சிவெடெல் எஜியோஃபோரின் இயக்குனர் அறிமுகம் – காற்றைப் பயன்படுத்திய சிறுவன்

சிவெடெல் எஜியோஃபோரை பலரும் நடிகராக மட்டுமே அறிந்திருப்போம். 1997ஆம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கினால் திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட இந்நடிகர், 12 இயர்ஸ் எ ஸ்லேவ், 2012, அமெரிக்கன் காங்க்ஸ்டர் போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். தி லயன் கிங் போன்ற அனிமேஷன் படங்களின் (தி லயன் கிங்கில், ஸ்கார் எனும் சிங்கத்தின் கர்ஜிக்கும் குரல் இவருடையதே!) கதாபாத்திரங்களுக்குத் தன் குரலால் உயிர் கொடுத்தவர் எஜியோஃபோர். இவர் இத்தனை ஆண்டு காலங்களாய் சினிமா சார்ந்து கற்றுக்கொண்ட புரிதலை, தன் முதல் படத்தில் மிக நேர்த்தியாகவும், மிக அழகாகவும் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

Image result for the boy who harnessed the wind 

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் பார்வையாளர்களை வெகு விரைவிலேயே ஈர்த்துவிடக் கூட வல்லமை கொண்டவைகளாக இருக்கின்றன. புனைவுக் கதைகளைப் பார்ப்பதற்கும், ‘இதுவொரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்’ என்ற அடைமொழியுடன் வெளியிடப்படக்கூடிய திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் வெகுவாக வித்தியாசங்களை உணரமுடியும். உண்மைக் கதைகளைப் பின்பற்றி எடுக்கப்படுகிற திரைப்படங்களை பார்வையாளர்களாகிய நாம் மிகவும் நம்பகத்தன்மையுடன் பார்க்கிறோம். இது நம்மையறியாமலேயே படத்தோடு நம்மை பிணைத்துவிடுகிறது. இது போன்ற படங்களில் வருகிற கதாபாத்திரங்களில் கூடுதலான வலிமையை உணரமுடிகிறது. இதை நன்கு உணர்ந்த எஜியோஃபோர் தன் முதல் படத்தை உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்ஒடுக்கப்பட்ட மக்களின் பின்னால் நிற்பதும், எளிய மக்களுக்குத் துணையாக நின்று அவர்களுக்காகப் பேசுவதும், அவர்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்துவதும் ஒரு கலைஞனின் கடைமையும் கூட. ஓரளவிற்கு பொருளாதார தன்னிறைவு பெற்றுவிட்ட பிறகும் கூட, எஜியோஃபோர் தன் சமூகம் சார்ந்த கதையைத்தான் முதல் படத்திற்கானதாகத் தேடி வந்திருக்கிறார். எழுதி இயக்கியதோடு, அச்சிறுவனின் தந்தையாகவும் நடித்திருக்கிறார். 

கதை அடிப்படையில் மிக மிக எளிமையானது. ஒரு சில கதைகள் ஆரம்பத்திலேயே அதன் முடிவையும் வெளிப்படுத்துவையாக அமைந்துவிடுகின்றன. இதுவும் அதுபோன்ற கதைதான். பல இன்னல்களுக்கு மத்தியில் சுழன்றுகொண்டிருக்கும் தன் கிராமத்திற்கு காற்றைப் பயன்படுத்தி தண்ணீர் கொண்டுவர நினைக்கிறான் ஒரு சிறுவன். அது நடந்ததா? இல்லையா? என்பதுதான் கதை. 

