சரிந்துபோன கோட்டைகள்

அன்புடையீர், தங்களுடைய அன்பான கடிதம் வந்து சேர்ந்தது. மிக்க நன்றி. தங்களுடைய ஆர்வம் எங்கள் மனதை நெகிழவைக்கிறது. ஆனால், இங்கு நிகழ்த்தப்படும் பணியின் தன்மையால் தங்கள் கடிதத்தில் கண்டிருப்பது போன்ற கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களுக்கு மீண்டும் நன்றி. இப்படிக்கு…. “இம்மாதிரியான கடிதங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூற்றுக்கணக்கில் எழுதியிருக்கிறேன். கோரிக்கை மிகவும் சாதாரணமானது. “ஸ்டுடியோவைப் பார்க்க விரும்புகிறேன்”, அதற்கு இப்படியொரு பதில்! கடிதம் எழுதியவர் ஏதோ கொலை செய்துவிட்டது போலக் குற்ற உணர்வில் சென்னை வருவதையே தவிர்த்துவிடுவார்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு ஜெமினி ஸ்டுடியோ தென்னிந்தியாவின் முதல் வரிசைத் திரைப்படத் தயாரிப்பு மையமாக இருந்தது. இந்தியாவின் மூலை முடுக்களிலிருந்து கடிதங்கள் வந்து குவியும். இன்று நட்சத்திர நடிக, நடிகையருக்கு எழுதுவதுபோல அன்று ஸ்டுடியோவுக்கு எழுதுவார்கள். ஜெமினி தவிர ஏ.வி.எம். பிரசாத் போன்ற பெயர்களும் வட இந்தியாவில் பிரபலம். வேறு ஸ்டுடியோ அல்லது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கடிதம் எழுதுவார்களோ, இல்லையோ, ஜெமினிக்கு எழுதுவார்கள். அநேகமாக ஒவ்வொரு கடிதத்திற்கும் பதில் தரப்படும்.

ஜெமினி ஸ்டுடியோ சென்னை நகரத்தின் மத்தியில் அமையப்பெற்றிருந்தது., அன்று ஜெமினி ஸ்டுடியோ வாசலிலேயே பஸ் நிறுத்தம். சாலையிலேயே ஒரு வாசல் வளையம். ஜெமினி இரட்டையர்கள் குழலூதும் முத்திரைப் பொம்மைச் சின்னம் பளிச்சென்று தெரியும். வளையம் வழியாகப் பார்த்தால் ஒரு சோலையாகத் தெரியும்.

ஒரு காலத்தில் சென்னை நகரமே சிறுசிறு சோலைகளால் ஆன ஊராகத்தான் இருந்தது. பிரபலமாக இருந்த ஸ்டுடியோக்களான ஜெமினி, ஏ.வி.எம், விஜயா – வாஹினி, அருணாசலம், பரணி, வீனஸ் ஆகிய ஸ்டுடியோக்களில் நிறைய மரங்களும் செடி-கொடிகளும் இருக்கும். ஜெமினி ஸ்டுடியோவில் ஒரு பகுதி சிறு குட்டையுடைய காடு போல அமைக்கப்பட்டிருந்தது. குழந்தை ஒளைவையார் இந்தக் காட்டில்தான் பிறந்தார்.

Image result for Gemini studio"

இந்த ஸ்டுடியோ காட்டில் மான்களும், மயில்களும் வளர்க்கப்பட்டன. நகர எல்லைகளுக்குள் மிருகங்களை வளர்க்க சென்னை மாநகராட்சியிலிருந்து அனுமதி பெறவேண்டும். அந்த அனுமதிப் படிவத்தில் ஏராளமான மிருகங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். ஒட்டகம் கூட உண்டு. ஜெமினி ஸ்டுடியோவில் ஒருமுறை முதலை ஒன்று வந்துவிட்டது. ஒன்றிரண்டு மான்களைக் கொன்றுவிட்டது.

சென்னை ஸ்டுடியோக்களில் நடிப்புக்காக வந்த பாம்புகளைத் தவிர, நிஜப்பாம்புகளே இருந்தன. மக்கள் சந்தடியில்லாத காரணம்தான். அன்று பல சென்னை ஸ்டுடியோக்கள் வடபழனியையொட்டி அமைந்தன. சென்னையிலேயே நிறைய குட்டைகள் ஏரிகள் இருந்தன. அதனால் தவளைகள், தவளைகளுக்காகப் பாம்புகள், போதாதற்கு ஊரில் நிறைய எலிகள், பெருச்சாளிகள்.

