சினிமா காட்சியியல் இலக்கணம்

சினிமா காட்சியியல் இலக்கணம்

ஷியாம் ராட் ஷேகர் – அழகியல் பதிவா:

அது இன்ஸ்டிட்யூட்டின் Finale Project. இன்ஸ்டிட்யூட்டிலிருந்து வெளியில் வந்து செய்த படம் அல்ல. இன்ஸ்டிட்யூட்டின் புரொடக்‌ஷனில் உருவான படம். ஒரு மாணவன் ஃப்லிம்மேக்கிங்கை எவ்வளவு சுதந்திரமாகச் செய்யமுடியுமோ, அந்த மாதிரி சுதந்திரமான அணுகுமுறையில் செய்த படம். இயக்குனர் அருணிமா ஷர்மா. நான் அதில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினேன். அழகியல் சார்ந்து இமேஜாக அந்தப் படத்திற்குள் செயல்பட்டதைக் கடந்து, உள்ளடக்க ரீதியில், ஒரு கான்செப்ட் எப்படிப் பயணமாகிறது என்பதுதான் மிக முக்கியமான அணுகுமுறையாக இருந்தது. 

நான் - லீனியராகக் கதை சொல்கிறபொழுது, சினிமா என்கிற கால ஊடகம், எப்படி பிம்பங்களின் வாயிலாகப் பார்வையாளர்களோடு உறவு வைத்திருக்கிறது? என்ற யோசனையை மட்டுமே பயன்படுத்தி செய்த படம் அது. நகரவாழ்க்கை எப்படியாகயிருக்கிறது? இந்நகர வாழ்க்கையில் உள்ள மக்கள் எப்படி நிலைத்தன்மையற்ற முறையில் தொடர்புகொண்டிருக்கிறார்கள்? மிக வலிமையான உறவு என்பதே நகர வாழ்க்கைக்குள் இல்லாமல் போய்க்கொண்டிருக்கும்… இவையெல்லாவற்றையும் எப்படி ஒரு காட்சிரீதியிலான கலைக்குள் கொண்டுவர முடியும் என்று முயற்சித்து உருவானதுதான் ஷியாம் ராட் ஷேகர். 

என்னுடைய பிம்ப உருவாக்கலின் மூலமாக, இந்தக் கருத்தினுள் என்னால் எப்படிப் பயணிக்கமுடியும்? என்பதுதான். அது இப்போது அழகியலாகத் தெரிகிறது என்றால், அதை வெறும் பிம்பங்களாக மட்டுமே பார்க்கிறீர்கள்., என்று அர்த்தம். அதைக் கடந்து படம் என்பதை ஒரு ஒட்டுமொத்த உணர்வாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது. என்னுடன் நீங்கள் பேசுகிறபொழுது, இந்தப் பேச்சின் ஒட்டுமொத்த சாராம்சத்திலிருந்துதான் நீங்கள் என்னைப் புரிந்துகொள்ள முடியும். நான் பயன்படுத்துகிற வார்த்தை ஜாலங்களிலிருந்து நீங்கள் என்னைப் புரிந்துகொள்ள முடியாது. வார்த்தை ஜாலம் என்பது பேசுகிறபொழுது வேண்டுமானால், இனிமையாக இருக்கலாமேயொழிய, நீடித்த பலன் தராது. அப்படித்தான் ஒரு சினிமாவிற்குள் இருக்கிற பிம்பங்களையும் நான் பார்க்கிறேன். திரைப்படத்தின் பிம்பங்கள், திரைப்படம் சொல்கிற கருத்து சார்ந்து பிரதிபலிக்கிற பிம்பங்களாகத்தான் இருக்க வேண்டும். படத்தின் ஒட்டுமொத்த கருத்திலிருந்து அந்தப் பிம்பங்கள் என்ன உணர்வைக் கடத்துகின்றன? என்பது முக்கியம். 

