இயக்குநர் ஷியாம் பெனகல்

இவர் டிசம்பர் 14 –ந்தேதி 1934 –ல் பிறந்தவர். இவரின் ஆரம்ப கால படங்களான ஆங்கூர் (1973) நிஷாந்த் (1975) மந்தன் (1976) பூமிகா (1977) இவரை அடையாளப்படுத்தியது. மிடில் சினிமாவின் பிதாமகர் என்று இவரை சொல்லலாம். மசாலா படங்களுக்கும், கலைப்படங்களுக்கும் இடைப்பட்ட படங்களாக இவரது படங்கள் இருக்கின்றன. இவர் ஒரு வங்க இயக்குநர். இவருக்கு தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது. 2017 –ல் இந்திய அரசின் தங்க தாமரையும், பத்து லட்ச ரூபாய் பணமும் கொண்ட சொர்ண கமலம் விருதும் பெற்றிருக்கிறார்.


இவர் வங்காளத்தை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், தென் கர்நாடகத்தில் கூர்கி மொழி பேசும் பகுதியில் பிறந்திருந்தாலும், ஹைதராபாத்தில் தான் வளர்ந்திருக்கிறார். 

இவரின் முதல் படமான ஆங்கூர் இன்றைய சிறிய முதலீட்டு படங்களுக்கான துவக்கம் என்று சொல்லலாம். இவரது படங்கள் இவரின் முன்னோடிகளான சத்யஜித்ரே, மிருணாள் சென், ரித்விக் கட்டக் போன்று, முழுமையான கலைப்படங்களாக இருப்பதில்லை. இவரது படங்கள் கலைத்தன்மை கொண்ட வணிகப்படங்களாக உருவெடுத்தன. 

அவரது தந்தை பெங்காலியை சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞர். ஸ்டுடியோ வைத்து நடத்திக் கொண்டு இருந்தவர். இவர் திரைப்படத்துறைக்குள் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். அதனால் மும்பைக்கு இடம் பெயர்ந்தார். மற்றொரு காரணம் இவரின் மைத்துனர் இந்தி திரையுலகின் ஜாம்பவான் குருதத். இந்த இரண்டு காரணங்களுமே இவரை திரைத்துறை நோக்கி திருப்பியது. 

சத்யஜித் ரேயும், மிருணாள் சென்னும் இவருக்கு பிடித்தமானவர்கள். 

இவர் ஹைதராபாத் ஆஸ்மேனியா பல்கலை கழகத்தில் பொருளாதாரம் படித்தார். அப்போது அங்கே ஒரு ஃபில்ம் சொஸைட்டியை துவக்கினார். அதில் திரையிட்ட உலகத் திரைப்படங்கள் அவரை கூர் தீட்டின.

பின்னர் மும்பை வருகிறார். அங்கே அவர் ஒரு விளம்பரப்பட நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுகிறார். ஐம்பதிற்கும் மேற்பட்ட இந்தி படங்களை இவர் எடுத்திருப்பதோடு, கிட்டத்தட்ட 900 விளம்பரப் படங்கள், 11 கார்ப்பரேட் படங்கள், இருபதிற்கும் மேற்பட்ட ஆவணப்படங்களும் எடுத்திருக்கிறார். இவர் மேக்கிங் ஆஃப் மகாத்மா என்கிற பெயரில் காந்தியை பற்றிய ஆவணப்படம் எடுத்திருக்கிறார். சத்யஜித் ரே, ஜவகர்லால் நேரு, நேதாஜி முதலானவர்கள் பற்றிய ஆவணப்படங்களையும் எடுத்துள்ளார். டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்கிற தொலைக்காட்சி தொடரை இயக்கியிருக்கிறார். பூனே நகரில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் சேர்மனாகவும் பணியாற்றி இருக்கிறார்.

