’ஆர்டிகிள் 15’ திரைப்படம் சமூக அக்கறைகொண்ட படமா?

கடந்த ஜூன் 28ஆம் தேதி வெளியான இந்தி படமான ‘ஆர்டிகிள் 15` திரைப்படம் குறித்து, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமைச் செயலகம் அம்பேத்கர் திடலில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. கடந்த ஜூலை 20ஆம் தேதி நடந்த இந்தக் கலந்துரையாடலில் இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், மீரா கதிரவன், கோபி நயினார், தமிழ் ஸ்டுடியோ அருண், ஊடகவியலாளர் பாரதி செல்வா, விசிக தோழர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தம்மம் சிந்தனையாளர் பேரவையின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வை எழுத்தாளர் திருவாசகமும், தோழர் வெற்றிசங்கமித்ராவும் தொகுத்துவழங்கினர்.

ஆர்டிகிள் 15 திரைப்படம் குறித்து கலந்துரையாடல் செய்யப்பட்ட கருத்துகள் இங்கு எழுத்து வடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பாலாஜி சக்திவேல்எனக்கு செல்வராஜ் என்றொரு தோழர் இருக்கிறார். நுட்பமான அரசியலை எனக்கு கற்றுக் கொடுத்தவர். என்னிடம் வரும் அரசியல் கேள்விகளுக்கெல்லாம் டிக்சனரியைப் புரட்டி அர்த்தம் பார்ப்பதுபோல், அவரிடம்தான் நான் கேள்விகள் கேட்டுத் தெளிவடைவேன். அவர்தான் முதலில் இந்த படம் பார்க்குமாறு என்னிடம் சொன்னார். அதோடு லிங்குசாமியின் அஸிஸ்டண்ட் ஒருவரும் பார்க்குமாறு சொன்னார். அவர் பெரும்பாலும் விறுவிறுப்பான கமர்சியல் படங்களை விரும்பி பார்ப்பவர்.

எனக்கு முன் பேசிய தோழர் 'நகர்தல்' பற்றிச் சொன்னார். நான் என்னுடைய அனுபவத்தைச் சொல்கிறேன். காதல் படம் முடித்துவிட்டு ஒரு கல்லூரியில் பேசும்போது நண்பர் ஒருவர், "எல்லாம் ஒகே. படம் சூப்பரா இருக்கு. ஆனா அவிங்க ஆளுங்கள்ள ஒரு பையன் கடசில ஏத்துக்குறான். அப்படி தான காமிச்சுருக்கீங்க!" என்றார். எனக்கு 'பக்கென்று' இருந்தது. உடனடியாக எனக்குப் பதிலளிக்க முடியவில்லை.

சிறிது நேரத்திற்கு முன்னர் என்னை அறிமுகப்படுத்தும்போது 'பாலாஜி சக்திவேல் பெரிய டைரக்டர்' அப்படி இப்படி என்று சொன்னார்கள். ஆனால் அன்று அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

பொதுச்சமூகத்தில் நான் இயங்கும்போது, அது ஒவ்வொரு படத்திற்குப் பின்னும் வரும் எதிர்வினைகள் எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. 'கல்லூரி' சமயம் ஒரு பெண் என்னிடம் 'ஏங்க, இந்த செவப்பா இருக்குற பொண்ணுங்களதான் ஹீரோயினா காட்டுவீங்களா?' என்று கேட்டார். அக்கேள்வி எனக்குள் போனதன் விழைவுதான், வழக்கு எண் படத்தில் சாதாரண பெண்ணை ஹீரோயினாக காட்டினேன். இப்படியான ஒரு தொடர் ஓட்டம்தான் சினிமா.

அறிவழகன் எழுதிய 'கழிசடை' நாவல் படித்தபின்பு எனக்குத் தலித் வாழ்வியல் பற்றிய திறப்பு கிடைத்தது. சிலர் என்னிடம் 'அந்த கதாபாத்திரத்தை வைத்து நீங்கள் படம் எடுக்கலாமே?' என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் நான் எவ்வளவுதான் முயன்றாலும் என்னால் அந்த வாழ்வியலுக்குள் முழுமையாக உள்ளே போகமுடியாது. அதற்கு "நீங்க என்னிடம் உதவி இயக்குநராக சேருங்க. தொழில கத்துக்கோங்க, நீங்க போய் படம் எடுங்க" என்பேன். ஒரு கதாசிரியருக்குத் தெரியும். இந்த பரப்பில் நம்மால் உள்ளே போக முடியுமா முடியாதா என்று.

இப்போது நான் எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கிறேன் என்பதை எனது அடுத்த படம்தான் சொல்லும். அதுபோக சினிமா என்பது புனைகதை என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். காதல் படத்தின் கடைசியில் 'ரயிலில் செல்லும்போது ஒருவர் சொன்ன கதை தானிது' என்று முடித்திருப்பேன். படம் பார்த்தவர்கள் அந்த இடத்தில் ஒரு ஜம்ப் ஆனார்கள்.

இங்குப் படம் பார்த்தவர்கள் 'எங்கே அவர்? அவரைப் பார்க்கணும்' என்றார்கள். லண்டனில் 'அந்தப் பையனை நாங்கள் பார்க்க வேண்டும். அவனுக்கு நிதி தருகிறோம்.' என்றார்கள்.

