அனுபவப் பகிர்வு: ஒளிப்பதிவாளர் ஜி. முரளி

[ஓவியம், இசை, சினிமா என தன் கலைசார்ந்த அனுபவங்களையும், ராஜீவ் ரவி, பா.ரஞ்ஜித், அனுராக் காஷ்யப் போன்ற கலைஞர்களிடமிருந்து அடைந்த புரிதல்கள் குறித்தும் ஒளிப்பதிவாளர் ஜி.முரளி பேசாமொழி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். இதுவொரு தொடராக ஒவ்வொரு பேசாமொழி இதழிலும் வெளியாகவிருக்கிறது.]

பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தவன் நான். என் அப்பாவும், அம்மாவும் ஆசிரியர்கள். இன்றைக்கிருக்கிற சமூகச் சூழலில் ஆசிரியர்களின் பிள்ளைகள் மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ சமூகத்தில் உயர்ந்த படிப்பு படிக்கவேண்டும் என்பது நிர்ப்பந்திக்கப்பட்ட விதிகளில் ஒன்று. அதை நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது உங்கள் மனதில் உங்களையறியாமல் அமர்ந்திருக்கும். அப்படியானதொரு சூழல்தான் எங்கள் வீட்டிலும் இருந்தது. நான் நன்றாக படிக்கக்கூடிய மாணவனாகத்தான் இருந்தேன். எனினும், எனக்குத் தொடர்ந்து அக்கெடமிக் சைடில் படிப்பதற்கு விருப்பம் இல்லை. படிக்கிற காலத்திலேயே ஓவியங்கள் வரைவேன். எனவே, மேலும் ஓவியம் சார்ந்து தெரிந்துகொள்வதற்காகத்தான், பன்னிரண்டாம் வகுப்பு முடிந்ததும், திருவண்ணாமலை சென்றேன். அங்கு, சி.பி.ஐ.யின் இலக்கியப் பிரிவான தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தில் இருந்த நண்பர்களோடு எனக்குப் பரிச்சயம் ஏற்பட்ட பின்னால், கலை சார்ந்த விஷயங்களையும், ஓவியங்கள் சார்ந்தவற்றையும் ஓரளவு புரிந்துகொண்டேன். அங்கிருந்துதான் ஓவியக்கல்லூரிக்குச் சென்றேன். அவர்களோடு இருந்தபொழுது நிறைய வீதி நாடகங்கள், தெருக்கூத்து நடத்துவது, என கட்சியோடு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் நானும் ஈடுபாட்டோடு கலந்துகொண்டேன். நேரடியாகக் கட்சி சார்ந்த செயல்பாடுகள் இல்லாவிட்டாலும், அதன் கலை இலக்கியப் பிரிவில் நான் ஆர்வத்தோடு பங்கேற்றுவந்தேன். நிறைய நாடகங்கள் அரங்கேற்றுவது, வீதிகளில் பாடுவது, மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு சார்ந்த கருத்துக்களைக் கொண்டு சேர்ப்பது என இதில்தான் என் காலம் ஓடிக்கொண்டிருந்தது.


இதன்பின்னர்தான் ஓவியம் சார்ந்து இன்னும் ஆழமாகப் படிக்கவேண்டுமென, ஓவியக்கல்லூரியில் சேர்ந்தேன். அது முடிந்ததும், திரைப்படக்கல்லூரி. கோவை செல்வராஜ் (நிறுவனர், இயக்குனர்) அவர்களது அரும்பு கலைக்குழு இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து இயங்கிவருகிறது. அவர்களது நாடகங்கள் எல்லாம் அரசியல் சார்ந்த விழிப்புணர்வு நாடகங்களாகத்தான் இருக்கும். அவரோடு சேர்ந்துதான் நானும் நாடகங்கள் நடத்தி வந்தேன். அதன்பின்னர், நான் திரைப்படம் சார்ந்து நகர்ந்து வந்துவிட்டதால் அவர்களோடு தொடர்ச்சியாக இயங்க முடியவில்லை. இருப்பினும், என்னால் முடிந்தவரை அவர்கள் நடத்துகிற சிறுசிறு கூட்டங்களில் பங்கெடுத்துக்கொள்கிறேன்.

