பார்த்தாலும், அதன் காட்சியழகில் அப்படியே மனம் பரிதவிக்கிறோம், அப்படியே ஈர்க்கப்படுகிறோம். அவருடைய அரசியல் என்பது, மிக நீண்ட நெடிய வரலாற்றை மக்களோடு தொடர்புபடுத்துகிறது. சமகாலத்தில் இருக்கிற மக்களின் அரசியலோடு தொடர்புபடுத்துகிறது. இந்த வகையில்தான், அவருடைய அரசியல், கிரீக்கின் வரலாற்றில் இருந்த, பல்வேறு நாடுகளினுடைய ஆக்கிரமிப்பு, அதற்கு எதிராக, லிபரல்களும், கம்யூனிஸ்டுகளும் எவ்வாறு போராடினார்கள் என்ற விஷயம், அதைப்போலவே, கிரீக்கில் இருந்து பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற மக்களின் துயரம், பின்னர் க்ரீஸிற்கு அகதிகளாக வந்து குடியேறிய பல்வேறு மக்களின் துன்பக்கதைகள், போரினால் பாதிக்கப்பட்ட கணவனை, மகனை, காதலனை இழந்த பெண்களின் துயர், இவற்றையெல்லாம்தான் அவரது படங்கள் பேசுகின்றன. ஆகவே, ஒரு வரலாற்றின், சாட்சியாகவும், அதனுடைய மனசாட்சியாகவும் இருந்து, பேசுகிற அதே நேரத்தில், கலை, கலைக்கேயுரிய அந்த இலக்கணங்கள், உச்சங்களைத் தன் காட்சிமொழியில் கொண்டுவருகிறார். இந்தவகையில், தியோ ஆஞ்சலோபெலோஸ் எவராலும் எட்டப்பட முடியாத, ஒரு நிலையில் இருக்கிறார். 

அவருடைய படங்களில், ஒரு ஃப்ரேம் கூட, தனி மனிதனுடைய க்ளோஸ் அப், தனி மனிதனை முக்கியப்படுத்திப் பார்க்க முடியாது. இது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அது, சுற்றுப்புறம் சார்ந்த, இயற்கை சார்ந்த, அவனைச் சுற்றிலும் இருக்கிற பல்வேறு புறப்பொருட்கள் சார்ந்த ஒரு மனிதனாகத்தான், அவர் மனிதனைச் சித்தரிப்பார். மூன்று, நான்கு மனிதர்கள் இல்லாமல், காட்சியே இருக்காது. காட்சியின் மையமாக ஒருவர்தான் இருப்பாரேயானாலும், அந்த ஒருவரை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள், இந்த மற்றவர்களைப் பற்றி, இவர் எப்படி தன்னுடைய உணர்வில் உணர்கிறார் என்ற விஷயத்தை அவருடைய ஃப்ரேம் சொல்லும். இது தியோ ஆஞ்சலோபெலோஸின் திரைமொழியில் இன்னொரு முக்கியமான அம்சம். 

The Travelling Players (1975) | film freedonia

அதேபோல, இவருடைய படங்களில், எல்லா காட்சியமைப்புகளும், கோரியோகிராஃபி போல இருக்கும். நடன லயம் கொண்ட விஷயங்கள் இருக்கும். அகிரா குரசோவாவின் சாமுராய் படங்களில் அமைந்த கோரியோகிராஃபி போலயிருக்கும். சார்லி சாப்ளினின் நடிப்புகூட ஒரு வகையில் கோரியோஃகிராபிதான். எல்லாமே நடன லயமாகவேதான் இருக்கும். ஆனால், அதில் சாப்ளின் எனும் தனிமனிதனுடைய நடன லயம் என்றளவில் இருக்கும். ஆஞ்சலோபெலோஸின் படங்களில், இது மக்கள் கூட்டத்தினுடைய நடன லயம். தனிமனிதருக்கும் - இன்னொரு தனிமனிதருக்கும், தனி மனிதருக்கும் - மக்கள் கூட்டத்திற்கும், தனி மனிதருக்கும் இயற்கைக்கும் இடையேயான சூழலைத்தான், அவரது சட்டகங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆகவே, மக்களைப் பற்றி, மக்களினுடைய உறவுகளைப் பற்றி, அவர்கள் வரலாற்றில் எவ்வாறு வைக்கப்பட்டிருந்தார்கள், அவர்கள் வரலாற்றை எவ்வாறு நீந்திக் கடந்தார்கள், வரலாற்றுச் சூழலை எப்படி எதிர்கொண்டார்கள், போன்ற விஷயங்களை தியோ ஆஞ்சலோபெலோஸ் கதைக்களனாக்குகிறார். ஒரே சொல்லில் சொன்னால், சினிமா என்ற கலையினுடைய, உச்சபட்சமான சாத்தியங்களை உள்வாங்கிக்கொண்டு, மனித குலத்தினுடைய பிரச்சினைகள் சார்ந்து, தெளிவான தத்துவ தரிசனத்தோடு அவருடைய எல்லா படங்களும் கொண்டிருக்கின்றன. அவருடைய முதல் படத்திலிருந்து, கடைசிப் படம் வரைக்கும், இந்த தத்துவ தரிசனத்தைக் காணலாம். இந்த, விஷயம், உண்மையிலேயே உலக சினிமாவில் எவராலும் சாதிக்கப்படமுடியாதது என்று சொல்வேன். செவ்வியல் தன்மை, எதிர்காலம் தொடர்பான பார்வை, சமகால மதிப்பீடுகள் இந்த மூன்றையும் கொண்ட ஒரு மகத்தான கலைஞன் என்றால் என்னுடைய அனுபவத்தில் தியோ ஆஞ்சலோபெலோஸ்தான். இந்த நூற்றியிருபது ஆண்டு சினிமா வரலாற்றில், ஒரேயொருவரைச் சொல்லுங்கள் என்று, இப்போதைக்கிருக்கிற திரைப்பட இயக்குனர்களையே கேட்கிறபோது, அவர்கள் என்ன சொல்வார்களென்றால், சார்லி சாப்ளின் என்று சொல்வார்கள். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு இயக்குனர் என்ற அளவில், இந்த நூறாண்டு சினிமாவில், ஒரேயொரு உன்னதமான திரைக்கலைஞர் என்று யாரைக் கருதுவீர்கள் என்று கேட்டால், என்னுடைய பார்வையனுபவத்திலிருந்து நான் தியோ ஆஞ்சலோபெலோஸைத்தான் குறிப்பிடுவேன். 

அம்சவள்ளி: தியோ ஆஞ்சலோபெலோஸின் படங்கள் கதைக்களனில் பல்வேறு அடுக்குகளைக் கொண்டிருக்கின்றன. க்ரீக் மித்தாலஜி பற்றிய படம்தான் இது. க்ளெமென்ஸ்டா, எலெக்ட்ரா, இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாமே க்ரீக் மித்தாலஜியில் வருபவை. அதற்குள், 1939லிருந்து 1952 வரை என, இவ்வளவு நீண்ட காலத்தை ஒரு மூன்றரை மணி நேரப் படமாக மாற்றியிருக்கிறார். வழக்கமாக, வருடங்கள் மாறியதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்த, திரையில் மாறியிருக்கிற வருடத்தை எழுத்தால் கொடுப்பார்கள், அல்லது காலண்டர் போன்றவற்றைக் காண்பிப்பார்கள், இல்லையேல் வாய்ஸ் ஓவரில் இது தெரிவிக்கப்படும். ஆனால், ’ட்ராவலிங் ப்ளேயர்ஸ்’ படத்தில் வருடங்கள் மாறுவதை வெளிப்படையாக எங்குமே சொல்லவில்லை. எலக்ட்ரா, தன் அண்ணனுடன் போராடிய இன்னொருவரைச் சந்தித்துப் பேசும்போதுதான், ‘இத்தனை வருடங்கள் கடந்துவிட்டன’ என்பதைக் குறிப்பிடுகிறார். 

யமுனா ராஜேந்திரன்: இந்தப் படத்தில் வருடங்களைக் காட்சிகளின் வழி தொடர்பு படுத்துகிறார். சில காட்சிகள், எந்த வருடத்தில் நடக்கின்றன என்று ஆண்டைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், சிலவற்றில் அவ்வாறு செய்வதில்லை., இதைப் புரிந்துகொள்வதற்கு, நாம் முதலில் க்ரீக்கின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல, இந்த தன்மையை இந்திய வரலாற்றோடும் ஒப்பிட்டுச் சொல்கிறேன். க்ரீக்கின் வரலாறு, இரண்டாம் உலகப்போர் காலத்திற்கு முன், இரண்டாம் உலகப்போர் காலகட்டம், இரண்டாம் உலகப்போர் காலத்திற்குப் பின் என்று, இந்தப் படத்தில் தியோ ஆஞ்சலோபெலோஸ் எடுத்துக்கொள்கிறார். 1939இல் துவங்கி, 1952இல் இந்தப் படம் முடிவடைகிறது. இதில், 1939இல் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, துருக்கி, இத்தாலி போன்ற நாடுகள் க்ரீக்கின் மீது ஆக்கிரமிப்பு செலுத்துகின்றன. இதை எதிர்த்து, அங்கிருக்கிற இடதுசாரிகளும், லிபரல்களும், தேசியவாதிகளும் போராடுகிறார்கள். அதற்குப் பிற்பாடாக, இரண்டாம் உலகப்போர் வருகிறது. நாஜி, நாசிசம் வருகிறது. நாசிசத்திற்கு எதிரான போரை அங்கு நடத்துகிறார்கள். அப்போதும், அந்நாட்டினுடைய லிபரல்கள், இடதுசாரிகள், சர்வதேசிய சக்திகளும் ஒன்றிணைகின்றன. ரஷ்யா, ப்ரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்தும் ஈடுபடுகிறது. அந்த காலகட்டத்தில் பலர் ஹிட்லரோடு சேர்ந்து செயல்படுகிறார்கள். பல வலதுசாரிகள், தேசியவாதிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் ஹிட்லரோடு சேர்ந்து செயற்படுகிறார்கள். ஹிட்லரோடு சேர்ந்து செயற்பட்டாலும், அவர்கள் கம்யூனிஸ்டுகளின் பாலான வெறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் நிகழ்கிறது. இதற்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஹிட்லர் தோற்கடிக்கப்படுகிறார். பிறகு க்ரீக்கில், கம்யூனிஸ்டுகள், லிபரல்களுடன் கூட்டாட்சியாக தேசியவாதிகள் இணைந்து ஒரு அரசு அமைகிறது. இதில், அமெரிக்காவும், ப்ரான்சும், பிரிட்டனும் தேசியவாதிகளையும், லிபரல்களையும் ஆதரித்து, கம்யூனிஸ்டுகளை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஆகவே, ரஷ்யா, கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கிறது. உள்நாட்டில், சோசலிச சமூக அமைப்பு வரவேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள். இந்த வரலாறு முழுக்கவுமே, அந்த நாட்டிற்குள்ளேயே, தேசியவாதிகள், ஹிட்லருக்கு முன்பாக ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடினார்கள். ஹிட்லரின் காலத்தில் ஒரு சிலர் நாஜிக்களோடு தொடர்புகொண்டிருந்தார்கள். பகுதியானவர்கள் மட்டுமே ஹிட்லரை எதிர்த்துப் போராடினார்கள். ஆனால், ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட பிறகு, இந்த மேற்கத்திய நாடுகளின் ஆதரவோடு இருந்த லிபரல்களும், அந்த பழைய நாஜிக்களும், இப்போது ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள். அதேபோல, தேசியவாதிகளும் வந்துவிடுகிறார்கள். இந்த மூன்று பேருக்கும் எதிரிகள், கம்யூனிஸ்டுகள். இவர்களை வேட்டையாடுகிறார்கள். வேட்டையாடும்போது, இந்த ஜெர்மன், ப்ரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை தேசியவாதிகளுக்கும், பாசிஸ்டுகளுக்கும் ஆதரவு கொடுக்கிறது. இந்த போக்கு, ஆக்கிரமிப்பிற்கு முன்பாகயிருந்த தேசியவாதிகள், பாசிச மனம் உள்ளவர்கள் அன்றும் இருந்தார்கள், ஹிட்லர் இந்த நாட்டிற்குள் வந்தபோது, லிபரல் மற்றும் தேசியவாதிகளில் சிலரும், ஹிட்லரோடு சேர்ந்து செயற்பட்டார்கள், ஆனால், ஹிட்லர் முறியடிக்கப்பட்ட பிறகு, மேற்கத்திய நாடுகளின் உதவியோடு பதவிக்கு வந்த அந்த அமைச்சரவையில், பாசிஸ்டுகளும் இருந்தார்கள், அதேபோல, தேசியவாதிகளும் இருந்தார்கள். இவர்கள் எல்லோருமே கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகச் செயற்பட்டார்கள்.

Music, Motion, Madness: The Travelling Players

1939லிருந்த பாசிஸ்டுகள், 1944ஆம் ஆண்டும் இருந்தார்கள். 1944ஆம் ஆண்டு இருந்த பாசிஸ்டுகள் 1952ஆம் ஆண்டும் இருந்தார்கள். காலத்தைத் தாண்டி, அந்த அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களும், அதை ஆதரித்த ஒரு கூட்டமும் இருக்கிறது. இந்தப் படம், 1975ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்தப் படம் எடுக்கிற காலகட்டத்திலும் ராணுவ சர்வாதிகார ஆட்சிதான் நாட்டில் இருந்தது.

அம்சவள்ளி: இந்தப் படம் கூட, கடும் நெருக்கடிக்கு மத்தியில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. இதை தியோ ஆஞ்சலோபெலோஸும் குறிப்பிடுகிறார். 

யமுனா ராஜேந்திரன்: ஆமாம், படத்தில் வருகிற நாடகத்தின் திரைக்கதை, கோல்ஃபோ அண்ட் ஷெப்பர்ட்ஸ் (Golfo the Shepherdess). அந்தக் கதை என்னவென்றால், கோல்ஃபோவும், ஆட்டிடையன் ஒருவரும் காதலிக்கின்றனர். இந்தச் சமயத்தில், ஒரு மேட்டுக்குடியைச் சார்ந்தவன், பெண்ணின் தந்தையிடம் விஷயத்தைச் சொல்லி, பண ஆசை காட்டி, தான் அவளைக் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று சொல்கிறார். இதைக் கேள்விப்பட்டவுடனே, கோல்ஃபோ தற்கொலை செய்துகொள்கிறாள். இதனால், குற்றவுணர்வு கொண்ட ஆட்டிடையனும் தற்கொலை செய்துகொள்கிறான். இதுவொரு நாடோடிக் கதை. 

ராணுவ அதிகாரத்திடம், ஆஞ்சலோபெலோஸ், ”இந்த மித்தாலஜியைத்தான் நான் படமாக எடுக்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு, தன் படவேலைகளை ஆரம்பிக்கிறார். படம் முடிந்து வெளியாகும்போது, ராணுவ ஆட்சி இல்லாமல் ஆனதால், படம் வெளியில் வருகிறது. இப்படித்தான், அந்தப் படம் உருவாக்கப்படுகிறது. இந்த சென்சிபிளிட்டியோடுதான், தியோ அந்த வரலாறு, மித்தாலஜி மற்ற விஷயங்களோடு இணைத்து, ராணுவ ஆட்சிக்கு சவாலாகவும் இருந்து, இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார். ஏன், அவருடைய காலத்தாவுதல் என்பது அவருடைய படங்களில் நடக்கிறது. ஏன், அது தெளிவாக, வெளிப்படையாகத் திரையில் குறிப்பிடப்படாமல் இருக்கிறது என்றால், பாசிஸ்டுகள், இரண்டாம் உலகப்போருக்கு முன்பாகவும் இருந்தார்கள். இரண்டாம் உலகப்போர் காலத்திலும் இருந்தார்கள். இந்தப்படம் எடுத்துக்கொள்கிற 1952ஆம் ஆண்டும் இருந்தார்கள். 1975ஆம் ஆண்டில், இந்தப் படம் உருவாக்கப்படும்போதும் இருந்தார்கள். ஆகவே, இந்த மக்கள், காலத்தைக் கடந்து, ஆண்டுகளைக் கடந்து, இந்த நில வெளிகளைக் கடந்து, தத்துவார்த்த போராட்டத்திற்குள், இந்த நடைமுறை அரசியல் போராட்டத்திற்குள், நகர்ந்து கொண்டும், ஊர்வலம் போய்க்கொண்டும், மோதிக்கொண்டும், சண்டையிட்டுக்கொண்டும், வெற்றிவாகை சூடிக்கொண்டும், கொடிகளை அசைத்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்தப் படம் சொல்கிறது. 

ஒரு காட்சி, சொல்கிறேன். 1947 - 1949 கம்யூனிஸ்டுகளுக்கும் அங்கிருக்கிற தேசியவாதிகளுக்கும் இடையே சண்டை நடக்கிறது. தேசியவாதிகள் ஒரே நேரத்தில் அமெரிக்காவை வியந்தோதி பாடல்கள் பாடுகிறார்கள். அதேபோல, நாஜிக்களையும் வியந்தோதி பாடல்கள் பாடுகின்றனர்.கூடவே, தேசபக்தி பாடல்களையும் பாடுகிறார்கள். ஆனால், கம்யூனிஸ்டுகளையும், ரஷ்யர்களையும் கொல்லவேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்குப் பிறகு, ஊர்வலம் செல்கின்றனர். 1947-49 நாஜிக்கள் ஊர்வலம் நடக்கிறது. பயங்கர வன்முறையான பாடலைப் பாடிச்செல்கின்றனர். அப்படியே நடந்துசென்று, இன்னொரு கூட்டமான பிரச்சாரக் கூட்டத்திற்குள் நுழைகிறார்கள். இது 1952ஆம் ஆண்டு. 1949லிருந்து இந்தக் காட்சி, இந்த நிலப்பரப்பு, ஒரே நிலப்பரப்பு, 1952ற்குள் செல்கிறது. இப்படியான காட்சிகள் படத்தில் நிறைய இருக்கின்றன. காலங்கள் மாறினாலும், நிலப்பரப்பையும், அந்த மனிதர்களின் உணர்வுகளையும் இணைக்கக்கூடியதாக, நாசிசம், பாசிசம், அது எப்படி இடதுசாரிகளுக்கு, மார்க்சிஸ்டுகளுக்கு எதிராக இருக்கிறது என்ற வரலாற்று உண்மை, ஏறக்குறைய 1939-1952-ஆம் ஆண்டு வரைக்குமான, பதினைந்து ஆண்டு கால உணர்வுதான், உங்களுக்கு காலத்தாவலாக நீள்கிறது. உண்மையிலேயே, திரைப்பட நுட்பம் என்றளவில், சினிமாவிற்கு காலத்தாவுதல் என்பது அற்புதமான நுட்பம். ஆனால், இதை அரசியல் ரீதியாகப் பார்த்தோமானால், ஒரு ஐம்பது வருட அரசியல் தன்னுணர்வில், பாசிசம் நிரந்தரமாக இருக்கிறது என்ற விஷயத்தை, 1975 வரைக்கும் நீட்டிக்கிறார். 1939 லிருந்து 1952 வரையிலான சூழலை படம் பதிவுசெய்திருந்தாலும்கூட, 1975ஆம் ஆண்டு என்று சொல்வதன்மூலம், ஏறக்குறைய முப்பத்தாறு ஆண்டுகாலமாக பாசிச நிலை இருக்கிறது என்பதை பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்துகிறார். இதுதான் தியோ ஆஞ்சலோபெலோஸின் மேதைமை.