ஒரு திரைப்படத்திலிருந்து வெறும் பிம்பங்களை மட்டும் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்துதான் ஷியாம் ரேட் ஷேகர் உருவானது. இதைத்தான் என்னுடைய பயிற்சியாகப் பார்க்கிறேன். கமர்ஷியலாக நான் செய்யக்கூடிய படங்கள் எல்லாமே, குறைந்தபட்சம், படம் சொல்ல வருகிற கருத்தைத் தாண்டி, பிம்பங்கள் தனியாகத் துருத்திக்கொண்டு தெரியக்கூடாது என்று நினைக்கிறேன். அப்படித்தான் இன்று வரை படங்களுக்கு ஒளிப்பதிவு செய்கிறேன். அதேபோலத்தான், நான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய முதல் படம் ஷியாம் ரேட் ஷேகரும் அமைந்தது. 


ஆனால், அதுபோன்ற முயற்சியை அதற்கடுத்து செய்வதற்கு அப்படியானதொரு வாய்ப்பு அமையவில்லை. அப்படியானால், நான் வேலை செய்தபடங்களிலேயே உச்சம் என நான் மதிப்பது, என் ஆரம்பகாலப் படங்களில் நான் வேலை செய்ததைத்தான் சொல்லமுடியும். எந்த நெருக்கடிகளும், தடைகளும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் உருவாக்கப்பட்ட படம் அது. அப்படித்தான், அதில் முழு வீச்சோ, முழு பரிமாணமோ அதற்குள் வருகிறது. அதிலிருந்து அப்படியே தொடர்ந்திருந்தால் இன்னொரு இடத்தை நோக்கி நகர்ந்திருக்கலாம். ஆனால், நான் கமர்ஷியல் ப்ளாட்பார்மிற்குள் வேலைசெய்ய வந்ததன் பின்னால், வியாபாரத்திற்கு உட்பட்டுத்தான் இயங்கவேண்டியிருக்கிறது. வியாபாரத்திற்குள்ளிருந்து எவ்வளவு தூரம் நம்மை நாம் வெளிப்படுத்திக்கொள்ள முடியுமோ, அதைத்தான் நாம் செய்கிறோம். நான் செய்கிற படங்களில் என்னுடைய சித்தாந்தத்தைத் தொடர்ச்சியாகப் பரிசோதித்துப் பார்க்க முயற்சிக்கிறேன். 

//ஷியாம் ராட் ஷேகர் படம் தொடர்பாக ஏற்கனவே, தமிழ்ஸ்டுடியோ இணைய தளத்தில் வெளியான கட்டுரை, படம் பற்றிய தகவல்களைப் பெற உதவும். 
அக்கட்டுரைக்கான இணைப்பு: 

ஷியாம் ராட் ஷேகர் படத்தில் ட்ரெய்ன் காட்சி வருகிறது. அது அனுமதி வாங்கி எடுக்கப்பட்ட காட்சியா? அல்லது கொரில்லா ஃப்லிம்மேக்கிங் முறையில் எடுத்தீர்களா?

அப்போதெல்லாம் மாணவர்கள் படம்பிடிப்பதற்காக, சீக்கிரமே அனுமதி கொடுத்துவிடுவார்கள். அதுதான் நிகழ்ந்தது. வணிக நோக்கத்துடன் செல்பவர்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல்கள் இருந்திருக்கலாம். ஆனால், மாணவர்களாக நாங்கள் படமெடுத்துப் பார்க்கிறோம் என்பதால், அதைப் புரிந்துகொண்டு அனுமதியளித்தனர். எனவே, நாங்களும் விரைவிலேயே படப்பிடிப்பை முடித்துக்கொண்டோம். அது கொரில்லா ஃப்லிம்மேக்கிங்கா? இல்லையா? என்று தெரியவில்லை. எங்களுக்கு ஒரு கம்பார்ட்மெண்ட் கொடுத்தார்கள். மும்பை, மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் பகுதி. அதுவும் அந்தக் காட்சி வி.டி மாதிரியான இடங்களில் எடுக்கப்பட்டது. எனவே, அங்கு எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரும்பிவிட்டோம். மாணவர்களாக இருப்பதால் அது எங்களுக்கு எளிதாக இருந்தது. 


