ஜான் லுக் கொதார்த் பற்றி ஒரு கட்டுரை

2011ஆம் வருடம் ஜான் லுக் கொதார்த் ‘பிலிம் சோசியலிசம்’ (Film Socialisme) படத்தை இயக்கினார். அதையொட்டி ‘தி கார்டியன்’ குழுமத்தைச் சேர்ந்த ஃபியாச்ரா கிபான்ஸ் எடுத்த நேர்காணலின் தமிழாக்கம் இது.
 
ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடிக்கு கொதார்திடம் அருமையானதொரு தீர்வுள்ளது. 1960களில் துடிப்புமிக்க ‘புதிய அலை’ சகாக்களுடன் சினிமாவை ஸ்டுடியோவின் இரும்புப் பிடியிலிருந்து விடுவித்தபோதிருந்த அதே கூர்மதியும் எளிமையும், இப்போதுமிருக்கிறதென்பதை அவரது விகடமான தீர்வு நமக்கு உணர்த்துகிறது.
 
“ஒரு கருத்திலிருந்து இன்னொன்றை உருவாக்கும் தர்க்கமென்பது கிரேக்கர்கள் நமக்கு வழங்கிய கொடை. அதற்காக அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். ‘அதனால்’ என்பதை அரிஸ்டாடில்தான் முன்னெடுக்கிறார். ‘இப்போதெல்லாம் உனக்கு என்மேல் காதலில்லை, அதனால்...’, ‘இன்னொருவனுடன் நீ நெருங்கி பழகியதைப் பார்த்தேன், அதனால்...’ இதுபோன்ற முக்கிய முடிவுகள் எடுக்கும்போதெல்லாம் ‘அதனால்’ என்கிற வார்த்தையை நாமெல்லொரும் பல்லாயிரம் முறை உபயோகிக்கிறோம். அதற்கு காப்புரிமை வழங்க வேண்டிய காலம் வந்துவிட்டது!”


“ஒவ்வொரு முறை ஐரோப்பியர்கள் அவ்வார்த்தையைப் பயன்படுத்தும்போதும், க்ரீஸிற்கு பத்து யூரோக்கள் கொடுத்தால், ஒரே நாளில் கிரேக்க பொருளாதார வீழ்ச்சி முடிவுக்கு வந்துவிடும். கிரேக்கர்களும் தங்களது செல்வ கருவூலத்தை ஜெர்மானியர்களுக்கு தாரைவார்க்க வேண்டியிருக்காது. கூகிள் மூலம் யார் யாரெல்லாம் எத்தனை முறை ‘அதானால்’ என்பதை பயன்படுத்துகிறார்கள் எனக் கண்டறிந்து, போனின் மூலமே அவர்களிடம் காப்புரிமைத் தொகையை வசூலித்து விடலாம். இனி ஒவ்வொருமுறை ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கிரேக்கர்களிடம், ‘நாங்கள் உங்களுக்கு கடன் கொடுத்தோம், அதனால் நீங்கள் எங்களுக்கு வட்டியுடன் பணத்தைத் திருப்பி செலுத்தவேண்டும்’ எனும்போதும், அவ்வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக முதலில் அவர் காப்புரிமைத் தொகைக் கட்ட வேண்டும்.”
 
அவரோடு நானும் சிரித்தேன். பக்கத்து அறையில் கேட்டுகொண்டிருந்தவரும் சிரித்தது கேட்டது. அதே நேரம் பூர்ஸ்வா முதலாளித்துவ காப்புரிமை முறைமைக்கு கொதார்த் எதிரானவர் என்பதும் எல்லோரும் அறிந்ததே. அவரது சமீபத்திய ‘பிலிம் சோசியலிசம்’ படத்தின் இறுதியில் கூட நவீன காப்புரிமையைப் பகடி செய்திருக்கிறார். நாற்பது ஆண்டுகளாக ஹாலிவுட் மேல் போர் நடத்திக்கொண்டிருப்பவரின் சமீபத்திய தாக்குதல் சென்ற வாரம் வெளிவந்தது. சினிமாவின் சேட்டைக்கார இளைஞனுக்கு வயது வேண்டுமானால் எண்பது ஆகியிருக்கலாம், ஆனால் மையநீரோட்டத்தை எதிர்க்கும் அவரது துடுக்குத்தனம் கொஞ்சம்கூட குறையவில்லை.
 