இசை சார்ந்த படிப்பு அந்நண்பர்களுடன் பழகுகிறபொழுது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்புத் திறமைகள் இருப்பதை அறிந்தேன். ஒரு சிலர் நன்றாக எழுதுவார்கள், மற்றொரு பிரிவினர் கவிதை எழுதுவார்கள், சிறுகதை எழுதுவார்கள், நன்றாகப் பேசக்கூடியவர்களாகவும், நன்றாகப் பாடக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். இவர்களைப்போல, நாமும் நம்மை நல்லவிதத்தில் ஏதாவதொரு திறமையுடன் வெளிப்படுத்திக்கொள்வதற்கு ஒரு ஊடகம் தேவை என்ற எண்ணம் இருந்தது. அந்த வயதில் எனக்கு மிகப் பிடித்ததாகவும், பிரம்மிப்பாகவும் இருந்தது இசை. தொடர்ச்சியாக இசையைக் கேட்டு ரசிக்கக்கூடிய ஆட்களாக இருந்திருக்கிறோம், திரைப்பட இசை மட்டுமல்லாமல் வெளியில் இருக்கக்கூடிய எல்லா இசைகளையும் கேட்கக்கூடிய ஆட்களாக இருந்திருக்கிறோம். இசைதான் மிகவும் சவாலானதாகவும், ஆச்சரியப்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. எனவே, இந்த இசையைப் படித்தால், நமக்கு மிகப் பிடித்த ஒன்றைக் கற்றுக்கொண்டதாகவும், நம் உணர்வை வெளிப்படுத்திக்கொள்கிற ஊடகமாகவும் இது அமையுமென இசையைக் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்தேன். அதன் அடுத்தபடியாகத்தான் நான் இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். நான் அந்தக் கல்லூரியில் கர்னாடக சங்கீதம் எடுத்திருந்தேன். இசை என்பதன் அடிப்படை ஒன்றாகயிருந்தாலும், அதன் அடுத்தடுத்த பரிமாணங்கள், சாகித்தியங்கள் எனச் சொல்லப்படுபவையெல்லாமே சமஸ்கிருத அடிப்படையில் இருந்தது. ஆனால், எனக்கு சமஸ்கிருத மொழி கற்றுக்கொள்வது சார்ந்து பல சிக்கல்கள் இருந்தன.

சமஸ்கிருத வார்த்தைகள் பலவும் நாம் அன்றாடம் பேசுகிற மொழியின் பயன்பாட்டிற்குள் இருக்கிறது. அப்படியிருந்துமே, சுத்தமான சமஸ்கிருத வார்த்தைகளை உச்சரிப்பதோ, அவற்றைப் படித்துப் புரிந்துகொள்வதோ, சிரமமாக இருந்தது. இருப்பினும், சமஸ்கிருதத்தைப் படிக்க முயற்சித்தேன். மிகக் கடினமாக இருந்தது. தொடர்ந்து கற்க முயற்சித்தும் சிறு நெருடல் இருந்து வந்தது. சமஸ்கிருதத்தை நெருங்கமுடியாத சூழல்தான் உருவாகிக்கொண்டேயிருந்தது. நான் இசையைக் கேட்கக்கூடிய ஆளாக இருக்கிறேன். அந்தக் கடினத்தன்மையை உடைத்து, அதைக் கற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை. கல்லூரியில் வீணை, Vocal எடுத்துப் படித்தேன். வீணை நன்றாக வாசிப்பேன் என்றாலும், Vocal-ஐ பயிற்சி செய்வதில் நிறைய நெருக்கடிகளைச் சந்தித்தேன்.

