மனிதர்கள்: கோணங்களின் உண்மை

-அகிலன் லோகநாதன்

சமூக வரலாற்றில் காணப்படும் ஒவ்வொரு குழுக்களின் கூறுகளும் வழிவழிவந்த பலருடைய வாய்கதையாடல்களும் எஞ்சிய எழுத்துகளையும் வைத்து கடத்தப்பட்டவையே தற்போது நம்பப்படும் அல்லது பின்பற்றப்படும் கதைகள். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கை பல வாழ்வியல் தன்மைகளிலிருந்து கடத்தப்பட்டவைகளின் தொடர்ச்சியே. இந்த ஆழமான தத்துவ விசாரணையை கதாபாத்திரத்தின் கோணங்களில் ஆராய்வதே ரொஷமான் திரைப்படம். 

Rashomon (1950) - IMDb

ஒவ்வொரு மனிதரின் கருத்து மற்றும் கதைகளின் சார்பு தன்மை எதிர்வரும் யாதார்த்தங்களை எவ்வாறு முடக்குகிறது அல்லது வளர்க்கிறது குறித்த விசாரணை செய்ய வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்யும் பொழுது உண்மை என்று நம்பப்படுபவைகளும் அவற்றை அடிப்படையாக கொண்ட அறிவையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை சமூகத்தோடு ஒட்டி பார்க்க இயலும். 

அகிரா குரோஷாவினுடைய திரைப்படங்களில் உலக அரங்கிற்கு அவரை எடுத்து சென்றது ரொஷமான் திரைப்படம் தான். அவர் ஒலியின் மூலம் கதை சொல்லும் முறை, கதை சொல்லை வெகுவாக நீட்டிக்கிறது என்றார். கதை சொல்லலில் வெவ்வேறு கோணங்களின் வழியாக உண்மையை ஆராயும் பொழுது அதில் ஏற்படக்கூடிய பிழைகளை சரி செய்யும் வாய்ப்பும் கிட்டுகிறது. 

சாமுராய்களின் வரலாறு 12 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு பல்வேறு மாற்றங்களை சந்தித்திருக்கிறது. போரில் எஜமான் தோற்றால் அல்லது இறந்தால் தங்களை தாங்களே தற்கொலை செய்து கொள்ளவேண்டியது நெறிமுறையாக கூறப்பட்டது. அவ்வாறு தற்கொலை செய்து கொல்லாதவர்கள் 'ரோனின்' களாக அறியப்பட்டார்கள். தோற்றுப்போன அல்லது வீழ்த்தப்பட்ட தன் எஜமானருக்காக பழிவாங்குவதாக முடிவெடுத்தவர்களே 47 ரோனின்கள். 

19- நூற்றாண்டின் நில பிரபுத்துவ வர்க்கத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்வியல் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அவர்களுடைய போர் கருவிகள் போர் தந்திரங்கள் வேலையற்று போயின. ஆயினும் தற்காப்பு கலை சார்ந்து பல்வேறு இடங்களில் பயிற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் வாழ்வியல் கேள்விக்குள்ளாக்க பட்டதால் அவர்கள் கொள்ளையர்களாகவும் அச்சுறுத்து படுபவர்களாக அறியப்பட்டனர். அவர்களின் பூசிடோ நெறி முறையின்படி தற்கொலை செய்து கொள்ளாதவர்களை மக்களால் அவமதித்து ஒதுக்கப்பட்டார்கள். அவர்களை ஏளனப்படுத்தக்கூடிய நிலைக்கு ஆளானர்கள். போர்களை தவிர வேறெதையும் அறியாத அவர்கள் நாடோடிகளாக சுற்றித்திரிய ஆரம்பித்தனர். 