முதலில் விளம்பரப்படங்களில் காப்பி ரைட்டராக, பின் விளம்பரப்படம் மற்றும் ஆவணப்படங்களை இயக்க துவங்கினார். அதில் தெலுங்கானா விவசாயிகள் போராட்டம், நக்ஸலைட்டுகள் போராட்டம் பற்றியெல்லாம் அலசினார். அதற்கு காரணம் அவரோடு படித்த மாணவர்களில் சிலர் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைச்சாலைக்கு சென்று விட்டு திரும்பியவர்கள். அவர்கள் மூலம் அங்கே நிலவிக்கொண்டிருந்த வர்க்க பேதங்களையும், அது சார்ந்த போராட்டங்களின் வேர்களை புரிந்து கொள்ள முடிந்தது. நிலவுடமை சமுதாயம் எப்படியெல்லாம் உழைக்கும் மக்களை உறிஞ்சி எடுக்கிறது என்பதை தெரிந்து கொண்டு கையறு நிலையில் மனது பரிதவிக்கிற தருணங்கள் தாண்டிய ஞானிப்பில் தோன்றிய படைப்புகளே ஆரம்பகால கதைகள். அதனால் இவரின் துவக்ககால படங்கள் வர்க்க பேதங்களையும் அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்கிற கோணத்திலும் அமைந்தது. 

இவரின் திரைப்படங்களுக்கு பக்கபலமாகவும், இவரின் மிகுந்த ஆதர்சத்தை பெற்றவர்களும் என்றால் அது கேமராமேன் கோவிந்த் நிகலானி மற்றும் நாயகி சுமிதா பாட்டீல் என்று சொல்லலாம். நசுருதீன் ஷா, கிரிஷ் கர்னாட், ஓம் பூரி, அம்ரீஷ் பூரி, குல்பூஷன் கர்பந்தோ போன்றவர்கள் இவரது திரைப்பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்களே.
அவர் சமூக பிரச்னைகளை, கலைத்தன்மையோடும், சுவாரஸ்யத்தோடும் தன் படைப்புகளில் மிளிரச் செய்தார். அதனால் இவரை பேரலல் சினிமாவின் பிதாமகர் என்று அழைக்கிறார்கள். இவர் ரியலிச படங்களை சுவாரஸ்யமாக எடுக்கவே முற்பட்டிருக்கிறார். இவர் எடுத்திருக்கிற திரைப்படங்கள் கிட்டத்தட்ட ஐம்பது . ஆவணப்படங்கள் இருபத்தைந்து.
இவரது முதல் படம் ஆங்கூரில் நிலவுடமை சமுதாயம் சிதைவுறத் துவங்குவதையும், அதைவிட மேம்பட்ட சமூகநிலையை எப்படி எட்டுவது என்று தடுமாறும் கிராம மக்களையும் பின்புலமாக கொண்டு கதையை செதுக்கியிருந்தார். இதில் சபனா ஆஷ்மி மற்றும் சங்கர் நாக் நடித்திருந்தார்கள்.

இரண்டாவது எடுத்த நிஷாந்த் படத்தில், கிரிஷ் கர்னாட் மற்றும் ஷபனா ஆஷ்மி நடித்திருந்தார்கள். இதன் நாயகன் ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர். அவரை மிரட்டுவதற்காக ஜமீன்தார் கூட்டம் அவரின் மனைவியை கடத்திக்கொண்டு சென்று விடும். இறுதியில் எப்படி அவர்கள் ஒன்றியைந்து நாயகனின் தலைமையில் அந்த கிராமத்தை ஆட்டிப்படைக்கும் நிலச்சுவான்தாரின் அட்டூழியத்தை எதிர்க்க முற்படுகிறார்கள் என்பதாய் அதன் கதை இருக்கும். 

பெங்கால் நகர நாகரீகத்தின் போக்கை பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் கல்யுக். மகாபாரதத்தை முற்போக்கு சிந்தனைகளோடு, புராண-அமானுசியங்கள் தவிர்த்து மீளுருவாக்கம் செய்து ‘ஜுனூன்’ என்கிற திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். 

‘மந்தன்’ திரைப்படத்தில் நாயகனாக கிரிஷ் கர்னாட், நாயகியாக சுமிதா பாட்டில், துணைக்கதாநாயகனாக நஷ்ருதீன் ஷா நடித்திருப்பார்கள். இது ஒரு குஜராத்தில் உள்ள கிராமத்தில் நடக்கிற கதை. திரைமொழியின் புதிய வடிவத்தை தொட்டிருக்கும் இந்த படம்.

