ஹெய்லே கெரீமா : இழந்த வேர்களும் எதிர்கால உலகும்

-யமுனா ராஜேந்திரன்

1995 செப்டம்பர் 7 இரவு லண்டன் நேஷனல் பிலிம் தியேட்டரில் ஹெய்லே கெரீமா வந்திருந்தார். 50 வயது கோபக்கார மூத்த சகோதரர். ஹெய்லே கெரீமா ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் 1946ஆம் ஆண்டு பிறந்தார். பத்துக் குழந்தைகளில் நாலாவது இவர். தந்தை எழுத்தாளர். தாய் ஆசிரியை. எத்தியோப்பியா, காலனியாதிக்க நுகத்தடியின் கீழ் அழுத்திய மூன்றாமுலக நாடுகளிலொன்று. இத்தாலியர்களால் பலமுறை அடிமைப்படுத்தப்பட்ட நாடு. பல்வேறு கால கட்டங்களில் ஆங்கில பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளால் சூறையாடப்பட்ட நாடு. கெரீமா இருவிதமான ஒடுக்குமுறைகளை நேரில் கண்டவர். ஒன்று - காலனியாதிக்கம் - சொந்த எத்தியோப்பியாவில். மற்றையது - நிறவெறி - புலம் பெயர்ந்த அமெரிக்காவில் கெரீமா 1967 ஆண்டு நாடகம் பயில்வதற்காக சிகாக்கோ வந்தார். நேரடியான நிறவெறி ஒடுக்குமுறையின் நுண்செயலை அவர் அங்குதான் அனுபவம் கொண்டார். 


1971/76 கால கட்டத்தில் சினிமா பயின்றார். தனது அடையாளம் என்பது வெள்ளை ஐரோப்பிய கலாச்சாரத்துக்கு தனது மூளையை அடகு வைப்பதால் வருவதில்லை என்பதை உடனேயே உணர்ந்து கொண்ட கெரீமா, தனது கலாச்சாரத்தின் வேர்களில் தன் இழந்த மானுட வடிவத்தை மீட்டுக் கொண்டு எதிர்காலம் நோக்கிய மனிதனாக தன்னைக் கட்மைத்துக் கொள்வதே இன்றைய தேவை எனக் கருதினார். இதுவரைத்திய அவரது 9 திரைப்படங்களும் செயல்படும் பிரதேசம் அதுதான். ஆப்பிரிக்க அரசுகளின் பின்காலனித்துவ அறிவிலிகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் கெரீமா, இந்தப் புதிய மூளை அடிமைகள் மக்களது பிரச்சினைகளை சரியாகக் கையாளவில்லையானால் எதிர்த்திசையில் அடிப்படைவாதம் எழும் என்கிறார். அதுதான் சோமலியா அல்ஜீரியா என்கிறார். தனது வேர்களை மீட்டுக் கொள்வதும் மக்களின் பிரச்சினைகளை ஆப்பிரிக்க மையநோக்கில் தீர்ப்பதும்தான் கெரீமாவின் படைப்புத்தளம். ஹெய்லே கெரீமா தன்னை மார்க்சிஸ்ட் என்கிறார். அவர் இதுவரை கொடுத்த 9 திரைப்படங்களில் எதுவுமே தனது சொந்த நாடான எத்தியோப்பியாவில் திரையிடப்பட முடியவில்லை. அனைத்துப் படங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. 

ஹெய்லே கெரிமாவின் 8 திரைப்படங்கள் செப்டம்பர் மாதம் லண்டன் விழாவில் திரையிடப்பட்டது:

1. Hour glass /13 நிமிடம் (1971)
2. Child of Resistance /47 நிமிடம் (1972)
3. Bush Mama/ 98 நிமிடம் (1976)
4. Harvest 3000 years /150 நிமிடம் (1976)
5. Willington 10-USA 10,000 /120 நிமிடம் (1978)
6. Ashes Embers /120 நிமிடம் (1981)
7. After Winter: Sterling Brown /60 நிமிடம் (1985)
8. Sankofa /140 நிமிடம் (1993)

இங்கு திரையிடப்படாத ஒரேபடம் பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக 1994ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Imperfect Journey. மன்னன் ஹெய்லே ஸலாஸியின் ஒடுக்குமுறை ஆட்சி வீழ்ந்தபின் ஹெய்லே எத்தியோப்பியாவுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட முறையிலான சொந்த வேர்களைத் தேடிய பயணம் அப்படம்.
இப்படங்களில் Harvest 3000 years - 3000 ஆண்டு அறுவடை - ஆப்பிரிக்க திரைக்காவியங்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. Sankofa - வேர்களில் மீட்டு - எதிர்காலம் நோக்கி - திரைப்படம் தனது கெரீமாவின் 15 வருடக் கனவு எத்தியோப்பிவுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட முறையிலான சொந்த வேர்களைத் தேடியப் பயணம் அப்படம். இப்படங்களில் Harvest 3000 years - 3000 ஆண்டு அறுவடை - ஆப்பிரிக்க திரைக்காவியங்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. Sankofa-வேர்களை மீட்டு - எதிர்காலம் நோக்கி - திரைப்படம் தனது கெரீமாவின் 15 வருடக் கனவு என்கிறார். உலகின் பல்வேறு நகரங்களில் வருடக்கணக்கில் ஆப்பிரிக்க மக்கள் பார்ப்பதற்காக கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கும் படம் இது. முழு ஆப்பிரிக்க மக்களின் அடிமை வாழ்வு பற்றிய கூட்டு நினைவு (Collective memory) இப்படம்.

கெரீமாவின் படைப்புக்களைச் சரியாக விளங்கிக் கொள்வதற்காக அவர் பிறந்த நாடான எத்தியோப்பியாவில் நிலவிய அரசியல்/ சமூக/ பொருளாதார/ கலாச்சார காரணிகளை நாம் அறிவது முக்கியம். அதைப்போலவே 1967ஆம் ஆண்டுக்குப்பின் அமெரிக்காவில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும் அறிவது அவசியம். ஹெய்லே கெரீமா, கிளாபர் ரோச்சா, ஸொலனா போன்றவர்கள் பேசுகிற Imperfect cinema வடிவத்தை நம்புகிறவர். ஹாலிவுட் சினிமா Perfect cinema ஒழுங்குக்குள் அமைந்த செதுக்கியெடுக்கப்பட்ட வடிவம் என்று சொல்லப்படும் வெள்ளை மதிப்பீடுகள்/ஒழுங்குகள் நிறைந்தது ஹாலிவுட் சினிமா. இதற்கு எதிரான வெள்ளை மதிப்பீடுகள்/ஒழுங்குகள் சிதறடிக்கப்பட்ட மூன்றாமுலக போராட்ட சினிமாதான் Imperfect cinema காலனித்துவம் ஏகாதிபத்திய உலக ஒழுங்கு சினிமாவுக்கு எதிரான, ஒடுக்கப்பட்ட போராடும், மக்களின் எதிர்ஒழுங்கு (Imperfect) படங்கள்தான் அவரின் படங்கள். கெரீமாவின் படங்கள் அநேகமாக ஹாலிவுட் சினிமாக்கள் பேசிய அனைத்து விவரங்களையும் பேசியது. நிறவெறி, வியட்நாம், பாலுறவு, பெண்விடுதலை என எல்லாம் பேசியது. ஆனால் ஹாலிவுட் சினிமாவுக்கு எதிர்த்திசையில் பேசியது.


அவரின் படைப்புகள் தேடிச்செல்லும் உலகைச் சரியாகப் புரிந்து கொள்ள, அன்றன்று நிலவிய படைப்பாதார புற உலக நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொள்வது, அவர் படைப்புலகில் நழைவதற்கு நமக்கு உதவியாக இருக்கும். எதியோப்பியா 4 கோடியே 75 இலட்சம் மக்களைக் கொண்ட ஆப்பிரிக்க நாடு. சூடான், சோமாலியா, உகாண்டா, யேமன், சவூதி அரேபியா, கென்யா நாடுகளை அண்டை நாடுகளாகக் கொண்டது. பெரும்பாலான நிலப்பரப்பு மலைப்பிரதேசம். விவசாயமும் கால்நடை வளர்ப்பும் பிரதான தொழில்கள். அம்ஹாரா (Amhara) கல்லா (Galla) என பிரதான இரு இனக்குழுக்கள். அதுவன்றி எரித்ரியா, டைக்ரே, சோமாலி, தங்காலி என இனக் குழுக்களும் (ethnic groups) உண்டு. பெரும்பாலான எதியோப்பியர்கள் காப்டிக் கிறித்தவர்கள். எரித்ரியாகள் முஸ்லீம்கள் அல்லது கத்தோலிக்கர்கள். மரபு ரீதியிலான ஆப்பிரிக்க மதங்கள் மிகக் குறைந்த அளவிலேயே பின்பற்றப்படுகிறது.