அவர்களின் கதைகள் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் உருப்பெற்றன. அதை அடிப்படையாக கொண்டே அகிரா குரோசாவா பல சாமுராய் திரைப்படங்களை இயக்கியுள்ளார். ரஷோமான் திரைப்படம் Ryunosuke akutagawa எழுதிய in a Grove என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டது. இந்த திரைப்படம் குழுவொடு உருவாக்கும் போது ஒவ்வொரு நிமிடமும் அதனை இயக்கிக்கொண்டே இருந்ததாக உணர்ந்ததை Something Lika an Autobiography என்ற தனது சுயசரிதை நூலில் தன் நினைவுகளை குறிப்பிட்டுள்ளார். ஜப்பானின் அப்போதைய மனித நடத்தைகளையும் அவர்களின் கலாச்சாரங்களையும் வெளிப்படையாக காட்சிப் படுத்தினார். திரைப்படம் வெளி வந்த சமயங்களில் பெண்ணின் பாலியல் தன்மையை வைத்து படம் எடுத்திருக்கிறார் என்று ஜப்பானிய விமர்சகர்களால் புனைந்த போது உலக அரங்கில் அவருக்கு கிடைத்த வரவேற்பு அவருடைய கலைத் தன்மையை எல்லோராலும் புரிந்து கொள்ள வழிவகுத்தது. 

அரிதிலும் அரிதான இந்த திரைப்படம் விசாரணை செய்வது ரீதியாக 'ரஷோமான் விளைவு' என்ற முறையில் குற்றங்களை விசாரணை செய்யவும், அதனை விரிவாக ஆராய்வதற்கும் தூண்டியது. இன்றும் சட்டப்படி வழக்கறிஞர்கள் நீதிபதிகள் நேரில் கண்ட சாட்சியங்களின் பதிவும் வாய்மொழியிலான வாக்கு மூலங்களும் முரண்பாடுகளுடன் கிடைப்பதையும் இந்த விளைவின் பயன்பாட்டை பயன்படுத்தி கிடைக்கும் உண்மைகளையும் உதாரணமாக குறிப்பிடுகிறார்கள். 

Rashômon | Explore Tumblr Posts and Blogs | Tumgir

முதலில் கியோட்டோ கேட்டில் பாழடைந்த மரகட்டிடத்தில் அடைமழையுடன் படம் துவங்குகிறது. இரண்டாம் உலகப்போரின் விளைவால் ஜப்பானில் ஏற்ப்பட்ட சிதைவுகளின் வெளிப்படாக இதை குறிப்பிடலாம்.

கதையில், பண்டிட் ( Toshiro Mifune) சாமுராய் (Masayuki Mori) மற்றும் சாமுராயின் மனைவி ( Machiko Kyo) ஆகிய மூவருக்குள் நடக்கும் ஒரு கதையை நான்கு கோணங்களில் நால்வர் விவரிக்கிறார்கள். அமைதியான காடுகளுக்குள் நுழையும் விறகுவெட்டி சாமுராயின் மனைவியின் தொப்பி யையும் பிறகு சாமுராயினுடைய தொப்பியையும் கண்டடைகிறான். கொலையுண்டு கிடைக்கும் சாமுராயின் உடலை கண்டு அலறி அடித்து ஓடி வருகிறான். ஆதலால் அவனே உண்மை சாட்சியமாகவும் நேரில் கண்ட சாட்சியமாக நம்பப்படுகிறது. 

காட்டிற்குள் சுற்றித்திரியும் பண்டிட், மிகுந்த சோர்வு வுடன் காணப்படுகிறான். அதே காட்டுக்குள் மனைவியுடன் வரும் சாமுராய் உடையளவிலும் உடைமை அளவிலும் பண்டிடை விட உயர்ந்தவர்களாக இருக்கிறது. சாமுராயும் அவனுடைய மனைவியும் விலையுயர்ந்த உடைகளும் குதிரையும் கலாச்சார அளவிலும் அப்போதைய சமூக அளவிலும் இருந்திருக்கும் ஏற்றதாழ்வு பாகுபாடுகளை வெளிப்படுத்துகிறது. 

முறையற்ற காமவேட்கை கொண்ட பண்டிட்டின் கண்களுக்கு முழு உடலாக இல்லை பெண்ணின் கால்களும் முகமும் கூட அகதூண்டலை கிளர்ச்சி செய்ய போதுமானதாக இருக்கிறது. அவளுடைய நினைவு அவளை பின் தொடர செய்கிறது. 

பண்டிட் கூறும் முன்கதையில் சாமுராயின் மனைவியுடைய பரிதாப நிலையை கண்டு இரசிக்கிறான். அவள் அவனை கொல்ல எவ்வளவு முயன்றும் அவளால் அவனை நெருங்க இயலாதது அவனுக்கு இன்பத்தை தருகிறது. அவளுடைய இயலாமையை அவன் விரும்புகிறான். அவனுடைய கட்டாயத்தால் அவளை முத்தமிட்டு முழுவதும் அடைந்துவிட்டதாக நீதிபதியிடம் கூறுகிறான்.

ஆனால், சாமுராயின் மனைவி கூறும் கதையில் பண்டிட் முக்கியத்துவ படுத்தவில்லை. பாலியல் வன்புணர்வு செய்ததும் அவன் தப்பித்து ஓடி விடுவதாக கூறுகிறாள். அவளை வன்புணர்வு செய்த போதிலும் அவள் குற்றவாளியாக கண்டு மிரண்டு அழுவது அவளுடைய கணவனை கண்டுதான். குற்றவாளியை மையப் படுத்துவதை விட பாதிக்கப்பட்ட மனைவியின் உணர்வுகள் ஆழமாக பாதிப்படைந்ததற்கு காரணம் அவளுடைய கணவனின் பார்வையால் வெளிப்படும் அவனுடைய மனநிலை தான். குற்றத்திற்கு ஆட்பட்டவளாக தன்னை கொல்லும் படி கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள். அவனுடைய பார்வை அவளை தீண்டத்தகாத உணர்வை அவளுக்கு ஏற்படுத்துகிறது. அவளுடைய உடலுக்கு ஏற்பட்ட பாதிப்பை காட்டிலும் அவன் மீது அவளுக்கு ஏற்பட்டுள்ள குற்றவுணர்வு மேலும் காயப்படுத்துகிறது. 

அவளை விட்டுவிடலாமா? கொன்று விடலாமா? என்ற பண்டிட் கேட்கிற கேள்வி அவனை மன்னிக்க தூண்டியதாக கூறுவதும், சாமுராய் அவளின் கைவாளால் தற்கொலை செய்து கொள்வதும் அவளால் வாழ்க்கை முடிந்து போனதாகவே கருதிக் கொள்கிறான். இறந்தபிறகும் அவனுடைய பார்வை அவள்மீதான அன்பை விட அதன் மேலிடுகிற பிடிப்பு உடைகையில் வாழ்க்கை இல்லாத தருணத்தை அடைந்துவிட்டதாக கருதுவதை காட்டுகிறது. அந்த பெண்ணை ஊடகமாக பயன்படுத்தி சில சடங்குகளின் மூலம் சாமுராயை பேசவைப்பதாக காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர்.
இறந்து போன ஒரு கதாபாத்திரம் இன்னொரு உடலுக்குள் வந்து அதனுடைய குரலிலேயே பேசுவது யாதார்த்தங்களை மிஞ்சினாலும் குறிப்பிடும் வகையில் ஆக்ரோஷமாக பதிவு செய்யப்படுகிறது. கதாபாத்திரங்களின் உடை மற்றும் முக அலங்காரங்கள் அவர்களுடைய அழகியலையும் உணர்ச்சிகளையும் பார்வையாளர்களால் எளிதில் உள்வாங்குப்படியாக அமைந்துள்ளது. 

விறகுவெட்டியின் குழப்பத்திற்கு உள்ளாக்கப்பட்ட விசாரணையின் இறுதியில் உண்மையில் கண்டதாக கூறுவது வேறு கதை. அதில் பாதிப்படைந்த மனைவியின் பரிதாபமான நிலையே முழுவதும் வெளிப்படுகிறது. அவன் கண்ட காட்சிகளிலிருந்து கூறுபவையே உண்மையென கொள்ளப்படுகிறது. மற்ற மூன்று கதைகளும் உண்மையும் பொய்யும் கலந்தவையே. 

உண்மையை அறியும் ஆவல் மற்றும் குழப்பத்திலிருந்து வெளிப்பட வேண்டும் என்ற வேட்கை, ஒரு மனிதனை பல கதைகளிலிருந்து புதிய ஒன்றை உருவாக்கவும் அனுமானங்களை சேர்க்கவும் நேரிட செய்கிறது. அதனால் ஏற்பட்ட பாதிப்பும் உண்மையை ஆராய இயலாமல் குழப்பத்துடன் அல்லது ஏதோ ஒன்றை உண்மையென நம்பவும் கூடும். உளவியல் நோக்கத்தோடு அணுக நேரிடுகையில் தன் மீதான சுயபாதுகாப்பை கருத்தில் கொண்டு தன் மனதில் பதிந்த நிகழ்வினை உண்மையும் பொய்யும் கலந்து கூறப்படும். தவிர்க்க முடியாத அக நிலைப்பாடு மற்றும் நினைவாற்றலின் கோர்வை பேச்சுவழக்கில் கலப்பை சந்திக்கிறது. 

அரை வெப்ப மண்டல காடுகளில் படப்பிடிப்பு செய்யப்பட்டதாக குறிப்புள்ளது. ஒளிப்பதிவாளர் கசுவா மியாகாவோ, அடர்ந்த காடுகளும் முட்களும் காட்சியின் தீவிரத்தன்மை மட்டுமில்லாமல் அழகியல் தன்மையையும் அதிகரித்து காட்சி படுத்தியுள்ளார். அதில் நேரடியாக சூரியனை வெளிப்படுத்தும் காட்சிகள் உள்ளன. பண்டிட் சாமுராயின் மனைவியை முத்தமிடும் காட்சியில் சூரியனை நேரடியாக மழுங்க செய்வது அவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய ஆசைக்கு இணங்குவதை காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன. 

குரோசாவா வின் கதையில் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை பின் தொடர்கிறார். குற்றங்களுக்கு பிறகு அவர்களுக்குள் இருக்கும் அக நிலையை வெளிப்படுத்துகிறார். விசாரணையில் அடைந்திருக்கும் பரிமாணங்கள் அவர்களின் சக சுயசார்பு உணர்ச்சிகளுடனையே வெளிப்படுகிறது. ஆனால் குற்றங்களுக்கு பிறகு வரும் தீர்ப்பிற்கு அவர் முக்கியத்துவம் கொடுக்க வில்லை. குற்றங்களை ஆராய்வதன் மூலம் ஒரு பார்வையாளனை நீதிபதி யாக்குகிறார். பார்வையாளனை அவர்களின் குற்றங்களை நேருக்கு நேராக அமர்ந்து ஆராய பணித்திருக்கிறார். 

இறுதியாக ரஷோமானில் அடை மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில் இரக்கமற்ற முறையில் குழந்தையின் துணியை மழையை காரணம் காட்டி சாமானியன் பிடுங்கி செல்கிறான். அதுவரை கதை கேட்டுக் கொண்டிருந்த அவனுடைய கதாபாத்திரம் மனிதர்களுடைய போலித்தனங்கள் அதன் மீதான விளக்கங்கள் யாவையும் கேள்விக்குள்ளாக்குவதாக பதிவு செய்யப்படுகின்றன. பல்வேறு சுய சார்புடைய கதைகள் கூறும் மனிதர்கள் உண்மையில் கோழைத்தனங்களுடன் வாழும் மனிதர்கள் தான். 

சாமானியன் வெளியேறிய பிறகு விறகு வெட்டி இரக்கத்துடன் அந்த குழந்தையை வளர்ப்பதாக எடுத்து செல்கிறான். பாதிரியார் சந்தேகத்துடன் ' உன்னால் வளர்க்க இயலுமா? என்கிற போது தான் ஏற்கனவே ஆறு குழந்தைகளை வளர்த்தாகவும் தைரியமாக இந்த குழந்தையையும் வளர்க்க இயலும் என்பதுதான் விறகுவெட்டியிடமிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய புரிதல் .

நேரடி அனுபவத்தை தரும் இத்திரைப்படம் தான் கேட்கும் கதைகளை மட்டுமல்லாமல் தான் பார்த்தவைகளையும் சந்தேகிக்க வேண்டும் என்று கூறுகிறது. இவ்வுலகம் எவ்வளவு கொடூரமான இரக்கமற்ற எல்லைக்கு சென்றாலும் குறைந்த நபர்களின் இரக்கம் கூட மனித வாழ்விற்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்க முடியும் என்பதை இத்திரைப்படத்தின் மூலம் உணர முடிகிறது.