ஒரு திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக உங்களைப் பணியாற்ற அழைக்கிறபொழுது, அந்தத் திரைப்படத்தில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்?

திரைப்படம் என்பது காட்சி ஊடகம். இதில் கதையானது திரைக்கதையாசிரியர்களிடமிருந்து இயக்குனரிடம் வந்து, அவரிடமிருந்து ஒளிப்பதிவாளருக்கு எப்படி கைமாறுகிறது? பின்பு அது படத்தொகுப்பாளரையும் உள்ளுக்குள் கொண்டுவருகிறது. இவையெல்லாவற்றையும் சேர்த்து, ஒரே வேலையாகத்தான் நான் பார்க்கிறேன். எடிட் செய்வதற்கு டெக்னிக்கலான ஒரு ஆளுமை, சினிமோட்டோகிராஃபியைப் பார்த்துக்கொள்வதற்கு ஒரு ஆளுமை, அப்படித்தான் இது பல்வேறு துறைகளாகப் பிரிந்திருக்கிறதே தவிர, ஸ்கிரிப்ட், ஸ்கிரிப்டின் காட்சி வடிவம் என்ன? என்பதுதான் நான் ஒரு திரைப்படத்தில் பணியாற்றச் செல்வதற்கான முக்கியமான அம்சமாகப் பார்க்கிறேன். 
இயக்குனர் உட்பட, அந்த அழைப்பை உள்வாங்கியிருக்க வேண்டும். இங்குதான் இயக்குனரே கதையும் எழுதக்கூடிய பாணி எல்லாம் இருக்கிறது. அதுவே, வெளியில் என்றால், வழக்கமாக, கதை வேறொருவருடையதாகவும், இயக்குனர் அதைப் படமாக எடுத்துக்கொடுப்பவராகவும் இருப்பார். எனவே, காட்சி ஊடகம் என்பதற்கான அர்த்தத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. 

