இந்து முஸ்லிம் ஒற்றுமையும் தமிழ் சினிமாவும்

-இரா.பாரதி நாதன்

இந்த தலைப்பில் தோழர் அருண் அவர்கள் என்னிடம் கட்டுரையொன்று கேட்டபோது சற்றும் யோசிக்காமல் வீராப்பாக ஒத்துக் கொண்டேன். எழுத உட்கார்ந்த சமயத்தில் தான் சோதனைக் காலம் ஆரம்பித்தது. நூற்றாண்டுக் கால தமிழ் சினிமாவில் இப்படி மத ஒற்றுமையை வலியுறுத்தி ஏதாவது படங்கள் வந்திருக்கிறதா? என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றித் தேட வேண்டியதாயிற்று. நினைவு அடுக்குகளில் ஏதேதோ பழைய, புதிய படங்கள் வந்து போயின. உருப்படியாக எதுவும் தோன்ற காணோம். அப்போது சிவாஜி கணேசன் நடித்த ஒரு படத்தில் ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை மனிதன் மாறி விட்டான்’ என்றொரு பாடல் வருமே! சிவாஜி சைக்கிள் ஓட்டிக் கொண்டு பாடிக்கொண்டு வருவாரே என்ற ‘பாவமன்னிப்பு’ திரைப்படம் நினைவுக்கு வந்தது.


இப்படி மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின்னர்தான் ஒரு படத்தைக் கண்டடைய முடிந்தது என்றால், தமிழ் சினிமாவில் மத ஒற்றுமை குறித்த பரிதாப நிலை அப்பட்டமாகத் தெரிய வந்தது.

இதற்குப் பிறகு, எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் முஸ்லிம் வேடத்தில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு போலீசிடம் இருந்து தப்புவார். இதன் பிறகு, ரஜினி நடித்த ‘சங்கர் சலீம் சைமன்’ என்றொரு படம் பார்த்த ஞாபகம் வந்தது. அது கூட மத ஒற்றுமை பற்றிய படம் அல்ல. மூன்று மதங்களைச் சேர்ந்த நண்பர்கள் கதை. வெறும் அடி தடி மசாலா. கலைஞரின் மகன் மு.க.முத்து ‘என் மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா…’ என்று பாடிக் கொண்டு ஒரு படத்தில் வருவார். எல்லாமே இல்லாத ஊருக்கு இழுப்பப் பூ சர்க்கரை, என்பதாகத்தான் இருந்ததே தவிர, உருப்படியாய் எதுவும் தேறவில்லை. மத ஒற்றுமை படங்களுக்குத் தமிழில் ஏன் இவ்வளவு வறட்சி? எதனால் இந்த விபரீதம் நேர்ந்தது?

இத்தனைக்கும் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, இங்கே கோவை குண்டு வெடிப்பைத்தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியான மததுவேசங்கள் எதுவும் கிடையாது. மத ஒற்றுமை குறித்து படம் எடுத்தால் யாரும் சண்டைக்கு வரப் போவதும் இல்லை. அப்படியே வந்தாலும் துணிச்சலாய் திரைப்படக் கலையை ஏன், யாரும் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பயன்படுத்தவில்லை? அட, அது கூட வேண்டாம், இஸ்லாமிய மக்களின் வாழ்வியலைச் சொல்வதன் மூலமாகக் கூட சினிமா தன்னை ஒரு படி உயர்த்திக் கொள்ளவில்லையே?
 
மற்ற மாநிலங்களில் பெரிய அளவுக்கு இல்லையென்றாலும், குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய படங்கள் வந்திருக்கிறது என்றே நினைவு. இஸ்லாமியக் கதை மாந்தர்களை வைத்து நல்ல படங்கள் வந்திருக்கிறதே. ‘மதில்கள்’ என்ற மலையாளத் திரைப்படம், வைக்கம் முகமது பஷீர் என்ற எழுத்தாளனை கதை நாயகனாக்கி அடூர் கோபாலகிருஷ்ணண் அருமையான படம் கொடுத்தாரே. குறிப்பாக, வைக்கம் முகமது பஷீர் எழுதிய கதை இது. இஸ்லாமியர் ஒருவர் ஹஜ் யாத்திரைக்குச் செல்ல, பணம் திரட்டுவதில் அல்லல் படும் திரைப்படம் ஒன்று மலையாளத்தில் வந்து நெஞ்சத்தைக் கவர்ந்ததே.