நான் 'ஆஹா!' என்றேன்.

பாரிசில் 'ஏன் இவர்களைப் பிரிக்கிறார்கள்?' எனக் கேட்டார்கள்.

'காஸ்ட்' என்றேன்.

'அப்படினா என்ன?' எனக் கேட்டார்கள்.

அவர்கள் நடைமுறை வாழ்விலிருந்து படங்களைப் பார்க்கிறார்கள். காஸ்ட் சிஸ்டம் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. உள்ளுக்குள்ளிருந்து நாம் சட்டென்று எடுத்துவிட்டோம். இப்படித்தான் ரீஜனல் பிலிம்ஸ் தயாரிக்கப் படுகிறது. இதில் உலக கண்ணோட்டம் வரவேண்டுமென்றால், கேள்விகளோடுதான் படம் முடிய வேண்டும். தீர்வென்பது கிடையாது. அதுவொரு கலந்துரையாடலுக்குத்தான் வழிவகுக்க வேண்டும்.

பொதுச்சமூகத்தில் தன்னுடைய குரலை ஒலிக்க செய்யவேண்டும் என்பதற்காக அரசியலில் செய்யப்படும் காம்ப்ரமைஸ்கள், யுக்திகள் போன்றுதான் சினிமாவும் என்பதை என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

இப்படத்தின் இயக்குநர் அனுபவ் சின்ஹாவின் ஒன்பதாவது படமிது. அவரொரு பேட்டியில், "நான் வெவ்வேறு ஜானரில் டிராவல் செய்ய ஆசைப்படுகிறேன்" என்கிறார். மணிவண்ணன் சாரைப் போன்று இவரை வகைமைப் படுத்தவே முடியாது. இதற்கு முன் ரா-ஒன் படம் எடுத்திருக்கிறார்.

அவர் ஜானர் மாறலாம், ஆனால் அதில் நேர்மையாக இருப்பார். உண்மையாக இருப்பார். ஆயுஷ்மான் குரானா நேர்மையாக இருந்தால், அது எப்படி இருக்கும் என்பதுதான் இப்படம். தங்கப்பதக்கம், சிங்கம் படங்களில் ஒரு நல்ல அதிகாரி இருப்பார். திருடனை, கொள்ளைக்காரனைப் பிடிப்பார்கள். இங்கு ஆயுஷ்மான் குர்ரானா சாதியைப் பிடிக்கிறார். எதார்த்தத்தில் நடப்பதைக் காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பான திரைக்கதையாக அமைத்திருக்கிறார். உண்மையான மனசில்லாமல் அதைச் செய்யவே முடியாது.

காதல் படத்திற்கு நான் அப்படித் தானிருந்தேன். முருகனை நான் அப்படித்தான் பார்த்தேன். பரியேறும் பெருமாள், மாரி செல்வராஜுடைய திரைமொழியின் உச்சம். அவர் எவ்வளவு பெரிய ஆளுமை என்பதை நிரூபித்திருப்பார். அவர் படத்தின் மூலம் நம்மை கேள்விக்குட்படுத்துகிறார். அதற்காகப் படத்தில் 'அந்த பெண்ணுக்குச் சாதி பற்றி ஒன்றும் தெரியாது' என்று வைத்திருப்பார். அந்த மாதிரியான காட்சியமைப்பை தவிர்பதென்றொரு சின்ன காம்ப்ரமைஸ் வைத்திருப்பார். இப்படித்தான் எல்லாப் படைப்புகளும். ஒரு குறையோடு தானிருக்கும்.

இப்போது நீங்கள் என்னிடம் நேரத்தைக் கேட்டால், நான் வாட்சைப் பார்த்து உங்களிடம் சொல்வதற்குள் இரண்டு வினாடிகள் சென்று விடும். இப்போது எது சரியான நேரம்? நீங்கள்

கேட்ட நேரமா? இல்லை நான் சொன்ன நேரமா?

What is correct?

Probably. சற்றேறக்குறைய.

ஜனநாயகமும் அப்படித் தான். ஒரு பேலன்ஸ்.

இயக்குநர் மீரா கதிரவன்ஆர்டிகிள் 15 படத்தில் கதாநாயகன் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர். பார்ப்பன சமூகம்தான். ஆனால் பெரியார், அம்பேத்கர், பகத்சிங் போன்றோர்களைப் பற்றி உயர்ந்த மதிப்பீடு உள்ள குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்.

எனக்கு ஆர்டிகிள் 15 படத்தைப் பார்த்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கலை ஊடகத்தினுடைய அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கிய நேர்த்தியான படமாக ஆர்டிகிள் 15 படம் இருக்கிறது. அதனால் இந்த படம் எனக்கு பிடித்திருக்கிறது.

கடந்த 40 வருடங்களாக இந்தி, மராட்டிய சினிமாக்களை நாம் பார்க்கிறோம். இயக்குநர் நாகராஜ் மஞ்சுலேவுக்கு பிறகு மிக வெளிப்படையாகவும் நேர்மையாகவும் அரசியல் பேசிய படமாக இப்படத்தைச் சொல்வேன். தமிழ் சினிமா `தயாரிப்பாளர், நடிகர், சென்சார்` ஆகிய மூன்று இழைகளை பின்னி இயங்கிக்கொண்டிருக்கிறது. இதை அனைத்தையும் தாண்டிவந்தாலும்கூட, தமிழ் சினிமாவின் வியாபார கட்டமைப்பு. பக்கத்தில் இருக்கிற கேரளாவில், எல்லாம் தனித் தனியாக இருக்கும். ஆனால் தமிழ் சினிமாவில்தான் தொலைக்காட்சி, சினிமா, சாதி என எல்லாம் ஒன்றாக இருக்கிறது.