வில்லியம் காம்கவாம்பாவ் எழுதிய ‘தி பாய் ஹு ஹார்னெஸ்ட் தி விண்ட்’ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, திரைப்படமாக்க ஒரு வியத்தகு உண்மைக்கதையை எஜியோஃபோர் கண்டறிந்துள்ளார். தலைப்பின் நாயகனும், கதையின் நாயகனும் வில்லியம் காம்கவாம்பா எனும் அந்தக் கறுப்பினச் சிறுவன்தான். இது 2001 ஆம் ஆண்டு காலவாக்கில், மலாவியில் நடந்த உண்மையான கதை. காம்க்வாம்பா குடும்பத்தினர் மிகவும் சிரமமான வாழ்க்கையையே நடத்திவருகின்றனர், அன்றாடம் உணவுத் தேவைக்கே கஷ்ட ஜீவிதம்தான் நடக்கிறது, காம்க்வாம்பாவின் பெற்றோர்களான ட்ரைவெல் (எஜியோஃபோர்) மற்றும் அக்னெஸ் (அய்ஸ்ஸா மாய்கா) ஆகியோர் உணவுத் தேவைகளுக்கும், மற்ற அன்றாடச் செலவுகளுக்கும் நிதித் தேவைகள் இருந்தபோதிலும், தன் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களது 13 வயது மகன், கதையின் நாயகன் வில்லியம் காம்க்வாம்பா (மேக்ஸ்வெல் சிம்பா) ஆசையாகப் பள்ளிக்குச் செல்கிறான். ஆனால், பள்ளி நிர்வாகத்திடம் செலுத்தவேண்டிய கட்டணத் தொகையைச் செலுத்தாத காரணத்தினால், பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். இதனாலெல்லாம் அந்தச் சிறுவன் துவண்டுபோவதில்லை. அவன் தன் குடும்பத்திற்கு மட்டுமல்ல, ஒரு சமூகமே பஞ்சத்தை எதிர்கொள்ளும் வகையில் ஒரு சாதனத்தைக் கண்டுபிடிப்பதில் உறுதியாகச் செயலாற்றுகிறான்.

Image result for the boy who harnessed the wind

ஒரு சிறுவனைக் கதாநாயகனாகக் கொண்டு, ஒரு நாவலைத் தழுவி ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறபொழுது, இயக்குனர்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமான ஒரு திரைப்படத்தை உருவாக்கவே முயல்கிறார்கள், ஆர்வமுள்ளவர்களாகவும், ஒரு தவறுக்கு உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள், எந்தவொரு யதார்த்த உணர்வும் இதில் தோல்வியுறுகிறது. தி கைட் ரன்னர் முதல் தி லவ்லி போன்ஸ் வரை, அதிர்ச்சி மற்றும் நுட்பமான சமநிலை பெரிய திரையில் மிகைப்படுத்தித் தோன்றுகிறது. இதற்கு மாறாக, எஜியோஃபோர் தழுவி எடுத்துக்கொண்ட ஒரு ஸ்கிரிப்டில் இருந்து, இதுபோன்ற ஒரு போருக்கு எதிராக இருக்கிறார், அவருக்கு கேமராவுக்கு முன்னால்தான் நடிப்பதில் அனுபவம் இருக்கிறது. கேமராவுக்குப் பின்னால் இயக்குவதில் இருக்கிற அனுபவம் குறைவு. எனினும், வசீகரம் மற்றும் விஷத்தன்மை இரண்டிற்கும் இடையில் எது எல்லைக்கோடு என்பதில் கவனமாகத் தேர்ந்தெடுத்து நின்று, திறமையாகத் தன் இருப்பை உறுதிசெய்திருக்கிறார். 

இது பல வழிகளில் மிகவும் வழக்கமான ஒரு படம் போலத்தான் தோன்றுகிறது, ஆனால், மெதுவாகவும் திறமையாகவும் படத்தின் இறுதியில் ஒரு குறிப்பிடத்தக்க உற்சாகமான, நம்பிக்கைதரக்கூடிய க்ளைமேக்ஸும் உள்ளது. இதுபோன்ற உண்மைச் சம்பவம் 2001 ஆம் ஆண்டில் நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களையும் உள்வைத்திருப்பதால், இந்தக் க்ளைமேக்ஸை மறுப்பது பார்வையாளர்களுக்குக் கடினமான ஒன்றாகவே இருக்கும். 