Theodoros Angelopoulos - O thiasos aka The Traveling Players (1975) |  Cinema of the World

அம்சவள்ளி: இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் ராணுவ சர்வாதிகாரம் இல்லை என்று சொல்கிறபோது, நான் ஒரு பேட்டியில் படித்தேன், படம் கான் திரைப்பட விழாவிற்குச் செல்லும்போது, க்ரீக் அரசாங்கம் அதற்கு ஆதரவளிக்கவில்லை. ”படத்தில், இடதுசாரியக் கண்ணோட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக, எங்களால் அந்தப் படத்தை ஆதரிக்க முடியாது” என்று சொல்லியிருப்பதாகப் படித்தேன். 

யமுனா ராஜேந்திரன்: கிரேக்க வரலாறை எடுத்துக்கொண்டால், அங்கிருக்கிற வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையேயான போராட்டம் நடந்துகொண்டேயிருக்கும். உண்மையிலேயே மாற்றங்கள் ஒரு நாளில் நடந்துமுடிகிற மாற்றங்கள் இல்லை. இராணுவ சர்வாதிகாரம் அங்கு வெளிப்படையாகயில்லாவிட்டாலும், அந்த அமைப்பில், அதே பழைய சிந்தனையைத் தாங்கியவர்கள் பதவியில்தான் இருப்பார்கள். ”இந்தியாவின் வறுமையை ஏலம்போட்டு வெளிநாடுகளுக்கு விற்கிறார். இது தேசவிரோதம், எனவே சத்யஜித் ராயின் படங்களை, வெளிநாடுகளுக்கு, சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பக் கூடாது” என்று எதிர்ப்புகள் வந்தன. தாராளவாதியாக அறியப்பெற்ற நர்கீஸ் தத் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார். தேசபக்தி என்ற பெயரில், தங்கள் நாட்டினுடைய துயர்மிகு கடந்தகாலம், ஏழ்மையை வெளிப்படுத்த விரும்பாத நிர்வாகம் அன்றைக்கும் இருந்தது, இன்றைக்கும்கூட இருக்கிறது. அதனால்தான், அங்கு, எங்கள்மீது ஐரோப்பிய யூனியன் மிகப்பெரிய பொருளாதார சுமையைச் சுமத்துகிறது. இதிலிருந்து விடுபடவேண்டுமென்று, பெரும்பாலான மக்கள் இடதுசாரிகளுக்கு வாக்களித்தால்கூட, ஐரோப்பியன் இந்நிலைப்பாட்டை ஒப்புக்கொள்ளவில்லை. அந்நாட்டினுடைய இறையாண்மைக்கு மாறாக, ஐரோப்பிய யூனியனின் பொருளாதார விஷயங்களை அம்மக்கள் மீது இன்றுவரை சுமத்திக்கொண்டிருக்கிறார்கள். எனவே, கிரேக்க நாட்டின் வரலாறு என்பது, அங்கிருக்கிற வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் தேசியவாதிகளுக்கும் இடையிலான போராட்டமாக, தொடர்ந்து ஐம்பது, அறுபது ஆண்டுகளாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, தியோ ஆஞ்செலோபெலோஸின் படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு, அந்நாட்டின் அரசு அனுப்ப விரும்பாததற்கான காரணத்தை இதிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம். போலவே, ஈரானில் எடுக்கிற பல படங்களை, சீனாவில் எடுக்கிற சில இயக்குனர்களது படங்களை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பமுடிவதில்லை. ஏனெனில், தங்கள் நாட்டைப் பற்றி மகோன்னதமான சித்திரத்தை, வெளிநாட்டவர்களுக்குத் தரவேண்டும். அப்படியான படங்களைத்தான் எடுக்க வேண்டுமென நிர்வாகம் மறைமுகமாக நிர்ப்பந்திக்கிறது. ஆனால், அப்படியெல்லாம் ஒரு கலைஞன் செயல்படமுடியாது. ஒரு கலைஞன், அரசியல் கட்சிகளுக்கும், அரசுக்கும் நேர்மையாகயிருக்க முடியாது. அவன் உண்மைக்கும், மக்களுக்கும்தான் நேர்மையாகயிருக்க வேண்டும். அதனடிப்படையில்தான் ஒரு கலைஞனாக தியோ ஆஞ்சலோபெலோஸ் தன் திரைப்படங்களை உருவாக்குகிறார்.

அம்சவள்ளி: படத்தில் ஒரு காட்சி. எலெக்ட்ராவைப் பார்க்க வருகிற ஒருவனை, இனிமேல் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கமாட்டேன் என்று, கையெழுத்து வாங்கிவிட்டு, வெளியே அனுப்பியிருப்பார்கள். ஆரம்பக் காட்சியில், மூன்று நபர்கள் விசிலடித்தபடி நடந்துவருவார்கள். அவர்களில் ஒருவரை எலெக்ட்ராவும், அவரது நண்பனும் சந்தித்து, “நாங்கள் மீண்டும் தெருவில் இறங்கி போராடவிருக்கிறோம்.” என்று சொல்லும்போது, பதிலுக்கு அவர் சொல்கிற சில விஷயங்கள், ”1917 அக்டோபரில் நடந்த விஷயமாகட்டும், 1944 டிசம்பரில் நடந்ததாகட்டும், ப்ரெஞ்சுப் புரட்சி, இது எல்லாமே எங்களை சலிப்படைய வைக்கிறது. வலிமையில்லாத சுதந்திரத்தை நம்மீது செயல்படுத்துகிறார்கள்” என்று சொல்கிற காட்சி. போராடுகிற கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் இவ்வாறு சொல்வதுபோன்று காட்சியமைக்கக் காரணம்.


Theo Angelopoulos | The Travelling Players (O Thiassos) (1974-'75) - Photos

யமுனா ராஜேந்திரன்: தொடர்ந்து சித்திரவதைகளுக்கு ஆளாகுதல், சிறை, வன்முறைக்கு ஆளாகுதல் போன்ற விஷயங்கள், ஒரு மனிதரை மிகவும் விரக்திநிலையை அடைய வைக்கும். இந்தத் துயரமான நிலையை மார்க்சிஸ்டுகள் தொடர்ந்து அனுபவித்து வந்திருக்கிறார்கள். ஒன்று 1917 உருவாக்கிய லட்சியம். அந்த லட்சியம் நடைமுறையில் சாத்தியமா? என்ற கேள்வியை, ஐரோப்பிய மார்க்சியர்கள் எல்லோருமே தொடர்ந்து கேட்டுவருகின்றனர். சோவியத் யூனியன் வீழ்ந்தபோது, தியோ ஆஞ்சலோபெலோஸ் இதே விஷயத்தைத்தான் சொல்கிறார். ”ஒரு கனவு, அந்தக் கனவைக் கண்டோம், அந்தக் கனவு நிறைவேறவில்லை. பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இருந்தாலும், அந்தக் கனவில் என்னுடைய கடப்பாட்டை விடமுடியவில்லை” என்று சொல்கிறார். 1917 அக்டோபர் புரட்சி தொடர்பான விமர்சனம், ஐரோப்பிய இடதுசாரிகளுக்கு மத்தியில், தொடர்ந்து இருந்துவருகிறது.
 
நீங்கள் அந்தோனியோ கிராம்சி, ரோஸா லக்ஸம்பெர்க், ட்ராட்ஸ்கி போன்றவர்களைப் பார்த்தீர்களேயானால், சோவியத் யூனியன் என்பது, பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரம் அல்லது உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரம் அல்லாமல், ஒரு அதிகாரவர்க்க சர்வாதிகாரமும், ஒரு ஸ்டேட் கேபிட்டலிசமாக ஆனது, என்பது சம்பந்தமாக ஒரு விமர்சனம் இருக்கும். மற்றது ஊடகம் தொடர்பான விடுதலை. மாற்றுக்கருத்து பேசுகிறவர்களுக்கான சுதந்திரம் எல்லாம் இந்த நாடுகளில் இல்லை என்பதுபோன்ற கருத்துக்களையே, பெரும்பாலான சிந்தனையாளர்களும், கலைஞர்களும் சொல்கிறார்கள். ஆக, இந்த மரபில் வந்தவர்தான் தியோ ஆஞ்சலோபெலோஸ்.

கடுமையான ஒடுக்குமுறைகளை, கம்யூனிஸ்டுகள் உள்நாட்டில் எதிர்கொள்கிறார்கள். ரோஸா லக்ஸம்பெர்க் சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்படுகிறார். அந்தோனியோ கிராம்சி சிறையிலடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மரணமுறுகிறார். மிகப்பெரிய விலை கொடுத்து, வாழ்க்கையை அர்ப்பணித்து, போராடப்போகிறார்கள். உடலுக்குச் சித்திரவதை, மனதிற்கு சித்திரவதை என்று ஒருபுறம் இது. இன்னொரு புறம், நாங்கள் நினைத்த அந்த லட்சியம் சரியாகயிருக்கிறதா? என்பது தொடர்பான, அந்த விமர்சன உணர்வு. இந்த இரண்டும் சேர்ந்து, இதுபோல ஒருவிதமான, லட்சியத்தையும் கைவிடமுடியாமல், கனவுகளையும் விட்டுக்கொடுக்கமுடியாமல், அதேநேரத்தில் தாங்கள் எதிர்கொண்ட அனுபவங்களும் சார்ந்து, ஒருவிதமான விரக்தி மனநிலையில் இருப்பதும் சிலநேரம் வாய்க்கிறது. இந்நிலை தியோ ஆஞ்சலோபெலோஸின் படங்களில் திரும்பத் திரும்ப இடம்பெறும். 