அது ஒரு ஏழை கிராமம். அங்கே வருகிற கால்நடை மருத்துவரான கிரிஷ் கர்னாட் அங்கே உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது கால்நடை வளர்த்தலும், பால் உற்பத்தி மட்டுமே என்பதை அறிந்து கொள்கிறார். ஆனால் அந்த பாலை அடிமாட்டு விலைக்கு அங்குள்ள நிலச்சுவான்தார் வாங்கி கொள்ளை லாபம் அடைந்து கொண்டிருக்கிறார். அத்தனையும் தெரிந்தாலும் அதற்கு வேறு மார்க்கம் தெரியாததால் அந்த ஊர் கிராம மக்கள் கதியற்று இருக்கிறார்கள். பத்தாததற்கு சாதீ துவேசம் வேறு. அங்குள்ள உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பாலானவர்கள் தலித்துகள். அவர்களை ஆளும் நிலவுடமை சமுதாயவர்க்கம் மேட்டுக்குடியினர். அதனால் அங்கே தீண்டாமை தலைவிரித்து தாண்டவமாடுகிறது. தலித்துகளின் மாடுகள் தரும் பாலை நேரடியாக யாரும் வாங்குவதில்லை. இந்த சூழ்நிலையில் அங்கு வரும் நாயகன் எப்படி அவர்களின் பிரச்னைகளை கையில் எடுக்கிறான் என்பதே இதன் கதை.

இதில் கணவனால் அடி உதை என சதா துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருந்ததில், அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு போய்விடுகிறவனின் மனைவியாக சுமிதா பாட்டீல் நடித்திருப்பார். அவர் சியாம் பெனகலில் முக்கியமான பல படங்களில் நாயகியாக நடித்திருப்பவர்.

ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு புத்தரின் தாவோயிஸத்தின் மீது தாக்கம் உண்டு. சியாம் பெனகலுக்கு ஜே.கே மீது தாக்கம் உண்டு என தோன்றுகிறது. அவர் சொல்வது போலவே, இந்த கதைகளும், தீர்வு நோக்கி கைபிடித்து பாத்திரங்களை நகர்த்துவதில்லை. அவர்களின் வழியை, ஒளியை சுட்டுவதோடு, அதன் மைய கதாபாத்திரங்கள் நின்று கொளகின்றன. அதன் பிறகு அவரவர்களின் வாழ்க்கையை சமயோசிதமாய், புத்திசாலித்தனமாய் ஒருமித்து எப்படி நகர்த்தலாம் என்பதை சம்பந்தப்பட்டவர்களோ அனுபவமாக உணர்ந்து பயணிக்க வைக்கிறது இவரது கதைகள்.


மந்தனிலும் அப்படித்தான். அந்த இறுதிக்காட்சி அபாரமானது.

அதை பார்ப்பதற்கு முன்னால், இதன் கதையை சற்று பார்த்து விட்டு வரலாம். கிரிஷ் கர்னாட் குஜராத்தில் உள்ள அந்த கிராமத்திற்கு அரசு கால்நடை மருத்துவராக வருகிறார். அங்குள்ளவர்களின் பிரதான தொழில் மாடு வளர்ப்பது. பால் விற்பது. அங்கே உள்ள மனிதர்களுக்கு ஒரே அறிவு தான் என்றாலும், அவர்களில் பாதிப் பேரை தீண்டத்தகாத தலித்துகள் என்று ஐந்தாயிரம் வருடத்திற்கு முன்னால் ஆரியத்தை விஸ்தரிக்க மனு என்கிறவன் மானுடத்தை கூறு போட்டு பேதப்படுத்தி வைத்து விட்டு போன சூழ்ச்சியின் நியதிப்படி அங்கிருப்பவர்களில் மீதி பேர் தங்களை மேட்டுக்குடிகள் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். 

அதனால் அவர்கள் பாலை நேரடியாக நகரத்திற்கு கூட்டுறவு பால் பண்ணைக்கு அனுப்ப மாட்டார்கள். தலித்துகளின் பாலை அங்குள்ள தனியார் அமைப்பை நடத்தபவன் ஒருவன் அடிமாட்டு விலைக்கு வாங்கி அவன் நிறைய லாபம் பார்த்துக் கொண்டிருப்பான். அவர்கள் அவ்வப்போது விலையை அவர்கள் இஷ்டத்திற்கு இப்போது பெட்ரோல் விலையை இஷ்டத்திற்க மாற்றுவது போல மாற்றுவார்கள். அப்படி அவர்கள் மாற்றுகிற விலைக்கு தான் அவர்கள் தந்தாக வேண்டும். 

