தற்காலத் தமிழ்ப் படங்களில் வண்ணக் குறியீடுகள்

நிகழ்வுகளின் தொடர் தொகுப்பும், அத்தொகுப்பில் அர்த்தமாகக் கூடிய ஒரு கதையும், அக்கதையை நிகழ்த்திக் காட்டும் கதாபாத்திரங்களும், அக்கதாபாத்திரங்களாக வாழ்ந்து காட்டும் நடிகர்களும், அந்நடிகர்களை இயக்கத் தெரிந்த இயக்குனரும், இவற்றைச் சாத்தியப்படுத்துவதற்கு இணைப்புள்ளியாக சேர்ந்துகொள்ளும் எண்ணற்ற தொழில் நுணுக்கங்களும் ஒரு திரைப்படத்திற்கான வடிவமாகக் கட்டமைகின்றன. 

கடைசியாகப் பார்வையாளனை வந்தடையும் ஒரு திரைப்படம், அவனுடைய ரசனைத் தேர்வுக்கான சாத்தியங்களைத் தம்முள் உள்ளடக்கிக் கொண்டிருப்பதில் தொடங்குகிறது ரசனைக்கேற வெவ்வேறு தரப்பிரிவு. அது இருமுனை கெட்டிக்காரத் தனத்தின் இடைப்பட்ட தொலைவை அளந்து பார்ப்பதற்கான சந்தர்ப்பமாக அமையும்பொருட்டு, ஒரு முனையில் நிற்கும் படைப்பாளியின் எண்ணவோட்டத்தை பிரதிபலிக்கக்கூடிய அப்படைப்பின் அவசியத்தை, புரிதலின் எந்தத் தளத்திலிருந்து அறைகூவல் விட்டு மறுமுனையில் நிற்கும் ரசிகனை அழைப்பது என்பதாக உருமாறும் வாய்ப்பை அளிக்கிறது.

அந்த வகையில், திரைப்படங்களின் அசையும் பிம்பங்கள் வண்ணங்களில் தோய்ந்து நம் கண்களை வந்தடையும்போது, அதற்குரிய பிரத்யேக அர்த்தத்தையோ, அதில் இயங்கியிருக்கக் கூடிய உளவியலையோ எப்படி நாம் உள்வாங்கிக்கொள்கிறோம் அல்லது அதன் அவசியத்தை அத்திரைப்படம் நம்மிடம் வலியுறுத்துகிறதா என்கிற சந்தேகக் கேள்விக்கு, நம்மால் ஒரு பதிலை நம்மளவில் கண்டடைய முடியுமென்றால், அப்படைப்பின் இன்னுமொரு கோணம் நம்முடைய ரசனையுணர்வை அல்லது புரிதல் அறிவை மேலும் கொஞ்சம் முன் நகர்த்த உதவுகிறது என்று திருப்திபட்டுக் கொள்ளலாம். 

வண்ணங்களுக்கு என்று தனித்த குணம் இருக்கிறது. அது மனித மனத்தை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அடர்த்தியான வண்ணங்கள் தனி மனிதனின் தனிமையையோ, இறுக்கத்தையோ தூண்டுவதாக அமையலாம். அதே மாதிரி லகுவான, பிரகாசமான வண்ணங்கள் சந்தோஷக் கணங்களை, சிலிர்ப்பை, மகிழ்ச்சியைத் தூண்டுவதாக அமையலாம். இப்படி வகைமை குணம் கொண்ட வண்ணங்களை என்ன மாதிரியான அளவுகோலோடு ஓர் இயக்குனர் தாம் இயக்கும் திரைப்பட த்துக்குள் கையாள முடியும் என்கிற சவாலின் சுவாரசியம் எல்லா படைப்பாளியாலும் எதிர்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. 

தமிழ்த் திரைப்படங்களில் சிலவற்றில் அதற்கான மெனக்கெடலை நாம் கண்டடைய முடியும்.