1975ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாள் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது. அன்றுதான் மன்னர் ஸலாசி பதவியிலிருந்து வீசப்பட்டார். அதன்பின் எதியோப்பியன் தொழிலாளர் கட்சிதான் (Ethiopian Workers Party) ஆட்சியில் இருக்கிறது. 1990 ஆம் ஆண்டில் இக்கட்சி டெமாக்ரடிக் எதியோப்பியன் யுனிட்டி பார்ட்டி என தன்பெயரை மாற்றிக் கொண்டது. பல கட்சிகள் இல்லை. ஆனால் ஒரு கட்சி அமைப்புக்குள்ளேயே எதிர்ப்புகளை பேசித் தீர்த்துக் கொள்ளக்கூடிய அமைப்பு என்று யுனிட்டி பார்ட்டி சொல்கிறது. கலோனல் மெங்கிஸ்தி இப்போது இதன் தலைவர். நாட்டின் தலைவரும் அவரே.

செலாஸியின் உள்நாட்டுக் கொள்கை, நிலப் பிரபுக்களை ஆதரித்த பொருளாதார அரசியல். இவ்வேளை எரித்ரிய / நைஜீரிய விடுதலைப் போராளிகள், கியூப உதவியுடன் போராடி வந்தார்கள். வெளிநாட்டுக் கொள்கையில் காலனிய எதிர்ப்பு / கூட்டுச்சேராமை/ ஆப்பிரிக்க ஒற்றுமை போன்றவற்றை வலியுறுத்தி வந்தது. இஸ்ரேலுடன் உறவு கொண்டிருந்தார். நிலவுடமையின் 80 சதம் ஊழல் வர்க்கத்திடமும் ஆச்சார மடாலயத்திடமும் குவிந்திருந்தது. 1974ஆம் ஆண்டு ஸலாசியின் அரசு வேலைநிறுத்தங்கள் மாணவர் உதவியால் ராணுவப் புரட்சி மூலம் வீழ்ந்தது. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ராணுவ கவிழ்ப்புகள். 1977ஆம் ஆண்டு கலோனல் மெங்கிஸ்தி பதவியைக் கைப்பற்றினார். தற்போது அவரே பதவியில் இருக்கிறார். இவர் ரஷ்ய கியூபாவுடன் ராணுவ பொருளாதார உதவி பெற்று எரித்ய டைகிரிய விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கினார். மிகச் சமீபத்தில் எரித்ரிய விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது. இன்றைய நிலையில் எதியோப்பியாவின் நிலப் பிரபுத்துவ பொருளாதாரக் கட்டமைப்பில் பெரிய மாற்றமில்லை. சோவியத் கியூபா உதவிகள் பெரும்பாலும் ராணுவ ரீதியிலானவை. 1990ஆம் ஆண்டு சோவியத் கியூபா படைகள் எதியோப்பியாவிலிருந்து விலகின. ஆளும் கட்சி தனது போலி சோசலிச நிலைப்பாட்டை விட்டுவிட்டு எல்லா மக்களுக்குமான கட்சி என தன்னை அறிவித்திருக்கிறது.

தொல்பொருள் ஆய்வுகளின்படி 4000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்து வந்தனர். எதியோப்பியா என்றால் கரிந்த முகம் (burnt face) என்று பொருள். 15ஆம் நூற்றாண்டு மத்திவரை பூர்வீக ஆப்பிரிக்கக் கலாச்சாரத்துக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்துக்குமான முரண்பாடுகள், போர்கள் நிகழ்ந்தன. 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் நுழைவு, போர்ச்சுக்கல் காப்டிக் கிறிஸ்தவம் மூலம் நிகழ்கிறது. அதன்பின் முஸ்லீம்/கிறிஸ்தவ மதங்களுக்கு இடையிலான போர்க்களமாகிறது எதியோப்பியா. அராபிய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான போர்க்களம். அடிமை வியாபாரம் கலாச்சார ஆதிக்கம் இரண்டுக்கும் இடையில் சிறைப்பட்டு அழிந்தனர் ஆப்பிரிக்க மக்கள். 18/19ஆம் நூற்றாண்டுகளில் இத்தாலிய காலனியாதிக்கம் அதிகாரம் பெறுகிறது. 1935ஆம் ஆண்டு முஸோலினி நாட்டை முழுக்க ஆக்ரமித்தான். 1948ஆம் ஆண்டு முஸோலினியின் வீழ்ச்சியின் பின் இங்கிலாந்து 1948 வரை 7 ஆண்டுகள் எதியோப்பியாவை காலனியாக ஆண்டது.

1948ஆம் ஆண்டு மன்னர் ஸலாசி அரியணைக்கு வருகிறார். நிலப்பிரபுத்துவம், வறட்சி, பிரதானமாக ஏற்றுமதியை நோக்கம் கொண்ட காப்பி (Coffee) உற்பத்தி, கிறிஸ்தவ மத ஆதிக்கம், காலனிய அறிவுஜீவிகள். 1974 முதல் இன்றுவரை ராணுவ அதிகாரத்தின் கீழ்-ஒற்றைக்கட்சி ஆட்சியின் கீழ் வகிக்கிறது எதியோப்பியா. இன்றைய நிலையில் 12 லட்சம் எதியோப்பிய அகதிகள் சூடான் நாட்டில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக அரசியலுக்காகவும் பலகட்சி ஆட்சி முறைக்காகவும் அம்மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

மூவாயிரம் ஆண்டு அறுவடை

3000 ஆண்டு அறுவடை என்பதன் அர்த்தம் 3000 ஆண்டு நிலப்பிரப்புத்துவத்தின் கதை என்பதுதான். எவனோ அறுவடைசெய்ய, உழைக்காத எவனோ உட்கார்ந்து சாப்பிடுவதைப் பற்றிய கதைதான் இது. 3000 ஆண்டுகளாகத் தொடரும் கதை. இப்படம் 1976ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு 1974ஆம் ஆண்டு ஜூலை/ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது. 1974ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் ஸலாசியின் ஆட்சி ராணுவப் புரட்சியால் தூக்கியெறியப்படுகிறது. படப்பிடிப்பு 3 வாரங்கள் நடைபெறுகிறது. இந்த 3 வாரங்களில் இப்படப்பிடிப்பு நடைபெற்றிருக்காவிட்டால் இப்படம் உருவாக்கப்படுவதற்கான சாத்தியமே இருந்திருக்காது என்கிறார் கெரீமா. அந்த 3 வாரங்களும் குழப்பமான கொந்தளிப்பான காலகட்டம். ஸெலாஸியின் எதிர்காலமும் கேள்விக்குறி, ராணுவத்திடமும் தெளிவான திட்டமில்லை. 


கெரீமாவிடம் விவாதிக்க அல்லது இடையூறு செய்ய இருவருக்குமே நேரமில்லை. ஜூலை மாதத்துக்கு முன்போ செப்டம்பர் மாதத்துக்குப் பின்போ இப்படம் உருவாக்குவதற்கான சாத்தியமேயில்லை. ஏனெனில் இரு அரசுகளுமே ஒடுக்குமுறை அரசுகள்.

மேலாக 1976ஆம் ஆண்டுதான் கெரீமாவின் சினிமாப் படிப்பின் இறுதியாண்டு. அவர் படித்து முடித்து தீஸிஸ் சமர்ப்பித்து அவர் கிராஜுவேஸன் படம் ஒப்படைத்துவிட்டால் பிற்பாடு படப்பிடிப்பு சாதனங்கள் கிடைக்காது. அதற்குமுன் படம் எடுத்துவிட வேண்டும். நண்பர்களின் ஒத்துழைப்பு, காசு, உபகரணம், அரசியல் சூழல் என அனைத்தும் சேர்ந்திருந்த காலம் அதுதான். 20,000 டாலர்கள்தான் செலவு. எவருக்கும் சம்பளமில்லை. சிறுகச் சிறுக பல்வேறு வேலைபார்த்துச் சேர்த்த காசு. முதலில் கெரீமா எதியோப்பியா போனார். பிற்பாடு உபகரணங்களோடு மூன்று பேர் சேர்ந்து கொண்டார்கள். படப்பிடிப்பு முடிந்ததும் மறுபடி எல்லோரும் பிரிந்து அமெரிக்காவில் சந்தித்தார்கள். எப்போதும் உயிராபத்து இருந்தது. எந்தச் சலனமும் காட்டாமல் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அமெரிக்கா வந்த கெரிமாவுக்கு படத்தின் எடிட்டிங்குக்கு மட்டும் இரண்டு வருடங்கள் பிடித்தது. 1976ஆம் ஆண்டு படம் வெளியானது. படத்தின் நீளம் 21/2 மணி நேரம்.

படம் கெரீமாவின் பிறந்த இடமான கோந்தர் (Gonder) பிரதேசத்துக்கு அருகிலான கிராமம். படம் விவசாயிகள் பற்றியது. விவசாயக் குடும்பம் ஒன்றுக்கும் நிலப்பிரபுவுக்கும் இடையிலான உறவு பற்றியது. விவசாயக் குடும்பத்தின் தலைவர் நிஜத்தில் கெரீமாவின் மாமா. படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்கள் அவர் தந்தையுடையவை. இசை உள்ளூர் மக்களுடையது. படத்தின் நாயகன் என்று எவருமில்லை. எவரைச் சுற்றியும் கதை நிகழவில்லை. பிரச்சினையைச் சுற்றியும் விலகியும் நிகழ்வது போலுள்ளது. ஆனால் இயங்கும் மனிதர்கள் எல்லோருமே எதையோ நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.


படத்தில் கதை என்று ஒன்றுமில்லை. கதை சிதறடிக்கப்படுகிறது. பாத்திரங்கள் சிதறிப்போகிறார்கள். காட்சியமைப்புகள், இசைத் தாரைகள் சிதறிப்போகிறது. மனிதர்கள் இருக்கிறார்கள். வாழ்வு இருக்கிறது. வெள்ளம் வருகிறது. கனவுகள் வந்து போகிறது. தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. வாழ்வு மாறிக் கொண்டேயிருக்கிறது. படத்தில் வரும் எல்லா முகங்களுக்கும் அடையாளம் இருக்கிறது. குடித்துவிட்டுப் பாடும் பாடலில் கம்பி வாத்தியத்தில் பிரத்தியேகத்தன்மை இருக்கிறது.

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பம். விவசாயி, அவர் மனைவி. 15 வயதில் ஒரு பையன், 12 வயதில் ஒரு பெண். மூத்த மனுசி பாட்டி. நிலப்பிரபு. அவருக்கு செருப்பாகத் தேயும் வேலைக்காரன். வன்முறைக்கு ஒரு அடியாள். இவர்களன்றி எந்த மரபுக்கும், எந்த வரையறைக்கும் கட்டுப்படாத அன்னியமான பிரக்ஞைபூர்வமான கலகக்காரன் ஒருவன். அவன் அங்கீகரிக்கப்பட்ட ஒடுக்குமுறை சமூகத்துக்கு, அடங்கிப் போகும் சமூகத்தைப் பொறுத்து பைத்தியக்காரன். மனம் பேதலித்தவன். இதுவன்றி மாடுகள், ராணுவ பூட்சுகள், வாகனங்கள், காலனியவாதிகளால் கட்டப்பட்ட பாலம், நுகத்தடி, வறண்ட பரந்த பூமி, வறண்ட வானம், திமிர்த்தனமான குரல்கள்.

விவசாயக் குடும்பக் காட்சிகள். ஆங்காங்கே திட்டுத்திட்டாக இருக்கும் மாட்டுச்சாணத்தை ஓடியோடி பொறுக்கி சிறுமி கூடையில் போட்டுக் கொண்டுவந்து தர, அம்மா வறட்டி தட்டிக் காயப் போடுகிறாள். பல்வேறு செடிசொடிகள் மண்டிக் கிடக்கிறது. இவைகளுக்கிடையில் முகமெல்லாம் சுருக்கம் விழ பொக்கைவாய் நசித்தபடி கால் நீட்டி எதையோ முணுமுணுத்தபடி பாட்டி. இரவுக் குடிசை. மூன்று பெரிய கற்கள். சுள்ளி விறகு. சடசடவென எரியும் தீ. அடுப்பின் மீது விஸ்தாரமான இரும்புக்கல் காய்கிறது. மாவு குழைந்து இரும்புக் கல்லில் பரப்பி ரொட்டி சுடுகிறாள் அம்மா. ராகி ரொட்டி. அருகில் விவசாயி. பக்கத்தில் மகன். நெருங்கி அமர்ந்தபடி பாட்டி. பாட்டியின் மடியில் பேத்தி.


பேத்திக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அம்மாவுக்கு சொல்லத் தொடங்குகிறாள். அம்மாவுக்கு உழைத்த சோர்வு. கனவுகளைக் கேட்கிற நிலையிலோ மகளுக்கு அதன் அர்த்தம் சொல்கிற நிலையிலோ அவள் இல்லை. பாட்டி கேட்பாள். கனவும் கதையும் வரலாறும் ஆயிரம் ஆண்டு துக்கமும் தெய்வங்களும் அவளுக்குள் உறங்குகிறது. அவள் ஜீவநதி. நுங்கும் நுரையும் அமைதியும் யாகமுமாக வழியும் அன்புத்தாரை அம்மூதாட்டி. அவள் பேத்தியைக் கதை சொல்ல உற்சாகமூட்டுகிறாள்.

கனவு இதுதான். சரசரவென உயர்ந்த தானிய அடர்த்தி. ஹோவென துக்கம் மீறிடும் சத்தம். நுகத்தடி. நுகத்தடியின் ஒருபக்கம் அம்மா. மறுபக்கம் அப்பா இடையில் சிலவேளை சிறுமியின் அண்ணன். சிலவேளை சிறுமி. பேய் ஊளை. பல்வேறு சந்தர்ப்பங்களில் குனிந்த இருளடர்ந்த அடையாளமற்ற நுகத்தடியின் கீழான முகங்கள். மங்கலாகி மேலாக மேலாகப் பார்த்து வேதனை முனகல் மட்டும் உரத்துக் கேட்கிறது. மாடுகளுக்குப் பதில் மனிதர்கள். உழவு நடக்கிறது. வறண்ட புழுதியில் தள்ளாடும் கால்கள். வலுத்துக் கொண்டே போகும் பயங்கரப் பேரோசை. இதன் அர்த்தம் என்ன?

தம் வாழ்நிலையைப் பொறுத்து அக்குழந்தையின் தாய்க்கும் தகப்பனுக்கும் இது கனவு அல்ல, பாட்டிக்குள் கூட இது கனவுகானென அக்குழந்தைக்குச் சொல்ல முடிவதில்லை. நிஜத்தைத்தான் அக்குழந்தை கனவாகக் கருதிக் கொண்டிருக்கிறது என அக்குழந்தைக்கு விளக்க முடியுமா என்ன? கதை சிலவேளை சிறுமி பற்றியது. சிறுமி ஆற்று வெள்ளத்தில் மூழ்கி செத்துப் போனபின்பு சிறுவன் பற்றியது கதை. பில்லிதாண்டு விளையாட்டுக்கு சிறுமியைச் சேர்க்க மாட்டேன் என்கிறார்கள் சிறுவர்கள். அவளுக்குப் பிடிவாதம். விளையாடியாடி ஜெயித்தே ஆகவேண்டுமென பிடிவாதம். ஜெயித்தவர்கள் தோற்றவர்கள் கழுத்தின் இருபக்கமும் அமர்ந்து வர மூட்டை தூக்க வேண்டும். சிறுமி ஜெயித்து திரையின் உச்சி முட்டமுட்ட சிறுவர்களின் கழுத்தில் ஏறி கம்பீரமாக பவனி வருகிறாள். கலகக்காரக் குழந்தை.

சிறுமியும் அக்கிராமத்துச் சிறுவர் சிலரும் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுமிக்குக் கனவு வருகிறது. சிறுமி சொல்லிக் கொள்கிறாள்: ‘நான் அப்படி இருக்க மாட்டேன். அடங்கிப்போக மாட்டேன்’. சிறுவன் ஓடோடி வந்து தூரத்தில் பெய்த மழை வெள்ளித்தினிடையில் ஓடையில் மாடு நிற்பதாகச் சொல்கிறான். சிறுமி பதறுகிறாள். ‘எனக்கு என்ன ஆகப் போகிறதோ?’ எனக் கதறியபடி ஓடுகிறாள். கொஞ்சம் வெள்ளம். மாட்டை விரட்டுகிறாள். மாடு நிலம் விவசாயிகள் எல்லோரும் நிலப்பிரபுவுக்குச் சொந்தம். மாடு போனால் சிறுமியின் வாழ்வே பிரச்சினையாகி விடும். வெள்ளம் அதிகமாகி விட்டது. சிறுமி விரட்டிக் கொண்டேயிருக்கிறாள். வெள்ளம் சிறுமியைப் புரட்டி இழுத்துக் கொண்டு போகிறது. அவளைக் காணவில்லை.

சிறுவர்களும் சிறுமியின் அண்ணனும் கரையோரமாக பற்றைகளைத் தாண்டியோடிக் கொண்டேயிருக்கிறார்கள். அவளைக் கண்டு விட்டார்கள். அதோ அவள் உடல். துணிகள் முட்களில் சிக்கி விறகுகள் பற்றைகளில் சிக்கிய அவள் உடல். தாய் மாரில் அடித்தபடி குழறியபடி ஓடிவருகிறாள். தகப்பன் அரற்றியபடி பாட்டி புலப்பியபடி அக்கடும்பமே மயானமாகிறது. தாய்க்கு மொட்டையடிக்கப் படுகிறது. துருத்திக் கொண்டு நிற்கும் மயிர்க்கற்றைகள். அழுகை. நிலப்பிரபுவின் வீடு. மொட்டை வழுக்கை, பாலைவனம் மாதிரி வழுக்கை. நிலத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களை அதட்டிக் கொண்டே இருக்கிறான். அவன் குழந்தைகளுக்கு பசுமாட்டுப் பால் கொடுத்தாயிற்றா என கூலிக்காரனை அதட்டுகிறான்.

இங்கு காமெரா விமர்சகன். காமெரா ஒரு ஆயுதம். பிரக்கையுள்ள கலைஞனின் சிந்தனையின் நீட்சிதான் காமெரா. 

மறுபடியும் முடி முளைக்கும்படி மயிர்க்கற்றைகளுடன் விவசாயத் தாயின் தலை. எதிர்காலம் உண்டு அவர்களுக்கு. பாலைவனம் போல மொட்டை மண்டை நிலப்பிரபுவுக்கு. முடியே முளைக்காது. அவன் உயிரே முளைக்காது. பட்டுப் போனவன் அவன். பட்டுப்போனது அவன் வாழ்வு.
கெரீமா சொல்கிறார்: “பெரும்பாலும் ஹாலிவுட் படங்களில் அல்லது ஆப்பிரிக்கா மற்றும் மூன்றாம் உலக நாடுகளைப் பற்றி எடுக்கப்பட்ட மேற்கத்திய படங்களில் விவசாயிகளையும்/கறுப்பு மக்களையும் மேல்கோண நோக்கிலிருந்தபடி (Top shot) கூனிக் குறுகியவர்களாக/ கீழானவர்களாக/ காமெரா மேலிருந்து பார்க்கும்.

நிலப்பிரபுக்களை/எஜமானர்களை கீழிருந்து பார்க்கும் கோணத்தில் (Low angle) கம்பீரமாக நிமிர்ந்தபடி திரை முழுக்க நிறைத்தபடி காட்டும். என் படத்தில் விவசாயிகள் பற்றிய காட்சி எல்லாமுமே அவர்களைப் பெருமைப்படுத்தும்படி திரை நிறைந்தவர்களாக கம்பீரமானவர்களாக உழைப்புப் பெருமிதம் மிக்கவர்களாகவே காட்டும். நிலப்பிரபு சம்பந்தமான காட்சிகளில் எப்போதுமே காமெரா மேலிருந்து அவனைக் கீழாகவே பார்க்கும்” (தமிழ் இந்தியச் சூழலில் பாரதிராஜா/தேவர் மகன்/நாட்டாமை மற்றும் கவுண்டர் படங்களில் காமெரா செயல்படும் விதத்தைப் பாருங்கள். விவசாயிகள் சம்பந்தப்பட்ட காட்சி எப்போதுமே மேல்கோணக் காட்சிதான். எஜமானர்களை காமெரா எப்போதுமே பிரமித்தபடி கூனிக்குறுகித்தான் பார்க்கும். விவசாயிகள் பற்றிய படமானால் கூட நிலப்பிரபுக்களைச் சுற்றித்தான் கதை பண்ணப்பட்டிருக்கும். ஷியாம் பெனகலின் நிஷாந்த் படமும் அடூர் கோபாலகிருஷ்ணனின் விதேயன் போன்ற தீவிரநிலைப் படங்கள் கூட இந்த விஷச் சூழலில் இருந்து தப்ப முடியவில்லை.). கெரீமாவின் வாழ்நிலை அனுபவமும் தத்துவ தரிசனமும்தான் இத்தகைய சிந்தனையோடான சினிமாவை உருவாக்குகிறது.

சிறுவன் படிக்க வேண்டுமென்று பைத்தியக்காரன் சொல்கிறான். அடிமை சமூகத்துக்குத்தான் அவன் புத்தி பேதலித்தவன் நமக்கில்லை. அவனது வாசம் ஒரு பாலத்தின் கீழ்தான். பூட்டும் கதவும் இல்லாத சுதந்திர வீடு. ரொட்டி சுடுவான். கடுங்காப்பி வைப்பான். எப்போதும் அரசியல் பேசிக்கொண்டே இருப்பான். அடிஸ் அபாபாவில் இருக்கும் மன்னர் பற்றி, வறட்சி பற்றி, இயந்திரக் காடுகள் பற்றி, ஊழல் பற்றி தன்னிடமிருந்து நிலத்தைப் பறித்துக் கொண்ட தேவாலயம் பற்றி நிலப்பிரபுக்கள் பற்றி பேசிக்கொண்டேயிருப்பான். எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் பன்றி என்ற நிலப்பிரவை முகத்துக்கு நேர் எதிரே ஏசுவான். உழைத்துவிட்டு நாம் ஏன் பட்டினி கிடக்க வேண்டும் என்பான். விளைந்தவை எங்கே போகிறது எனக் கேட்பான். சிறுவன் அவனுக்கு நண்பன்.

சிறுமி செத்தபின்பும் உழவு நடக்கிறது. பட்சிகள் பறந்து போகிறது. பஸ், லாரிகள் சப்தமிட்டபடி விரைகிறது. தானியங்கள் விளைகிறது. அறுவடை நாளன்று நிலப்பிரபு வந்துவிடுகிறான். அறுவடையான அனைத்தும் வண்டியில் ஏற்றப்படுகிறது. தமக்கு உணவு கேட்கிறார்கள் விவசாயிகள். நிலப்பிரபு தடியை ஆட்டியபடி அதட்டுகிறான். பிற்பாடு வீட்டுக்கு வந்து கொஞ்சம் வாங்கிப் போங்கள் என்கிறான். மயங்கியபடி அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். சிறுவன் சாட்சியாயிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பைத்தியக்காரன் வருகிறான். பன்றியே கொஞ்சம் அவர்களுக்குத் தானியம் கொடு என்கிறான். பைத்தியங்களிடம் நான் பேசுவதில்லை நாயே போ என்கிறான் நிலப்பிரபு. பைத்தியக்காரனுக்கு ஆத்திரம் வருகிறது. ஊன்றுகோலைப் பிடுங்கி நிலப்பிரபுவை துரத்தி துரத்தி அடிக்கிறான். நிலப்பிரபு புழுதியில் விழுந்து சப்தமிட்டு எழுந்து ஓடுகிறான். அடி அடிமேல் அடி. செத்தே போகிறான் நிலப்பிரபு. சகபிரபுக்கள் ஓடிவருகிறார்கள். விவசாயிகளும் ஓடி வருகிறார்கள். ‘பைத்தியக்காரன் எஜமானனைக் கொன்று விட்டான்! திரை முழுக்க லப்டப் சப்தம். போலீஸ் கால்கள் அணிவகுத்தபடி திரைமுழுக்க பூட்ஸ் கால்கள். கவச வாகனங்கள் வருகிறது. ஆயுதமேந்திய போலீஸ் வருகிறது. விவசாயிகள் செத்து விழுந்தபோது வராத போலீஸ். தனது வர்க்கத்தைக் காப்பாற்ற வந்துவிட்டது. பைத்தியம் தனது பாலத்து வீட்டில் ஒளிந்து கொண்டது.

‘துப்பாக்கி வைத்திருப்பான். சுட்டு விடுவான்’ போக வேண்டாம் என போலீசுக்கு எச்சரிக்கை. இரவு விழுகிறது. இரவு முழுக்க ஆயுதப் போலீஸ் காவல். விடிகிறது. போலீஸ் பாலத்துக்குக் கீழே இறங்குகிறது. பைத்தியக்காரன் சரணடைய மாட்டான். அவன் செய்த செயல் சிந்தனாபூர்வமானது. தன் விதியை தானே எழுதுவான். அவன் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கி விட்டான்.

தானியங்கள் தமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள். இல்லை, அரசுக்குச் சொந்தம். போலீஸ் அரசு வாகனங்களில் தானியத்தை ஏற்ற வண்டிகள் கிளம்புகிறது. சிறுவன் சாட்சி. எல்லாவற்றுக்கும் சாட்சி. இறுதிக் காட்சியில் சிறுவன் அடிஸ் அபாபாவுக்குப் போகும் லாரி ஒன்றின் பின் தொற்றுகிறான். படம் நிற்கிறது.


வேர்களை மீட்டு எதிர்காலம் நோக்கி


ஸங்கோபா படம் 1993ஆம் ஆண்டு வெளியானது. கானா (Ghana) அரசாங்கமும் லண்டன் சேனல் நான்கு தொலைக்காட்சியும் ஜெர்மன்/அமெரிக்க சுதந்திர தொலைக்காட்சி நிறுவனங்களும் இப்படத் தயாரிப்புக்கு உதவியிருக்கின்றன. படம் 19ஆம் நூற்றாண்டில் நிலவிய ஆப்பிரிக்க அடிமை வியாபாரம் பற்றி - தம் சொந்த மண்ணிலேயே தாம் அடிமைகளாய் வாழ்ந்ததைப் பற்றிப் பேசுகிறது. அக்கால கட்டத்தில் குடியேறிய ஆப்பிரிக்க மக்கள்தான் இன்று கயானாவில் டரினாடிட்டில் வடஅமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க மக்கள். இப்படம் இன்றைய சூழலில் வரவேண்டிய காரணம் என்ன?


தாம் வாழும் இடங்களில் களம் அமைத்துக்கொண்டு, கடந்த காலத்தை முற்றிலும் மறந்து விட்டு (மறுத்துவிட்டு) முன்னேறிச் செல்ல வேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு வெள்ளை நாடுகளில் இருக்கும் ஆப்பிரிக்க மக்கள் வந்துவிட்டார்கள். இது துரதிஷ்ட வசமானது. ஆப்பிரிக்க மக்கள் தாம் வாழ்ந்ததை மறந்துவிட்டார்கள். அதோடு தமது கலாச்சார வேர்களையும் இழந்து விட்டார்கள். தமது வேர்களைப் பற்றிய கீழான அபிப்ராயத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

மற்ற மூன்றாம் உலக மக்கள் தமது சொந்த அனுபவங்களைச் செரித்துக் கொண்டு தொடர்ந்து தியானிக்கிறார்கள். கடந்த காலத்தை பிரதிபலிக்கிறார்கள். துயர மீட்சி பெறுகிறார்கள். தமது சுய அனுபவங்களோடு தொடர்ந்து கலாச்சார ரீதியில் வளர்ந்து வருகிறார்கள். ஆப்பிரிக்க மக்கள் தமது சொந்த கடந்த காலத்தை மறந்துவிட/மறுத்துவிட முயல்கிறார்கள். இச்சூழலில் ஆப்பிரிக்க மக்களுக்கு தம் கடந்த காலம் பற்றிய பெருமித உணர்வை கலாச்சாரம் பற்றி ஊட்டுவதற்காகவும், தாம் வாழ்ந்த அடிமை வாழ்வின் துயரத்தை நினைவூட்டு முகமாகவும், இப்படத்தை நான் உருவாக்கினேன் என்கிறார் கெரீமா.

தமது கடந்தகாலம் பற்றிய அறிவும் கலாச்சாரம் பற்றிய கர்வமும் இல்லாத மக்கள் கூட்டம் மூளை அடிமைகளாக நேர்ந்து விடுகிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஆப்பிரிக்கர்கள் இத்தகைய ஆபத்தினிடையில், வேர்களை இழந்த பட்டமர வாழ்க்கையினிடையில் நிலையற்றுத் தவிக்கிறார்கள் என்கிறார் கெரீமா. அவர் ஆப்பிரிக்கர்களிடம் முன்வைக்கும் இரண்டு கேள்விகள் இது:

1.ஆப்பிரிக்கர்களாக நமது கூட்டு நினைவுகளை(Collective memory) எவ்வாறு திறந்த நிலையில் வைத்துக் கொள்ள முடியும்? 
2.ஒரு மக்கள் கூட்டமாக நமது கூட்டு அனுபவங்களிலிருந்து ஏதேனும் கற்றுக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கான சாத்தியங்கள் உண்டா? 
இத்தகைய கேள்வியை, விவாதங்களைத் தூண்டுவதே இப்படத்தின் மூலம் தனது நோக்கம் என்கிறார் கெரீமா. 

ஸங்கோபா எனும் சொல் கானா நாட்டில் வழங்கும் அகான் (Akan) மொழி வார்த்தை. ஸங்கோபா என்பதன் அர்த்தம்: ‘உங்கள் வேர்களுக்குத் திரும்பி நீங்கள் எதை இழந்தீர்களோ அதை மீட்டு, முன்னோக்கிச் செல்லுதல்’ என்பதுதான். அவரின் கருத்துப்படி அமெரிக்க/ஐரோப்பிய வாழ் கறுப்பு மக்கள் தம் கலாச்சார வேர்களை இழந்துவிட்டதால் தம் சுய அடையாளத்தையும் இழந்து விட்டார்கள். அவர்களது சுய அடையாளத்தை தமது பூர்வீக வேர்களில் தான் அவர்கள் காண முடியும். அத்தகைய ஒரு பயணமே அவர்களை தனித்துவமுள்ள மனிதர்களாக முன்னோக்கிக் கொண்டு செல்லும். இப்படத்தில் நவீன அமெரிக்க வாழ்வு/19ஆம் நூற்றாண்டு   அடிமை வாழ்வு/மறுபடி நிகழ்காலம் என பயணம் நிகழ்கிறது. மூன்று பிரதிமைகள் படம் முழுக்க இழைந்து வருகிறது.

ஸங்கோபா பறை முழக்குபவனின் எக்காள ஓசை. பிரம்மாண்டமான ஆப்பிரிக்க மரங்களின் வேர்கள். சாவுக்கும் உன்னதத்துக்கும் குறியீடாக கழுகு. ஸங்கோபா படத்தின் ஆரம்பத்திலும் இறுதியில் பிரம்மாண்டமான கழுகு ஒன்று சுற்றிலும் முற்றிலும் நீண்ட அலகு திருப்பிப் பார்த்துவிட்டு மேலெழும்பிப் பறந்து சூரியன் நோக்கிப் போகிறது. இக்கழுகு அடிமைகளுக்கும் மேற்கத்திய ஆப்பிரிக்கர்களுக்கும் பொதுவானது என்கிறார். கழுகு இரட்டைக் குணம் கொண்டது. உயிர் வாழ்தலுக்கும் மரணத்துக்குமான குறியீடு. அடிமைத்தனத்திருந்து விடுபட்டவர்களுக்கு, நாய்களிடமிருந்து விடுபட்டு மலைஉச்சி நோக்கிப் போக வழிகாட்டி கழுகு; குதிரைகளிடமிருந்து மேற்பார்வையாளர்களிடமிருந்து மறைய வழிகாட்டி கழுகு.

வழியில் விழுந்து விட்டவர்களையோ மரணமடைந்தவர்களையோ கழுகு புசிக்கிறது. கொத்தி விழுங்குகிறது. மறுபடியும் சாவிலும் ஒருவகையான விடுதலை உணர்ச்சி. ஆப்பிரிக்கர்களின் நம்பிக்கையின்படி அந்தக் கழுகு உங்கள் ஆன்மாவை மறுபடியும் ஆப்பிரிக்க வேர்களுக்கு எடுத்துச் செல்கிறது. தாய் ஆப்பிரிக்காவுக்கு எடுத்துப் போகிறது. சில பிறப்பு ஐதீகங்கள் ஓடிப்போன அடிமை ஆப்பிரிக்கர்கள் பறவையாக ஜனனமெடுத்து மறுபடி ஆப்பிரிக்காவுக்குத் திரும்புகிறார்கள் என்கிறது. பௌதீக ரீதியானதோ அல்லது ஆன்மீகரீதியானதோ இந்த உருவகம், இரண்டு வகையிலும் ஆப்பிரிக்காவுக்குத் திரும்புவதான அடிப்படையான சுதந்திர உணர்ச்சியை வெளியிடுகிறது. இந்தப் பறவை உணர்த்தும் சுதந்திரம் இன்றைய ஆப்பிரிக்க மக்களின் அடிமைத்தனம் பற்றிய பிரக்ஞையை உருவாக்கும் எனத் தான் நம்புவதாக குறிப்பிடுகிறார் கெரீமா.

படம் நிகழ்காலத்தில் ஒரு கடற்கரை நகரமான ஆப்பிரிக்க பூர்வீக உல்லாசப் பயண மையத்தில் தொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட ஆப்பிரிக்க நாடென்று இல்லாமல் குறியீட்டளவிலான கறுப்பு நாடொன்றில் பின்போகும் கதை; கரீபிய நாடொன்றில் கரும்புத் தோட்டங்களில் நகர்ந்து, மறுபடி கலகத்தின் பின்/மக்கள் எழுச்சியின் பின் நிகழ்கால ஆப்பிரிக்க மையத்திற்கு ஸங்கோபா பறையொலிக்கு வந்து சேர்கிறது.

மோனா ஒரு ஆப்பிரிக்க மாடல். வெள்ளை புகைப்படக்காரருக்கு ஆப்பிரிக்க கலைச்சின்னங்களின் பின்னணியில் படமெடுக்கப் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். வெள்ளை மனிதன் ஆட்டிப் படைக்க குனிந்தபடி நின்றபடி படுத்தபடி புரண்டபடி சொன்னபடி மோனா. வெள்ளை உல்லாசப் பயணிகளுக்கு வரலாற்றை விளக்கியபடி வழிகாட்டி. அவர்களுக்குப் பாதுகாப்பாக கறுப்பு ராணுவத்தினர். இரும்புத் தொப்பிகள் துப்பாக்கிகள் சகிதம் நிற்கிறார்கள்.

பின்னணியில் ஸங்கோபா பறை முழங்கிறது. பூர்வீகக் கதை சொல்லியபடி ஆப்பிரிக்க பாடலுடன் பறைமுழக்கம். கையில் ஆப்பிரிக்க சிதெய்வக் கோல் ஏந்தியபடி ஒரு கோபக்கார ஆப்பிரிக்க முதியவர். அவர் மோனாவிடம் போய் உன் வேர்களுக்குப் போ என்கிறார். வெள்ளையர்களை மிரட்டுகிறார். எங்களை வேட்டையாடிக் கொன்றவர்களே உங்களுக்கு இங்கே என்ன வேலை என்கிறார். ஆப்பிரிக்க வழிகாட்டியைப் பார்த்து வேர்களுக்குப் போ என்கிறார். கறுப்பு ராணுவத்தினரைப் பார்த்து ’வேர்களுக்குப் போ’ என்கிறார்.

முதியவர் திரம்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க ராணுவத்தினரால் இழுத்துச் செல்லப்படுகிறார். அவர் குரல் அசரீரி போல் எங்கும் ஒலிக்கிறது. பிரம்மாண்டமான கட்டடத்தின் அடியில் அடைபட்ட அவர் குரலை மேலிருந்து பார்க்கும் மோனா கேட்கிறாள்.அருகில் மண்ணால் ஆன குகை வாயிலொன்று. மோனா அதற்குள் நுழைகிறாள். இருட்டு. நீண்ட குகை. நீண்டுகொண்டே போகிறது. திட்டான இருட்டு. பயந்து வீறிடுகிறாள் மோனா. அவளுக்கு முன்பாக இரும்புக் கதவுகள் திடீரெனத் திறந்து கொள்கிறது.
தீப்பந்தங்கள். கழுத்திலும் கைகளிலும் சங்கிலிகள் இரும்புப் பட்டைகள் பூட்டப்பட்ட கறுப்பு மனிதர்கள் அந்தக் குகை முழுக்க நிறைந்திருக்கின்றனர். குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள். உடலில் அடையாளம்/சூடுபோட்ட தீக்காயங்கள். உறைந்த கண்ணீர். அடிமைகள். 

அடிமைகள் மோனாவை நெருங்கி வருகிறார்கள். மோனா பயந்தபடி பின்வாங்கி ஓடுகிறாள். இரும்புக் கதவொன்றில் மோதிக் கீழே விழுகிறாள். அங்கே வெள்ளையர்கள். வெறியுடன், கைகளில் சாட்டையுடன் வெள்ளைக்காரர்கள் மோனாவை அடிமைகளின் குகைக்கு இழுத்துப் போகிறார்கள்.


இப்போது அவள் பெயர் மோனா இல்லை. ஸோலா (Shola)) 19 ஆம் நூற்றாண்டில் ஒரு நாள் இழுத்துவரப்பட்ட அடிமைப்பெண் ஸோலா. உடைகள் கிழித்து வீசப்படுகிறது. ஓங்கி ஓங்கிக் கதறுகிறாள். திமிறுகிறாள். பக்கத்துக்கு ஒருவராக தரதரவென இழுத்து வரப்படும் ஸோலாவின் முதுகில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியினால் அடையாளம் போடப்படுகிறது. ஓலம் குகையை நடுநடுங்கச் செய்கிறது.

வெள்ளை எஜமானர்கள் குதிரையில் திரிய, வெள்ளை மத போதகர்கள் தேவாலயங்களில் கிறிஸ்துவின் போதனையை விவரித்துக் கொண்டிருக்கிறார்கள். அறுவடை செய்யும் கறுப்பு அடிமைகளை வெள்ளையர்களின் ஏவலாள்களான கறுப்பு ஆப்பிரிக்கர்களே சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறார்கள். ஸோலாவுக்கு சிநேகிதன் உண்டு. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஸாங்கோ அவன். அவனும் அடிமை. கலகக்கார அடிமை. அங்கு வெள்ளையனால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான ஆப்பிரிக்கத் தாயும் உண்டு. அத்தாயின் பெயர் நூனு. அவளுக்குப் பிறந்த கலப்பின ஆண்பிள்ளையின் பெயர் ஜோ. ஜோ வெள்ளையனுக்கு எவலாள். கிறிஸ்தவ நம்பிக்கையாளன். தேவ விசுவாசி. இன்னொரு ஏவலாளன் நோபல் அலி. முஸ்லீம். இன்னொருவகை மதவிசுவாசி. 

இன்னொரு பெண் லூஸி. ஜோவோடு படுத்தால் பழுப்புக் குழந்தை பிறக்கும் என அவன் பின் உடலுறவுக்கு அலைபவள் அவள். இதுவன்றி இக்கதை நிகழ்வில் வரும் இரு நபர்கள் வெள்ளையர். ஒருவர் அடிமை எஜமானர், அமைத்துக் கறுப்புப் பெண்களையும் பலாத்காரம் செய்பவன். எப்போதம் துப்பாக்கியுடன் குதிரை மீது ஏறி வருவான். மற்றவர் தேவதூதனாக வரும் கிறிஸ்தவ பாதிரி. ஜோவுக்கு அடிக்கடி உபதேசம் செய்பவர்.

கழனி. பயிர்கள். அடிமைகள் வேலை செய்கிறார்கள். பெண்கள். கர்ப்பிணிப் பெண்கள். ஒரு கர்ப்பிணிப் பெண் நிறைமாதம். குதிரை மீதிருந்தபடி வெள்ளையன் அதட்ட அவளால் வேலை செய்ய முடியவில்லை. நோபல் அலிக்கு அவளைக் கழுமரத்தில் கட்டித் தூக்கி சவுக்கால் அடிக்க ஆணையிடுகிறான். கழுமரத்தில் தொங்கும் கர்ப்பிணிப் பெண். அலி அடித்து ஓய்ந்து கீழே விழுகிறான். சவுக்கை எடுத்த வெள்ளையன் உடம்பில் சதைகள் பிய்ந்து தொங்கத் தொங்க அடிக்கிறான். கர்ப்பிணி மூர்ச்சையாகிறாள். இறந்து  விட்டாள். பிணத்தின் வயிற்றில் உயிருடன் குழந்தை நூனு வருகிறாள். பெண் அடிமைகள் எல்லோரும் சுற்றி நிற்க பிணத்தின் வயிற்றிலிருந்து குழந்தையை எடுக்கிறாள் நூனு. இரத்தம் சொட்டச் சொட்டச் குழந்தையின் முதல் குரல் கேட்கிறது. நூனு குழந்தையை வளர்க்கிறாள்.

நூனுவை வெள்ளைக் குதிரைக்காரன் துரத்தித் துரத்தி பின்புறமிருந்து புணர்ந்ததை, கதறக் கதற மண்டியிட்டபடி தலையைத் தரையில் மோதிப் புணர்ந்ததை நினைவுத் திரை வேகமாகக் காட்டிவிட்டுப் போகிறது. நூனு வைராக்கியம் மிக்கவள். ஆப்பிரிக்கத் தாயின் குறியீடு அவள். அலி அவள் வீட்டுக்கு வந்த அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவளோடு படுத்துக் கொள்ள விரும்புவதாகச் சொல்கிறான். வெள்ளைக்காரனின் ஏவலாளோடு ஒருபோதும் நான் படுத்துக் கொள்ள மாட்டேன் என்று மறுக்கிறாள் நூனு. ஜோ தனது பாவமன்னிப்புக்காக வெள்ளைப் பாதிரியிடம் போகிறான். அவனுக்கு ஆப்பிரிக்க மதம் பேய் பிசாசு. ஆப்பிரிக்கர்கள் காட்டு மிராண்டிகள்.

ஸோலாவை புணர்ந்து விட்டு இரத்தம் சொட்டச் சொட்ட அடித்து ஸர்ச்சுக்கு தூக்கி வரப்படுகிறாள். கைகைளைக் கட்டிவைத்து சவுக்கினால் அடிக்கப்படுகிறாள். பாதிரி, வெள்ளைக் குதிரைக்காரன், ஜோ மூவரும் ஸோலாவை சித்திரவதை செய்து கன்னியாஸ்திரி ஆகுமாறு வற்புறுத்தி யேசுவின்முன் பிரமாணம் எடுக்க வதைக்கிறார்கள். எந்தக் கறுப்பனோடும் தான் உறவு கொள்ள மாட்டேன் என வாக்குக் கேட்கிறார்கள். அவள் பிரமாணம் எடுக்க மூவரும் அங்கிருந்து போகும்போது ஸாங்கோ அங்கே வருகிறான். தனது காதலியை அள்ளியெடுத்து மடியிலிட்டு ஆறுதல் சொல்லும் அவன், முன்போல தான் இப்போது சாவதற்கு பயப்படுவதில்லை என்கிறான். தன் அன்பின் அடையாளமாய் ஸோலாவுக்கு ஒரு பறவைச் சின்னத்தைத் தருகிறான். சாவுக்கும் வாழ்வுக்கும் சுதந்திரத்துக்குமான குறியீடு பறவை.

