ஆஷிக் அபு பேட்டி: திரைப்பட இயக்குனர், பத்திரிக்கையாளரின் வேலையைச் செய்யமுடியாது…

வைரஸ் திரைப்பட இயக்குனர் ஆஷிக் அபு பேட்டி

இவரது சமகால திரைப்பட இயக்குனரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரியைப் போலவே, ஆஷிக் அபுவும், ஒரே வகையிலான திரைப்பட ஜானரை இரண்டு முறை முயற்சித்ததில்லை.

இருவருமே ஒருமுறை தான் எடுத்த ஜானரை, மீண்டும் தொடாமல் புதிய ஒன்றை நோக்கி நகர்கின்றனர். திரைப்படம் சார்ந்து அவர் மேற்கொள்கிற அனைத்து முயற்சிகளும் நிர்ணயித்த குறிக்கோளை எட்டவில்லை என்றாலும், அவர் எடுக்கிற ஒவ்வொரு படங்களிலும் திரைப்படம் சார்ந்த அவரது நுணுக்கங்களும், கைவினைகளும் வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. அவரது சமீபத்திய திரைப்படமான வைரஸினால், இதுவரை மலையாள சினிமாவில் சாத்தியப்படாதது, எனும் அவப்பெயரைத் துடைத்திருக்கிறார் – உயிர்பிழைத்திருக்கக் கூடிய போராட்டத்தை த்ரில்லர் வகை பாணியில் கதை சொன்னதன்மூலம், சிறந்த சர்வதேச திரைப்படங்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிற படங்களின் வரிசையில் இணையாக இதுவும் சேர்கிறது. 

ஆஷிக் அபுவோடு உரையாடியதன் பகுதிகள்:

Film-Companion-Film-virus-screening--aashiq-abu--Lead-image-1

’வைரஸ்’ படத்திற்கான தயாரிப்பு வேலைகள் எப்போது தொடங்கப்பட்டது, நெபா வைரஸ் பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு முன்பா அல்லது பின்பா?
முன்பே துவங்கிவிட்டோம். முஹ்சின் என்ற இப்படத்தின் இணை – எழுத்தாளரின் மருத்துவ நண்பர் மற்றும் இன்ன பிற ஆதாரங்களின் மூலமாகப் கதைக்குத் தேவையான தரவுகளைச் சேகரிக்கத் துவங்கினோம். பின்னர் கூடுதல் உதவியை நாடி, ஷைலஜா எனும் ஆசிரியரையும் பார்க்கச் சென்றோம். நாங்கள் பல மருத்துவர்களிடமிருந்தும் உதவியை
நாடினோம், அவர்களில் சிலர் வெளியில் தெரியாவிட்டாலும், கதைக்கான தகவல்களைத் தந்ததில் முக்கியப் பங்கு வகித்தனர்.

இந்தக் கருப்பொருளை எவ்வாறு அணுகினீர்கள்?

யதார்த்தத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணமிருந்தது, ஆனால் அதேநேரத்தில் சினிமாவிற்குண்டான அடுக்கையும் அதில் பிணைத்திருக்க வேண்டும். எனவே, படத்திற்கான திரைக்கதையானது குழந்தைகள் உட்பட அனைத்துவகையான பார்வையாளர்களையும் ஈர்க்கும் விதத்தில், அருமையான வடிவத்தில் இருக்க வேண்டும், இதனால் நமது விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ சமூகத்தின் வலிமை மற்றும் புத்திசாலித்தனம் பற்றி அவர்களுக்கு விளங்க வேண்டும். 

படத்தில் உள்ள ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு குறிப்பிட்ட பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, அவர்களும் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள அந்தப் பணியைச் சரியாகச் செய்கிறார்கள், இந்தத் தேர்வுகளை நீங்கள் எவ்வாறு செய்தீர்கள்?

அந்தத் தேர்வுகள் யாவும், அவர்களின் நிஜ வாழ்க்கையில் அவர்களது ஆளுமைகளின் பிரதிபலிப்பின்படியே உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு, வைராலஜிஸ்ட்டாக (டாக்டர். அருண்குமாரை அடிப்படையாகக் கொண்டு) நடிப்பதற்கு, நாங்கள் குஞ்சாக்க்கோ போபானைத் தேர்ந்தெடுத்தோம், ஏனெனில், குடும்பப் பார்வையாளர்களிடம் பிரபலமானவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், பொதுவாக அவர் அனைவரின் தலைக்குமேலாகத் தொங்கிக்கொண்டிருக்கிற சிக்கலான தகவல்களையும் முன்வைக்க முடியும். இது திரையில் யதார்த்தமான ஒன்றாகத் தோன்றக்கூடும், மற்றும் இது உடனடியாகத் தெரியாமல் போகலாம், ஆனால், சக்கோச்சன் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு, அதை நம்பிக்கையுடன், அனைவரும் நம்பும் வகையில் முன்வைக்க நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

Virus movie: Nipah heroes who inspired lead roles in Aashiq Abu ...

நடிகர் இந்திரஜித்தை படத்தில் நகைச்சுவைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று ஆரம்பத்திலேயே திட்டமிடப்பட்டிருந்ததா?

இல்லவேயில்லை. இது அப்போது ஏற்பட்ட சூழ்நிலை சார்ந்த விஷயம். இந்திரஜித் மிகவும் சுவாரஸ்யமான நடிகர்; அவருடன் வேலை செய்வது மிகவும் ஆர்வமளிக்கக்கூடியதாக இருக்கும். சக்கோச்சனைப் போலவே, விஷயங்களை நம்பத்தகுந்த வகையில் முன்வைக்கும் திறன் அத்தகைய நடிப்பாற்றல் அவருக்கும் உண்டு. படத்தில் அவர் ஒரு சாமான்ய மனிதராகவும், எளிதில் நம்மால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்த ஒரு நபராகவும் அவர் இருக்கவேண்டியிருந்தது. படத்தில் நடித்த மற்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் இது பொருந்தும். நிஜ வாழ்க்கையில் இவையனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டியதில்லை, ஆனால் சினிமா தருகிற சுதந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, மனிதத்தை உணர்த்த அத்தகைய கதாபாத்திரங்களைப் படைத்துள்ளோம். 

இது சிறியதாக இருந்தாலும், அதற்குரிய போதுமான தகவல்களை மட்டும் காட்டியுள்ளீர்கள்…

ஆமாம், ஏனென்றால் படம் பார்க்கிற பார்வையாளர்களும் இந்தக் கதை குறித்துச் சிந்திக்க அவர்களுக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, ஓர் படத்தைப் பார்ப்பதென்பது, மூளைக்கும் ஒரு பயிற்சியாக இருக்க வேண்டும். பல கதாபாத்திரங்களைக் கொண்டு இந்த அளவிலான ஒரு திரைக்கதையை உருவாக்குவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. முடிவில், இவையனைத்துமே கதை சொல்லலுக்கு உதவுகின்றன. ஆனால், எழுத்தாளர்கள் ஒரு திறம்வாய்ந்த பணியைச் செய்ய முடிந்தது.

நேரியல் பாணியில் அல்லாத, அதாவது நான் - லீனியர் பாணியிலான கதைசொல்லலைப் பயன்படுத்துவதற்கான யோசனை, இந்தக் கதைக்கான எழுத்துப் பணியிலேயே தோன்றிய ஒன்றா? அல்லது படத்தொகுப்பின்பொழுது முடிவுசெய்தீர்களா?

எழுதுமொழுதே இதைத் தீர்மானித்திருந்தேன். படத்தில் பார்வைக்குக் கவர்ச்சியாக இருக்கமுடியாத ஒரு விஷயத்தை நாங்கள் கையாள்கிறோம். எனவே, இது சுத்தமான ஆவணப்படம்போலத் தெரியாமல் இருப்பதற்காக, சில சினிமாட்டிக் விஷயங்கள் மற்றும் கதையில் நாடகீயத் தருணங்களையும் உருவாக்குகிறோம். இது 2019-இல் உருவாக்கப்பட்ட படம், இந்தப் பட உருவாக்கத்தில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். பார்வையாளர்கள், ஒரு சினிமா அனுபவத்தை அனுபவிப்போம் என்று நம்புகிறார்கள், அதைச் செய்வதற்காக, முன் தயாரிப்பிலேயே சில விவரங்களை நாங்கள் உருவாக்கினோம். 

வைரஸைப் பற்றிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், இதுவொரு பிரச்ச்சாரப் படமாகத் தெரியவில்லை.

நம்முடையது ஒரு உணர்வுள்ள சமூகம், ஏனென்றால் அவர்களுக்கு எது என்னவென்று தெரியும். எனவே எனது படத்தில் பிரச்சாரக் கொடிகளை அசைப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை. ஒருவேளை, நான் அவ்வாறு செய்தால், அது பார்வையாளர்களை அவமதிப்பாகவே தோன்றுகிறது. ஒரு அரசியல் கட்சி உயிர்பிழைக்க என்னிடமிருந்து ஒரு பிரச்சாரப் படம் தேவை என்று நான் நம்பவில்லை (சிரிக்கிறார்). ஒருவேளை மக்கள் அதை அப்படியே பார்க்க விரும்பினாலும், அதைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன். எனது இடது அரசியல் படத்தில் மிகவும் தெளிவாக உள்ளது. அதேநேரம், இந்தப் படம் மனிதகுலத்தின் அரசியல், அன்பு மற்றும் இதுபோன்ற இன்னும் பலவற்றைப் பற்றியது. எனது அரசியல் நிலைப்பாட்டை மாற்ற எந்தக் காரணமும் இல்லை. 

’மாயநதி’யைப் போலவே, வைரஸும் அதன் கதாபாத்திரங்களைப் பற்றி அதிகம் உணர்வுவயப்படுவதில்லை…

நாங்கள் அனைத்து வகையான பார்வையாளர்களையும் கையாள்வதால், அவர்கள் மீது உணர்ச்சிகளைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது அனைவருக்கும் வேலை செய்யாது. இன்று, பெரும்பாலான மக்கள் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள், அந்த வகையான பார்வையாளர்களுக்காகத்தான் நான் திரைப்படத்தை எடுத்து வருகிறேன். சில விஷயங்களை ஏன் இந்தக் குறிப்பிட்ட வழியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு அவர்கள் புத்திசாலிகள். இந்தப் படம் எல்லாவகையான விவாதங்களையும் தூண்டும் என்பதை நாங்கள் அறிவோம். எங்களுக்கிருந்த மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மாநில மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் எங்களுக்கு வழங்கிய ஆவணங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் குறித்து எந்தவிதத் தவறும் செய்துவிடக் கூடாது என்பதே!

படத்தில் உண்மைகள் துல்லியத்தன்மையுடன் முன்வைக்கப்படும்வரை, கதாபாத்திரங்களை அதிக சினிமாட்டிக் தன்மையுடையதாக மாற்றுவது சரியா?

பாருங்கள், எந்தவொரு படத்தையும் நூறு சதவீதம் யதார்த்தமான ஒன்றாக உருவாக்க முடியாது. சினிமாவைப் பொறுத்தவரை, ‘யதார்த்தவாதம்’ என்பது எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டிய ஒரு சொல். சினிமா என்பது நம்பகத்தன்மையைக் கோரக்கூடிய கலை வடிவம்: இங்கு நீங்கள் செயற்கை யதார்த்தத்தைத்தான் உருவாக்குகிறீர்கள். கலைஞர்களாகிய நாம், நம் பார்வையாளர்களில் பெரும்பாலோர் அறிந்திருக்கும் சினிமா மொழி மற்றும் இலக்கணம் மூலம் நம் பார்வையாளர்களைப் படத்திற்குள் ஈடுபடச் செய்வது நமது கடமையாகும். 

மாறாக, ஒரு திரைப்பட இயக்குனர், ஒரு பத்திரிக்கையாளரின் வேலையைச் செய்யமுடியாது. கதாபாத்திரங்களை ஒரு சுவாரஸ்யமான முறையில் வடிவமைக்கவும் முன்வைக்கவும் நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும், ஏனெனில் இந்தப் படங்களைப் பார்க்க நிறைய பணம் செலவழித்து வரும் மக்களின் நேரத்தை நாம் மதிக்க வேண்டும். அவர்களுக்கு ஆவணப்படங்கள்கூட நாடகமாக்கப்பட்ட தரம்தான். ஒரு ஆவணப்படத்தில் இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், அதை எப்படி ‘யதார்த்தமானது’ என்று அழைக்கமுடியும்?

Virus' Movie Review: This Medical Thriller Shouldn't Be Missed ...

இந்தப் படத்தில் ஒத்திசைவு ஒலி (sync sound)யைப் பயன்படுத்தியிருப்பது பற்றிச் சொல்லமுடியுமா?

இது உரையாடல் பகுதி அதிகம் நிறைந்த படம் என்பதால், வரிகளைப் பின்னர் டப்பிங் செய்வது ஒரு நல்ல யோசனையாக இருக்காது என்று நாங்கள் உணர்ந்தோம். குரல் பதிவு சரியானதாக இருக்கவேண்டும். இயற்கையாகவே, இந்த முடிவுக்கு ஏற்பத்தான் படப்பிடிப்புத் தளங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. அஜயன் அடாத் ஒலி வடிவமைப்பில் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார் என்றே நான் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒத்திசைவு ஒலிதான் எதிர்காலம். நாம் அனைவரும் உலக சினிமாவுக்கு ஆளாகிறோம், சர்வதேச சினிமாவுடன் நாம் போட்டியிட விரும்பினால், நமது ஆட்டத்தை இன்னும் துரிதப்படுத்த வேண்டும். 

ஏன் இரண்டு ஒளிப்பதிவாளர்களைப் பயன்படுத்தினீர்கள்?

ராஜீவ் ரவி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று நான் விரும்பினேன், ஏனெனில் இது அவரது திறமைக்குத் தகுதியானது. இருப்பினும், அவர் ’துரமுகத்(Thuramukham)’தை இயக்குவதற்குத் தயாராகிவருவதால், பட உருவாக்கத்தில் எழுபத்தைந்து சதவீதம் மட்டுமே அவரால் பங்காற்ற முடிந்தது. இதன் காரணமாகத்தான் ஷைஜூ காலித்தை மீதமுள்ள காட்சிகளைப் படம்பிடித்துத் தர அழைத்தேன்.

ஷகாரியா நடித்திருக்கும் அந்த அழகிய கசப்பான இறுதி ஷாட் – யார் அதைச் செய்தார்கள்?

அது ஷைஜூ.

அறிவியல் புனைகதை திரைப்படம் ஒன்றை உங்களிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாமா?

இல்லை. வைரஸ் பட உருவாக்கமே, ஒரு மருத்துவ படிப்பிற்கான கடினமான நுழைவுத்தேர்வுக்குப் படித்ததுபோல இருந்தது (சிரிக்கிறார்). எனவே அடுத்ததாக ஒரு இலகுவான மற்றும் ஒரு படத்தை இயக்க விரும்புகிறேன். செளபின் ஷகீருடன் அடுத்த படத்திற்கான திட்டம் உள்ளது. 
நன்றி: சினிமா எக்ஸ்பிரஸ்