2004ல் வெளியான ஆயுத எழுத்து திரைப்பட த்தில், மூன்று கதாபாத்திரங்கள். மூன்று வாழ்க்கை. மூவருமே வெவ்வேறு குணப் பண்புகள், வாழ்வியல் பின்னணிகளைக் கொண்டவர்கள். படம் முழுவதும் அதனைப் பிரதிபலிக்கும் விதத்தில், சிவப்பு, பச்சை, நீலம் என்று மூன்று நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிவப்பு நிறம் முரட்டுக்குணம் படைத்த கதாபாத்திரத்தின் வன்முறை செயல்பாடுகளைச் சித்தரிக்கும் குறியீடாகவும், பச்சை நிறம் லட்சியத்தோடு கூடிய மறுமலர்ச்சிச் சிந்தனை உள்ளவனின் மன வெளிப்பாட்டை அடையாளப்படுத்தும் வண்ணக் குறியீடாகவும், நீல நிறம் தான் வாழும் வாழ்க்கையின் சகலத்தையும் தன்னுடைய மகிழ்ச்சிக்கான விஷயமாக மட்டுமே பார்க்கத் தெரிந்த ஓர் இளைஞனின் மனநிலையை அடையாளப்படுத்தும் விதமாகவும் கையாளப்பட்டிருக்கின்றன. அம்மூன்று கதாபாத்திரங்களையும் மையப்புள்ளியாக இணைக்கும் சமூக, அரசியல் தோற்றங்களைக் காட்சிகளாகத் தொகுத்திருக்கிறார் இயக்குனர். 

Image result for ayutha eluthu color tone

2006-ல் வெளியான திரைப்படம், புதுப்பேட்டை. ஒரு சாமானிய மனிதன், விளிம்புநிலை வாழ்வில் இருந்து வெவ்வேறு துரோகங்களுக்கு ஆளாகி, நிழல் உலக வாழ்க்கை முறைக்குள் சிக்கி, அதில் உழன்று உயிர்பிழைக்கத் தப்பி, தன்னைக் காத்துக்கொள்ள அதிலிருக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் ஆளாகி, தன்னுடைய இருப்பை அந்நிழல் உலகில் ஸ்திரப்படுத்திக்கொள்ள எதையும் செய்யத் துணியும் ஒருவனின் கதை. கதைத் தொடங்கும் இடமே, தனி சிறைக்குள், சக கைதியின் ஒற்றைக் குரல் கூட துணியில்லாத மன அழுத்தத்தில் தனிமையில் கத்திக்கொண்டிருக்கும் அவனிலிருந்து காட்சியாகிறது. அச்சிறை சுவர்கள் மீது பூசப்பட்டிருக்கும் அடர்ந்த வண்ணங்களும், அவன் மீது வழிந்து கிடக்கும் சொற்ப வெளிச்சத்தின் அபத்த நிறங்களும், ஒரே ஷாட்டில் பார்வையாளனின் மனநிலையை தயார்படுத்திவிடுகின்றன. அந்த அடர்ந்த வண்ணக் குறியீடு, அடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் மிச்சக் கதை முழுவதும் தொடர்கிறது. ஆனால், அவனுடைய படிநிலை மாற்றங்கள் குறியீடாக அந்த அடர் வண்ணங்கள் கொஞ்சங்கொஞ்சமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. அது பார்வையாளனின் மனத்தில் அழுத்தமாய் ஒரு தழும்பைப் போல பதிகிறது. 

Image result for pudhupettai

2010-ல் பல தடைகளுக்குப் பிறகு திரையரங்குகளைத் தொட்ட படம், ஆரண்ய காண்டம். இதுவும் நிழல் உலகில் நடைபெறும் கதையைப் பின்னணியாகக் கொண்ட படம்தான்.

வயதாகிவிட்ட கேங்க்ஸ்டர் தலைவன் ஒருவனின் தனிமை வாழ்க்கையும், அவனைச் சுற்றி நிகழும் சின்னச் சின்ன துரோகங்களும், எதிரிகளின் சதித் திட்டங்களும் அவற்றுள் வாழ நேர்ந்த மனிதர்களின் உளவியலையும் பேசுகிற படம். மஞ்சள் நிறம் தூக்கலாக பயன்படுத்தப்பட்டிருக்கும் அத்திரைப்படம், வயதாகிவிட்ட கேங்ஸ்டர் தலைவனின் பாலியல் சார்ந்த மனோபாவத்தையும் , அவனுக்கு நேரெதிர் வயதை உடைய இளவயது எடுபிடி உதவியாளனின் பாலியல் மனோபாவத்தையும், அவ்விருவருக்குள்ளும் இயங்கும் தனித்தனி உளவியல் பின்னணியால் நிகழும் சம்பவக் காரணங்களையும் குறியீடாய் அடையாளப்படுத்த இயக்குனரை அடந்த மஞ்சள் நிறம் தூண்டியிருக்கலாம். அது பார்வையாளனை இம்மி பிசகாமல், அக்கதைச் சூழலுக்குள் இறுக்கிப் பிடித்து வைக்கிறது. படம் முழுவதும் அடர் மஞ்சள் நிறத்தின் டோன் பரவியிருப்பதின் அழகியலை குற்ற மனப்பான்மையின் குரூர வெளிப்பாட்டுக்குள் நிழல்களோடு கலந்து அழுத்தி வைக்கிற, பார்வையாளனின் மெளனத்தை இழுத்துப்பிடிக்கிற தோற்ற மயக்கத்தை உண்டு பண்ணிவிடுகிறது. சீனாவில் மஞ்சள் நிறம் பாலியல் குறியீடுக்கானதாக பயன்படுத்தப்படுகிறது. ஒன்றின் ரெஃபரன்ஸ் இன்னொன்றின் ட்ரான்ஸிட் ஆக மாறமுடியும் என்பதை இயக்குனர் தன்னுடைய படமாக்களுக்கான தீர்மானமாக யோசித்திருக்கலாம். 

Image result for aranya kandam color

2013-ல் வெளியான படம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும். நகரத்தின் பின்னரவில் குற்றத்தின் வாசம் எதையெல்லாம் புதிர்போல தத்தம் ரகசியத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது என்பதைக் குறைவான வசனங்களில் இசையின் துணை கொண்டு, கதையொன்றின் வழியாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. இரவு வீதியையும் அதில் தட்டுப்படும் பொருட்களையும் அடையாளங் கண்டுகொள்ள பயன்படும் மாநகராட்சியின் சோடியம் வேப்பர் விளக்குகளின் மஞ்சள் கலந்த மங்கிய ஆரஞ்சு நிறத்தை அப்படியே படம் முழுக்க பயன்படுத்தி, அதுவே குற்றச் செயல்களுக்கான, குற்ற மனோபாவங்களுக்கான குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இருண்ட வானின் கருமையும், அதன் கீழே புலனாகக் கூடிய சொற்ப வெளிச்சத்தில் நகரும் வாழ்வின் அவலமும், அதில் ஒளிர வாய்ப்புள்ள சிறு கருணையும் அடையாளங்காணப்பட இப்பெருநகரின் இரக்கமுள்ள சொற்ப மனசாட்சிக்கு சொற்ப வெளிச்சம் மட்டுமே குறியீடு என்பதாக அதன் வண்ணம் அர்த்தமாகிறது. 

Image result for onayum aatukuttiyum color

பொத்தாம் பொதுவாக இருட்டிலேயே எடுத்த படம் என்ற பொருளை அது கொண்டிருக்கவில்லை. தனிமனித உளவியலையும் சமூக உளவியலையும் குறுக்குவெட்டில் அறுத்துப் பார்க்கும் ஒரு கூர்மையான முயற்சி இப்படத்தின் வண்ணமும் அதன் குறியீடும். 

இப்படி நிழல் உலகங்களை, அவற்றை ஒரு கதையின் வழியாகப் பார்வையாளனுக்கு உணர்த்துவதற்கு வெவ்வேறு நிற உத்திகள் கொண்டு அவற்றையே குறியீடாக மாற்ற முடிகிற மனம் வாய்த்த சொற்ப இயக்குனர்கள் தற்காலத் தமிழ்த் திரைப்படத் துறையில் இருக்கவே செய்கிறார்கள். 

மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்துத் திரைப்படங்களும், ஒன்றின் வெவ்வேறு மனசாட்சி தான். படைப்பாளிக்குப் அடைப்பாளி மாற்றம் கொள்கிற இந்த பெர்ஸ்பெக்டிவ் பார்வையாளனின் ரசனையுணர்வுக்கும் இருக்கிறது.

அதன் இருமுனை வித்தியாசங்களையும் இழுத்துப் பிடித்து மாற்றுப் பார்வையைக் கோருகிற தற்காலத் தமிழ்த்திரைப்படங்களின் தத்தளிப்பை இனங்கண்டுகொள்வது கடினமல்ல. 

வண்ணங்கள் சமூகத்தில் அடையாளமாகவும் பயன்படுத்தப்படுவது, பெரும்பாலும் அரசியல் தேவைகளின் ஒன்றாக மாறியிருக்கிறது. அரசியலிலும் வெவ்வேறு அரசியல் இருக்கிறது. சாதி அரசியல், இன அரசியல், கொள்கை அரசியல், இவை யாவற்றிற்கும் நிறங்கள் அடையாளங்களாக அவசியமாகும்போது அவற்றின் தொடர்ந்த செயல்களால் அவை குறியீடாகவும் மாறிப்போகின்றன. 