சமீபகால கொதார்த் பாணியின் அத்துணைச் சிறப்பம்சங்களும் பிலிம் சோசியலிசம் படத்திலும் அமைந்திருக்கிறது: உட்காரவே கஷ்டமாகுமளவு கண்ணுக்கும் மூளைக்கும் தீனி போடும், உங்கள் பொறுமை மற்றும் உளத்திறனைச் சோதிக்கும், ஆனால் மறுக்கவே முடியாத சுயத்தை தன்னகத்தே கொண்டிருக்கும். நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, கண்டிப்பாக அதிலொரு கதையிருக்காது.
 

ஒத்திசைவில்லாத இரைச்சலுடன் மத்திய தரைக்கடலில் செல்லும் சொகுசு கப்பலுக்கு நம்மைக் கொண்டுசெல்கிறார். அதுவொரு மிதக்கும் லாஸ் வேகாஸ், தனது மிதமிஞ்சிய நுகர்வால் மூழ்குவது போலிருக்கிறது. அங்கு சில தத்துவவாதிகளும் கிரேக்க நடிகர்களும், மற்ற பயணிகளுடன் பிஸ்மார்க், பெக்கெட், டெரிடா, கொன்ராட், கொய்தே ஆகியோரின் கூற்றுகளை பிரெஞ்சு, ஜெர்மன், ருசிய, அரேபிய மொழிகளில் சொல்லித் திரிகின்றனர். அசட்டையாகக் கடக்கக்கூடிய படமல்ல பிலிம் சோசியலிசம். ‘பார்த்தது போதும், நிறுத்தி விடலாமா!’ என்று தோன்றும்போதெல்லாம் கொதார்தின் உன்னதமான கடல் காட்சிகளோ நெற்றிப்பொட்டில் அடிக்கும் வசனங்களோ வந்து விடுகிறது.
 
கொதார்த் ஆதரவாளர்கள் சொல்வதுபோல் ‘இதுதான் எதிர்கால சினிமாவா?’ எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதைப்போன்று பிறிதொருவர் படமெடுப்பதில்லை என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும். வேறெந்த இயக்குனர் (சற்றே வேகமாக ஓடும்!) முழு படத்தையும் முன்னோட்டமாக யூட்யுபில் வெளியிடுவார்?
 
பிம்பச் சிறை
 
கொதார்தின் தீவிரமான சீடர்கள் இதனை ஐரோப்பாவுக்கான (முதுமையை நெருங்கும் அதிருப்தியாளர்கள் எல்லோரும் எவ்வித பிணைப்புமின்றி, தன்வரலாற்றிலே மிதக்குமொரு கப்பல்) குறியீடாக மட்டுமல்லாமல், படிமங்களாலான புதிய குடியரசிற்கான ஒரு முன்னறிக்கையாகவும் பார்க்கிறார்கள். அது கார்ப்பரேட்டின் கொடிய பிடியிலிருந்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களிலிருந்தும் விடுபட்ட ஒன்றாக இருக்கும் என்கிறார்கள்.
 
இந்த புதிய சினிமாவானது காப்புரிமையால் கட்டுப்படுத்த முடியாதளவு மறுபடியும் மறுபடியும் வெட்டி பயன்படுத்தப்படும். அப்பயன்பாடு ‘ஆசிரியர் உரிமையை’ காலப்போக்கில் ‘நிலவுடைமையாளர் உரிமையைப்’ போலவே காலாவதியாக்கிவிடும்.
 
படம் வெளிவந்த சமயம் அதைப்பற்றி கொதார்த் பெரிதாக எங்குமே பேசவில்லை. கான் விழா திரையிடலின் போதுகூட ‘க்ரீஸ் சந்திக்கும் பிரச்னையைப் போன்றதொரு காரணத்தால் என்னால் கான் விழாவிற்கு வர முடியவில்லை!’ என்ற செய்தியை மட்டும் அனுப்பிவிட்டு கொதார்த் வரவில்லை!
 