இந்தி, மராட்டி படங்கள் மத ஒற்றுமையை வலியுறுத்தி வந்திருக்கின்றன. இத்தனைக்கும் மும்பை மற்றும் வட மாநிலங்களில் முஸ்லிம் துவேசம் வெகு பிரசித்தி.

போலி தேசிய இன ஒற்றுமையை வலியுறுத்தி. ‘பாரத விலாஸ்’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் ‘இந்திய நாடு என் வீடு’ என்று ஒரு பாடல் வரும். அதில், கூட செயற்கையாகத்தான் இஸ்லாமியர் நம் தோழர் என்ற வரி வரும். தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மற்றும் அர்ஜுன் இருவரும் வில்லன்கள் என்றாலே முஸ்லீம் தீவிரவாதிகள் தான் என்ற கட்டமைப்பு ஏற்படுத்தி, கமர்ஷியல் சினிமா செய்தார்கள். என்னவோ? இஸ்லாமியர் தான் இந்த நாட்டுக்கு மிகப்பெரிய எதிரி அதுவும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்று கண் கட்டு வித்தை நடத்தினார்கள். கமலஹாசனைப் பற்றிச் சொல்ல வேண்டாம். ஹேராம் எத்தனை இஸ்லாமிய விஷ விதைகளைத் தூவியது. முழுக்கவும் கோட்சே பார்வையில் நகருகிறது அந்தப் படம். கடைசியில் ஒப்புக்குச் சப்பாணி மாதிரி அகிம்சையைப் பேசுகிறது அந்த படம். இத்தனைக்கும் கமலஹாசன் ’நான் பெரியாரின் பேரன்’ என்று கதையளந்து விடுவார். அவர் ரத்தத்தில் ஊறிய இந்துத்துவா அவரது படங்களில் வெளிப்படத் தவறியதேயில்லை. இன்னொரு படத்தில் பொது இடத்தில் குண்டு வைக்க முயலும் ஒரு இஸ்லாமியத் தீவிரவாதியைக் கண்டுபிடிக்க முயல்வார். தேச விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற தாத்தா கதாபாத்திரத்தில் இந்தியன் திரைப்படத்தில் நடித்தார். அதிலும் கூட சுதந்திரப் போராட்ட தியாகிகளான இஸ்லாமிய வெறுப்புக்கு அடித்தளமிட்டவர் கமலஹாசன் என்று சொன்னால், அது மிகையல்ல.

இஸ்லாமியத் தீவிரவாதத்தை வேரறுக்க வந்த ஆபத்பாந்தவனாக விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் எத்தனை. ஒவ்வொரு படத்திலும் அவர் இந்த தேசத்தின் அனைத்து வன்முறைக்கும் இஸ்லாமியப் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினர்தான் என்பதை எவ்வளவு ஆணித்தரமாய் பார்வையாளர் மனதில் விதைத்து இருக்கிறார். இத்தனைக்கும் இவரது நெருங்கிய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் ஒரு இஸ்லாமியர் தான். விஜயகாந்த் நினைத்திருந்தால் எத்தனையோ இந்து முஸ்லீம் மத ஒற்றுமை குறித்துக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கப் படங்களில் நடித்து இருக்கலாம். ஏன் இதைச் செய்யவில்லை? உள்ளூர இருக்கும் இந்துத்துவா சிந்தனைதான் காரணம். இதை மறைக்க எத்தனை தேசபக்தி நாடகங்களைத் திரையில் நடத்திக் காட்டியிருக்கிறார் இவர்.