அரசியல் பேச முற்படும் திரைப்படங்கள், வண்ணங்களைக் கையாள்வதில் ஒன்று திணறுகின்றன அல்லது நிராகரிக்கின்றன. 

ஜீவா என்ற பெயரைக் கொண்ட கதாபாத்திரத்துக்கு, சிவப்பு நிறத்தில் உடை அணிவித்தால் போதும், அது ஒரு குறியீடு. கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவனாக ஒரு கதாபாத்திரம் இருக்கும்பட்சத்தில் கருப்பு நிற உடை போதுமானது. 

ஹாலிவுட் படங்களில் இன வேற்றுமை, நிறத்தின் குறியீடாக மாறுகிறது. அங்கிருக்கும் கருப்பும் வெள்ளையும், பிரதிபலிக்க நேருகிற அனைத்து படைப்புகளும் (இலக்கியத்திலிருந்து சினிமா வரையில்), இருவேறு சமூக உளவியலின் ஊடாகப் பரவும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. 

இங்கே, அதே வெள்ளை நிறமும் கருப்பு நிறமும், இங்கிருக்கும் உயர்ந்த, தாழ்ந்த மனோபாவத்தின் பிரதிபலிப்பாகவும், அப்பிரதிபலிப்பை அடையாளப்படுத்துகிற அதிகாரக் கட்டமைப்பின் குறியீடாகவும், அக்குறியீட்டைச் சார்ந்து செயல்படுகிற அரசியல் மற்றும் நுண்ணரசியலின் அவசியத்தை என்ன மாதிரியாக வெளிப்படுத்துவது? அதன் உள்ளடக்க கருத்தை என்னவாக படைப்பது? என்கிற நுணுக்கமான சவாலை, அத்தனை எளிதில் இங்கே எதிர்கொள்ள முடிவதில்லை.

ஒரு திரைக்கதைக்குள் பங்கெடுக்கும் வெள்ளைத்தோல் மனிதர்களின் கதாபாத்திரங்களும், வெண்ணிறத் தோல் அல்லாத மனிதர்களுக்கான கதாபாத்திர பங்கெடுப்பும் கூட வண்ணக் குறியீடாக புலப்படுகிறது. கருப்பு நிறம் கொண்ட மனிதன் விளிம்புநிலை மனிதன் என்பதாக இப்போது அடையாளப்படுத்தப்படுகிறான். 
இது திணறலுக்கும் நிராகரிப்புக்கும் நடுவே ஊசலாடும் படைப்பாளி மனத்தின் குறைந்தபட்ச உத்தி. அவ்வளவே. 

ஆனால், ஒரு திரைப்படம் அதன் இயக்குனரின் கடும் உழைப்பைக் கோருவது என்பது முழுப்படைப்பின் மீது அவர் தனிப்பட்ட முறையில் கொண்டிருக்கும் கருத்தின், எண்ணத்தின், சிந்தனையின் வலிமையைப் பொறுத்தது. 

அதுவே கதாபாத்திரங்களின் உளவியலை அப்படியே பார்வையாளனின் உளவியலாக உருமாற்றம் செய்ய நினைக்கும் இயக்குனரின் நியாயமான மெனக்கெடலுக்கான தேவையாகவும் இருக்க முடியும் 

எல்லாத் திரைப்படங்களும் வண்ணங்களைக் குறியீடாகப் பயன்படுத்துவதில்லை. ஆனால் எல்லாப் படங்களும் வண்ணப் படங்கள் தான். 

பார்வையாளன், தானே ஓர் அர்த்தத்தை அவற்றின் மீது உண்டுபண்ணிக்கொள்ள வேண்டும் என்பதோ, ஒரு படத்தை இப்படித்தான் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதை ஒரு இயக்குனரோ பாடம் நடத்திக்கொண்டிருக்க முடியாது.

அது பார்வையாளனின் தனிப்பட்ட ரசனையுணர்வின் சுதந்திரமான சுயத் தேர்வு ஆகும். ஆனால் அதுவே ஒரு காலகட்டத்தைக் கடந்து நிற்பதற்குரிய வரையறையும் அல்ல. 

நன்றி: கணையாழி. டிசம்பர் 2014