லூஸிக்கு ஜோவோடு புணர்ந்து பழுப்புக் குழந்தை பெறுவதற்காக அவன் அறைக்குப் போகிறாள். உணர்ச்சிவசமான நிலையில் புணர்ச்சியிலீடுபடும் ஜோவுக்கு உச்சநிலையில் தனது மார்புச் சிலுவை கண்ணில்பட கறுப்பு லூஸியை வீட்டுக்கு வெளியே தள்ளிவிடுகிறான். லூஸி ஸாங்கோ/ஸோலாவை தேடி வருகிறாள். ஸாங்கோவுக்கு மூலிகை வைத்தியம் தெரியும். ஸாங்கோ ஒரு மூலிகை கொடுத்து கொஞ்சமாக ஜோவுக்கு சாப்பாடில் கலந்து கொடுத்தாள் ஜோ மயங்கி லூஸியோடு உடலுறவில் ஈடுபடுவான் என்கிறான்.

லூஸியை மிகக் கேவலமாக உதாசீனிக்கிறான் ஜோ. ஜோவுக்கு விஷம் வைத்து சாப்பாடு தருகிறாள் லூஸி. சாப்பாட்டு ருசியில் அதிகம் உண்ட ஜோ சித்தம் கலங்க தாறுமாறாக மனிதர்களை அடித்துவிட்டு காட்டுநதி நோக்கி ஓடுகிறான். கேள்வியுற்ற நூனு காப்பாற்ற ஓடுகிறாள். உயிர் போகும் பயத்தில் தாயைக் கட்டிப்பிடித்து அழுகிறான் ஜோ. தன்னைக் காப்பாற்று என்கிறான். ஜோவின் கழுத்திலிருக்கும் சிலுவையைப் பிடுங்கி வீசியெறிகிறாள் நூனு. ஜோ உயிர் பிழைத்துக் கொள்கிறான். சிலுவையை அறுத்ததால் தாயை சூனியக்காரி என்கிறான். வெறி கொண்டவன் ஒரு தாயை/தன்னைக் காப்பாற்றிய உயிர் தந்த தாயை காட்டாற்றின் வெள்ளத்தில் முகத்தை முக்கிக் கொன்று விடுகிறான்.

தான் தாயை வெறித்தனமாகக் கொன்றுவிட்டதை நிதானத்திற்கு வந்தபிறகே உணர்கிறான் ஜோ. அரற்றுகிறான். ஓடிவந்த ஸோலாவிடம் தன் தாயைக் காப்பாற்றென புலம்புகிறான். ஸோலா அவனை மிகக் கேவலமாக நிராகரித்துவிட்டு ஸாங்கோவை தேடிப் போகிறாள். ஜோ தனது இரு கைகளிலும் ஏந்தியபடி தேவாலயத்திற்கு வருகிறான். தாயின் உடலை பீடத்தில் வைக்கிறான். கறுப்பு மனுஷியைக் கொண்டுவந்து தேவனுக்கு இழுக்கு ஏற்படுத்தி விட்டதாக ஜோவை வைக்கிறான் பாதிரி.

கரும்புத் தோட்டம். கரும்பு வெட்டு நடக்கிறது. உயர்ந்த வாள்கள் கரும்புகளை வெட்டித் தள்ளுகிறது. ஒரு மேட்டில் மரத்தில் கட்டிய ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறான் வெள்ளைக் குதிரைக்காரன். ஸாங்கோ வேறோரிடத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருக்கிறான். நோபல் அலி அதட்டுகிற மாதிரி தோற்றம் காட்டிவிட்டு ஸாங்கோவுடன் சேர்ந்து வெள்ளைக் குதிரைக்காரனைத் தீர்த்துக் கட்டிவிட திட்டம் தீட்டுகிறான். பெண்கள் ஆண்கள் எல்லோரும் திட்டத்தில் உடன்படுகிறார்கள். இத்திட்டம் பலநாள் திட்டம். நூனுவின் திட்டமிடலில் உருவானது. தமது இன மூதாதையர்கள், தமது தெய்வ சிந்தனையாளர்கள் போன்றவர்களுடன் அடிக்கடி மலைஉச்சி குகையில் சந்தித்துப் பேசிப் பேசி உருவானது இத்திட்டம். நீண்ட நாட்களாக ஒன்றிணைந்து தீட்டப்பட்ட செயல்திட்டம் இது. மலைஉச்சியில் குகையும் பரந்த மரங்களின் வேர்களும் விடுதலையின் குறியீடுகள். 

நோபல் அலியும் ஸாங்கோவும் பெண்களும் சக ஆண் அடிமைத் தொழிலாளிகளும் திட்டமிட்டபடி வெள்ளைக் குதிரைக்கார எஜமானனை துப்பாக்கி முனையில் சூழ்ந்துகொண்டு விட்டார்கள்....ஜோ தனது தாயைத் தீட்டு என்று சொல்லி கேவலப்படுத்தியதை பொறுக்கமாட்டாது, வன்முறையையும் உபதேசத்தையும் வைத்து தன்னை அடிமையாக்கிய பாதிரியின் கழுத்தை நெறிக்க கைகளைக் கொண்டு போகிறான். சுவற்றோடு அழுந்தி தப்பிக்க முடியாது. விழிவெறிக்க அலறும் பாதிரி....
ஸோலா கரும்பு வெட்டிக் கொண்டிருக்கிறாள். வெள்ளைக் குதிரைக்காரனின் சக வெள்ளையன் குதிரையிலேறி மேற்பார்வை பார்க்க வருகிறான். ஏற்கனவே இருக்கும் கறுப்பு மேற்பார்வையாளர்களைப் போகச் சொல்லிவிட்டு ஸோவை பலாத்காரப்படுத்தும் நோக்கில் நெருங்குகிறான். அங்கே யாருமில்லை. பலாத்காரப்படுத்திய பழைய நினைவுகளுடன் வெள்ளையன். வெஞ்சினத்துடன் கையில் வாளுடன் ஸோலா. ஸோலா விலக அணைக்க வரும் வெள்ளையன் கரும்புகளுக்குள் விழ வீசி வீசி ஆத்திரம் தீர வெட்டித் தீர்க்கிறாள் ஸோலா...


ஸோலா வாளுடன் கரும்புத் தோட்டத்தின் ஆழத்திற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறாள். அவளை யாரோ துரத்திக் கொண்டே இருக்கிறார்கள்....வெளிச்சம். கூசும் சமுத்திரம். ஒளிவெள்ளம். கண் கூசுகிறது. ஸோலா குகையிலிருந்து வெளிவருகிறாள். வெளியெல்லாம் நடுங்கும்படி கதறிக் கதறி அழுகிறாள் ஸோலா.

வெள்ளைப் புகைப்படக்காரன், ‘மோனா உனக்கு என்ன ஆயிற்று’ என்கிறான். அமானா பதில் பேசவில்லை. பதில் பேசுகிற நிலையில் அவள் இல்லை. ஒரு கறுப்பு மூதாட்டி அவளைத் தேற்றுகிறாள். ஸாங்கோபா பறையின் முழக்கம் கேட்கிறது. பறை முழக்க ஓசையைத் தேடிப் போகிறாள். அப்பறைக்காரன் முன்பு அமர்ந்து நிறைய ஆப்பிரிக்க மக்கள் அவனது செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதியவர்கள். மத்யதர வயதினர். இளம் பெண்கள். சிறுமியர். சிறுவர்கள். ஐரோப்பாவில் வாழும் ஆப்பிரிக்கர்கள். அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள். மோனா அவர்களிடையே அமர்கிறாள். அவள் மோனா இல்லை. ஸோலா. ஸோலாவும் இல்லை, மோனாவும் இல்லை. ஸோலாவிடம் போய்வந்த மோனாவை உட்கொண்ட ஸோலா. ஸோலா கூட்டத்தைப் பார்க்கிறாள். ஸங்கோபா பறை முழங்கிறது. அதைக் கேட்டபடி தன்னைப் பார்த்துச் சிரித்தபடி கூட்டத்தினிடையில் நூனு அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள் ஸோலா. நூனு ஆப்பிரிக்கத் தாய்.


