இயக்கம் பேரியக்கமானது எப்படி? - படிமை மாணவர்களின் கலந்துரையாடல்

தமிழ் ஸ்டுடியோ இயக்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் அதன் 12 ஆண்டுகாலம் வரை அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து படிமை மாணவர்களான மெடுசா, ரெங்கநாதன் ம, ரமேஷ் பெருமாள், பார்த்திபன் சின்னப்பன், விஜய் சசி, ராஜேஷ் வெங்கடாச்சலம், சதீஷ், லோகேஷ், தமிழ்மணி ஆகியோர் கலந்துரையாடியது.


மெடுசா:

”பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியைத் தீயசக்திகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின, அனைத்தையும் அவை தமதாக்கின, நியாயங்களுக்கு இடமில்லாமல் போயின. அப்போது இந்த பிரச்னைகளை சரிசெய்திடத்  தூதன் ஒருவன் அனுப்பப்பட்டான்” இப்படியான வாயிஸ் ஓவரில் ஈவில் டெட் திரைப்படம் தொடங்குகிறது.

 
திரைப்படம் என்னும் கலை வடிவம் தோன்றி சில ஆண்டுகளுக்குள்ளாகவே இக்கலை பெருமுதலாளிகளிடம் சிக்கிக்கொண்டது. திரைப்படம் என்பது பெரிய அரங்க அமைப்பினையும், உச்ச நட்சத்திரங்களையும்  உயர் தொழில் நுட்பத்தினையும் உள்ளடக்கிய பெரும் முதலீடு கோரும் கலை. இக்கலை எளிய கலைஞர்களுக்கு  எட்டாக்கனியானது. அதுமட்டுமின்றி அவை பெருமுதலாளி மற்றும் சமூகத்தில் உயர் தளத்தில் இருக்கும் மக்களின் துதி பாடிகளாகவே மாறிப்போனது. இந்நிலை கண்டு வெகுண்டெழுந்த மக்கள் திரைப்பட இயக்கங்களை உலகம் முழுதும் கட்டமைக்கத் தொடங்கினர். அப்படி நமக்கு முன்னோடிகளாக உலகம் முழுதும் பல திரைப்பட இயக்கங்கள் இயங்கிவருகின்றன.
 
French new wave, italy neo realism, soviet montage, odsey (ஜான் ஆபிரகாம்), dogme95 போன்ற திரைப்பட இயக்கங்கள் மேற்கொண்ட திரைப்பட கட்டமைப்பைத் தகர்த்தெறிந்தன. இயல்பில் நடக்கும் கதைக்களம், அரங்கமைப்பு தேவையில்லாத போதுமான தொழில்நுட்ப உபகரணங்கள், உச்ச நட்சத்திரம் அல்லாத கலைஞர்களைக் கொண்ட குறைவான முதலீடோ அல்லது மக்களிடம் நிதிபெற்றோ திரைப்படங்கள்  எடுக்கப்பட்டன.

 
உலகிலேயே வருடத்திற்கு அதிக சினிமா வெளியிடப்படும் நாடுகளில் இந்தியாவே முன்னிலை வகிக்கின்றது. ஆனால் இந்திய சினிமா தம்மை மேற்கத்திய சினிமா அதாவது  அமெரிக்காவின் hollywood-ஐ பார்த்துக் கட்டமைத்துக்கொள்கிறது. திரைப்படம் என்பது இங்கு  நாடக கலையின் நீட்சியாகவே இன்றும் இருந்துவருகிறது. மேலும் இவை  மேற்கத்திய நாடுகளில் திரைப்படம் இயக்கங்கள் தோன்றுவதற்கு முன் என்ன நடந்ததோ அவற்றையே இங்கும் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது.

சரி, இந்தியாவில் திரைப்பட இயக்கங்கள் எதுவும் இல்லையா? என்று கேட்டால், சத்யஜித் ரேவால் coin செய்யப்பட்ட parallel cinema என்று நீங்கள் பதில் கூறலாம். இத்திரைப்பட இயக்கம் எனப்படுவது வணிக சினிமாவிற்கு  இணையான மற்றொரு சினிமாவேயொழிய மாற்றன்று. இவை இயக்கமாகக் கட்டமைக்கப்படவில்லை. வணிகசினிமாவில் வெற்றிகண்ட எளிமையான திரைப்படங்களையோ,  அதன் கலைஞர்களையோ பத்திரிகைகளே இப்பட்டியலில் இணைத்துவிடுகின்றன. இப்படியிருக்க இது எப்படி திரைப்பட இயக்கமாகமுடியும்?
 
திரைப்பட இயக்கம் என்பது மக்களுக்கான திரைப்படங்களைப் படைப்பது மட்டுமின்றி, மக்களுக்கு கலை குறித்து விழிப்புணர்வையும் கல்வியையும், இத்திரைப்படங்கள் வெளியிடுவதிற்கான வெளியையும் உருவாக்கிடவேண்டும். தமிழ்ஸ்டுடியோ பேரியக்கம் இத்தகைய பணிகளைச் செம்மையே செய்துவருகிறது.
 
2008ஆம் ஆண்டு திரைப்பட சங்கமாக தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் மூலமாகத் தமிழகத்தில் பெரிதும் பயன்படுத்தாத திரை வடிவான குறும்படங்களுக்கான வெளியை தமிழ்ஸ்டுடியோ கட்டமைத்து. தமிழ் ஸ்டுடியோ குறும்பட வட்டத்தின் மூலமாகத் திரைப்படங்களைத் திரையிடுவது மட்டுமின்றி, காணும் கலையையும் தொழில்நுட்பம் குறித்த பயிற்சிப் பட்டறைகளையும், குறும்படம் எடுப்பதற்கான உபகரணங்களான கேமரா மற்றும் எடிட்டிங் ஆகியவற்றை இலவசமாகவே வழங்கியது.

 
தமிழ்ஸ்டுடியோ.காம் என்ற இணையதளத்தின் மூலமாக திரைக்கல்வியை வேரூன்றியது. இந்தியாவில்  சினிமாவிற்கென்ற பிரத்யேக புத்தக நிலையமாக  PURECINEMA இயங்கி வருகிறது. பிரெஞ்சு நியூ வேவ் திரைப்பட இயக்கம் தொடக்கக்காலத்திற்கு முன்பிருந்தே தெலுஸ், ஆண்ட்ரே பாசின் போன்றவர்களால் திரைப்படம் குறித்த விமர்சங்களும்  ஆய்வுக்கட்டுரைகளையும் உள்ளடக்கிய பிரத்யேக திரைப்பட ஏடுகள்  வெளிவந்தன. தமிழ் ஸ்டுடியோவின் படச்சுருள் மாத இதழ் இந்தியச் சிற்றேடுகள் வரலாற்றிலேயே முதல்முறையாக தீமேட்டிக் அடிப்படையில்  பிரத்யேக  தலைப்புகளில் கீழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. தமிழில் வெளிவரும் சிறுபத்திரிக்கைகளில் அதிக மலர்கள் (மாதங்களை) கடந்து வெற்றிகரமாக வெளிவந்துகொண்டிருக்கிறது.
 
படச்சுருள் இதழ் தமிழ்த்திரைப்பட மற்றும் இலக்கியவரலாற்றில்  யாரும் தொடாத தலைப்புகளின் கீழ் மலர் வெளியிட்டுருக்கிறது. தமிழில் படச்சுருள் தணிக்கை சினிமா சிறப்பிதழுக்கு பின்பே  தணிக்கை தொடர்பான புத்தகங்கள் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்ஸ்டுடியோவின்  படிமை திரைப்பட பயிற்சி இயக்கம்  மூலமாகச் சுயாதீன திரைப்படம் எடுக்க மாணவர்களுக்குப்  பயிற்சியளிக்கப்படுகிறது. படிமை என்கிற திரைப்பட பயிற்சி மையம் /பள்ளி இந்தியாவிலேயே இல்லை என்பதே உண்மை.



சுயாதீனத் திரைப்படம் வெளியிடுவதற்கான புதிய தளத்தினை தமிழ் ஸ்டுடியோ மட்டுமே இங்கு கட்டமைத்திருக்கிறது. மாவட்டம் தோறும் திரைப்பட மையம் உருவாக்குதல், ஒவ்வொரு வருடம் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இந்தியா முழுவதும் இருந்து சுயாதீன திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள் பங்குபெறும் சென்னை சுயாதீன திரைப்பட விழா (IFFC), இவ்விழாவில் திரையிடப்படும் திரைப்படம், குறும்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கு மரகதப் புறா விருது வழங்கப்படுகிறது. சர்வதேச திரைப்பட விழாவாக உருவெடுத்துள்ள IFFC விழா சுயாதீன திரைப்படங்கள் திரையிடல் மட்டுமின்றி  சுயாதீன திரைப்படங்கள் எடுப்பதற்கான  பயிற்சிப்பட்டறைகளையும், கலந்துரையாடலையும் ஃபிலிம் பஷார்-யையும் உள்ளடக்கியது.
 
பேசாமொழி  பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்பட்டிருக்கும் புத்தகங்கள் பல திரைப்பட கல்லூரிகளில் பாடபுத்தகமாவும் இருக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்து பேசாமொழி எண்ணற்ற மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுருக்கிறது. பேசமொழி தமிழ்ஸ்டுடியோ தொடங்கிய காலம் தொட்டே இணைய இதழாகவும்  வெளிவந்துகொண்டிருக்கிறது.


 
திரைப்படம் மற்றும் திரை ஏடுகள் தொடர்பான ஆவணக்காப்பகம், திரைப்படம் எடுக்கும் கலைஞர்களுக்கென்றே பிரத்யேக பிரமிள் நூலகம், பல்லாயிரக்கணக்கான ஆவணப்படம், குறும்படம், திரைப்படங்கள் கொண்ட நடராஜ முதலியார் குறுந்தகடுகள் நூலகம், தமிழ் சினிமாவின் நூற்றாண்டு  கொண்டாட்டம், 100  திரைப்பட கலைஞர்ளுடன் கலந்துரையாடல், உதவி இயக்குனர்களை கல்விரீதியாக மேம்படுத்தும் பொருட்டு ADTC உதவி இயக்குனர்கள் பயிற்சி மையம், அவர்களுக்கு ஆங்கில அறிவினை மேம்படுத்த டாக்கிங் கிளப் என தமிழ் திரையுலம் செய்ய தவறிய பல பணிகளை தமிழ்ஸ்டுடியோ செய்து வருகிறது.
 

திரைப்படம் எடுக்கும் முறை மற்றும் கல்வியை தமிழ் ஸ்டுடியோ நூற்றுக்கணக்கான பயிற்சிப் பட்டறைகள் மூலம் எளிமையாக்கியது. purecinema புத்தக அங்கடியில் ஒவ்வொரு வாரம்தோறும்  இலவச திரையிடல்கள் மற்றும் கலந்துரையாடல்கள்  நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. purecinema வில் நிகழ்ச்சிகள் இல்லாத வாரங்களே இல்லை. இத்தகைய பணிகளை உலகில் வேறு எந்த திரைப்பட இயக்கமும் செய்ததாக நான் அறியவில்லை. திரைப்பட இயக்கங்கள் திரைப்படம் எடுக்கும் பணிகளை மட்டும் செய்யாமல் மக்களின் ரசனையை கல்விரீதியாக  மேம்படுத்த வேண்டும். அத்தகைய பணியினை தமிழ்ஸ்டுடியோ அயராது செய்து வருகிறது.

ராஜேஷ்:

தமிழ் ஸ்டுடியோவின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை நான் அந்த இயக்கத்தோடு ஏதோவொரு வகையில் தொடர்பிலிருக்கிறேன். 2008ஆம் ஆண்டு தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் தொடங்கியபோது அதனுடைய வீச்சு என்ன? ஒரு திரைப்படம் இயக்கம் என்றால் என்ன? திரைப்பட சங்கம் என்றால் என்ன?  என்பது குறித்தெல்லாம் நாங்கள் கொஞ்சக் கொஞ்சமாகத் தெரிந்துகொள்கிறோம்.

100ஆண்டுக்கால தமிழ் சினிமா வரலாற்றில், அரசியல் ரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிற தமிழ்ச் சமூகம் சினிமாவை வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் இணைத்துப் பார்க்கிற சமூகமாக இருக்கிறது. இப்படியான சமூகத்தில்தான் ஐந்து முதலமைச்சர்கள் சினிமாவின் தொடர்பிலிருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் நம் ஊர்களில் வருகிற சினிமாக்கள் எப்படி இருக்கின்றன?  என்று பார்த்தால் மோசமான நிலையில்தான் இருக்கின்றன. உருவாக்கம், உள்ளடக்கம் ஆகிய இரண்டு தளத்திலும் மோசமாக இருக்கின்றன. இந்நிலையில் ஒரு படைப்பாளியாகவேண்டும் என்ற எண்ணத்தோடு இங்கு வருபவர்களுக்குத் தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தைச் மிக மிக முக்கியமான முன்னெடுப்பாகப் பார்க்கிறேன்.

இந்திய சினிமா வரலாற்றில் இதுபோன்ற இயக்கம் வேறு எங்காவது இருக்கிறதா? என்றால் எனக்குத் தெரிந்து எங்கும் இல்லை. மேற்கு வங்கம், கேரளா போன்ற பகுதிகளில் சினிமா ரசனை வகுப்புகள், திரைப்பட இயக்கங்கள் இருக்கின்றன என்றும், அங்குக் கலந்துரையாடல் நடைபெறுகிறது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ் ஸ்டுடியோ போன்ற தீவிரமாக இயங்குகின்ற ஒரு இயக்கத்தை இந்தியாவில் எங்கும் பார்க்கவில்லை. உலக அளவில் பார்த்தால் French New Way, Italian Neorealism, Third World Cinema போன்ற இயக்கங்கள் எந்த அளவு தீவிரமாக இயங்கினார்கள், இயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. பெரிய அரசியல் மாற்றத்திற்கு முன்னோடியாக அந்த இயக்கங்களை நாம் எடுத்துக்கொள்கிறோம்.



அதையெல்லாம் தாண்டி ஒரு நல்ல கலைஞராக ஒருவர் உருவாகவேண்டும் என்றால் அதற்கு இயக்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்று மக்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தமிழ் ஸ்டுடியோ 12 ஆண்டுகளில் செய்திருக்கும் சாதனையை மிகப் பெரியதாகப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட 1500 வெள்ளித்திரை கலைஞர்களுடன் கலந்துரையாடல், 3000க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடல், 40க்கும் மேற்பட்ட பயிற்சிப் பட்டறைகள், படிமை என்கிற மாணவர் திரைப்பட பயிற்சி அமைப்பு, பேசமொழி பதிப்பகம், படச்சுருள், கருப்பு போன்ற பல செயல்பாடுகளை நிகழ்த்திக்காட்டியிருக்கிறது இந்த பேரியக்கம்.


உலக அளவில் உள்ள முக்கியமான நூல்களைத் தாய் மொழியில் படிக்கிற ஒரு வாய்ப்பை தமிழ் ஸ்டுடியோ ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. இந்தியாவில் எனக்குத் தெரிந்து வேறெந்த மொழிகளிலும் இந்த அளவிற்கு சினிமா சார்ந்த முக்கியமான புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறதா? என்று எனக்குத் தெரியவில்லை.

ரமேஷ்:

ஒரு இயக்கம் என்பது திடீரென்று தோன்றும் நிகழ்வு அல்ல. அதற்கு முன் அவை பல பரிமாணங்களைக் கடந்து தன்னைத்தானே செம்மைப்படுத்தித் தனக்கான தேவையையும் காலத்தையும் பொருத்து உருவாகும். திரைப்படம் என்பது மக்களுக்கானது. சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் கலை மக்களுக்கானது. மக்களுக்கான கலையை மக்களிடம்தான் திருப்பி கொடுக்கவேண்டும். எடுத்துக்காட்டாக பிரான்ஸில் தோன்றிய முதன்மை இயக்கமான French New Wave இயக்கம் குறித்து இங்குச் சொல்லலாம். திரைப்படங்களைப் பார்ப்பது மட்டுமல்லாமல் அத்திரைப்படத்தைப் பற்றி விமர்சிப்பது, எழுதுவது, விவாதிப்பது, அதனைத்தொடர்ந்து மக்களிடையே சினிமா ரசனை சென்றடைய சினிமாவிற்கென்று ஓர் தனி அடையாளமாக சினிமா பத்திரிக்கையை வெளியிடுவது போன்றவையான செயல்பாடுகள் மூலம் ஓர் இயக்கத்திற்கான அங்கீகாரம் வலுசேர்கிறது.


ஆரம்பக்கால கட்டத்தில் நம்முடைய திரைப்படங்கள் சாமியையும், பேயையும் அல்லது சாகசங்கள் நிறைந்த திரைப்படக் கதைகளாக வைத்து பிரதிபலித்தது. இவைகள் நம்பகத்தன்மையற்றவையாகவும் வாழ்க்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத புனைவாகச் சித்தரிக்கப்பட்டு உண்மைக்குப் புறம்பான படங்களாக வெளிவந்துகொண்டிருந்தது. கலை மக்களுக்கானது என்னும்போதும் மக்களின் இயல்பு வாழ்வியலை எந்தவித புனைவும் இல்லாமல் அப்படியே காட்டுவதுதான் மக்களுக்கான படமாக இருக்கும். அது தனக்கான வெளியை உருவாக்காமல் இருக்கிற நிலையில், அதற்கான முன்னெடுப்புகளை உருவாக்குவதற்கு ஒரு திரைப்பட இயக்கம் தேவைப்படுகிறது.

லோகேஷ்:

தமிழ் ஸ்டுடியோவின் தேவை தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பல ஊர்களில் இருக்கிறது. மாற்று சினிமாவிற்கான களத்தை உருவாக்கத் தமிழ் ஸ்டுடியோ தமிழ் நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.


ஒரு உண்மை நிலவரம் தெரியவேண்டும் என்றால் அதற்காக நிறைய விசயங்களைத் தேடவேண்டியிருக்கிறது. ஆனால் தமிழ் ஸ்டுடியோவில் நடந்துகொண்டிருக்கிற செயல்பாடுகள் அப்படிக் கிடையாது. இங்கு நடைபெறுகிற அனைத்து விசயங்களும் உண்மை பிரச்னைகளை மக்களுக்குச் சொல்வதற்கான ஊடகம். அப்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பிரிவுகளில் ஒரு பிரிவுதான் தமிழ் ஸ்டுடியோ.

மாற்று சினிமா என்கிற பெயரில் தமிழ் ஸ்டுடியோவில் நிறையக் கலந்துரையாடல்கள் இலவசமாக நடைபெற்றுவருகிறது. பயிற்சி பட்டறைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த கட்டணம் கூட தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கு நிதியாக வந்து சேருகிறது. மக்களிடம் நிதி திரட்டி மக்களுக்காகவே செய்வதுதான் இதில் முக்கியமானது. அப்படியான இயக்கங்கள் இங்கு மிகக் குறைவு. அந்த குறைவான இயக்கங்களில் மிக முக்கியமான இயக்கம் தமிழ் ஸ்டுடியோ.


இதுபோன்ற இயக்கத்திற்கான தேவைகள் நிதி மட்டும் அல்ல மக்களின் அக்கறையும் தேவை. தமிழ் ஸ்டுடியோவில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் கருத்தரங்கமும் கலந்துரையாடலும் இங்கு வரும் ஒவ்வொரு நண்பர்களுக்கும், துணை இயக்குநர்களுக்கும், திரைத்துறை ஆர்வமுள்ள அனைவருக்குமே அரசியல் தெளிவு, திரைத்துறையில் எப்படி இயங்க வேண்டும், சுற்றுச்சூழல் அறிவு போன்ற பல்வேறு தெளிவுகளை இங்கு நடைபெறும் கருத்தரங்கங்கள், கலந்துரையாடல்கள் மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.

சதிஷ்:

மனித சமூகம் இருக்கும்வரை இயக்கங்களின் தேவை இருக்கிறது. இதை நாம் அறிவியல் பூர்வமாகப் பார்ப்போமானால், இந்த உலகமே இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு பொருளின் இயக்கத்தை அறிவியலில் கண்டறிந்த பின்புதான் விஞ்ஞான ரீதியாக பல்வேறு மாற்றங்கள் இந்த உலகத்தில் நிகழ்ந்து இருக்கின்றன. அதுபோல்தான் மனிதர்களால் உருவாக்கப்படும் அரசியல் இயக்கங்கள், சினிமா இயக்கங்கள், இன்ன பிற இயக்கங்கள் இந்த மனித சமூகத்தில் ஒரு மாற்றத்தை நிகழ்த்த உருவாக்கப்படுகிறது. அப்படி உருவாக்கப்படும் இயக்கங்கள் அதன் தேவை இருக்கும்வரை தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். இதுபோல் தமிழ் ஸ்டுடியோ இயக்கம் தொங்கப்பட்டு, தொடர்ந்து 11 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கிறது.


பிரான்சில் புதிய அலை இயக்கம் தொடங்கப்பட்டு நிறைய விமர்சன நூல்கள் வெளியானது. அந்த நூல்களில் உள்ள ஒரு பத்தியில் “உங்களின் சினிமாக்கள் அயோக்கியத்தனம். அது மக்களை ஒரு தந்திர வலைக்குள் வீழ்த்தும் குப்பை. அங்கு மனதைக் கட்டிப்போடும் மாய்மாலம் மட்டுமே எஞ்சுகிறது. இது கலை இல்லை... உண்மையான கலை இந்த வேலையைச் செய்யாது... அது மக்களை ஏமாற்றாது. மாறாக தனக்குள் ஒரு அழகையும் வடிவத்தையும் உருவாக்கிக்கொண்டு மக்களையும் ரசிக்க வைக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுமாதிரிதான் தமிழ் சினிமா 100ஆண்டுகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இங்கிருக்கும் சினிமா மக்களுக்கான சினிமா இல்லை. இங்கிருக்கும் சினிமாவில் அழகியல், வடிவம், உள்ளடக்கம், அரசியல் ஆகிய நான்கும் சேர்ந்து உருவாகிற சினிமாதான் மக்களுக்கான சினிமா. அதை மீட்டெடுப்பதுதான் தமிழ் ஸ்டுடியோவின் நோக்கமாக இருக்கிறது.

விஜய் சசி:

மனித சமூகமே தேவையின் அடிப்படையில் இயங்குகிறது. அதுபோல இங்கு ஒரு அமைப்போ இயக்கமோ தோன்றினால் அதற்கு ஒரு தேவை உள்ளது. 2008 காலகட்டத்தில் தமிழ்ச்சூழலில் சினிமா என்கிற கலையின் வடிவப் புரிதல் இல்லாமல் மிக மோசமான உள்ளடக்கத்தைக் கொண்டு வெளியாகிகொண்டிருந்தது. அதே காலகட்டத்தில் சில குறும்படங்கள் இதுவரை வெகுஜன சினிமாக்களில் கையாளப்படாத சமூக யதார்த்ததுடனான உள்ளடக்கத்தைக் கொண்டு வெளியாயின.


இதுபோன்ற குறும்பட, ஆவணப்படங்களுக்கான ஒரு வெளியை உருவாக்கவும், சினிமா ஆர்வத்தோடு வருகிற இளைஞர்களுக்கு வழிகாட்டவும் தமிழ்ஸ்டுடியோ.காம் என்ற இணையதளத்தை தொடங்கினார்கள். அதன்பிறகு குறும்படம் வட்டம் என்ற ஒன்றை தொடங்கி சினிமா ஆர்வலர்களை ஒன்று சேர்த்து குறும்படங்களைத் திரையிட்டும், விவாதித்தும் இந்த இணையதளத்தில் பதிவு செய்துவந்தனர். இதுவரை இணையதளமாக இயங்கிய தமிழ்ஸ்டுடியோ.காம் தன்னுடைய களப்பணியாக குறுந்திரைப் பயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுக்க உள்ள கிராமங்களில் குறும்பட ஆவணப்படங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியத. இந்த முன்னெடுப்பே தமிழ் ஸ்டுடியோ இயக்கமாக மாறியதின் ஒரு பகுதியை நான் பார்கிறேன்.

தமிழ்மணி:

சினிமா முழுக்க முழுக்க பொருளாதாரம் சார்ந்தது, அது கைகூடுவது என்பதெல்லாம் கடினம் என்பதுதான் பொதுமக்களின் பார்வையாக இருக்கிறது. சினிமாவை ஒரு கலையாகப் பார்க்கப்படவில்லை. சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமே இயங்கிவந்துக்கொண்டிருகிறது. இந்த சூழலில் பல இளைஞர்கள் கலையின் வழியாக அரசியல், சமூகம் சார்ந்து செயல்படுவதற்கு உதவியாகத்தான் தமிழ்ஸ்டுடியோ.காம் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


மக்களுக்காக இயங்கிக்கொண்டிருக்கிற ஒரு இயக்கம், மக்களுக்காகவே வேலை செய்துகொண்டிருக்கும்போது அந்த இயக்கம் எந்த ஒரு பெரு முதலாளிகளையோ, கார்ப்பரேட் நிறுவனங்களையோ சார்ந்து இல்லாமல் முழுக்க முழுக்க மக்களிடமே நிதி வசூலித்து கலையை மக்களுக்காக மாற்றவேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டது தமிழ்ஸ்டுடியோ.காம் தமிழ் ஸ்டுடியோ குறும்படங்களுக்கான வெளியாகத் தொடங்கி படிப்படியாக பல்வேறு வளர்ச்சிகளை அடைந்திருக்கிறது.

ரெங்கநாதன் ம:

தமிழகத்தில் இதுவரைக்கும் பெரும்பான்மையானவர்கள் சினிமாவைக் கேளிக்கையாகவும் வியாபாரமாகவும் மட்டுமே பார்த்துவந்திருக்கிறார்கள். திரைத்துறையில் உள்ள பெரும்பாலானோரும் கூட சினிமாவை இப்படியாகத்தான் பார்த்து வந்திருக்கிறார்கள். அந்த பின்புலத்தில் சில தனித்த மனிதர்களும் சில நண்பர்கள் குழுக்களும் மட்டுமே மாற்று சினிமா, நல்ல சினிமா, சினிமாவை அரசியல் மையப்படுத்துவது பற்றியெல்லாம் பேசிவந்திருக்கிறார்கள். இவ்வகையில் ஒரு இயக்கமாகத் தமிழ் நாட்டில் தமிழ் ஸ்டுடியோவிற்கு ஒரு முன்னோடியே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


சமீப காலங்களில் சென்னை சுயாதீன திரைப்படவிழா, பியூர் சினிமா புத்தக அங்காடியை புதுப்பித்தது போன்றவைகளுக்கு பின்னர் தமிழ் ஸ்டுடியோவின் பொருளாதார பின்புலம் குறித்து வெளியில் உண்மைக்கு புறம்பான கதையாடல் நிறைய ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்கத்தில் நிதி எவ்வளவு பற்றாக்குறையாக இருக்கிறது என்கிற உண்மை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருக்கிறது.

தமிழ் ஸ்டுடியோ முன்வைக்கிற ஒரு நல்ல சினிமாவிற்கான இலக்கணத்தில் இதுதான் ஒன்றாம் அம்சம், இரண்டாம் அம்சம், மூன்றாம் அம்சம் என்பதை ஒரே இடத்தில் கண்டறிய முடியாது. ஆனால் இதுகுறித்து ஒருவருக்குத் தேடல் இருந்தால், அவர் தமிழ் ஸ்டுடியோவுடன் தொடர்ந்து பயணிக்கும்போது அவரால் தமிழ் ஸ்டுடியோ முன்வைக்கிற நல்ல சினிமாவுக்கான இலக்கணங்கள் என்னென்ன என்பதனை வரையறுக்க முடியவில்லை என்றாலும் உணர முடியும். அவரால் தமிழ் ஸ்டுடியோ முன் வைக்கிற விமர்சனங்களுடனும், தமிழ் ஸ்டுடியோ தனது ஆய்வின் மூலம் வெளியிடுகின்ற முடிவுகளுடனும் ஒத்துபோகமுடியும். 11 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை அப்படியான இலக்கணம் வரையறுக்கப்படவில்லை. ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு அப்படியான இலக்கண வரையறை தமிழ் ஸ்டுடியோ மூலமாகத் தமிழ்ச் சமூகத்திற்கு அளிக்கப்படலாம்.
கேரளாவில் 85-கும் அதிகமான திரைப்படச் சங்கங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 15-கும் மேற்பட்ட திரைப்பட குழுக்கள் சிலவை இயக்கங்களாகவும், சங்கங்களாகவும், மாத இதழாகவும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் அப்படிக் குறைவாக இருக்கிற குழுக்களிலேயே இணக்கமான சூழ்நிலை இல்லை என்பது வருத்தமளிக்கக் கூடியது. அதற்குக் கருத்தியல் ரீதியான காரணங்கள் சில இருந்தாலும், தனி மனிதர்களுக்கு இடையிலான இணக்கமின்மையும் முக்கிய காரணமாக இருக்கிறது. அது கண்டிப்பாக களையப்படவேண்டும்.


சணல்குமார் சசிதரன் திரைப்பட சங்கங்கள் குறித்துப் பேசும்போது, “பெரும்பான்மையான திரைப்பட சங்கங்கள் தன்முனைப்புள்ள ஒற்றை மனிதரை நம்பித்தான் இயங்குகிறது. பல்வேறு காரணங்களால் அந்நபரால் சிறிதுகாலம் செயல்பட முடியாமல் போகலாம், அப்போது அச்சங்கம் முடங்கிப்போகலாம். திரைப்பட சங்க செயல்பாடுகளை ஒரு கூட்டமைப்புதான் முன்னெடுக்க வேண்டும், நடத்தவேண்டும்” என்றார். இந்தச் சிக்கல் தமிழ் ஸ்டுடியோவிற்கு வராதமாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
மையநீரோட்டத்திலிருந்து வேறுபட்டு கலையைச் சமூகம் சார்ந்தும் மக்கள் அரசியல் சார்ந்தும் மாற்றவேண்டிய தேவை இங்கிருக்கிறது என்பதை தமிழ் ஸ்டுடியோ காட்டமாகவும் தீர்க்கமாகவும் முன்வைக்கிறது. அதற்கான களப்பணியைத் தொடர்ந்து செய்துகொண்டும் இருக்கிறது.


தமிழ் சினிமாவின் மூலமாக தமிழ் சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்துவதைத் தாண்டி நேரடையாக தமிழ் சமூகத்திலேயே சிறுவெடிப்புகள் என கருதுமளவிலான மாற்றத்தை தமிழ் ஸ்டுடியோ நிகழ்த்தியிருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பிடிப்பதைத் தாண்டி, தமிழுலகின் கலை வரலாற்றிலேயே தனக்கான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. இதில் முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டிய விசயம், அது தனது பரப்புரையினாலும் கருத்தாடல்களினாலும் மட்டுமே இவ்விடத்தைப் பிடிக்கவில்லை. மாறாக தனது செயல்பாடுகளினாலும் மக்களிடம் அதனைத் கொண்டு சேர்த்ததினாலும்தான் இவ்விடத்தைப் பிடித்திருக்கிறது.

பார்த்திபன்:

ஒரு இயக்கம் எப்படி உருவாகிறது, அந்த இயக்கத்தின் தேவை என்னவாக இருக்கிறது என்பது தமிழ்ஸ்டுடியோ.காம்-லிருந்து, தமிழ் ஸ்டுடியோ இயக்கமாக மாறிய வளர்ச்சியிலேயே தெரிந்துகொள்ள முடியும். அந்த வளர்ச்சியை காலவரிசைப்படி பார்த்தால் தமிழ்ஸ்டுடியோ.காம்-ஆக இருக்கும்போது அதன் செயல்பாடுகள் என்னவாக இருந்தது, இங்கிருக்கும் சூழ்நிலைகள்தான் தமிழ் ஸ்டுடியோ.காம்-ஐ இயக்கமாக மாறவழிவகுக்கிறது என்று என்னால் தீர்க்கமாகச் சொல்லமுடியும்.

ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரைக்கும் பல பொருளாதார நெருக்கடி இருந்தாலும், ஒரு இயக்கத்தின் செயல்பாடுகள் தமிழ்ஸ்டுடியோ.காம்-லிருந்து இயக்கமாக மாறுவதற்கும் அதற்கான வெளிகளைப் பல வகைகளில் விரிவாக்கம் செய்ததிலிருந்து ஒருவருடைய பங்கு அளப்பரியதாக இருக்கிறது.


தமிழ்ஸ்டுடியோ.காம் ஏன் ஒரு இயக்கமாக மாறியது என்ற கேள்வியைக் கேட்டு அதற்கு பதில் தேட தொடங்கினால், அதற்கான எல்லா பதில்களும்  இயக்கத்தினுடைய செயல்பாடுகளின் வழியாகவும், இந்த இயக்கம் எப்படி கொள்கை சார்ந்து மாறுபட்டுக்கொண்டிருக்கிறது என்பதன் வழியாகவும் தெரியவரும்.

ஆரம்ப காலகட்டங்களில் நிறைய பேர் குறும்படங்களை எடுத்து அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல் திணறிய காலகட்டங்களில் அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஆரம்பித்த ஒரு இணையத்தளம், திரைப்பட அரசியலினால் உந்தப்பட்டு இயக்கமாக மாறுகிறது என்பது செயல்பாடுகளைப் பார்க்கும்போது கண்கூடாக தெரியும். ஒரு சமூக அரசியல் பார்வையற்று, சினிமா என்கிற மிகப் பெரிய கலை வடிவத்தைக்  கேளி கூத்துக்காகவும், மக்களை குதூகலப்படுத்தி இரண்டரை மணி நேரம் ஒரு இருட்டறைக்குள் அடைத்துவைத்து சந்தோசபடுத்தி வெளியில் அனுப்புகிற ஒரு கலை வடிவமாகவே மாற்றியதில் தமிழ் சினிமா சூழலில் இயங்கிக்கொண்டிருக்கிற கலைஞர்களுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. அதிலிருந்து வேறுபட்டு கலையை சமூகத்தின் சார்ந்தும், மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் சார்ந்தும் மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது என்பதைத் தமிழ் ஸ்டுடியோ அதனுடைய வளர்ச்சியினூடே நிறைய இடங்களில் காட்டமாகவும் தீர்க்கமாகவும் பதிவு செய்திருக்கிறது, அதற்கான வேலையையும் செய்துவருகிறது. 

சதிஷ்:

கடந்த 23.11.2019ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோவின் 12ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த 11ஆண்டு காலமாகத் தொடர்ந்து நிறைய முன்னெடுப்புகளையும், களப்பணிகளையும் செய்துவருகிறது. 23.11.2008 அன்று தமிழ்ஸ்டுடியோ.காம் என்கிற இணைய இதழ் தொடங்கப்பட்டது. அந்நாளைத்தான் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு வருடமாக தமிழ் ஸ்டுடியோவின் தொடக்க விழாவாக கொண்டாடிவருகிறது. ஆனால் அதற்கு முன்னரே அதாவது 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ் ஸ்டுடியோ `குறும்பட வட்டத்தை` தொடங்கியிருந்தது. ஆனாலும் தமிழ் ஸ்டுடியோ.காம் தொடங்கப்பட்ட நாளையே தொடக்கவிழாவாக கொண்டாடிவருகிறோம்.


குறுப்படமும் ஒரு கலையாக இருக்கிறது, அதுகுறித்து தமிழ் சினிமாவிலும் மக்களிடமும் போதுமான அறிமுகம் இல்லாததால் மக்களிடம் குறுப்படத்தின் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது சனிகிழமைகளில் குறும்பட வட்டம் என்கிற பெயரில் நான்கைந்து படங்களை தேர்வு செய்து திரையிடப்பட்டு, விவாதிக்கபடும். இதுவரை 60க்கும் மேற்ப்பட்ட குறும்பட வட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இது அனைத்தும் தமிழ் ஸ்டுடியோ.காம்-ல் குறும்பட வட்டம் என்கிற பிரிவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்பிறகு 23.11.2009-ல் தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவில் `கூடு` என்ற பெயரில் இலக்கியத்திற்கான பிரிவு தொடங்கப்பட்டது. இலக்கியம் என்பது ஒரு சினிமாவிற்கு முக்கியமாக தேவைப்படுகிறது. சினிமாவிலும் கதை சொல்லும் முறை இருப்பதால், கதைசொல்லி என்கிற பகுதியை அறிமுகம் செய்து பல எழுத்தாளர்களின் கதையை ஒலி வடிவில் பதிவு செய்துள்ளது. தமிழ் சினிமாவில் இலக்கியத்தின் பரிச்சயம் மிக குறைவாக இருக்கிறது. இலக்கியத்தைப் படித்துவிட்டு நிறைய இயக்குனர்கள் வருவது இல்லை. சிறுகதை, நாவல் போன்றவைகளின் தேவை சினிமாவிற்கு இருப்பாதால் கூடு என்கிற இணைய இதழ் தொடங்கப்பட்டு, அதில் பல எழுத்தாளர்களின் பேட்டி, விமர்சனம், வெளிநாட்டு இலக்கியங்களை அறிமுகம் செய்வது, இலக்கியங்கள் சினிமாவில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பதிவு செய்திருக்கிறது. இதை 2008, 2009 ஆண்டுகளில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து செய்துகொண்டிருந்தது.

பார்த்திபன்:

2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு இணையதளத்தை தொடங்கி, அதில் குறும்படங்களுக்கான வெளியை உருவாக்குகிறார்கள். அந்த குறும்படங்களை வாங்கலாம் அல்லது குறும்படங்களை அங்குத் திரையிட்டு விற்கவும் செய்யலாம்.

இந்த முறையானது குறும்படங்களை எடுத்து யாரிடம் கொடுப்பது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு நல்ல வெளியாக இருந்தது. இதில் பலர் பயனடைந்திருக்கிறார்கள்.

மேலும் ஜனவரி மாதத்திலேயே முதல் பெளர்ணமி இரவு நடத்தப்பட்டது. வெளிநாடுகளில் மட்டுமே இருந்த கலாச்சாரத்தை இங்கு முதன் முறையாகத் தமிழ் ஸ்டுடியோ முன்னெடுத்தது. பெளர்ணமி நாளை தேர்ந்தெடுத்து அந்நாளில் குறும்படம், ஆவணப்படம், திரைப்படம் போன்றவை திரையிட்டு சினிமாவை எந்தவிதமாக அணுகலாம், அந்த சினிமாவை பார்ப்பதற்கான நாகரீகத்தை உருவாக்க முயற்சி செய்தது தமிழ் ஸ்டுடியோ. இரவு முழுக்க ஒரு சில படங்களைத் திரையிட்டு, அந்தப் படங்கள் குறித்தான கலந்துரையாடலும் நடைபெறும்.

முதல் பெளர்ணமி இரவு நிகழ்வை நடிகர் சார்லி தொடங்கிவைத்தார். லெனின், நாடக வெளியில் பல ஆய்வுகளைச் செய்த வெளி ரங்கராஜன், நடிப்பு பயிற்சி கொடுக்கும் ஜெயராவ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தனர். அந்த நிகழ்வின் தொடக்கத்தில் உலகத்திலேயே மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட ‘Little Terrorist’ குறும்படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு தமிழில் எடுக்கப்பட்ட 'என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்' குறும்படம் திரையிடப்பட்டது.


2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் லெனின் விருது தொடங்கப்பட்டது. குறும்படங்களைப் பரந்த வெளிக்குக் கொண்டுசெல்லவேண்டும், அதன் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் ஊக்கப்படுத்தவேண்டும் என்று தமிழ் ஸ்டுடியோ முற்படுகிறது. ஏனென்றால் குறும்படம் தன்னிச்சையாக எடுக்கப்பட்டது. எந்தவித பொருளாதார பின்புலம் படைத்த பண முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கடன் வாங்கி எடுக்கப்பட்ட படம் கிடையாது. திரைப்படத்தின் மீது ஆர்வம் இருக்கிற ஒரு சிலரால் மட்டும் இணைந்து எடுக்கக்கூடிய படமாக இந்தப் படங்கள் இருக்கின்றன. அப்படியான படங்கள்  யாருடைய கண்களிலும் படாமல் போய்விடுகிறது என்பதால் அதற்கான வெளியை உருவாக்கவேண்டும், அதை உருவாக்குவதன் மூலம் இங்கு நிறையபேர் குறும்படம் எடுக்க முன்வருவார்கள், அவர்கள் மக்களின் பிரச்னையை பேச வாய்ப்புகள் இருக்கிறது என்று குறும்படம் எடுக்கும் கலைஞர்களை ஊக்குவிக்கிறது. அதை ஊக்குவிக்கும் வகையில் லெனின் விருதை அறிமுகப்படுத்தியது தமிழ் ஸ்டுடியோ. ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி லெனின் விருதின் தொடக்கவிழா ஆரம்பிக்கப்பட்டது. அந்த தொடக்கவிழாவில் படத்தொகுப்பாளர் இயக்குநர்  லெனினிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு குறும்பட இயக்கத்தில் செயல்படுகிற அனைவரையும் வரவழைத்து, அவர்களின் படங்களைத் திரையிட்டு, 7 நாள் நிகழ்வாக, அந்த 7 நாளும் வெவ்வேறு பிரிவுகளில் எடுக்கப்பட்ட, அதாவது சிறுகதைகளைத் தழுவி எடுக்கப்பட்ட குறும்படங்கள் ஒரு நாளும், ஆவணப்படங்கள் ஒரு நாளும், பிற மொழி குறும்படங்கள் ஒரு நாளும்,  ஈழப்படங்கள் ஒரு நாளும் என 7  பிரிவுகளில் திரையிடப்பட்ட குறும்படங்களில் தெரிவுசெய்யப்பட்ட குறும்படங்களுக்குத்தான் விருது வழங்கப்பட்டது.

 2010 நவம்பர் மாதம் குறும்பட படைப்பாளிகளுக்கான ஒரு சங்கத்தை உருவாக்கும் முயற்சியில் தமிழ் ஸ்டுடியோ ஈடுபட்டது.  அந்த சங்கத்தின் மூலமாகக் குறும்படங்களை எப்படி விற்கமுடியும், அதன் மூலம் எப்படிப் பணத்தை ஈட்கமுடியும் என்பதற்கான கலந்துரையாடல் கூட்டமாகவும் அது இருந்திருக்கிறது.


நவம்பர் 22ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், புதிய தலைமுறை செய்தியின் ஆசிரியர் மாலன், தயாரிப்பாளர் சிவா, இயக்குனர் பிரபு சாலமன், சமூக ஆர்வலர் திருநங்கை கல்கி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அதே நவம்பர் மாதம் கதை சொல்லி வழக்கத்தை மீண்டும் கொண்டுவந்தார்கள்.  இதற்கு முன்னர் கதைசொல்லிகள் நிறையப் பேர் இருந்த நிலையில் காலப் போக்கில் அது வழக்குழைந்து போய்விட்டது. அதை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில், கதை சொல்லல் மிக முக்கியமானது எனக் கருதி கதை சொல்லல் முறை ஆரம்பிக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரமிள் நூலகம் தொடங்குவதற்கான வேலை துரிதப்படுத்தப்பட்டது.

ராஜேஷ்:

2011ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி படிமை மாணவர்களுக்கான முதல் இலக்கிய வகுப்பை எழுத்தாளர் சாரு நிவேதிதா எடுத்தார். அக்டோபர் மாதம் 29ஆம் தேதி ஆனந்த் பட்வர்தன் திரையிடல் தொடங்கப்பட்டது.

நவம்பர் மாதம் 6ஆம் தேதி `யாவும் உல` என்கிற இலக்கிய நிகழ்வை எழுத்தாளர் பிரபஞ்சன் தொடங்கிவைத்தார். 22ஆம் தேதி ஆர்ஆர் சீனிவாசன் திரைப்பட ரசனை பயிற்சி வகுப்பு நடத்தினார்.

2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி லெனின் விருது இரண்டாவது ஆண்டாக வழங்கப்பட்டது. இரண்டாம் ஆண்டுக்கான லெனின் விருது காஞ்சனை திரைப்பட இயக்கத்தை நடத்திவருபவரும், சுயாதீன திரைப்படத்தை எடுத்துவருபவருமான ஆர்ஆர் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு அதே ஆண்டு பேசமொழி என்கிற இணைய இதழ் தொடங்கப்பட்டது. அதனை இயக்குனர் பாலுமகேந்திரா தொடங்கிவைத்தார்.


லோகேஷ்:

2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி சமூக விழிப்புணர்வு நிகழ்வு தொடங்கப்பட்டது. `அகம் புறம்` என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டு, மக்களின் பிரச்னையை பேசும் நிகழ்வாக அது நடந்தது.

பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி, படிமை திரைப்பட இயக்கம் இரண்டாவது பேட்ச்காக அழைப்பு விடுவிக்கப்பட்டது.

பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி ஆஸ்கார் பரிந்துரைத்த திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் ஸ்டுடியோ மூலமாகத் திரையிடப்பட்டு, அதுகுறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. அந்த கலந்துரையாடல் நல்ல சினிமா சார்ந்த ஒரு தெளிவை கொண்டு சேர்த்தது.

பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி, short by short, transalation ஆகியவைகளை பேசமொழி இணைய இதழிலில் அறிமுகம் செய்யப்பட்டது.

பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி நிதி பிரச்னையின் காரணமாக குறும்பட வட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அதன் பின்னர் மக்களிடம் நிதி திரட்டி அந்த வருடத்திலேயே குறும்பட வட்டம் திரும்பச் செயல்படத் தொடங்கியது.

ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ம. அரங்கநாதன் கலந்துரையாடல் நிகழ்வில் ankur என்கிற ஆவணப்படம் திரையிடப்பட்டது.


மே மாதம் 1ஆம் தேதி சலனம் டிரஸ்டின் லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களிடம் நிதி திரட்டி அதன் மூலமாக குறும்படம், ஆவணப்படம், திரைப்படம் போன்றவைகளை தயாரிப்பது குறித்து பேசியது சலனம் டிரஸ்ட்.

ஜூன் மாதம் 24ஆம் தேதி பேசமொழி பதிப்பகத்திற்கு நிதி திரட்டப்பட்டது.

செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி திரைக்கதை பயிற்சி பட்டறையைத் தமிழ் ஸ்டுடியோ அருண் நடத்தினார்.

ரெங்கநாதன் ம:

2014 ஜனவரியில் பேசமொழி பதிப்பகம் தொடங்கப்பட்டது. இதுவரை 67 புத்தங்கள் வெளிவந்திருக்கிறது. முதல் வெளியீடு தோழர் யமுனா ராஜேந்திரன் எழுதிய இலங்கையின் கொலைக்களம். 2012-ஆம் ஆண்டு பேசாமொழி மின்னிதழாக ஆரம்பிக்கப்பட்டது. 2014-ல் பதிப்பகமாகப் பரிணமித்து வளர்ச்சியடைந்தது.


2014ஆம் ஆண்டு பாலுமகேந்திரா விருது தொடங்கப்பட்டது. தனது ஆரம்ப காலகட்டத்தில் மையநீரோட்ட சினிமாவின் மாற்றாகக் குறும்படங்களைத்தான் தமிழ் ஸ்டுடியோ முன்வைத்தது. ஆனால் காலம் போகப்போகத் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மூலமாகவும், வேறுசில காரணங்களாலும் குறும்படங்களும் மைய நீரோட்ட படங்கள் மாதிரியான ரசனை சமரசத்திற்கு உட்பட்டு, அதனுடைய தன்மை மாறியது. அப்போது குவிந்துக் கிடக்கும் குறும்படங்களுள் எது நல்ல குறும்படம் என்று மக்களுக்கு வழிகாட்டுவதற்காக பாலுமகேந்திரா குறும்பட விருது தொடங்கப்பட்டது. முதல் ஆண்டு எளிமையாகத் தொடங்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் விருது வழங்கினார். ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ படத்திற்கு விருதளிக்கப்பட்டது. அப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் பின்னாட்களில் `குரங்கு பொம்மை` படத்தை இயக்கினார்.

அக்டோபர் மாதம் ‘Are You Listening?’ என்கிற படம் திரையிடப்பட்டு சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் முதல் திரையரங்கை நிறுவிய வின்சன்ட் சாமிகண்ணுவின் நினைவாக சாமிக்கண்ணு எனப் பெயரிடப்பட்டது. வின்சென்ட் சாமிக்கண்ணுவைப் பற்றிய ஆவணப்படத்தின் பெயர் ‘பேசாமொழி’ என்பது குறிப்பிடத்தக்கது. திரையிடலை நடத்துவது, திரையிடல் நடத்திய பின்னர் கலந்துரையாடல் செய்வது போன்றவை மட்டுமல்லாது திரைப்பட ரசனையை வளர்த்தெடுக்கும் நோக்கத்திலும்தான் இந்த திரைப்பட சங்கம் தொடங்கப்பட்டது.


2014-ல் படிமையின் மூன்றாவது பேட்ச் தொடங்கப்பட்டது. பல மாணவர்கள் ஆரம்பத்தில் பங்குபெற்றாலும், பல கட்டங்களுக்குப் பிறகு 8 மாணவர்கள் தங்கினார்கள்.

பேசமொழி மின்னிதழில் 2014ஆம் ஆண்டு பல முக்கியமான தலைப்புகளில் 15 இதழ்கள் வெளியாகியது. குறிப்பாக சத்யஜித்ரே, ஆனந்த் பட்வர்தன், கென் லோச் போன்றவர்கள் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய இதழ்கள் வெளிவந்தன.

தமிழ் ஸ்டுடியோவின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று ஆவணப்படுத்துதல். அதன் நீட்சியாகப் பழைய திரைப்பட இதழ்களான படப்பெட்டி மற்றும் அகவெளி ஆகியவற்றைக் காலங்காலத்திற்கும் படிக்கவேண்டும் என்பதற்காகத் தட்டச்சு செய்யப்பட்டது. வளர்ந்துவரும் இளம் படைப்பாளிகளை இனம் காண்பதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழ் ஸ்டுடியோ இணையதளத்தில் படைப்பாளிகள் என்ற உட்பிரிவில், பல இளம் படைப்பாளிகளைக் கண்டறிந்து அவர்களின் நேர்காணல்கள் வெளிவந்தன.

2014ஆம் ஆண்டு நான்காவது லெனின் விருது வழங்கப்பட்டது. இதை இந்தியாவின் முக்கியமான இயக்குனர்களின் ஒருவரான புத்ததேப் தாஸ்குப்தா வழங்க, உலகத்தின் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குனரான ஆனந்த் பட்வர்தன் பெற்றுக்கொண்டார். ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரம் கொடுப்பது மட்டுமல்லாமல் அவரது படைப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், அதைப் பற்றிய ஒரு உரையாடலை சமூகத்தில் நிகழ்த்துவதும் லெனின் விருதின் முக்கியமான நோக்கமாகும். அந்தவகையில் ஆனந்த் பட்வர்தனின் படங்களைச் சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டது. இயக்குனர் பாலாஜி சக்திவேல் தமிழ் ஸ்டுடியோவின் நிகழ்விற்கு முதல்முதலாக வந்தது 2014ஆம் ஆண்டு ஆனந்த் பட்வர்தனின் ‘ஜெய் பீம் காம்ரேட்’ திரையிடலுக்குத்தான். அப்போது வந்தவர் இன்றுவரை தமிழ் ஸ்டுடியோவின் உற்ற நண்பராக இருக்கிறார். படச்சுருளின் ஒரே ஒரு புரவலர் சந்தா பாலாஜி சக்திவேல் என்பது குறிப்பிடத்தகுந்தது.


கழுகு பார்வையில் பார்த்தால் 2014ஆம் ஆண்டு தமிழ் ஸ்டுடியோவிற்கு பொருளாதார ரீதியாகவும், சரியான அலுவலகம் அமையாமலும் நெருக்கடியான சூழல்தான் நிலவியிருக்கிறது. அப்படியான நெருக்கடியான வருடமாக இருந்தாலும், அதிகப் பணச் செலவு இல்லாத பல முன்னெடுப்புகளைத் தொடர்ந்து நடத்தப்பட்டிருக்கிறது.

தமிழ் ஸ்டுடியோ தற்போது பன்னிரெண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அப்படிப் பார்கையில், 2014 சரியாக அதன் தற்போது வரையிலான பயணத்தின் மத்தியப் புள்ளியாக இருக்கிறது. 2014-ற்கு முன்னர் இணையத்தளம், மின்னிதழ், குறும்பட வட்டம், பௌர்ணமி இரவு, 3 தமிழ் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட லெனின் விருது என்று அதனுடைய வீச்சு ஒரு எல்லைக்குள் தானிருந்தது. 2014-ல் பேசாமொழி பதிப்பகம் மற்றும் ஆனந்த பட்வர்தனுக்கு விருது வழங்கியதன் முலமாக தனது சிறகினை அகல விரித்து அசைந்துப் பார்த்தது எனலாம். 2014-ற்கு பிறகு படச்சுருள், ப்யூர் சினிமா புத்தக அங்காடி, தென்மாவட்டங்களில் முக்கிய நிகழ்வுகள், IFFC, பயிற்சிப்பட்டறைகள், பல்வேறு மாவட்டங்களில் சினிமா மையங்கள், கருத்தரங்குகள், ADTC, தலித் திரைப்பட விழா என்று வெகுதூரம் பயணித்தது. 

விஜய் சசி:

தமிழ் சினிமாவிற்கும் தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கும் 2016ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டு. 1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் சினிமா 2016ஆம் ஆண்டு அதன் நூற்றாண்டை கடக்கிறது. அதுபோல தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தின் முக்கிய முன்னெடுப்பான பியூர் சினிமா புத்தக அங்காடியும் 2016ஆம் ஆண்டுதான் திறக்கப்பட்டது. பியூர் சினிமா, புத்தக அங்காடியாக மட்டுமில்லாமல் அதில் பல பிரிவுகள் இருக்கின்றன. தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழி புத்தகங்களும், நாடகம், நுண்கலை சார்ந்த புத்தகங்களும், இலக்கியத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்ட சினிமா புத்தகங்களும் அங்கு கிடைக்கின்றன. NFDC டிவிடி கலைக்‌ஷன்ஸ் உள்ளன. குறும்பட ஆவணப்பட டிவிடிக்களும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. பியூர் சினிமாவில் தற்போது படிமை மாணவர்கள் நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த நூலகத்தை படிமை மாணவர்கள் வடிவமைத்ததால் அதற்கு `படிமை மாணவர்கள்` என்று பெயரிடப்பட்டுள்ளது. அதனை உதவி இயக்குனர்கள் (ADTC)பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் பயன்படுத்திவருகின்றனர்.

அதன்பிறகு பியூர் சினிமா உறுப்பினர் சேர்க்கை ஒன்று தொடங்கப்படுகிறது. இந்த உறுப்பினர்கள் பிரமிள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை இலவசமாகப் படிக்கலாம், பியூர் சினிமாவில் உள்ள புத்தகங்களை 10 சதவிகித தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ளலாம். அதை தவிர அவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ நடத்தும் பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ளச் சலுகையும் வழங்கப்படுகிறது.


தமிழ்சினிமா 2016ஆம் ஆண்டு நூற்றாண்டைக் கடந்த நிலையில், தமிழக அரசோ, சினிமா சார்ந்த அமைப்போ, சங்கங்களோ என யாரும் தமிழ் சினிமா நூற்றாண்டை கடந்ததை நிகழ்வாக யாரும் முன்னெடுக்கவில்லை. அதை தமிழ் ஸ்டுடியோ இயக்கம் மட்டுமே ‘தமிழ் சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம்’ என்கிற நிகழ்வை நடத்தியது. அதில், தமிழ் சினிமாவில் வெளியான 100 திரைபடங்களை திரையிடுவதற்கான விழா நடத்தப்பட்டது. அதில் 10 படங்கள் திரையிடப்பட்டன. முதல் படமாகப் பசி என்கிற படம் திரையிடப்பட்டது. இந்த திரையிடல் மூலமாக தமிழ் ஸ்டுடியோ இயக்கம் பல கலந்துரையாடல்களை ஏற்படுத்தி மக்களிடையே ஒரு விவாதத்தை உருவாக்கியது. சினிமா என்கிற கலை 19ஆம் நூற்றாண்டில் தமிழ்சூழலுக்கு அறிமுகமானாலும் அதனுடைய வடிவத்தை இங்குச் சரியாக புரிந்துகொள்ளவில்லை. அதன் தேவையாகத் திரையிடல் மூலமாகவும், கலந்துரையாடல் மூலமாகவும் சினிமாவின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் எப்படி அணுக வேண்டும் என்கிற விவாதத்தை முன்னெடுக்கும் விதத்தில் இது தொடங்கப்பட்டது.

அதன்பிறகு தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு பாராட்டு விழா 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. தேசிய விருது பெற்ற இயக்குனர் சுருதி ஹரிகரன் சுப்ரமனியன், இசையமைப்பாளர் அரவிந்த் சங்கர், இயக்குனர் அம்சன் குமார், தயாரிப்பாளர் அஷ்வின் ஆகியோரை பாராட்டும் விதமாக பாராட்டு விழாவை நடத்தியது தமிழ் ஸ்டுடியோ.
தமிழ் ஸ்டுடியோவின் கொள்கைகளை வரிசைபடுத்த முடியாது. அதை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் இயக்க செயல்பாடுகளே இயக்க கொள்கை. 

தமிழ்மணி:

2017ஆம் ஆண்டு பேசமொழி பதிப்பகத்திலிருந்து சினிமா சினிமா, கேளடி கண்மனி, ரிதம், சினிமா சந்தை, ஒளி என்னும் மொழி, ஒளிபதிவளனோடு ஒரு பயணம், போர் திரை போன்ற புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அதுபோல பல டிவிடி-களும் வெளியிடப்பட்டது.


தமிழ் சினிமா நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் 100 திரைக் கலைஞர்களுடன் கலந்துரையாடல் செய்வது, குறும்படங்களைக் கொண்டாடுதல் போன்ற பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன. சமூக பிரச்னைகளை குறித்துக் கலந்துரையாடல் செய்யக் கலகக்காரன் என்ற முக்கியமான நிகழ்வை நடத்தப்பட்டது. அது மக்களுக்காக சமூகத்தில் இயங்கொண்டிருக்கிற ஆளுமைகளை வெளிப்படுத்தும் வகையாகவும் இருந்தது.

இதனையடுத்து இந்த வருடத்தில் நான்காவது படிமை பேட்சும் தொடங்கப்பட்டது.

ரமேஷ்:

2018ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோவின் மிக முக்கிய முன்னெடுப்பான இந்தியாவில் முதல்
சுயாதீன திரைப்பட விழா (IFFC) -வை மக்களிடம் நிதி திரட்டி சென்னையில் நடத்தப்பட்டது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட கருப்பு நிறத்தை முன்னிறுத்தி பெருந்திரளாக இந்நிகழ்வு நடத்தப்பட்டது. இந்திய அளவில் சுயாதீன திரைப்படங்களுக்கென்றொரு வெளியை உருவாக்கிய இந்நிகழ்வில் சுயாதீனத்திரைப்படத்தின் முக்கியத்துவம், அதன் அரசியல், சினிமா ரசனை வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்றவை முக்கிய நிகழ்வாகவும், வெறும் திரையிடல் மட்டுமின்றி அத்திரைப்படத்தினைப் பற்றிய விவாதமும் நடத்தப்பட்டது.


தமிழ் ஸ்டுடியோ ஆரம்பத்தில் செய்துகொண்டிருந்த சாமிக் கண்ணு திரைப்பட திரையிடல் சில பொருளாதார பிரச்னையால் நிறுத்தப்பட்ட நிலையில், அது மீண்டும் மாற்று உருவாக்கம் செய்து தொடர்ந்து திரைப்படங்களைத் திரையரங்கில் திரையிடப்பட்டது. முதல் படமாக இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ’அழியாத கோலங்கள்’ திரையிடப்பட்டுச் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் வெற்றிமாறன் பார்வையாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அடுத்தப்படமான மிகவும் சர்ச்சைக்குள்ளான தணிக்கையிலும் பாசிச அரசியலிலும் சிக்கி பெரும் போராட்டத்திற்குப் பிறகு வெளியான இயக்குனர் சணல்குமார் சசிதரன் இயக்கிய ’எஸ் துர்கா` திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அப்படத்தின் இயக்குனரே பார்வையாளர்களிடம் கலந்துரையாடலில் பங்கேற்றார். இத்திரைப்படம் திரையிடப்படுகிறது என்று தமிழ் ஸ்டுடியோ அறிவிப்பு வெளியான பின் இத்திரைப்படத்தைத் திரையிட்டால் தியேட்டரில் குண்டு வைக்கப்படும் என்று தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்திற்கு அலைபேசியின் வாயிலாக மிரட்டல் வந்தது. இந்த விஷயம் சர்ச்சைக்குள்ளான போதிலும் எந்தவித மிரட்டலுக்கும் இனங்காமல் திரைப்படம் குறித்த நேரத்தில் திரையிடப்பட்டது. அது மிக பெரிய வெற்றியாகவும் தமிழ் ஸ்டுடியோவிற்கு அமைந்தது.


அடுத்ததாக ஏப்ரல் மாதத்தில் படிமையின் இலக்கிய வகுப்பு நிறைவு விழாவாக எழில்மிகு இயற்கையில் ஏற்காட்டில் இரண்டு நாள் சிறுகதை பயிற்சிப்பட்டறை நடந்தது.

தமிழ் ஸ்டுடியோ ஆரம்பத்திலிருந்தே குறும்படங்களை திரையிட்டுவந்த நிலையில் வாரம் வாரம் சனிக்கிழமைகளில் குறும்படங்களைத் திரையிடவேண்டும் என முடிவு செய்து குறும்படம் மற்றும் ஆவணப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

2018ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு பாலுமகேந்திரா விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து ஒடுக்கப்பட்டருக்கான குரலாக ஒலிக்கத் தமிழில் `கருப்பு` இணையத்தளமும், ஆங்கிலத்தில் `The whitepaper' என்கிற இணையத்தளமும் தொடங்கப்பட்டது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஊடகமாகக் கருப்பு இணையத்தளம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதில் தொடர்களும் வந்தவண்ணம் உள்ளன.

எந்த சினிமா இதழ்களும் முன்னெடுக்காத இந்துத்துவாவை எதிர்க்கும் ஒரு முழு இதழாக மே மாதம் ’இந்துத்துவா எதிர்ப்பு சிறப்பிதழ்’ என்ற தலைப்பில் படச்சுருள் வெளியானது.

சினிமா ரசனை வகுப்புகளை தொடக்கத்திலிருந்தே தமிழ் ஸ்டுடியோ நடத்திவந்தாலும் அதை மீட்டுருவாக்கம் செய்து குறைந்த கட்டணத்தில் நடைபெற்றுவந்தது.இதுவரை இணையத்தளமாக இருந்த கருப்பு, பதிப்பகமாகவும் உருப்பெற்றது. அதில் முதல் புத்தகமாகத் தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து ‘ஸ்டெர்லைட் அரச பயங்கரவாதத்தின் சாட்சியங்கள்’ என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. அது மிகப் பெரிய ஆவணமாகக் கருதப்பட்டது.


அரசு மற்றும் வெகுஜன சினிமாவை விமர்சித்துவரும் படச்சுருள் முதன் முதலில் நிகழ்கால சினிமாவாக வெளிவந்த மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தினை ஒரு முழு தனி இதழாக ’மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்பிதழ்’ என்ற தலைப்பில் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு அதற்கான விவாத நிகழ்வையும் நடத்தியது.

எழுத்தாளர் பிரபஞ்சனை நினைவூட்டும் விதமாக அவரது படைப்புகளைப் பாராட்டும்விதமாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வானது 2018ஆம் ஆண்டின் இறுதி நிகழ்வாக நடந்தது.

2019ல் இரண்டாவது ஆண்டாக சுயாதீன திரைப்பட விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா ஓவியர் வான்காவின் ஓவியங்கள் தீமின் அடிப்படையைக் கொண்டு நடத்தப்பட்டது. மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த விழா மிக நேர்த்தியான சுயாதீன படங்கள் மட்டுமின்றி குறும்படங்களும் திரையிடப்பட்டது. இதில் முதல் திரைப்படமாக ‘Bulbul Can Sing’ திரைப்படமும், நிறைவு திரைப்படமாக ‘Nude’ திரைப்படமும் திரையிடப்பட்டது.


ஜூன் 23ஆம் தேதி படச்சுருளின் ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ராஜூ முருகன் கலந்துகொண்டார்.

தமிழ் ஸ்டுடியோ மையங்கள் தவிர்த்து, அந்தந்த கிராமங்களில் களப்பணியாற்றும் பல்வேறு நண்பர்களுடன், அமைப்புகளுடன் இணைந்து கிராமத்திரையிடல் நடத்தியது. அதன் முதல் திரையிடல் வந்தவாசியில் திரையிடப்பட்டது.


தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தில் ஏற்கனவே கல்வியியல் பிரிவாகப் படிமை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. படிமையில் உருவாகும் மாணவர்கள் சுயாதீன திரைப்படங்களை நோக்கி கவனம் செலுத்துவார்கள். ஆனால் அதே நேரத்தில் தமிழில் வெகுஜன சினிமாவில் தமிழ் ஸ்டுடியோவின் பங்களிப்பைச் செலுத்துவதன் வாயிலாக, அங்கேயும் நமக்கான வெளியை உருவாக்க இயலும் என்பதால், இந்தியாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குனர்கள் பயிற்சி மையத்தை (ADTC) இந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி
தொடங்கியிருக்கிறது.

’தமிழ் சினிமாவில் பெரியாரும் பகுத்தறிவும்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் வேப்பேரி பெரியார் திடலில் நடத்தப்பட்டது. பெரியாரின் பகுத்தறிவைப் போற்றும் படங்களான பராசக்தி, ரத்தக்கணீர், அக்கரகாரத்தில் கழுதை போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டு பகுத்தறிவு சிந்தனையாளர்களுடன் கருத்தரங்கம் நடைபெற்றது.


Learn from Master என்ற பெயரில் தொடர் திரையிடல் நடத்தப்பட்டது. பேசமோழி இணைய இதழை மீட்டுருவாக்கம் செய்து அதில் ஆர்டிக்கிள் 15 படம் குறித்த கட்டுரைகள் தனி மின்னிதழாக வெளியானது.

ஒடுக்கப்பட்ட மக்களின் நிலத்தை எவ்வாறு நிலப்பிரபுக்கள் கைப்பற்றினார்கள்? பஞ்சமி நிலம், ஒடுக்கப்பட்டோர்கள் எவ்வாறு அடக்குமுறைக்கு உள்ளானார்கள் போன்ற பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான ’அசுரன்’ திரைப்படம் குறித்துத் தனி ஒரு இதழாக நவம்பர் மாதத்தில் ‘அசுரன் சிறப்பிதழ்’ என்ற தலைப்பில் படச்சுருள் வெளியிட்டது. இச்சிறப்பிதழை மையப்படுத்தி விழுப்புரத்தில் கலந்துரையாடலும் நடைபெற்றதில் தமிழ் ஸ்டுடியோ பெருமை கொள்கிறது.


தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழ் ஸ்டுடியோ மையம் தொடங்கப்பட்டு அதில் முக்கிய விழாவாக இந்தியாவிலேயே முதல் முறையாக தலித் திரைப்பட விழா 23ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்றது.



சதிஷ்:

உலகளவில் சினிமாவின் முன்னோடியான இயக்கயங்கள் பிரான்ஸ் புதிய அலை, இத்தாலி ரியலிசம். இந்த இயக்கங்கள் தோன்றிய காலங்களிலேயே இந்த இயக்கங்களின் நோக்கம் என்னவாக இருந்ததோ, அதன் நோக்கம் நிறைவேறியது. அந்த இயக்கங்கள் எந்த சினிமாவை விமர்சனம் செய்தார்களோ, அதில் மாற்றத்தை நிகழ்த்தினார்கள்.


அதேபோல் பிரேசில் தொடங்கிய சினிமா நோவா இயக்கம், லத்தின் அமெரிக்காவின் மூன்றாவது சினிமா இயக்கம் போன்றவையின் முயற்சியால் அவர்கள் எதிர்பார்த்த நிறையப் படங்கள் வந்தன. ஜான் ஆபிரகாம், ஒடெசா என்கிற சினிமா இயக்கத்தை ஆரம்பித்து மக்களிடம் நிதி திரட்டி படம் எடுத்து, மக்களுக்குத் திரையிட்டு கேரளாவிலும் தமிழகத்திலும் இயங்கினார். அந்த வகையில் 12ஆண்டுக்கால தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க மக்கள் சினிமாவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அவ்வியக்கம் அதன் நோக்கத்தை அடையும் வரை நிச்சயமாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து இயங்கிகொண்டே இருக்கும். அது தமிழ் சினிமாவிலும் சரியான மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

பார்த்திபன்:

கலையும், சமூகமும், அரசியலும் எப்போதும் ஒன்றோடு ஒன்று இணைந்துதான் செயல்படும். சமூகம் சார்ந்த அரசியலின் வெளிப்பாடுதான் கலை என்பது என்னுடைய புரிதலாக இருக்கிறது. சில கருத்தியல்களை உள்வாங்கிக்கொண்டு தமிழ் நாட்டில் தமிழ் ஸ்டுடியோ இயங்குவதன் மூலமாக இங்கு இருக்கும் கருத்தியல் வாதிகளான பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகிய மூன்று பேரின் எல்லா கருத்துக்களையும் தமிழ் ஸ்டுடியோ ஏற்றுக்கொள்கிறதா? நிராகரிக்கிறதா?  என்றால் மக்களுக்குத் தேவையான கலையுடன் கருத்தியல்களை உள்வாங்கிக்கொண்டு  மக்கள் இருக்கிற வெளியை எப்படி அரசியல் ரீதியாக செயல்பட வைக்க முடியும் என்று தன்னுடைய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் தமிழ் ஸ்டுடியோ  செய்துவந்திருக்கிறது என்பதைத் தீர்க்கமாக நம்பலாம். அரசியல், சமூகத்தின் மீது பார்வை இல்லாமல் இருக்கிற எந்த ஒரு கலை வடிவமாக இருந்தாலும் அது பயனற்றதாக இருக்கும்.

சமூக அரசியல் பார்வையும், சமூக அரசியல் பார்வைக்கொண்ட கருத்தியல் இருக்கிற ஒரு இயக்கமாகத்தான் தமிழ் ஸ்டுடியோ   என்றும் இருந்துவந்திருக்கிறது.

மக்களுக்குக் கலை முக்கியமானது. அந்த கலையுடன் அரசியலும் சமூகத்தின் பார்வையும் இல்லாமல் ஏதோ ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டும்  கலை வடிவம் இருந்தால் இந்த சமூகத்தை மேம்படுத்துவதற்கான எந்தவிதமான செயல்களையும் கலை கொடுப்பதற்கான வாய்ப்பு இல்லை. இது அனைத்தையும் தாண்டி சினிமாவை எப்படி அணுகவேண்டும், சினிமாவை மட்டுமல்ல எந்த ஒரு கலை வடிவத்தையும் எப்படி அணுகவேண்டும்? சினிமா என்கிற அசுர கலைக்கு மற்ற எல்லா கலைகளையும் விழுங்குவதற்கான சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட அசுர கலையை அணுகுவதற்கான ஒரு அறிவு இங்கு தேவைப்படுகிறது.  அந்த அறிவை ஏதோ ஒரு வகையில் மக்களுடன் கலந்துரையாடல் செய்வதன் மூலமாகத் தமிழ் ஸ்டுடியோ எல்லோரிடமும் கொண்டு சேர்க்கிறது என்று நான் நினைக்கிறேன். மக்களுடன் இணைந்து மக்களுடன் செயலாற்றுவதன் மூலமாக மக்களின் அரசியலையும் அவர்களின் சமூக வாழ்வியலையும் கலையினூடே மேம்படுத்துவதற்கான ஒரு இயக்கம்தான் தமிழ் ஸ்டுடியோ.

விஜய் சசி:

தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கு இரண்டு முக்கிய தேவைகள் இருக்கிறது. ஒன்று நல்ல சினிமா எடுப்பதற்காக திரைக்கலைஞர்களை உருவாக்குவது. இரண்டு அந்த நல்ல சினிமாவை பார்ப்பதற்காக பார்வையாளர்களை உருவாக்குவது. இந்த நோக்கத்தை நெருங்குவதறகாகதான் இதற்கு முன்னர் மேலே கூறப்பட்ட செயல்பாடுகள் நடத்தப்பட்டது. 

பொதுவாக சினிமா இயக்கங்கள் சினிமாவின் அழகியலையும், வடிவத்தையும் மட்டும் முக்கியமாகப் பார்க்கிறது. அதிலிருந்துதான் தமிழ் ஸ்டுடியோ இயக்கம் மாறுபட்டு நிற்கிறது. தமிழ் ஸ்டுடியோ ஆரம்பத்திலிருந்து களப்பணி மேற்கொள்ளும்போதும் புதிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்போதும் இயக்கத்தின் நோக்கம் இன்னும் விரிவடைந்து தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை நிகழ்த்தவேண்டும் என்று பயணிக்கிறது. அப்படி மாற்றுசினிமா தமிழ் சூழலில் நிகழும்போது மக்களின் ரசனை மாறுபடும். மக்களின் ரசனை மாறுபட்டால், மக்களின் சிந்தனையும் மாறுபடும். சிந்தனை மாறினாலே இங்கு சமூக மாற்றம் நிகழும். தமிழ் ஸ்டுடியோ இயக்கம், சினிமாவின் வழியே சமூக மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே அடி ஆன்மாவாக இருக்கிறது. அதற்குச் சாட்சியாகத்தான் இயக்கத்தின் செயல்பாடுகள் இருக்கிறது. இதுவே தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திலிருந்து பேரியக்கமாக பரிணமிக்கிறது.


பிற்காலத்தில் தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தின் செயல்பாடுகளுக்குப் பொருளாதார தேவை இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் ஸ்டுடியோ அருண், “தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்குப் பின்னால் எந்த ஒரு என்ஜிவோ அமைப்பும், கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியும் இல்லாமல் இந்த செயல்பாடுகளைச் செய்துவருகிறோம். ஆரம்பக்காலத்தில் என்னுடைய சொந்த செலவில்தான் இந்த பணிகளை மேற்கொண்டேன்” என்று ஒரு பேட்டியில் சொல்லிருப்பார். 

மேற்சொன்ன பல செயல்பாடுகள் இடையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதற்கான காரணம் பொருளாதார நெருக்கடியே. பொருளாதார தேவையை இந்த இயக்கம் எப்படி 12 வருடமாகக் கடந்துவந்திருக்கும் என்று பார்த்தால், அந்த பொருளாதார தேவையே ஒரு செயல்பாடக மாற்றியது தமிழ் ஸ்டுடியோ. உதாரணமாக மொய் திரை, பயிற்சிப்பட்டறைகள், ஓவியம் வரைந்துகொடுத்து நன்கொடை கேட்டல் போன்றவற்றை சொல்லலாம். 

இங்கு நிறைய இயக்கங்கள் பொருளாதாரத்தால்தான் முடங்கி போயிருக்கின்றன. ஆனால் தமிழ் ஸ்டுடியோ பொருளாதாரத்திடம் சண்டைபோட்டு இவ்வளவு நாள் நின்றிருக்கிறது.

இனி வரும் காலங்களில் தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகள் குறைந்தால் அது பொருளாதாரத்தின் ஒடுக்குதலாக மட்டுமே இருக்கமுடியும். வேறு எதன் வழியிலும் இந்த இயக்கத்தின் செயல்பாடுகளைக் குறைக்க முடியாது.