சிலருக்கு, திரைக்கதை பயணிக்கும் வேகம் மிகவும் மெதுவானதாகத் தோன்றலாம், ஆனால் கதைக்கும், கதை எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கும், அந்த மக்களை நாம் உணர்ந்துகொள்வதற்கும், அவர்களோடு பழகுவதற்கும், அவர்கள் படுகிற பாடுகளை நாம் உணர்வதற்கும், இதுவொரு அவசியமான வலம் என்றே நான் வாதிடுகிறேன்: எஜியோஃபோர் படத்தின் உணர்ச்சி அடித்தளத்தை பல் அடுக்குகளில் கவனமாக வேய்ந்திருக்கிறார், மேலும் கதை பார்வையாளர்களை ஈடுபடுத்துவதில் குறையாக இல்லை என்பதையும் இவரது இயக்கம் உறுதிப்படுத்துகிறது.

Related image

படத்தின் மையக்கதாபாத்திரமான காம்கவாம்பாவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற சிம்பாவிற்கும் இங்கே பெரிய புகழ் வழங்கப்பட வேண்டும், அவர் கதையின் முன்னணியில் நின்று கதையை முன்னெடுத்துச் செல்லும் செயல்திறன் மிகவும் அசாதாரணமானது. அவரது ஆத்மார்த்தமான கண்கள் மற்றும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் நடத்தைகளின் மூலம், தன்னைச் சுற்றி நிகழும் நாடகத்தை, கதைப்பின்னலை வடிவமைக்கிறார். ஒரு விளையாட்டுத்தனமான குழந்தைப் பருவத்திலிருந்து, தான் வாழ்கிற அந்தக் கிராமத்திறே ஒரு பரோபகார மீட்பராக வளர்ந்து முதிர்ச்சியடையும்போது கதையின் உணர்ச்சி மாற்றங்கள் மூலம் தன்னை எளிதாக வழிநடத்துகிறார். 

