ஃபெர்னாண்டோ சொலானஸின் ’தி செளத்’ (The South) - யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி உரையாடல்

தொகுப்பு: தினேஷ்

படத்தின் தலைப்பு, ’சர்’, அதாவது ஆங்கிலத்தில் தி செளத் (the south). அர்ஜெண்டினிய திரைப்பட இயக்குனர் ஃபெர்னாண்டோ சொலானஸ், இயக்கத்தில் 1988ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர் (sur (தி செளத்)). அரசியல் சர்வாதிகாரம் இருக்கிற அர்ஜென்டினா நாட்டில், ஒருவர் ஐந்து வருடம் சிறையிலிருக்கிறார். சர்வாதிகாரம் முடிகிற காலத்தில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஐந்து வருடகாலம் தன் குடும்பத்தை விட்டு, சுற்றுப்புறத்தை நீங்கி, நண்பர்களைப் பிரிந்து சிறையில் வாடுபவர்கள், மீண்டும் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வரும்போது, அதே குடும்பம், நண்பர்கள், சுற்றத்தாரின் நிலை என்னவானது? என அவருக்கு ஏற்படுகிற அனுபவங்களைத்தான் இப்படம் பேசுகிறது. உரையாடலுக்குள் செல்வோம்.

உலக வரைபடத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் வடக்குப் பகுதியில் இருக்கும். தெற்கில் இந்தியா, சீனா, தென் அமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகள் இருக்கின்றன. எனவே, இந்த சவுத் எனும் தலைப்பு, அரசியல் ரீதியாக மூன்றாம் உலக நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் நடக்கிற நிகழ்வுகளைக் குறிக்கிறது. உலக வரைபடத்தில், தெற்கு நாடுகள் எப்படி விடுதலயடைந்தன? அங்கு நடக்கிற அரசியல் சூழ்நிலை என்ன? அதற்கு மக்களின் எதிர்வினை என்னவாகயிருக்கின்றது? போன்ற விஷயங்களை, இந்தப் படத்தில் வருகிற உரையாடல்களும் உணர்த்துகின்றன. இது ஒன்று.

இரண்டாவதாக, கதைசொல்லல் எனும் அளவில், கதைமாந்தர்கள் சந்திக்கிற இடமாக, ’சவுத்’ என்ற பெயர் கொண்ட, ரெஸ்டாரன்ட் / மது விடுதி இருக்கிறது. காட்சியமைப்பில் ‘சவுத்’ என்பது கதை நிகழ்கிற களத்தினைக் குறிக்கிறது. எனவே, அரசியல் பார்வையில் ’சவுத்’, மூன்றாம் உலக நாடுகளைக் குறிப்பிடுவதாக, அவர்களுடைய அரசியலையும் விடுதலை அமைப்பையும் குறிப்பிடுவதாகவும் உள்ளது.

1983-ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் இராணுவ சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தவுடன் சிறையிலிருந்த பலர் விடுதலை செய்யப்படுகிறார்கள். அதில் ஐந்து வருடகால சிறைத்தண்டனையை அனுபவித்து, விடுதலையான ஒருவர் (Floreal Echegoyen), தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் பார்த்து, அவர்களோடு இணைந்துகொள்ள வருகிறார். இதுதான் உண்மை, யதார்த்தம். மற்றது, ஃப்ளோரெலின் (Floreal Echegoyen) கடந்த காலத்தில் இறந்து போனவர்களெல்லாம் காட்சியில் தோன்றுகிற சர்ரியல் தன்மை. இன்றைக்கு அவர்கள் உயிரோடு இல்லை, ஆனால், கடந்த காலத்தில் அவர்களுடன் தாம் எவ்வாறாக வாழ்ந்தோம், என்ற விஷயத்தை இந்தப் படம் மீள்நோக்கிப் பார்க்கிறது. ஒரு சர்ரியல் உணர்வில், நிகழ் காலத்திற்கும், இறந்த காலத்திற்கும் இடையேயிருக்கிற உறவினை, தொன்மரீதியிலான பார்வையில் பதிவுசெய்கிறது.

உதாரணத்திற்கு இரு குறியீட்டு விஷயங்கள், படம் முழுக்க விரவியிருப்பதைப் பார்க்க முடியும். ஒன்று, ஆவிகள் (இறந்தவர்கள்) திரைமுழுக்க கரும்புகையுடன், அப்படியே நகர்ந்துபோவது, புகைமண்டலம் தெருக்களை நிறைத்துக்கொண்டு இருப்பது, இப்படியாக, புகை நிறைய காட்சிகளில் வருகிறது. இரண்டாவது, காகிதங்கள் தெருக்களிலும், நூலகங்களிலும் பறந்துகொண்டிருக்கும். அலுவலகத்திற்குச் சென்றாலும், வேறு எங்கு சென்றாலும், அங்கு காகிதங்கள் பறந்துகொண்டிருக்கும்.

அந்த கரும்புகையும் ஆவிகளும், ஃப்ளோரெலின் கடந்த காலத்தில் இருந்த நண்பர்கள் மற்றும் அவர்களது நினைவுகளைச் சொல்வதற்கான ஒரு குறியீடு. ஆனால், இந்த பறக்கிற காகிதங்கள், இரு வகையான குறியீட்டை முன்வைக்கின்றன. ஒன்று திரும்பத் திரும்ப விசாரணைக் கைதிகளின் மீதான, விசாரணையை உருவாக்குவதற்காக, அதிகாரத்தில் இருப்போர், மீண்டும் மீண்டும் கோப்புகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொரு அம்சம், இந்த புத்தகத்தை விற்கக்கூடாது, புத்தகங்களைத் தடைசெய்ய வேண்டும், பொதுமக்கள் என யாரும் வாங்கக்கூடாது என்று முடிவெடுக்கின்றனர். எந்தப் புத்தகங்கள் எல்லாம் தடைசெய்யப்பட வேண்டும் என்று தேர்ந்தெடுத்து, அதன் பக்கங்களைக் கிழித்து, அவற்றை எரிக்கிற வேலைகளையும் ஒருபுறம் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே, அந்தக் கட்டடத்திற்குள் பறந்துகொண்டிருக்கிற காகிதங்கள் என்பது, தடைசெய்யப்பட்ட புத்தகங்களில் இருக்கிற காகிதங்களுக்கான குறியீடு. மற்றொன்று, இந்தப் போராளிகளைப் பிடிப்பதற்காக, தங்களை (சர்வாதிகாரத்தை) எதிர்த்துப் பேசுபவர்களை சிறையிலடைப்பதற்காக, உருவாக்கப்பட்ட கோப்புகளின் சிதறல்கள்தான் அந்த காகிதங்கள். அடுத்தது, தெருக்களில் பறக்கிற காகிதங்கள், போராடுகிறவர்கள், போராட்டத்தின் ஒரு வழிமுறையாக துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகிப்பார்கள். அந்தத் துண்டுப் பிரசுரங்கள், அதற்கான காலத்தையும் நேரத்தையும் கடந்துவிட்டன, என்பதை உணர்த்துவதற்காக தெருக்களில் காகிதங்களைப் பறக்க விட்டிருக்கிறார்கள்.


சர்வாதிகாரம் நடந்து முடிந்தபின், வீடும் நகரமும் எப்படி பாலைவனம்போல காட்சியளிக்கின்றன என்பதைக் காட்சி ரூபமாகத் திரையில் காட்டுவதற்காகத்தான், இதுபோன்ற வழிமுறைகளை இயக்குனர் என்ற முறையில் ஃபெர்னாண்டோ சொலானஸ் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவும், காட்சியமைப்பும் அதற்கேற்றபடியே அமைக்கப்பெற்றிருக்கின்றன. லைட்டிங் முழுக்கவே glooming ஆக இருக்கும். ரோபர்ட்டும் (Roberto) ரோஸியும் (Rosi Echegoyen) கடற்கரையோரத்தில் பேசுகிற காட்சி, என ஒரு சில காட்சிகள்தான் யதார்த்தமான ஒளிப்பதிவில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் மற்றது சிறையிலிருந்து வெளிவந்த ஃப்ளோரெல் சாலைகளில் அலைந்து திரிகிற காட்சிகளில், இறந்தவர்களோடு பேசுகிற காட்சிகளில், இரவில் நடக்கிற பெரும்பாலான காட்சிகளில் ஒளி அப்படியே பிரகாசிப்பதுபோல பதிவாகியிருக்கும். இதுதான் அந்த படத்தினுடைய கதை சொல்லல் பாணி மற்றும் குறியீடுகள் சார்ந்த விஷயங்கள். இதை மனதில் வைத்துப் பார்க்கும்போது படம் சொல்ல வருகிற கருத்தை உள்வாங்கிக்கொள்ள எளிதாக இருக்கும்.


