வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஸ்கார் வெற்றி: சிறந்தப் படத்திற்கான ஆஸ்கார் விருதினை வென்ற முதல் LGBT படம் 'மூன்லைட்'

நிகோ லாங்க்  
தமிழில்: ம ரெங்கநாதன்

உப கதாப்பாத்திரங்களாகவும், தனித்து தெரிவதற்காகவும் LGBT பாத்திரங்களைக் கொண்ட படங்களை அங்கீகரித்து வந்த ஆஸ்கார், மூன்லைட்டிற்கு கொடுத்த விருதின் மூலம் LGBT சமூகத்தாருக்கு உரிய மரியாதைக் கொடுத்திருக்கிறது

'Brokeback Mountain' சிறந்த படத்திற்கான ஆஸ்கார் வெல்லாதபோது நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள் என்பது ஞாபகம் உள்ளதா? எனக்கு நன்றாக நினைவுள்ளது. 2006. கல்லூரியில் எனது முதல் வருடம்; ஜாக் நிக்கல்சன் 'ஹாலிவுட் இன்னும் மாறவேயில்லை' என்கிற பாவனையில், ஏளனத் தொனியுடன் 'crash' படத்தை வெற்றி பெற்றதாக அறிவித்தார். அதிர்ச்சியில், என்னுடன் இருந்த அனைவரும் ஒருகணம் அசைவற்றிருந்தனர்.

ஏனென்றால் 'ப்ரொக்பக்' எங்களுக்கெல்லாம் ஒரு படத்தைத் தாண்டி, ஒரு கலாச்சார முன்னோடி, அவ்வருட விருது விழாக்களின் நாயகன். முக்கிய அவார்டுகளான BAFTA, Golden Globes, Critics' Choice Award என்று அவ்வருடத்தின் அனைத்து விழாக்களிலும் வெற்றியை வாரிச்சுருட்டிய ஒரு படம். அதுபோக, வெற்றிப் பெற்ற 'crash' பல்வேறு இனங்களுக்கிடையான உறவினைப் பற்றி சொன்ன வடிவக்கோளாறுள்ள ஒரு படம்.

Ang Lee | NW Film Center

அங் லீ (Ang Lee) இயக்கிய 'ப்ரொக்பேக்'கின் தோல்வி நியாயமற்றது என்பதைத் தாண்டி, ஹாலிவுட்டில் நிலவும் சமபால் ஈர்ப்பாளர்கள் மீதான முகச்சாய்ப்பையும் குறிக்கிறது. Academy of Motion Picture Arts and Sciences உறுப்பினர்களுள் பலர் அங் லீ அவர்களின் இந்த துயர்மிகு cowboy நாட்டுப்புற கதையைப் பார்க்கக்கூட இல்லையாம்.

அப்படத் தோல்வியின் முக்கியத்துவத்திற்கு சற்றும் குறைவில்லாதது அதற்கு கிடைத்த மீட்டளிப்பின் முக்கியத்துவம். 'சிறந்தப் படத்துக்கான ஆஸ்கார் வெல்லும் முதல் LGBT படம்' என்ற பெருமையை ப்ரொக்பேக் படத்திற்கு கிடைக்காமல், பதினோரு வருடங்கள் கழித்து 'Moonlight' படத்திற்கு அப்பெருமை வாய்த்திருக்கிறது. விருது வழங்க வந்திருந்த 'Faye Dunaway' தனக்கு கொடுக்கப் பட்ட 'Emma Stone - La la land' என்ற தவறான பெயர் உரையினால், முதலில் 'La la land' படத்தை வெற்றிப் பெற்றதாக அறிவித்தார்.

யாரும் துளிக்கூட எதிர்ப் பார்த்திராத இக்குழப்பம் அடுத்தநாள் தலைப்பு செய்தியானாலும், இச்சர்ச்சை மூன்லைட்டிற்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியிடம் இருந்து கவனத்தை திசைத்திருப்ப முடியவில்லை. எல்லா வகைகளிலும் தகுதியான மூன்லைட்டிற்கு கிடைத்த இவ்வெற்றி, விருது விழாக்களில் தனிப்போக்காளர்கள் சார்ந்த படங்கள் சந்திக்கும் ஒருபுடைச் சார்பினை, வரும்காலங்களில் சரிசெய்யும். இது வேற்றுமைக்காக மட்டுமல்ல, சம அங்கீகாரத்திற்காகவும் முக்கியம்.


Ang Lee on the Brokeback Mountain set | Brokeback mountain, Ang lee, Jake  gyllenhaal brokeback mountain

இதுவரையிலும் ஆஸ்காரில் சிறந்தப் படத்துக்கான கடைசி தேர்ச்சிப் பட்டியலில், கையளவு LGBT சார்ந்த படங்கள் தான் இடம்பெற்றிருக்கின்றன. 'Milk', 'Dog Day Afternoon', 'The Hours', 'The Kids are all right', 'Capote' முதலியவைத் தானவை. 2015ல் வெளியான 'Carol' மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது நடிகருக்காகவும், திரைக்கதைக்காகவும் தான் தேர்வானது. சிறந்தப் படத்துக்கான பிரிவில் தேர்வாகவில்லை. அதேப்போல் ‘Tangerine,’ ‘Gods and Monsters,’ ‘A Single Man,’ ‘Sunday Bloody Sunday,’ ‘Boys Don’t Cry,’ ‘Philadelphia,’ ‘My Own Private Idaho,’ ‘Beginners,’ ‘Blue Is the Warmest Color,’ ‘Monster’ மற்றும் ‘Mulholland Drive’ ஆகியப் படங்களும் வெவ்வேறுப் பிரிவுகளில் தேர்வாகி இருந்தாலும், சிறந்தப் படத்துக்காக தேர்வுச் செய்யப்படவில்லை.

எதிர்ப்பால் ஈர்ப்பாள நடிகர்கள் சமப்பால் ஈர்ப்பாளர்களாக நடிக்கும் பட்சத்தில், அவருக்கு நிறைய விருதுகள் கிடைக்கத் தான் செய்கிறது. ஆனால் அக்கதைகளுக்கும், அப்படங்களுக்கும் அவ்வாறான விருதுகள் கிடைப்பதில்லை. இதுவரை 11 எதிர்ப்பால் ஈர்ப்பாள நடிகர்கள் சமப்பால் ஈர்ப்பாள கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததால் ஆஸ்கார் வென்றிருக்கின்றனர். ஆனால் இதுவரை 1 சமப்பால் ஈர்ப்பாள நடிகர் கூட வெல்லவில்லை. Jaye Davidson (The Crying Game) மற்றும் Sir Ian McKellen (Gods and Monsters) ஆகிய இருவரும் தேர்வு மட்டும் ஆனார்கள். 'Jodie Foster' மற்றும் 'Anna Paquin' ஆகியோர் ஆஸ்கார் வென்று பல வருடங்கள் கழித்து தான் சமப்பால் ஈர்ப்பாளர்களாக அறியப் பட்டனர்.
LGBT கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் படங்களிலும், அவர்களைக் கொண்டாடவோ, தன்னியல்போடு காட்டுவதோ அரிதான ஒன்றாக இருக்கிறது. இதற்கு முன் சிறந்தப் படத்துக்காக போட்டியிட்ட 'Silence of the Lambs,' 'Dallas Buyers Club,' 'Rebecca,' 'The Crying Game,' மற்றும் 'American Beauty' ஆகிய 4 படங்களில், மூன்று வென்றது. இப்படங்களில் எல்லாம் சமபால் ஈர்ப்பாளரான அக்கதாபாத்திரங்களை எதிர்ப்பால் ஈர்ப்பாளாரான மையக்கதாபாத்திரத்திற்கு உறுதுணையாக ஒரு கருவியாகவோ, இல்லை கெட்டவராகவோ தான் கையாண்டிருக்கிறார்கள். 'Dallas Buyers Club' படத்தில் 'Rayon' (Jared Leto) என்னும் திருநங்கை கதாபாத்திரம் இறந்தப்பின், சமபால் ஈர்ப்பாளர்கள் மீது ஒவ்வாமை கொண்டுள்ள மையக்கதாபாத்திரம் சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொள்கிறான். 'The Crying Game' படத்தில் 'Fergus' (Stephen Rea) தனது நண்பி (Davidson) ஒரு திருநங்கை என்பதை அறியும்போது வாந்தி எடுக்கிறான்!

LGBT சமூகத்தை சார்ந்த ஒருவர் தலைமை நடிகராக இருக்கும் பட்சத்தில், அவரது சமபால் ஈர்ப்பை வெளிப்படுத்தாத ஒருப்படத்திற்கு இங்கு விருது கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. நிஜத்தில் 'John Nash' இருப்பால் ஈர்ப்பாளாராக இருந்தாலும், அவர் நடித்த 'A Beautiful Mind' படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு அவ்வாறான ஒரு குறியீடும் இல்லை. அதற்கு பரிசாக அவர்களுக்கு நான்கு ஆஸ்கர்கள் கிடைத்தது. John Schlesinger அவர்களின் 'Midnight Cowboy' நாவலில் அதன் தலைமைக் கதாபாத்திரம் ஒரு தனிப்போக்குள்ள ஏமாற்றுக்காரன். அதைத் தழுவி எடுத்த சினிமாவில், 'Joe Buck' (Jon Voight) பாத்திரத்தை எதிர்ப்பால் ஈர்ப்பாளராக்கி விட்டார்கள்.
எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று யோசித்தப்பின் ஒரு விடைக் கிடைத்தது. எதிர்ப்பால் ஈர்ப்பாள வெள்ளை நடிகர்கள் நடித்த எதிர்ப்பால் ஈர்ப்பாள வெள்ளைக் கதாபாத்திரங்கள் உள்ள படங்கள் ஆஸ்கார் தேர்வு குழுவினருக்கு அதிகம் பரிச்சயமாகவும், பிடித்ததாகவும் இருக்கிறது. Los Angeles Times பத்திரிக்கையின் ஆய்வுப் படி 91 சதவீத ஆஸ்கார் தேர்வு குழுவினர் காக்கேசிய இனத்தவர், 76 சதவீதம் ஆண்கள், அவர்களின் சராசரி வயது 63. 2011ம் வருடத்திற்கு பின்னர் ஆஸ்கார் வென்ற படங்களில், 65 சதவீதப் படங்களின் மையக்கதாப்பாத்திரம் நான் மேற்க்கூறிய மூன்று பிரிவுகளுக்குள் அடங்கி விடுகின்றனர்.

அதற்காக தேர்வு குழூவில் இருக்கும் அத்தனை வெள்ளை ஆண்களும் சமப்பால் ஈர்ப்புக்கு எதிரானவர்கள் என்று கூறவில்லை. அவர்களுள்ளும் தனிப்போக்காளர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். ஆனால் அவர்கள் ஐம்பது வயது தாண்டியவர்களாக இருப்பதால், அவர்களால் LGBT சமத்துவத்தை முன்வைத்து விழிப்புணர்வு செய்ய முடியவில்லை. 'Brokeback Mountain' படத்திற்கு பிறகான இந்த 11 ஆண்டுகளில் Academy தனது தவறைத் திருத்திக் கொள்ளவில்லை. 2006 பின்பு தனிப்போக்காளர் கதாநாயகன் நடித்த மூன்றே மூன்று படங்கள் தான் தேர்ச்சிப் பெற்றிருக்கிறது. அதிலும் 'The Imitation Game' படத்தின் மையக்கதாபாத்திரத்தின் சமபாலீர்ப்பைப் பற்றி எந்தக் காட்சியும் சரியாக பார்வையாளர்களுக்கு கடத்தப் படவில்லை.

ஆனால் மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளுக்கும், தனது வெற்றியின் ஊடாக வலுவாக தனது பதிலைப் பதிவு செய்திருக்கிறது மூன்லைட். சிலர் மூன்லைட்டிற்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு ஜனாதிபதி ட்ரம்பின் எதிரலை தான் காரணம் என்பது சரியல்ல. 'Chiron' என்னும் கறுப்பின சிறுவன் ஒருவன் இளைஞனாக வளர்வதும், அவன் தனது பாலீர்ப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கு உடன்படும் கதை தான் மூன்லைட். அவ்வகையில் அக்கதை மொத்த உலகத்துக்குமானது. 'Tarell Alvin McCraney' அவர்களின் எடுக்கப்படாத ஒரு மேடை நாடக கதையைத் தான் இயக்குனர் 'Barry Jenkins' திரைப்படமாக மாற்றிருக்கிறார். படத்தில் வரும் இடங்களும், மனிதர்களும் Barry சிறுவயதில் சந்தித்தது தான். McCraney சமபாலீர்ப்பாளர், Barry எதிர்பாலீர்ப்பாளர். சிறுவன் சிரோனின் கதை இவ்விருவருக்கும் சொந்தமானது.

Image gallery for Moonlight - FilmAffinity

LGBTQ கதைகளுக்கு போடப்பட்டிருந்த முள்வேலியை மூன்லைட் தூக்கி கிடாசி விட்டது. ஆனால் #OscarSoWhite பிரச்சனைக்கு முடிவு காண வேண்டுமானால், நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும். இன்னும் நிறைய கதைகளுக்கு அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. அகாடெமியின் கதவுகளை இன்னும் அகலத் திறந்து, வேற்றுமையை நிலைநாட்டும் பலத்தரப்பட்ட மக்களுக்கும் இடமளிக்க வேண்டும். அப்படி இடமளித்தால் தான் மூன்லைட் மாதிரியான கேட்கப்படாத கதைகள் கேட்கப்படும்.
இந்த வெற்றி காலம் தாழ்ந்து கிடைத்தது தான். ஆனால் அதைவிட முக்கியம், அடுத்தடுத்த அங்கீகாரங்களுக்கும் நாம் இவ்வளவு நேரம் காத்திருக்கக் கூடாது என்பது.

நன்றி: www.salon.com -
“Moonlight” is the first LGBT movie to win best picture. Here’s why it matters