நேர்முகத்தின்போது கெரீமா குறிப்பிட்டார்:


சினிமாவை நீங்கள் சினிமாப் பள்ளிகள் கல்லூரிகளுக்குச் சென்று கற்கத் தேவையில்லை. ஒரு நல்ல கலைஞன் சினிமாவை கல்லூரிகளில் கற்றுக் கொள்ளவும் முடியாது. இன்றும் பொருளாதார ரீதியில் பிற்பட்ட நாடுகளிலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் சினிமாவை வேறெங்கு சென்றும் கற்றுக் கொள்வது அவ்வளவு சுலபமில்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே சினிமாவை உருவாக்க முயலுங்கள். நண்பர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள். தோள் போட்டுக் கொள்ளுங்கள். உனது பாட்டி மற்றவரின் தாய் மற்றொருவரின் தாய் மற்றொருவரின் மகன் இன்னொருவரின் மாமா இவர்கள்தான் பாத்திரங்கள். இவர்கள் வாழ்வைத் தேடிப் போங்கள். இவர்கள் வாழ்வில் காதல் இருக்கிறது. துக்கம் இருக்கிறது. கோபம் இருக்கிறது. அடிமைத்தனம் இருக்கிறது. எதிர்ப்புணர்வு, சாவு, இசை, நடனம், பாடல், பறவைகள், மரம் செடி கொடி, பிராணிகள் இயற்கை எல்லாம் இருக்கிறது. வாழ்வை வாழ்ந்ததை வாழவிருந்த கனவைச் சொல்லுங்கள். சினிமா கருவி. ஒரு சாதனம். ஒரு ஆயுதம். உங்கள் சிந்தனையின் நீட்சி. உங்கள் செயலின் நீட்சி. நீங்கள் நினைப்பதை நண்பர்களோடு தோழர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சினிமா அப்போது தோன்றும் என்கிறார் கெரீமா.

கெரீமாவுக்கு பூர்வீக/உள்ளூர் இசை முக்கியம். குடித்து விட்டு வாசிக்கும் சோக இசைக்கு தம்புரா மாதிரி கம்பி வாத்தியம். கோபத்தை பெருமிதத்தைச் சொல்ல ஆப்பிரிக்கப் பறை. வானத்தில் பறவை சஞ்சரிக்கும் இசை. சடசடத்து சிறகு பரத்தி சூரியன்/செக்கச் சிவந்த சூரியன் நோக்கிப் போகும் வானம் கிழிக்கும் பறவையின் இசை. நொறுங்கல் இசை. ஸங்கோபா படம் முழுக்க கீழிருந்தபடி அகண்ட மரங்களை நோக்கியபடி வேர்களில் உட்கார்ந்தபடி போகும் காமெரா பற்றைகள். புழுதி. உழும் பொழுது எழும் புகைமண்டலம். விவசாயிகளின் குரல்களை அமுக்கும் வாகனங்கள் பஸ்கள். நிலப்பிரபுவின் மாட்டுவண்டி.


டொராண்டோ, பாரிஸ், கான், மான்ட்ரியல் எனத் திரையிடப்பட்டாலும், எந்த வெள்ளையரும் படத்தை வாங்க, திரையிட முன்வரவில்லை. அமெரிக்காவில் வாஷிங்டனில் நண்பர்களின் முயற்சியால் சின்னத் திரையரங்கொன்றை ஏற்பாடு செய்து, திரையிட்ட பின்பு 10 வாரங்கள் சீட்டுகள் முன்பே விற்றுத் தீர்ந்தன. காட்சி முடிவில் அரசியல் விவாதம். வசூலைப் பார்த்து ஹாலிவுட் விநியோகஸ்தர் வந்தார். நல்ல வசூல். அவருக்கு அரசியல் பிடிக்கவில்லை. புரொஜக்டர் பழுதுபட்டு விட்டது என திரையிடுவது நிறுத்தப்பட்டது. வசூல் போட்டியால் மறுபடி திரையிடப்பட்டு ஆண்டுக் கணக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது படம்.

கெரீமா படங்களில் வரும் நிலப்பரப்பு அழகானதோ அழகுபடுத்தப்பட்டதோ இல்லை. மனிதர்கள் அழகாகத் திட்டமிட்டு வனையப்பட்டவர்கள் இல்லை. ஒவ்வொரு காட்சியும் ஒரு டேக்தான். படத்தில் பாத்திரங்களின் பர்பெக்ஸன் பற்றிய கவலையை விடவும், ஒட்டுமொத்த காட்சியே கெரீமாவுக்கு முக்கியம். படத்தில் முதல் முடிவு டெம்போ கிளைமாக்ஸ் என்று ஹாலிவுட் பார்முலா இல்லை. படத்தின் சிக்கனம் எனும் பெயரில் வாழ்வை நிர்மூலப்படுத்தவில்லை. மனிதர்கள் இயங்குவகற்கேற்பவே படத்தின் வடிவம் தீர்மானிக்கப்படுகிறது.

புழங்கும் மொழிதான் மக்கள் உரையாடும் மொழி. இலக்கண மொழி இல்லை. வசவுகள் வெளிப்படையானவை. உடைகள் இயல்பானவை. கனவுகள் வாழ்வின் மீது கட்டப்பட்டவை. சினிமாவால் உருவாக்கப்பட்ட மொழியைத் தொடர்ந்து ஜெரீமா போகவில்லை. மக்களின் மொழிக்கேற்ப சினிமா வடிவம் உருவாகிறது.

மனிதர்களின் அகவுலகு பற்றிய பகுப்பாய்வு என்பது தியானிப்பது போன்ற ஞானியின் தேடல் அல்ல, மாறாக சமூக உறவுகளோடு, மனிதனைக் கீழாய் வைத்திருக்கும் அமைப்பு உறவுகளோடு அவன் விடுதலை நோக்கிய பகுப்பாய்வு. கலக உணர்வு ஒடுக்கப்பட்ட மனிதனின் அடிப்படை ஆன்ம உணர்வு. எல்லா மனிதர்களிலும் இந்த உணர்வு வாழ்வதை அவதானிப்பது கெரீமாவுக்கு முக்கியம்.

சினிமா சிலருக்குத் தொழில். இலாபம் மட்டுமே நோக்கம். சினிமா சிலருக்கு வியாபாரம். சினிமா சிலருக்கு யோக சாதனம். சக மனிதனை நேசிக்க அவனோடு உரையாட அவனோடு சேர்ந்து தானும் வாழ ஒரு உரையாடல். கெரீமாவுக்கு சினிமா இத்தகைய உரையாடலுக்கான சாதனம்.

இப்படங்களில் வரும் புணர்ச்சிக் காட்சிகள் கொடுமையும் வன்முறையும் வக்கிரமும் நிறைந்தவை. காட்டுமிராண்டித்தனமானவை. துயரமானவை. தப்பி ஓடும் நாய்க்குட்டிகளைப் பிடித்தும் வெறிநாய்கள் மாதிரி   ஊளையிட்டபடி பெருமூச்சு விட்டபடி புணரும் வெறிநாய்கள் வெள்ளையர்கள். இப்படத்தில் வரும் வெள்ளையனின் பலாத்காரத்தால் பிறந்த கலப்பின வெள்ளை ஆப்பிரிக்கன் பழுப்புநிறத் தோல் உள்ளவன். இவன்தான் புதிய அறிவுஜீவி. தோல் நிறம் மட்டுமல்ல மூளையும் இவனுக்கு மாறிப் போறியிற்று. வேர்களை முற்றிலும் மறுத்தவன். குற்றவுணர்வில் திரும்பத் திரும்ப பாதிரியிடம் சென்று பாவமன்னிப்புக் கேட்கிறான். குற்றவுணர்வில் செத்துப் பிழைப்பவன். தாயை சூனியக்காரியெனக் கொல்கிறான். தாயின் சாவில் விழிக்கிறான். கெரீமா பேசும் வெள்ளை மூளை அடிமைகள் இவர்கள். ஆப்பிரிக்கத் தாயைக் கொன்றவர்கள், மறந்தவர்கள், இவர்கள் என கோபமாகப் பேசுகிறார்.

ஒடுக்குமுறை. அடிமைத்தனம், வன்மறை, நிலப்பரப்பு, கரும்புத் தோட்டம், இரும்புச் சங்கிலிகள், இயந்திரமயமாதல், எதிர்த்து நிற்க நீண்ட வாள்கள், அடிமைச் சங்கிலிகள் சிதறப்பட எக்காளப் பறைமுழக்கம், பூர்வீகக் கலாச்சார வேர்களைத் தேடி மறுபடி கழுகு சுற்றும் முற்றும் பார்த்தபடி சிறகுகள் சடசடக்க எழுந்து மேலேறி தவழ்ந்து கீழிறங்கி வானின் ஆழத்தில் சிவந்த சூரியனின் கர்ப்பம் நோக்கிப் போகிறது.... இழந்த வேர்களை மீட்டு எதிர்காலம் நோக்கி மேலெழும் கழுகு. அந்தக் கழுகின் கழுத்தைச் சுற்றியபடி படத்தில் கலகத்தின் உயிர்ப்பின் கோபத்தின் குறியீடாக வரும் சிவந்த நெருப்பு ஆடை பறக்கிறது....