எழுதுவதற்கு எப்படி இந்த எழுத்திற்கான ஊடகத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறதோ, அதுபோல காட்சி ஊடகத்தின் வீரியத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். உலக வர்த்தகத்தில் கதை சார்ந்து, வியாபாரச் சூழல்தான் இருக்கிறது. இதைக் கடந்து, ஒரு சுருக்கமான திரைமொழிக்குள் செல்கிறபொழுது, கதை என்பது வேறொன்றாக மாறும். அப்பொழுது இந்த மீடியம்தான் முன்னால் நிற்கும். எனவே, காட்சி ஊடகத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. அதை முன்னெடுத்துதான் ஒரு ஸ்க்ரிப்ட் உருவாகிறது. இன்றைக்குக் கதை வடிவங்களாக இருக்கக்கூடிய திரைப்படங்கள்தான் இருக்கின்றன. கதைகள்தான் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன. இன்றைக்கிருக்கிற தமிழ் சினிமா, இந்திய சினிமா என எதை எடுத்துக்கொண்டாலும், ரொம்பக் குறைவான படங்களில் வெகுசிலரே, இதனைக் காட்சி ஊடகமாக, தூய்மையான முறையில் முயற்சிக்கிறார்கள். அவர்கள்தான், சினிமாவை காட்சி ஊடகமாக முன்னெடுக்கக்கூடிய ஆட்களாக இருக்கின்றனர். மீதி எல்லோருமே, வழக்கமாக எல்லோரும் பின்பற்றுகிற தொடக்கம், இடைவேளை, முடிவில் அந்தக் கதை என்னவாக முடிந்தது? என்ற பழக்கப்பட்ட வடிவத்திலேயே தொடர்ந்து கதை சொல்கிறார்கள். நான் ஒரு புத்தகத்தை வாசித்தாலும், ஒரு தகவலைச் சொன்னாலும், ஒன்றிலிருந்து ஆரம்பித்து, அதன் முடிவை நோக்கி நகர்த்தி, ஒரு கருத்தைச் சொல்லக்கூடிய பாணி இருக்கிறதல்லவா? அப்படியில்லாமல், இதன் மிடில் பாய்ண்டில் எதை வேண்டுமானலும் சொல்லலாம், அதன் உணர்வுத்தளத்திலிருந்து கதையை மாற்றிக் கட்டமைக்கலாம், அப்படித்தான் நாம் எந்த ஊடகத்திலும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். ஆனால், இங்கு அம்மாதிரியான முயற்சிகள் என்பது குறைவாகத்தான் நடக்கிறது. சிற்சில சினிமா இயக்கங்கள் இருப்பதனால், கமர்சியலாக வியாபரம் தருகிற சினிமாவை உருவாக்கிப் பார்ப்பதென்பதே குறைவாக இருக்கிறது. அப்படி உருவாக்குகிறவர்களுமே, இந்த வியாபாரத்தை நோக்கி தங்களை நகர்த்திக்கொள்வதற்கான முதல் படியாகத்தான் இதை யோசிக்கிறார்கள். எல்லோருக்குமே இந்த வியாபாரம் சார்ந்த சினிமாவினை நோக்கி நகர்ந்துசென்றுவிட வேண்டும். அதற்குள், அந்த பிசினஸ்க்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்குள் சென்றுவிட்டாலே, அந்த வியாபாரத்திற்குப் பழக்கப்பட்ட ஒரு ஆளாக மாறிவிடுகிறார்கள். ஆனால், அதை மீறி, ஒரு புத்தகம் எப்படி தனிப்பட்ட முறையில் எவரையும் சாராது வெளியிடப்பட முடிகிறதோ., அவரது தனித்துவத்தை அந்தப் புத்தகம் கூற முற்படுதோ, அதுபோல, திரைப்படம் உருவாகிற சூழல் இங்கு இல்லை. அது நடக்க வேண்டும். 

ஏனெனில், திரைப்படம் என்பது இன்றைக்கிருக்கிற நடப்பு சம்பவங்கள் சார்ந்த தகவல்களையும், அதனது புறச்சூழல்களையும் அனுசரித்து உருவாகிறது. மேலும், அதற்கான வியாபாரம் என்பது வேறு ஒன்றாக இருக்கிறபொழுது, அந்த வியாபாரச் சூழலும் யாரை இலக்காகக் கொண்டு முன்னிறுத்தப்படுகிறதோ, இவையெல்லாவற்றையும் கணக்கில்கொண்டுதான் சினிமா உருவாகிறது. ஆனால், இதையெல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு ஒரு ப்யூர் சினிமாவை நோக்கி நகரவேண்டும். காட்சி ஊடகத்திற்கான தேவை என்னவாகயிருக்கிறது? என்பதுதான், நான் ஒரு திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக இணைவதில் முதல்படியாக இருக்கும். எனில், அங்கு உங்கள் விஷுவலானது ரூபமாகவும் இருக்கலாம், அரூபமாகவும் இருக்கலாம். இவையிரண்டில் நீங்கள் எப்படி ஒரு விவரணையை முன்னெடுக்கிறீர்கள்? என்பது உருவாகும். அப்பொழுது, நீங்கள் காட்சி ஊடகத்தின் கூறுகளை மிகக் கூர்மையாகப் பிரயோகிக்கக்கூடிய ஆட்களாக மாறுவீர்கள். 

