இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை - தெய்வம் தந்த வீடு

- தம்பி ஐயா தேவதாஸ்

மலையகத்தில் ஹட்டன் நகரில் பிரபல வர்த்தகர் ஒருவர் இருந்தார். ஹட்டன் ‘லிபேர்டி’ தியேட்டரும் இவருக்குச் சொந்தமானதே. கலைகளில் பற்றுமிக்க இவர். தனது தியேட்டரிலேயே இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிட்டு அவற்றுக்கு ஆதரவு வழங்கி வந்தார். தானும் இலங்கையில் தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் ஆசை.

‘கடமையின் எல்லை’, ‘நிர்மலா’ படங்களுக்குப் பின், தானும் ஒரு படம் யாராவது உதவியுடன் தயாரிக்க வேண்டும் என்று கலைத்தாகத்துடன் நின்றார் ஏ. ரகுநாதன்.


அந்த வர்த்தகரும் இந்த ரகுநாதனும் சந்தித்துக் கொண்டார்கள். வழமையை விட வித்தியாசமான முறையில் பிரமாண்டமான அமைப்பில் தமிழ்த் திரைப்படம் தயாரிக்கலாம் என்று தீர்மானித்தார்கள். பட வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி ரகுநாதனுடன் சேர்ந்து திரைப்படம் தயாரிக்க முன் வந்த அந்த வர்த்தகரின் பெயர்தான் வீ.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை. அந்தப் படத்தின் பெயர்தான் ‘தெய்வம் தந்த வீடு.’

படத்தின் கதை தமிழர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். இலங்கையில் உள்ள பல கோயில்களில் படப்பிடிப்பு நடைபெறவேண்டும். இதுவரை வெளி வந்த மற்றப் படங்களைவிட வித்தியாசமான அமைப்பில் இருத்தல் வேண்டும். அதாவது அகலத்திரையில் (சினிமாஸ்கோப்) படம் அமைய வேண்டும் என்று பல திட்டங்களைப் போட்டார்கள்.

தில்லானா மோகனாம்பாளின் அருட்டுணர்வின் காரணமாகவோ என்னவோ, நாதஸ்வரக் கலைஞன் ஒருவனும், நாட்டியக்காரி ஒருத்தியும் காதல் கொள்ளும் கதையை ரகுநாதன் ஏற்கனவே எழுதி வைத்திருந்தார். இதற்கான திரைக்கதை வசனத்தை ஏ. ஜுனைதீன் எழுதினார்.


‘நீண்ட காலமாக எனக்கிருந்த படம் தயாரிக்கும் ஆசைக்கு ரகுநாதனின் நல்ல கதை உற்சாகத்தைத் தந்தது. உடனே படத்தைத் தொடங்கத் தீர்மானித்து விட்டேன்’ என்று ஆரம்பத்தில் பேட்டியளித்தார் பொன்னுசாமிப் பிள்ளை. இந்தியாவில் பிரபல திரைப்பட இயக்குநர்கள் பி. நீலகண்டன், பி.மாதவன் ஆகியோருடன் இணைந்து கடமையாற்றினார் ஓர் இலங்கையர். பல சிங்களப் படங்களையும் இயக்கியிருக்கும் இவர்தான் வில்பிரட் சில்வா. இவரை இப் படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.

பி.எஸ். நாகலிங்கம் என்ற கலைஞர் சினிமாத்துறையில் பல காலமாகவே ஈடுபட்டு வந்தார். பல படங்களுக்கு உதவி இயக்குநராகக் கடமையாற்றியிருக்கிறார். இவரை இப் படத்துக்கு இணை இயக்குநராக நியமித்தார்கள். எம்.ஏ. கபூரை ஒளிப்பதிவாளராகச் சேர்த்துக் கொண்டார்கள். இது இவருக்கு 6 ஆவது தமிழ்ப்படம்.

ஏ. ரகுநாதன் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குமுதினி (றேலங்கி செல்வராஜா) என்ற புதுமுகத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.