எஜியோஃபோர் இந்தப் படத்தை பரந்துபட்ட வெகுஜன பார்வையாளர்களிடம் கொண்டு செல்கையில், அவர் தனது கதாபாத்திரங்களை எப்போதும் ஆங்கிலத்தில் பேசும்படி கட்டாயப்படுத்த வேண்டாம் என்று ஒரு முக்கியமான முடிவை எடுக்கிறார். எனவே, அவர்கள் பேசுவது சுதந்திரமாக ஆங்கிலத்திற்கும் சிச்சேவாவிற்கும் (Chichewa – மலாவியில் பேசப்படும் மொழி) இடையே ஊசலாடுகின்றன. பெரும்பாலும் அவர்கள் தங்கள் மொழியிலேயே பேசுகின்றனர். பல திரைப்பட இயக்குனர்கள், படைப்பாளிகள், படம் பார்க்கிறபொழுது துணை உரைகளைத் (sub title) தவிர்க்கச் சொல்கின்றனர். வேற்று நாடுகளில் நடந்த உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்திற்கு, துணை உரைகளைக் கவனிக்காமல் படத்தை மட்டும் பார்த்து, அதைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தையும், மனோபாவத்தையும் பார்க்கிறபொழுது, புத்துணர்வளிக்கிறது. மலாவியின் கசுங்குவில் (Kasungu, Malawi) பிறந்த வில்லியம் காம்கவாம்பா ஒரு இளம் பள்ளி மாணவன், அவர் அருகிலுள்ள கிராமமான விம்பேவில் (Wimbe) வசிக்கும் கிராமத்திலிருந்து வருகிறார். காம்கவாம்பாவிற்கு சிறு வயதிலிருந்தே சிறுசிறு மின் சாதனங்களைச் சரி செய்து கொடுப்பதிலும், அந்த மின் சாதனங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை அறிந்துகொள்வதிலும் ஆர்வம் அதிகம். இதை ஊராரும் அறிந்திருந்த காரணத்தினால், காம்கவாம்பா தனது நண்பர்கள் மற்றும் அயலவர்களுக்கான ரேடியோக்களை பழுதுநீக்கித் தரக்கூடிய வேலைகளில் ஈடுபடுகிறான். மேலும் தனது ஓய்வு நேரங்களில் உள்ளூர் குப்பைக்கிடங்குகளில் கிடைக்கக்கூடிய மின்னணு உதிரிபாகங்களைத் தேடிக்கண்டடைவதில் ஆர்வத்தோடு செயல்படுகிறான். இதுதான் அவனுக்குப் பிடித்தமான வேலையாக இருக்கிறது. அவன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதிலும், அவனது பெற்றோர்களால் சரியான நேரத்திற்கு பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தமுடியாத காரணத்தினால், அவன் தொடர்ந்து பள்ளிக்குச் செல்வது தடை விதிக்கப்படுகிறது. இதற்கிடையில் காம்கவாம்பாவின் சகோதரியுடன், தன் பள்ளி அறிவியல் ஆசிரியர் காதல் வயப்பட்டிருப்பது தெரியவருகிறது. எனவே, காம்கவாம்பா தனது அறிவியல் ஆசிரியரை நெருங்கி, தான் தொடர்ந்து வகுப்பில் கலந்துகொள்வதற்கும், பள்ளியின் நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்கும் அனுமதி அளிக்குமாறு கேட்கிறார். இல்லையேல், என் சகோதரியுடன் நீ காதல் கொண்டிருப்பது தெரியும், இதனால் வீண் பிரச்சினை, என்பதுபோல அச்சுறுத்துகிறார். எனவே, காம்கவாம்பா நூலகத்தைப் பயன்படுத்துகிறான். அங்கு அவன் மின் பொறியியல் மற்றும் ஆற்றல் உற்பத்தி பற்றி அறிந்துகொள்வதில் மிகவும் ஆர்வத்தோடு செயல்படுகிறான்.

Image result for the boy who harnessed the wind

கதையின் ’டைனமோ’ ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. சைக்கிள் டயர் ஏற்படுத்தும் உராய்வின் காரணமாக சைக்கிள் முகப்பில் உள்ள விளக்குகள் எரியப்பயன்படுத்தும் டைனமோவிற்காக அச்சிறுவன் போராடுகிறான். இறுதியில் அறிவியல் ஆசிரியர் உதவியால் அவன் கைக்கு வந்துசேர்கிறது. ஆம், தன் சகோதரி அந்த அறிவியல் ஆசிரியருடன் வேறு ஊருக்குச் சென்றுவிடுகிறாள். அன்றாட உணவுக்கே கஷ்டம் எனும்போது, உணவைப் பங்கிட்டுக்கொள்ள ஒரு வாய் குறைந்துபோகட்டும், என்பதாக எழுதிவைத்துவிட்டு, தான் காதலித்த அறிவியல் ஆசிரியரோடு வெளியூர் போய்விடுகிறாள். அந்தளவிற்கு அக்கிராமத்தில் வறுமை தாண்டவம் ஆடுகிறது. 

2000-களின் மத்தியில், வறட்சி காரணமாக பயிர்கள் வாடின மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட கடும் பஞ்சம் வில்லியம் காம்கவாம்பாவின் கிராமத்தை பேரழிவிற்கு உட்படுத்தியது. அரசாங்கம் மூலமாகக் கொடுத்தனுப்புகிற உணவிற்காக மக்கள் முண்டியடிக்கின்றனர். சோற்றுக்காக பெரிய கலவரங்களே மூள்கின்றன. வில்லியம் காம்கவாம்பாவின் குடும்பத்தினர் சேர்த்துவைத்திருந்த தானியங்கள் கொள்ளைபோகின்றன. எனவே, இந்தக் கிராமத்தின் மீது நம்பிக்கையிழந்த கிராம மக்கள் வேறு ஊர்களுக்குச் செல்ல முடிவெடுக்கின்றனர். இந்நேரத்தில்தான், காம்கவாம்பாவின் சகோதரி, ’உணவிற்கு ஒரு வாய் குறைந்தது’ என்று எழுதிவைத்துவிட்டு, தன் தம்பிக்குத் தேவையான டைனமோவையும், காதலனின் சைக்கிளிலிருந்து கழட்டித் தந்தவாறு வேறு ஊரைநோக்கிச் செல்கின்றாள். 