இந்த சூழ்நிலையில் தான் கிரிஷ் கர்னாட் அங்கே வருகிறார். அவர் மற்றொரு ஜுனியர் மருத்துவரோடு ஒரு வீட்டில் தங்கி தங்களின் சேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு, அரசு சார்ந்த விசயங்களையும் எளிய, கிராம மக்களக்கு புரியும்படி எடுத்துச் சொல்லி ஆவன செய்கிற வேலைகளிலும் கிரிஷ் கர்னாட் ஆர்வத்தின் காரணமாய் ஈடுபடுகிறார்.

கிரிஷ் அப்படிப்பட்டவர் என்பதை உணர்த்துவதற்கு முதல் காட்சியில் அவர் கிராமத்திற்கு வருகிறபோதே, அரசு ஜீப்பில் ஜுனியர் டாக்டரை அனுப்பி வைத்து விட்டு, அவர் காலார நடந்து செல்வார். அந்த கிராமத்தின் சுற்றுவட்டாரம் முழுவதையும் அந்த நடத்தலில் அவர் அவதானித்து விடுகிறார்.

முக்கியமான கதாபாத்திரங்கள் என்றால் தலித்துகளின் தலைவனாக வருகிற நசுருதீன் ஷா, குடிகாரனின் மனைவியாக வருகிற சுமிதா பாட்டில்.

இதுவரை பட்டிருக்கிற ஏமாற்றங்களின் வடுக்களின் நிமிண்டல் காரணமாய் துவக்கத்தில் சுமிதாவிற்கும், நசுருதீனுக்கும் கிரிஷ் மீது நம்பிக்கை வராது. அதனால் சுமிதா அவரை பார்த்தாலே ஒருவிதமாய் முறைத்துக்கொண்டு செல்வார். பிற்பாடு அவர் கிரிஷ் மீது மானசீகமாக காதல் வயப்படுகிற இடம் அபாரம். அவள் ஒரு சராசரி மனநிலையின் பிரதிபலிப்பு. தன் விருப்பத்திற்கும் மனம்மடுக்க முடியாமல், சமூகத்திற்கும் ஒரேயடியாக பயப்பட விரும்பாமல், அதேசமயம் சமூகத்தையும் நிராகரிக்க இயலாமல் அவருக்குள் ஒரு காதல் கடைசி வரை கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருக்கிறது. அதை பிற்பாடு சரியான தருணத்தில் பார்க்கலாம்.

கிரிஷ் கர்னாட் காலார ஊரை சுற்றிப்பார்த்தபடி நடந்து வருகிறபோது ஒவ்வொருவரிடமும் ஏதாவது விசாரித்துக் கொண்டே வருகிறார். அப்படி வருகிற வழியில் சில இளம்பெண்கள் தலையில் ஒன்றன் மீது ஒன்றென பித்தளை குடங்களில் எங்கிருந்தோ தண்ணீர் பிடித்துக்கொண்டு செல்கிறார்கள். அது அந்த பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்னையை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.

வந்ததும் முதல் வேளையாய் கோ-ஆப்ரேடிவ் சொஸைட்டி ஆரம்பிப்பதற்கான வேலைகளை ஊர் கூட்டி பேசுகிறார். அப்போது பஞ்சாயத்து தலைவர் சாதி பிரச்னையை காதில் கடிக்கிறார். கிரிஷ் எளிமையாய் சொல்லி விடுகிறார். சொஸைட்டி சாதிக்கு அப்பாற்பட்டது. எல்லோருக்கும் பொதுவானது என்கிறார். அங்கே ஏழு, எட்டு சாதிக்காரர்கள் வசித்து வருகிறார்கள்.