மற்றும் டீன்குமார், எஸ்.என். தனரெத்தினம், கே.ஏ. ஜவாஹர், விஸ்வநாதராஜா, சந்திரகலா, சுப்புலட்சுமி காசிநாதன், ஜெயதேவி, பிரான்ஸிஸ், முத்துசாமி, சிவபாலன், கண்ணன், ஏ.நெயினார், மனோகரி, தேவராஜ், ரெமீஜியஸ், சிவாஸ்கர், அரியதாஸ், சுதுமலை தம்பிராசா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.


இவர்களுடன் யாழ்ப்பாணத்தில் நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த கலையரசு சொர்ணலிங்கம், பூந்தான் ஜோசப், நடிகமணி வி.வி. வைரமுத்து ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் சேர்க்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இப்படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். எம்.கே. றொக்சாமி, கண்ணன், நேசம் தியாகராசா ஆகிய மூவருமே அவர்கள்.

வீரமணி ஐயர், அம்பி, சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி, அமுதன் அண்ணாமலை, கலாவதி, பார்வதி சிவபாதர் ஆகியோர் பாடினர். பிரபல நாதஸ்வர வித்வான் அளவெட்டி என்.கே. பத்மநாதனின் நாதஸ்வர இசை இப் படத்தில் சேர்க்கப்பட்டது. ஒலிப்பதிவு சென்ஜோன்ஸ், ஒப்பனை – சுப்பு, தொகுப்பு – அலிமான்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஓவிய ஆசிரியர் செ. சிவப்பிரகாசம். கலைநிர்மாணத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற படப்பிடிப்புகளுக்கு ஸ்டில் போட்டோக்களை யாழ் பிரபா போட்டோ உரிமையாளர் தியாகராஜா எடுத்தார்.


‘லிபேர்டி பிலிம்ஸ்’ வி.கே.டி. பொன்னுசாமிப் பிள்ளை தயாரிக்கும் ‘தெய்வம் தந்த வீடு’ (சினிமாஸ்கோப்) திரைப்படத்தின் தொடக்க விழா 16.09.1977 இல் பம்பலப்பிட்டி மாணிக்கவிநாயகர் ஆலயத்தில் ஆரம்பமாகியது.

அப்பொழுது மஸ்கேலியா – நுவரெலியா மூன்றாவது எம்.பியாக விளங்கிய எஸ். தொண்டமான் அவர்கள் கேமராவை முடுக்கி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார். நடிகர் எஸ்.என். தனரெத்தினம் கிளாப் அடிக்க, ஒளிப்பதிவாளர் கபூர் சில காட்சிகளை ஒளிப்பதிவு செய்தார்.

யாழ்ப்பாணத்தில் 28.10.77 முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகியது. படப்பிடிப்புகள் பல வீடுகளில் நடைபெற்றன. யாழ் 2ஆம் குறுக்குத் தெருவில் உள்ள ‘பொன்மீன்’ இல்லம், இணுவிலில் துரையின் இல்லம் இப்படிப் பல இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றன.

பல்வேறு சைவக் கோவில்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. நயினாதீவு நாகபூஷணி அம்மன், மாவிட்டபுரம் கந்தசாமி, செல்வச்சந்நிதி, மானிப்பாய் மருதடிவிநாயகர், ஆனைக்கோட்டை மூத்தநயினார். பறாளை முருகன், சண்டிலிப்பாய் இரட்டையபுலம் வைரவர், இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார், நல்லூர் கந்தசாமி, நகுலேஸ்வரம், கோணேஸ்வரம், மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார், கதிர்காமம், முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் மற்றும் கொழும்பு ஹட்டன் போன்ற இடங்களில் உள்ள கோயில்கள் போன்றவற்றில் ஒளிப்பதிவு நடைபெற்றது.


வீரமணி ஐயர் இயற்றி ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாடிய ‘நாதர் கேட்குதடி நல்லூர்நாதம் கேட்குதடி’ என்ற பாடல் இடம்பெற்றபோது, இந்தக் கோயில்கள் காட்டப்பட்டன. ஒரு மாதத்திலேயே படத்தின் பெரும்பகுதி நிறைவு பெற்று விட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் (14.07.1978) படம் திரைக்கு வந்தது.