இதுதான் நமக்குத் தெரிந்த மிடுக்கான, பாண்டித்தியமுள்ள கொதார்த். 1960 களில் ‘பரீத்லெஸ்’ போன்ற படங்களின் மூலம் சினிமாவுக்கான வரைவுகளை மாற்றியமைத்தவர், மாவோயிச அஞ்ஞாதத்தை தனது பாணியாக்கிக் கொண்டவர். அவரது திறமையான ஒளிப்பதிவாளர் ரோல் கோடர்ட்டுடன் ஸ்க்ரிப்டே இல்லாமல், எவ்விதமான பழைய கட்டுப்பாடுகளுக்குள்ளும் சிக்காமல் அவர் படமெடுத்தவிதம் பிரெஞ்ச் புதிய அலை இயக்குனர்களுக்கு புதியதொரு திறப்பையும் உத்வேகத்தையும் கொடுத்தது. அவர்கள் மட்டுமல்லாமல் ஸ்கார்செஸி, டரன்டினோ, ஆல்ட்மன், பாஸ்பிண்டர், டி பாமா, சோடர்பர்க், ஜார்முஷ், பால் தாமஸ் ஆண்டர்சன் ஆகியோருக்கும் கொதார்த் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார்.

 
ஆனால் காலப்போக்கில் கொதார்த் என்னும் படைப்பாளியைப் பின்னுக்கு தள்ளிவிட்டு, ‘கொதார்த்’ என்னும் பிம்பம் முன்னிறுத்தப்பட்டது. இப்போது, தனது பாரிஸ் வீட்டில் என் முன் உட்கார்ந்திருக்கும் கொதார்த், அவரது பிம்பத்தால் சித்தரிக்கப்பட்டதைவிட குழந்தைத்தனமாகவும் இயல்பாகவும் உள்ளார். மற்ற இயக்குநர்கள் விரும்பத்தகாதது என்று ஒதுக்கக்கூடிய கேள்விகளுக்குக் கூடபொறுமையாக பதிலளிக்கிறார். 1970களில் மற்றொரு புதிய அலை இயக்குநர் ட்ரூபோவுடன் முரண்பட்ட ‘போக்கிரியாக’ தற்போதைய கொதார்தைப் பார்க்கமுடியவில்லை. 1930-1950ஹாலிவுட் பற்றிகூடக் கொஞ்சம் நற்குறிப்புகள் சொல்கிறார்.
 
இயக்குநர்களின் இயக்குநர் மற்றும் எக்காலத்துக்குமான தீர்க்கதரிசி என்று பார்க்கப்படுவதைப் பற்றி கேட்டதற்கு, “நான் அப்படியெல்லாம் இல்லை. கண்டிப்பாக இப்போதில்லை. ஒருகாலத்தில் எங்களுள் சிலர் அப்படி நம்பினோம். ஆனால் படச்சுருள் காலாவாதியாகிவிட்டது, இப்போது யாரும் படச்சுருளை முயற்சிப்பதில்லை. அதற்கொன்றும் செய்ய முடியாது! தற்போது மொபைல் போன் வைத்துக்கொண்டு எல்லோரும் எடுக்கின்றனர். அவர்கள் எல்லோருமே ஒருவகையில் தனித்துவமான படைப்பாளிகள் தாம்.”
 
கொதார்த் அரிதாகவே நேர்காணல்கள் கொடுக்கிறார். முப்பது வருடங்களுக்கு மேலாக சுவிட்சர்லாந்து ரோல் நகரிலுள்ள தனது வீட்டிலிருந்தவாறு புதிய திரைமொழியைக் கண்டடைய முனைகிறார். ‘ஒருமுறை கொதார்த் பார்வையாளர்களுக்காக ஒருவாரம் தனது வீட்டில் காத்திருந்தார்.’ என்றொரு பிரெஞ்சு தத்துவஞானி சொன்னார்.
 
கொதார்திடம் ’பிலிம் சோசியலிசம்’ படத்தில் வரும் மலை ஆடு மற்றும் கழுதைக்கான காரணம் என்னவெனக் கேட்டேன். “வேறொன்றுமில்லை. அன்று சுவிட்சர்லாந்து படப்பிடிப்பு தளத்தின் அருகே அவை இரண்டும் சுற்றிக்கொண்டிருந்தன, உடனே படத்தில் சேர்த்துக்கொண்டேன். அதன்பின் ஒரு மர்மமும் இல்லை. எனக்குக் கிடைப்பவற்றை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அவ்வளவுதான்.” பல சமயங்களில் படத்திலேயே இல்லாத அர்த்தங்களைப் பார்வையாளர்கள் அவர்களாகவே புரிந்துகொள்கின்றனர் என்று கொதார்த் அபிப்ராயப்படுகிறார். ஒருவேளை கொதார்த்தை நாம் தவறாக புரிந்துகொண்டிருக்கிறோமோ? கொதார்தைப் பற்றிய நமது புரிதலைவிட கொதார்த் எளிமையானவரோ!
 