இந்தக் கொடும் வறட்சியிலிருந்து தன் கிராமத்தைக் காப்பாற்ற முற்படும் வில்லியம் காம்கவாம்பா, முன்பு அவர் தோண்டிய ஒரு மின்சார நீர் பம்பைப் போல ஒரு காற்றாலை கட்டும் திட்டத்தை முன்னெடுக்கிறான். இந்தச் சிறு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு பெரிய காற்றாலை சாதனத்தை உருவாக்க வேண்டும், அதன் மூலம்தான், தன் கிராமத்திற்கு நீராதரத்தைத் தந்து, வறட்சியிலிருந்து காப்பாற்ற முடியும். காம்கவாம்பா தான் நினைத்ததுபோல, பெரிய காற்றாலையின் சிறிய மாதிரியை வெற்றிகரமாக உருவாக்கிவிடுகிறார். ஆனால், அடுத்து ஒரு பெரிய காற்றாலையைச் செய்வதற்கு, தன் தந்தையின் மிதிவண்டியின் உதிரிபாகங்கள் தேவைப்படுகின்றன. மிதிவண்டியின் பாகங்களை அகற்றி காற்றாலை செய்வதற்கு, தன் தந்தையான ட்ரைவெல் அனுமதியளிக்க வேண்டும், மேலும் அந்தக் கிராமத்திற்கே இதுதான் ஒரே சைக்கிள் மற்றும் தன் குடும்பத்தில் உள்ள கடைசி பெரிய சொத்து. 

முதலில், தன் மகனை அடித்துத் துவைக்கிறார், விளையாட்டுத்தனமாக தன் சைக்கிளை பாழ்படுத்தப்போவதாகவும், இந்தச் சிறுவன் முன்னெடுப்பதெல்லாம் வீண்வேலை என்பதாகவும் நினைக்கிறார். காற்றாலை போன்று உருவாக்கிவைத்திருந்த மாதிரியை உடைக்கிறார். தன் வாழ்வாதாரமாக இருந்த சைக்கிளை அந்தச் சிறுவன் கேட்டதுதான், இத்தனை கோபத்திற்கும் காரணம். படத்தின் இறுதியில், வில்லியம் காம்கவாம்பாவின் தாயார் அதாவது ட்ரைவெல்லின் மனைவியின் தலையீட்டிற்குப் பிறகு, அவரது நண்பர்கள், மற்றும் கிராமத்திலுள்ள மீதமுள்ள உறுப்பினர்களின் உதவியுடன், ஒரு முழு அளவிலான காற்றாலை விசையாழியை உருவாக்குகிறார்கள், இது அடுத்தடுத்து வெற்றிகரமாக பயிர் விதைக்க வழிவகுக்கின்றது.  