வேணுகோபால் ஒரு நாதஸ்வரக்கலைஞன். அவனுக்கு ஒரு நாட்டியக்காரி மீது (ஜானகி) காதல். ஆனால், நாட்டியக்காரிக்கோ கலைமீது காதல், நாதஸ்வரக்கலைஞன் மீது அவனுடைய மைத்துனிக்கு (சந்திரா) காதல். நாட்டியக்காரியின் அண்ணனுக்கு (கிருஷ்ணன்) நாதஸ்வரக் கலைஞனி மைத்துனி மீது காதல். இந்தக் காதல்களினால் ஏற்படும் மோதல்கள்தான் இப்படத்தின் மூலக்கதை. வேணுகோபாலனாக ஏ. ரகுநாதனும், கிருஷ்ணனாக டீன்குமாரும் நடித்தனர். ஜானகியாக புதுமுகம் குமுதினியும், சந்திராவாக சந்திரகலாவும் தோன்றினர்.

சிந்தாமணியில் (23.07.78) இப்படத்துக்கான விமர்சனம் வந்தது. ‘சினிமா ரசிகர்கள் பல்வேறுதரப்பட்டவர்கள். எல்லோரையும் கூட்டுமொத்தமாகத் திருப்திப்படுத்த முடியாது. அதற்காக ஒரு படத்திலேயே எல்லாத் தரத்தினருக்கும் பிடித்தமான காட்சிகளைத் திணித்தால் எப்படி இருக்கும்? ‘தெய்வம் தந்த வீடு’ படம் மாதிரி இருக்கும்.

‘உலகத்திலேயே தமிழில் வெளியான முதலாவது கறுப்பு வெள்ளை சினிமாஸ்கோப்பு’ என்ற பெருமையுடன் வெளிவந்திருக்கும் இப் படம், பல்வேறு சுவைகள் ஒன்று சேர்ந்த விசித்திரச் சுவையாகக் காட்சி தருகிறது. படம் அங்கும் இங்கும் இழுபட்டுச் செல்கிறது. ஆரம்பத்திலும் கோயில் வருகிறது. இறுதிக் காட்சியிலும் கோயில் வருகிறது. கதையுடன் சம்பந்தப்படாவிட்டாலும், இலங்கையின் பிரபல சைவ ஆலயங்களின் காட்சிகள் புகுத்தப்பட்டுள்ளன.

மேடை நாடகம் ஒன்றில் காட்சி அமைவதுபோல் இப் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. படம் நத்தை வேகத்தில் நகர்கிறது. கதாநாயகன் பாத்திரத்தில் ரகுநாதன் பூரண வெற்றி பெறாவிட்டாலும் நாதஸ்வரத்தை வாசிப்பதுபோல் பாவனை காட்டும்போது அசல் நாயனக்காரராகவே மாறி விடுகிறார்.

கதாநாயகி பிரயாசையுடன் நடிக்க முயன்றிருக்கிறார். ஆமினா பேகத்தின் குரல் நடித்த அளவுக்கு குமுதினியின் முகம் நடிக்கவில்லையே. சந்திரகலா தனது பங்கை நன்றாகச் செய்துள்ளார். சுப்புலட்சுமி காசிநாதனின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

வில்லன் டீன்குமார் கலகலப்பாக வந்துபோகிறார். அப்பாவியாக வரும் விஸ்நாதராஜாவுக்கு வேடப் பொருத்தம் பிரமாதம். ஆனால், நடிப்பு சற்று ஓவர். எஸ்.என். தனரத்தினம் உடையாராக வருகிறார். ஜவாஹரின் நடிப்பு வழக்கம் போல் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

ஜெயதேவி தொடை காட்டும் கவர்ச்சித் தாரகையா அல்லது நகைச்சுவை நடிகையா என்று புரியவில்லை. அவருடன் ஏ. நெயினாரும். வேறு பாத்திரங்கள் ஒரே குவியல். சம்பவங்களும் ஒரே அவியல், சண்டைக்காட்சி நகைச்சுவைக்காட்சியாகிவிட்டது.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறும்போது மனதில் பதிந்திருப்பது என்.கே. பத்மநாதனின் நாதஸ்வர இசை ஒன்றுதான்’ என்று அமைந்தது அந்த விமர்சனம்.


யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘ஈழநாடு’ (31.07.78) பத்திரிகையில் ‘உதயவாணன்’ என்ற வாசகர் விமர்சனம் எழுதியிருந்தார்.

‘…..இப்பொழுதெல்லாம் காரணமில்லாமல் பெயர் வைப்பது சகஜமாகிவிட்டது. உதாரணம் தெய்வம் தந்த வீடு. சிறந்த படம் என்று கூற முடியாவிட்டாலும் சிறந்த முயற்சி. ரகுநாதனிடம் ஆர்வமும், திறமையும் இருக்கிறது. ஆனால், அவரது தோற்றம் ஒத்துழைக்கவில்லையே. நடிப்பில் குமுதினியை விட சந்திரகலா பரவாயில்லை. ஆனால், நடனமாடும்போது குமுதினி ஜொலிக்கிறார். இதுவரை வந்த ஈழத்து நடிகைகளில் குமுதினி அழகாகவும், இளமையாகவும் இருக்கிறார். ஆனால், இவற்றைத் தவிர, நடிப்பு முக்கியமானதல்லவா? சந்திரகலாவும் சுப்புலட்சுமியும் சோகக் காட்சிகளில் நன்றாக எடுபடுகிறார்கள். ஜவாஹரும் தனரெத்தினமும் டீன்குமாரும்தான். சாந்தி தியேட்டரில் (யாழ்ப்பாணம்) அனைத்துப் பாத்திரங்களின் முகங்களும் உடல்களும் நீளமாகத் தெரிகின்றனவே’ என்றும் எழுதினார் இந்த வாசகர்.


‘சினிமாஸ்கோப்’ இல்லாமல் சாதாரண படமாகத் தயாரிக்கப்பட்டிருந்தால் இப்படியான பிரச்சினை ஏற்பட்டிருக்காது. சாதாரணப் படங்களே ஒழுங்காக வளரவில்லை. அதற்குள் ‘சினிமாஸ்கோப்’ தேவைதானா என்று அப்பொழுது பலர் சொன்னார்கள்.

இலங்கை வானொலி மாதாமாதம் வெளியிட்டுவந்த சஞ்சிகையின் பெயர் ‘வானொலி மஞ்சரி’ அப்பொழுது வானொலி நிலையத்தில் ஜோர்ஜ் சந்திரசேகரன் அறிவிப்பாளராகக் கடமையாற்றினார். பத்திரிகை, நாடகம், சினிமா போன்றவற்றில் ஈடுபாடுடையவர். இவரும் இப் படத்தைப்பற்றி ‘வானொலி மஞ்சரி’யில் விமர்சனம் எழுதினார்.

‘ஆசை யாரை விட்டது? ஏ. ரகுநாதனை விட்டு வைக்குமா? ‘தெய்வம் தந்த வீடு’ திரைப்படத்தில் கதாநாயகனாக ரகுநாதன் நடித்திருக்கிறார். ‘கலைஞர்கள் ஒவ்வொருவரும் விமர்சகர்களாக இருக்கவேண்டும்’ என்பார்கள். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ‘கடமையின் எல்லை’ வெளிவந்தபோது, ரகுநாதனின் உடலமைப்பும் முகவெட்டும் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று? ……பல கோயில்களின் பெயர்களையும் நடிகர்களின் பெயர்களையும் கொண்டு இப் படத்தை விளம்பரப்படுத்தியதற்குப் பதிலாக ‘மாயா ஜாலம் நிறைந்த’ ஒரு மர்மச் சித்திரம்’ என்று விளம்பரப்படுத்தியிருக்கலாம். யாழ்ப்பாணத் தமிழ் பேசக்கூடிய ஒருவரேனும் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் இல்லையா? இது ஒரு மாயாஜாலம்.


