ஹிட்ச்காக் & த்ரூபோ - 5

த்ரூபோ: வினியோகஸ்தர்களின் ஆட்சேபணைகள் என்னென்னவென்று நினைவிருக்கிறதா?

ஹிட்ச்காக்: எனக்கு நினைவில் இல்லை. அவரது உதவியாளர் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிய இயக்குனர் இன்னும் எனக்கு எதிராக ”அரசியல்” செய்கிறாரோ என்று நான் சந்தேகித்தேன். அவர் என்னைக் குறித்து, ”அவன் என்ன படம்பிடிக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அந்தக் காட்சியிலிருந்து முன்னாலும் பின்னாலும் வெட்டி ஒட்டி என்னால் சிறப்பான காட்சியைக் கொண்டுவரமுடியாது” என்று யாரோ ஒருவரிடம் சொன்னது எனக்குத் தெரியும். ஒருவேளை என்னால் சிறப்பான படத்தை எடுக்கமுடியாமல் போனால், அதைச் செப்பனிட்டு சிறந்ததொரு திரைப்படமாக மாற்றித்தரக்கூடிய பொறுப்பு அவரிடம் தரப்பட்டால், நான் எடுத்த காட்சியிலிருந்து நீட்டித்தும், காட்சிக்கு முன்னால் இன்னும் சில காட்சியைச் சேர்த்தும் ஒரு சிறந்த படத்தை தன்னால் உருவாக்க முடியாது, என்று என் மீதுள்ள வெறுப்பை பிறரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.


த்ரூபோ: உங்களது அடுத்தபடம் டவுன்ஹில்(Downhill). இது பள்ளியில் தவறான குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு இளைஞனைப் பற்றிய படம். பள்ளியின் நிர்வாகிகள் அவனை படிப்பிலிருந்து வெளியேற்றுகிறார்கள், மேலும் அவனுடன் இணைந்து எந்தவொரு செயலையும் மேற்கொள்ள அவரது தந்தையும் விரும்பவில்லை. படம் குறித்து எனக்குள்ள நினைவின்படி, பின்னாளில் அவர் நடிகை ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, பாரிஸில் ஒரு தொழிற்முறை நடனக் கலைஞராகிறார். பின்னர் அவரை நாம் மார்செல்லஸில் காண்கிறோம், அங்கு அவர் காலனியிலிருந்து வெளியே அனுப்பப்படுவதாக நினைக்கிறார். அதற்குப் பதிலாக, அவர் மீண்டும் லண்டனுக்குச் செல்கிறார், இதற்கிடையில் தனது மகன் செய்யாத குற்றத்திற்காகத்தான் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்றும், அவன் நிரபராதி என்ற உண்மையையும் அறிந்துகொண்ட அவனது பெற்றோர் அங்கு அவனை திறந்த மனதுடன் வரவேற்கின்றனர். கதைக்கான சம்பவங்கள், பல்வேறு இடங்களில் நடக்கின்றன. செயல்கள் அனைத்து வகையான வெவ்வேறு இடங்களிலும் சிதறிக்கிடக்கின்றன; அதாவது கதை ஒரு பிரிட்டிஷ் கல்லூரியில் துவங்கி, அது பின்னர் பாரிஸுக்கும், அடுத்து மார்செல்லஸுக்குமென நகர்ந்து….

ஹிட்ச்காக்: ஏனெனில், அசல் (ஒரிஜினல்) நாடகம் அவ்வாறாகத்தான் எழுதப்பட்டிருந்தது.


த்ரூபோ: விசித்திரமாக இருக்கிறது. இதுவொரு நாடகமாக இருக்கிற பட்சத்தில், எல்லா செயல்களும், சம்பவங்களும், ஒரே இடத்தில், கல்லூரியிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே கற்பனை செய்வேன்.

ஹிட்ச்காக்: இல்லையில்லை, வெவ்வேறு இடம் என்பதனைக் காட்ட, இதுவொரு தொடர்ச்சியான பின்புற ஓவியங்களால் (திரைச்சீலைகளால்)உருவாக்கப்பட்டிருந்தது. மேலும், இது ஓர் மோசமான நாடகம். இதன் ஆசிரியர் இவார் நோவெல்லோ (Ivor Novello), என்பதால் இது படமாக ஆனது.

த்ரூபோ: படத்தில், பள்ளியின் சுற்றுப்புறமும், சூழ்நிலைகளும் மிகவும் கவனத்துடனும், மிகவும் நுணுக்கமாகவும் மறு – உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது எனக்கு நினைவில் இருக்கிறது.

ஹிட்ச்காக்: ஆம், ஆனால் குறிப்பிட்ட இடங்களில் வசனங்கள் மிகவும் பயங்கரமாக இருந்தன. முந்தைய படத்தில் கதாநாயகன் குறுக்கும் நெடுக்கமாக நடக்கிறபொழுது, மேற்கூரையில் மாட்டப்பட்ட சரவிளக்குகள் அசைவதைக் காண்பித்திருப்பேன். அதேநேரத்தில் மேலே கதாநாயகன் நடப்பதும், கீழே சர விளக்குகள் அசைவதும் ஒரே நேரத்தில் ஃப்ரேமில் தோன்றும். அதற்கேற்றபடி மேலே நடப்பதைப் பிரதிபலிப்பதுபோன்ற மேற்கூரை ஷாட்டைப் பயன்படுத்தியிருப்பேன். அதேபோல, இப்படத்தில் அப்படியொரு அப்பாவித்தனமான ஷாட்டைப் பயன்படுத்தியிருக்கிறேன். நிச்சயமாக இதுபோன்ற காட்சியமைப்பை இன்று நான் மேற்கொள்ளமாட்டேன். அந்த இளைஞன் தனது தந்தையாலேயே, வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும்பொழுதுதான் அந்த ஷாட் வருகிறது. நான் அந்த இளைஞனது கீழ்நோக்கிய (downhill) பயணத்தின் துவக்கத்தைக் காட்ட, நான் அவரைக் கீழே செல்லும் எஸ்கலேட்டரில் இடம்பெற வைத்தேன்.


த்ரூபோ : பாரிஸ் காப்ரேவில் ஒரு நல்ல காட்சி இருந்தது.

ஹிட்ச்காக்: ஆம், அங்கே நான் சில பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தேன். ஒரு பெண் இளம் வயது ஆடவன் ஒருவனை மயக்குவதைக் காண்பித்தேன். அவள் ஒரு குறிப்பிட்ட வயதுடைய பெண்மணி. ஆனால் அழகு மற்றும் மிகுந்த நேர்த்தி உடையவர். அவன் அதிகாலை வரை அவளை மிகவும் கவர்ச்சியாகக் காண்கிறான். பின்னர் அவன் சன்னலைத் திறக்கிற பொழுது சூரியக் கதிர்களின் வெளிச்சம் சன்னலின் வழியாக உள்ளே பாய்கிறது. அது அப்பெண்ணின் முகத்தை ஒளிரச்செய்கிறது. அத்தருணத்தில் அவள் அச்சம் ஊட்டக்கூடியவள் போல பயங்கரமாகத் தோன்றுகிறாள். பின்னர் திறந்த சாளரத்தின் வழியாக சவப்பெட்டியை சுமந்தபடி கடந்துபோகிற மக்களைக் காண்பிக்கிறோம்.


த்ரூபோ: படத்தில் சில கனவு காட்சிகளும் இருந்தன.

ஹிட்ச்காக்: அந்தக் காட்சிகளிலும் பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் நான் அந்த இளைஞனுக்கு காட்சி பிரமை இருப்பதாகக் காட்ட விரும்பினேன். அவர் ஒரு சிறிய இரட்டை பாய்மரக் கப்பலில் ஏறினார். பின்பு அந்த கப்பலின் முன்புறப் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றேன். குழுவினர் எல்லாம் உறங்கிக்கொண்டிருந்தனர். பின்னர், அவரது கனவின் துவக்கத்தில் அவர் ஒரு நடன கூடத்தில் இருந்தார். நான் இவ்விரு காட்சிக்கும் இடையில் டிஸ்ஸோல்வே (Dissolve) பயன்படுத்தவில்லை. மாறாக நேரடி வெட்டு(Cut) மூலம் அடுத்தடுத்த ஷாட்களைக் காண்பித்தேன். அவர் சுவரின் ஒரு பக்கமாகவே நடந்து சென்று பங்கில் ஏறினார். அந்நாட்களில் கனவுகளுக்கு எப்போதும் டிஸ்ஸோல்வே பயன்படுத்தப்படும். மேலும் கனவுகள் மங்களாகவே (Blur) தோன்றும். எனவே எனக்குக் கடினமாகவே இருந்த போதிலும் கூட கனவுக் காட்சிகளை தெளிவான காட்சிகளாகவும், யதார்த்தத்தில் தோன்றுவது போலவே இயல்பானதாகவும், தெளிவற்ற பிம்பங்களைத் தவிர்த்து ஒரு கனவுக்கு காட்சியை உருவாக்க விரும்பினேன்.

த்ரூபோ: இப்போது நான் அந்த படத்தைக் குறித்து நினைவு கூறுகையில் அந்த படம் குறிப்பாக வெற்றிகரமான படமாக அமையவில்லை. இதற்கு அடுத்து நீங்கள் இயக்கிய படம் easy virtue (எளிய நல்லொழுக்கம்), இந்த படத்தை நான் பார்த்ததில்லை. என் குறிப்புகளின்படி, இப்படம் லாரிட்டா என்ற பெண்ணைப் பற்றிய கதை. தன்னைக் காதலிக்கும் ஒரு இளம் கலைஞன் தற்கொலை செய்து கொள்கிறான். அடுத்து, தன் கணவனோ குடிகாரனாக இருக்கிறான், அது பிடிக்காமல் அவனை விவாகரத்து செய்து விடுகிறாள். இத்தகைய செயல்களால் அவளுக்கு மோசமான அவப்பெயர் கிடைத்து விடுகிறது. பின்னர் அப்பெண் மரியாதைக்குறிய ஒரு குடும்பத்தின் வாரிசைச் சந்திக்கிறார். அவரது பெயர் ஜான். அவளது கடந்த காலத்தைப் பற்றி தெரியாமலேயே ஜான் அவளை திருமணம் செய்துகொள்கிறான். ஆனால் லாரிட்டாவின் கடந்த காலத்தைப் பற்றியும், முன்னாள் இருப்பைப் பற்றியும் ஜானின் தாயார் தெரிந்து கொண்டதும், அவளை விவாகரத்து செய்யுமாறு தன் மகனைக் கட்டாயப்படுத்துகிறார். கந்தலாகிப் போன லாரிட்டாவின் வாழ்க்கையைக் காண்பிப்பதுடன் படம் முடிவடைகிறது.ஹிட்ச்காக்: இது நோயல் க்வார்ட் நாடகத்திலிருந்து எடுக்கப்பட்டது. நான் எழுதியதிலேயே மிக மோசமான தலைப்பையும் அது கொண்டிருந்தது. அதைப் பற்றி உங்களிடம் சொல்வதற்கு நான் வெட்கப்படுகிறேன். இருப்பினும் நான் சொல்கிறேன். படத்தின் ஆரம்பத்தில் லாரிட்டாவின் விவாகரத்து வழக்கின் போதுதான் அவளைத் திரையில் காட்டுகிறோம். அவள் அங்கு எல்லோருக்கும் பரிசயமானவள், புகழ்பெற்றவள், எல்லோருக்கும் தெரிந்தவள், அவள் தன் கதையை நீதி மன்றத்தில் சொல்கிறாள். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனை எப்படி மணந்தால் என்பதில் ஆரம்பித்து கதையைச் சொல்கிறாள். ஆனால் எப்படியிருந்தாலும், அவளது இடைவிடாத விவாகரத்து எவ்வித தடையுமின்றி வழங்கப்படுகிறது. பிரபலமான லாரிட்டா நீதி மன்றத்தில் இருக்கிறாள் என்ற செய்தி வேகமாகச் சுற்றி வருகின்றன. வார்த்தைகள் தீயென பரவியதால், புகைப்படக்காரர்கள் வெளியே கூடிவிடுகின்றனர். இறுதியில் அவள் நீதிமன்ற மாடிப்படிகளில் தோன்றுகிறாள். பின்பு அவள் தன் கைகளை விடுவித்து "சுடு, என்னைக் கொல்வதற்கு இனி எதுவும் இல்லை!" என்கிறாள். இந்தப் படத்தில் இருக்கிற ஒரு சுவாரசியமான காட்சி என்னவென்றால் ஜான், லாரிட்டாவை திருமணம் செய்துகொள்ள தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறபொழுது, அவரிடத்தில் தனது உடனடி பதிலை தெரிவிக்காமல், அவள் "நான் உங்களை வீட்டிலிருந்து தொலைபேசியில் நள்ளிரவில் (அல்லது மாலையில்) அழைக்கிறேன்" என்று கூறுகிறாள்.அடுத்து இது நள்ளிரவு நேரம் என்பதைக் குறிக்கும் பொருட்டு ஒரு சிறிய கடிகாரத்தைக் காண்பிக்கிறோம்; இது புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் டெலிபோன் ஸ்விட்ச் போர்டு ஆப்ரேட்டரின் கைக்கடிகாரம். பலகையில் ஒரு சிறிய ஒளி பாய்கிறது. அவள் தனது காதில், இயர்போனை வைத்து, மீண்டும் தனது வாசிப்புக்குச் செல்கிறாள். ஆனால், தொலைபேசியில் இரு முனைகளில் பேசிக்கொள்கிறர்வர்களது பேச்சும் இவளது காதில் விழுகின்றன. அதைத் தனது இயர் போன்களின் வாயிலாகக் கேட்கிறாள். பின்னர் தொலைபேசி உரையாடலால் ஈர்க்கப்பட்டு புத்தகத்தை கீழே வைத்துவிட்டு, இன்னும் ஆர்வத்தோடு அந்தப் பேச்சினை ரசிக்கிறாள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நான் ஒருபோதும் அவர்கள் இருவரையும் (தொலைபேசியில் உரையாடுகிற ஜான் மற்றும் லாரிட்டா) திரையில் காட்ட மாட்டேன். ஸ்விட்ச் போர்டு ஆபரேட்டரைப் பார்ப்பதன் மூலமே அங்கு என்ன நடக்கிறது? என்பதை அறிந்துகொள்கிறீர்கள். அங்கு நடக்கக்கூடிய செயல்களை ஸ்விட்ச் போர்டு ஆப்ரேட்டரின் நடவடிக்கைகளிலிருந்தும், முக பாவனைகள் வழியாகவும் பின்பற்றுகிறோம்.

- தொடரும்…

முந்தைய பகுதியைப் படிக்க: