இந்திய சினிமாவின் பொதுவெளியில் ஒரு அவசியமான குரல்

ஒரு சமூகத்தின் மனிதர்களை, அவர்களின் வாழ்வை, பிரச்னைகளை, சமூக - அரசியல் சூழ்நிலைகளை பிரதிபலிக்க வேண்டிய கடமை இந்த காலகட்டத்தில் வெளிவரும் திரைப்படங்களுக்கு இருக்கிறது. அந்த விதத்தில், இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வுகளை, வன்முறைகளைப் பேசும் ஒரு முக்கியமான படமாக வெளிவந்திருக்கிறது ‘Article 15’. ஒரு வெகுஜன சினிமாவாக, த்ரில்லர் வடிவத்தில் வெளிவந்திருக்கும் இப்படம், அதனூடே சாதிக்கு எதிரான குரலையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. பொழுதுபோக்கிற்காக சினிமா பார்க்கும் இந்திய மனநிலையில் சாதி ஏற்றத்தாழ்வு பற்றிய ஒரு சிறிய கல்லை எறிந்து, சிறிதளவேனும் சலனம் ஏற்படுத்தியிருப்பதே, ‘Article 15’ திரைப்படத்தின் மிக முக்கியமான பயன் எனச் சொல்ல முடியும்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கடைக்கோடி கிராமத்திற்கு, போலீஸ் அதிகாரியாக(ACP) புதிதாகப் பதவியேற்று வருகிறான் கதையின் நாயகன் அயன் ரஞ்சன்(அயுஷ்மன் குரானா). பிறப்பாலும், வளர்ந்த சூழலாலும் அவனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்திருக்கின்றன. வெளிநாட்டில் படித்துவிட்டு, பெரிய வேலையிலும் தேர்ச்சி பெறும் அவனுக்கு – அதிகாரத்தின் தன்மையால் ஒரு கடைக்கோடி கிராமத்தில் போஸ்டிங் போடப்படுகிறது. அவன் தன் வாழ்நாளில் சிறிதும் பார்த்திராத, எதிர்பாராத சூழலில் மக்கள் இங்கே வாழ்வதைப் பார்க்கிறான். சாதி அடக்குமுறை மிக ஆழமாக, தலைமுறை தலைமுறையாக வேரூன்றியிருக்கும் ஒரு ஊரில், 2 தலித் சிறுமிகள் ஊரின் நடுவே தூக்கில் தொங்கவிடப்படுகின்றனர். இன்னும் ஒரு சிறுமியைக் காணவில்லை. அயன் இந்த வழக்கை விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்ய எடுக்கும் முயற்சிகளுக்கு நடுவே, தன் அறியாமையிலிருந்து மாற்றம் அடைவதையும், சாதி அடக்குமுறைக்கு எதிரான அவனின் எதிர்ப்பும், போராட்டங்களும், அவனின் புரிதலில் ஏற்படும் மாற்றமும் ‘Article 15’ திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு சராசரி பார்வையாளன், தன்னை நாயகன் கதாபாத்திரத்துடன் பொருத்திப் பார்த்தபடி, அதனூடே பயணிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சாதி அடக்குமுறை எனும் பிரச்னையை எடுத்துக்கொண்டு, அதன் பல்வேறு கோணங்களை, பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் திரைக்கதையில் தீவிரமாக மோதவிட்டுள்ளனர். அயன் தடுமாறும் போதெல்லாம் அவனிடம் காட்டமான கேள்விகள் கேட்டு அவன் மனசாட்சியை உலுக்கும் காதலி அதிதி, அந்த கிராமத்தின் அதிகாரத்தின் சின்னமாகவும், சாதியத்தை தன் பெருமையாகவும் தீவிரமாக நம்பும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரம்மாதத் சிங், தலித்தாக பிறந்து இடப்பங்கீட்டின் மூலம் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் ஜாடவ், தன் பணபலத்தால் அனைத்து சட்டங்களையும் மீறி தொழில் செய்யும் லோக்கல் கான்ட்ராக்டர் அன்ஷு நஹாரியா, போலீஸ் ட்ரைவராக இருக்கும் நிஹால் சிங், அவரின் தங்கை அமலி, நீதி கிடைக்க வழியில்லை எனத் தெரிந்தும் தன் தங்கையைத் தொலைத்துவிட்டுத் தொடர்ந்து போராடும் கவுரா, அடக்குமுறைக்கு எதிராக வன்முறையைக் கையிலெடுத்து – அரசால் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டிருக்கும் நிஷாத் என ஒவ்வொரு கதாபாத்திரமும், நவீன இந்தியாவின் பல்வேறு முகங்களாக, பாதிக்கப்பட்டவர்களாக, அடக்குமுறையாளர்களாக, நீதி கேட்பவர்களாக, கையறு நிலையில் இருப்பவர்களாகத் தீவிரமாக வெளிப்பட்டுள்ளனர்.

ஜாடவ் கதாபாத்திரம் தன் மக்களுக்குத் தொடர்ந்து அநியாயங்கள் நடக்கும்போதும், அமைதியாகவே இருக்கிறான். தன் அதிகாரிகளை எதிர்த்து குரல் எழுப்புவதில்லை. பயம் சுயநலம் - இரண்டுமே இதற்குக் காரணமாகச் சொல்லாம். பிரம்மாதத் சிங், இந்த சாதிய மனநிலையைத் தீவிரமாக நம்புகிறான். அதை தன் பிறப்பால் கிடைத்த பெருமையென்றும், தன்னுடைய அசைக்க முடியாத உரிமை என்றுமே நினைக்கிறான். அதற்கு ஒரு ஆபத்து நேரும்போது, அவ்வளவு கோபப்படுகிறான். எந்த அளவு வன்முறைக்கும் அவன் தயங்குவதில்லை. நிஷாத் தீவிரமாக இந்த சாதி ஏற்றத்தாழ்வை, பயங்கரவாதத்தை எதிர்க்கிறான். திருப்பி அடிப்பதே அவன் நம்பும் போராட்ட முறையாக இருக்கிறது. பகத்சிங்கை ஒரு இடத்தில் மேற்கோள் காட்டுகிறான். ஜாடவ் மாதிரியான மனிதர்களைக் கோழைகள் என்கிறான். தலித்துகள் அனைவரையும் அவன் வேலைநிறுத்தம் செய்ய உத்தரவிடுவதும், அதனால் இந்த உயர்சாதி பெருமை பேசும் சமூகம் எந்த அளவு தங்கள் தினசரி வாழ்வில் பாதிக்கப்படுகிறது எனவும், திரைக்கதையில் வலிமையாகப் பதிவாகிறது. நிஷாத் மாதிரியான போராளிகளை இந்த அரசாங்கம் என்ன செய்யும் என்பதையும் திரைக்கதை முகத்தில் அறையுமாறு சொல்கிறது. அதனாலேயே, கதையின் நாயகன் அயன் சட்டத்தின் பக்கம் நின்று, எடுக்கும் முயற்சிகளின் அவசியத்தை நாம் உணர வேண்டியிருக்கிறது. பாபா சாகேப் அம்பேத்கர் சொன்னது போல், கல்வியும் அதிகாரமுமே நமக்கான உரிமைகளைப் பெறும் வழி என்பதை இத்திரைப்படம் வழிமொழிவதாகத் தோன்றுகிறது.`Article 15` திரைக்கதையின் அடுக்குகள் (லேயர்கள்) வலிமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்தியச் சமூகத்தில் இருக்கும் பொருளாதார அடக்குமுறை, அதிகார அடக்குமுறை, சாதிய அடக்குமுறை மூன்றுமே இத்திரைக்கதையில் பெரும்பங்கு வகிக்கின்றன. இம்மூன்றில் ஏதோ ஒரு வகையிலான அடக்குமுறை திரையில் நடந்துகொண்டே இருக்கிறது. அயன் கதாபாத்திரம் ஒரு ACP-யாக இருப்பதால், அவனிடம் பணிந்து பேசும் பிரம்மாதத், ஜாடவ்வை தகாத வார்த்தைகளில் திட்டவும் அடிக்கவும் முடிகிறது. அயன் ஒரு பிராமிணாக இருப்பதால் அவனுக்கு நிறைய மரியாதைகள் கிடைக்கின்றன. இதுவே அவன் வேறு சாதியாக இருந்தால், அவனுக்கு நிகழ்ந்திருக்கக் கூடிய வன்முறையையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 3 ரூபாய் சம்பள உயர்வு கேட்டதற்காக, 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஊருக்கு நடுவே தூக்கில் தொங்க விடப்படும் வன்முறை, நவீன இந்தியாவில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம் முகத்தில் அறையும்படி சொல்லியிருக்கிறார்கள். அயன் கதாபாத்திரம், தன் உயரதிகாரியிடம் ‘நீங்கள் குடிக்கும் மினரல் வாட்டரின் சில துளிகளின் விலை அந்த 3 ரூபாய்’ எனச் சொல்லும் இடம், நம் சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பார்வையாளனுக்குத் தீவிரமாக உணர்த்துகிறது. அயன் தன் வேலையின் மூலம் நீதி கேட்க முயன்றதால், கார்னர் செய்யப்பட்டு, விசாரணை கமிஷனில் நிற்கும் இடம் – இந்த அரசு இயந்திரத்தில் மனசாட்சியுடன் இருக்க முயலும் எல்லாருக்கும் ஏற்படும் நிலையென்றே தோன்றுகிறது. வழக்கின் அத்தனை சாட்சியங்களும், எவிடென்ஸ்களும் மாற்றப்பட, அயன் எவ்வளவு வாதாடினாலும், விசாரணை அதிகாரி அதற்குச் செவி கொடுக்காதவராகவே இருக்கிறார். அவர் பெயர் பணிக்கர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மதகுரு ஒருவர் ஓட்டு அரசியலுக்காக, தலித்-பிராமிண் ஒற்றுமை உணர்வை வலியுறுத்தும் பேரணி ஒன்றை நடத்துகிறார். தான் ஒரு தலித் வீட்டில் உணவருந்துவதாக, மீடியாக்களை அழைத்து விளம்பரம் தேடுகிறார். அதில் அவர் சாப்பிடும் உணவும் பாத்திரமும் கூட அவர் வீட்டிலிருந்தே வரவழைக்கப்பட்டதாகப் பின்னர் நாம் அறிந்து கொள்கிறோம். அவர் மீடியாவிடம் பேசுகையில், இஸ்லாம் சக்திகளுக்கு எதிராக நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம் என்கிறார். இவ்வாறு வேற்றுமை உணர்ச்சியை, வெறுப்பை விதம் விதமாக மக்கள் மனதில் விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இத்திரைப்படம் காட்சி ரீதியாகவும், திரை மொழியிலும் ஒரு நல்ல அனுபவத்தைத் தருகிறது. கதைக்கு நடுவே தலித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், போலீஸ் ஸ்டேஷனைச் சுற்றி சாக்கடை நீர் தேங்கிக் கிடப்பதையும், குப்பைகள் ஊரில் அங்கங்கே குவிந்து கிடப்பதையும், இறைச்சிகள் ஆளில்லாமல் தேங்கிக்கிடப்பதையும் அங்கங்கே காட்டிக்கொண்டே வருகிறார்கள். நிஷாத் வேலை நிறுத்ததை வாபஸ் வாங்கியபின், ஒரு மனிதன் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து வெளிவரும் படிமம்(Visual), இப்படத்தின் மிக முக்கியமான Image எனச் சொல்லலாம். நம் சாதி மனநிலையில், ஏற்றத்தாழ்வின் விளைவாகவே அந்த மனிதன் சாக்கடைக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறான். தன் தங்கைக்கு நீதி கேட்கும் கோராவின் கண்கள் படம் முழுவதும் வந்து கொண்டேயிருக்கின்றன. இறுதியில், அந்த சிறுமியைத் தேடி, ஒரு போலீஸ் படையும், தலித் தொழிலாளர்களும், கூடவே நாயகனும் சேற்றில் இறங்கித் தேடும் படிமம் – ஒரு முக்கியமான படிமம். இந்த கடினமான பாதையில் நாம் எல்லோரும் சேர்ந்தே நடக்க வேண்டியிருக்கிறது என்று பார்வையாளர்கள் அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும் என, இயக்குனர் நாயகனை வசனமாகவும் சொல்ல வைத்திருக்கிறார். 

இறுதியில், மீதமிருக்கும் ஒரு சிறுமியை அயன் உயிருடன் மீட்டு, ஏந்திக்கொண்டு வரும் காட்சி படத்தின் மிக நெகிழ்வான தருணம். பார்வையாளனிடம் நம்பிக்கையை(Hope) கொடுத்து அனுப்புகிறது. சாதிய மனநிலைக்கு எதிரான இந்த நீண்ட போராட்டங்களுக்கு, ஒரு அர்த்தமும் விடையும் இருக்கும் என நாமும் நம்புவோம். நாம் எந்த இடத்திலிருந்தாலும், நம் சூழலில் சாதியத்திற்கு எதிரான ஒரு பொறியாக நாம் இருக்க முடியும் என்பதை ‘Article 15’ உணர்த்துகிறது.