ஹெச்.வினோத் பேட்டி: தீரன் படம் பவாரிய இன மக்களை காயப்படுத்துகிறதா….

இளம் தலைமுறை படைப்பாளிகளில் மிகக் குறிப்பிடத்தக்கவர் ஹெச். வினோத், தன் ஆரம்பகால படங்களில் இருந்தே பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவரது சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று வியாபார ரீதியாகவும் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அத்தோடு, இவரது சமீபத்திய திரைப்படமான ’நேர்கொண்ட பார்வை’ அது எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்காகப் பாராட்டப் பெற்று, அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்களை வைத்து இயக்குமளவிற்கு வளர்ந்திருக்கிறார். ஜி.நாகராஜன் போன்ற எழுத்தாளர்களின் பெயரை உச்சரிக்கக்கூடிய சொற்ப கலைஞர்களில் இவரும் ஒருவர். இவரது முதல் இரு படங்களும், ஜி.நாகராஜன் எழுதிய வாக்கியங்களிலிருந்தே திரைப்படத்தை ஆரம்பிக்கின்றன.  தனது ஒவ்வொரு படத்திலும் தனக்கான அடையாளத்தையும், முத்திரையையும் பதித்து, நம்பிக்கைதரக் கூடிய இயக்குனராக வலம்வரும் ஹெச்.வினோத்தின் ஆரம்பகால சினிமாப் பயணம் எங்ஙனம் அமைந்தது? அவரது கிரியாயூக்கியாக இருந்து உதவியவர் யார்? சினிமா ஈர்ப்பின் ஆதித் தோற்றுவாய் எது? என்பதில் ஆரம்பித்து அவரைப் பொறுத்தவரை சினிமா என்பது என்னவாகயிருக்கிறது? போன்றவற்றை அறிந்துகொள்ளும் ஆவலில் அவருடன் பேசாமொழி இதழுக்காக நடத்திய பேட்டி,


இது வழக்கமான கேள்வியாக இருந்தாலும், இதிலிருந்து ஆரம்பிப்பதுதான் ஒரு சகஜமான உரையாடலை முன்னெடுப்பதற்கான வழிமுறையாக உள்ளது. சரி., உங்களுக்கு சினிமாவின் மீதான ஆர்வம் எப்போதிலிருந்து துவங்கியது என்பது நினைவிருக்கிறதா?

மிகச் சரியாகவும் துல்லியமாகவும், எனக்குள் எப்போதிருந்து சினிமாவின் மீதான ஆர்வம் தொற்றிக்கொண்டது  என்று சொல்லத் தெரியவில்லை. தரமணியில் இருந்த சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, அங்குதான் எலக்ட்ரிகல் டிப்ளமோ படித்தேன். படித்துமுடித்ததும் எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்குமல்லவா? எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள எல்லோரும் வெளிநாடுகளுக்குச் செல்ல ஆசைப்படுவார்கள். அங்கு சென்று இரண்டு வருடங்கள் உழைத்துவிட்டு, பின்னர் வீடு வாங்கி, கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துகிற ஒரு வழக்கமான எதிர்பார்ப்பில்தான் நானும் படித்தேன். ஆனால், அப்போது எனக்கும் சரியான வேலைகள் அமையவில்லை. எனவே, சிறு சிறு கம்பெனிகள் என மாறி மாறி வேலை செய்துகொண்டேயிருந்தேன். அடுத்து ஒரு ஆறுமாத காலம் வேலையில்லாமல் இருந்தேன். அந்நேரத்தில்தான் எனக்குள் ஏதோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதன்பின்பு சினிமா சார்ந்து நகர்ந்தேன்.  அதேநேரம் அப்போது,  சினிமாவின் மீது பெரிய ஈர்ப்பு, காதல் என எதுவும் இல்லை. எனக்கு சினிமா ஒரு வேலையாகத்தான் இருந்தது.

நாம் பார்த்து வளர்கிற திரைப்படங்கள் ஒருவகையில் நாம் எடுக்கிற திரைப்படங்களின் மீதும் பாதிப்பு செலுத்தக்கூடும். எனில், சிறுவயதிலிருந்து நீங்கள் பார்த்த படங்களெல்லாம் என்ன மாதிரியானவையாக இருந்தன? யாருடைய படங்களெல்லாம் உங்களது விருப்பப்பட்டியலில் இருந்தது?