அதைத்தவிர்த்து, திரையில் கதையை மட்டும் சொல்வதென்றால், நமக்கு நன்கு பழக்கப்பட்ட திரைப்பட முறையைப் பயன்படுத்துவோம். அதாவது அதிகமான வசனங்களைப் பயன்படுத்திக் கதையை நகர்த்துவோம். வார்த்தைகளின் வாயிலாகவே, கதையின் உணர்ச்சியை, காட்சியில் சொல்ல வேண்டிய தகவலைச் சொல்வதாக மாறுகிறது. காட்சி ஊடகமான சினிமாவிற்கு வார்த்தைகள் என்பது இரண்டாம் பட்சமான வடிவம். ஆனால், இங்கு இந்த இரண்டாம்பட்சமான வடிவத்தைத்தான் முதன்மையானதாக நினைத்து, நம் சினிமாக்களில் பயன்படுத்தி வருகிறோம். ஒரு காலத்தில் வானொலிகளில் ஒளிபரப்பாகிற கதை வசனத்தைக் கேட்டே முழுப் படத்தையும் பார்த்துவிட்ட அனுபவமடைந்த ஆட்களாக நாம் இருந்திருக்கிறோம். ஒரு படத்தைக் காட்சியாகப் பார்த்துப் புரிந்துகொள்வதைக் காட்டிலும், நிறைய பேர் கதை வசனத்தை, காதிலேயே கேட்டுவிட்டு, முழுப்படத்தையும் பார்த்துவிட்டதுபோன்ற திருப்தியில் உழன்றுகொண்டிருப்போம். அதுவும் திரைப்படத்தினை அணுகுவதில் ஒரு வடிவம்தான். அதனை முற்றிலுமாகத் தவறு என்று குற்றம்சாட்டுவது என் நோக்கமல்ல. இதில், கதை வசனத்தின் மூலமாக, உங்களது கற்பனைத்திறனிலிருந்து ஒரு காட்சி உருவாகும். அப்படியில்லாமல் ஒரு காட்சி ஊடகம் என்பது, காட்சிகளை உருவாக்குவதும், காட்சிகளை உங்களின் உணர்வுத்தளங்களோடு உங்களைப் பிணைக்க வைப்பதும் என்பதுதான், இந்த ஊடகத்தின் சவால். ஆனால், அந்தச் சவாலுக்கு உட்பட்டு உருவாக்கக்கூடிய படங்களை, எப்படி உருவாக்க வேண்டும் என்பதுதான், நான் படங்களைத் தேர்ந்தெடுக்கும் விதமாக இருக்கும். 

ஷ்யாம் ராட் ஷேகரில் அப்படியாக எனக்கு ஒரு ஐம்பது சதவீத வாய்ப்பும், அனுபவமும் கிடைத்தது. அதில் பெரும்பாலும் காட்சியை முன்னிறுத்தக்கூடியதும், பேச்சைக் குறைத்துக்கொண்டும், காட்சித்தகவல்கள் மூலமாகவே, ஒரு தகவலைப் பரிமாறி, ஒரு உணர்சியைக் கடத்தக்கூடிய தன்மையை அப்படம் செய்திருக்கிறது. 

ஆனால், அதுவே, நாம் கமர்சியல் சூழலில் ஒளிப்பதிவு செய்கிறபொழுது, கதை சார்ந்து இயங்கவேண்டியிருக்கிறது. அங்கு கதை சொல்வதற்குக் கொடுக்கப்படுகிற இரண்டரை மணி நேரத்தில், கதையின் உணர்வுகளைக் கடத்தவேண்டும், பார்வையாளர்களைத் திரையரங்கில் உட்காரவைக்க வேண்டிய நிறைய விஷயங்களைச் செய்யவேண்டிய சூழ்நிலையில், அக்கதை சார்ந்தும், தொழில்நுட்பவியலாளராக நாம் எளிமையான வடிவங்களைக் கையாளவேண்டியிருக்கும். நமது பழக்கத்திலிருக்கக்கூடிய கதை சொல்லல் பாணி. ஒரு நீளமான காட்சியை இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம். அதுவே, ஒரு வரி வசனத்தைக் காட்சி மூலமாக விளக்குகிறபொழுது, மிக நீண்ட காட்சியாகக் கூட அது கட்டமைக்கப்படும். எனவே, அங்கு நாம் நிறைய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். நிறைய ஆக்‌ஷன்களைத் தவிர்த்து, வசனங்களைக் காட்சிகளுக்குள் கொண்டுவருகிறோம். நடிகர்களைப் பயன்படுத்துகிறோம்.