இங்கு ஒரு நடிகரைக் கொண்டாடுவதற்குச் சாதி ரீதியாகக் கொண்டாடவேண்டியதாக இருக்கிறது. ஒரு இயக்குநரை பார்ப்பதற்குச் சாதியின் வழியாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. ஒரு இயக்குநரை மறுப்பதற்கும் சாதி ரீதியாக மறுக்கவேண்டியதாக இருக்கிறது. இப்படியான சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ் சினிமாவின் கட்டமைப்பே வேறுமாதிரியாக இருக்கிறது.

குறிப்பாக கடந்த 10 வருடங்களில் இந்தி சினிமாவில் தேர்ச்சியான ரசனையை உருவாக்கிவருகிறார்கள். அதனடிப்படைதான் இந்த படம் பிடிப்பதற்கான காரணமாக இருக்கிறது.

எனக்கு எப்போதும் பார்ப்பனியம்தான் பிரச்னை. பார்ப்பனர்கள் கிடையாது. இப்போதும் பெரியாரை பின்பற்றுகிற பார்ப்பன தோழர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்தாலே தீவிரவாதி என்கிறமாதிரி, பார்ப்பன சமூகத்தில் பிறந்தாலே தலித் விரோதியாகப் பார்த்துவிட முடியாது.

பார்ப்பனியம் என்பது அனைத்து சமூகத்திலும் இருக்கிறது. தலைமுழுக்க பார்ப்பனியத்தைத் தூக்கி சுமந்து திரிகிறவர்கள் இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். இந்த படம் பார்ப்பனியமாக இருக்கிறதா? என்றால் பார்ப்பனியத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. கழிவு நீர்த் தொட்டியில் மூழ்கி எழுந்திருக்க சினிமாவுக்கு வெளியில் யாரும் கிடைக்கவில்லை என்பது அவலம். அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அந்த துப்புரவுத் தொழிலாளி மூழ்கி எழுந்திருக்கும்போது `வந்தே மாதிரம்` பாடல் வரும். அந்த தைரியம் இயக்குநரை சந்தேகப்படக் கூடாது என்பதற்கான தைரியமாகப் பார்க்கிறேன்.

”எந்த சாதியின் சலுகைகளைச் சொல்லி அந்த சலுகைகளை அதிகம் அனுபவித்தார்களோ அவர்கள்தான் அதைப் பேசவேண்டும் என நினைக்கிறேன்” என்று ஒரு பேட்டியின்போது அனுபவ் சின்ஹா கூறியுள்ளார். எனக்கும் அதில் உடன்பாடு இருக்கிறது. தலித் விடுதலை என்பதைத் தலித் அல்லாதவர்களிடமிருந்து தொடங்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்தவிதத்தில் இந்த படத்தை ஒரு ஆரோக்கியமான மாற்றமாக பார்க்கிறேன்.

படத்தில்வரும் சேரிக்குள் இந்துத்துவ அரசியல்வாதி ஒரு வசனம் பேசுவார். அந்த வசனத்தைத்தான் ஒட்டுமொத்த படமாகவே நான் பார்க்கிறேன். “நாம் எல்லாம் இந்துக்கள். நம்முடைய பொது எதிரி யார் என்பதை அடையாளம் கண்டுகொள்வோம்” என்பதுதான் அந்த வசனம். மேலும் இந்த படத்தில் தலித் போராளி இறந்திருக்கக் கூடாது என்று தோன்றியது. மொத்தத்தில் இப்படம் முக்கியமான முழுமையான படம்.

விசிக மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் அமுதன் துரையரசன்கலை என்பது மக்களுக்கானது. வெவ்வேறு வகைகளில் வெவ்வேறு பரிமாணங்களில் இருக்கும் கலையை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அந்தவகையில் ஒன்றாகத்தான் திரைப்படங்களைப் பார்க்கிறேன். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது. இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 திரைப்படத்தைக் கொண்டாடவந்திருக்கிறோம். இந்தியில் மட்டும் இதுபோன்ற படங்கள் வெளிவருகிறது. தமிழில் அப்படியான படங்கள் எடுக்கப்படவில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது.

ஆனால் தமிழில் அப்படியான படங்கள் எடுக்கப்படவில்லையா? என்று கேட்டால், தமிழிலும் அப்படியான படங்களும் நிறையவந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, ரஷ்ய இலக்கியங்களில் லியோ டால்ஸ்டாய், தாஸ்தோவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்கள் எழுதியதை தமிழ் சினிமாவில் கலை ரசனையோடு படமாக எடுக்கிறார்களா? என்று நான் சினிமா பார்க்க ஆரம்பித்ததிலிருந்து தேடித் தேடி பார்க்க ஆரம்பித்தேன். எது ஒன்றையும் மற்றொன்டோடு ஒப்பிடுவது அறம் சார்ந்து அமையாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

அதுபோல தமிழ் சினிமா என்பது, அதனுடைய இயங்கியல் சார்ந்த பண்போடு இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தி சினிமாவும் அதனுடைய இயங்கியல் சார்ந்த பண்போடு இயங்கிக்கொண்டிருக்கிறது.