கதாநாயகன் ஒரு நாதஸ்ர மேதை. இவன் நாட்டியக்காரி ஒருவரைக் காதலித்துத் தோல்வி கண்டதால் 4 ஆண்டுகள் நாதஸ்வரத்தைத் தொடாமல் குடிபோதையில் விழுகிறான். நாதஸ்வர மேதையின் அத்தையின் மகள் சந்திரகலா, அவளுக்கு நாதஸ்வர மேதையின் மேல் காதல். நாட்டியக்காரியின் அண்ணனுக்குச் சந்திரகலா மீது காதல். டீன்குமார், சந்திரகலா தன்னைத் திருமணம் செய்யவேண்டும் என்று வற்புறுத்துகிறார். அது முடியாமல் போகவே பலாத்காரத்தில் இறங்கிவிடுகிறார். இறுதியில் பெண்மை வென்றுவிடுகிறது. வில்லனின் தலையில் இரத்தம் வடிகிறது. ‘உன் குடும்பத்திலும் இப்படி இரத்தம் சிந்த வைப்பேன்.’ இது வில்லனின் சபதம்.

நான்கு வருட இடைவெளிக்குப் பின் கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பதற்கு மேதை சம்மதிக்கிறார். ஆனால், இதே கோயிலில் நாட்டியக்காரியின் நடனம் இடம்பெறும் என்று கேள்விப்பட்டதும், ஒரு மூலையில் போய் ஒதுங்கிவிடுகிறார். நாட்டியக்காரி அவரிடம் போய் சில தத்துவங்களைச் சொன்னதும் அவர் சம்மதிக்கிறார்.

நாதஸ்வர இசைக்கு நாட்டியம் நடைபெறுகிறது. சனக் கூட்டத்துக்குள் வில்லனும் துப்பாக்கியோடு வந்து நிற்கிறான். நாதஸ்வர மேதையைக் குறிபார்த்து ஒருமுறை சுடுகிறான். ஆடிக் கொண்டிருந்த நாட்டியக்காரி நாதஸ்வர மேதையின் காலடியில் விழுந்து சாகிறாள். நாதஸ்வர மேதை இன்னும் நாதஸ்வரம் வாசிப்பதை நிறுத்தவில்லை. அவரின் வாயாலும் நாதஸ்வரத்தாலும் இரத்தம் பாய்கிறது (இது அடுத்த மாயாஜாலம்) நாதஸ்வர மேதை நாட்டியக்காரியின் மேல் விழுந்து சாகிறார்.

இந்த மாயா ஜாலங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைகிறது இந்தப் படத்தின் பெயர். ….நகைச்சுவை என்ற பெயரில் நான்கைந்து பேர் அடிக்கும் கொட்டம், சில வேளைகளில் ஆபாசமாகவும் அபத்தமாகவும் தெரிகிறது.

ஓர் அரைக்கிறுக்குப் பாத்திரத்தில் விஸ்வநாதராஜா நடிக்கிறார். இவரது நடிப்பு வெகுசிறப்பாக இருக்கிறது. ஜவாஹரின் நடிப்புப் பரவாயில்லை. தனரெத்தினம் வெகுசீரியசாக நடிக்கிறார். மேலும் குறிப்பிடும்படியாக இந்தப் படத்தில் வேறு எதுவும் கிடையாது.’

இப்படி வித்தியாசமான முறையில் எழுதினார் ஜோர்ஜ் சந்திரசேகரன்.

‘தெய்வம்தந்தவீடு’ யாழ்ப்பாணத்தில் மட்டும் அதிக நாட்கள் ஓடியது. தயாரிப்பாளரின் சொந்தத் தியேட்டரான ஹட்டன் லிபேட்டியிலும் 16 நாட்கள் மட்டுமே ஓடியது.
‘தெய்வம்தந்தவீடு’ ஓடிய இடங்களும் நாட்களும்:-
மத்திய கொழும்பு (செல்லமஹால்) 13 நாட்கள்
தென்கொழும்பு (மெஜஸ்ரிக்) 13 நாட்கள்
தென்கொழும்பு (ஈரோஸ்) 05 நாட்கள்
யாழ்ப்பாணம் (சாந்தி) 34 நாட்கள்
வவுனியா (றோயல்) 14 நாட்கள்
கிளிநொச்சி (பராசக்தி) 14 நாட்கள்
மட்டக்களப்பு (ராஜேஸ்வரா) 14 நாட்கள்
வாழைச்சேனை (வெலிங்டன்) 06 நாட்கள்
கல்முனை (ஹரிசன்) 16 நாட்கள்
திருகோணமலை (லக்சுமி) 09 நாட்கள்
மூதூர் (இம்பீரியல்) 05 நாட்கள்
பண்டாரவளை (சீகிரி) 13 நாட்கள்
பதுளை (றெக்ஸ்) 06 நாட்கள்.