இவையெல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு ஒரு ப்யூர் சினிமாவை முயற்சித்துப் பார்ப்பதுதான், நம்முடைய முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆனால், அது நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள், இங்கு குறைவாகவே இருக்கிறது. என்னுடைய ஆசை அதை நோக்கி நகர்ந்துசெல்ல வேண்டும் என்பதுதான். 

என்னுடைய நோக்கம் இதுவாக இருக்கிற பட்சத்தில், எனக்குக் கொடுக்கப்படுகிற ஸ்கிரிப்டில் இதெல்லாம் இருக்கிறதா? என்று பார்ப்பேன். காட்சி ஊடகத்தினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்டினை நோக்கி நகர முயற்சிப்பேன். அப்படித்தான் என்னுடைய பயணம் இன்றுவரைக்குமே தொடர்கிறது. அப்படித்தான் நான் பா.ரஞ்சித்தின் படங்களில் தொடர்ந்து பயணிக்கிறேன். 


ரஞ்சித்தின் நோக்கமும் என் சிந்தனைத் தளத்தோடு ஒத்துப்போகிறது. அவர், இந்தச் சினிமாவிற்குள் புதியவொன்றைக் கட்டமைக்க முயற்சிக்கிறார். ஃப்லிம் என்பதை நடைமுறைப்படுத்துவதில் வேண்டுமானால், வணிகம் சார்ந்த விஷயங்கள் இருக்கலாம். அவர் படங்களில் நடிக்கிற நடிகர்களுக்கு வேறு சில தேவைகள் இருக்கலாம். இந்தப் படம் எதை நோக்கிச் செய்யவேண்டியிருக்கிறது? என்ன மாதிரியான உறவைப் பார்வையாளர்களிடம் உருவாக்கவேண்டும்? நான் அந்த மக்களுக்கு எந்த அரசியல் கொள்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்? என்ற நோக்கம் ரஞ்ஜித்திடம், மிகவும் தூய்மையாக இருக்கிறது. எனவே, நான் அவருடன் தொடர்ந்து பயணிக்கிறேன். அவருடன் இணைந்து மூன்று படங்களில் வேலை செய்திருக்கிறேன். 

 ஒரு படத்தில் ஒளிப்பதிவாளராக இணைய வேண்டுமென்றால், முதலில் ஸ்கிரிப்ட் மற்றும் அந்த ஸ்கிரிப்டின் நோக்கம் என்ன? என்பதைக் கவனிக்க வேண்டும். அதை மீறி, அந்த ஸ்கிரிப்டை காட்சி ஊடகமாக, காட்சிவெளியாகச் சொல்வதற்கு வேண்டிய எத்தனிப்பு செய்கிறபொழுது அது உண்மையான ப்யூர் சினிமா என்ற ஊடகத்தை நோக்கி நகரும். அதற்குள் இருக்கிற கமர்ஷியல் வடிவத்தை பிரதானப்படுத்துகையில், அது அங்கும் இங்குமாக ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது. நாம் அதில் ஊசலாடிக்கொண்டுதான் பயணிக்கவேண்டியிருக்கிறது. இல்லையேல், சினிமா, அந்தப் பந்தயத்தில் நாம் இருக்கமாட்டோம். 

தொடரும்…