உரையாடல் காட்சிகளைப் படம்பிடிக்கும் முறை

அத்தியாயம் 4

குழு உரையாடல்

4.1 ஆங்கிள் ஆங்கர்

இதற்கு முந்தைய அத்தியாயத்தில் இரு நபர்கள் பேசிக்கொள்கிற உரையாடலை எப்படிக் காட்சிப்படுத்துவது, என்பது குறித்துப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில், பல பேர் சேர்ந்து நிகழ்த்தக்கூடிய, குழு உரையாடல் காட்சியை எப்படிப் படம்பிடிப்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.

நீங்கள் நிறைய கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரு உரையாடல் காட்சியைப் படமாக்கும்போது, ஒன்றிற்கு மேற்பட்ட கேமராக்களைப் பயன்படுத்தி, நிறைய ஃபுட்டேஜ்களைப் பெறுவது ஒரு அணுகுமுறை. மூன்று அல்லது நான்கு கேமராக்களை, காட்சிக்குத் தேவையான கோணங்களில் மாற்றியமைத்துப் படம்பிடிக்கலாம். எண்ணற்ற ஃபுட்டேஜ்கள் கிடைக்கும். பின்பு அதனை படத்தொகுப்பில், ஒரு கோர்வையான உரையாடல் காட்சியாக நீங்கள் மாற்றவேண்டும். இந்த அணுகுமுறை சிறந்த பலனைக் கொடுக்கும். ஏனெனில், கேமராக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஃபுட்டேஜ்களும் நிறைய கிடைப்பதால், படத்தொகுப்பு செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். தேவையான இடங்களில் ஃபுட்டேஜ்களை மாற்றியமைத்து, காட்சிக்குத் தேவையான உணர்வையும் கொண்டுவந்துவிட முடியும்.

இந்த முறையைப் பின்பற்றுகையில், குழு உரையாடலில் பங்கெடுக்கிற ஒவ்வொரு நபரின் எஸ்டாபிளிஸ்மெண்ட் ஷாட் மற்றும் மீடியம் க்ளோஸ் அப் ஷாட் இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், இந்த ஷாட்கள் இல்லையென்றால் யார் யாரைப் பார்க்கிறார்கள்? என்ற இடம் சார்ந்த குறிப்புகள் பார்வையாளர்களுக்குத் தெரியாமல் போய்விடும். எனவே, மல்டி கேமராக்கள் பயன்படுத்தினாலும், அதுவொரு குழப்பமான, சலிப்பூட்டும் காட்சியாக மாறிவிடக்கூடிய ஆபத்துகள் உண்டு.

காட்சி ஆரம்பித்து சிறிது நேரம் ஆகிவிட்டது, இப்போது அந்தக் குழுவிலேயே இதுவரை பேசாமலிருக்கிற ஒரு கதாபாத்திரத்தைக் ’கட்’ செய்து காண்பிக்கிறீர்கள் என்றால், இது குறிப்பாக சில சிக்கல்களைக் கொண்டுவரும். ஏனெனில், இதுவரை நீங்கள் அந்தக் கதாபாத்திரம் எங்கு இருந்தது என்பதை நிறுவவில்லை. எனவே, ஞாபகம் இருக்கட்டும். இதுபோன்ற காட்சியியல் குழப்பங்களைத் தவிர்க்க, கதாபாத்திரத்தின் இடம் சார்ந்த தகவல்களை இயக்குநராக, நீங்கள் முன்பே நிறுவிவிட வேண்டும்.

ஓசன்ஸ் லெவன் (Ocean’s Eleven) திரைப்படத்திலிருந்து, உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிற பிம்பங்களைக் கவனியுங்கள். இந்தக் காட்சியில் மேட் டாமன் (Matt Damon) பேசவில்லை. மேலும் அவர் பின்னணியில் இருந்தாலும், அவர் எங்கு நிற்கிறார் என்பது பார்வையாளர்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. அவர் பேசத்துவங்கும்போது, அந்த அறையிலிருக்கிற எந்த நபருடனும் பேச்சை ஆரம்பிக்கலாம்.


இயக்குநர் டாமனின் இடதுபுற பாய்ண்ட் ஆஃப் வியூவிலிருந்து, ஒரு தலைகீழ் கோணத்திற்கு (reverse angle) காட்சியைக் கட் செய்கிறார். டாமன் பேசுவதைத் திரும்பிப் பார்ப்பதற்குத் தோதான நிலையில், மற்ற கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சோஃபாவில் மூவர் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் அருகில் ஒருவர் நிற்கிறார். அவர்களுக்கு முன்புறமாக பிரதான கதாபாத்திரம் (ஜார்ஜ் க்ளூனி) ஒன்று நிற்கிறது. இவர்கள் அனைவரையும் இந்த இரண்டாவது ஃப்ரேமில் தெளிவாகவே பார்க்கமுடிகிறது. இந்த உரையாடலில் ஜார்ஜ் க்ளூனி, மேட் டாமனை நேரடியாகப் பார்க்கிறார், ஆனால் மற்ற கதாபாத்திரங்கள், டாமனைப் பார்க்க தன் உடலை (முகத்தை) அவர் பக்கமாகத் திருப்ப வேண்டும். இதுதான், அந்த இடத்தில் டாமன் எங்கு நிற்கிறான் என்பதைப் பார்வையாளர்களுக்குக் குழப்பமில்லாமல் உணர்த்துகிறது. 

ஒருவேளை, இயக்குநர், நேராக ஜார்ஜ் க்ளூனியின் மீடியம் ஷாட்டிற்குக் கட் செய்திருந்தால், ஜார்ஜ் க்ளூனியும், மேட் டாமனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் பார்வையாளர்கள் அறிந்திருப்பார்களேயொழிய, மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் எந்த இடத்தில் இருந்தார்கள் என்ற உணர்வே வந்திருக்காது. அதுவே, உதாரணத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த முறையில் காட்சியமைப்பதன்மூலம், நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு பேசுகிற இருவரையும் காட்சிப்படுத்தியதோடு, இடம் சார்ந்த தகவல்களையும் குழப்பாமல், மற்ற கதாபாத்திரங்களின் எதிர்வினைகளையும் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர்.

பல நபர்கள் இருக்கிற, பெரிய குழுக்களைக் காட்சிப்படுத்தும்போது, அதில் ஒவ்வொருவரும் பேசுகையில், மற்றவர் அதைப் பார்க்கும்பொருட்டு, தன் நிலையிலிருந்து சற்று நகர வேண்டும், அல்லது மற்ற நபர்களின் இடங்களுக்கு இடம்மாற வேண்டும். இந்த ஸ்டேஜிங் (staging) முறையினால், காட்சியின் ஆழம் அதிகரிக்கிறது, ஒரு அறைக்குள் பல நடிகர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு மாறாக (செயற்கை), ஒரு அறைக்குள் ஏதோ நடக்கிறது (யதார்த்தம்), அதை நாம் பார்க்கிறோம் என்ற உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.

4.2
Ocean’s Eleven திரைப்படத்திலிருந்து மற்றுமொரு உதாரணம் கொடுக்கப்படுகிறது. இதில், இதன் இயக்குநர் ஸ்டீவன் சோடர்பெர்க், பத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறுகிற உரையாடல் காட்சியைப் படம்பிடிக்க வேண்டிய சவாலை எதிர்கொண்டிருக்கிறார். இந்தக் காட்சியில் பங்கெடுக்கிற அனைவருக்குமே சொல்வதற்கு ஏதேனும் ஒரு விஷயம் இருக்கிறது. எல்லோரும் எந்த இடத்தில் இருக்கிறார்கள், யார் எங்கு அமர்ந்திருக்கிறார்கள், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதைச் சாத்தியப்படுத்த, ஜார்ஜ் க்ளூனி ஏற்று நடித்திருக்கிற மையக்கதாபாத்திரம் பேசுவதை, காட்சியிலுள்ள மற்றவர்கள் கவனிக்கின்றனர் என்ற ஷாட்டைப் பார்வையாளர்கள் பார்க்க வேண்டும்.


ஜார்ஜ் க்ளூனி, சுவருக்கு எதிராக நின்று, அறையைப் பார்த்துக்கொண்டிருப்பதை ஷாட் காட்டுகிறது. ஒருவேளை, அறைக்குள் நுழையும் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தை அவர் பார்த்துக்கொண்டிருக்கலாம். இது போன்ற உரையாடல் காட்சிகளின்போது, யார் யாருடன் பேசுகிறார்கள், யார் யாரைப் பார்க்கிறார்கள், யார் எங்கு நிற்கிறார்கள் (முந்தைய பகுதியில் குறிப்பிட்டுள்ளபடி) என்பதைச் சரியாகக் குறிப்பிட வேண்டிய தருணங்கள் உள்ளன. ஆனால், மற்ற நேரங்களில், நீங்கள் க்ளூனியை மையமாக வைத்து, காட்சி எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது (யார் எங்கிருக்கிறார்கள்?) என்பதைத் தெளிவாக்க வேண்டும். இது பார்வையாளர்கள், காட்சியிலுள்ள உரையாடலைப் பின்பற்றுவதற்கு உதவி செய்யும்.

க்ளூனி ஒரு திசையில் பார்க்கிறார், மற்றவர்கள் அந்த கண் பார்வையை இணைக்கும்பொருட்டு அவரைப் பார்க்கிறார்கள். அவர்களின் கண்கள் பார்க்கும் திசைதான், அவர்கள் அறையில் எங்கிருக்கிறார்கள் என்ற குறிப்பைச் சரியாகக் கடத்துகின்றன. சில நேரங்களில் அவர்களின் முகங்கள் கேமராவை நோக்கியதாகயிருந்தாலும், அவர்கள் கண்களின் பார்வைக்கோணம், திசையைப் பின்பற்றும் வகையில், அவரை நோக்கும் வகையில் ஃப்ரேம் அமைக்கப்படும்.

மற்றொரு ஷாட்டில் (மூன்றாவது ஃப்ரேமில்), கண் பார்வைக் கோணத்தை அழுத்தமாகப் படமெடுக்கும் வகையில், இரண்டு பேரையும் ஒரே திசையில் பார்க்கவைத்து, அவர்களின் முகங்கள் ஏறக்குறைய ஒரே கோணத்தில் இருக்கும்படி செய்து, லோ ஆங்கிளில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இதில் இந்த நடிகர்களின் உடல் மற்றும் கண்களின் நிலை, வழக்கமான ஒன்றல்ல. அவர்கள் க்ளூனியின் பேச்சைக் கேட்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் காட்டும் நோக்கத்திற்காகத்தான், இயக்குநர் அவர்களை இவ்வாறு அமர்த்தியிருக்கிறார்.
இது போன்ற காட்சிகளை கேமராவை நகர்த்துவதன் (கேமரா மூவ்மெண்ட்) வாயிலாகவும் படம்பிடிக்கலாம், ஆனால், கட் செய்யத் துவங்கும்போது, எங்கு ஷாட்டை நிறுத்த வேண்டும் என்பதில் விரைவிலேயே நீங்கள் குழப்பமடையலாம். பல கேமரா கோணங்களின் வாயிலாக காட்சிக்குத் தேவையான நிறைய ஃபுட்டேஜ்களைச் சேகரிப்பதன் மூலமும், நடிகர்களை அதற்கேற்றபடி நிறுத்துவதன் மூலமும், அவர்களின் கண்கள் எந்தத் திசையில் பார்க்க வேண்டும் என்று குறிப்புகள் கொடுப்பதன் மூலமும், பிரச்சினைகளைத் தீர்க்கலாம். காட்சி இவ்வளவு தெளிவாக இருந்தால் மட்டுமே, பார்வையாளர்கள் (ஒப்பீட்டளவில் சிக்கலான) உரையாடலில் கவனம் செலுத்த முடியும்.