அர்ஜுன் தன் படங்கள் முழுக்கவே, நாட்டுப்பற்றை உயர்த்திப் பிடிப்பதாக ஒப்பனை செய்திருக்கிறார். இவருக்கும் வில்லனாய் கிடைப்பவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான். அவர்களைக் கடுமையாய் அடித்து உதைத்து வீர வசனம் பேசும் இவர், என்றாவது தேச ரகசியங்களை அந்நியருக்கு விற்கும் இந்து துரோகத்தைப் பற்றி ஒரு வரி பேசியதுண்டா?

தற்போதைய கதாநாயக நடிகர்களில் விஜய், ’துப்பாக்கி’ படத்தில் நடித்ததன் மூலம் இஸ்லாமிய வெறுப்பைக் கக்கி இருக்கிறார். இத்தனைக்கும் இவரை இந்துத்துவ சங்கி எச்.ராஜா, ஜோசப் விஜய் என்று நக்கலடித்து வருகிறார். அதென்ன ஸ்லீப்பர் செல் எல்லாம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மத்தியில் இருப்பார்களா? இப்படி ஒரு படத்தில் கிறித்துவரைத் தீவிரவாதியாகச் சித்தரித்து இவர் கதாநாயகனாக நடிப்பாரா? என்று கேட்கத் தோன்றுகிறது.

ரஜினிகாந்த் ‘பாட்சா’ படத்தில் தன் இஸ்லாமிய நண்பரின் பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டு மாணிக்பாட்சா என்று நடித்தார். அது கூட மத ஒற்றுமை பற்றிய படம் இல்லை. தாதாயிசக் கதைதான். படிக்காதவன் என்ற படத்தில் இஸ்லாமியப் பெரியவரான நாகேஷால் வளர்க்கப்படும் மகனாக நடித்திருப்பார். ஆனால், நடைமுறையில் என்னவாக இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். சென்னையிலும், டெல்லியிலும் நடக்கும் குடியுரிமை போராட்டம் பற்றிய இவரது கருத்துக்கள் எவ்வளவு விஷமத்தனமானது நமக்குத் தெரியும்.


இந்த நடிகர்கள் அனைவரும் ஏதோ படத்தின் இயக்குநர் சொன்னார் என்பதற்காக இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் படங்களில் நடித்தார்கள் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு குறிப்பிட்ட மதத்தின் மேல் நாம் அநியாயமாகக் குற்றம் பேசுகிறோம் என்று அறியாத சிறுவர்களா? இஸ்லாமியர்களும் தானே இவர்களது படத்தைப் பார்க்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும் என்று இவர்கள் எப்போதாவது யோசித்தார்களா? மாட்டுக்கறிக்காக வட மாநிலங்களில் இஸ்லாமியர் அடித்துக் கொல்லப்படும் போது இந்த நடிகர்கள் வாயில் விரல் வைத்துச் சூப்பிக் கொண்டிருந்தார்களா? தேசபக்திப் போர்வையில் எத்தனை பித்தலாட்டங்களை இவர்கள் திரையில் கொண்டு வந்து இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு அதிலும் கறுப்பில் பாதியாகவும், வெள்ளையில் பாதியாகவும் வாங்கி வருமானவரி ஏய்ப்பு செய்கிறார்கள். அப்பா, சாமிகளா தயவு செய்து இஸ்லாமிய வெறுப்பை வளர்த்து விடாதீர்கள். அப்படியும் மீறினால் நாங்கள் உங்கள் படங்களைப் புறக்கணிப்போம் என்று சொல்லத் தோன்றுகிறது.

திரைப்பட இயக்குநர்களில் ஒரு பார்ப்பனக் கும்பல் திட்டமிட்டே இஸ்லாமியர்களைக் கேவலப்படுத்தும் வேலையைச் செய்கிறார்கள். பாலச்சந்தர் ‘கல்யாண அகதிகள்’ என்ற ஒரு படம் எடுத்தார். காதலனான ஒரு இஸ்லாமியர், இந்துவான தன் காதலியை மதம் மாறச் சொன்னதாகவும், அவள் அவனைப் புறக்கணிப்பதாகவும் சொல்லியிருப்பார். ஐயா, பாலச்சந்தர் அவர்களே…… உண்மையான காதலுக்கு ஏது சாதி மதம்? ஒரு உண்மையான காதலன் தன் காதலியிடம் உன் மதத்தைத் துறந்து என் மதத்துக்கு வா நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்வானா? இப்படி கதாபாத்திரங்களை ஏன் ரசிகர் மனதில் திணிக்கிறீர்கள்? கேட்கத்தான் தோன்றுகிறது. செத்தவரிடம் போய் என்ன கேட்பது? இத்தனைக்கும் கல்யாண அகதிகள் வந்த சமயத்தில் தான் பாரதிராஜா எடுத்த ’அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் வந்தது. அதில், காதலர்கள் மதத்தைத் துறப்பதாக எடுத்திருப்பார்கள். இதைப் பார்த்தும் பாலச்சந்தர் திருந்தவில்லை.