முதல் நாள் ஒவ்வொரு வீட்டிலும் சிறிதளவு பால் வாங்கி சோதித்து அதன் தரம் பற்றி அவர்களுக்கு தெரிவிக்கவும், அதன் விகிதத்திலேயே சொஸைட்டியில் பணம் மதித்து செய்து தருவார்கள் என்பதற்காக சாம்பிள் பால் வாங்கி வருவார். அப்போது சுமீதா வீட்டிற்கு முன் போய் கேட்கவும் அவர் தர மறுத்து விடுவார். மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்தவர் கிரிஷ் என்பதால் அந்த வெறுப்பு. அவருக்கு தன்னுடைய ஒரு சொட்டு பால் கூட தருவதற்கு அவளுக்கு விருப்பமில்லை. பிற்பாடு உண்மை தெரிய வருகிறது. அவள் நெஞ்சு இளகி கசிகிறது. உடனே சொம்பு நிறைய கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போவார். அது தான் பிந்து. சுமீதா ஏற்றிருக்கும் தலித் கதாபாத்திரத்தின் பெயர் தான் அது.

அதே நாள் இரவு ஒரு தலித்தின் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறபோது, வேறு வழியின்றி கால்நடை வைத்தியரான கிரிஷ் அந்த குழந்தைக்கு வைத்தியம் பார்க்க, அந்த குழந்தை காலையில் பூரண நலத்தோடு விளையாட துவங்க, அந்த மக்கள் அனைவருக்கும் அவர் மீது ஒரு அபிமானம் எற்பட்டு விடுகிறது. 

ஒரு நாள் தனியாக சுமிதாவோடு பேசிக்கொண்டே காலார வயல்வெளியில் நடந்து கொண்டிருக்கையில், நீ ஏன் சொஸைட்டியில் சேரவில்லை. சேர்ந்தால் உனக்கு மிகவும் லாபகரமாக இருக்கும். உன்னுடைய பாலின் தரம் அதிகம். என்கிறார். உடனே அவள் காந்தத்தோடு அவரை பார்த்தபடி, நீங்க சொன்னா சேந்தர்றேன் என்கிறாள். அப்போ சேர்ந்துக்கோ என்கிறார். ம் என்கிறாள். 

அப்போது அவளுக்கு எதுவோ தடுக்க, அவர் அவளை லாவகமாக கட்டி அணைத்து விழாமல் பிடித்துக் கொள்கிறார். அவள் அந்த ஸ்பரிசத்தில் ஒரு ஜென்ம வாழ்வை தொட்டு திரும்புகிறாள். 


பம்ப்செட் தண்ணீரை பீச்சியடித்துக்கொண்டிருக்கிறது. அதன் முன் அமரும் பிந்து தன் கெண்டங் கால்களை ஒரு மொரமொர கல்லை வைத்து தேய்த்து சுத்தப்படுத்த, பளபளக்கிறது. அவளின் பளபளக்கும் கெண்டங்கால்களையே அவர் லயிப்போடு பார்த்துக்கொண்டிருக்கையில், அவள் அவரை பற்றி விசாரிக்கிறாள். அவர் திருமணம் ஆனவர் என்பது தெரிந்ததும், தன்னுடைய பொங்கி வந்த காதலை அப்படியே மனதிற்குள்ளேயே பொத்தி வைத்துக் கொள்கிறாள். காட்டிய கெண்டங்கால்களை சேலையை இழுத்து விட்டு ஓட்டுக்குள் சுருக்கிக்கொள்ளும் நத்தையாய் சுருக்கிக் கொள்கிறாள்.

நசுரூதின் சொஸைட்டியோடு சேர மறுக்கிறான். ஒரு நாள் இரவில் அவனை சந்தித்து கிரிஷ் விவரம் கேட்கிறார். அப்போது அவன் தன் வரலாறை மெல்ல மெல்ல சொல்ல ஆரம்பிக்கிறான். அவனின் பரம்பரை இங்கே அடிமைகளாக இருந்தவர்கள். அவன் அப்படி இருக்க மறுத்ததாலேயே, செய்யாத குற்றத்திற்காக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவன் என்கிறான். அதனாலேயே இந்த மேட்டுக்குடி சாதியினர் பங்கெடுத்திருக்கும், கோ-ஆப்பேரட்டிவ் மில்க் சொஸைட்டியில் பங்கெடுக்க விருப்பமில்லை என்கிறான். அப்படி நீ ஒருவன் ஒதுங்கி இருப்பதால், ஒட்டுமொத்தமாய் உன் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயன் இனியும் கிடைக்காமலே போகக்கூடும் என்று நிதானமாக எடுத்துச் சொல்கிறார்.