ஆப்ரிக்கவின் கிராமப்புறங்களில் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் இரண்டிற்குமிடையேயான ஒரு சுவாரஸ்யமான வழித்தடம் உள்ளது, கடந்த காலத்திலிருந்தே வழிபாடுகள் என்ற பெயரில் பின்பற்றிவருகிற சில மூடப் பழக்கங்களை அவர்கள் எதிர்க்கிறார்கள். முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், பெற்றோர்கள் கடந்தகால மூட நம்பிக்கைகளை வேண்டுமென்றே விலக்கத்துவங்கிவிட்டனர். தங்கள் பயிர்களைக் காப்பாற்றுவதற்காகவும், மழைவர வேண்டியும் ஜெபிப்பதை இனிமேலும் அவர்கள் நம்பத் தயாராகயில்லை: அதற்குப் பதிலாக அவர்கள் நடைமுறைவாதத்தை விரும்புகிறார்கள். எது செயல்படுமோ, எது அறிவியல் முறையில் பலன் தருமோ அதை நோக்கி நகரத்துவங்குகின்றனர். இது தங்கள் பிள்ளைகளின் கல்விக்கான விருப்பத்திலும் பிரதிபலிக்கிறது. இதனால் தங்கள் குழந்தைகள் இந்தக் கிராமத்திலிருந்து வெளியேறி படிக்க முடியும், வேலை பார்க்க முடியும், பெரியவர்களைப் போன்றே தங்கள் குழந்தைகளும் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடாது என்று தீர்மானிக்கிறார்கள்.

Related image

இப்படத்தையே எடுத்துக்கொண்டாலும், எஜியோஃபோர் ஏற்று நடித்திருக்கிற தந்தை கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். படத்தின் ஆரம்பத்தில் தன் குழந்தையின் கல்வி ஆதாரத்தை விரும்புகிறார். ஆனால், பொருளாதார அழுத்தம், அன்றாட நிதித்தேவைகளையே சமாளிக்க முடியாத நிலைமையில், தன் மகனின் கல்வித்தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத நிலை உருவாகிறது. கதாபாத்திரத்தின் குணாதிசயங்கள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, எஜியோஃபோரின் முரண்பட்ட குணாம்சம். ஒரு தந்தையாக அவர் தன் மகனைப் புரிந்துகொள்ளாத குறைபாடுள்ள தந்தையாகவே படத்தில் காட்டப்படுகிறார். தனது குழந்தைக்கான கல்வியை விரும்புகிறார் எனினும், தங்கள் குழந்தைகள், தங்களைவிட புத்திசாலிகளாக இருப்பதன் விளைவையும் எதிர்கொள்கிறார். மிக முக்கியமாக தன் குடும்பத்தின் முடங்கும் நிதி ஆதாயத்தையும், குடும்பத்தலைவன் என்ற முறையிலிருந்து அவர் சமாளிக்க வேண்டும். 

Related image

எஜியோஃபோர் நட்சத்திர அந்தஸ்து என்றெல்லாம் கணிக்காமல், காம்க்வாம்பாவின் தந்தையாக, எல்லோராலும் எளிதில் விரும்பப்படாத மனிதனாக, ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். கதையில் தவிர்க்கமுடியாத இருள் கவிழ்ந்துள்ளது மற்றும் எஜியோஃபோர் மலாவியின் 2000களின் முற்பகுதியில் உணவு நெருக்கடியின் மிருகத்தனமான கோரப்பிடிக்குள் ஒரு கிராமமே பசியோடு காத்திருப்பதை, அதன் யதார்த்தத்தைப் பிடித்து, அதைப் படத்திற்குள் அடைத்திருக்கிறார். அதே நேரத்தில் மிக மோசமான பின்னடைவிற்கான காட்சிகளைக் கொண்டிருந்தபோதிலும் அவற்றை நம்பிக்கையின் குறிப்புகளுடன் நேர்த்தியாகவும் சமன் செய்கிறார். படத்தின் க்ளைமேக்ஸ் வரும்போது, அது மகத்தான திருப்தியைப் பெற்று, தன் கிராமத்தின் மக்களை மகிழ்விக்கும் வெற்றியாக முடிகிறது. சன் டேன்ஸ் திரைப்பட விழாவில் தி பாய் ஹு ஹார்னெஸ்ட் தி விண்ட் திரையிடப்பட்டது, நெட்பிளிக்ஸில் இப்படத்தைத் தரமான பதிப்பில் பார்க்கமுடிகிறது. 

Related image
நன்றி: தி கார்டியன்