இந்தக் கதையைப் புரிந்துகொள்ள அதன், வரலாற்றுப் பின்னணியை அறிந்துகொள்வதும் அவசியம்.

நிச்சயமாக, பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள், ஸ்பானிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற பிறகு, அந்நாடுகள் எல்லாமே ராணுவ சர்வாதிகாரத்தின் பிடிக்குள் சென்றது. காலனியாதிக்கத்திலிருந்து ஸ்பெயினும் பிரிட்டனும் மற்ற நாடுகளான போர்ச்சுகல் முதற்கொண்டு அங்கிருந்து வெளியேறிய பிறகு, அந்நாடுகளில் அமெரிக்கா தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக, அதற்குத் தேவையான எல்லா காரியங்களையும் முன்னெடுத்தது. பின்காலனியத்திற்கு பிற்பாடு வந்த அரசுகள் எல்லாமே ராணுவ சர்வாதிகாரிகளின் ஆட்சியை ஆதரிக்கும்படி அமெரிக்கா பார்த்துக்கொண்டது. இராணுவ சர்வாதிகாரிகள் தொடர்ந்து அந்நாட்டில் இருக்கிற இடதுசாரிகள், பொதுவுடைமைவாதிகள், சமூக சனநாயகவாதிகளை ஒடுக்கினர். இந்த சர்வாதிகார அரசு, கல்லூரி மாணவர்களை கைது செய்தது, மாற்றுக்கருத்து பேசுகிறவர்களை கைது செய்தது, விடுதலை இறையியலை பேசுகிற கத்தோலிக்கர்களை கைது செய்தது.

கண்டம் முழுக்கவுமே நிலவிய இந்த பயங்கரமான ஒடுக்குமுறைகளை, 1959-ல் நடந்த கியூப விடுதலைதான் முடிவுக்குக் கொண்டு வந்தது. கியூப விடுதலையின் தாக்கத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் ஆயுதப் புரட்சி உருவானது. அர்ஜென்டினாவிலும் அந்த ஆயுதக் கிளர்ச்சி உருவானது. அர்ஜெண்டினாவில் இரு விதமான போக்குகள் இருந்தன. ஒன்று பெரோனிசம் (peronism) அதாவது ஜனரஞ்சக அரசியல்.


படத்திலேயே கூட இந்த பெரோனிசம் என்ற வார்த்தை வருகிறது. சார்த்தர், பூக்கோ போன்ற பெயர்கள் சொல்லும் போது, ’பெரோனிசம்’ என்ற வார்த்தை வரும்.

ஆம், நீங்கள் அந்த நூலகக் காட்சியைச் சொல்கிறீர்கள். எந்தப் புத்தகத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்? எந்தப் புத்தகத்தை நாம் தடை செய்ய வேண்டும்? என்று ஆய்வு செய்கிறபோது கிராம்சி, பெரோன், மார்க்சிஸ்டுகள், ஃபூக்கோ, சார்த்தர் போன்ற இடதுசாரிகள், பொதுவுடைமைவாதிகளின் புத்தகங்களை எல்லாம் தடை செய்ய வேண்டும், கிழித்தெறிய வேண்டும் என்பதுபோல பேசுவார்கள். அந்நேரத்தில், பெரோன், பெரோனிசம் என்ற வார்த்தை அடிபடுகிறது.


பெரோனிசம் என்பது சனரஞ்சக அரசியல், வாக்குறுதிகளை அள்ளிவிடுதல், மக்களுக்கு இலவசங்களைக் கொடுப்பது. அது ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் வறிய மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. பெரோன் என்பவர் அர்ஜெண்டினிய நாட்டிலிருந்த தலைவர். அவரது மனைவியின் பெயர் எவிட்டா (Eva Perón / Evita). வறிய குடும்பத்தில் பிறந்தார் எவிட்டா. பாலியல் தொழில் செய்யும் விடுதியிலிருந்தவர். அங்கிருந்து வெளியேறி பின்னர் பெரோனின் காதலியாகி, ஆட்சியதிகாரத்திற்கு வந்து விட்டனர். இருவரும் சேர்ந்து நிறைய சமூகநலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினர். தொழிலாளிகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வறிய மக்களுக்குமான மருத்துவ வசதி, கல்வி உதவி போன்றவைகளை அவர்கள் தாராளமாக வழங்கினர். இதனால் அவர்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு உண்டானது. அதேநேரத்தில், அவர்கள் அமெரிக்கா சார்ந்தொரு விமர்சனப் போக்கையும் கொண்டிருந்தனர். எனவே, எவிட்டாவும், பெரோனும் அடித்தட்டு மக்களின் ஆதரவு பெற்றவர்களாக இருந்தார்கள். இதே காலத்தில் சேகுவேரா இளைஞராக இருக்கிறார். சேகுவேரா அப்போதுதான் புரட்சிகர உணர்வு சார்ந்து படிக்கிறார். அதிக பயணங்களை மேற்கொள்கிறார். மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கத் துவங்குகிறார். எனவே பெரோனிசம் தொடர்பாக, இதுவொரு புரட்சிகர இயக்கம் அல்ல, சீர்திருத்தவாத இயக்கம்தான் என்பது போன்ற மதிப்பீடும் சேகுவேராவிடம் இருந்தது. இந்தக் காலத்திலேயே கூட பெரோன் முதலாளிகளுக்கு எதிராக இருக்கிறார். அதேபோல ஏகபோகவாதிகளுக்கு எதிராகச் செயல்படுகிறார். தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். வறிய மக்களுக்கு ஆதரவாக நிற்கிறார் என்பதனால் இவரை ராணுவ ஆட்சி கவிழ்த்தது. அதனால்தான் பொதுவுடைமைவாதிகள், சமூகச் சனநாயகவாதிகள், இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகளோடு சேர்த்து பெரோனிசத்தையும் அர்ஜெண்டினாவிலிருந்த சர்வாதிகாரிகள் வெறுத்தனர். இதன் காரணமாகத்தான், பூக்கோவுடனும் சார்த்தருடனும் சேர்த்து பெரோனையும் அந்தக் காட்சியில் சொல்கிறார்கள்.

உண்மையில் அந்நாட்டில் பெரோனிசத்தை அழித்துதான் சர்வாதிகாரம் மேலோங்கியது. அந்த சர்வாதிகாரத்திற்கு எதிராகத்தான் பெரோனிஸ்டுகள், சமூக சனநாயகவாதிகள் போராடினார்கள். அந்தப் போராட்டத்தின் பலனாகத்தான் 1983-ல் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தது. சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். அப்படித்தான் பிரதான கதாபாத்திரம் ஃப்ளோரெல் சிறையிலிருந்து வெளியே வருகிறார். 

படத்தின் ஆரம்பத்தில் கவிஞர் என்ற அடையாளத்துடன் க்ளாபர் ரோச்சா (Glauber Rocha) பெயர் வருகிறது. அதேபோல ஃபெர்னாண்டோ சொலானஸ் நிறைய இடங்களில் க்ளாபர் ரோச்சாவின் பெயரை உச்சரிக்கிறார். (அவருடைய நேர்காணல்களிலும் மூன்றாம் சினிமா பற்றிய விவாதங்களிலும் க்ளாபர் ரோச்சாவின்பெயரை குறிப்பிடுகிறார். அவருடைய படங்கள் எந்த ஒரு கோட்பாட்டுக்குள்ளும் இல்லாமல் தனித்தன்மை உடையது என்கிறார்) அவரது படங்களையும் அதிகமாக முன்னிறுத்துகிறார்