என்னுடைய வலியும் வேதனையும் என்னவென்றால், ஒரு 2 ஆயிரம் வருடங்களாக வாசிப்பையும் எழுத்து பழக்கங்களையும் கொண்டிருக்கிற தமிழ் சூழலில் அறம், காதல் போன்ற முக்கியமான படங்கள் வெற்றியடைகிறது. ஆனால் மக்களின் சமூக நீதிக்கான அரசியலை பேசுகின்ற படங்கள் தமிழ் சமூகத்தில் ஏன் கொண்டாடப்படாமல் இருக்கிறது. அதுகுறித்தான உரையாடல் ஏன் இல்லை? என்கிற கேள்வி எழுகிறது.

பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் போன்ற சித்தாந்தங்களை படிக்கலாம். இந்த சித்தாந்தங்கள் சமூகத் தளத்திலும், மக்களிடம் உரையாடுவதற்குத் தேவைதான். ஆனால் இவைகளை படிப்பதற்கு முன்னர் மனித நேயம் என்பதுதான் முக்கியமானது. அந்த மனித நேயத்தை ஒரு சின்ன காட்சியின் மூலம் கடத்த முடியும். அறம் படத்தில் தனது தங்கையைத் தூக்கிக்கொண்டு அண்ணன் எழுவான். அந்த காட்சிகொடுக்கும் மனித நேயம் டால்ஸ்டாயினுடைய 600, 700 பக்கங்களில் இருக்கிற நாவலில்கூட இல்லை. அப்போதுதான் திரைப்படம் எவ்வளவு பெரிய உரையாடலை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தேன். திரைப்படத்தைச் சாமானியனிலிருந்து அனைத்து தரப்பட மக்களும் பார்த்து கொண்டாடுகிறார்கள்.

ராமாயணமும் மகாபாரதமும் குழந்தைகள் பார்க்கக்கூடிய கார்ட்டூன்களாக வந்திருக்கிறது. அம்பேத்கர், பெரியார் போன்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் பேசுகிற எந்த விசயங்களையும் குழந்தைகள் கொண்டாடுவதற்காக மாற்றவே இல்லை. அப்போது நாம் எங்கு தோற்றுப்போய் இருக்கிறோம்.

ஆர்டிகிள் 15 திரைப்படம் மிக நுட்பமாக சமூகத் தளத்தில், உரையாடலை நிகழ்த்திக் கொண்டுயிருக்கிறது. முற்போக்கு அரசியலைப் பேசுகிற ஆர்டிகில் 15 போன்ற திரைப்படங்களைக் கொண்டாடாமல் விட்டோமானால், அது கமர்சியல் படங்களை நோக்கி நம்மையிட்டு செல்லும் என்கிற பேரச்சம் இருக்கிறது. பண்பாட்டுத் தளங்களில் கலைகள் பெரும் வேலையை செய்கிறது.

”முதிர்ச்சியான ஒருவர் வன்முறையைக் கையில் எடுக்கமாட்டார். அறிவு சார்ந்துதான் இயங்குவார். பொறாமையைப் பொறாமையால் வெல்லாதே. அதை அன்பால்தான் வெல்லமுடியும்” என்பார் அயோத்திதாச பண்டிதர். ஒரு புத்தகம் சொல்லிக்கொடுக்காத விசயத்தை கலையின் வடிவாக சினிமா சொல்லிக்கொடுக்கிறது. அந்த சினிமாவை நாம் கொண்டாடலாம். அதுகுறித்து விவாதிக்கலாம்.

காதலை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிற நாம், இந்த சமூகத்தில் நடக்கிற இழிவு நிலைகளை இயக்குநர் எப்படி சொல்லியிருக்கிறார், அந்த கதையை எழுதும்போது எவ்வளவு வலியும் வேதனையையும் அடைந்திருப்பார், அந்த மாதிரியான படங்கள் தமிழ்ச் சூழலில் எடுப்பதற்கு எது தடையாக இருக்கிறது, வலதுசாரிகள் அதிகம் இருக்கக்கூடிய ஒரு இடத்தில் இந்தியில் அம்பேத்கரின் ஆர்டிகள் 15-ஐ மையப்படுத்தி ஒருபடம் எடுக்கப்படுகிறது என்றால், பெரியார் மண் என்று சொல்லக்கூடிய இந்த இடத்தில் ஏன் அந்த மாதிரியான படங்கள் எடுக்கக்கூடாது? என்கிற கேள்வி இருக்கிறது.

அம்பேத்கரிஸ்டுகளும், பெரியார்ஸ்டுகளும் கம்யூனிச தோழர்களும் படம் எடுக்கும்போது அவர்களுக்கு ஏன் சிக்கல் வருகிறது?

ஊடகவியலாளர் பாரதி செல்வா


இந்தியா முழுவதும் சாதி இப்படிதான் இருக்கிறது என்பதற்கு ஒரு சாட்சிதான் ஆர்டிகிள் 15. வட இந்தியாவிலும் தலித் மக்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பது ஒவ்வொரு காட்சியிலும் காட்டப்படுகிறது. படத்தின் திரைக்கதை இந்தியில் படம் பார்க்கும் உணர்வோ, தொய்வோ இல்லாமல் இருக்கிறது.