வீதி நாடகங்களில் பாடுகிற கிராமியப் பாடல்கள், எனக்கு இத்தகைய தடைகளை உருவாக்கியதில்லை. ஆனால், கர்நாடக சங்கீதம் பெரிய வரையறைகளைக் கொண்டிருக்கிறது. வரையறைக்குட்பட்டு பயிற்சி எடுக்கிற உணர்வு ஏற்கனவே என்னிடம் இல்லை. இசையின் கடினத்தன்மையை உடைக்க முடியாமல், நான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன். பின்பு, ஃபைன் ஆர்ட்ஸ்க்கு நகர்ந்தேன். ஃபைன் ஆர்ட்ஸ் எனக்கு மிகவும் நெருக்கமாகயிருந்த துறை. விஷுவல் ஆர்ட்டிற்கு அடிப்படையாக, எனக்குத் தொடர்ச்சியாக வரையத் தெரியும் என்பதும், அதுமட்டுமல்லாமல், கம்யூனிகேட் செய்வதற்கு நெருக்கமான துறையாக இருந்தது. அப்படி ஒரு ஐந்து வருடம் கடந்துபோனது.

பா.ரஞ்சித் அறிமுகம்.

நான் பூனா ஃப்லிம் இன்ஸ்டிட்யூட் படித்து முடித்தபிறகுதான் பா.ரஞ்சித்திற்கும் எனக்கும் அறிமுகம் நிகழ்ந்தது. ரஞ்சித் மெட்ராஸ் ஃபைன் ஆர்ட்ஸ். நான் கும்பகோணம் ஃபைன் ஆர்ட்ஸ். இப்படி ஃபைன் ஆர்ட்ஸ் படிக்கிற நண்பரொருவரின் மூலமாக, ஓவியம் தெரிந்த ஒருவர், திரைப்படக் கல்லூரியில் படிக்கிறார் என்ற விபரம் தெரிந்திருந்தது. அவர் ’அட்டகத்தி’ படம் ஒளிப்பதிவு செய்வதற்காக, என்னை அணுகினார். நான் தெலுங்குப் படம் ஒன்றில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தேன். அதன் கடைசி ஷெட்யூலில் இருந்தேன். பின்பு இருவரும் சந்தித்துப் பேசினோம். அட்டகத்தி படத்திற்குப் பல்வேறு காரணங்களால் என்னால் ஒளிப்பதிவாளராகப் பங்காற்றமுடியவில்லை. எனினும், அன்றிலிருந்து இன்றுவரை எங்களிருவருக்கும் இடையில் நெருக்கமான நட்புறவு தொடர்ச்சியாக இருந்துவருகிறது.


பூனா திரைப்படக் கல்லூரி அனுபவம்

என் செயல்முறையின் தொடர்ச்சியில் நான் அடைந்த இடம்தான் ஒளிப்பதிவு. சினிமாவைத் தொடர்ச்சியாக சிறுவயதிலிருந்து பார்த்து வருகிறோம். ஒரு ஸ்டில் கேமராவோ, மூவி கேமராவோ எப்போதும் கண்ணில் படுகிறது. அத்தகைய சினிமாக்களைப் பார்த்து ரசிக்கிறோம். எனினும், இதிலெல்லாம் ஒளிப்பதிவு என்ற கூறு இருக்கிறது என்று குறிப்பாகப் பார்த்து புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் எனக்கில்லை. எனினும், நான் விஷுவல் ஆர்ட் பயிற்சிக்குள் தொடர்ந்து இருந்துவந்தேன். ஓவியம் என்பது காட்சிவெளி ஊடகம் என்பதால் நான் தொடர்ந்து அதற்குள்ளேயே இருந்திருக்கிறேன். அதில் தொடர்ந்து படிப்படியாக அடுத்தடுத்த முயற்சிகளாக என்னவெல்லாம் செய்வது என்பதுதான் என் தொடர்பயிற்சியாக இருந்தது. இறுதி ஆண்டின்பொழுது, ஓவியத்தின் அடுத்த பகுதிக்குச் செல்ல முடிந்தது. ஓவியம் என்பது அசைவற்றிருக்கிற ஒர் பிரதி. அதற்குள்ளிருக்கும் அசைவினை அனுபவ ரீதியாகத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நம்முடைய அனுபவத்திலிருந்து அதன் அசைவுகளைப் புரிந்துகொள்கிறோம். அப்படித்தான் அதன் இயக்கத்தை உள்வாங்கிக்கொள்கிறோம். ஓவிய வாசிப்பு என்பது நம்முடைய அனுபவத்திலும், நம்முடைய ரிலேட்டிவ் தீயரியிலிருந்தும்தான் புரிந்துகொள்கிறோம். நமக்குப் பரிச்சயமான உருவங்களிலிருந்து இந்த உருவம் என்னவாகயிருக்கிறது? அப்படித்தான் ஒரு நவீன கலையையும், ஓவியத்தையும் புரிந்துகொள்கிறோம். இதுபோல ஒவ்வொரு கலையின் மீதும் பரிச்சயம் அதிகமாகிறது.