வழக்கம்போல நான் ரஜினி சாரின் ரசிகன். எனவே, ஒரு சாமான்ய மனிதர் என்னமாதிரியான படங்கள் பார்ப்பாரோ அதேபோன்ற வழக்கமான படங்களைத்தான் நானும் பார்த்து வளர்ந்தேன். அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களின் பாணியில்,  ஒரு சவாலை ஹீரோ முறியடித்து வெற்றிபெறும் விதத்தில் அமைந்த திரைப்படங்களை அதிகம் பார்த்திருக்கிறேன். அதன்பின்னர் விஜய் சார், அஜித் சார் படங்கள் பார்த்திருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக மிகச்சிறந்த படங்கள் என எதுவும் சொல்லத் தெரியவில்லை. சினிமாவிற்கு வந்தபிறகுதான், மகேந்திரன் சார், பாலு மகேந்திரா சார் போன்றோரின் படங்களையே கேள்விப்படுகிறேன். பின்னர்தான், அவர்களது படங்களைத் தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். அதற்குமுன்பு வரை வழக்கமான திரைப்படங்கள்தான் பார்த்திருக்கிறேன்.


திரைத்துறையில் உள்ள ஒவ்வொருவருக்கும் சினிமா என்பதை ஒவ்வொரு பரிமாணத்தில் புரிந்துவைத்திருக்கின்றனர். அதேபோல, உங்களைப் பொறுத்தவரை சினிமா என்பது என்னவாகயிருக்கிறது?

நான் சினிமாவை வியாபாரமாகத்தான் பார்க்கிறேன். சினிமா எனக்கு வியாபாரம்தான் என்றாலும், அதில் நான் எப்படிச் செயல்படுகிறேன் என்பது முக்கியம். இந்த வியாபாரத்தில் தனிப்பட்ட முறையில், நான் நேர்மையாக இருக்கவே முயற்சிக்கிறேன். நீங்கள் சொன்னதுபோல, சினிமா என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி தோன்றும். சினிமா என்பது அடிப்படையில் தொழில்நுட்பம். அந்த தொழில்நுட்பத்தை ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு வகையில் பயன்படுத்துகிறார்கள். அதில் நான் வியாபாரம் என்பதில் இருந்து சினிமாவை அணுகினாலும், முடிந்தவரை அதில் நேர்மையாக இருக்கவே முயற்சிக்கிறேன். சினிமாவில் எது எனக்கு நன்றாக வரும்? அதில் எவ்வளவு தூரம் என்னால் நேர்மையாக இருக்க முடியும்? என்பதையே கவனித்துச் செயல்படுகிறேன்.

உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறீர்கள் அல்லவா? அந்த அனுபவங்கள் எப்படியிருந்தன?

பார்த்திபன் சாரிடம்தான் உதவியாளராக இருந்தேன். ஆனால், அவரது படங்களுக்கு உதவி இயக்குனராக அதிகம் வேலை செய்யவில்லை. அலுவலக உதவியாளராகத்தான் வேலை பார்த்து வந்தேன். புரொடக்‌ஷன், மற்றும் அவரது மனிதநேய மன்றங்கள் சார்பில் வேலை செய்துகொண்டே உதவி இயக்குனராகவும் ஒன்றரை ஆண்டுகள் வேலை பார்த்து வந்தேன். ஆனால், முழுக்க உதவி இயக்குனராக நான் பங்காற்றவில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், திரைக்கதை உருவாக்கத்தில் பங்கேற்று உதவி செய்தல், காஸ்டிங், படப்பிடிப்பில் உதவி என்றெல்லாம் அவ்வப்போது பங்காற்றினாலும், அதில் பெரியளவில் இல்லாமல், அலுவலக உதவியாளர் எனும் அளவில்தான் நான் இருந்தேன்.


அதன்பின்னர் அங்கிருந்து வெளியேறி என் பழைய வேலைக்கே மீண்டும் சென்றுவிட்டேன். சினிமாவை எளிமையானது என்று நினைத்தே வந்தோம். எனக்கு சினிமா மிகவும் கஷ்டமானதாகத் தோன்றியது. ஆனால், ஒன்றரை வருடங்கள் கழிந்தபிறகு, இந்த ஒன்றரை வருடங்களில் நமக்குள் என்ன நடந்திருக்கிறது? என்று யோசித்தேன். ஒரு பொறியியலாளராக வளர்ச்சி விகிதத்தை பிரித்துப் பார்ப்பதுபோல, ஒரு புரொடக்‌ஷன் எப்படி இயங்குகிறது, திரைப்படம் எடுக்கப்படும் விதம் என்றெல்லாம் ஓரளவு புரிந்துவைத்திருக்கிறேன். அதே நேரத்தில் இடைப்பட்ட காலத்தில்  சினிமா சார்ந்து இயங்குகிற இன்னும் சிலரையும் சந்திப்போம். அவர்கள் நான்கைந்து படங்கள் வேலை செய்து முடித்தவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களுடன் பேசுகிறபொழுது, எனக்கு இருந்த அனுபவம், சினிமாவில் அவர்களுக்கு இல்லை என்பதை அறிந்துகொண்டேன். இதை நான் பெருமையாகச் சொல்லவில்லை. நிகழ்ந்த நிதர்சனத்தையே சொல்கிறேன்.  இன்னும் சொல்லப்போனால், எனது அந்த ஒரு வருட அனுபவம் என்பது பத்து வருடங்களாக சினிமாவில் இருப்பவர்களுக்குக் கூட இல்லை. எனவே, எனக்கு மீண்டும் ஒரு சிறு நம்பிக்கை சினிமா சார்ந்து உருவாகிறது. திரும்பவும் சினிமாவில் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.

இயக்குனர் ராஜூ முருகனின் சகோதரரிடத்தில் (அண்ணன்), என் நண்பன் நட்போடு பழகக்கூடியவன். சீனிவாஸ் என்ற அந்நண்பர் நிறைய உலக சினிமாக்களையும், பாப் டைலன், பாப் மார்லி போன்ற பிரசித்திபெற்ற இசை ஆல்பங்களைக் கேட்கக் கூடிய ஒருவராகவும் இருந்தார். எனவே அவர் வரும்பொழுது நிறைய உலகத் திரைப்படங்கள் மற்றும் இசைக் குறுந்தகடுகளைக் கொண்டுவருவார். அவரோடு சேர்ந்துதான் அதையெல்லாம் பார்ப்போம். அப்படித்தான், ராஜு முருகனின் சகோதரரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. பின்னர், ராஜூ முருகனின் சகோதரர்ஒரு படம் ஆரம்பிக்கப்போவதாக இருந்தது. எனவே, அவரது உதவியாளராகப் பணியாற்றலாம் என்று முயற்சித்தேன். ஆனால், அந்தப் படம் எடுக்கப்படவில்லை. பின்னர் ராஜூ முருகன், சந்திரபாபு பற்றி ஒரு படம் எடுக்கப்போவதாகச் சொன்னார், சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்தப்படமும் நடக்கவில்லை.


பின்னர், ராஜூ முருகன் உதவியால், விஜய் மில்டன் சாரின் அறிமுகம் கிடைத்தது. அவரது ’கோலி சோடா’படத்தில் 50 சதவீத படப்பிடிப்புப் பணிகளில் உதவியளராக வேலை செய்தேன். அப்போதுதான், ஒரு ஹீரோவுக்கு கதையிருக்கா? சொல்றீங்களா? என்றபோது, ‘சதுரங்க வேட்டை’ கதையை ஒரு ஹீரோவிடம் சொன்னேன். ஆனால் அப்போது சதுரங்க வேட்டை, முழுக் கதையாக உருவாகியிருக்கவில்லை. அவுட்லைன் மட்டும் கதைகுறித்துச் சொன்னேன். படத்தின் ஒரு பாதி அவருக்குப் பிடித்திருந்தது, ஆனால் மறு பாதி இன்னும் தெளிவில்லாமல் இருப்பதாகச் சொன்னார். இந்தப் பதில் எனக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. ஏனென்றால், ஒரு ஹீரோவிடம் கதை சொல்லி, ஒரு பாதி வரை நன்றாகயிருக்கிறது என்ற வார்த்தையைக் கேட்டதே ஆரோக்கியமாக இருந்தது. இதிலிருந்து, தனக்கு ஒரு கதையைச் சொல்லத்தெரிகிறது என்ற முடிவுக்கு வந்தேன். இப்படியாகத்தான் எனது அடுத்தடுத்த பயணம் தொடர்ந்தது.

உங்களுக்கு இலக்கிய வாசிப்பு எப்போதிலிருந்து அறிமுகமானது?

நிறைய படித்ததில்லை, ஆனால், சிலர் குறிப்பிட்டுத் தேர்ந்தெடுத்துப் படிப்பார்கள் அல்லவா? அந்த மாதிரியான புத்தகங்களையெல்லாம் படித்திருக்கிறேன். தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களது புத்தகங்களைப் படித்திருக்கிறேன் என்பதைவிட, தேர்ந்தெடுத்துப் படித்திருக்கிறேன் என்பதே சரியான சொற்பிரயோகமாக இருக்கும்.

வெறுமனே சும்மாயிருக்கிற நேரத்தில் நமக்கு இரண்டே வேலைகள்தானே இருக்கும். ஒன்று புத்தகம் படிப்பது, அடுத்து சினிமாக்கள் பார்ப்பது. அந்த நேரங்களில் நிறைய புத்தகங்களோ, படங்களோ கிடைக்காது. எனவே மீண்டும் மீண்டும் ஒரே புத்தகத்தையோ, படத்தையோ திரும்பத் திரும்ப பார்ப்போமே, அதுபோலத்தான் நானும் இருந்தேன்.
வாங் கார் வாய் படமோ, மார்டின் ஸ்கார்ஸஸி படமோ திரும்பத் திரும்பப் பார்க்கிறபொழுது, முதல் முறை கவனிக்கத் தவறிய விஷயங்களைக் கூட அடுத்தமுறை கவனித்து அதை, அந்த நுட்பத்தைப் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா? அதுவொரு வினோதமான அனுபவம்.


நீங்கள் நிறைய எழுத்தாளர்களைப் படித்தாலும், அவர்களில் ஜி.நாகராஜனின் எழுத்துக்களுடன் அதிகமான நெருக்கத்தை உணர்கிறீர்கள் அல்லவா? அது ஏன்?

ஆம், இதை ஒத்துக்கொள்கிறேன். ஜி. நாகராஜனின் எழுத்துகள் என்னோடு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துகின்றன. ஏனென்றால், நான் சதுரங்க வேட்டை திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கும்பொழுது, அந்த மையக்கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்வது மிகவும் கடினமான செயல். அந்த முரண்பாடுகளோடு திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கும்பொழுதுதான், ஜி.நாகராஜன் எனக்குக் கைகொடுக்கிறார். ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ கதையில் கந்தன் என்றொரு கதாபாத்திரம் வரும். அந்தக் கதாபாத்திரம் எனக்கு பெரிய தாக்கத்தைக் கொடுத்தது. அந்தக் கதாபாத்திரத்தின் பேச்சு, மொழி, நடவடிக்கை என இந்த எழுத்துத்தொனியைத்தான் நான் இரவல் பெற்றேன். மேலும், அந்தக் கதையிலிருந்து சில உரையாடல் வசனங்களையும் கூட, அதாவது “உன்னையொருத்தன் ஏமாற்றினான் என்றால்….” என்று ஆரம்பிக்கிற சொற்றொடர்களில் ஈர்க்கப்பட்டேன்.  மேலும், இந்த வார்த்தைகள் தனிப்பட்ட முறையிலும் எனக்குள் பெரிய நெருக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, மீண்டும் மீண்டும் இந்நாவலை வாசித்தேன்.


சினிமாவிற்குள் வருகிறவர்கள் எல்லோருமே யோசிப்போம், யோசிக்கத் தெரிந்தவர்கள்தான் சினிமாவிற்குள் வருகிறார்கள். கதை குறித்து பல்வாறாக யோசிக்கிறோம். ஆனால், அதை எழுத்தில் கொண்டுவருவதுதான் மிகவும் கடினமான காரியம். அந்தத் தடையைக் கடந்து வருவதற்கு ஜி.நாகராஜன் எனக்கு மிகவும் பக்கபலமாகத் துணை நின்றார்.

’சதுரங்க வேட்டை’ வெளியான சமயத்தில் நிறைய இயக்குனர்கள் குறும்படத்திலிருந்து திரைப்படங்கள் இயக்குவதற்காக வந்தார்கள். அப்படியாக நீங்கள் ஏதேனும் குறும்படங்கள் எடுத்திருக்கிறீர்களா? குறும்படங்கள் இயக்குவதைப் பொறுத்தவரை அப்போது உங்களது ஆர்வம் எந்தளவில் இருந்தது?

யாரிடமிருந்தாவது, நான் எதையாவது கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லவேண்டுமானால், ராஜு முருகனிடம் இருந்துதான், நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ராஜு முருகன் சாருடன், சும்மா ஒரு வருடம் பழகியிருந்தாலே, நம்மால் அடிப்படையாக ஒரு சினிமாக்காரனாக மாற்றம் பெறமுடியும். அப்படிப்பட்ட ஹாஸ்யமும், அதேநேரத்தில் ஆழமான சமூகப்புரிதலும் கொண்ட ஒரு ஆள் அவர். மிகமிக சாதாரணமாகவே, ஒரு சம்பவத்தை உடனடியாக ஒரு காட்சியாக மாற்றிக் காட்டுவார். ஒரு செய்தி குறித்து நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள், நானும் கேள்விப்பட்டிருப்பேன், ஒரே செய்தியைக் குறித்து நான் வெளிப்படுத்தும்பொழுது பிடிக்காத விஷயம், ராஜு முருகன் சொல்லும்பொழுது பிடித்துவிடும். ஏனெனில், அவர் அந்தச் செய்தியையே ரசனையுடன் ஒரு காட்சியாக உருவகித்து அனுபவித்துச் சொல்வார். ஒரே காட்சி மற்றும் ஒரே செய்திதான், ஆனால், அந்தச் செய்தியை மற்றவர்களும் விரும்புவதுபோலச் சொல்வதில் தேர்ச்சி பெற்றவர். இது ஒரு முக்கியமான கற்றல் அனுபவம். இதுபோல பல உள்ளன.


அவர்தான் என்னையொரு சினிமாக்காரனாக அடையாளம் கண்டுபிடிக்கிறார். நான் முற்றிலும் நம்பிக்கையிழந்த நிலையில் இருக்கிறபொழுது, அவர்தான் எனக்கு என்ன தெரியும்? எதில் நான் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்? என்பதையெல்லாம் அடையாளம் காட்டியவர். நான் யோசித்த விஷயங்களை அவரிடம் பேசுவதன் வாயிலாக, எனக்குள் ஏதோ ஒரு தனித்திறமை இருப்பதை அவர்தான் கண்டறிந்து சொன்னார்.

இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குத் தள்ளிவிடுவார்கள் அல்லவா? அதைச்செய்தவர்தான் ராஜு முருகன். அடிப்படையாக அவரிடமிருந்து சினிமா சார்ந்த புரிதல்களை அடைந்ததுதான் அதிகம். எனவே குறும்படங்கள் ஏதும் எடுக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில், நமக்கு வசதியில்லை என்பது ஒன்று. ஆனால், அதை மட்டுமே எப்போதும் நாம் ஒரு காரணமாக முன்வைக்க முடியாது. அடுத்து, அதைத்தாண்டி அடிப்படையாக ஒரு பயம் இருக்குமல்லவா? ஒரு குறும்படம் எடுத்து அது சரியாக எடுபடவில்லையானால், அந்தப் பயம் ஒரு தாழ்வுமனப்பான்மையைக் கொடுக்குமல்லவா? அந்தப் பயத்தை எதிர்கொள்ளத் தயங்கியேதான். எனவே, நான் குறும்படங்கள் பக்கமாக அதிகம் நகரவில்லை.

உங்களது இரண்டாவது படம், தீரன் அதிகாரம் ஒன்று, இது மிகப்பெரிய கள ஆய்வினைக் கோரக்கூடிய படம். அதற்கான தரவுகளை அதிகமாகத் திரட்ட வேண்டும். இதை எப்படி எதிர்கொண்டீர்கள்?ஒவ்வொரு படத்திற்கும் கதை சார்ந்த பின்புல ஆராய்ச்சிகள் எந்தளவிற்கு அவசியம்?

நான் அப்படி நினைக்கவில்லை. சில கதைகளுக்கு அதற்கான பின்புல ஆராய்ச்சி என்பது அவசியப்படாது. நான் முதலில் இந்தக் கதையை ஒரு Road action movie-ஆகத்தான் எழுதியிருந்தேன். ஒரு செய்தியைப் படித்து, அந்தச் செய்தியின் வழியாக ஒரு திரைப்படம் என்ற பாணியில்தான் எழுதியிருந்தேன். அடுத்து, இந்தச் செய்தியின் நீட்சியாக இன்னும் சில தகவல்கள் கிடைத்தால் நன்றாகயிருக்குமே! என்று இரா.சரவணன் என்ற இயக்குனரிடம் இதுகுறித்து கேட்கிறேன். அவரிடம் செல்கிறபொழுது, நாம் ஒரு விஷயத்தைக் குறித்து யோசித்து ஒரு கதை எழுதியிருப்போம் அல்லவா? ஆனால், உண்மையில் சம்பவங்கள் அதுபோல இல்லை. நாம் ஒரு பொய்யைத்தான் கற்பனையில் எழுதியிருக்கிறோம். ஆனால், உண்மை அப்படியானதாக இல்லை. நாம் எழுதியது உண்மையில்லை என்பது தெரிந்தவுடனே, எனக்கு இரண்டுவிதமான பதட்டங்கள் தொற்றிக்கொண்டன.
ஒன்று, இந்தச் செய்தி குறித்து உண்மையான சம்பவங்கள் இருக்கின்றன. நாம் ஏன் அது குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளக் கூடாது? அது நம் கதைக்கு உதவி செய்கிறதோ, இல்லையோ, நாம் ஏன் ஒரு உண்மைச் சம்பவத்தினைப் பற்றி முழு விஷயங்களையும் தெரிந்துகொள்ளாமல் தவிர்க்க வேண்டும்…? என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்தது. எனவே, இச்சம்பவம் குறித்து அவர் ஒரு அதிகாரியிடம் சென்று பேசச்சொல்கிறார். பின்னர் நான் அவரைச் சந்தித்து ஒரு நான்கு மணி நேரங்கள் பேசினேன். இப்போது அச்சம்பவங்கள் குறித்து நமக்கு ஒரு பார்வையும், அறிவும் கிடைக்கிறது. அடுத்து, இச்சம்பவங்கள் தொடர்பாக ஆயிரம் பக்க அறிக்கைகள் உள்ளன. அதை ஒருமுறை சரிபார்த்து, தேவையானதை மட்டும் உங்களுக்குக் கொடுக்கிறேன் என்று சொன்னதோடு, ஆறு மாதங்கள் கழித்து சொன்னபடியே அந்தக் கோப்புகளை நம்மிடம் கொடுத்து உதவினார். அதைப் படித்து முடிக்கும்பொழுது, உண்மையாகவே பயத்தினை உணர்ந்தேன்.

நாம் திரைப்படங்களில் எவ்வளவு வன்முறைகளை வேண்டுமானாலும் பார்க்கலாம், எதிர்கொள்ளலாம், அதை அனுபவிக்கலாம். ஆனால், இரவில் நாம் தூங்கிக்கொண்டிருக்கும்பொழுது, நம் வீட்டுக் கதவில் யாரோ ஒருவர் கல் எறிகிறபொழுது நமக்குள் ஒரு பயம் தொற்றிக்கொள்கிறதே, அந்த வில்லனைக் காண்பிக்காமலேயே, அந்தப் பயத்தை நாம் உணர்கிறோம். அதுதான் உண்மையான பயம். தனியாக இருக்கிற வீட்டில், யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போய்விடுவார்கள், என்ற பயம் தருகிற பதட்டத்தை யாரும் சொல்லித்தெரியவேண்டியதில்லை. அப்படியாகத்தான் அந்தக் கோப்புகளில் சினிமாவைவிட உண்மையான பயத்தை உணர்ந்தேன்.

அதுவரையில் காவல்துறையினர் என்னவெல்லாம் செய்வார்கள்? என்பது குறித்து நம் மனதிற்குள் ஒரு கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் குவிந்துகிடக்கின்றன. நம் இயல்பு வாழ்க்கையில் போலீசாரை எங்கெல்லாம் சந்திக்கிறோம்? காவல் நிலையத்திற்கு என்றோ ஒருநாள் செல்லும்பொழுது பார்க்கிறோம், அடுத்து சாலைகளின் சிக்னல்களில் பார்ப்போம், சினிமாவில் பார்ப்போம், ஆனால் இது எதுவுமே, அவர்களை மதிக்கக்கூடிய ஏரியாவாக இல்லை. ஆனால், இந்த கோப்புகளைப் படிக்கிறபொழுது அந்தக் காவல்துறையினர் மேல் சற்று மரியாதை கூடியது, அதைவிட, காவல்துறையினர் நம் சமூகத்திற்கு எவ்வளவு அவசியம் என்ற நிலைமை புரிந்தது.


நான் இதற்கு முன்பு எழுதிய கதை ஃபேண்டஸியாக இருந்தது. ஆனால், அதைவிட சுவாரஸ்யமாக, இந்த உண்மைக் கதை இருந்த காரணத்தினால், ஃபேண்டஸி படம் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம், ஆனால், இந்த உண்மையை இன்னும் பின் தொடர்ந்தால் நல்ல சுவாரஸ்யமான கதைக்களம் கிடைக்கும் என்று அதை முழுமையாகப் படித்தேன். விக்கிபீடியாவில் நாம் ஒரு தகவல் சார்ந்து படிக்கிறபொழுது, அதற்குள்ளேயே இன்னும் சில தகவல்களுக்கான இணைப்புகள் சிதறிக்கிடக்கும். அதுபோலத்தான், கோப்புகளில் சம்பந்தப்பட்டவர்களது பெயர்கள் வருகிறபொழுது, அவர்கள் ஒவ்வொருவரையும் சென்று சந்தித்தோம். இதில் ஒருவருக்குத் தெரிந்த விஷயங்கள் மற்றவருக்குத் தெரியவில்லை, எனவே, கிட்டத்தட்ட 27 ஆபிஸர்களை இதுகுறித்து விசாரிக்கும்பொழுது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தகவல்களைச் சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில், இந்தச் சம்பவம் குறித்து எனக்குத் தெரிந்த தகவல் அந்தக் குழுவில் இருக்கிற போலீஸ் அதிகாரிகளுக்கே தெரியாது. ஏனெனில், 27 பேரும், 27 விதமான விஷயங்களைச் செய்திருக்கிறார்கள். இதில் ஒவ்வொருவரும் தான் என்ன செய்தோம், என்பதை மற்றவர்களிடத்தில் பரிமாறிக்கொள்ளவில்லை. ஆக இந்த 27 பேர் சொன்ன சம்பவங்களையும் ஒன்றிணைத்து ஒரு கதையாக  உருவாக்கினால் எப்படியிருக்கும்? என்ற யோசனை வந்தது. அப்படியாக அதில் இருந்த வரலாற்றுத் தொடர்புகளைச் சேகரித்தோம். ஒரு அதிகாரியைச் சந்திக்கிறபொழுது, இந்த வரலாறு தொடர்பாக மிகப்பெரிய புத்தகம் ஒன்று வைத்திருந்தார். அதைப் படிக்கையில், இன்னும் சம்பங்கள் விரிந்துகொண்டே போயின. இந்தத் தகவல்கள் அனைத்தையும் ஒரு இரண்டரை மணி நேர திரைப்படத்திற்குள் சுருக்க வேண்டும் என்கிறபொழுது, அது டாக்யூ ட்ராமாக மாறிவிடுமோ என்ற பயமும் இருந்தது. தயாரிப்பாளர்களுக்கும் இது ஒரு சிங்கிள் ஜானர் படமாக மாறிவிடுமோ என்ற தயக்கம் இருந்தது. எனவே, எல்லோரையும் சமரசப்படுத்தி ஒரு படம் எடுக்கையில், அது அதற்குரிய சில வீழ்ச்சிகளோடுதான் திரைக்கு வரும்.


அப்படியாக, எனக்குத் தெரிந்து அந்தக் கதைக்கு ஆராய்ச்சிகள் தேவைப்பட்டன. ஆனால், அடுத்த படம், ‘நேர்கொண்ட பார்வையில்’ கதை ரீதியிலான ஆராய்ச்சி என அதிகமாகத் தேவைப்படவில்லை. அதாவது ஒரு வக்கீல் என்றால், அந்த வக்கீல் என்னமாதிரியான சீருடை அணிந்திருக்க வேண்டும்? பேட்ச் எப்படி குத்தியிருக்க வேண்டும்? என்பதற்கான ஒரு ஆராய்ச்சியும் தேடலும் வேண்டும். அதைத்தாண்டி பெரிய ஆராய்ச்சிகள் தேவைப்படாது.

நாம் சில போலீஸ் ஆபிஸர்களைச் சென்று சந்திக்கிறோம் என்றால், அவர்களுக்குச் சினிமாத்துறையினர் மீது சில மனஸ்தாபங்கள் உள்ளன. ஒரு எஸ்.பி.யைச் சென்று சந்திக்கையில் அவர் கீழ்க்காணும் விபரங்களைச் சொன்னார். ”நீங்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள், ஹீரோ ஒரு கான்ஸ்டபிளாக இருக்கிறார். அவர் உயர் அதிகாரியான டி.ஜி.பியை எதிர்த்துப் பேசுகிறார். ஆனால், நிஜ சூழ்நிலையில் ஒரு கான்ஸ்டபிள் ஓர் இன்ஸ்பெக்டரைக் கூட எதிர்த்துப் பேசிவிட முடியாது. இப்பொழுது நான் ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனரைக் கூப்பிடுகிறேன் பாருங்கள்”, என்று ஒரு தொலைபேசியில் கூப்பிடுகிறார். அவர் உள்ளே வருவதற்குள், “நாம் பேசிக்கொண்டிருப்போம், நாம் சொல்வது வரை, அவர் நம்முன் உட்காரமாட்டார் பாருங்கள்” என்கிறார். நாங்கள் பின்பு அடுத்த ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் சொன்னதுபோலவே, உள்ளே வந்தவர் உட்காரவில்லை. இப்படியான ஒரு எழுதப்படாத விதிமுறை காவல் துறைக்குள் இருக்கிறது. இதை சினிமா சரியாகப் பிரதிபலிப்பதில்லை. ஒரு பேட்ச் எப்படி அணிவது என்று தெரியவில்லை, என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். நான் இதையெல்லாம் சரி செய்யலாம் என்றுதான் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன், என்று அவரைச் சமாதானப்படுத்திய பிறகுதான், அவருடன் மேற்கொண்டு பேசத் துவங்கினேன். இப்படியாக நம் நேரடியான தகவல் திரட்டல்களினால் நமக்கு ஒரு புரிதல் கிடைக்கிறது. எனவே, இதையும் நாம் திரைப்படங்களில் பயன்படுத்தி, பார்வையாளர்களுக்குக் கடத்தலாம் என்ற புரிதலில்தான் இத்தகைய ஆராய்ச்சிகளிலும், கள ஆய்வுகளிலும் அதிகமான கவனம் செலுத்துகிறேன்.

அடுத்து, ஃபேண்டஸி கதைகளும் முக்கியம். எல்லா கதைகளுக்கும் கள ஆய்வு என்பது ஒரு சலிப்பூட்டக்கூடிய விஷயமாகவே இருக்கும். அது எல்லா கதைகளுக்கும் தேவைப்படாது என்றே தோன்றுகிறது.

தீரன் படம், பவாரியா இன மக்களை வில்லன்களாகச் சித்தரிக்கிறது. அம்மக்களுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் சூழ்ச்சி இருக்கிறது.  திரைக்கதை எழுதும்பொழுது, இக்கதை அந்த இனத்தைச் சார்ந்த மக்களைக் காயப்படுத்தும் என்று உணர்ந்தீர்களா?

தவறுதான். தவறை உணர்கிறேன்.

வியாபாரம் பிரதானமாகப் போகும்பொழுது, நாம் சில பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வோம். அதன்படி, வியாபாரம் மிகப்பெரிய வீச்சில் சென்றதனால் வந்த பிரச்சினைதான் இது. படத்தில், எதிரிகளாகச் சித்தரிக்கப்படுகிற பவாரியா இனமக்களும், அம்மக்கள் திருட்டில் ஈடுபடுவதற்குப் பின்னால் உள்ள நியாயமான பார்வைகளும், புரிதல்களும் படத்தில் இருந்தன. வியாபாரம் என்ற காரணத்திற்காக பல சமரசங்களை நாம் மேற்கொள்ள நேரிடும். எனவே, பவாரியா இன மக்கள் சார்ந்த சில பகுதிகள் நீக்கப்பட்டுவிட்டன.


இயற்கையாகவே, ஹீரோ வில்லன் படத்தில், வில்லனின் செயல்களுக்கு நியாயமான சில காரணங்கள் இருக்கும்பொழுது, தானாகவே, கதாநாயகனின் மதிப்பானது குறையும் என்ற பயம் இருக்கிறது. வியாபாரத்தின் காரணமாக, அந்தத் தவறுக்கு நானும் உடன்பட்டிருக்கிறேன். திரைப்படமாகப் பார்க்கையில் இதுவொரு குறைபாடுதான்.
படத்தினைப் பற்றிய எதிர்மறை பார்வையாக இதைப் பார்க்கும்பொழுது அதிலுள்ள குறையாக இது தோன்றும். அதையே என்னைப் பொறுத்தவரை, இதையே ஒரு நேர்மறையான அணுகுமுறையில் பார்க்கிறபொழுது, இந்தப் படத்தின் வாயிலாகத்தான் பவாரியா இன மக்கள் சார்ந்தாவது நாம் அதிகம் பேசுகிற சூழல் வெளிவந்துள்ளது. உண்மையும் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.


நான் செட்யூல்டு காஸ்ட்டான அவர்களைபுண்படுத்துகிற நிலையில், வரலாற்றுப் படி பார்க்கிறபொழுது, செட்யூல்டு காஸ்ட் என்ற அட்டவணைக்குள் அவர்கள் வரவில்லை. எல்லோரும் ஏதோவொரு நிலையில் ஆளும் வர்க்கமாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கைகளில் நிலம் இருந்திருக்கிறது. ஏதோவொரு நிலையில் போரில் தோற்று ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு இன்றைக்கு இந்நிலைமையில் இருக்கிறார்கள் அல்லவா, அதை யாரும் பெரிதாகப் பேசவில்லை. இந்தப் படம் குறித்து விமர்சிப்பவர்களிடம் உள்ள பிரச்சினையாக நான் பார்ப்பது, இதே தீரன் படத்திற்குள் ஒரு நேர்மறையான அணுகுமுறையை அதற்குள் ஒளித்துவைத்திருக்கிறேன். அதை வைத்துக்கொண்டும் இந்தப் படம் குறித்து அவர்களால் பேசமுடியும், ஆனால் சிலபேரிடம் அதையும்நானே செய்யவேண்டும் என்ற மனநிலை இருக்கிறது. அதுதான் எனக்கு கஷ்டமாக உள்ளது. எப்படி பவாரியா இன மக்கள் என்ற ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்தப் படத்தைக் குறைசொல்கிறீர்களோ, அதைவிடுத்து, நேர்மறையாக அணுகக்கூடிய சூழ்நிலைகளைக் கொண்ட அப்படத்தின் பல பகுதிகளைக் காணாதுவிட்டிருந்தனர், பவாரியா இன மக்கள் சார்ந்தே நேர்மறையாக அவர்கள் பல விவாதங்களை முன்னெடுத்திருக்கலாம். ஆனால், அது நிகழவில்லை. அதுதான் எனது வருத்தம்.

தொடரும்…

[பிங்க் திரைப்படத்திற்கும், நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கும் இடையிலான வேறுபாடுகள், சந்தித்த சிக்கல்கள், மற்றும் படம் குறித்த எழுப்பிய சந்தேகங்களுக்கும் இயக்குனர் ஹெச்.வினோத் பதில் சொல்லியிருக்கிறார். இந்த பேட்டியின் தொடர்ச்சி அடுத்த மாத பேசாமொழி இதழிலும் வெளியாகும். ]