சொஸைட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாய் நடக்கிறது. மேட்டுக்குடி வர்க்கம் பணத்தை இறைக்கிறது. வோட்டு எண்ணிக்கையில், தலித் தலைவனும், நஷ்ருதீன் ஆதரவாளனுமான பெரியவருக்கும், பஞ்சாயத்து தலைவருக்கும் சரிசமமாக ஓட்டு கிடைத்திருக்கிறது. குலுக்கல் முறையில் இறுதியில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் முதன்முறையாய் தலைவராகிறான்.

அவர்கள் அனைவரின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படத் துவங்குகிறது. 

இந்த தருணத்தில் பிந்துவின் மாட்டிற்கு அவளின் கணவனே விசம் வைக்கிறான். அவள் கால்நடை மருத்துவருடன் நெருங்கி பழகுவது பிடிக்காமல் அப்படி ஒரு காரியத்தை தன் தலையிலேயே மண் அள்ளி போட்டுக்கொள்கிற காரியத்தை அந்த அடிவருடி செய்கிறான். வியாபாரி அவளின் வீட்டை எழுதி வாங்கிக்கொள்வதாக எழுதி அவளிடம் கைநாட்டு வாங்கிக்கொண்டு, ஒரு பசு மாட்டை பதிலுக்கு கொடுத்து அனுப்புகிறான்.

அன்றிரவே பண்ணையார் தலித் குடிசைகளுக்கு ஒட்டுமொத்தமாய் தீ வைக்க செய்கிறார்.

சாதி கலவரத்திற்கு காரணம் டாக்டர் தான் என்று சொல்லி, பஞ்சாயத்து தலைவர் கிரிஷை ட்ரான்ஸ்ஃபரில் அனுப்பி வைக்க சதி நடக்கிறது.

மூன்றாவது ஒரு வெளியூர் பண்ணையார் தான் தனியார் சொஸைட்டி நடக்க விரும்புவதாகவும், அதற்கு ஒத்துழைப்பு தந்தால் டிரான்ஸ்ஃபரை தவிர்த்து விடலாம் என்றும், கணிசமான லஞ்சபணமும் அதற்கு பிரதியுபகாரமாக தருவதாக அவர்களின் லாயர் மூலம் தந்து அனுப்புகிறார்கள். ஆனால், கிரிஷ் எதற்கும் அசைந்து கொடுப்பதில்லை. 
கிரிஷ் இன்றே ஊரை விட்டு புறப்பட்டாக வேண்டும். மாற்றல் வந்தே விட்டது. நசுருதீன் மற்றும் பிந்து அவர் இந்த ஊரை விட்டு போக வேண்டாம் என்று கெஞ்சுகிறார்கள். ஆனால், அவர் சென்று தான் ஆகவேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது. அவருக்கும் அது தான் சரி என்று பட்டு விட்டது.

ஊரை விட்டு புறப்படுவதற்கு முன்னால் அந்த எளிய ஊர் மக்களில் தன்னோடு நெருக்கமாக பழகியவர்களிடம் போய் சொல்லி பிரியாவிடை பெறுகிறார். இறுதியாக பிந்துவை சந்திக்க செல்கிறார். அவர்களுக்குள் சொல்லப்படாத அவர்களுக்கு மட்டும் வெட்ட வெளிச்சமான ஒரு எதிர்பார்ப்பற்ற காதல் இருக்கிறதே. அதற்கான நன்றிக்கடனை அவளை சந்தித்து விடை பெற விரும்புகிறார். பரதேசம் போயிருந்து திரும்பியிருக்கும் அவளின் குடிகாரக்கணவன் அவள் வீட்டில் இல்லை என்கிறான். அவள் கொல்லைப்புற வாசலில் நின்றபடி தேம்புகிறாள். அந்த காட்சியில் அவள் இந்த முரண்பட்ட சமூகத்தை வெறுக்கிற பெண்மை, இன்னுமே அந்த தடைகளை கடந்து வர இயலாமல் தத்தளித்துக்கொண்டு தான் இருக்கிறது என்பதற்கான குறியீடாக பார்க்கலாம்.