1917ஐ ஒரு கனவாகவும், அதேநேரத்தில் அது நிறைவேறியதா என்பது தொடர்பான விமர்சன உணர்வோடும், சமகாலத்தில் தாங்கள் எதிர்கொண்ட சித்திரவதைகளை வைத்து, மார்க்சிய, கம்யூனிச அனுபவத்தைப் பேசுவதென்பது, தியோ ஆஞ்சலோபெலோஸின் படங்களின் ஒரு அம்சம். யுலிசியஸில் (ulysses gaze), முழுப்படத்திலும் அவர் இதைத்தான் விவாதித்திருக்கிறார். அதில் மிகமுக்கியமான ஒரு பிம்பம், பெயர்த்தெடுக்கப்பட்ட லெனினின் சிலை, பிரம்மாண்ட படகில் கொண்டுவரப்படும். அந்தக் காட்சியை, ஆஞ்சலோபெலோஸ் மிகவும் விஸ்தாரமாகக் காண்பித்துக்கொண்டு செல்வார். அந்தப் படமே, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்நாடுகள் எவ்வாறாகயிருந்தன என்பதை ஒரு திரைப்படக் கலைஞனின் பார்வையில் சொல்லக்கூடியதாகயிருந்தது. படத்தில் மட்டுமல்ல, இது தொடர்பான கட்டுரையையும் அவர் எழுதியிருக்கிறார். ”இந்தப் பின்னடைவு, வீழ்ச்சியென்பது மக்களுக்கு துயரளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அதேநேரத்தில், அதுவொரு அடையத்தக்க கனவு, லட்சியம். அந்த லட்சியத்தின் மீதான, கடப்பாடு இன்னும் அப்படியேதான் இருக்கிறது” என்கிறார்.

இந்தப் படத்திலும், கதாபாத்திரங்கள் பல்வேறு துயர்களுக்கு ஆளாகிறார்கள். எலெக்ட்ராவின் தங்கை, நாஜிக்களுடன், அமெரிக்கர்களுடன், பாசிஸ்டுகளுடன் செல்கிறார். ஆனால் அவரது மகன், புரட்சியாளனாக மாறுகிறான். பல்வேறு ஆட்கள் கொல்லப்படுகிறார்கள். அத்தனைக்குப் பிறகும், எலெக்ட்ரா மீண்டு எழுகிறார். நாடோடிக் கலைஞர்களாக, அந்தக் கலையை தங்களுடன் வைத்திருக்கவேண்டும் என்பதற்கான மறு வளர்ச்சி. அதேபோல, இந்த அனுபவங்களினூடாக, பெற்ற புரட்சிகர சிந்தனையின் மறு வளர்ச்சி. ஒரே நேரத்தில் இது கலைஞர்களின் வளர்ச்சியாகவும், அரசியல் வளர்ச்சியாகவும் அமைகிறது. 

அம்சவள்ளி: இந்தப் படத்திற்குள் வருகிற கதாபாத்திரங்களைக் குறிப்பாக, அகதிகளாகத்தான் அர்த்தப்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல், அவர்கள் இந்த ஒரே நாடகத்தை, பல்வேறு இடங்களில் அரங்கேற்றுகின்றனர். எலெக்ட்ராவின் அண்ணனைப் புதைக்கும்போது, பெரிய கைதட்டல்களோடு புதைக்கின்றனர். மீண்டும், டாஸூஸாக, தங்கையின் பையனே நடிக்க வருகிறான். படத்தின் ஆரம்பக் காட்சியும், இறுதிக்காட்சியும் ஒரேமாதிரி இருக்கிறது. முழுச்சுற்று முடித்து, அவர்கள் வாழ்க்கை மீண்டும் ஆரம்பத்திலிருந்தே துவங்குகிறது என்பதைத்தான் இந்தக் காட்சிகள் உணர்த்துகின்றனவா?

யமுனா ராஜேந்திரன்: ஆம். ஆஞ்சலோபெலோஸ் இந்த உணர்விற்காகத்தான், காட்சிகளை இவ்விதம் அமைத்திருக்கிறார். 1952ஆம் வருடத்திலிருந்துதான் படம் துவங்குகிறது. நடப்பு ஆண்டிலிருந்து கதை பின்னோக்கிப் போகிறது. படம் முடியும்போதும், எந்தக் காட்சியில் ஆரம்பித்ததோ, அதோடுதான் முடிகிறது. அந்த முன்னும் பின்னுமான காலங்கள்தான், இந்தக் கதையாடல்களாக விரிகின்றன. நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.  பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறோம். பல்வேறு மரணங்களை எதிர்கொள்கிறோம். வன்முறைகளை எதிர்கொள்கிறோம். சித்திரவதைகளை எதிர்கொள்கிறோம். மறுபடியும் எழுவோம். முழுச்சுற்று நிறைவடைந்து மீண்டும் வாழ்க்கை துவங்குகிறது, என்ற சுழற்சியை இந்தப் படம் சொல்கிறது. 

In Defense of Communism: Theo Angelopoulos: The Great Poet of Cinema


அம்சவள்ளி: படத்தில் மொத்தமே எண்பது ஷாட்கள்தான் உள்ளன. ஒவ்வொரு ஷாட்டும், கணிசமான கால அளவைக் கொண்டிருக்கின்றன. இதில் ஒரு ஷாட்டை எடுத்துவிட்டாலும், படம் கடத்தவருகிற உணர்வு மாறிவிடும், அல்லது கதையைத் தவறவிட்டதாகயிருக்கும். அப்படி, ஒவ்வொரு ஷாட்டும், கதையின் போக்கில் பின்னப்பட்டிருக்கின்றன. இதில், மிக முக்கியமான காட்சிகளாக நான் பார்ப்பது, வலதுசாரிகளுக்கு வாக்கு சேகரிப்பதற்காக, ஒரு வேனில் பிரச்சாரம் செய்கிற காட்சி. 1939லிருந்து, 1952வரைக்கும் அந்த அணுகுமுறையே மாறுகிறது. மக்கள் அதைப் பார்ப்பது, அவர்கள் வாக்கு சேகரிக்கும் முறை, எல்லாமே மாறுகின்றன. இது கிரீஸில் நடக்கிற சிவில் வார் பற்றியது. அதில் ஒரு காட்சியில், நாஜிக் கொடியை, மக்கள் கூட்டம் ஒன்று சேர்த்து வீழ்த்துகிறது. 

யமுனா ராஜேந்திரன்: 1944இல் தேசியவாதிகளுக்கும் இவர்களுக்கும் இடையில் நடக்கிற சண்டை பற்றியதுதான் அந்தக் காட்சி. இந்தக் காட்சியில் மட்டுமல்ல, பெரும்பாலான காட்சிகளில், மக்கள் கூட்டம் இருக்கும். இன்னொரு காட்சியில், சதுக்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சிக்கொடிகளை, இன்ன பிற கொடிகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். தாக்குதல் நடக்கும். இந்த கூட்டம், அதன் எக்காளம் அங்கும் இருக்கும். அதேபோல, இன்னொரு காட்சியில், இடதுபக்கமிருந்து இடதுசாரிகள் வருவார்கள், வலதுபுறமிருந்து வலதுசாரிகள் வருவார்கள். ஆரம்பத்தில் வெறுமனே சத்தம்போடுவார்கள், கோஷம் போடுவார்கள். துப்பாக்கியை மட்டும் வைத்துக்கொண்டிருப்பார்கள். அதற்குப்பிறகு, வலதுசாரிகளுக்குப் பின்னால் இராணுவ வாகனங்கள் வரும். இது உணர்த்துகிற விஷயம் என்னவென்றால், வலதுசாரிகளுக்குப் பின்னால், அவர்களுக்குப் பக்கபலமாக அரசும் இராணுவமும் இருக்கிறது. அவற்றிற்கு எதிராக வெகுமக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே, அது வெகுமக்களினுடைய போராட்டம், வெகுமக்களினுடைய ஒன்றிணைந்த எழுச்சி, வெகுமக்களின் ஒன்றிணைந்த சந்தோஷம் என்ற விஷயத்தை, பல்வேறு காட்சிகள் உணர்த்துகின்றன. நீங்கள் சொல்கிற காட்சி, 1944இல் நடக்கிறது. குதிரையில் வருகிறார்கள், நாஜி கொடியை கடலில் வீசுகிறார்கள். இதுவும் ஒரே ஷாட். ஒரு கோரியோஃகிராபி போல எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சதுக்கத்தில் இரு தரப்பினர் கோஷமிடுவதும், சண்டை போடுவதும், தாக்குதல் தொடுப்பதும் ஒரே ஷாட்டில்தான் உள்ளது. தாக்குதல் முடிந்து எல்லோரும் களைந்துசென்றபிறகு, அதுவரை இறந்ததுபோலக் கிடந்த ஒருவர் எழுந்துசெல்வார். மிக அற்புதமான காட்சி. 

மக்கள் கூட்டம் மீண்டும் மீண்டும் இப்படத்தில் இடம்பெறுவதற்கான காரணம், அந்தக் கூட்டுணர்வு, தோழமை, அது மக்களோடு இணையும்போது, எப்படி கொண்டாட்டமாக வெளிப்படுகிறது? இதை மிகையீல் பெக்கின் வார்த்தைகளில் சொன்னால், இதுவொரு ’ஒடுக்கப்பட்ட மக்களின் திருவிழா’. மாவோவின் பாஷையில் சொல்லவேண்டுமானால், ‘புரட்சி என்பது வெகுமக்களின் திருவிழாதான்’. இந்த திருவிழா கொண்டாட்டத்தை, தி ட்ராவலிங் ப்ளேயர்ஸ் கொண்டிருக்கிறது. 

சிறு சிறு மக்கள் கூட்டங்களாக இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் மலையின் பிற்பகுதியிலிருந்து ஓடிவருகிறார்கள், பின்பு குதிரைகள் வருகிறது. மக்கள் கூட்டம் ஒன்றிணைகிறது. பின்பு, அந்த நாஜிக்கொடியை மலையுச்சிக்கு கொண்டுசென்று, அங்கிருந்து கடலில் வீசுகிறார்கள். இக்காட்சி, மக்கள் கிளர்ச்சியை அழகாக வெளிப்படுத்துகிறது. மக்கள், மக்கள் கூட்டம், மக்களின் புரட்சிக் களியாட்டம் தொடர்பான ஓர்மையுணர்வாகத்தான் இந்தக் காட்சியைப் பார்க்கிறேன்.

Watch The Travelling Players Full movie Online In HD | Find where to watch  it online on Justdial UK


அம்சவள்ளி: ஒரு மதுவிடுதியில், இடதுசாரிகளும், வலதுசாரிகளும் இருப்பார்கள். அவர்களிடையே சண்டை உருவாகும். வலதுசாரிகள் துப்பாக்கியைப் பயன்படுத்தி, கம்யூனிஸ்டுகளை அங்கிருந்து வெளியேறச்செய்வார்கள். இதற்கு முன்பு, மது விடுதியில் ஜெனரல் ஸ்கோர்பி பற்றி இடதுசாரிகள் பகடி செய்திருப்பார்கள். மாறி மாறி பாடல்கள் பாடுவார்கள். இதுவே சண்டையாக முடியும். ஜெனரல் ஸ்கோர்பி என்பவர் யார்?

யமுனா ராஜேந்திரன்: நாஜி காலம் முடிந்து, அதற்குப் பிறகு மதுவிடுதியில் என்னவிதமான கண்ணோட்டம் இடம்பெறுகிறது என்பது தொடர்பான காட்சி. ஸ்கோர்பி, அவர்களது இராணுவ தளபதியாகயிருந்த ஒருவர். மதுவிடுதியில் அவரைப் பற்றித்தான் பாடல்கள் பாடுகின்றனர். நாஜி பக்கம் இருப்பவர்கள் எல்லாம், கோட் ஷூட் அணிந்திருப்பார்கள். நாகரீக மனிதர்கள் போலத் தோன்றுவார்கள். நாஜி பாடல்கள், சோவியத் எதிர்ப்பு பாடல்கள், அமெரிக்க ஆதரவு பாடல்கள், எல்லாம் வலதுசாரிகள் பாடுவார்கள். அவர்களில், இராணுவ உடுப்பு அணிந்தவர்களும் இருப்பார்கள். ஆனால், மறுபுறம் அமர்ந்திருக்கிற கம்யூனிஸ்டுகள், பல வண்ணங்களில் உடைகள் அணிந்திருப்பார்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்த, ஒரு இணக்கமான குழுவாக அவர்கள் இருப்பார்கள். அவர்கள் சாதாரண மனிதர்கள். ஆனால், வலதுசாரிகள், விரைத்துப்போன மனிதக்கூட்டம். ”அவனைக் கொல்லவேண்டும், கொலை செய்யலாம்” என்பதுபோன்று வலதுசாரிகள் பாடல்கள் பாடுகின்றனர். இடதுசாரிகள் ’காதல், அன்பு, ஆண் பெண் உறவு, நட்பு’ போன்றவற்றை மையமாக வைத்து பாடல்கள் பாடுகின்றனர். இருவருமே போட்டிபோட்டு பாடல்கள் பாடிக்கொண்டு இருக்கின்றனர். சூழ்நிலை மாறுகிறது. வலதுசாரிகள் ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் போகிறது. அவர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறார். மற்றவர்களும் துப்பாக்கியை எடுக்கத் தயாராகயிருக்கின்றனர். கம்யூனிஸ்டுகளோ நிராயுதபாணிகளாக இருக்கின்றனர். இந்த முரடர்களோடு, துப்பாக்கி வைத்திருக்கிற வலதுசாரிகளோடு, நாங்கள் அன்பைப் பற்றியும், காதலைப் பற்றியும், சேர்ந்து வாழ்வதைப் பற்றியும் சொல்லி, எந்தவித அர்த்தமுமில்லை என்று, கம்யூனிஸ்டுகள் ஜோடி ஜோடியாக வெளியேறுகிறார்கள். இதுதான், இங்கு கவனிக்கவேண்டிய விஷயம். அதற்குப் பிறகு, வலதுசாரிகள், நாஜி பாடல்கள், ஃபாசிஸ்ட் பாடல்களைப் பாடுகின்றனர். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், நாஜிக்கள் காலத்தின்போதும், நாஜிக்கள் வெளியேறிய பின்பும், நாஜி சிந்தனைகொண்டவர்கள், எப்படி அணி அணியாகத் திரண்டு வந்தார்கள், எப்படி அவர்கள், சாதாரண மனிதர்களை அச்சுறுத்தினார்கள், என்ற விஷயத்தை இந்தக் காட்சி உணர்த்துகிறது.

அம்சவள்ளி: கதைசொல்லலில் மிக முக்கியமான காட்சியாக, எனக்குத் தோன்றியது, எலெக்ட்ரா, எலெக்ட்ராவின் தந்தை, கைதுசெய்யப்பட்ட எலெக்ட்ராவின் காதலன், இம்மூவரும் ஒருமுறை, கேமராவை நேரடியாகப் பார்த்து, இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்று, விவரிக்கின்றனர். அவர்கள் நேரடியாக கேமராவைப் பார்த்து பேசுவதென்பது, பார்வையாளர்களைப் பார்த்து பேசுவதுதான். அடுத்து, எலெக்ட்ராவின் தந்தை, இராணுவத்தில் சேர்கிறபோது, அவர் மனைவி க்ளெமெண்ட்ரா, அவரை கேலி செய்வது. எந்தவொரு உரையாடலும் இல்லாமல், அவர் மனைவி, ஒரு கேலிச்சிரிப்பின் வாயிலாக, தனது நிலையை வெளிப்படுத்தியிருப்பார். 

யமுனா ராஜேந்திரன்: இந்த ’மோனலாக்’ மூன்று இடங்களில் வருகிறது. முதலில் எலெக்ட்ராவின் தந்தை, மோனலாக்கைச் சொல்கிறார். நான் எப்படி அகதியாக வந்தேன், எப்படி இத்தாலியர்கள், துருக்கியர்களெல்லாம் எங்கள்மீது ஆக்கிரமிப்பு செய்தார்கள், என்ற வரலாற்றையெல்லாம் சொல்கிறார். எப்படி இந்த நாடகக்குழு உருவானது என்பதுவரை, கதையாகச் சொல்லிவிடுகிறார். க்ரீக்கின் ஒரு காலகட்டத்தை அவர் தன்னுடைய அனுபவத்தோடு சேர்த்துச் சொல்கிறார். அந்தக் குழுவைத் தோற்றுவித்து, அந்தக் குழுவிற்குள் நடிகர்களை வரவழைத்து, அந்தக் குழுவின் மரபைப் பேணுகிறவராகவும் அவர்தான் இருக்கிறார். ஆக, கிரீக்கின் ஒரு காலகட்ட வரலாற்றையும், இந்த நாடகக் குழுவின் தோற்றத்தையும் அவர் வெளிப்படுத்திவிடுகிறார்.
 
அடுத்து, நீங்கள் குறிப்பிட்ட காட்சி. அவர் இராணுவத்தில் சேர்ந்துவிட்டேன் என்கிறபோது, அவர் மனைவி கேலியாகச் சிரிக்கிற காட்சி. உரையாடல் இல்லாமல், உடல்மொழி வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ஆஞ்செலோபெலோஸின் பல படங்களில், உரையாடல்களைத் தவிர்த்து, ஓரு காட்சியின் மைய உணர்வை, கதாபாத்திரங்களின் சிறு உடல்மொழி வாயிலாகவே வெளிப்படுத்தியிருப்பதைப் பார்க்கமுடியும். உதாரணமாக, எலெக்ட்ராவின் அம்மா, திருமணம் தாண்டிய உறவில், இன்னொருவருடன் நெருக்கமாக இருப்பதை, எலெக்ட்ரா பார்த்துவிடுகிறார். அதன்பிறகு, கீழே வந்து, வருத்தப்படுகிறார். அழுகிறார். ஆனால், உரையாடல்களோ, சப்தமோ இல்லாமல்தான் இந்தக் காட்சி நகர்கிறது. பின்பு, எலெக்ட்ராவின் அம்மா, அறையிலிருந்து வெளியே வந்து, யாரும் பார்த்துவிடாமல், எச்சரிக்கையாக தனது அறைக்குச் செல்கிறார். இதுவும் நீண்ட கால அளவு கொண்ட ஷாட்டாகவே எடுக்கப்பட்டிருக்கும். இதுபோன்று அமைதியான முறையில், உரையாடல்களைத் தவிர்த்து, ஒரு உணர்வைக் கடத்துகிற காட்சிகள், ஆஞ்செலோபெலோஸின் படங்களில் அதிகமாகயிருக்கும். உணர்வு மூலமாகவே, விருப்பு வெறுப்பு மற்ற எல்லாவிஷயங்களையும், காட்சிகளின் வழி உணர்த்துகிறார்.

இந்தக் குழு, பனிபடர்ந்த நிலப்பிரதேசத்தில், பாடல் பாடியபடி மகிழ்ச்சியாக நடந்துவருகிறார்கள். ஒரு இடத்தில் அமைதியாக அப்படியே நின்று, சுற்றுமுற்றும் பார்க்கின்றனர். கேமரா நகர்கிறது. ஒரு மரம். அதில் பிணங்கள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கேமரா காண்பிக்கிறது. தூக்கில் தொங்குகிறவர்கள் யாரென்று நமக்குத் தெரியாது. அவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்களா? போராளிகளா? என்ற விவரங்கள் இல்லை. இதுவும் முழுக்க உரையாடலின்றி, நிசப்தமாகப் படமாக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற, அமைதியான காட்சிகள், தியோ ஆஞ்சலோபெலோஸின் பெரும்பாலான படங்களில் இருக்கும். 

பரந்த நிலப்பரப்பு, அது ஆற்றங்கரையோரமானாலும் சரி, மணல்பரப்பானாலும் சரி, அதில் ஒரு மனிதர் சிறு உருவமாக நடந்துவருவதுபோல, பல்வேறு ஜீவராசிகள் நகர்வதுபோல, ரம்மியமான காட்சியனுபவத்தைத் தருவதுபோல இருக்கும். கணவர்களை இழந்த பெண்கள், ஒவ்வொருவராக வருவார்கள், அவர்கள் ஒன்றுகூடுவதற்கேற்ப, கேமரா பின்னால் சென்றுகொண்டேயிருக்கும். முழுக்க கருப்பு ஆடையணிந்த பெண்கள், தலையை மூடியபடி, அங்கு கூடுவார்கள். இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, காகங்கள் ஒன்றிணைந்து அரற்றி அழுமல்லவா, அதுபோன்ற உணர்வு எனக்குத்தோன்றியது. 

எலெக்ட்ராவின் சகோதரன் இறந்தபிறகு, அந்தப் பிணத்தைப் பார்ப்பதற்கு, அவர்கள் வருவது, அதைச் சிறையமைப்பிலிருந்து காண்பிப்பது, என அந்தக் காட்சியைக் கூட, எப்படிப் படம்பிடித்திருக்கிறார் என்று பாருங்கள். ஒரு பரந்த காட்சியில், ஜீசஸ் படுத்திருப்பதுபோலவும், அவர் அம்மா, அங்குவந்து அவரைப் பார்ப்பதுபோன்ற பிம்பம்தான், அந்தக் காட்சியில் உருவாகிறது. இது அவரது பாணி.

அம்சவள்ளி: இதேபோன்ற ஒரு மினிமலிஸ்டிக் ஷாட் என்னவென்றால், கெரில்லாக்கள் எல்லோரையும் பிடித்துவிட்டார்கள் என்று சொல்லும்போது, இராணுவத்தினர், இரண்டு கெரில்லாக்களின் தலையை வெட்டி, ஊர்வலமாக எடுத்துவரும்போது, எலெக்ட்ரா மற்றும் மற்ற கெரில்லாக்களின் உறவினர்கள், நண்பர்கள் பார்த்துப் பதற்றமடைகிற காட்சி. மிகப்பெரிய அழுத்தத்தைத் தரக்கூடிய இந்தக் காட்சியில், உரையாடல்களும் இல்லை, இசை கூட அந்தளவிற்குப் பிரதானமாகப் பயன்படுத்தப்படவில்லை. 

Museum of the Moving Image - Visit - Calendar - The Traveling Players (O  thiasos)

யமுனா ராஜேந்திரன்: நாஜிக்களுக்கு கொலை செய்வதோ, மனிதர்களைச் சித்திரவதை செய்வதோ, மனிதர்களை விகாரப்படுத்துவதோ, அவர்களுடைய இயல்பின் ஒரு அங்கமாக இருந்தது. நாஜிக்கள்தான் ஆயிரக்கணக்கணக்கான மக்களை விஷ வாயு செலுத்திக் கொன்றார்கள். அதேபோல, மனிதர்களைப் பட்டினிபோட்டு, விறகுகள் போல, பெரிய பெரிய அடுப்புகளில் வைத்து எரித்தார்கள். மனிதர்களின் தோலை உரித்தெடுத்து, அதில் லைட் ஷேட் உருவாக்கினார்கள். நாஜிக்கள், கொலைகளை தொழில்முறையாகச் செய்தார்கள். அவர்களுக்கு எந்தவிதமான குற்றவுணர்வும் கிடையாது. எனவே, இதுபோன்ற காட்சியைக் காண்பிக்கிறபோது, அதை ஒரு கலைஞன் உணர்ச்சிகரமிக்கதாகக் காட்சிப்படுத்துவதைக் காட்டிலும், நாஜிக்கள் எப்படி கொடூரமானவர்களாகயிருக்கிறார்கள், மனிதத்தன்மையற்று நடந்துகொள்கிறார்கள், கொலையை எப்படி கொண்டாட்டமாகச் செய்கிறார்கள், எப்படி கொலைகள் அவர்களுக்கு இயல்பான ஒன்றாகயிருக்கிறது என்பதைக் காட்ட முனைகிறார். எனவே, உணர்ச்சிகரமான இசையைப் பயன்படுத்தாமல், அழுத்தம் கொடுக்காமல், நாஜிக்களின் வாழ்வில் கொலை என்ற பாதகச் செயல் எப்படி இயல்பான ஒன்றாக அமைந்திருக்கிறது, என்பதை மிக யதார்த்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் ஆஞ்செலோபெலோஸ்.

இரண்டாவது மோனலாக், எலக்ட்ராவினுடையது. எலெக்ட்ராவை, நாஜிப்படையினர் கடத்திச்சென்று, பாலியல் வல்லுறவு செய்து வெளியில் அனுப்புகின்றனர். அந்தச் சூழலைத்தான் எலெக்ட்ரா விவரிக்கிறார். மோனலாக்கில் இருக்கிற விஷயம் என்னவென்றால், எலெக்ட்ராவின் தந்தை, பாசிச காலகட்டத்திற்கு முன்னாடியான வரலாற்றுச் சம்பவங்களைச் சுருக்கமாகச் சொல்கிறார். எலெக்ட்ரா, பாசிச காலம், பாசிச காலத்திற்குப் பிந்தைய வரலாற்றுச் சம்பவங்களை மோனலாக்கில் சொல்கிறார். அகதிப் பிரச்சினை, அப்போதிருந்த ஒடுக்குமுறை எப்படி முதல் மோனலாக்கில் வருகிறதோ, அதேபோல எலெக்ட்ரா சொல்கிற மோனலாக்கில், அதே பாசிச காலகட்டங்கள், தேசியவாதிகளோடு சேர்ந்து எப்படி இடதுசாரிகளுக்கு எதிராக வேட்டையாடுதல்களை நடத்துகிறார்கள், என்ற விஷயத்தை இந்த மோனலாக்கில் கொண்டுவருகிறார்கள். மற்றும் இன்னொரு விஷயம், கதை மிகவும் தர்க்க ரீதியில், உணர்வுப்பூர்வமாக, யதார்த்தத் தன்மையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்தக் கதையின் போக்கில் இடையிடையே இடம்பெறுகிற மோனலாக்குகள் பார்வையாளர்களிடையே எந்தவிதமான உணர்வுகளை உருவாக்குகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
 
மோனலாக் என்ன சொல்கிறதென்றால், நாங்கள் வரலாற்று அடிப்படையில் கதை சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதில் நாங்கள் நடித்துக்கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் நாங்கள் நிஜத்தில் சாதாரண மனிதர்கள். அதனால், நிஜ மனிதர்களாக, நாங்கள் உங்களுடன், உணர்வு மற்றும் கதை எல்லாவற்றையும் கடந்து, வரலாற்றுச் சாராம்சத்தை நேரடியாகச் சொல்கிறோம். இதில் என்னவிஷயம் என்றால், சில படங்களைப் பார்த்தீர்களேயானால், காட்சிகள் அப்படியே நம்மை அழவைக்கும். இன்னும் சில படங்களைப் பார்க்கையில், அதில் வருகிற வன்முறைக் காட்சிகள், நமக்கு மயிர்க்கூச்செறிய வைக்கும். த்ரில்லர் காட்சியில், அதீத ஆர்வத்தோடு அமர்ந்திருப்போம். அப்போதெல்லாம் நமக்கு அறிவுணர்வு வேலை செய்யாது. காட்சி எங்கு நிகழ்கிறது? ஏன் நிகழ்கிறது? என்ன காரணம்? இப்படியான, சமகால நடப்பு உலகிலிருக்கிற கேள்விகளுக்குள் அப்போது நமது மூளை செல்லாது. அதனால்தான், கதைக்கு இடையில் வருகிற மோனலாக், பார்வையாளர்களை இடைநிறுத்தி, இதுவரை நீங்கள் பார்த்தது வரலாற்று அடிப்படையிலான கதை, இதை நாங்கள் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடித்துக்கொண்டிருந்தோம் என்று சொல்லி, உண்மையில் வரலாற்றில் என்ன நடந்தது? என்பதை அதே பார்வையாளர்களுக்கு விவரிக்கிறார்கள். 

அந்தப் பெண்ணை, வன்புணர்வு செய்து வெளியேற்றியிருப்பார்கள். எழுந்து அமர்வார். அவருக்கு ஒரு க்ளோஸ் அப் ஷாட் வைக்கப்படும். அப்போது, அவர் தன் முகத்திற்குப் பூசியிருக்கிற ஒப்பனைகளைக் களைவார். உதட்டுச் சாயங்களைத் துடைப்பார். பார்வையாளர்களைப் பார்த்து, “இதுவரைக்கும் நடந்தது ஒப்பனை, எல்லாம் நடிப்பு, இப்போதுதான் நான் உண்மையிலேயே பேசுகிறேன்” என்ற விஷயத்தை, நேரடியாக, பார்வையாளர்களைப் பார்த்துச் சொல்கிறார். நாம் திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, உண்மைக்கும், புனைவிற்கும் இடையேயான வித்தியாசம் அறுபடுகிறது. இதை உடைத்து, அந்த சினிமா என்ற புனைவிலிருந்து அந்நியப்படுத்தி, யதார்த்த உலகத்திற்குப் பார்வையாளர்களைக் கொண்டுவந்து, அவர்களை யோசிக்கவைப்பதுதான் இந்த மோனலாக் பயன்படுத்தப்படுவதன் நோக்கம். நாடகாசிரியர் ப்ரெக்ட் இதை அந்நியப்படுத்துதல் என்பார். ஒரு பிம்பம் உங்களை அந்நியப்படுத்தும். ஆகவே, ஒரு இலக்கியம், கலை, கதை, கவிதை எல்லாமே ’அந்நியப்படுதலில்’ இருந்து வெளிப்படுகிற விஷயம்.

அம்சவள்ளி: எலெக்ட்ராவின் கதாபாத்திரத்தை, ஆரம்பத்திலிருந்து பார்த்துவருகிறோம். ஆனால், அவரது அம்மாவின் இறப்பிற்குப் பிற்பாடு, அவளுக்குள் நடக்கிற மாற்றங்கள். அம்மாவின் உடைகளை அணிந்துகொண்டு இசை கேட்பதாகட்டும், அதற்குமுன்பு வரை, அப்பாவைக் கொலை செய்தவரைப் பழிவாங்குவதற்காக, அண்ணனை அழைத்துவந்து, வழி காண்பித்து, சுட வைக்கிறார். தாயின் இறப்பிற்குப் பிறகு, எலெக்ட்ராவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் குறித்து.

யமுனா ராஜேந்திரன்: படத்தில் இந்த அம்மாவிற்கும் மகளுக்கும் இடையேயிருக்கிற உறவு விருப்பு – வெறுப்பு சார்ந்த உறவு. அம்மா உயிரோடு இருக்கும்வரை, எலெக்ட்ரா, அம்மாவை கடுமையாக வெறுக்கிறாள். காரணம் என்னவெனில், திருமணம் தாண்டிய உறவு அம்மாவிற்கு இருக்கிறது, அப்பாவிற்குத் துரோகம் செய்கிறாள், போன்றவைகளால், அம்மாவை வெறுக்கிறாள். ஆனால், அம்மா கொல்லப்பட்டவுடன், இன்மை உணர்வு, இல்லாமல் போதல், இழப்பு என்பது எலெக்ட்ராவைத் தீவிரமான பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. அம்மாவின் இழப்பை, எலெக்ட்ரா அப்போதுதான் உணரத்துவங்குகிறாள். அதனால்தான், அம்மாவின் உடைகளை உடுத்திக்கொள்கிறாள். இது உலகளாவிய உணர்வுதான்.
என் வாழ்வில், நான் என் தந்தையை இழந்தபிறகு, அவரது வேட்டி போன்ற உடைகளை எடுத்துவந்து இங்கு வைத்திருக்கிறேன். அதுபோல, அம்மா, அப்பாவின் சருமத்திற்கு ஒரு மனம் இருக்கிறதல்லவா, அந்த மனத்தை உடைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

அம்சவள்ளி: மூன்றாவது மோனலாக், எலெக்ட்ராவின் காதலனாக வருபவருடையது. ஆரம்பத்தில் நாடகம் நிகழ்த்தும்போது, முதலில் கைதுசெய்யப்படுகிறவர் அவர். அவரது மோனலாக் இவர்களுடையதிலிருந்து இன்னும் சற்று வித்தியாசமானதாக இருக்கும். ”இனிமேல் நான் கெரில்லா இயக்கத்திலும், கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் இருக்கமாட்டேன்” என்று கையெழுத்து போட்டுவிட்டுத்தான் வெளியில் வந்திருப்பார். மேலும், அவர் பேசுகிறபோது, ஒரு பக்கவாட்டில் கீழே குனிந்து, முகம் முழுதாகத் தெரியாதவாறுதான் பேசுவார். எலெக்ட்ராவின் தந்தையோ, எலெக்ட்ராவோ நேரடியாகக் கேமராவைப் பார்த்து பேசுவதுபோல, மூன்றாவது மோனலாக்கில் இருப்பவர் பேசமாட்டார். அவர் தன் செய்கைக்கு வருத்தப்பட்டுப் பேசுவதுபோல, அந்த மோனலாக் வெளிப்படும்.
 
The Travelling Players

யமுனா ராஜேந்திரன்: மூன்று மோனலாக்குகளின் பின்னணிகளையும் நாம் கவனிக்க வேண்டும். எலெக்ட்ராவின் தந்தை, தொடர்வண்டியிலிருந்து இந்த மோனலாக்கைப் பேசுகிறபோது, பின்னணியில் இருக்கிற கதாபாத்திரங்கள் அவரவர் வேலையைக் கவனித்துக்கொண்டிருப்பதுபோலயிருக்கும். இரண்டாவது, எலெக்ட்ராவின் மோனலாக், மலைப்பிரதேசத்தில் (கைவிடப்பட்ட இடம்) நிகழ்கிறது. ஆனால், மூன்றாவது மோனலாக்கிற்குள் இரு நபர்கள் உள்ளே இருப்பார்கள். எனவே, அவர் பேசுகிற மோனலாக்கானது, அங்கிருக்கிற மற்றவர்களுடனான உரையாடலாகவும் இருக்கும், அதேநேரம், அது நேரடியாகப் பார்வையாளர்களுக்குச் சொல்லப்படுவதாகவும் இருக்கும். இதுதான் மற்ற இரண்டு மோனலாக்குகளுக்கும் இதற்கும் இருக்கிற பெரிய வித்தியாசம். மூன்றாவது, உரையாடல், அதேநேரத்தில் மோனலாக்காகவும் செயல்படுகிறது.

அம்சவள்ளி: மோனலாக்கில், ’பேட்டில் ஆஃப் ஏதென்ஸ்’ பற்றிய குறிப்புகள் வருகின்றன. 28 பேர் இறந்திருக்கின்றனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். பேட்டில் ஆஃப் ஏதென்ஸ் பற்றித் தெரிந்துகொள்வது, கதையைப் புரிந்துகொள்ள கூடுதல் உதவியாக இருக்கும்.

யமுனா ராஜேந்திரன்: கிரீஸின் வரலாற்றில் நடந்த முக்கியமான போர், 31 நாட்கள் நடந்தது. இடதுசாரிகள், அதேபோல பாசிசத்திற்கு எதிராகப் போராடியவர்கள், என எல்லோரும் இணைந்துநின்று போராடிய மிகப்பெரிய போராட்டம். 31நாட்கள், அந்தப் போராட்டம் நடந்ததற்குக் காரணம் என்னவென்றால், எந்த உரிமைகளுக்காகப் போராடினார்களோ, அந்த அடிப்படை மனித உரிமைகள், அடிப்படைத் தொழிலாள வர்க்கத்திற்கான, அந்த உரிமைகள் எல்லாமே நசுக்கப்பட்ட ஒரு காலத்தில் அந்தப் போராட்டங்கள் நடக்கின்றன. அந்தப் போராட்டம் நடக்கிறபோது, அந்தப் போராட்டத்தை ஆட்சியதிகாரத்திற்கு ஆதரவாகயிருக்கிறவர்கள், வேடிக்கை பார்க்கிறார்கள். அமெரிக்கா அதற்கு ஆதரவு அளிக்கிறது. ஒடுக்குமுறைகளுக்கும், துப்பாக்கிச் சூடுகளுக்கும் ஆதரவு தருகிறது. பிரிட்டிஷ்காரர்களும் ஆதரவளிக்கின்றனர். 

altcine - The Travelling Players

ஏகாதிபத்தியச் சக்திகளுக்கு எதிராக நடந்த போராட்டம். அதேபோல, தங்களோடு ஒன்றுபட்டு, பாசிசத்தை முறியடித்த, அந்த தேசியவாதிகளுக்கு, தேசியவாத பாசிஸ்டுகளுக்கு எதிராக நடந்த போராட்டம். விவாசயம் தொடர்பான போராட்டத்திற்கு க்ரெட்டா துன்பர்க் ஆதரவளித்திருக்கிறார். பாடகி ரெஹெனாவும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு, சர்வதேசிய அளவில், பல்வேறு கலைஞர்கள், போராடுகிற விவசாயிகளுக்கு உலகம்பூராவிலுமிருந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். என்னுடைய நினைவில், இந்தியாவில் நடந்த மிகப்பெரிய வெகுமக்கள் எழுச்சிப் போராட்டங்களில் ஒன்று, தமிழகத்தில் நடந்த தை எழுச்சி. முழு தமிழக மக்களும் தெருவுக்கு இறங்கிவந்து, அந்தந்த நகரங்களில், தன்னெழுச்சியாகக் கலந்துகொண்ட ஒரு போராட்டம். பத்து நாட்களுக்கும் மேலாக அந்தப் போராட்டம் நடந்தது. ஒடுக்குமுறையின் மூலம், அந்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதைப்போலவே, இந்த விவசாயிகளின் போராட்டம், சரியான அரசியல் தலைமைகொண்ட, சரியான இலக்கு கொண்ட தன்னெழுச்சியான போராட்டம். இந்தப் போராட்டத்தின் எதிரியைப் போலத்தான் அரசாங்கம் நடந்துகொள்கிறது. அவர்கள் மீது பல்வேறு விதங்களில் ஒடுக்குமுறைகளை ஏவிவிடுகிறது. எழுபது, எண்பது வயது முதியவர்களெல்லாம் கைதுசெய்யப்படுகிறார்கள். ஆகவேதான், உலகத்திலிருக்கிற கலைஞர்களின் மனசாட்சியை, இச்சம்பவம் உலுக்குவதாக அமைகிறது. இவ்வளவு நாள் நடந்த போராட்டத்திற்கு எப்படி எதிர்வினை வருகிறதோ, அதேபோல, கிரீஸின் வரலாற்றில், நாட்டினுடைய இறையாண்மைக்காக, தங்களுடைய உரிமைக்காக, தொழிலாளிகளுடைய, விவசாயிகளுடைய, வறிய மக்களினுடைய உரிமைகளுக்காக, தங்களுடைய அடிப்படை அரசியல் சுதந்திரத்திற்காக, நடந்த மிகப்பெரும் எழுச்சியாக, அந்த 31நாள், பேட்டில் ஆஃப் ஏதென்ஸ் இருக்கிறது. அந்தச் சதுக்கத்தில் எல்லோரும் கூடிநின்று நடத்திய போராட்டம் வன்முறையால் கலைக்கப்பட்டது. பலர் கொல்லப்பட்டார்கள். ஆகவே, இது வரலாற்றில் மிகமுக்கியமான போராட்டமாக இருக்கிறது. ஆகவேதான், மோனலாக்கில், அதிலிருக்கிற அரசியல் மிகத்தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அருகிலிருந்த ஹோட்டலிலிருந்து, அமெரிக்கத் தூதரகத்தைச் சார்ந்தவர்களும், பிரிட்டன் தூதரகத்தைச் சார்ந்தவர்களும், பிரெஞ்சு தூதரகம் சார்ந்தவர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்ற விஷயம் சொல்லப்படுகிறது. 

அம்சவள்ளி: படத்தின் காட்சிமொழி அழகியல் குறித்து

யமுனா ராஜேந்திரன்: குடும்பம், மனித உறவுகள், அன்றாட வாழ்வின் நெருக்கடிகள், தனது குரூரம் என எல்லாவற்றையும் மறப்பது, சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்வது, பரந்த இயற்கைச் சூழலைப் பார்க்கும்போதுதான். உயரமான இடத்திலிருந்து வருகிற அருவிகள், மலைகள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருக்கிற பனிவெளிகள், பாலைவனம், மழைபெய்கிற காடு, இதெல்லாமே மனிதனுக்கு, அன்றாடச் சூழலிலிருந்து விட்டுவிடுதலையாகி, இயற்கையோடு கலந்த ஒரு உணர்வை உருவாக்கும். ஆஞ்சலோபெலோஸ் காட்சிப்படுத்துகிற தெருக்களைச் சற்றுக் கவனியுங்கள். அதில் கதாபாத்திரங்கள் நடந்துபோகிற தெருக்கள் எல்லாமே ஈரமான தெருக்களாகவே இருக்கும். மழைபெய்கிற அல்லது மழைபெய்துமுடித்த தெருக்களாகவே இருக்கும். இயற்கையின் பரவசம் ஆஞ்சலோபெலோஸின் அனைத்து படங்களிலும் முக்கியக் காரணிகளாக இருக்கும். இது பார்வையாளர்களுக்கு ஒருவித ஏகாந்தமான மனநிலையைக் கொடுக்கும். பெரிய இயற்கையின் முன்னால், சிறு ஜீவராசிகளாக மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை இவரது ஃப்ரேம்கள் உணர்த்தும். 

’எடெர்னடி அண்ட் எ டே’யில், முழுப்படமும் அப்படித்தான் எடுக்கப்பட்டிருக்கும். அக்காவும், தம்பியுமாக, அந்த இரு குழந்தைகளும் நடந்துபோகிற விதங்களெல்லாம், இந்த விதத்தில்தான் காட்சியாக்கப்பட்டிருக்கும். அவரது படங்கள் எல்லாமே, இயற்கையின்மீது நேசம்கொண்ட, இந்த இயற்கையினுள்ளே பிரவேசிக்கிற மனிதர்களை, பறவைக்கூட்டம் போல அனுபவிக்கிற, அழகிய மனநிலையைக் கொண்டிருக்கும். 

அழகியலின் ஒரு பகுதியாக, இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற இசை குறித்துப் பார்ப்போம். இது நாடகம் சம்பந்தமான படம். அதாவது, ஒரு நாடகத்தை நிகழ்த்துகிற நாடோடிக் கலைஞர்கள் குறித்த படம். நாடகங்களில் 1950களில் இருக்கிற பிரதானமான கருவிகள் என்றால், அதில் ஆர்மோனியப்பெட்டிதான் இருக்கும். நம் ஊர்களில், போடப்படுகிற நாடகங்களில் கூட ஆர்மோனியப்பெட்டியைப் பயன்படுத்தி எல்லாவிதமான உணர்ச்சிகளையும் கொண்டுவந்துவிடுவார்கள். அதேபோல, ’ட்ராவலிங் ப்ளேயர்ஸ்’ படத்திலும் ஆர்மோனியப்பெட்டி பிரதான வாத்தியக்கருவியாக இருக்கிறது. அதற்கடுத்தது பார்த்தீர்களேயானால், அக்கார்டியன் வாசிக்கிற ஒரு கலைஞன் அங்கிருக்கிறார். அடுத்து, போராளிகள் நாஜிக்களின் கொடியைக் கைப்பற்றி எரிகிற இடம், அடுத்து போராட்டச் சதுக்கத்தில் மக்கள் ஒன்றிணைந்து, செங்கொடி அசைத்து, பாடல்கள் பாடுகிறபோது, என இரண்டு இடங்களில் வெண்கல மணியோசை பயன்படுத்தப்பட்டிருக்கும். அதுதவிர, இந்தப் படத்தில் வேறுவிதமான இசைக்கருவிகளோ, இசைத் தருணங்களோ கிடையாது. இந்த மூன்றே முக்கால் மணி நேர கால அளவு கொண்ட படத்தில், உண்மையிலேயே இசையைப் பயன்படுத்திய காட்சிகள் என்று, நீங்கள் பதினைந்திலிருந்து இருபது நிமிடங்களுக்குமேல் சொல்லமுடியாது. மற்ற எல்லா இடங்களிலும் மெளனம்தான் பிரதானமாக இடம்பெற்றிருக்கும். 

பாலு மகேந்திரா,”ஒரு படத்தை எடுக்கும்போது, எந்தக் காட்சியை வைக்கவேண்டும் என்று சொல்வதைவிடவும், எந்தக் காட்சியை வைக்கக்கூடாது என்ற உணர்வு வேண்டும்என்று சொல்வார். அதுவே, சத்யஜித் ரே என்ன சொல்வாரென்றால், ”ஒரு படத்திற்கு இசையமைக்கும்போது, எந்தக் காட்சிக்கு இசையமைக்கக்கூடாது என்ற புரிதல் வேண்டும்” என்று சொல்வார். எப்போது மானுட நாடகம் இருக்கிறதோ, எப்போது மனித உணர்வுகள் கொந்தளிப்பாக வெளிப்படுகிறதோ, அங்கு இசைக்கு எந்தவிதமான இடமும் கிடையாது. மெளனம் மட்டுமே பல்வேறு விஷயங்களைப் பேசும். அடுத்து, பயன்படுத்துகிற இசைக்கருவிகளுக்கும், கதைக்கும் தொடர்பு இருக்க வேண்டும். அப்படிப் பார்க்கையில், இந்த அக்கார்டியனும், ஹார்மோனியமும் நாடோடி நாடகக் கலைஞர்களின் வாழ்வியலின் ஒரு அம்சமாக இருக்கிறது. அதேபோல, இரு இடங்களில் வருகிற அந்த வெண்கல மணியோசை, எக்காள முழக்கத்தினுடைய பின்னணியாக இருக்கிறது. அவ்வளவு தெளிவாக, இந்தப் படத்தில் இசைக்கருவிகளும், இசையும் பாவிக்கப்படுகின்றன.

அதனால்தான் ஏஞ்சலோபெலோஸின் படங்களை, உண்மையில் மெளப்படங்கள் என்றே சொல்லலாம். ஏனெனில், அமைதி, மெளனம், பேசப்படாத தருணங்கள் என்பது மிகுந்த மிகுந்த அர்த்தம் வாய்ந்தது. இதை உணர்ந்த கலைஞன் அவர். அடுத்து, அவரது ஃப்ரேம்களில், வெற்றிடத்திற்கு அதிக இடமிருக்கும். அது மனிதர்களுக்கு ஒரு விடுதலையுணர்வை வழங்குகிறது. சினிமா என்றால் ”சைட் அண்ட் சவுண்ட் (Sight and Sound)”. இந்த இரண்டிலும் நீ எந்தளவிற்கு ஆளுமையுடன் இருக்கிறாய் என்பதை வைத்துத்தான், சினிமா மொழியைப் புரிந்துவைத்திருக்கும் உன் அனுபவமும் விரிவடையும். ஆஞ்சலோபெலோஸிற்கு இந்த இரண்டும் சார்ந்த புரிதல் மிக இயல்பாகவும், நுட்பமாகவும் வாய்த்திருக்கிறது. 

The Aesthetics of the Long Take in Theo Angelopoulos's The Travelling  Players – Offscreen

அம்சவள்ளி: அவரது பல படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதில் குறிப்பிட்டு நாம், ட்ராவலிங் ப்ளேயர்ஸ் படத்தை உரையாடலுக்கு எடுத்துக்கொள்ள காரணம் என்ன?

யமுனா ராஜேந்திரன்: சத்யஜித் ரே எத்தனையோ படங்கள் எடுத்திருக்கிறார். ஆனால், அவரது முக்கியமான படங்களைப் பற்றிப் பேசவேண்டுமென்றால், என்னால் இரண்டு படங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். ஒன்று, சாருலதா மற்றொன்று பதேர் பாஞ்சாலி. குழந்தை உலகம் பற்றியும், வறுமை பற்றியும், ஆண் பெண் தொடர்பான நுட்பமான சிக்கல் பற்றியும்தான் ரே அதிகமாக எடுத்திருக்கிறார். அகிரா குரசோவாவை எடுத்துக்கொள்வோம். அவரது முக்கியமான படங்கள் என்றால், எல்லோரும் குறிப்பிடுவது ஒன்று, ரஷமோன், மற்றொன்று செவன் சாமுராய். ரஷமோன், மனித உணர்வுகள் தொடர்பான, அதற்குள்ளிருக்கிற சிடுக்குகள், முரண்கள், பல்வேறு பரிமாணங்கள் கொண்ட, உணர்வுரீதியிலான படம். செவன் சாமுராய் ஒரு ஆக்ஷன் கதைக்களம். ஒரு சமூக நன்மைக்காக, அல்லது மக்கள் கூட்டத்தின் விடுதலைக்காக, தன்னை அர்ப்பணித்துக்கொள்கிற, சாமுராய் வீரர்களின் மரபு பற்றியது. இது பற்றி குரசோவா நிறைய படங்கள் எடுத்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் பாதிப்பில் உருவான, ’ரான்’ வரை இந்தப் பட்டியல் நீளும். இந்த இரண்டு ஜானர்களில்தான், தன் கதையை, குரசோவா சோதித்துப் பார்த்திருக்கிறார். அதேபோலத்தான், ஒரு இயக்குனரின் அத்தனைக் கலைக்கூறுகளும் ஒருங்கே அமையப்பெற்ற படங்கள் என்று பார்க்கிறபோது, ஆஞ்செலோபெலோஸின் ட்ராவலிங் ப்ளேயர்ஸ் முக்கியமான படமாக இருக்கிறது. இவரது படங்களின் உன்னதம், அல்லது தனித்துவம் என்று என்னவெல்லாம் நினைக்கிறோமோ, அவையெல்லாம் இணைந்த, ஒரு படமாக, இந்த ட்ராவலிங் ப்ளேயர்ஸ் படம் இருக்கிறது. காலத்தைக் கடந்த படம், திரைப்படத்தினுடைய பல்வேறுவிதமான அழகியல் சாத்தியங்களைக் கொண்டிருக்கிற படம். அதேபோல, வரலாற்று நுண்ணுணர்வும், தத்துவார்வ போருக்கும் இடையில், வாழ்வு குறித்த தரிசனமும் கொண்ட, ஒரு கலைஞனுடைய படமாக இது அமைந்திருக்கிறது. அந்த வகையில் ட்ராவலிங் ப்ளேயர்ஸ், ஆஞ்செலோபெலோஸின் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்.