க்ளாபர் ரோச்சா புனைவுத் திரைப்படங்களைவிட, அதிகமாக ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறார். கோட்பாட்டு ரீதியில் நிறைய எழுதியிருக்கிறார். மூன்றாம் உலக சினிமா தொடர்பாக சித்தாந்த ரீதியில் நிறைய பேசியும் எழுதியும் வந்தவர். உண்மையிலேயே மூன்றாம் உலக சினிமா குறித்தெல்லாம் பேசுகிறபோது ஆக்டேவியோ ஜெட்டினோ, ஃபெர்னாண்டோ சொலானஸ் எல்லாம் சேர்ந்துதான் The hour of furnaces எடுத்தார்கள். அதற்குப்பிறகு கிதாரஸ் அலியா, இம்பர்பெக்ட் சினிமா குறித்தெல்லாம் பேசுகிறார். அதற்குப் பிறகு மூன்றாம் உலக சினிமா சினிமா The aesthetics of hunger மற்றும் The aesthetics of violence போன்ற விஷயங்களைப் பேசுகிறார்கள். இதன் மிக அடிப்படையான விஷயம் என்னவென்றால், இராணுவ சர்வாதிகாரிகள் மிக வன்முறையான ஆட்சி நடத்திய காலத்தில், அதற்கு எதிராக ஆயுத விடுதலைப் போராட்டம் உக்கிரம் பெற்ற காலகட்டத்தில் உருவான ஒரு கோட்பாடு, கோட்பாட்டாளர்களாகத்தான் இந்தப் படைப்பாளிகளெல்லாம் இருக்கிறார்கள். இவர்கள் எடுத்த பெரும்பாலான படங்கள் ஆவணப்படங்கள்தான். ஃபெர்னாண்டோ சொலானஸும் ஆக்டேவியோ ஜெட்டினோவும் இணைந்து எடுத்த ’ The hour of furnaces (1968)’ ஒரு ஆவணப்படம். இவர்கள் எல்லோருமே ஆரம்பத்தில் மூன்று அல்லது நான்கு ஆவணப்படங்களை எடுத்த பிறகுதான் புனைவு திரைப்படங்கள் எடுக்க வருகிறார்கள். கிதாரஸ் அலியாவை எடுத்துக்கொண்டாலும், ஹோர்ஹே சான்ஹீனஸை (jorge sanjines) எடுத்துக்கொண்டாலும், ஆரம்பத்தில் ஆவணப்படங்கள்தான் எடுத்தனர். பிறகுதான் புனைவுத் திரைப்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள் சார்ந்த விஷயங்களுக்கு வருகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் இணையாக, ஆவணப்பட வகைமையையும் ஒரு இயக்கமாக அவர்கள் தொடர்ந்து முன்னெடுக்கிறார்கள். ஆவணப்படங்கள் எடுப்பவர்களாகவும், எடுக்க ஊக்குவிப்பவர்களாகவும் அதை ஒரு இயக்கமாகவும் தொடர்ந்து நடத்திச் செல்கிறார்கள். மேலும் அவர்கள் எடுக்கிற திரைப்படங்களில் கூட, ஆவணப்படங்களுக்கும் திரைப்படங்களுக்கும் இடையேயான எல்லைகளை உடைப்பதுபோல காட்சி மொழி, சொல்முறை கையாளப்பட்டிருக்கும். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், வரலாறு, யதார்த்தம் என்பதை உணர்விலும் சேர்த்துக் கொடுக்க வேண்டும், அதற்கு அதில் ஆவணப்படத் தன்மை இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு அவர்கள் செயல்பட்டார்கள். ஆகவே ஒரு கண்டத்தின், குறிப்பிட்ட காலகட்டத்தினுடைய விழிப்புணர்வை, வன்முறைக்கு எதிரான ஆயுத விடுதலைப் போராட்டத்தின் உணர்வைச் சொல்வதுதான் மூன்றாம் உலக சினிமாவில் இந்தப் படைப்பாளிகள் எல்லோருடைய அடிப்படையாகவும் இருந்தது.

படத்தில் சிறை செல்கிற ஃப்ளோரியல், அவரது நண்பர்களான எல் நிக்ரோ (El Negro), ராபர்டோ (Roberto) இவர்கள் எல்லோரும் ஒரே தொழிற்சாலையில்தான் வேலை செய்கிறார்கள். ஃப்ளோரியல் விடுதலை செய்யப்பட்ட பிறகு, இறந்து போன எல் நிக்ரோவின் உருவமாகச் சந்திக்கிற ஆவி, ஒவ்வொருவரும் எப்படி இறந்தார்கள்? கைது செய்தபோது என்ன நடந்தது? என்பதையெல்லாம் சொல்லிக் கொண்டே வருகிறது. மனைவி தன்னை ஏமாற்றி விட்டாள், தன்னுடைய மனைவி இன்னொருவரைக் காதலிக்கிறாள் என்பது தெரிந்துதான் ஃப்ளோரியல் வீட்டிற்குச் செல்லாமல், இப்படி சாலைகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார். கதைசொல்லல்முறை சர்ரியல் தன்மைக்குள்ளும் செல்கிறது. வேலை பார்க்கும் இடத்தில் ஏன் அவர்கள் போராடுகிறார்கள்? ஏன் இராணுவத்தினரால் கைது செய்யப்படுகிறார்கள்? ஏன் எல் நீக்ரோ கொல்லப்படுகிறார்?
 

முதலில் எந்தவிதமான எதிர்ப்புணர்வும் இருக்கக்கூடாது என்பதுதான் இராணுவ சர்வாதிகாரத்தின் மிக அடிப்படையான விஷயம். இராணுவம் மக்களிடம் எதிர்பார்ப்பது இதுதான். தான் எது செய்தாலும், தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக்கூடாதஎல் நீக்ரோ படம் முழுவதும் அலைந்து திரிகிற நபராகச் சித்தரிக்கப்படுகிறார். அவர் இரவில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார். எல்லோருடனும் நட்பாக பழகுகிறார். மாட்டு வண்டியில் பயணிக்கிறார். அவரால் துப்புறவுப் பணியாளர்களிடம் நட்பாகப் பேசமுடிகிறது. அப்படி அவர் ஒருநாள் இரவு வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சியைப் பார்க்கிறார். ராணுவத்தினர் ஒரு தெருவில் புகுந்து, அங்கிருக்கிற வீட்டிற்குள் நுழைந்து, உள்ளே இருக்கிற பொருள்கள் அனைத்தையும் வெளியே கொண்டுவந்து போடுகிறார்கள். தொலைக்காட்சி உட்பட எல்லாப் பொருட்களையும் கொள்ளையடிக்கிறார்கள். பொருட்களை வண்டியில் ஏற்றுகின்றனர். வண்டி கிளம்பும் நேரத்தில் கோளாறு ஏற்படுகிறது. ஸ்டார்ட் ஆகவில்லை. அருகில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் எல் நீக்ரோ அங்கிருக்கிறார். எனவே, அவரை அழைத்து வண்டியை சரிபார்க்கச் சொல்கின்றனர். இதுவரையில் அந்த வீட்டில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்வை எல் நீக்ரோ பார்த்துக் கொண்டிருந்தவர். ஆதலால், வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்பதை நக்கலாக அணுகுகிறார்.

நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த எல் நீக்ரோ வண்டியின் கோளாறை சரி செய்யாமல், நக்கலாக பேசுகிறார். இது ராணுவத்தினருக்கு பிடிக்கவில்லை. ஆகவேதான், எல் நீக்ரோவை ராணுவத்தினர் சுட்டுக் கொல்கின்றனர். அவர் இறந்த பிறகு, எல் நீக்ரோவின் மரணத்திற்கு எந்த விதமான எதிர்வினையும் இல்லை.

எல் நீக்ரோ தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர். அவர் இழப்பிற்கு எந்தவிதமான எதிர்வினையும் இல்லாததன் காரணமாகத்தான் ஃப்ளோரியல் தொழிற்சாலை ஊழியர்களுடன் சேர்ந்து வேலை நிறுத்தத்தை அறிவிக்கிறார். இதற்கு அடுத்த காட்சியில்தான் காவலர்கள் அவரைத் துரத்துகின்றனர். அவர் கைது செய்யப்படுகிறார். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நிலையும் என்னவானது என்று காண்பிக்கிறார்கள். போராட்டக்காரர்களைக் கைது செய்து கொண்டுசெல்கிறார்கள். சுவரைப் பார்த்தவாறு நிற்கவைக்கிறார்கள். தயவு தாட்சண்யமின்றி சுட்டுக் கொல்கின்றனர். ஃப்ளோரியலின் நண்பர்களாகயிருந்த பலர் கொல்லப்படுகின்றனர்.

ஃப்ளோரியலுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் இடையே நடக்கிற உரையாடல் ஒன்று படத்தில் உள்ளது. அதில் ஃப்ளோரியலின் அப்பா, “நீ இந்த போராட்டத்தில், ஒற்றுமையில் பங்கு பெறவேண்டும்” என்று சொல்கிறார். ஃப்ளோரியலின் அம்மா என்ன சொல்கிறாரென்றால், ”நீ போராடு, ஒற்றுமையாக இரு, அதுவே நீ வாழ்வதற்கான அடையாளம்” என்கிறார். ஃப்ளோரியல் இதை மறுக்கிறார். ஏனென்றால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட ஃப்ளோரியலுக்கு விருப்பமில்லை. ஆனால், அதே ஃப்ளோரியல்தான், தன் நண்பன் கொல்லப்பட்டபிறகு, தானாகவே அரசியல் விழிப்புணர்வு கொண்ட மனிதனாக உருப்பெறுகிறான். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடத் துவங்குகிறான். ஆகவே, சில காரணங்களினால் அரசியலிலிருந்து விலகியிருப்பவர் கூட, தன்னுடைய உறவு சார்ந்து, தன்னுடைய நட்பு சார்ந்து, எப்படி அரசியல் விழிப்புணர்வடைகிறார், இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக எப்படி அரசியல் மயப்படுத்தப்படுகிறார் என்பதையும் இப்படம் சம அளவில் பேசுகிறது.

 
அப்பா, அம்மா, மகன் மூவரும் பேசிக்கொள்கிற காட்சியை இன்னும் விரிவாகப் பார்க்கலாம். அம்மாவைப் பார்த்து ஃப்ளோரியல் சொல்வது, ”அப்பாவும் போராட்டம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும்போது, நீ அதற்கு கோபப்படுவாயே தவிர, அதை ஒரு நாளும் நீ ஆதரித்தது இல்லை. ஆனால், நான் போராட்டக்களத்திற்குச் செல்கிறபோது மட்டும் ஏன் என்னை ஆதரிக்கிறாய்?” என்று கேட்பார். அதற்கு அம்மாவிடமிருந்து வருகிற மறுமொழி, ”அந்த ஒருவழி மட்டும்தான் நம்மிடம் இருக்கிறது” என்பார். படத்தில் சுட்டிக்காட்ட இது போன்ற உரையாடல்கள் நிறைய இருக்கின்றன. நாம் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும், சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும், இது மட்டுமே நமக்கெதிரே உள்ள ஒரே தீர்வு, அதுவே பெருமிதம் என்பதுபோல அந்த உரையாடல் இருக்கும்.

 அது என்னவென்றால், சர்வாதிகாரத்தின் முன்னால் நமக்கு வேறுவழியில்லை, உண்மையின் பக்கம் நிற்றல், உயிர்வாழ்தல் என்பதே சர்வாதிகாரத்தை எதிர்த்து நிற்பதில்தான் இருக்கிறது. அந்த ஒரு வழிதான் மானுட குலத்தின் பெருமிதமாகவும் இருக்கிறது. சர்வாதிகாரத்திற்கு மத்தியில், ’உயிர்வாழ்தல்’ எதிர்த்து நிற்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. சர்வாதிகார நாட்டில், வேறுபட்ட கருத்துக்களைச் சொல்பவர்கள், பெண்களாக இருந்தாலும், தொழிற்சாலை ஊழியர்களாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் சர்வாதிகாரத்தின் பிடியில் கொல்லப்படுவார்கள். அவர்கள் பார்வையில் பூக்கோ (Michel Foucault) படிக்கிறவன் தீவிரவாதி, சார்த்தர் (jean paul Sartre) படிக்கிறவன் தீவிரவாதி, பாவ்லோ பெரைரா (paulo Freire) படிக்கிறவன் தீவிரவாதி, தத்துவவியலாளர்கள், சிறந்த எழுத்தாளர்கள், அவர்களது புத்தகங்களைப் படிப்பதை தீவிரவாதம் என்று ஒரு அரசு முடிவு செய்கிறது. இதை எதிர்ப்பதுதான் நாம் வாழ்வதற்கான வழி.


அடுத்து மிக முக்கியமான ஒரு காட்சி. ஃப்ளோரியலை விடுதலை செய்வது தொடர்பாக பேசுவதற்கு, ரொபர்டோ செல்லும்போது அவரைக் கேப்டன் பார்க்க வேண்டும் என விரும்புவார். அப்படி அவர்கள் உள்ளே செல்லும்போது, தொற்று பரவிவிடும் என்று ஏதோ ஒரு திரவத்தை பீய்ச்சி அடிப்பார்கள். எனவே, அந்த இடத்தைத் தாண்டிச்செல்லும்போது அவர்கள் தங்கள் மூக்கை பொத்திக்கொண்டுதான் நகர வேண்டியிருக்கிறது. இராணுவத்தின் பார்வையில், புத்தகங்களும், அறிவாளிகளும், தத்துவவியலாளர்களும், போராடுகிறவர்களும் ’தொற்றுநோய்கள் (infection)’ என்று சொல்கிற காட்சி.

எமிலியோவும் ஆமண்டோவும் ஃப்ளோரியலை விடுதலை செய்ய கேப்டனை நேரில் சந்திக்கச் செல்கிறார்கள். புத்தகங்களாலும் கோப்புகளாலும் நிரம்பியிருந்த அலுவலகத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த சர்வாதிகாரிகள், அந்த இடத்தில் விஷக்கிருமிகள் பரவி இருப்பதாகவும் அதை சுத்தம்செய்வதாகச் சொல்லி அங்கிருக்கும் அறிஞர்களின் புத்தகங்களை அப்புறப்படுத்துகிறார்கள்.

 

ர்வாதிகாரிகள் புத்தகங்களையெல்லாம் கிழித்து, குப்பைக்கூளம் போல அந்த இடத்தையே அசுத்தமாக மாற்றி வைத்திருப்பார்கள். எமிலியோ, அந்தப் புத்தகத்திலேயே விழுவார். இந்தக் காட்சி முழுவதுமே பகடியாக இருக்கும்.அலுவலகத்தைக் கைப்பற்றிய சர்வாதிகாரிகள் அங்கு நூலகத்தில் உள்ள புத்தகங்களையும் கோப்புகளையும் முழுவதுமாக அப்புறப்படுத்துகிறார்கள். அவற்றின் தலைப்புகளை உரக்கக் கூறி இவை ஒழுக்ககேடான புத்தகம் எனத் தூக்கியெறிவார்கள். அப்படிக் குவிந்து கிடக்கும் புத்தகத்தில் விழுந்து எமிலியோ எழுந்து செல்லும் காட்சி கேலியாக இருந்தாலும். சவுத் நகரத்தின் மக்கள் பற்றியும் அவர்களின் போராட்டகுணம் பற்றி விவரிப்பதும் ஆழமாக அமைந்திருக்கும்.

சர்வாதிகாரம் குறித்து மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களை ஏற்றுக்கொள்ள முடியாத, எதிர்கொள்ள முடியாத, மறுக்கிற, அவர்களின் மூடத்தனமான நடவடிக்கைகள். இது மிகவும் நையாண்டியான காட்சி. இராணுவத்தினரை, சர்வாதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவது மிக விஸ்தாரமாகக் காட்சியாக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படம், நேரடியிலான பாணியில் அல்லாமல், சர்ரியல் பாணியில் கதை சொல்கிறது. லத்தீன் அமெரிக்கப் படங்களும் சர்ரியலில் எடுக்கப்படுகின்றன. லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் பெரும்பாலும் சர்ரியல், மாய யதார்த்தவாத தன்மையில் எழுதப்படுகின்றன. ஏன்?

 நம் தமிழ்ச்சூழலில் சர்ரியல் படைப்புகள், சர்ரியல் இலக்கியங்கள் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாதவாறு, அதில் ஏதோ அமானுஷ்யமான விஷயங்கள் இருப்பதுபோலவும், சர்ரியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்வது சாதாரண மனிதர்களால் இயலாது என்பது போன்ற கட்டமைப்புகள் தொடர்ந்து கட்டமைக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. லத்தீன் அமெரிக்காவில் சர்ரியல் இலக்கியம் வந்ததற்கான முக்கியக் காரணம், அங்கு ஒரு காலகட்டம் வரையில் பெரும்பாலும் கலைஞர்கள் ஒடுக்குமுறைக்குக் கீழ்தான் வாழவேண்டியிருந்தது. எனவே, அவர்களால் நேரடியாக ஒரு விஷயத்தைச் சொல்ல முடியாது. மக்களுக்கு ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் அரசாங்கம் அந்த எழுத்தைப் புரிந்துகொள்ள முடியாதவாறு, தலையிடாதவாறு, தணிக்கை போன்றவற்றால் தடை செய்ய முடியாதவாறு, ஒரு வடிவத்தைக் கண்டறிய வேண்டும். இது ஒரு முக்கியமான கூறு. அடுத்தது, இந்த சர்ரியல் தன்மை என்பது யதார்த்தத்தில் இருந்தும், உண்மையிலிருந்தும் முற்றிலுமாக துண்டித்துக்கொண்டது அல்ல. இந்தப் படமே அதற்கு உதாரணம். மிக எளிமையான கதை சொல்லல் முறையைப் பின்பற்றி எடுக்கப்பட்ட படம் சர். 

மாய யதார்த்தவாதம் (மேஜிக்கல் ரியலிசம்) ஒரு கண்டத்தில் எப்படி உருவாகிறது? என்று பார்ப்போம். பொதுவாக ஒடுக்குமுறை சம்பந்தமான நிகழ்வுகள், அதைக் குறித்து நேரடியாகச் சொல்லமுடியாத சூழல் இருக்கும்போது, எழுத்தாளர்கள் அதைச் சொல்வதற்கு வேறு விதமான வடிவங்களைக் கண்டுபிடிப்பார்கள். இது ஒரு காரணம். மற்றொரு காரணம், தொன்மங்களிலிருந்து, அதுபோன்ற விஷயங்களைச் சொல்லும்போது, சாதாரண மக்களுக்கு எளிதாக அதைத் தொடர்பாடல் செய்துகொள்ள முடியும். தொன்மங்களில் நிறைய கதைகள் இருக்கும். ஏழு தலை பாம்பு இருக்கும். ஏழு கடலுக்கு அப்பால் அரசனின் உயிர் இருக்கும். இது போன்ற கதைகள் எல்லா தொன்மங்களிலும் இருக்கிறது. அதேபோல லத்தீன் அமெரிக்கா தொன்மையான கலாச்சாரம் கொண்ட நாடு, அதனுடைய காலனிய ஆதிக்க எதிர்ப்பு வீரர்கள் எல்லாம் மிகப்பெரிய சாகசங்களைச் செய்தவர்கள். அவர்கள் நாட்டின் தொன்மங்களாக, அவர்களும் இருக்கிறார்கள். ஆகவே தொன்மங்களைக் கதைசொல்லலுக்குப் பயன்படுத்திக்கொள்வது, நிகழ்காலத்தில் சொல்ல முடியாத விஷயங்களை, தொன்மங்களின் உதவியோடு அந்த வடிவத்திற்கு பயன்படுத்திக்கொள்தல் ஏற்புடையதே. இந்தப் படத்தில் இறந்தவர்கள் மீண்டும் வருகிறார்கள், ஆவிகள் வருகின்றன, அவர்களோடு பேசுகிறார்கள், அவர்களோடு சேர்ந்து தெருக்களில் எல்லா இடங்களிலும் அலைந்து திரிகிறார்கள், ஆனால் இவை எல்லாம் நிகழ்கால யதார்த்தங்களைச் சொல்வதற்காக, கடந்த காலத்தில் ஊடுருவி, நிகழ்காலத்தோடு கடந்தகாலத்தைத் தொடர்பு படுத்துகிறார்கள். இறந்தவர்கள் சம்பந்தமாக சில தொன்மங்களைக்கொண்டு, இறந்துபோனவர்கள் ஆவிகளாக வருவார்கள், இறந்தவர்கள் இரவில் நடமாடுவார்கள், இறந்தவர்கள் அலைந்து திரிவார்கள், இறந்தவர்கள் சுதந்திரமாக இருப்பார்கள், இது போன்ற விஷயங்களை குறிப்பிடுவதற்காகத்தான், இந்தப் படத்தில் ஆவிகள், அதற்குரிய புகைமண்டலம் இவையெல்லாம் வருகின்றன. அப்படி நிகழ்காலத்தையும், கடந்த காலத்தையும் இணைப்பதற்கான, இறந்தவர்களையும் வாழ்ந்தவர்களையும் இணைப்பதற்கான ஒரு வடிவமாகத்தான் இந்தப்படத்தில் சர்ரியல் மற்றும் மாய யதார்த்தவாதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மாய யதார்த்தவாதம் என்பது யதார்த்தத்தின் மீது கட்டப்பட்ட அதி யதார்த்தம். மாறாக யதார்த்தத்திலிருந்து முற்றிலுமாக துண்டித்துக் கொண்ட ஒன்று கிடையாது.

படத்தின் மையப் புள்ளி அன்பு/காதல். இந்தப் படத்தை ஃபெர்னாண்டோ சொலானஸ், நான்கு பிரிவுகளாகப் (At the table of dreams,… ) பிரிக்கிறார். அதன் வழி ’காதலே நித்தியமானது’ என்று சொல்கிறார். இந்த சர்வாதிகாரத்தில் மிகவும் உடைந்து போகிற விஷயம், மிகவும் துயரத்திற்குள்ளாகிற விஷயம், இந்த அன்பு, காதல் போன்றவைதான்.

ஃப்ளோரியலும், ரோஸியும் தம்பதியினர். அதில் ஃப்ளோரியல் சிறை செல்கிறான். ஐந்து வருடங்கள் கழித்து திரும்பி வருகிறான். அந்த ஐந்து வருடங்களும், அவன் மனைவி ரோஸியும் குழந்தையும் தனித்து விடப்படுகிறார்கள். மனைவி, குழந்தை மீதான நேசத்தையும் ஃப்ளோரியலால் விடமுடியவில்லை. அவனும் சிறையில் தனித்து விடப்படுகிறான். ஆனால் இவர்களுக்கிடையில் காதல், துரோகம், இன்னொரு உறவு என்பது போன்ற விஷயங்களும் வருகின்றன.

ரோஸி சொல்வதைக் கவனியுங்கள். இந்த இரண்டு பேரையும் (ஃப்ளோரியல், ரொபர்டோ) என்னால் நேசிக்க முடிகிறது. காதல் என்பது விருப்பம் சார்ந்தது. அந்த விருப்பத்தை நீங்கள் வெளிக்காட்ட வேண்டும். காதலை அண்மையிலிருந்து வெளிக்காட்ட முடிந்ததென்றால், அது இயல்பானது. இதில் துரோகம் போன்ற விஷயங்களை நீதி நெறிமுறைகளோடு பொருத்திப் பார்க்கக்கூடாது. ரோஸி, ரொபர்டோவுடன் காதல் வயப்படுகிறார். ரொபர்டோவும் ஒரு ஜென்டில்மேன். ரோஸிக்கு உதவுகிறான். உண்மையாகவே அவளை நேசிக்கிறான். அதேநேரத்தில் ஃப்ளோரியல் மீதும் நல்ல மரியாதை இருக்கிறது. உண்மையிலேயே ஃப்ளோரியல் விடுதலையாகி வெளிவருகிறான் என்பதனால்தான், ரோஸியை விட்டு ரொபர்டோ நீங்குகிறான்.

தான் சிறைக்குள் இருக்கும்போது இதுபோன்ற உறவு நிகழ்ந்துவிட்டது, என்பது ஃப்ளோரியலுக்கு துரோகம்போல தெரிகிறது. அதற்காக மிகவும் வருத்தப்படுகிறான். ரோஸியுடன் சண்டையிடுகிறான். ஆனால், ஃப்ளோரியலுடன் சிறையறையைப் பகிர்ந்துகொண்டிருக்கிற இன்னொரு கைதி, ” உன் மனைவியைப் பற்றி தவறாக யோசிக்காதே! எப்படி ஒரு பெண்ணால் தனியாக வாழமுடியும்?” என்று சொன்னவுடன்தான் ஃப்ளோரியல் தன் தவறை உணர்கிறான். அதற்குப் பிறகு ஃப்ளோரியல் திட்டவட்டமாக, மனைவியையும் குழந்தையையும் தேடிப்போகிறான். மிக எளிமையான கதையமைப்பு. அரசியலுக்குத் தொடர்பில்லாத ஒருவன். நண்பனின் மரணத்தால் அரசியலில் ஈர்க்கப்படுகிறான். சர்வாதிகாரத்தின் சிறைக்குச் செல்கிறான். ஐந்து வருடங்கள் சிறையில் காலம் துன்பப்படுகிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் மனைவி இன்னொரு உறவிற்குச் செல்கிறாள். இதை முதலில் ஏற்க மறுத்த அவன், ஒருநாள் ‘இது துரோகமில்லை’ என்பதை உணர்ந்துகொண்டு, மனைவியை நோக்கி திரும்பி வருகிறான். இதில் தோழமை உணர்வு மிக அற்புதமாக இழையோடியிருக்கிறது. இதுதான் கதை. ஒரே சமயத்தில் சர்வாதிகாரத்தின் பிடியில் இறந்து போனவர்களின் கடந்தகால, மனோரீதியான வாழ்க்கை என்னவாக இருந்தது? என்பதைப் பற்றி சொல்லிக்கொண்டு போகிறார். அதேநேரத்தில் சர்வாதிகாரத்தின் அரசியல் இடையீட்டு காலத்தில், ஆண் பெண் உறவு, தனிமை எவ்வளவு பெரிய துயரை அவர்களுக்கிடையில் கடத்துகிறது என்ற வாழ்க்கையையும் சொல்கிறது. உண்மையிலேயே இந்தப் பிரச்சனை, லத்தீன் அமெரிக்க திரைப்படங்களில் ஒரு தொடர் நிகழ்வாகவே இருக்கிறது.

இந்த தொடர் நிகழ்வு, தமிழ் சூழலில், தமிழ்த் திரைப்படங்களில் பொருத்திப் பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஃப்ளோரியல் இதற்கு முன்பே, மரியா என்ற பெண்ணுடன் உறவில் இருந்திருப்பான். சிறையில் உடன் இருக்கிற இன்னொருவர்தான் இதைச் சுட்டிக்காட்டி, “ரோஸி செய்தது குற்றமில்லை” என்று சொல்வார். இந்த உரையாடலே, தமிழ் சூழலில் பேசக்கூடாத தலைப்பாக கருதப்படுகிறது. ஃப்ளோரியல் சிறை சென்று, ஐந்து வருடங்கள் கழித்து திரும்பி வருகிறான். ஆனால், திரும்பி வராதவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். இதைவிடக் கொடுமை, அவர்கள் திரும்பி வருவார்களா? இல்லையா? இணையர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியாமலேயே மற்றவர்கள் காலங்கடத்துவது.

இந்த சர்வாதிகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, காணாமல் போனவர்கள் மிகப்பெரிய தொகையில் உள்ளனர். இந்தப் பிரச்சனை ஈழத்திலும் இருக்கிறது. இன்றைக்கும் காணாமல்போனவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்று அவர்களுக்குத் தெரியாது. அதற்காகவே ’பெண்கள் இயக்கம்’ ஒன்று ஈழத்தில் செயல்படுகிறது. அர்ஜென்டினிய திரைப்பட இயக்குனர் மரியா பம்பெர்க் (María Luisa Bemberg) அவரும் இந்த காணாமல் போனவர்கள் பற்றியும், பெண்கள் தனித்து விடப்படுவது பற்றியும் படங்கள் எடுத்திருக்கிறார்.

இன்னொரு அர்ஜெண்டினிய திரைப்படம், வால் ஆஃப் சைலன்ஸ் (A Wall of Silence), இதில் கணவரைக் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். ஆண்டுகள் கடக்கின்றன. அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியாது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பத்து வருடங்களுக்கும் மேலாக அந்தப் பெண் காத்திருக்கிறாள். அதற்குப் பிறகு அவர் திரும்பி வருவாரா? இல்லையா? என்ற நம்பிக்கை குறைய ஆரம்பிக்கிறது. அந்தச் சமயத்தில் இன்னொருவருடன் காதல் கொண்டு, இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கும் வருகிறார்கள். ஒருநாள் மாலைநேரம் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, சிக்னலில் நிற்கையில், மற்றொரு டிராபிக் முனையில், இவளது கணவர் நடந்து போவதுபோல ஒரு தோற்றத்தைப் பார்க்கிறாள். உண்மையிலேயே அவர் தன் கணவரா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால், அந்தத் தோற்றத்தைப் பார்த்தவுடனேயே மிகுந்த குழப்ப நிலைக்குச் செல்கிறாள். கல்யாணம் செய்யலாமா? வேண்டாமா? என்ற தீர்மானத்தை அவளால் எடுக்கமுடியவில்லை. இறுதியில் அந்தப் பெண்ணுக்கு கல்யாணம் நடக்கவும் இல்லை. ஆகவே, இந்த காணாமல் போதல், உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத நிலை, சர்வாதிகாரம் மேலோங்கிய எல்லா நாடுகளிலும் இருக்கிறது.


காஷ்மீரில் பாதி விதவை (half widows) என்ற பதம் உள்ளது. முழு நீள திரைப்படங்களும் ஆவணப்படங்களும் இது குறித்து எடுத்திருக்கிறார்கள். பெண்கள் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் இருக்கிறார்கள். தன் கணவன் எப்படியும் திரும்ப வந்துவிடுவார், அவருக்குத் துரோகம் செய்து விடக்கூடாது என்ற குற்ற உணர்வின் அடிப்படையில், புதிய உறவிற்கு அவர்களால் செல்ல முடியாத நிலை இருக்கிறது. பின்னர், அதே நேரத்தில் தனிமையும் அவர்களை புதிய உறவிற்கு செல்ல உந்துகிறது. இந்த இரண்டு நிலையிலும், எதையும் தேர்ந்தெடுக்க முடியாமல், வாழ்க்கையை முழுமையாக வாழ முடியாத, பாதிக்கப்பட்ட பெண்களாக அவர்கள் உள்ளனர். எல்லா உள்நாட்டுப் போர் நடந்த நாடுகளிலும் இந்நிலைமை பரவலாக உள்ளது. இந்தியாவிலும் இந்த பிரச்சனை உள்ளது. நக்சலைட் எழுச்சி நடந்த காலங்களில் இதே பிரச்சனை மேற்கு வங்கத்தில் இருந்தது. இந்த தனிமை, துயரம், குழப்பமான மனநிலையை கௌதம் கோஷ்(Goutam ghosh) படமான கால்பெலாவில் (Kaalbela 2009) விவாதித்திருக்கிறார். போராடுகிறவர்கள் சிறை சென்று விடுகிறார்கள். அதற்குப் பிறகு குழந்தைகளோடு தனித்து விடப்பட்ட பெண்களின் வாழ்வு என்னவானது? சுதீர் மிஸ்ராவும் (Sudhir Mishra), Hazaaron Khwaishein Aisi என்ற படத்தில் இதுபோன்றதொரு கதைக்களனை, எடுத்துக் கொண்டிருப்பார். நிச்சயமற்ற தன்மையில், பெண்களுக்கு ஏற்படுகிற உறவுகள், அந்த தனிமை சார்ந்த விஷயங்களை மிகுந்த கருணையோடும், புரிந்துணர்வோடும் அணுகவேண்டும் என்பதை உலகளவில் நிறைய திரைப் படைப்பாளிகள் பேசியிருக்கிறார்கள். அப்படியான ஒரு படம்தான் இந்த சர்(சவுத்).

காதலே நம்மை இயங்கவைக்கும் காரணி. ரோஸியின் தந்தை, மீண்டும் மீண்டும் ஒரு பெண்ணிடம் செல்கிறார். ”அந்தப் பெண்ணிடம் என்ன இருக்கிறது? இந்த காதலில் உங்களுக்கு குற்ற உணர்வு இல்லையா?” என்பது போல ரோஸி கேட்கையில், அதற்கு அந்த தந்தை சொல்கிற பதில், ரோஸிக்கும் தெளிவான ஒரு முடிவு எடுக்க உதவியாக இருக்கிறது. அது என்னவென்றால், ”நீ காதலில் இருக்கும்போது குற்றவுணர்வு தேவையில்லை” என்பார். இதைச் சொன்ன பிறகுதான் ரோஸி, ரொபர்டுடன் பழக ஆரம்பிக்கிறார். இதை ஃப்ளோரிலும் ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொள்கிறான். காதல் என்பது சூழ்நிலையைப் பொறுத்தது. வரலாற்று ரீதியிலான நிகழ்வுகளைப் பொறுத்தது. காதல் நித்தியமானது. ஆனால், காதலில் சில நேரம், இதுபோன்ற துயரமான நிகழ்வுகளும் நடந்துவிடுகின்றன. இந்தப் படம், இணையாக ஒரே நேரத்தில், வரலாற்று நிகழ்வுகளையும் பேசியபடி, காதல் சார்ந்த துயர்களையும் பேசுகிறது. மேலும் இதுவொரு சர்ரியல் தன்மை கொண்ட படம். படத்தில் வருகிற 99 சதவீதமான ஆட்கள் இறந்துபோனவர்கள். படத்தினுடைய கதைசொல்லல்பாணியும், பெரும்பாலும் கடந்தகால காட்சிகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், நிகழ்காலத்தின் மீதான கடந்த காலம். நிகழ்காலத்தில் வாழ்கிற மனிதர்களோடு உறவு கொண்டிருக்கிற இறந்த மனிதர்கள். இதுதான் சர்ரியல். இந்த சர்ரியல் மிக எளிமையாகப் புரியும்படி எடுக்கப்பட்டிருக்கிறது.
 

நூலக காட்சி மிக முக்கியமான ஒன்று. அதில் நிறைய பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. ஹிஸ்டரி ஆஃப் செக்ஸுவாலிட்டி (history of sexuality) பூக்கோவின் புத்தகங்கள் ஒழுக்கக்கேடான புத்தகங்கள் என்று தூக்கி எறியப்படுகின்றன, பாவ்லோ பெரைரா, கிராம்சி, சார்த்தர், சிக்மண்ட் பிராய்ட் இவர்கள் எல்லோருடைய புத்தகங்களையும் எரிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு புத்தகங்களின் தலைப்பும் வாசிக்கப்பட்டு குப்பைபோல் தூக்கி வீசப்படுகின்றன. புத்தகங்களின் மீதான வெறுப்புணர்வும், அவற்றைத் தடைசெய்ய வேண்டும் என்ற ஆக்ரோஷமும் ஏன் ?   பாவ்லோ பெரைரா, கிராம்சி, சார்த்தர், சிக்மண்ட் பிராய்ட் இவர்கள் எல்லோருடைய புத்தகங்களையும் எரிக்க வேண்டும், எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்கள். இவையெல்லாம் ஒழுக்கக்கேடானது (immoral) என்கிறார்களே அது ஏன்? 

ர்வாதிகாரத்தின் பிடியில் இருக்கிற நாடுகளில் பெரும்பாலும் இது நடக்கும். அவர்கள், குறிப்பாக கார்ல் மார்க்ஸ் புத்தகங்களை தடை செய்திருக்கிறார்கள். டூ போப்ஸ் (Two Popes) படத்திலும் சார்த்தர், ப்ரெக்ட், கிராம்சி என இம்மூவர் புத்தகங்களையும் தடைசெய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். எங்கெங்கெல்லாம் சர்வாதிகாரம் அதிகமாக இருக்கிறதோ, அந்தந்த இடங்களிலெல்லாம் எதிர்கேள்வி கேட்பவர்கள், விமர்சன உணர்வு கொண்டவர்கள், பகுப்பாய்வு செய்கிறவர்கள், தத்துவ ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என இவர்கள் எல்லோருமே ஆளுகிற வர்க்கத்திற்கு எதிராக இருப்பதால், அவர்களையும் அவர்தம் எழுத்துக்களையும் தடைசெய்ய நினைக்கிறார்கள். இந்தியாவிலும், கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற எழுத்தாளர்களுக்கு என்ன நடந்தது என்று யோசித்துப்பாருங்கள்.


 
புரிகிறது. ஆனால், மனோ பகுப்பாய்வு செய்கிற சிக்மண்ட் ப்ராய்ட் ஏன், இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கிறார்?

 பூக்கோ, ஹிஸ்டரி ஆஃப் செக்ஸுவாலிட்டி பற்றி எழுதினார். சிக்மண்ட் ஃப்ராய்டும் செக்ஸை அடிப்படையாக வைத்து, உளப்பகுப்பாய்வு, மனநல பகுப்பாய்வு போன்ற விஷயங்களை அணுகினார். உண்மையிலேயே மூன்று சிந்தனையாளர்கள், மேற்கத்திய சிந்தனை முறைகளை கடுமையாக விமர்சிக்கிறார்கள். மாற்று சமூக அமைப்பைக் குறித்து மிக ஆழமாக விவாதித்திருக்கிறார்கள். அவர்கள், கார்ல் மார்க்ஸ், ப்ராய்டே மற்றும் நீட்சே. இவர்கள் எல்லாருமே மிக தூய்மைவாத சமூகத்தை விரும்புகிறவர்களுக்கு, பழைமைவாத சமூகத்தை விரும்புகிறவர்களுக்கு, மிகப்பெரிய தடைகளாகத்தான் இருப்பார்கள். எனவே, எழுத்துக்களின் வாயிலாக உயிரோடு இருக்கிற அவர்களை அழிக்க நினைக்கிறார்கள்.
பாவ்லோ பெரைரா, Pedagogy of the Oppressed என்ற புத்தகம் எழுதினார். ஆரம்பக் கல்வியிலிருந்து எப்படி ஒடுக்குமுறைக்கு பணிந்து போவது என்ற விஷயத்தை கல்விக்கூடங்கள் சொல்லித் தருகின்றன என்பது சார்ந்து பெரைரா ஆய்வு செய்கிறார். ஒரு கல்விமுறை எப்படி இருக்க வேண்டும்? அதில் சீர்திருத்தங்கள் என்னென்ன மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒரு புத்தகம் எழுதுகிறார். மேலும், அதற்குப் பிறகு நாடகங்கள் நடத்துவதற்கான மிகப்பெரிய தாக்கமாகவும் அவர் இருக்கிறார். அதைப்போல விடுதலை இறையியல் சார்ந்த விஷயங்கள், நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கான மிகப்பெரிய உந்துசக்தியாகவும் அவர் விளங்குகிறார். முழு லத்தீன் அமெரிக்காவிலும் அந்தப் புத்தகம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்குகிறது.

காலனிய சிந்தனை நீக்கம், பார்ப்பனிய சிந்தனை நீக்கம் என்று சொல்கிறோம். உங்கள் மூளைக்குள் காலனியத்திற்கு அடிபணிந்து போவதுதான், உண்மையான அறிவைக் கொண்டு வருகிறது என்று நினைத்தீர்களேயானால், நீங்கள் ஒருபோதும் காலனியம் தொடர்பான விமர்சன உணர்விற்கு வரவேமாட்டீர்கள். பார்ப்பனியத்திற்கு அடிபணிந்திருந்தால், பார்ப்பனியம் தொடர்பான விமர்சனத்திற்கு வரமாட்டீர்கள். எனவேதான், அடிமைத்தனம், அடிபணிதல், பணிந்து போதல் போன்ற விசயங்களை ஆரம்ப கல்வி நிலையங்களிலிருந்தே மறைமுகமாக திணிக்கிறார்கள். நாட்பட இது வெளிப்படையாகவும் சொல்லித்தரப்படுகிறது. கருத்தியலாகவும் அதைச் சொல்லித்தர முயல்கிறார்கள். உதாரணத்திற்கு, அதை நாம் இந்தியச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். பா.ஜ.க அரசு, பாடப்புத்தகங்களில் என்னென்ன சீர்திருத்தங்களை மேற்கொள்கிறது என்று பார்த்தால் இது எளிதில் புரிந்துவிடும். அம்பேத்கர் சாதி தொடர்பாக சொன்ன விஷயங்கள் அனைத்தையும், குஜராத்தில் இருக்கிற கல்வி நிலையங்களில் பாட புத்தகங்களிலிருந்து நீக்குகிறார்கள். ஆகவே, இதுபோன்ற விஷயங்களுக்கு எதிராகத்தான் Pedagogy of the Oppressed என்ற புத்தகத்தை பாவ்லோ பெரைரா எழுதுகிறார்.

அடுத்து பூக்கோ எழுதிய ஹிஸ்டரி ஆஃப் செக்ஸுவாலிடி. செக்ஸ் தொடர்பான ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். இது மோசம், இது கெட்டது, இது அருவருப்பானது போன்ற விஷயங்கள் பெரும்பாலும் பாலுணர்வு சார்ந்து சொல்லப்படுகிறது. இவையெல்லாம் இயல்பானதல்ல. கட்டமைக்கப்பட்டது. யார் கட்டமைக்கிறார்கள்? இந்த சிந்தனை எப்படி அவர்களிடம் வந்தது? இது போன்ற விஷயங்களை பூக்கோ ஆய்வு செய்தார். இரண்டு மூன்று புத்தகங்கள் அது தொடர்பாக எழுதுகிறார். அதேபோல சிக்மண்ட் ஃப்ராய்ட். மனிதனுடைய பல்வேறு முரண்பாடுகளுக்கு, சிக்கல்களுக்கு, கனவுகளுக்கு, நிறைவேறாத ஆசைகளுக்கு, பாலுணர்வு சார்ந்த அடிப்படைத் தூண்டுதலும் ஒரு காரணமாக இருக்கிறது என்று சொன்னவர். தூய்மைவாதம், பழைமைவாதம் பேசுகிற கண்களுக்கு, நிச்சயமாக சிக்மண்ட் ஃப்ராய்டின் எழுத்துகளை அங்கீகரிக்க முடியாது.

ழான் பால் சார்த்தர், இலக்கிய அர்ப்பணிப்பு (literature commitment) பற்றி எழுதுகிறார். எழுத்தாளன் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும், நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும், சுதந்திரத்தை அவர்கள் தேர்ந்து கொள்ள வேண்டும், அதற்கு அவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் போன்ற விஷயங்களை அவர் பேசுகிறார். லத்தீன் அமெரிக்க இலக்கியங்களைத்தான் உலகின் மிகச் சிறந்த இலக்கியங்கள் என்று அவர் சொல்கிறார். அதேபோல சேகுவேராவை, ’தன் காலத்தினுடைய முழு மனிதன்’ என்று சொன்னவர். இன்னும் சொல்லப்போனால் ஆயுத விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றையும் ஆதரித்தவர். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறார். அவர்களுடைய மியூனிச் தாக்குதலை ஆதரிக்கிறார். உலகத்தினுடைய எல்லா ஆயுத விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்கக் கூடியவராக சார்த்தர் இருக்கிறார்.

மேலாண்மைக்கு எதிரான கலாச்சாரம், அரசியல், திரைப்படம் என பல்வேறு துறை சார்ந்து, மேலாண்மைக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்த்தப்பட வேண்டும் என்று மிகப்பெரிய கலாச்சார தாக்கத்தை கிராம்சி உருவாக்கியிருக்கிறார். ஆகவே, இவர்கள் எல்லோருமே நிகழ்கிற அதிகாரம், அரசியல் சர்வாதிகாரம், இதற்கு எதிரான மாற்றுக் கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து, சுதந்திரம், விடுதலை, அதன் அவசியம் பற்றி பேசினார்கள், எழுதினார்கள். ஆகவே இது சர்வாதிகார ஆட்சிக்கு ஒவ்வாத ஒன்றாக இருப்பதால், ஆட்சியிலிருப்பவர்கள் அதற்காகவே திட்டங்கள் தீட்டியிருக்கிறார்கள். புத்தகங்களைத் தடைசெய்வது, புத்தகங்களை எரிப்பது, புத்தகங்களை அழிப்பது, அதன் பக்கங்களை சிதைப்பது, புத்தகங்களைக் கிழிப்பது இதற்கென்று ஒரு திட்டம். இதைத்தான் இந்தப் படத்தில் மிகவும் விஸ்தாரமாக, பகடியாக, அந்த நூலகக் காட்சியில் சொல்லிக்கொண்டு போகிறார்கள்.

லத்தீன் அமெரிக்க சினிமாவில் The hour of furnaces-ன் தாக்கம்

அர்ஜென்டினாவில் மிக முக்கியமான படங்கள் வெளிவந்திருக்கின்றன. எவிட்டா (Evita-1996) பற்றியும் ஒரு படம் வந்திருக்கிறது. அதில் சேகுவேரா கூட ஒரு கதாபாத்திரமாக வருவார். லத்தீன் அமெரிக்க சினிமாவில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கிய திரைப்படங்கள் என்றால் அது அர்ஜென்டினாவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களைச் சொல்லலாம். ஆக்டேவியோ ஜெட்டினோ ஸ்பெயினைச் சார்ந்தவர். பிந்நாளில் அர்ஜென்டினாவிற்கு வந்து தங்குகிறார். அதற்குப் பிறகுதான் அவர் The hour of furnaces ஆவணப்படத்தை பெர்னாண்டோ சொலானஸுடன் சேர்ந்து எடுக்கிறார். சமீபத்தில் பெர்னாண்டோ சொலானஸ் கடைசியாக மூன்று ஆவணப்படங்கள் எடுத்தார். அந்தப் படங்கள் மூன்றுமே, The hour of furnaces ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகவே இருக்கும். அதே கதை சொல்லல்பாணி, விவரணங்களின் தொகுப்புதான் இதிலும் இருக்கும். சொலானஸ் அண்மையில்தான் (நவம்பர் 6, 2020) கொரோனோ தொற்றினால் காலமானார். இந்த உரையாடலை அவருக்கான அஞ்சலியாகக்கூட எடுத்துக் கொள்ளலாம். சொலானஸ், லத்தீன் அமெரிக்க சினிமாவின் சிந்தனை அமைப்பில் பெரிய மாற்றத்தை உருவாக்கியவர். லத்தீன் அமெரிக்க சினிமாவிலும் உலக சினிமாவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது The hour of furnaces. அந்த ஆவணப்படம், சினிமா வரலாற்றில் ஒரு திருப்புமுனை. ஒரு ஆவணப்படத்தை எப்படி எடுக்க வேண்டும்? எப்படி மக்களுக்கிடையில், தெருக்களில் ஒரு சித்தாந்த ரீதியிலான விவாதத்தைக் கொண்டுசெல்ல வேண்டும், வரலாற்றுச் சந்திப்புகளில் ஒரு கலைஞன் எப்படி குறுக்கீடு செய்வது, என்பதை உலகத்தில் இருக்கிற எல்லா கலைஞர்களுக்கும் சுட்டிக்காட்டிய ஒரு படம் The hour of furnaces. அப்படம் ஒரு மைல்கல்.

படத்தின் முதல் காட்சியே ஒரு லேண்ட்ஸ்கேப்பை எஸ்டாபிளிஷ்ட்மெண்ட் செய்யும் பான் (Pan) ஷாட்டிலிருந்து துவங்குகிறது. ஒரு இசைக் குழுவின் இசையுடன் படம் துவங்குகிறது, குழுவில் ரோஸியின் அப்பா ஒரு இசைக் கருவி வாசிக்கிறார். இந்த இசைக்குழுவின் காட்சிகள் படத்தில் வரும் சர்ரியலிசம் கதை சொல்லலில் பிரதானமாக இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்கவும் இசை முக்கியப்பங்கு வகிக்கிறது. சவுத் என்ற மதுவிடுதியில், ரோஸியின் அப்பா, தான் வைத்திருக்கிற இசைக்கருவி மூலம் காட்சிகளைத் துவங்குகிறார். படம் ஆரம்பிக்கிறது. படம் நெடுகிலும் அவர்கள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறார்கள். ரோஸியின் அப்பாவும் அதே இசைக்கருவியுடன் வருகிறார். அக்கருவி பார்ப்பதற்கே வித்தியாசமாகவும், கவர்ச்சியாகவும் உள்ளது இது ஒருபுறம். அடுத்து, படத்தில் இசை எந்த விதத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?

 அந்த இசைக்கருவியின் பெயர் bandoneon. சவுத் என்ற அந்த ரெஸ்டாரண்டின் முன்னிருந்து அந்தக் கருவியை, அவர் இடையறாது வாசித்துக் கொண்டே இருக்கிறார். எங்கும் அந்தக் கருவியுடன்தான் காட்சி தருகிறார். இரவில் எல்லோரும் சென்றபிறகு, அந்த நகர சதுக்கத்தில், மேசை அமைத்து, அதில் நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாடத் துவங்குகிறார்கள். அவர்கள் அடிக்கடி, பாடுகிற ஒரே பாட்டு காதல், ஏக்கம் சார்ந்ததாகத்தான் இருக்கிறது. ’மரியா’ என்ற பாடல்தான் பாடுகிறார்கள். ”நீ என்னை விட்டு ஏன் பிரிந்து விட்டாய்? நீ எங்கு சென்றிருந்தாலும் திரும்பி வரவேண்டும்” என்பது போன்ற கருப்பொருள் கொண்ட பாடல்களைத்தான் அவர்கள் தொடர்ந்து இசைக்கிறார்கள். இந்தப்பாடல் படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வருகிறது. படம் ஆரம்பமும் அந்தப் பாடலுடன்தான் ஆரம்பிக்கிறது. படத்தின் முடிவும் அந்தப் பாடலுடன்தான் முடிகிறது.

வாழ்க்கையின் மிக அடிப்படையான விஷயம், ஆண் பெண் உறவில் காதலும், அது சம்பந்தமான உறவு சார்ந்த விஷயங்களும்தான். இதில் குற்றவுணர்வு, விசுவாசமாக இருத்தல், எல்லாம் மிகவும் முக்கியமானது என்றுதான் மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் எதிர்பாரா தனிமை விதிக்கப்படுகிறது, தனிமை திணிக்கப்படுகிறது. அந்நேரத்தில் சாய்ந்துகொள்வதற்கான ஒரு தோள் ஆணுக்கும் வேண்டும், பெண்ணுக்கும் வேண்டும். மக்களின் உரிமைகளை மறுக்கிற ஒரு அமைப்பாக சர்வாதிகார அமைப்பு இருக்கிறது. உச்சபட்ச தாராளவாத அமைப்பு, பழைமைவாத அமைப்பு, மாற்றுக் கருத்துகளை மறுக்கிற ஒரு அமைப்பு நமக்கு மேலே இருக்கிறது, என்பதுதான் படத்தில் சம அளவில் சொல்லப்படுகிறது. அடிப்படையாக மனிதர்களின் உறவில் இருக்கிற உன்னதத்தை சொல்லிக் கொண்டிருக்கையில், அதே நேரத்தில் இது போன்ற உறவைச் சிதைக்கிற, ஒரு அம்சமாக சர்வாதிகார அமைப்பு இருக்கிறது என்பதையும் இப்படம் எடுத்துரைக்கிறது.