“பார்வையாளர்கள் சரியான கேள்விகளே கேட்பதில்லை. அவர்களுக்கெல்லாம் இப்படத்தைப் பற்றிய என்னுடைய பதில்- பாலஸ்தீனத்தைக் குறிக்கும் ஒரு படிமம்தான்- இரு சர்க்கஸ் வீரர்கள் ஒரு கயிரிலிருந்து இன்னொரு கயிறுக்கு தாவுவது” என்கிறார் கொதார்த். யூதர்களும் அரேபியர்களும் இணைந்துப் பயணிக்கும் நாளில் உருவாகும் மனநிறைவுக்கான குறியீடுதான் அப்படிமம்.
 
கொதார்த் மீதான யூத எதிர்ப்பு அவதூறைப் பற்றிப் பேச்சு திரும்புகிறது. இஸ்ரேல் மீதான குறைகூறுதலையும் பாலஸ்தீனம் மீதான அபிமானத்தையும் சேர்த்து, ‘கொதார்த்திற்கு யூத வெறுப்பு இருக்கிறது’ என்றுச் சொல்லப்படுவதை அவர் ‘முட்டாள்’ தனமென நிராகரிக்கிறார். பிலிம் சோசியலிசம் படத்திலும் “யூதர்கள் தாம் ஹாலிவுட்டை நிறுவினார்கள் என்பது எவ்வளவுப் பெரிய வேடிக்கை!” என்ற வசனத்தின் மூலம் கொதார்த் அத்தேன்கூட்டை மறுபடியும் சீண்டியிருக்கிறார்.
 
அண்டசராசரத்திலுள்ள அனைத்தையும் விசாரணைக்குட்படுத்தும் லஸி
 
நான் கிளம்ப எத்தனிக்கையில், ‘உங்களது அடுத்த படைப்பு பற்றிச் சொல்லுங்கள்’ என்றவுடன் உற்சாகமான இளைஞனைப் போல் துள்ளி எழுந்து அடுத்த அறைக்குச் சென்று எதையோ தேடுகிறார். திரும்பி வரும்போது “இந்தா” என்றொரு திரைக்கதை புத்தகத்தை நீட்டுகிறார். அப்படைப்பை தயாரிக்க என்னால் ஏதோவொரு வகையில் உதவ முடியுமென அவர் நினைக்கிறார் போல! நான் நெகிழ்ந்துவிட்டேன். ‘சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர், தனது படத்திற்கு நிதியாதாரத்தை இப்படி தேட வேண்டியிருக்கிறதே!’ என வருந்தவும் செய்தேன்.

 
‘இல்லை, ஒருவேளை எண்பது வயதில், யூட்யுப் போன்றவற்றின் முலம் தற்போதுதான் கொதார்த் தொடங்கவே செய்கிறாரோ?’ அவரது குடியிருப்பைக் கடந்து போகும்போது ‘ஒருவேளை நாமே கூட இதைத் தயாரிக்கலாமோ’ என்றெண்ணினேன். அந்த ஸ்க்ரிப்டின் பெயர் ‘மொழிக்கு பிரியாவிடை’. பொருத்தமான தலைப்பு. ஒரு தம்பதி, ஒரு நாய் மற்றும் வாழ்வு - சாவு உட்பட அண்டசராசரத்தில் உள்ள அனைத்தையும் பற்றியது. லஸி என்கிற நாய்தான் தலைமைக் கதாபாத்திரம்.
 
ஆனால் லஸி எனும் நாயின் ‘இருத்தலியல் பிரச்னைகள் குறித்த விசாரணைக்கு’ இவ்வுலகம் தயாரா? ஆகக் குறைந்தது, மகிழ்வான முடிவுடன் கூடிய கொதார்த் படத்திற்காவது இவ்வுலகம் தயாரா?

நன்றி: தி கார்டியன் மற்றும் ஃபியாச்ரா கிபான்ஸ்