இந்த படம் ஒரு நிகழ்வாய்வு (Case Study). ஒரு இடத்தில்கூட இயக்குநர் தேவைகேற்றவாறும், அரசியல் சுழலுக்கு கேற்றவாறும் நிகழ்வாய்வை சிதைக்காமல் அப்படியே பின்பற்றுகிறார்.

மூன்று ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக மூன்று சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி இரண்டு சிறுமிகளைக் கொன்று விடுவார்கள். ஒரு சிறுமி தப்பித்து அருகில் உள்ள காட்டிற்குச் சென்றுவிடுவாள். அந்த ஒரு சிறுமியைக் கண்டுபிடிப்பதுதான் கதாநாயகனுடைய முக்கிய பணியாக இருக்கிறது.

பத்து நாட்களில் நடக்கும் நிகழ்வுகள்தான் இப்படம். அதைச் சுவாரசியமாகக் காட்டுகிறார்கள். சர்வதேச தரத்தில் இசை அமைக்கப் பட்டிருக்கும் இப்படத்தில் ஒவ்வொரு முறையும் இசை வரும்போதும் பூஜா (காணாமல் போன மூன்றாவது சிறுமி) உயிருடன் இருக்கிறாளா? அல்லது இறந்துவிட்டாளா? என்கிற பதட்டம் நம்மைத் தொத்திக்கொள்ளும்.

கருத்தியல் படம் என்பதால் சுவாரசியத்திற்கும், அழகியலுக்கும் எந்தவித குறையும் இல்லாமல், அனைத்துக் கலை அம்சத்தோடும் இந்த படத்தை எடுத்திருப்பது இதன் வெற்றியாகப் பார்க்கிறேன்.

”கருப்பு நிற தோலுடைய ஒருவரை ஏன் கதாநாயகனாக நடிக்க வைக்கவில்லை. ஒரு தலித்தை ஏன் கதாநாயகனாகக் காட்டியிருக்கக்கூடாது” என்று இயக்குநரிடம் ஒரு பேட்டியின்போது கேட்கப்படுகிறது.

அதற்கு அனுபவ் சின்ஹா, ”அடிப்படை உரிமை கட்டமைப்பை உருவாக்கியது யார்? அவர்களிடம்தான் கேள்வியையும் கேட்கமுடியும், சரி செய்யவும்முடியும். அதனால்தான் அப்படியான கதாபாத்திரத்தைப் படத்தில் வைத்தேன்” என்று சொல்கிறார்.

இந்த படத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜகவைக் கேள்விக்குட்படுத்தும் காட்சிகளும் இருக்கிறது.

துப்புரவுத் தொழிலாளி கழிவு நீர்த்தொட்டிக்குள் மூழ்கி சுத்தம் செய்யும் காட்சி இருக்கிறது. அந்த காட்சியைப் பார்க்கும்போது அவ்வளவு வலி இருந்தாலும், படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஒரு அறுவருப்புதான்வருகிறதே தவிர, ஒரு மனிதர் கழிவு நீர்த் தொட்டியில் இறங்கி மேலே வருகிறார் என்ற குற்ற உணர்வு வரவில்லை. அந்த குற்ற உணர்வை அந்த படமும் ஏற்படுத்தவில்லை.

இந்த உலகத்தில் என்ன சினிமா வேண்டுமானாலும் எடுக்கலாம். எவ்வளவு பேர்வேண்டுமானாலும் டூப் போடலாம். ஒரு துப்புரவுத் தொழிலாளியாக டூப் போட வேற எந்த சாதிக்காரரும் தயாராக இல்லை. ஒரு துப்புரவுத் தொழிலாளிதான் தயாராக இருக்கிறார். இயக்குநருக்கு அவருக்கே தெரியாமலே சாதி உளவியல் எப்படிச் செயல்படுகிறது என்பதாக இந்த காட்சியை பார்க்கிறேன். ஏன் மாற்றுச்சாதியைச் சேர்ந்த ஒருவரைத் தேர்வு செய்து உள் இறங்க சொல்லுங்களேன். இயக்குநரின் அரசியல் புரிதல் சிக்கலாக இருக்கிறது. எதார்த்தமான மனித வாழ்க்கைபற்றி ஒரு புரிதல் இல்லாதபோதுதான் இந்த காட்சியைப் படத்தில் வைக்கிறார். தேவையற்ற காட்சி அது. எதோ ஒருவகையில் இதெல்லாம் சரி என்று மக்களிடம் சொல்லவருகிறார்கள்.

விசிக தலைமை நிலைய செயலாளர் தோழர் இளஞ்சேகுவேரா


ஆர்டிகிள் 15 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. தமிழ்நாட்டிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதை யாரும் பார்க்கவில்லை, கொண்டாடவில்லை, விமர்சிக்கவில்லை என்று தோழர்கள் திருவாசகமும், வெற்றிசங்கமித்திராவும் பகிர்ந்துகொண்டனர். அர்டிகிள் 15 திரைமொழியில், திரை நுட்பத்தில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட திரைப்படமாக இருக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, சாதியாலும், மதத்தாலும், மொழியாலும் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று இப்படம் அப்பட்டமாக காட்டுகிறது.