கிரிஷ் தன் மனைவியோடு ரயிலில் ஏறி புறப்பட்டுச் செல்கிறார். 

தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறபோது, வழி மட்டுமே தன்னால் காட்ட முடியும். பயணத்தை அவரவர் தான் மேற்கொண்டாக வேண்டும் என்பதை போலவே, அவரும் நினைக்கிறார். எப்போதும் அவர்களின் பசிக்கு ரொட்டித்துண்டு தன்னால் தர8 இயலாது. அவர்களாகவே ரொட்டி செய்ய கற்றுக்கொண்டாக வேண்டும். அப்படியான இடத்தில் தான் அவர் அவர்களை விட்டுவிட்டு வர எத்தனித்திருக்கிறார். நீச்சல் கற்றுக்கொள்ள அவரவர் ஆழமான நீருக்குள் குதித்து தான் அக வேண்டும். அந்த ரிஸ்க்கை அவர்களை எடுக்கும் பக்குவதற்கு இதுநாள் வரை பண்படுத்தி தான் அவர்களை கொண்டு வந்து விட்டதாக எண்ணுகிறார்.

அப்போது, அவருக்குள் ஒரு நம்பிக்கை தோன்றுகிறது. நெருக்கடி தான் புதிய வழிகளை வழியமைத்துக் கொடுக்கிறது. இந்த கிராம மக்கள் தங்களின் பிரச்னைகளை நான் இல்லாவிட்டாலும் எதிர்கொள்வார்கள் என திடமாக நம்புகிறான்.

திரும்பவும் அரசு சொஸைட்டியை இவர்களால் நடத்த முடியவில்லை.

மேட்டுக்குடியினர் முன்பு நடத்திக்கொண்டிருந்த தனியார் சொஸைட்டிக்கு நெல்லிக்காய் மூட்டையாய சிதறிய ஒவ்வொருவராய் வயிற்றுப்பாட்டுக்காய் வேறு உடனடி வழி தெரியாததால், தங்கள் பாலை கொண்டு போய் தர ஆரம்பிக்கிறார்கள். இப்போது அவர்கள் முன் வீராவேசமாக நசுருதீன் ஷா ஆத்திரத்தோடு கர்ஜிக்கிறான். உடனே அந்த தனியார் நிறுவனத்திற்கு பால் தர வந்தவர்களில் பாதிப்பேர் ஒருவர் பின் ஒருவராக பின்வாங்குகிறார்கள்.

கிரிஷின் திட்டமும் அது தான். அவர்களுக்கு எப்போதும் தான் உடனிருந்து வழி காட்டக் கூடாது. தான் காட்டிய வழியில் அவர்களே கஷ்டநஷ்டப்பட்டு தங்களின் கண்டடைதலை எட்ட வேண்டும் என்பது தான் அவரின் திட்டம். அது வேலை செய்யத் துவங்கி விட்டது. அந்த துணிச்சலான முடிவை சொல்லாமல் கொள்ளாமல் எடுப்பதோடு, உணர்வின் மூலமாகவே கிரிஷ் வெளிப்படுத்திச் செல்லும் பாங்கு முற்றிலும் புதிய உணர்வை வழங்குகிறது. இந்த படைப்பை பார்க்கிறவர்களை சட்டென நிமிர்ந்து உட்கார வைத்தும் விடுகிறது.

அதில் பாதிப்பேர் அரசு சொஸைட்டிக்கு பால் தர வருகிறார்கள். விரைவில் முழுவதும் இந்த பக்கம் வருவார்கள் என்கிற நம்பிக்கையோடு சொஸைட்டியை நசுருதின் முன்னின்று நடத்த ஆரம்பிக்கிறான். பிந்து, அவளின் மறக்கவே முடியாத மானசீக காதலை வெளிப்படுத்தும் விதத்தில், அந்த வரிசையில் முன்னணியில் வந்து நிற்கிறாள்.
ஒரு கிராமத்தின் ஆன்மத்தில் அகப்புரட்சியின் சுடரை இதன் நாயகன் ஏற்றி வைத்துச் செல்கிற உணர்வாடலின் மூலமான வெளிப்பாடு இதன் தனித்தன்மையை இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறது.