சினிமாட்டிக் மொழி: லென்ஸ் தேர்வு - க்றிஸ்டோபர் கென்வொர்தி

நிலையான லாங் லென்ஸ்

கேமராவில் லாங் லென்ஸ் பயன்படுத்தி எடுக்கப்படுகிற ஷாட்டின்போது, கேமராவை நகர்த்தாமலேயே, காட்சியில் சக்திவாய்ந்த விளைவுகளை உண்டாக்க முடியும். இதற்கு உதாரணமாகத்தான், The Road என்ற திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிற சட்டகங்கள் உள்ளன. பூட்டப்பட்ட இரு ஷாட்களுக்கு இடையே நிகழும் ஒரு எளிய வெட்டு(கட்), சுற்றுப்புறச் சூழல் வழியாகக் கதாபாத்திரங்களின் போராட்ட உணர்வை வெளிப்படுத்துகிறது. 


முதல் சட்டகத்தில், கேமரா நீண்ட தூரத்திற்குப் பின்னால் வைக்கப்படுகிறது, மேலும் சுற்றுச்சூழலுக்குள் இருக்கும் கதாபாத்திரங்களைக் காட்சிப்படுத்த medium-to-long lens பயன்படுத்தப்படுகிறது. லாங் லென்ஸ் பயன்படுத்துவதில் உள்ள பொதுவான அணுகுமுறை என்னவென்றால், சட்டகத்தில், இடத்தின் முன்புறம்(Front), மத்தியப்பகுதி(Middle), மற்றும் பின்னணி(Background) போன்றவற்றைப் பகுத்து வெளிப்படுத்துவதற்காகத்தான், ஆனால் இந்த ஷாட்களில், இவையனைத்தும் ஒன்றிணைந்திருக்கின்றன. இவையனைத்தும் தனித்தனியாக இல்லாமல், ஒன்றாகக் கலந்திருக்கின்றன. 

முன்புறத்தில் எதுவும் ஊடுருவித் தோன்றாததாலும், பின்னணியானது கதாபாத்திரங்களுக்கு நெருக்கமாக இழுக்கப்பட்டிருப்பதாலும், இந்த ஷாட், காட்சிக்குரிய அனைத்து ஆழத்தையும் (Depth) நீக்குகிறது. எல்லா இயக்கங்களும் மெதுவாகவும் கடினமாகவும் நடைபெறுவதைப் போல, இதுவொரு நிலையான உணர்வை உருவாக்குகிறது. கேமராவிலும், லென்ஸிலும் எவ்வித அசைவோ, இயக்கமோ இல்லை, அனைத்தும் நிலையாக அப்படியே உள்ளன. இவையனைத்தும் முதல் சட்டகத்தில் நடைபெறுகிற விஷயங்கள். இனி அடுத்த ஷாட்டிற்கு வருவோம். 

அடுத்த ஷாட், லாங்கர் லென்ஸ் பயன்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கிறது, மேலும் இது நடிகர்களுக்குச் சற்று நெருக்கமாக வைக்கப்பட்டிருக்கிறது, முதல் சட்டகத்தில் முழுமையாகத் தெரிந்த மரங்கள் யாவும், இரண்டாவது ஷாட்டில் சட்டகத்திலிருந்து பாதி வெளியேறியிருக்கின்றன. முதல் ஷாட்டில் தெரிந்த மரங்களின் உச்சி, இரண்டாவது ஷாட்டில் நம் பார்வைக்குத் தெரிவதில்லை. 


இது காட்சியில் ஒரு சிறைவாச உணர்வை உருவாக்குகிறது, ஏனென்றால், கதாபாத்திரங்கள் முன்னோக்கி நடந்துவருகின்றன - அவர்கள் நடந்து வருவதைச் சட்டகத்தில் பார்க்கமுடிகிறது – ஆனால் அவர்கள் கேமராவுக்கு நெருக்கமாக வருவதாகத் தெரியவில்லை, சூழல் இப்போது அவர்களை சிறிய உருவங்களாகத் தோன்றச்செய்கிறது. இந்தப் பரந்த சூழலுக்குள், இந்தச் சிறிய உருவங்கள் சிக்கிக்கொண்டதைப் போன்ற சூழலே வெளிப்படுகிறது. 