இடைநிலை சாதியினர் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்க்கிறார்கள், ஆளும் வர்க்கம் எப்படி அதிகாரத்தைச் செலுத்துகிறது, காவல்துறையினர் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிடம் நடந்துகொள்கிறார்கள், மொத்தத்தில் சமூகம் எப்படி இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இதையெல்லாம் காப்பாற்றுவதற்காக ஒரு பார்ப்பனரை அதிகாரியாக நியமிக்கிறார்கள். அதுதான் நெருடலாக இருக்கிறது.

இந்த படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர் காவி நிறத்தில் இருக்கும். திரைப்படமாக பார்க்கும்போது மிகச் சிறப்பான திரைப்படமாக அமைந்திருக்கிறது. நல்லப்படம் என்று சொல்ல வைக்கிறது. ஆனால், யார் எடுத்தார்கள், எந்த நோக்கத்தில் எடுத்தார்கள் என்ற கருத்தியலோடு பார்க்கும்போது, சில சிக்கல்களும், சந்தேகங்களும் வருகிறது“ என்று கூறினார்.

இயக்குநர் கோபி நயினார்இந்த படத்தை நான் பார்க்கவில்லை. கதையின் நாயகன் ஒரு பார்ப்பனர். ஏன் பார்ப்பனர் ஒரு விஷயத்தைப் பேசக்கூடாதா? என்று இங்குப் பேசப்படுகிறது.

இரண்டாவதாக ஆர்டிகிள் 15 படத்தில் கதாநாயகன் வெளிநாட்டிற்குச் சென்றுவருகிறார். அதன்பிறகுதான் இங்கிருக்கும் சூழல் அவருக்குத் தெரிகிறது.

கதையின் நாயகன் எங்குவேண்டுமானாலும் சென்றுவரட்டும், அதில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் இயக்குநர் எங்கிருந்து வருகிறார் என்ற கேள்வி இருக்கிறது அல்லவா? ஒரு கதை என்பது இயக்குநரிடமிருந்து தொடங்குகிறதா? இல்லை கதையின் நாயகனிடமிருந்து தொடங்குகிறதா? கதாநாயகன் வெளியூருக்குச் சென்று வருகிறார் என்பதெல்லாம் ஒரு தப்பித்தல்.

நீங்கள் வேறு சினிமாக்களை பற்றி பேசினால் எனக்கு பிரச்னை இல்லை. தலித் சினிமாவை பற்றிப் பேசினாலோ, தலித் வாழ்க்கை முறை பற்றிப் பேசினாலோ அது முக்கியமான சினிமா. மிக ஜாக்கிரதையாகப் பேசவேண்டியது. ஏனென்றால் தலித் சினிமா என்பது தலித் விடுதலை அரசியலோடு தொடர்புடையது. அதை வெறும் சினிமாவாக பார்ப்பீர்கள் என்றால், அதற்கு இங்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தலித் சினிமாவை பற்றியோ, அவர்களின் வாழ்க்கை முறை பற்றியோ படம் எடுக்கிறீர்கள் என்றால் அந்த வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்காமல் வரக்கூடாது.

எனக்கும் அதைப் பற்றிப் பேச உரிமை, அக்கறை இருக்கிறது என்றெல்லாம் அதைப் பற்றிப் பேசக்கூடாது. ஏனென்றால் இன்னும் தலித் விடுதலை என்பது ஜனநாயகத்தோடு தொடர்புடையது என்பதைப் பற்றியான ஆழ்ந்த தெளிவு இல்லாத மக்களுக்காகத்தான் இந்த பொதுச் சமூகம் இருக்கிறது.

சாதி ஒழிப்பு என்பது ஜனநாயகத்தோடு தொடர்புடையது. ஒரு குடிமை சமூகத்துடைய அடிப்படை உரிமை என்பதைப் பற்றியான எந்த ஒரு தெளிவும் இல்லாத சமூகமாகத்தான் இச்சமூகம் இருக்கிறது.

சமீபத்தில் என்னிடம் தண்ணீர் பற்றாக்குறை குறித்து ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் பதிலளித்தேன். அதற்கு இவர் நீர் நிபுணர் என்று அசிங்கமான வார்த்தைகளில் என்னைத் திட்டி ஒருவர் எழுந்திருந்தார்.

நீரைப் பற்றிப் பேசுவது ஒரு பொது பிரச்னை. அது எல்லா மக்களுக்குமான பிரச்னை. ஆனால் யார் பேசவேண்டும், யார் பேசக்கூடாது என்பதில்தான் உறுதியாய் இருக்கிறார்கள்.

இந்த அறையில் இருக்கும் ஒருவருக்கு தண்ணீர் தாகம் எடுத்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். தண்ணீர் எடுத்துவைத்த பெண் தலித் பெண் என்பதற்காக அந்த தண்ணீரைக் குடிக்காமல் இருப்பீர்களா? யாருக்குத் தாகம் இருக்கிறதோ, அவர்கள் குடிப்பீர்கள்தானே. ஆனால் யார் பேசவேண்டும் என்கிற முடிவை எடுக்கிறீர்கள். அப்போது அடுத்த சினிமா என்ன எடுப்பது என்பது குறித்து பயம் இருக்கிறது. படம் எடுக்கலாமா? வேண்டாமா? திரையரங்கிற்கு வருவார்களா? மாட்டார்களா? என்கிற பயம் இருக்கிறது.

இந்தியா போன்ற முக்கியமான நாடுகளில் ஒரு பிரச்னையை கையாளும்போது மிக ஜாக்கிரதையாகக் கையாளவேண்டும். இங்கு நீங்கள் எந்த பொருள் வாங்கினாலும் சரி, யாருக்காக வேலை செய்தாலும் சரி அந்த லாபம் ஒரு முதலாளிக்கு போய்ச்சேரும். குறிப்பாக இந்து முதலாளிக்கு சேரும். முதலாளி அந்த லாபத்தை தனக்குப் பிடித்த ஒரு அரசியல் கட்சிக்குச் செலவு செய்வார். அதுவும் இந்துத்துவத்தை ஆதரிக்கிற ஒரு முதலாளித்துவ கட்சிக்காகச் செலவு செய்வார்.

இந்தியாவின் பெருவாரியான உழைக்கும் மக்களான தலித் மக்களிடமிருந்து பெறப்படுகிற நுகர்வு பணத்தை ஒரு முதலாளி பெற்று லாபமானதன் பிறகு அவர் விரும்புகின்ற அரசியல் கட்சிக்குச் செலவு செய்யும்போது அதுதான் அதிகாரத்தை நோக்கிச் செல்லும்.

இன்று மோடி மீண்டும் ஆட்சிக்கு வர அதுதான் காரணம். மோடியை வரவைத்தது முதலாளிகள். மக்கள் கிடையாது. ஜனநாயகம் என்ற பெயரில் மிகப் பெரிய சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்துவது என்பது நுட்பமாக தெரிகிறது. அந்த திரைக்கதைதான் ஆர்டிகிள் 15 திரைக்கதை. அந்த திரைக்கதையை மிக நுட்பமாகக் கையாளுகிறார்கள்.

Sweet Country என்கிற படத்தைப் பார்த்தேன். அந்த படத்தில் கருப்பு நிறத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளை நிறத்தவர்களை கொலை செய்துவிடுவார்கள். கருப்பு நிறத்தைவரை காவல்துறையினர் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்கள். நீதிமன்றத்தில் வைத்து விசாரணை நடக்கும்.

அவர் செய்த கொலையில் ஒரு நியாயம் இருப்பதால் அவரை விட்டுவிடுவார்கள். நீதிமன்றம் அவரை விடுதலை செய்தாலும்கூட, வெள்ளையர்கள் கருப்பு நிறத்தவரை கொலை செய்துவிடுவார்கள். அரசுக்கு கருப்பினத்தவர்கள் மீது எந்த கோபமும் கிடையாது. அரசு நீதியுடன் நடந்துகொள்கிறது. அதனால்தான் அவரை விடுதலை செய்தோம். ஆனால் இந்த நாட்டை சேர்ந்த வெள்ளைக்காரர் கொலை செய்துவிட்டார். நாங்கள் என்ன செய்யமுடியும் என்று அரசு சொல்கிறது.

இங்குப் பொய், உண்மை ஆகிய இரண்டு கருத்துகள் நிற்கின்றன. எந்த சூழ்நிலையிலும் கருப்பர்கள் வெள்ளை நிறத்தினருக்கு எதிராகச் செயல்பட்டால், நாங்கள் (அரசு) விட்டுவிட்டாலோ, நீங்கள் கொன்றுவிடுங்கள் என்கிற மறைமுகமான செய்தி அந்த கதைக்குள் இருக்கிறது. அதுதான் அந்த திரைகதையின் நுட்பம்.

இந்த நாட்டில் ஒரு பார்ப்பனன் எந்த நீதி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் தலித் பேசினால் கொன்றுவிடு என்பதைத்தான் ஆர்டிகிள் 15 படம் சொல்கிறது.

13ஆம் நம்பர் வீட்டில் இருக்கக்கூடிய இஸ்லாமியரைக் கொலை செய்துவிடவேண்டும் என்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்துவிட்டால், அவர் 13ஆம் நம்பர் வீட்டிற்குள் செல்லமாட்டார். 10ஆம் நம்பர் வீட்டில் இருக்கக்கூடிய இந்து குடும்பத்தைச் சேர்ந்தவரிடம் சண்டை போட்டுக்கொண்டிருப்பார். சண்டை போட்டுவிட்டுவரும்போது 13ஆம் நம்பர் வீட்டில் இருக்கக்கூடியவரை வெட்டிவிட்டுச் சென்றுவிடுவார். அவர் வெட்ட வந்ததே 13ஆம் நம்பர் வீட்டில் இருக்கக்கூடிய இஸ்லாமியரைத்தான். போகும்போது அப்படியே வெட்டிவிட்டுச் சென்றுவிட்டார்கள் என்பார்கள். ஆர்எஸ்எஸ் மிக நுட்பமாக மக்களை கையாளுகிறது. தலித் சினிமா என்பது மற்ற சினிமாக்களை விட எளிமையாக எடுத்துவிட முடியாது.

இங்கு நிறையத் தலித் சினிமாவை பற்றி நிறையக் கொண்டாட்டங்கள், மகிழ்ச்சி, நாம் விடுதலை அடைந்துவிட்டோம் என்ற நம்பிக்கை எல்லாம் பிறந்துவிட்டது. சத்தியமாக ஒரு தலித் சினிமாவும் வரவில்லை.

ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, பெரியார் மண் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இங்கு நடக்கிற ஆணவக் கொலைகளுக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இல்லை. தமிழகத்தில் பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கொஞ்சம் பேருதான். அவர் இருக்கும்வரைக்கும் சாதியை ஒழிக்கவேண்டும் என்று நினைத்தார். அதன்பிறகு அதை நாம் நினைத்திருக்கவேண்டும். பெரியாரை யார் விற்றார்களோ அவர்களுடைய தவறு அது. நீங்கள் விடுதலை அரசியலைப் பேசாமல் அதிகார அரசியலைப் பேசுவதானால் ஏற்படும் குழப்பம் இது.

விடுதலை அரசியல் என்பது வேறு. அதிகார அரசியல் என்பது வேறு. விடுதலை அரசியலில் பார்ப்பனரும் இருப்பார், பறையரும் இருப்பார். அதிகார அரசியலில் யார் போராட்டத்தை முன்னெடுப்பு செய்கிறாரோ அவர் மட்டும்தான் இருப்பார். அதனால்தான் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது.

ஒரு பாசிஸ்டிடம் இருக்கக் கூடிய அதிகாரத்தைக் கைப்பற்றினால் நான் ஒரு பாசிஸ்ட். நாஜியிடம் இருக்கிற அதிகாரத்தைக் கைப்பற்றினால் நான் ஒரு நாஜி. பார்ப்பனரிடம் இருக்கக்கூடிய அதிகாரத்தைக் கைப்பற்றினால் நான் ஒரு பார்ப்பனர். ஒரு பொதுச் சமூகத்தில் இருக்கக்கூடிய ஜனநாயக சக்திகளுக்கும் நாம் விடுதலை வாங்கித்தர வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஒரு பொதுமை அடிப்படையில் விடுதலை குறித்து முன்னெடுக்கிறவர்கள் -அதிகாரத்தைக் கைப்பற்ற மாட்டார்கள். அதிகாரத்தை உருவாக்குவார்கள். யாரால் அதிகாரத்தை உருவாக்கமுடியுமோ, அவர்களால்தான் விடுதலை நோக்கி கொண்டுசெல்லமுடியும். புரட்சியாளர் அம்பேத்கர் அதிகாரத்தை உருவாக்கப் பெருவாரியான மக்களை உருவாக்கினர். தந்தை பெரியார் அதைச் செய்திருக்கிறார்.

தலித் சினிமாவில் சிறிய தவறு செய்தாலும், அந்த சமூகத்தை நீங்கள் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அதற்குப் பதில் தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம். இல்லை என்றால் ஒரு தலித்தைக் கொலை செய்துவிட்டுச் சென்றிருக்கலாம்.

தலித் அரசியல் தெரியாமல் தலித் சினிமாவை ரசிக்கமுடியாது. இந்தியா போன்ற நாடுகளில் தலித் சினிமா என்பது ஓர் அரசியலை எப்படி நெருக்கமாகப் பார்க்கிறீர்கள் என்பதில் முக்கியமான கவனம் இருக்கவேண்டும். அம்பேத்கர் படத்தை ஏன் திரையரங்கில் பார்க்கவரவில்லை. ஏனென்றால் சினிமாவை பற்றி தவறாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். சினிமா பார்க்கிற சுவாரசியத்தை மற்றொரு முதலாளித்துவம் செய்திருக்கிறது. அந்த இடத்தில் என் சமூகத் தலைவனை நானே தோற்கடிக்கிறேன். சினிமா பார்வையாளனைத் தோற்கடிக்கச் செய்திருக்கிறது.

ஒரு பழங்குடியின, இஸ்லாமிய, தலித் சமுகத்தைச் சேர்ந்த அல்லது உழைக்கும் வர்க்க பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற திடைபடத்தை எடுத்தால், அதில் சுவாரசியம் இருக்கவேண்டும் என்ற பதிவை முதலாளித்துவ இயக்குநர்கள் செய்திருக்கிறார்கள். இங்கு சினிமாவை பார்க்கும் முறை என்பது வேறு.

ஒரு சமூக பிரச்னையை தலித்தான் செய்யவேண்டும், பார்ப்பனர்தான் செய்யவேண்டும் என்பது இல்லை. எவ்வளவு நேர்மையோடு செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதில் உங்கள் அர்ப்பணிப்பு எவ்வளவு என்பது முக்கியம். உலக தொழிலாளர்கள் ஒன்று சேருங்கள் என்று சொன்ன மார்க்ஸ் தலித் இல்லை. லெனின் தலித் இல்லை. ஆனால் அவர்களைக் கொண்டுசெல்ல நாம் தயாராக இருக்கிறோம். ஏனென்றால் அவர்களிடம் சமூக, விடுதலைக்கான நேர்மை இருந்தது. தலித் சினிமா மிக முக்கியமான சினிமா. தலித் அரசியலைப் பற்றி ஆழ்ந்த உரையாடல் செய்யவேண்டியது இருக்கிறது.