அன்று சென்னை ஆற்காடு சாலையில் மேம்பாலம் கிடையாது. ரயில் கேட் மூடிவிட்டால் எப்படியும் பத்து, பதினைந்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். ஆற்காடு சாலை ரயில் கேட்டைத் தவிர்ப்பதற்காக ரங்கராஜபுரம் என்ற இடத்திலிருந்து ரயில் கேட்டுக்குப் போவார்கள். அங்கும் பல தருணங்களில் ரயிலுக்காக கேட்டை மூடிவிடுவார்கள். கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களின் திரைப்பட வேலை இந்த இரு கேட்களையும் மிகவும் சார்ந்திருந்தது. ஜெமினிக்கு இந்த தொல்லை கிடையாது. ஆனால், ஜெமினி ஸ்டுடியோவே திரைபடங்களைத் தயாரித்தால் அதிகம் வெளியார்களுக்கு இடம் கொடுக்கவில்லை.

கோடம்பாக்கம் ஸ்டுடியோக்கள் ஊருக்கு வெளியே இருந்தாலும் ஜெமினி ஸ்டுடியோ ஒரு மத்தியகாலக் கோட்டை போலப் பாதுகாக்கப்பட்டதாலும் எங்கே, என்ன நடக்கிறதென்றே வெளியுலகத்திற்கு தெரியாது.

விபத்துகள் நடந்தாலும் அவை வெளியே தெரிய வாய்ப்பில்லை. அந்த நாளில் படச்சுருள்கள் பத்துப்பதினைந்து ஆண்டுகளில் அவற்றின் வேதியல் தன்மை மாறித் தீப்பற்றிக்கொண்டுவிடும். இந்த மாதிரிப் பல படங்கள் அழிந்துபோய்விட்டன. ஒருமுறை ஒரு புதிய படத்தின் துவக்க விழாவன்று ஒரு லைட்பாய் மேல் சாரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். தொழிற்சாலைகள் சட்டம் அப்போது அமலுக்கு வந்துவிட்டது. விழுந்தவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லும்போது இறந்துவிட்டார். முதலாளி அந்தநாள் சட்டப்படி இருந்த ஈட்டுத்தொகைக்கு மேலேயே கொடுத்தார். இறந்தவரின் வீட்டிற்குப் போய்வந்தார்.

ஜெமினி ஸ்டுடியோவில் இன்னொரு பட தொடக்கத்தின்போது வேறுவிதமான விபத்து நடந்தது. படத்தை இரண்டே மாதத்தில் முடிக்கவேண்டும். ஆதலால் எந்த இடையூறும் இல்லாதிருக்க, வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது. ஆனால் வெளிகேட்டில் இருந்த கூர்க்கா கதாநாயகி வண்டியையே நிறுத்திவிட்டார். அவர் ராஜாஜியின் சீடராக இருந்திருக்க வேண்டும். அந்த நட்சத்திர நடிகை அழுது, அழுது முகம் வீங்கிவிட்டது. அன்று இரண்டு, மூன்று தலைகள் உருளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நல்ல வேளையாக, விஷயம் ஐந்தாறு பேரோடு நின்றுவிட்டது. பின்னர் அந்த நடிகை ஒரு உதவி இயக்குனரை மணந்துகொண்டு அவரைக் கொண்டு ஒரு படம் எடுத்தார். நன்றாகவே இருந்தது. படம் ஓடவில்லை.

ஜெமினி ஸ்டுடியோவின் புகழ் சீனா, திபெத் வரையில் எட்டியிருந்தது. அப்போது திபெத் அரசியல் மாற்றம் அடையவில்லை. தலாய்லாமாவுக்கு இருபது, இருபத்தியிரண்டு வயதுதான் இருக்கும். தலாய்லாமா சிரித்த முகத்துடன் சிறு விஷயங்களையும் கேட்டு, உடனே நகைச்சுவையோடு ஒரு பதில் தருவார். அவர் விஜயத்தின்போது உத்தமபுத்திரன் படத்திற்காக பத்மினி, ராகினி நடனம் படமாக்கப்படவிருந்தது. “இவ்வளவு கடுமையான உடையணிந்துகொண்டு எப்படி நடனமாடுவீர்கள்?” என்று கேட்டார்.