சினிமா என்பது தொடர்ந்து இங்கிருக்கக்கூடிய ஊடகம். அந்த ஊடகத்தை அப்போதுதான் திரும்பிப் பார்க்கத் தொன்றியது. அசைவியக்கம் தரக்கூடிய காட்சி பிம்பமாக சினிமா இருக்கிறது. இது ஓவியத்தின் நீட்சியாக அமைகிறது. ஆக, ஒரு ஓவியப்பிரதிக்கு அசைவியக்கம் கொடுத்தால், இன்னும் சிறப்பாக மாறும் என்று நினைத்தேன். ஓவியத்திற்குள் எப்படி சில அசைவியக்கங்களைக் கொண்டுவர முடியும்? என்று சில வீடியோக்களைத் தொடர்ந்து எடுத்துப்பார்த்தேன். அதன் நீட்சியாகத்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்., சினிமாவைப் புரிந்துகொள்ள வேண்டும், ஓவியத்தை, காட்சி ஊடகம் என்ற அடுத்த தளத்தை நோக்கி நகர்த்தவேண்டும் என்று நினைத்துதான் இந்த ஊடகத்தை நோக்கி வந்தேன். பூனா திரைப்படக் கல்லூரிக்குச் செல்லும்பொழுது கூட, இங்கிருக்கிற கமர்சியல் சினிமா தளத்தை நோக்கி நகரவேண்டும் என்றோ, கமர்சியல் சினிமாவில் இயங்கவேண்டும் என்ற எண்ணமோ இல்லை. ஓவியத்தின் நீட்சியாக சினிமாவைப் பார்த்ததால், இதைத் தொழில்நுட்ப ரீதியாக எப்படியெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது? என்று ஆராய்ந்தேன். எப்படி நான் ஓவியத்தைக் கற்றுக்கொள்வதற்காகச் சென்றேனோ! அதேபோல, சினிமாவையும், குறிப்பாக ஒளிப்பதிவையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் திரைப்படக் கல்லூரிக்குச் சென்றேன்.

கல்லூரிக்குள் சென்றபின்பு, அந்தத் துறை சார்ந்த ஈடுபாடு, அதையொட்டி தொடர்ந்து கமர்ஷியலாக இயங்கவேண்டிய சூழல் இருந்ததால், இன்றும் திரைப்படம் சார்ந்து தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

ராஜீவ் ரவி:

நான் படித்த பூனே திரைப்படக் கல்லூரி என்பது கம்யூனிட்டி போன்றது. அது சீனியர் ஜுனியர் என்று மிக நெருக்கமான, உறவைத் தொடர்ந்துகொண்டிருப்பது. இதற்குமுன் பூனே திரைப்படக் கல்லூரியில் படித்த சீனியர்களிடம் முதல் வருடம் படிக்கிற ஜுனியர்கள் பேச முடியும். சந்தேகங்களைக் கேட்டுத் தீர்த்துக்கொள்ள முடியும். அதுபோன்ற உரையாடல் தருணங்களை பூனே திரைப்படக் கல்லூரி தொடர்ந்து பேணிக்காத்து வருகிறது. இப்படியான ஒரு சமூக யதார்த்தம் அங்கு நிலவுகிறது. அப்படியிருக்கையில், ஜூனியர்ஸ் அங்கு படித்துக்கொண்டிருக்கும்பொழுதே, சீனியர்ஸுடன் இணைந்து படங்களில் வேலை செய்துகொண்டிருப்பார்கள். அப்படித்தான் எனக்கு ராஜீவ் ரவி அறிமுகம். அவர் எனக்கு சூப்பர் சீனியர்தான். நான் படிக்கிறபொழுது, அவர் ஏற்கனவே, இண்டஸ்ட்ரியில் நன்கு பரிச்சயமான நபர்.

Figure ராஜீவ் ரவி

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறபொழுது அனுராக் காஷ்யப் இயக்கிய தேவ் டி-யில் ராஜீவ் ரவியுடன் இணைந்து வேலை செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்து, அவருடன் உதவி ஒளிப்பதிவாளராக இணைந்து வேலைசெய்து வந்தேன். வழக்கமாக அவரது பேட்டர்ன் ஆஃப் வொர்க் என்பது, மிக யதார்த்தமான அணுகுமுறையாக இருக்கும். தலையை உடைத்து ஒரு ஷாட்டை உருவாக்க வேண்டும் என்று மெனக்கெடமாட்டார். காட்சியின் இயல்பிலிருந்து, அந்த இயல்பை மறு-உருவாக்கம் செய்யக்கூடிய காட்சியமைப்பை உருவாக்குவது, அவருடைய ஸ்டைல். அந்த ஷாட்கள்தான், கதைக்கு உண்மையானதாக இருக்கும் என்ற அணுகுமுறை ராஜீவ் ரவியிடம் இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனெனில், நானும் அதே அணுகுமுறையிலிருந்துதான் ஒளிப்பதிவை அணுகினேன். பெரிதாக இந்தக் காட்சியில் ஏதாவதொன்றை நிறுவிவிட வேண்டும், பெரிய கற்பிதங்களிலிருந்து ஒரு ஷாட்டை உருவாக்க வேண்டும், என்றெல்லாம் நான் நினைக்கமாட்டேன். எனவே, ராஜீவ் ரவி வேலை செய்வது என் மனதிற்கு மிகவும் நெருக்கமான தியரியாகப் பட்டது.

ராஜீவ் ரவி, வேணு சார் எல்லாம், ஷாட்டில் ஒருவிதமான ஒளியமைப்பைக் கொடுத்தார்கள் என்றால், “ஏன் அந்த லைட்டிங்கை அப்படி அமைத்தீர்கள்?” என்று கேட்கிறபொழுது, ”என் மனதிற்கு இப்படி ஒளியமப்பு செய்தால்தான் நன்றாகயிருக்கும் என்று தோன்றியது, இந்தக் காட்சியில் இப்படியானதொரு லைட்டிங்கை அமைத்தால் சிறப்பாகயிருக்கும் என்று நினைத்ததால், நான் அவ்வாறு செய்தேன், ஒளியமைப்பு உள்ளுணர்விலிருந்து வெளிப்படுகிறது” என்று பதிலளிப்பார்கள். அதுதான் அவர்களது ஸ்டைல். ஆனால், இதற்குள் ரசிகர்கள் பல கற்பிதங்களைக் கற்பித்துக்கொள்வதென்பது, பிற்பாடு நடக்கிறது. ஆனால், ராஜீவ் ரவி போன்றோர் தங்களது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சினிமா உருவாக்கத்தை அணுகினார்கள். அப்படித்தான் தேவ் டி-யில் வேலை செய்கிறபொழுது நான் உணர்ந்தேன்.

வேலை செய்வதன் மூலமாகவே, சீனியர்ஸுடன் ஒரு பழக்கம் ஏற்படுகிறது. இன்ஸ்டிட்யூட்டுடன் நெருக்கமான தொடர்பில் உள்ள சீனியர்களுடன் பழகுகிறோம். எப்பொழுது சீனியர்களுக்கு ஷுட்டிங்க் இல்லாத விடுமுறை நாள் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அவர்கள் FTII-க்கு வந்து தங்கியிருப்பார்கள். அவர்களோடு தொடர்ந்து உரையாட முடியும். அங்கு தொடர்ச்சியாக ஒரு அப்டேட் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். அகடமிக்காக அங்கிருக்கிற சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்வது ஒரு மாணவனின் கடமை என்றாலும், அதைமீறி கற்றுக்கொண்டதைப் பிரயோகித்துப் பார்ப்பது இதே சினிமா இண்டஸ்ட்ரியில் எப்படி இருக்கிறது? என்பதையும் அவர்கள் தொடர்ச்சியாக ஒரு புரிதலின் வாயிலாக நமக்கு உருவாக்கிக் கொண்டேயிருப்பார்கள். எனவே, கல்லூரி முடிந்து வெளியே செல்கிறபொழுது, உங்களுக்கு சினிமா உருவாக்கம், அதில் வேலை செய்யப்போகிறோம் என்ற எந்தவிதமான பயமும் இருக்காது.


திரைப்படத்துறை என்னவாக இருக்கிறது? என்ன மாதிரியான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கிறது? இந்த மீடியத்தில் நீங்கள் என்னென்ன விதமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? போன்றவற்றை படிக்கும் காலத்திலேயே அறிந்துகொள்ள முடியும். பூனே திரைப்படக் கல்லூரியைப் பொறுத்தமட்டில் அங்குள்ள நூலகம், மற்றும் சீனியர்ஸ். சீனியர்ஸ் என்பதை அங்குள்ள ஆசிரியர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். ஏனெனில், பெரும்பாலான சீனியர்ஸ்தான் அங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அதுதான் அங்கு மிகவும் விலைமதிப்பற்றதாகக் கருதப்படுகிற ஒன்று. அதைக் கூடியமட்டிலும் பயன்படுத்திக்கொள்ள முயன்றிருக்கிறேன். ராஜீவ் ரவியுடன் இப்பொழுதும் கூட தொலைபேசியின் வாயிலாக உரையாடி வருகிறேன். ஒளிப்பதிவு சார்ந்து சந்தேகமிருப்பின் இப்பொழுதும் அவர்களுடன் உரையாடிக்கொள்வதும், குழப்பங்களைத் தீர்த்துக்கொள்வதும் நடைபெறுகிறது.

அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்பைப் புரிந்துகொள்வது, அவரது படங்கள் மூலமாகத்தான் நடந்திருக்கிறது. ஏனெனில், அவரது ஒரு படத்தில் (Dev D) வேலை செய்திருக்கிறேன். அடுத்து, இன்ஸ்டிட்யூட்டிற்கு இருமுறை வந்தபொழுது பார்த்திருக்கிறேன். அனுராக் காஷ்யப் மாதிரியான ஆட்கள் இந்தத் திரைத்துறைக்குள் வந்தபின்னால்தான், இந்தி சினிமாவில் சுயாதீன சினிமாவிற்கான ஒரு பெரிய பரந்துபட்ட புரட்சி உருவானது என்றே சொல்லலாம். அது இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. ஒரு சுயாதீன திரைப்பட இயக்குனர் அவரது அணுகுமுறை, அவர் வந்த நேரத்தில் இருந்த மிகப்பெரிய வீச்சு, அது மிகப்பெரிய நன்மை. அவர் முதலில் உருவாக்கிய மூன்று படங்களுமே தடைசெய்யப்பட்டன. அதை மீறியுமே அவர் அடுத்தடுத்து படங்கள் எடுத்து, மக்களின் பார்வைமுன் வைத்துக்கொண்டேதான் இருந்தார். அதற்குக் காரணம் என்னவெனில், அவ்வளவு வலிமையாக, தன்னுடைய கருத்தை இந்தச் சினிமாவிற்குள் பேசவேண்டும் என்ற நிலையிலிருந்தது, நிறைய இளம் இயக்குனர்களுக்கு பெரிய நம்பிக்கையளித்தது.

நேற்று கூட, சினிமா சார்ந்து இயங்குகிற நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், ’ஒழிவுதிவசத்தே களி’ என்ற படம் பார்த்த்து பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது, எனக்குத் தோன்றியது என்னவெனில், இங்கிருக்கிற எல்லா உதவி இயக்குனர்களையும் பார்க்கிறபொழுது, எனக்குத் தெரிந்து 90, 95 சதவீத மக்கள் இந்த சினிமா சார்ந்த கமர்சியலான, வியாபாரத்தன்மையிலான சினிமாவுக்கு அப்பாற்பட்டு, சினிமாவை நேசித்துதான் இந்தச் சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். சினிமாவை வியாபாரமாக அணுகி, இந்தத் துறைக்குள் அடியெடுத்து வைப்பவர்கள் ஐந்து சதவீதத்திற்கும் குறைவானவர்களாகத்தான் இருப்பார்கள். ஒருவேளை அவர்கள் இதே துறையில் வெற்றியும் பெற்றிருக்கலாம். ஆனால் மீதிபேர், சினிமாவை ஒரு உணர்வுத்தளமாகவும், வேறொரு உணர்ச்சிரீதியிலான ஊடகமாகவும் புரிந்துகொண்டு, அந்தப் புரிதலில்தான் தொடர்ந்து இயங்குகிறார்கள்.


ஆக, அந்த நேர்மை எங்கெல்லாம் உடைந்துபோகிறது? இங்கிருக்கிற சினிமா என்ற வியாபாரத் தளத்திற்குள் உங்களை நீங்கள் உட்படுத்துகிறபொழுது, அதில் நீங்கள் வியாபாரத்திற்கான ஒரு ஆளாகத்தான் தயாராகியிருப்பீர்களே தவிர, உங்களுடைய ஒட்டுமொத்த சினிமா சார்ந்த சித்தாந்தமும், இங்கே உடைந்துவிடுகிறது. ஏனெனில், உங்கள் கலைசார்ந்த சித்தாந்தத்தை இந்த வியாபாரத்திற்காக நீங்கள் மடைமாற்ற வேண்டியிருக்கிறது.

மிகச்சிறந்த ஐடியா, சிந்தனை, கதைக்கரு போன்றவற்றை நீங்கள் வைத்திருந்தாலும் கூட, அதை இன்றைக்கு நீங்கள் விற்பனைச் சரக்காக மாற்றக்கூடிய ஒரு ஆளாக மாறியிருப்பீர்கள். அப்படித்தான் இன்றைக்கு இங்கிருக்கிற இயக்குனர்களும், சினிமாவுமே மாறுகிறது. அதில் நீங்கள் எவ்வளவு தூரம் விடாப்பிடியாக, வலிமையாகச் செயலாற்றி உங்களை நீங்களே தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலிருந்துதான், ஒரு சுயாதீன திரைப்படக் கலைஞர் தொடர்ந்து நிற்கிறார். அதில் அனுராக் காஷ்யப் போன்றோரது வருகையானது, சினிமாவில் பெரிய கதவைத் திறந்துவிட்டிருக்கிறது. எப்படி 80, 90களில் ராம் கோபால் வர்மா, மணிரத்னம் மாதிரியான இயக்குனர்கள் ஏற்கனவே இருக்கிற பழைய திரைப்படப் பாதையை விட்டு விலகி, இந்த ஊடகம் சார்ந்து வேறொரு, செயல்முறையை முன்னெடுத்தார்களோ, அதுபோல அனுராக் காஷ்யப் போன்ற ஆட்கள் செயல்படுகிறார்கள். அனுராக் போன்றோர் உருவாக்கிய இந்த துவக்கம்தான், இந்தி சினிமாவின் இன்னொரு முகமாக உருவாகியிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
-தொடரும்