எல்லாவற்றையும்விட வேடிக்கை ஒன்று நடைபெற்றது. ‘தெய்வம் தந்த வீடு’ திரைப்படம் வெளிவந்தபோது, ‘தினகரனில்’ தயாரிப்பாளர் பொன்னுசாமிப்பிள்ளையின் பேட்டி வந்திருந்தது. ‘இத் திரைப்படம் தயாரித்ததன் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எவை?’ என்ற கேள்விக்குப் பதில் சொல்லியிருந்தார்.

‘பிடித்தது படம், படித்தது பாடம், மூன்று வாரத்தில் படத்தை முடித்துத் தருவோம் என்பார்கள். எத்தனையோ மாதம் இழுத்தடிப்பார்கள். ‘மேக்கப்மேன்’ றேட்டில்கூட ‘கட்’ வைக்கிற ஆசாமிகள் இருக்கிறார்கள். லாபம் இருந்தால் எவரையும் தம்முடன் சேர்த்துக் கொள்வார்கள். உண்மை சொல்கிறவர்களை ஒதுக்கி விடுவார்கள். பாஷை தெரியாதவனுக்கும் பாத்திரம் கொடுப்பார்கள். அமைதிப் பேர்வழியாக இருப்பார்கள். அதற்குள் இருக்கிற திருட்டுத்தனத்தைப் போகப் போகத்தான் புரிந்து கொள்ள முடியும். ‘தெய்வம் தந்த வீடு’ படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தில் நடந்தபோது ஏற்பட்ட அனுபவத்தையும் அவர் சொல்லியிருந்தார்.

முழு யூனிட்டும் யாழ்ப்பாணம் சென்றுவிட்டது. அதன் பின்புதான் கதையில் மாற்றம் செய்யவேண்டும் என்று ஓட்டலிலே உட்கார்ந்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள். அதனால், மூன்று நான்கு நாட்கள் வீணாகிவிட்டன. செட்டுக்கோ லொகேஷனுக்கோ வருவதற்கு முன் என்ன செய்யப் போகிறோம் என்று ஒரு டைரக்டர் திட்டமிட வேண்டாமா? ‘ஸ்டார்ட்’ ‘கட்’ இந்த இரண்டைத் தவிர, வேறு வார்த்தைகளே இவருக்குத் தெரியாதா? ஏதோ படம் ஒழுங்காக வெளிவந்ததென்றால் ஒளிப்பதிவாளரும், தொழில்நுட்பக் கலைஞர்களும்தான் அதற்குக் காரணம்.

ஒருமுறை தெய்வம் தந்த வீடு’ படத்துக்குப் பொறுப்பாக இருந்தவர்கள், ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்துக்குப் போடப்பட்ட செட்டைவிட பிரமாதமாகப் போட்டிருக்கிறோம். வந்து பாருங்கள்’ என்றார்கள். ஆசையோடு போய்ப் பார்த்தேன். சின்ன மேளம் நடக்கும் நாட்களில் சுற்றிப் போடப்படும் அலகங்காரப் பந்தல்தான் அங்கிருந்தது. கொஞ்ச நாட்களாவது சொகுசாக இருக்கப் போடப்பட்ட திட்டம்தான் இந்த அவுட்டோர் சூட்டிங். இலங்கையிலே தமிழ்ப்படம் ஒழுங்காக வளரவேண்டுமென்றால் ஒட்டுண்ணிகள் ஒதுங்க வேண்டும்’ என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

இப்படி அனுபவப்பட்ட இவர் இரண்டாவது படத்தையும் தயாரிக்க இருந்தார். ஆனால் 1983 கலவரத்தில் இவர் கொல்லப்பட்டார். அவர் இறந்து விட்டாலும் அவரது பெயர் இலங்கைத் தமிழ்ச் சினிமா வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பது உண்மையே.