தலாய்லாமா வந்து சிறிது நாட்களுக்கெல்லாம் சீனப் பிரதமர் சூ – என் – லாய் வந்தார். அன்றும் அதே பத்மினி, ராகினி நடனம்! தலாய்லாமா, சீனப் பிரதமர் இருவரும் ஜெமினி ஸ்டுடியோவைத்தான் பார்க்கவேண்டும் என்று இந்திய அதிகாரிகளிடம் கூறியிருந்தார்கள். சூ-என் –லாய் அவர்களுக்கு ராஜா-ராணி கதை பிடிக்கவில்லை. ஆனால், அவர் விஜயத்திற்குப் பிறகு ஜெமினி எடுத்ததும் ஒரு ராஜா – ராணி கதைதான். வஞ்சிக்கோட்டை வாலிபன்..

ஸ்டுடியோக்கள் முக்கியமாகக் கருதப்பட்டதன் முக்கியக்காரணங்கள் இரண்டு. வெளியார் அல்லது பொதுமக்களின் தொந்தரவு இல்லாமல் படப்பிடிப்பு நிகழ்த்தலாம். இரண்டாவது காரணம், ஒலி. அன்று நடிக, நடிகையர் வசனங்களைப் பேசியேயாக வேண்டும். வசனத்தை ஒலிப்பதிவு செய்ய நீண்ட தூண்டில் போன்ற ஒன்றின் நுனியில் மைக்ரோபோனை இணைத்து, நடிகரோடு அந்த மைக்ரோபோனும் அங்குமிங்கும் நகரும். இப்படி நகர்த்துபவருக்கு 60 வயதானாலும் பெயர் பூம் பாய். பூம் பையன். லைட் பையன்கள் போல. பூம் நகர்த்துபவரின் பணி நடிகர்கள் பேசுவதை மைக் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதுவோ, அதன் நிழலோ படத்தில் தெரியக்கூடாது. அதற்குத் தகுந்தபடி விளக்குகளை அமைப்பார்கள். ஸ்டுடியோவில் வேலைபார்ப்பவர்கள் வேறு அரங்குகளில் சினிமா பார்க்கச் சென்றால் ஒழுங்காக சினிமா பார்க்க மாட்டார்கள்.

இந்த பூம் நிழல் விழுகிறதா என்று பார்த்தபடி இருப்பார்கள். ஒரு வினாடி அப்படி நிழல் வந்தால் அவர்கள் பரவசம் அடைவார்கள். என்னதான் ஸ்டுடியோக்கள் இருந்தாலும் எல்லா தயாரிப்பாளர்களும் ஒரு மனிதரின் தயவை எதிர்பார்த்து இருப்பார்கள். ‘ஸ்டாக் ஷாட் சப்ளையர்’ என்று அன்று சென்னையில் ராயப்பேட்டையில் இருந்தார். அவர் பேசுவது, பார்ப்பது எல்லாமே மர்மமாக இருக்கும். மரப்பொந்தில் ஆந்தை முழித்துப் பார்ப்பது, சிறுத்தை மான் மீது பாய்வது, கொக்குகள் கூட்டமாகப் பறப்பது, யானைகள் வரிசை வரிசையாகப் போவது எல்லாம் அவர் கொணர்ந்துவிடுவார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தேவாசுரப் போர் நிகழ்ந்த கறுப்பு - வெளுப்பு புராணப் படங்கள் அநேகமாக எல்லாமே 1935ல் சிசில் பி டிமில் என்ற ஹாலிவுட்காரர் எடுத்த குருஸேட்ஸ் படத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

சென்னை ஸ்டுடியோக்களில் பல இலக்கியவாதிகள் பணிபுரிந்திருக்கிறார்கள். மிகவும் வெற்றிகரமாக சினிமாவுக்கு உதவியவர் இளங்கோவன் அவர்கள். இளங்கோவன் அளவுக்குப் புகழ் பெறாவிட்டாலும் கொத்தமங்கலம் சுப்பு தமிழ் சினிமாவின் பல துறைகளில் சுவடு பதிப்பித்தவர். புதுமைப்பித்தன் மிகவும் மதிக்கப்பட்டார். அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கப்பட்டது. ராஜமுக்தி என்ற படத்தின் திரைக்கதை – வசனம் எழுதும் பொறுப்பு அவரிடம் விடப்பட்டிருந்தது. பெரிய நட்சத்திரங்கள். ஆனால் இசை தவிர வேறு எந்த அம்சத்திற்காகவும் அந்தப் படம் கவனம் பெறவில்லை. மணிக்கொடி எழுத்தாளர்கள் அனைவருமே ஏதாவது ஒரு விதத்தில் அன்றைய தமிழ்த்திரைப்படத்தோடு உறவு வைத்திருந்தார்கள்.

தொழில்முறைத் தேர்ச்சியுடன் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணப்படம் செம்மீன். இதன் படப்பிடிப்புத்தவிர, இதர பணிகள் சென்னை ஸ்டுடியோவில்தான் முடிக்கப்பட்டன. தமிழிலும் ஒவ்வொன்றாக வண்ணப்படங்கள் வரத்துவங்கின. ஆரம்பத்தில் கறுப்பு – வெளுப்பு படங்களின் மனோபாவத்தில்தான் வண்ணப்படங்களும் தயாரிக்கப்பட்டன. இயற்கை, வண்ணப்படத்திற்குச் சாதகமாக இருப்பது சிறிது சிறிதாகத்தான் உணரப்பட்டது. டப்பிங் துறையின் முன்னேற்றம் எந்த நடிகரையும் எந்த மொழிப்படத்திலும் பயன்படுத்தலாம் என்பதை உறுதிப்படுத்தியது. நல்ல படங்கள் தயாரிக்க நல்ல ஒலிப்பதிவு, கம்ப்யூட்டர், எடிட்டிங் கூடங்கள் இருந்தால் போதும் என்றான பிறகு ஸ்டுடியோக்களின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது.

ஜெமினி ஸ்டுடியோ இருந்த பதிமூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இன்று நிறைய அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுந்துவிட்டன. அண்ணா சாலையின் வணிகப்பகுதி, அக்கட்டிடங்களுடன் ஆரம்பித்து, கூவம் ஆறு சாலையைக் கடக்கும்வரை உள்ளது. கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களின் நிலைமையும் மாறிவிட்டது. அப்பகுதியில் மிக முக்கியமாக இருந்த விஜயா- வாஹினி ஸ்டுடியோ வணிகப்பகுதியாகிவிட்டது. ஏ.வி.எம் ஸ்டுடியோ பெரும்பாலும் தொலைக்காட்சிப் படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இன்று உள்ள ஸ்டுடியோக்களுக்கு ரசிகர்கள் கடிதம் எழுதுவார்களா? கடிதம் எழுதினால் பதில் வருமா?

ஏ.வி.எம் ஸ்டுடியோ

அந்தக் கால ஸ்டுடியோக்களில் இன்றும் தீவிரமாக இயங்கிவரும் ஒரே ஸ்டுடியோ இதுதான்.

பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்கள்தான் ஸ்டுடியோ வளாகத்திற்குள் படமாக்கப்பட்டு வருகின்றன என்றாலும் தொடர்ந்து சொந்தமாகவும் படங்களைத் தயாரித்து வருகிறது ஏ.வி.எம்.

காலத்திற்கு ஏற்ப ஏ.வி.எம் மாறி வருகிறது என்பதற்கு சான்று, ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்தை வைத்து ஏ.வி.எம் தயாரிக்கும் சிவாஜி.

ஜெமினி ஸ்டுடியோ

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு ஜெமினி ஸ்டுடியோ முதல் வரிசைத் திரைப்படத் தயாரிப்பு மையமாக இருந்தது.

ஜெமினியின் சந்திரலேகா படம் அதற்கு இறவாப் புகழை வாங்கிக்கொடுத்தது. அந்தப் படத்தில் 5 நிமிடம் இடம்பெறும் முரசு நடனம் 2 மாதங்களுக்கு படமாக்கப்பட்டது. அந்தப் பாடலுக்கு மட்டும் செலவு ரூ. 2 லட்சம்.

(சினிமா ஸ்டூடியோக்கள் தற்போது தங்கள் செல்வாக்கை இழந்துவிட்டாலும், ஒரு காலத்தில் அவை யாரும் நுழைய முடியாத கோட்டைகளாக விளங்கின. ஒரு ஃப்ளாஷ் பேக்.)
-அசோகமித்திரன்


நன்றி: இந்தியா டுடே
டிசம்பர் 28, 2005