இப்பொழுது, முதல் இரு சட்டகங்களையும் கவனியுங்கள், இரண்டிலுமே கதாபாத்திரங்கள் இடம்பெறுகிற நிலையானது, ஃப்ரேமில் ஒரே இடத்தில்தான் அமைந்திருக்கும். இவ்விரு பிரதிகளையும் நகலெடுத்து ஒன்றின் மேல் மற்றொன்றை வைத்துப் பார்த்தால், ஃப்ரேமின் இடது புறத்தில் சற்று கீழேதான், இரு ஃப்ரேம்களிலுமே அந்தக் கதாபாத்திரங்களின் நிலை வைக்கப்பட்டிருப்பதை நாம் கண்டுகொள்ளலாம்.  

எனவே, இக்காட்சியைப் படம்பிடிப்பதற்காக நீங்கள் கேமராவை அமைக்கிறபொழுது, இதை மனதில் வைத்திருக்க வேண்டும். இரண்டு ஷாட்களிலுமே கதாபாத்திரங்கள், ஃப்ரேமில் ஒரே நிலையில்தான் இடம்பெற வேண்டும். அப்போதுதான் இரு ஷாட்களுக்கிடையே வெட்டு நிகழ்கிறபொழுது, காட்சியில் நீங்கள் எதைக் காண்பித்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், சட்டகத்தின் அதே பகுதியில் கதாபாத்திரங்கள் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகத் தெரிவதை அதிர்வில்லாமல் உணர்த்தமுடியும். எப்பொழுதுமே, கேமராவின் இயக்கமோ, லென்ஸின் மாற்றமோ, அல்லது ஷாட்டிற்கு இடையே நிகழ்கிற வெட்டோ, பார்வையாளர்களின் மனதில், ஆழ் உணர்ச்சியில், அவர்களை அறிந்தோ அறியாமலோ ஒரு வித உணர்வைத் தூண்டுகிறது. அதன்படிப் பார்த்தால், இங்கு இந்த இரு ஷாட்களையும், அடுத்தடுத்து வைத்துப் பார்க்கிறபொழுது, அவர்கள் (கதாபாத்திரங்கள்) இனிமேல் முன்னேறுவது கடினம், இங்கு வசமாகச் சிக்கிக்கொண்டார்கள் எனும் உணர்வை உருவாக்குகிறது. 

அடுத்து, The Adjustment Bureau திரைப்படத்திலிருந்து, கொடுக்கப்பட்டிருக்கிற உதாரணத்தைக் கவனிப்போம், இங்கு extremely long lens பயன்பாடானது, காட்சியில் புதிய விபரங்களை வெளிப்படுத்துவதில் ஃபோகஸ் செய்கிறது. 

 

ஏற்கனவே, இருக்கிற அதே சட்டகத்திலிருந்து புதிய ஒன்றைக் காண்கிறோம், பழையதை விடுத்து, புதியதில் கவனம் செலுத்துகிறோம். அதற்கேற்ற வகையில் லென்ஸும் ஃபோகஸ் ஷிஃப்ட் (Focus Shift) ஆகிறது. முதல் சட்டகத்தில் extremely long lens ஆனது, நடிகரிடமிருந்து வெகுதொலைவில் வைக்கப்படுவதால், அது பின்னணியில் கவனம் செலுத்தாது. முழுக் கவனமும் நடிகர் மீதுதான் இருக்குமேயொழிய, தொலைவில் யார் இருக்கிறார்? பின்னணியில் என்ன இருக்கிறது? என்பது முழுமையாகத் தெரியாது. எனவே, இப்போது, பின்னணியில் உள்ள இரண்டாவது நடிகர் மங்கலான(Blur) நிலையிலிருந்து, முன்னோக்கி மெல்ல நடந்து வருகிறார், இப்போது கேமராவும் அவருக்கு ஃபோகஸை மாற்றுகிறது. எனவே, இதுவரை நாம் பார்த்துவந்த நடிகர் சட்டகத்தில் மங்கலானதாகத் தோன்றுகிறார், புதிய இரண்டாவது கதாபாத்திரம், தெளிவாகத் தெரிகிறது. சீ – சா போல இந்தச் செயல் நடந்தேறுகிறது. 

 படப்பிடிப்புத் தளத்தில் இந்நுட்பத்தை focus pulling மூலமாகத்தான் சாதிக்க முடியும், மாறாக கேமராவை நகர்த்துவதன் மூலமாகவோ, லென்ஸை நகர்த்துவதன் மூலமாகவே, இந்நுட்பம் கைகூடாது. உங்கள் லென்ஸ் எந்தளவிற்கு நீண்டதாக உள்ளதோ (லாங் லென்ஸாக உள்ளதோ) அந்தளவிற்குச் சட்டகத்தில் முன்புறத்தில் உள்ள நடிகர் மங்கலாகிறார், மிக நீண்ட லாங் லென்ஸ் என்றால், முன்னணியில் உள்ள கதாபாத்திரம் சட்டகத்திலிருந்து மறைந்தே விடும். 

இதே நுட்பத்தில், நாம் ஆரம்பத்தில் பார்த்த காட்சியில், இரு ஷாட்களுக்கு இடையே வெட்டு நிகழ்கிறது. அதாவது கட் மூலமாகத்தான், அந்தக் காட்சியை நகர்த்துகிறோம். அந்தக் கதாபாத்திரங்கள் நெருங்கி நடந்துவருகிறார்கள் என்பதைக் கட் மூலமாக உணர்த்துகிறோம். அதேபோல, இங்கும் ஒரே சட்டகத்தில் இருவிதமான தகவல்கள் வெளிப்படுகின்றன. ஆனால், இடையே கட் நிகழ்வதில்லை. அந்த வேலையை focus pulling பார்த்துக்கொள்கிறது. தீவிரமான ஃபோகஸ் ஷிஃப்டினைப் பயன்படுத்துவதன் மூலம், நிலையாக வைக்கப்பட்டிருக்கிற கேமராவும், அதன் லென்ஸும் எந்தவொரு இயக்கத்தையும் மேற்கொள்ளாமல், ஃபோகஸினை மட்டும் மாற்றுவதன் மூலம், கட் நிகழாமலேயே, காட்சியில் கட் நிகழ்ந்தது போன்ற உணர்வினைக் கொண்டுவந்து இருவேறுபட்ட தகவல்களைக் காட்சிரீதியாகக் கடத்துகிறது. 


லாங் லென்ஸ் நகர்வுகள்

நீங்கள் ஒரு காட்சிக்கு லாங் லென்ஸைப் பயன்படுத்தும்போது, கேமராவின் அனைத்து பக்க இயக்கங்களும், மிகப்பெரிய உழைப்பைக் கொடுக்கவேண்டியிருக்கும். அதேபோல, லாங் லென்ஸ் இயக்கங்கள் மிகைப்படுத்தப்பட்டதாகவும் தோன்றும். சிறு அசைவேயாயினும், அது திரையில் பார்க்கும்பொழுது, அது பெரிய விளைவைக் கொண்டுவர, பல மெனக்கெடல்களைக் கடக்க வேண்டியிருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால், பெரும்பான்மையான கேமரா நகர்வுகள் கொண்ட காட்சிக்கு லாங் லென்ஸ்களைப் பயன்படுத்த முடியாது, கதாபாத்திரத்தைக் கேமரா நகர்வுடன் படம்பிடிக்க லாங் லென்ஸ் பொருந்தாது, நீண்ட ஸ்டெடிகேம்(Steadicam) ஷாட்கள், ஹேண்ட் ஹெல்ட் (Handheld ) கேமரா இயக்கங்கள் போன்ற அதிகமான நகர்வுகள் கொண்ட காட்சிகளுக்கு லாங் லென்ஸைப் பரிந்துரைக்கமாட்டார்கள்.

அதேநேரம், லாங் லென்ஸ் என்றால், அது கேமராவை ஒரு நிலையான இடத்தில்வைத்துப் படம்பிடிக்கிற ஷாட்களுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும், மற்ற கேமரா நகர்வுகள் கொண்ட ஷாட்களுக்கு, அவற்றைப் பயன்படுத்தவே முடியாது, என்று தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம். லாங் லென்ஸ் நிலையான காட்சிகளுக்கு மட்டுமே என்று பொருளல்ல. 

லாங் லென்ஸ்களைப் பயன்படுத்தி கேமரா நகர்வுகள் மேற்கொள்கிறபொழுது, ஃப்ரேமிங் மற்றும் ஃபோகஸ் புள்ளிகள் மாறும். மேலும், நாம் முன்பே சொன்னபடி, அதன் சிறுசிறு அசைவுகளைத் திரையில் உருவாக்குவதற்குக் கூட, மெனக்கெடல்கள் அதிகமாக வேண்டும். எனினும், உங்களுக்கு அத்தகைய வலுவான நகரும் காட்சிகள்தான் படத்திற்குத் தேவை, என்பது உறுதியாகத் தெரிந்தால், நீங்கள் கேமரா நகர்வுகளுக்கும் லாங் லென்ஸ்களைப் பயன்படுத்த முடியும். எல்லாமே காட்சியின் தேவையைப் பொறுத்துதான் தீர்மானிக்கிறோம். ஃபோகஸ் மற்றும் ஃப்ரேமிங் தொடர்பான சவால்கள் இருந்தாலும், மிக சக்திவாய்ந்த நகரும் ஷாட்களை உருவாக்க லாங் லென்ஸ்களைப் பயன்படுத்தலாம். 
Hard Candy திரைப்படத்தில், இந்தக் காட்சியில், லாங் லென்ஸைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு எளிய dolly shot கூட, மிகவும் சுவாரஸ்யமாகிறது. 


ஒரு கதாபாத்திரத்தை நோக்கி கேமரா நகரும்பொழுது, நாம் வழக்கமாக, இதைப் படம்பிடிக்க ஷார்ட் லென்ஸைத்தான் தேர்ந்தெடுக்கிறோம், ஏனெனில் இது டாலி நகர்கிற உணர்வை வேகமாக்குகிறது, விஷயங்கள் பெரிதாகி, சட்டென மூடப்படும்/நிறைவுக்கு வரும். அதுவே, லாங் லென்ஸ் உபயோகப்படுத்தும்பொழுது, இந்தக் காட்சி டாலி ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை உருவாக்க, நீங்கள் இன்னும் அதிக பாதையை(ட்ராக் - தடவாளங்கள்) அமைத்து, கதாபாத்திரத்தை நோக்கி, கேமராவை அதிக தூரத்திலிருந்தும், இன்னும் வேகமாகவும் தள்ள வேண்டும். அப்போதுதான், காட்சியைப் பார்க்கிறபொழுது, இது டாலி ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது போன்ற உணர்வைக் கொடுக்கும். அதுவே, நீங்கள் ஒரு சில அடிகளுக்கு மட்டும், டாலியை நகர்த்தினால், காட்சியில் எந்தவொரு மாற்றமும் நிகழாதது போலவே தோன்றும். ஃப்ரேமில் மிக மெல்லிய நகர்வுதான் முன்னெடுக்கப்பட்டிருக்கும். அதாவது, கேமரா, கதாபாத்திரத்தை நோக்கி சற்று முன்னகர்ந்து வந்திருப்பதை, நம்மால் வலுவாக உணரமுடியாது. எனவே, உங்கள் கேமராவை, கதாபாத்திரத்திலிருந்து வெகுதொலைவில் அமைத்து, பின்னர் பத்து அடி அல்லது அதற்கு மேலிருந்து தள்ளிவர வேண்டும். அதே நேரத்தில் கதாபாத்திரத்திடமிருந்து ஃபோகஸும் மாறிவிடக்கூடாது. எனவே, லாங் லென்ஸ் பயன்படுத்துகையில், போகஸில் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இருப்பினும் கவனக்குறைவால், அல்லது எதிர்பாராமல் ஷாட்டின்பொழுது, இடைப்பட்டநேரத்தில் ஃபோகஸ் சற்று நழுவியிருந்தாலும், அதற்காகக் கவலைப்பட வேண்டாம், ஆனால், கேமரா ஓய்வுநிலைக்கு வருகிறபொழுது, ஃபோகஸானது கதாபாத்திரத்தின் கண்களில் முழுமையாக இருப்பதுபோலப் பார்த்துக்கொள்ளுங்கள். 

அதிகமான தடவாளங்கள் தேவைப்பட்டால் மற்றும் ஃபோகஸைத் தக்கவைத்திருப்பதும் நெருக்கடியாக இருந்தால், இந்த வகையான ஷாட்டினால் என்னதான் நன்மை? இதற்குப் பேசாமல் ஷார்ட் லென்ஸ் பயன்படுத்தியே இந்தக் காட்சியை எடுத்துவிடலாமே! என்று தோன்றும். ஆனால், நாம் அப்படி நினைக்கலாமே தவிர, அறிவியல் தொழில்நுட்பம் அப்படியல்ல. ஷார்ட் லென்ஸாக இருந்தாலும், லாங் லென்ஸாக இருந்தாலும், இருவேறு விதமான பரிமாணங்களைக் கொண்டிருக்கின்றன. ஒரே காட்சியை இந்த இருவிதமான ஷாட்களைக் கொண்டும் படம்பிடித்துப் பார்க்கிறபொழுது, பயிற்சியின் வாயிலாகவே இந்த வேறுபாட்டை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும். எனினும், இப்போது இங்கு நாம் லாங் லென்ஸைப் பயன்படுத்துவதற்கான காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். லாங் லென்ஸ்கள் பார்வையின் கோணத்தைக் குறுக்குகின்றன, எனவே கதாபாத்திரத்தைச் சுற்றியுள்ள சூழல் நம் பார்வைக்கு மறைந்துவிடுகிறது, நம் கவனம் முழுவதும், அந்தக் கதாபாத்திரத்தின் மீது மட்டுமே பதிகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில் கூடக் கவனித்துப் பாருங்கள், லாங் லென்ஸ் கொண்ட கேமரா, அந்தப் பெண்ணை நோக்கி நெருங்க நெருங்க, சுற்றுப்புறம் மங்கலாகிறது. இதனால்தான் லாங் லென்ஸ்கள், அண்மைக் காட்சிகளுக்கு (க்ளோஸ் அப் ஷாட்களுக்கு) அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன; இது நடிகரை மட்டும் கவனத்திற்குள்ளாக்குகிறது. அவரை மட்டும் ஃபோகஸ் செய்கிறது. இது ஒரு டாலி இயக்கத்துடன் இணைகிறபொழுது, அது கதாபாத்திரத்தின் மீதான ஃபோகஸை இன்னும் மிகைப்படுத்துகிறது. 

அதுவே நீங்கள், இதற்கு ஷார்ட் லென்ஸ் பயன்படுத்துகிறபொழுது, சட்டகத்தின் பின்னணிச் சூழலும் கணிசமாக நிரம்பப்பெற்றிருப்பதோடு அந்த ஷாட்டை முடித்திருப்பீர்கள், அல்லது நீங்கள் நடிகருக்கு மிகவும் நெருக்கமாகக் கேமராவை வைத்துப் படம்பிடிக்க வேண்டும், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நடிகருக்கு மிக நெருக்கமாகக் கேமராவை வைத்துப் படம்பிடிக்கிறபொழுது, அந்நடிகரின் முகம் திரையில் விகாரமானதாகத் தோன்றும். இத்தனை மெனக்கெடல்களும், பின்னணிச் சூழலை மறைப்பதற்காகத்தான் மேற்கொள்கிறோம். ஷார்ட் லென்ஸ் பயன்படுத்தியிருப்பதால், ஃப்ரேமில் கதாபாத்திரத்தோடு இணைந்து, பின்னணிச் சூழலும் இடம்பெறுகின்றன. நமக்கோ, கதாபாத்திரம் மட்டும்தான் தேவை. அதற்காக, அவர் முகத்திற்கு நெருக்கமாகக் கேமராவைக் கொண்டுசெல்கிறோம். அதுவோ, சிதைந்த பிம்பமாக, அஷ்டகோணலாகத் திரையில் தோன்றுகிறது. இதற்கு ஒரே தீர்வு, லாங் லென்ஸ் பயன்படுத்துவதுதான். ஏனெனில், லாங் லென்ஸ்கள்தான், கதாபாத்திரத்தின் பின்னணிச் சூழலை மிக எளிமையாக மறைக்கின்றன, அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆக்கிவிடுகின்றன, எனவே, ஃப்ரேமில் நடிகர் மட்டும் தனியாகத் தெரிகிறார். சினிமாவில் பெரும்பாலான க்ளோஸ் அப் காட்சிகள் இப்படித்தான் எடுக்கப்படுகின்றன.

லாங் லென்ஸ் பயன்படுத்தி எடுக்கப்படுகிற காட்சியமைப்புகளைக் கதைக்குத் தக்க விதத்தில் பயன்படுத்துகிறபொழுதுதான், அதன் வலிமையை உணரமுடியும். இந்த நுட்பம், கதையின் ட்ராமாட்டிக் (நாடகீயத்) தருணங்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் ஏற்றது, இந்த உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம், கதைப்படி அந்தப் பெண் முதன்முறையாக ஒருவரைச் சந்திக்கிறார், அந்தத் தருணத்தைக் காட்சியியல் ரீதியாக உணர்த்துவதற்காகத்தான், இந்த ஷாட்டை எடுத்திருக்கிறார்கள். அந்நபரைப் பார்க்கிறபொழுது, தன்னைச்சுற்றியுள்ளவை அனைத்தும் மறைந்து (out of focus) ஆகிவிடுகின்றன. எனவே, ஒரு நுட்பத்தை நீங்கள் தெரிந்துவைத்திருந்தால் மட்டும் போதாது, அதை எங்கு? எப்போது? பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், அது சரியாக வேலைசெய்யும், அதைப் பயன்படுத்தியதற்கான நோக்கத்தையும் நிறைவேற்றும். எனவே, கதைதான், பயன்படுத்தவேண்டிய நுட்பத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை மீண்டும் நினைவுகொள்வோம். 

இதேபோன்று இன்னுமொரு லாங் லென்ஸ் நுட்பம் குறித்துப் பார்ப்போம்: கேமராவை ஒரே இடத்தில் வைத்திருப்பதன் மூலமாகவும், அதே நேரத்தில் நெரிசலான இடத்திற்குள் புகுந்து வேகமாக ஓடும் நடிகரைப் பின்தொடர்வதன் மூலமாக, அதாவது கேமராவின் இடத்தை மாற்றாமல், பக்கவாட்டில் நடிகரின் இயக்கத்திற்கு ஏற்ப திருப்புவதன் மூலம், மற்றுமொரு சக்திவாய்ந்த விளைவை நீங்கள் அடையலாம். இதோ, அதற்கான உதாரணப் படங்களைக் கவனியுங்கள். 

(The Adjustment Bureau. Directed by George Nolfi.)

இதில் கேமராவை பான்(Pan) செய்கிறோம், என்பதைத் தவிர வேறொன்றுமில்லை, ஆனால், இங்கு லாங் லென்ஸ் பயன்படுத்தியிருப்பதால், அது நடிகரின் இயக்கத்துடன் சேர்கிறபொழுது, மிக வேகமாகச் செல்லுதல் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.