இவரது வாரிசுதான் மணிரத்னம். ஹஸ்கி வாய்ஸில் கதாபாத்திரங்கள் பேசும் முறையை தன் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இவர். ஆனால் அந்த அரைகுறை குரலில்தான் எத்துனை குசும்பு? ‘ரோஜா’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தவர் பாலச்சந்தர். இயக்கியவர் மணிரத்னம். காஷ்மீர் தீவிரவாதிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அப்பாவி இளைஞரைக் கடத்தி விடுகிறார்களாம். அவனை மீட்க அவன் மனைவி போராடுகிறாளாம். காஷ்மீர் தீவிரவாதி இந்தியத் தேசியக் கொடியை எரிக்க முயல்கிறானாம். அதைத் தடுக்க அந்த அப்பாவி இளைஞன் வீரமாய் போராடுகிறானாம். டேய் உங்க தேசபக்தில சாணியக் கரைச்சு ஊத்த, ஐயா, மணிரத்னம் காஷ்மீரில் நடப்பது ஒரு தேசிய இனப் போராட்டம். அவர்கள் எந்த அப்பாவி இந்தியனுக்கு எதிராகவும் போராடவில்லை. தங்கள் உரிமைக்காக தங்களை அநியாயமாக ஆக்கிரமித்திருக்கும் இந்திய அரசை எதிர்த்துத்தான் போராடுகிறார்கள். இதைச் சொன்னால் நம்மை தேசவிரோதி என்று கூறுகிறார்கள்.


அடுத்து மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ திரைப்படம்பற்றிப் பார்த்தால் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஆளுக்கொரு பிரிவாய் நின்று மோதிக் கொள்கிறார்களாம். எங்கே, இதுவரை நடந்த கலவரங்கள் எல்லாம் இஸ்லாமியருக்கு எதிராய் இந்துத்துவ வெறியர்களால் தூண்டிவிடப்பட்டவை என்று பல மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்களே…… அது மணிரத்னம் காதில் விழுந்திருக்கும். ஆனால் அவரது வர்க்க நிலைப்பாடு இஸ்லாமியருக்கு எதிராக என்றும் இருக்கும். ‘உயிரே’ என்றொரு படம், மனித வெடிகுண்டுத்தாக்குதலுக்கு வரும் பெண்ணை ஒரு இளைஞன் காதலித்து அவளைத் தேசபக்தி பக்கம் திருப்புகிறானாம். நாட்டுக்கு வைக்க இருந்த குண்டு தனக்குத்தானே வெடிக்கச் செய்து இறந்து போனாளாம் அந்தப் பெண்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் கேட்கத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் இஸ்லாமியர் யாரும் திரைப்பட இயக்குநராக இல்லையா? அவர்கள் ஏன் இஸ்லாமிய-இந்து ஒற்றுமை குறித்து படம் எடுக்கவில்லை? சினிமாவை வெறும் பணத்துக்காகவும் புகழுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கவர்களே……

”திரைப்படம் அற்புதமான கலை, இதைக் கம்யூனிஸ்ட்டுகள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்பார் தோழர் லெனின். இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் மனிதநேயமிக்க கருத்துகளோடு சினிமாவுக்கு வர வேண்டும். அப்போது இந்து-இஸ்லாமியர் குறித்த படம் தர வேண்டும்.

தட்டச்சு: கு.பிரசாந்த்